போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துக்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இலங்கையில் நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறது. தலைநகர் கொழும்பு, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் 41 வேட்பாளர்களை நாம் நிறுத்தியுள்ளோம். சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களான விலானி பீரிஸ், பி.ரி. சம்பந்தர் மற்றும் எம். தேவராஜாவும் முறையே இம்மாவட்டங்களில் எங்களின் வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியானது ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளுக்கு திரும்புவதற்கு எதிராக, சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப இந்த பாராளுமன்றத் தேர்தலில் தலையிடுகிறது.

கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 9 ஜூலை 2022 அன்று, இலங்கை ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் தெருவில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள். [AP Photo/Amitha Thennakoon]

2022 இல், கடுமையான சமூக இடர்ப்பாடுகளுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஒரு வெகுஜன எழுச்சி, கோட்டாபய இராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக நிர்ப்பந்தித்தது. ஆனால், அவருக்குப் பின்னர், அனைத்து ஸ்தாபனக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் மக்களின் முதுகுக்குப் பின்னால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தினார்.

உலக மூலதனத்துடனும், பெருவணிகத்தின் உத்தரவின் பேரிலும் செயற்பட்ட அவரது அரசாங்கம், பாரிய செலவு வெட்டுக்கள், தண்டனை போன்ற மின்சாரக் கட்டண உயர்வுகள் மற்றும் மேலும் அநியாயமான வரி விதிப்புகள் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்தது.

​​மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள், இப்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) தலைவரான அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளதோடு ஜே.வி.பி./தே.ம.ச அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியை வெல்வதில், திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச.யும் பாரம்பரிய ஆளும் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்திய (ஜயவர்தன/விக்கிரமசிங்க, இராஜபக்ஷ, பிரேமதாசாக்கள் போன்ற)  ஊழல் நிறைந்த ஆளும் வர்க்க குடும்ப கும்பல்கள் தொடர்பாக ஆழமாக வேரூன்றியிருந்த வெகுஜன விரோதத்தை இழிந்த முறையில் சுரண்டிக்கொண்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு ஒரு பாரதூரமான எச்சரிக்கையை விடுக்கின்றது: உங்களை இரண்டு முறை ஏமாற்ற அனுமதிக்காதீர்கள்! இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்கவை விட தான் வேறுபட்டவர் அல்ல என்பதை திசாநாயக்க நிரூபிப்பார்.

ஜே.வி.பி./தே.ம.ச. ஒரு வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு, சிங்கள பேரினவாதக் கட்சியாகும். திசாநாயக்க ஒரு 'இடதுசாரி', ஒரு 'மார்க்சிஸ்ட்' என்றும் கூட இலங்கை ஊடகங்களால் பரப்பப்படும் கட்டுக்கதைகள் தொழிலாள வர்க்கத்தை குழப்புவதற்கும் அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதற்கும் பிரச்சாரம் செய்யப்படும் பொய்கள் ஆகும்.

தமிழர்-விரோத இனவாதப் போரின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜே.வி.பி., நீண்ட காலத்திற்கு முன்பே சோசலிசம் பற்றிய எந்தப் பேச்சையும் கைவிட்டு, கடந்த மூன்று தசாப்தங்களாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளது.

திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன ஆணைகளை அமுல்படுத்த மீண்டும் மீண்டும் உறுதியளித்துள்ளனர். 400க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் / மறுசீரமைப்பு செய்தல்,  இலட்சக் கணக்கான பொதுச் சேவை தொழில்களை அழித்தல், இலவசக் கல்வி, சுகாதாரம் உட்பட அத்தியாவசிய சேவைகளை மேலும் வெட்டிக் குறைத்தல் மற்றும் வெகுஜனங்கள் மீதான வரிச்சுமைகளை அதிகரித்தலும் இந்த ஆணைகளில் அடங்கும்.

23 செப்டம்பர் 2024 அன்று பதவியேற்ற பின்னர் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஊடகங்களுக்கு உரையாற்றுகிறார் [Photo by Sri Lanka President's Media Division]

ஜே.வி.பி./தே.ம.ச.யின் பொருளாதார 'அபிவிருத்தி' திட்டத்திற்கு 'சட்டம் மற்றும் ஒழுங்கு' இன்றியமையாதது என்ற திசாநாயக்கவின் தொடர்ச்சியான அறிவிப்புகளை உழைக்கும் மக்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தலைதூக்கும் தவிர்க்க முடியாத எதிர்ப்பை நசுக்குவதற்கு, தற்போதுள்ள ஜனநாயக விரோத சட்டங்களின் கோவையைப் பயன்படுத்தத் தயங்காது. குறிப்பிடத்தக்க வகையில், சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அதன் முந்தைய பேச்சுக்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டது.

ஆளும் வர்க்கம் தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தைச் சார்ந்திருப்பதால் அது அதைக் கொண்டாடுகின்றது. ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என முன்னறிவித்த விக்கிரமசிங்க, புதிய அரசாங்கம் மீது நம்பிக்கை வைப்பதாக உடனடியாக அறிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி பைடன், இந்தியப் பிரதமர் மோடி இருவரும் புதிய அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்க தங்கள் ஆர்வத்தை உறுதிப்படுத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த சுற்று சிக்கன நடவடிக்கைகளை முன்நகர்த்துவதற்கு முன்னதாக, தனது அரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்திக்கொள்ள திசாநாயக்க முயற்சிக்கின்றார். அதற்காக ஜே.வி.பி/தே.ம.ச. அராசங்கத்துக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை வெல்வதன் பேரில், மக்களை ஏமாற்றுவதற்காக அவர் முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சோசலிச சமத்துவக் கட்சியைப் பொறுத்தவரை, அதன் தேர்தல் பிரச்சாரம், புதிய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு எதிராக வரவிருக்கும் அரசியல் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தயார்படுத்துவதற்கான நமது போராட்டத்தில் இன்றியமையாத அங்கம் ஆகும்.

வறுமை, வேலையின்மை, சமூக சமத்துவமின்மை, பெருகி வரும் உலகப் போர் ஆபத்து மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் போன்ற, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளை முதலாளித்துவத்துக்குள்ளும் தேசிய அரச கட்டமைப்பிற்குள்ளும் தீர்க்க முடியாது என்று நாங்கள் கூறுகிறோம்.

பெரும் செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, மிகப்பெரும்பான்மையினரின் உடனடி சமூகத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், சமூகத்தை சோசலிச வழியில் மாற்றியமைப்பதற்காக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் உழைக்கும் மக்களின் பல்வேறு போராட்டங்களையும் ஒன்றிணைப்பது அவசியமாகும்.

ஏகாதிபத்திய போருக்கு எதிரான உலகத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு இயக்கத்திற்காக

இலங்கைத் தேர்தலானது, தீவில் முதலாளித்துவ ஆட்சியை உலுக்கிய முன்னெப்போதும் இல்லாத சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறுகின்றது. இந்த நெருக்கடியானது, உலக முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான வீழ்ச்சியில் வேரூன்றியிருக்கின்றது. இந்த நெருக்கடியே அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளை ஆக்கிரமிப்பு மற்றும் உலகப் போர் மூலம் உலகை மறுபகிர்வு செய்வதை முன்னெடுக்க உந்துகின்றது.

அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஓராண்டு கால இனப்படுகொலைப் போருக்கு அரசியல் ரீதியாகவும் தளபாட ரீதியாகவும் ஆதரவளித்துள்ளதுடன் இப்போது லெபனான் மீதான அதன் படையெடுப்புக்கும் ஈரானைத் தாக்குவதற்கான தயாரிப்புகளுக்கும் உதவுகின்றன.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா-நேட்டோவினால் தூண்டிவிட்ட போர், இந்த உலகளாவிய போரில் இரண்டாவது களமுனையாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளில், ஏகாதிபத்திய சக்திகள் இடைவிடாமல் போரைத் தீவிரப்படுத்தி, தங்கள் கொள்ளையடிக்கும் நோக்கங்களை அடைய, அணு ஆயுதப் போர் ஆபத்தை ஏற்படுத்தத் தயாராக இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதே நேரம், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மிக ஆபத்தான போட்டியாளராக அது கருதுகின்ற, சீனாவிற்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களையும் போர் தயாரிப்புகளையும் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடான இந்தியாவும் இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளை சீனாவிற்கு எதிரான போர் உந்துதலில் ஒருங்கிணைக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஜே.வி.பி. தலைமையானது வாஷிங்டன் மற்றும் புது டில்லியுடன் அணிசேர்ந்து நிற்கும் அதன் விருப்பத்தை ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளது. இந்தக் கொள்கை ஏற்கனவே விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் மிகவும் முன்நகர்த்தப்பட்டுள்ள ஒன்றாகும். பைடனின் வாழ்த்துச் செய்திக்கு பதிலளித்த திசாநாயக்க, தனது தலைமையின் கீழ் இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றும் என்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் வாஷிங்டனின் நலன்களை மேலும் மேம்படுத்தும் என்றும் அறிவித்தார்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீட்டால் மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் மனிதகுலத்தை ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரில் மூழ்கடிப்பதை நிறுத்த முடியும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஏனைய பிரிவுகளுடன் சேர்ந்து, போருக்கு மூலகாரணமான முதலாளித்துவத்துக்கும் அதன் கீழ் உலகம் காலாவதியான போட்டி தேசிய அரசுகளாக பிளவுபடுத்தப்பட்டிருப்பதற்கும் முடிவுகட்டுவதற்காக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போர்-எதிர்ப்பு இயக்கமொன்றைக் கட்டியெழுப்ப நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். இலங்கையிலும் தெற்காசியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, போருக்கு எதிரான இந்த போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

வர்க்க ஆட்சியின் நெருக்கடி

பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உட்பட முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் சின்னாபின்னமாகிப் போயுள்ளன. கடுமையான வறுமை, சமூக சமத்துவமின்மை மற்றும் உள்நாட்டுப் போருக்கும் பல தசாப்தங்களாக தலைமை தாங்கிய பின்னர், இந்தக் கட்சிகளுக்கு இருந்த வெகுஜன ஆதரவு குறைந்து போனமையே அவற்றின் நெருக்கடிக்கு மூல காரணம் ஆகும்.

அவற்றில் எதுவும் உழைக்கும் மக்களுக்கான எந்த வகையான மாற்றீட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பாராளுமன்ற பெரும்பான்மையை வெல்லும் முயற்சியில் ஜே.வி.பி. தோல்வியுற்றாலும், திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு அல்லது இலங்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்பில் அணிதிரட்டுவதற்கு கொஞ்சமேனும் எதிர்ப்பு காட்டுவதற்கு எவரும் முன்வரமாட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் அரசியல் ரீதியாக கட்டிப்போட செயற்படும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது கட்சிகளை நிராகரிக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. முன்னிலை சோசலிசக் கட்சியானது புதிய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை இடது பக்கம் செல்ல அழுத்தம் கொடுக்க முடியும் என்று கூறி, மாயைகளை பரப்புவதுடன் அதன் பிற்போக்கு குணாம்சத்தை மூடிமறைக்கிறது.

2022 எழுச்சியின் படிப்பினைகளும் தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டுக்கான போராட்டமும்

2022 வெகுஜன எழுச்சியின் கருப்பொருள் படிப்பினைகளை தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு செல்ல சோசலிச சமத்துவக் கட்சி போராடும். நான்கு மாத காலப்பகுதியில் வெளிப்பட்ட இந்த எழுச்சியானது தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை நிரூபித்தது. அதன் வேலைநிறுத்தங்கள் இராஜபக்ஷ ஆட்சியின் முதுகெலும்பை உடைந்தன. சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை எதிர்த்து கூட்டாக வீதியில் இறங்கிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் புறநிலை வர்க்க ஐக்கியத்தையும் இது பலமாக உறுதிப்படுத்தியது.

அதே நேரத்தில், எழுச்சியின் பாரதூரமான அரசியல் பலவீனம் என்னவென்றால், தொழிலாள வர்க்கம் ஓரமாக நின்றுகொண்டு, அரசியல் முன்முயற்சியை ஆளும் வர்க்கத்திடமும் அதன் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடமும் விட்டுவிட்டதே ஆகும். ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி தலைமையிலான தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற தளத்தை மறுசீரமைப்பதன் அடிப்படையில் 'இடைக்கால' முதலாளித்துவ அரசாங்கத்திற்கான கோரிக்கையை முன்வைத்தன. இதன் விளைவாக, விக்கிரமசிங்க ஜனநாயக விரோதமாக பதவியில் அமர்த்தப்பட்டதுடன், அவர், அனைத்துக் கட்சிகளும் உறுதியாக ஆதரித்த சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பேச்சுவார்த்தை நடத்தி திணித்தார்.

இந்த அனைத்து சக்திகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது 'இடைக்கால அரசாங்கத்தை' நிராகரித்ததுடன், முழு முதலாளித்துவ கட்டமைப்பிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் அடிப்படையில் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடன் 2022 எழுச்சியை ஆயுதபாணியாக்க முற்பட்டது.

அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும், சிக்கனத் திட்டத்தை எதிர்ப்பதற்கும், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை ஒழுங்கமைக்கவும், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் மற்றும் கிராமப்புறங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப நாங்கள் போராடினோம்.

2022 ஜூலையில், சோசலிச சமத்துவக் கட்சியானது, வளர்ந்து வரும் நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பின் அடிப்படையில், தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்ப ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் தங்கள் போராட்டங்களை ஒன்றுபடுத்துவதற்கும், அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்கும், பாராளுமன்றம் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறை உட்பட முதலாளித்துவத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் வர்க்க அதிகாரத்தை திட்டமிட்ட முறையில் எதிர்ப்பதற்கும் இது வழிவகை செய்யும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் வெடிக்கும் போராட்டங்களுக்கு வரக்கூடிய சூழ்நிலையிலும், நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டமும் தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கூட்டுவதற்கான போராட்டமும் இன்னும் அவசரமானதாகும்.

தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக! சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்தையும் நிராகரி!

தொழிலாள வர்க்கம் பிளவுபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. சிங்கள பேரினவாதம், தமிழ் பிரிவினைவாதம் மற்றும் சகல வடிவிலுமான வகுப்புவாதம் உட்பட அனைத்து வகையான தேசியவாதத்தையும் நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது: தமிழர் விரோத ஆத்திரமூட்டல்களில் ஜே.வி.பி./தே.ம.ச.யின் இழிவான பதிவை மூடிமறைக்கும் முயற்சிகளால் ஏமாற வேண்டாம். அதன் பெருவணிக திட்ட நிரலுக்கு தொழிலாள வர்க்கம் சவால் விடுகையில், அது தொழிலாளர்களைப் பிளவுபடுத்தவும், பெருகிவரும் சமூகக் கோபத்தை பிற்போக்கான திசையில் திருப்பிவிடவும் சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டுவதை நாடும்.

ஏற்கனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி.யும் அரசியலமைப்பில் பௌத்தத்தின் உயர்ந்த அந்தஸ்துக்கான தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை எதிர்த்தால் 'தெற்கின்' கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அச்சுறுத்தினர். தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைப் பொறுத்தவரை, அவை சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிப்பதுடன் இலங்கை வாஷிங்டனின் சத்திரமாக செயற்படுவதை தீவிரமாக ஆதரிக்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் தங்களின் சலுகைகள் மற்றும் இலாபங்களை பெருக்குவதற்கான 'அதிகாரப் பகிர்வு' ஏற்பாட்டைப் பெறுவதைப் பற்றி மட்டுமே தமிழ் உயரடுக்கு கவலைப்படுகின்றது.

ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் மற்றும் அதன் நச்சுத்தனமான இனவாத அரசியலுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசை ஸ்தாபிப்பதற்கு சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்து உழைக்கும் மக்களின் போராட்ட ஐக்கியத்தை உருவாக்க போராடுகிறது.

ஒரு செயல் வேலைத் திட்டம்:

பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராட தொழிலாளர்களை நாம் அழைக்கிறோம்.

  • சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை முழுவதுமாக நிராகரி! முதலாளித்துவம் பெற்றுள்ள வெளிநாட்டுக் கடன்கள் நிராகரிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்கள் முறைகேடாக சேகரித்த சொத்துக்கள் வெகுஜனங்களின் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கைப்பற்றப்பட வேண்டும்.
  • அனைத்து தனியார்மயமாக்கல் மற்றும் முதலாளித்துவ மறுசீரமைப்பும் வேண்டாம்! தனியார்மயமாக்கல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அனைத்து அரச நிறுவனங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!
  • கிராமப்புற விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு மானியங்கள் மற்றும் சமூக திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்!
  • வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொது நிறுவனங்களாக மாற்று!
  • பாரிய இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தை கலைத்திடு! வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சிறுபான்மையினரை தொடர்ந்து ஒடுக்கும் அனைத்து படைகளையும் அங்கிருந்து விலக்கிக்கொள்!
  • அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு மசோதா மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா உட்பட அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் ரத்துச் செய்!
  • எதேச்சாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்திடு!

சோசலிச சமத்துவக் கட்சி தனது மூலோபாயத்தை ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், தெற்காசியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுடன் கூட்டு சேர வேண்டும், இதே போன்ற சிக்கன நடவடிக்கைகள் மற்றும் உக்கிரமான தொழிலாளர் சுரண்டலுக்கான முதலாளித்துவ உந்துதலை மற்றும் அதே போர் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

2022 எழுச்சியின் மிக முக்கியமான படிப்பினை, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்குள் ஒரு சோசலிச-சர்வதேச வேலைத்திட்டத்தை பாய்ச்சுவதும், அதன் அரசியல் சுயாதீனத்தை உருவாக்குவதற்கும், இலங்கை மற்றும் சர்வதேச முதலாளித்துவத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதற்கான அதன் போராட்டத்தை வழிநடத்துவதற்குமான ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியமே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இணையுமாறும் உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறும் நவம்பர் 14 அன்று கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் அனைத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading