பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் டேவிட் நோர்த் உரையாற்றியுள்ளார்

"ஒரு எதிர்காலம் இருக்க வேண்டுமானால், தொழிலாள வர்க்கம் மார்க்சிசத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அக்டோபர் 19, சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், ஃபிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில், “எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதற்கு முந்தைய வாரங்களில், உலக சோசலிச வலைதளத்தின் ஜேர்மன் மொழி பதிப்பகம் மெஹ்ரிங் வெர்லாக் (Mehring Verlag), சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei—SGP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) ஆகியவை, இந்த முக்கியமான நிகழ்வை ஊக்குவிப்பதற்காக ஆயிரக்கணக்கான விளம்பரப் பதாகைகளை ஒட்டியும், பத்தாயிரக் கணக்கான பிரசுரங்களை விநியோகித்தும் மேலும் நூற்றுக்கணக்கான கலந்துரையாடல்களை நடத்தியும் இருந்தன.

பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் டேவிட் நோர்த்தின் உரையை பார்வையாளர்கள் கேட்கிறார்கள், அக்டோபர் 19, 2024 [Photo: WSWS]

SGP இன் தலைவரான கிறிஸ்டோஃப் வாண்ட்ரையர், தனது அறிமுகக் கருத்துகளில், இந்த நிகழ்வு ஏன் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது என்பதை முதலில் தெளிவுபடுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி பைடென், உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் போர்களைத் தீவிரப்படுத்துவது குறித்து சான்சிலர் ஷொல்ஸ் உடன் பேசுவதற்கு பேர்லினில் இருந்தார். அதேநேரத்தில், டேவிட் நோர்த் “ஐரோப்பாவைப் போலவே, காஸா மீதான போர் மற்றும் இனப்படுகொலை அரசியலுக்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எதிர்ப்பு பரவலாக உள்ள அமெரிக்காவை” பிரதிநிதித்துவம் செய்தார் என்று அவர் தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்து வரும் நோர்த், சமீபத்திய தசாப்தங்களில் போரின் அபிவிருத்தி குறித்து கருத்துரைத்து வருவது மட்டுமல்லாமல், அதற்கு எதிராக செயலூக்கத்துடன் போராடியும் வருகிறார். “எப்போதும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மற்றும் முதலாளித்துவ பைத்தியக்காரத்தனத்தை ஒரு சோசலிச முன்னோக்குடன் எதிர்க்கின்ற ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்பும் முன்னோக்கில் இருந்து” நோர்த் அவ்வாறு செய்து வருகிறார்.

நோர்த் அக்டோபர் புரட்சியின் மார்க்சிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். ஆகவே, அவர் லியோன் ட்ரொட்ஸ்கியும் 21ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற தனது நூலில் விவரித்தவாறு, வரலாற்று மற்றும் அரசியல் அபிவிருத்திகளை துல்லியமாக புரிந்து கொள்வதன் மூலம், புரட்சிகர வேலைகளை அடித்தளமாகக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டார் என்று வான்ட்ரீயர் குறிப்பிட்டார். ஆகவே, சியோனிசத்தின் தர்க்கம் மற்றும் எச்சரிக்கை ஒலி: போருக்கு எதிரான சோசலிசம் போன்ற அவரது படைப்புகளில் நோர்த் ஒப்பிடமுடியாத தெளிவுடன் அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார்.

பிந்தைய தொகுப்பில், கடந்த 10 ஆண்டுகளில் மே தின பேரணிகளில் நோர்த் ஆற்றிய உரைகள் இடம்பெற்றுள்ளன. இது “தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அபிவிருத்திகள் குறித்து பலமாக எச்சரிக்கிறது” என்று வான்ட்ரீயர் கூறுகிறார். “ஏகாதிபத்திய சக்திகள், மீண்டுமொருமுறை, இனப்படுகொலை செய்வதற்கும், அணுஆயுத போர் அபாயத்திற்கும், இறுதியில் உலகம் முழுவதையும் தீக்கிரையாக்கவும் தயாராகும் என்று பலர் நினைக்கவில்லை. ஆனால் அதுதான் இப்போது நடக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அக்டோபர் 19, 2024 அன்று, பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியின் போது டேவிட் நோர்த் கூட்டத்தில் உரையாற்றுகிறார். [Photo: WSWS]

ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான போர்முறையைக் கண்டனம் செய்து நோர்த் தனது கருத்துக்களைத் கூறத் தொடங்கினார். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) படுகொலையானது, “உலகளாவிய ஜனநாயகத்தின் மையமாக தன்னை முன்னிறுத்தும் ஒன்றிற்குள் ஜனநாயக கோட்பாடுகள் முற்றிலுமாக சிதைந்து போவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு. இது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் பொறிவு, ஜனநாயக ஒழுங்கு என்றழைக்கப்படுவதன் மற்றும் முதலாளித்துவ உலகம் அப்பட்டமான காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ச்சியடைவதற்கான ஒரு புறநிலை அறிகுறியாகும்” என்று அவர் கூறினார்.

முதல் அவுஸ்விட்ச் (Auschwitz, நாஜிக்களின் படுகொலை முகாம்) விசாரணை 60 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டம் நடந்த இடமான பிரிட்ஸ் பௌவர் (Fritz Bauer) அரங்கில் நடைபெற்றது என்பதை நோர்த் சுட்டிக்காட்டினார். காஸா மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போருக்குப் பொறுப்பானவர்கள் தங்கள் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் நாள் வரும் என்று அவர் கூறினார்.

சின்வாரின் வாழ்க்கையும், ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் போலவே, ஒடுக்குமுறையால் குணாம்சப்படுத்தப்பட்டது என்று நோர்த் வலியுறுத்தினார்.

நோர்த் பின்வருமாறு கூறினார்:

இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதற்காக, அவர் தனது உயிரையும் கொடுத்தார். இந்த அர்த்தத்தில், அவருடைய உதாரணம் மதிப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் அதே நேரத்தில், பாலஸ்தீனிய மக்கள் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெறுவதும் அவசியமாகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டாமல் தேசிய ஒடுக்குமுறைக்கு எந்த தேசியத் தீர்வும் இருக்க முடியாது என்பதே தீர்க்கமான படிப்பினையாகும்.

நோர்த் பின்வருமாறு விளக்கினார்:

அதாவது, நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் வேரூன்றியுள்ள ட்ரொட்ஸ்கிசத்தின் மிக அடிப்படையான படிப்பினை என்னவென்றால், தேசியப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும் —அதாவது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாகவும், முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசுவதன் மூலமாகவும் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் அத்தனை அட்டூழியங்களையும் தூக்கிவீசுவதன் மூலமாகவும் மட்டுமே தீர்க்க முடியும்.

நோர்த்தின் கருத்துப்படி, இந்த நிகழ்வின் தலைப்பு விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது:

இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து பயங்கரங்களும், இனப்படுகொலையின் கொடூரங்கள், பாசிசத்தின் மீளெழுச்சி, போர் அபாயம் ஆகியவை 20 ஆம் நூற்றாண்டின் யதார்த்தங்களை, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி, இன்னும் குறிப்பாக 1914 மற்றும் 1945 க்கு இடையிலான 31 ஆண்டுகளை ஒத்திருக்கின்றன.

உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கிலான போர்கள், உலகை மறுபங்கீடு செய்வதன் மீது தீவிரமடைந்து வரும் உலகளாவிய மோதலின் பாகமாகும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

“எதிர்காலத்தை நோக்கி திரும்பு” என்பதன் அர்த்தம், எதிர்காலத்திற்கான ஒரு முன்னோக்கை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த காலத்திலிருந்து படிப்பினைகளைப் பெறுவது அவசியமாகும் என்றும் அவர் கூறினார். “ஒரு எதிர்காலம் இருக்க வேண்டுமானால், தொழிலாள வர்க்கமும் இளைஞர்களின் முன்னேறிய பிரிவுகளும் முதலாளித்துவ விதிகள் குறித்த மார்க்சிச பகுப்பாய்வின் ஒரு புரிதலை மீண்டும் பெற வேண்டும்” என்று நோர்த் கூறினார்.

இருபதாம் நூற்றாண்டின் பேரழிவுகள் வெறுமனே தீய நோக்கங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளான சமூக உற்பத்திக்கும் தனியார் கையகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாடுகள், மற்றும் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் சர்வதேசத் தன்மைக்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. “போருக்கு இட்டுச் செல்லும் அனைத்து புவிசார் அரசியல் மோதல்களுக்கும் இதுவே காரணம்,” என்று நோர்த் தொடர்ந்து கூறினார்.

இன்று, இந்த முரண்பாடுகள் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்னும் வெடிப்புத்தன்மை உடையவையாக உள்ளன. ஏனென்றால், மகத்தான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உற்பத்தியின் சர்வதேச ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு தொழில்துறை பண்டமும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பாகங்களால் ஆன ஒரு சர்வதேச பண்டமாகும். அதே நேரத்தில், இது முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான அடிப்படையையும் உருவாக்கியிருக்கிறது..

நோர்த் கூறினார்:

முதலாளித்துவவாதிகளால் இலாபம் ஈட்டுவதற்காக உலகளவில் உற்பத்தியை ஒழுங்கமைக்க முடியுமென்றால், உலகப் புரட்சியை நடத்தவதற்கு தொழிலாள வர்க்கம் ஏன் உலகளவில் ஒழுங்கமைக்க முடியாது? இவ்விரு நிகழ்ச்சிப் போக்குகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவையாகும்.

இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, உலகளாவிய நெருக்கடிக்கு இரண்டு தீர்வுகள் மட்டுமே உள்ளன: ஒன்று போர் அல்லது புரட்சி. அப்போது போர் மட்டுமல்ல புரட்சிகளும் இருந்தன, அவை ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டன.

நோர்த் மேலும் கூறினார்:

நாம் இப்போது 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். கடந்த நூற்றாண்டில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நிலையை நாம் எதிர்கொள்கிறோம். பெரும் அபாயங்கள் உள்ளன, ஆனால் இப்பிரச்சினைகளைக் கடப்பதற்கு புறநிலைமைகள் தயாராக உள்ளன என்பதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது இறுதியாக கடந்த நூற்றாண்டில் தீர்க்கப்படாத ஒரேயொரு மாபெரும் பிரச்சினையை, அதாவது புரட்சிகரத் தலைமை நெருக்கடியை நாம் தீர்ப்பதற்கான பிரச்சினையை அவசியமாக்குகிறது.

முடிவில், சமீபத்திய காலகட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு எதிராக எண்ணற்ற தாக்குதல்கள் நடந்துள்ளன என்ற உண்மையின் மீது அவர் கவனத்தை ஈர்த்தார். பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜோன் கெல்லி (John Kelly) ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம் (Twilight of Trotskyism) என்ற அவரது புத்தகத்தில் “அனைத்தும் அல்லது ஒன்றுமில்லை” என்ற மனோபாவத்தைக் கொண்டிருப்பதாகவும், சீர்திருத்தவாதத்தின் சாத்தியத்தை நிராகரிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். “சீர்திருத்தவாதத்தின் சாத்தியக்கூறுக்கு எதிராக ஒரேயொரு வாதம் இருக்கிறது என்றால், அது உலக அரசியல் சூழ்நிலையின் நிலைதான்,” என்று நோர்த் கூறினார்.

ஒரு பிரம்மாண்டமான எதிர்ப்பு அபிவிருத்தி அடைந்து வருகிறது, ஆனால் மார்க்சிசத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு தீர்வு இருக்கும். நோர்த் ஒரு அவசர வேண்டுகோளுடன் முடித்தார்:

வளர்ச்சியின் விதிகளைப் படியுங்கள், ஆராயுங்கள், புரிந்து கொள்ளுங்கள். சமூகத்தின் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புங்கள், புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புங்கள்.

இதைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், வரலாற்றில் அகநிலை மற்றும் புறநிலை காரணிகளின் பாத்திரம், காலநிலை மாற்றத்திற்கான முதலாளித்துவத்தின் பொறுப்பு, மற்றும் பாசிசத்தின் எழுச்சி உட்பட பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு நோர்த் பதிலளித்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது. ஒருவர் “குறைந்த தீமையை” தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாதத்திற்கு நோர்த் எவ்வாறு விடையிறுப்பார் என்று கேட்கப்பட்ட போது, புரட்சிகர இயக்கம் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு மாற்றீட்டை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.

ட்ரம்பைத் தடுக்க ஒருவர் ஹாரிஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நம்பியவர்களைக் குறிப்பிட்டு, நோர்த் கூறுகையில், ட்ரம்ப் எங்கிருந்து வந்தார் என்று கேட்பது அவசியமாகும் என்று வலியுறுத்தினார். “அவர் நம் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார சீரழிவின் விளைபொருளாவார்.”

அவர் கூறியதாவது:

கமலா ஹாரிஸே பாரிய படுகொலையுடன் முழுமையாக தொடர்புடையவர். இது “குறைந்த தீமையா?” ரஷ்யாவுக்கு எதிரான போர், ஈரானுக்கு எதிரான போர் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் ஆகியவற்றை பிரச்சாரம் செய்யும் கட்சியான ஜனநாயகக் கட்சி “குறைந்த தீமை” கொண்டதா? சி.ஐ.ஏ.வின் கட்சியா? இது குறைந்த தீமையா?

அவர் மேலும் வலியுறுத்தியதாவது:

நமது அரசியல் தேர்தலை மையப்படுத்தியதல்ல. தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதற்கும் அரசியல் அமைப்புமுறையின் திவால்நிலையை தொழிலாளர்களுக்குக் காட்டுவதற்குமான ஒரேயொரு நோக்கத்திற்காக நாம் தேர்தல்களைப் பயன்படுத்துகிறோம். தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு அரசியல் கல்வியூட்டுவதும், இப்போதிருக்கும் அமைப்புமுறைக்கு எதிராக ஒரு முறையான மற்றும் நீடித்த புரட்சிகர போராட்டத்தை நடத்துவதற்கு அவசியமான புரிதலை அவர்களுக்கு வழங்குவதுமே நமது இலக்காகும்.

பிராங்பேர்ட்டில் டேவிட் நோர்த் (வலமிருந்து இரண்டாவது) உடனான நிகழ்வுக்குப் பிந்தைய கலந்துரையாடல், அக்டோபர் 19, 2024 [Photo: WSWS]

இந்த நிகழ்வுக்குப் பிறகு, காட்சிக்கு புத்தகங்கள் வைத்திருந்த மேசைகள் இருந்த இடத்தில் நீண்ட கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் டேவிட் நோர்த்தின் புத்தகங்களை வாங்கியதுடன், சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப உதவுவதற்காக அவர்களின் தொடர்புத் தகவல்களையும் கொடுத்துச் சென்றனர்.

Loading