இலங்கையின் பெரும் வர்த்தகர்கள் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்க விரைந்துள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் பெருவணிக குழுமங்கள், புதிய ஜனாதிபதியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) / தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை பாராட்டியுள்ள அதே வேளை, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள “மறுசீரமைப்பு திட்டத்துக்கு' முழுமையாக இணங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜே.வி.பி. தலைவருமான அனுரகுமார திசாநாயக்க, 4 செப்டம்பர் 2024 அன்று வர்த்தகர் மன்றத்தில் உரையாற்றிய போது [Photo by NPP Facebook]

பேராசைபிடித்த இலங்கை உயரடுக்குகள், தனியார்மயமாக்கல், ஊதிய முடக்கம், பாரியளவான அரசதுறை வேலை அழிப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான மானியங்களைத் துடைத்தழித்தல் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனக் கோரிக்கைகளை, அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஊக்குவிக்கின்ற மற்றும் இலாபங்களை அதிகரிப்பதற்கான தங்கள் வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற ஒரு சாதகமான விடயமாக பார்க்கின்றன.

இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC), இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (FCCISL), கூட்டு ஆடைத் தொழிற்துறை சங்க மன்றம் (JAAF) ஆகிய அனைத்தும் திசாநாயக்கவை வாழ்த்தி அறிக்கைகளை வெளியிட்டு புதிய அரசாங்கத்திற்கு தமது சொந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

நாட்டின் பிரதான ஏற்றுமதித் துறையான ஆடை மற்றும் துணி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு ஆடைத் தொழிற்துறை சங்க மன்றம், திசாநாயக்கவை மனதார வாழ்த்தியதுடன் அதன் 'முழு ஆதரவையும்' தெரிவித்தது.

இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், 'அவரது தலைமையின் கீழ் வரவிருக்கும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன்' இருப்பதாக அறிவித்தது. இலங்கை வங்கிகள் சங்கம், 'நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதை' உறுதிப்படுத்த அதன் முழு அர்ப்பணிப்பையும் உறுதி செய்து வாழ்த்துக்களை அனுப்பியது.

இலங்கை ஹோட்டல்கள் சங்கம் (THASL), இலங்கை உள்வரும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் (SLAITO) ஆகியவையும் நாட்டை வழிநடத்த திசாநாயக்கவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், “நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக” உறுதியளித்தனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனமானது அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு இன்னும் ஒரு படி மேலே சென்று, பத்து கோரிக்கைகளின் பட்டியலை உள்ளடக்கியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரல் 'மாற்றங்கள்' இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​ சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிறைவேற்றுவதாக திசாநாயக்க பெருவணிகத்திற்கு உறுதியளித்த போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்புக்கான நிபந்தனைகளை பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாக கூறினார். வெறுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளைத் தளர்த்த முடியும் என்று உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக பேச்சுவார்த்தைகள் சாத்தியம் என்ற மாயையை அவர் உருவாக்கினார்.

அத்தகைய சூட்சுமத்துக்கு இடமில்லை என்பதே இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செய்தி ஆகும். 'முழுமையான வெளிப்புறக் கடன் மறுசீரமைப்பு' ஏற்படுத்தப்படுவதோடு வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏற்பாடுகளைத் தொடர வேண்டும்.

வரவிருக்கும் மூன்றாவது சர்வதேச நாணய நிதிய மீளாய்வு வெற்றிகரமாக இருப்பதோடு நான்காவது தவணை பிணை எடுப்பு கடனை வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் பெரும் வணிகர்கள் அக்கறை கொண்டுள்ளனர். அரசாங்கம் அதை உறுதிப்படுத்தத் தவறினால், நான்காவது தவணையான 331 மில்லியன் டொலர்கள் கடன் மட்டுமன்றி, ஏனைய சர்வதேச நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடன்களும் சிக்கலாகிவிடும்.

4 செப்டம்பர் 2024 அன்று கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் வர்த்தக மன்றக் கூட்டம் [Photo: NPP Facebook]

நிதியமைச்சராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட திசாநாயக்க, பொருளாதார பரிமாற்றச் சட்டம், பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டம், பொது நிதி முகாமைத்துவம் மற்றும் இலங்கை மின்சாரச் சட்டம் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முன்நகர்த்தப்படுவதை உறுதிப்படுத்த ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களை அமுல்படுத்துமாறு இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வாரம் அறிவிக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி/தே.ம.ச. பெரும்பான்மையை பெறவில்லை எனில், விக்கிரமசிங்க அரசாங்கத்தால் இயற்றப்பட்ட இந்தச் சட்டங்களை மாற்ற முடியாது.

இலங்கை வர்த்தக சம்மேளனமானது புதிய அரசாங்கத்தை 'சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக ஆய்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அரசாங்க செயல் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியது. வெளிநாட்டுக் கடனாளிகளுக்குத் திருப்பிச் செலுத்துவதற்காக, வரி விதிப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான செலவு வெட்டுக்கள் மூலம், உழைக்கும் மக்களிடமிருந்து அதிகபட்சம் பிழிந்தெடுக்கப்படுவதைக் கண்காணித்து உறுதி செய்வதே நிதி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்படும் மதிப்பீடு ஆகும்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்மொழிவுகள், கோரிக்கைகளோ அல்லது பரிந்துரைகளோ அல்ல, மாறாக, அவை 'புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியுடன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் பேரில், தடங்கலற்ற அர்ப்பணிப்பு மற்றும் முழு மனதுடன் ஆதரவை வழங்குவதற்காக..' திசாநாயக்க அரசாங்கத்திடம் பெருவணிகம் முன் வைக்கும் கோரிக்கைகள் ஆகும்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிலைப்பாடு ஆரம்பத்திலிருந்தே தெளிவாக உள்ளது. 2023 இல் சர்வதேச நாணய நிதிய திட்டம் கையொப்பமிடப்பட்ட போது, 'நீண்ட காலதாமதமான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதுடன் பொருளாதாரத்திற்கு இது ஒரு தீர்க்கமான புள்ளி என்று நாங்கள் நம்புகிறோம்... இந்த வேலைத் திட்டத்தில் எந்த இடைநிறுத்தத்தையும் நாடு ஏற்க முடியாது...' என அது அறிவித்தது.

இந்த ஆண்டு ஆகஸ்டில், இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதிய குழு, நாட்டின் நிதி நிலைமை குறித்த மூன்றாவது மதிப்பாய்வை ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைத்தது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதிய தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், 'ஒரு தீர்க்கமான கட்டத்தில் இலங்கை கத்தி முனையில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை உறுதியான பாதையில் வைப்பதற்கு, மறுசீரமைப்பு வேகத்தை தொடர்வதும் அனைத்து வேலைத்திட்ட அர்ப்பணிப்புகளையும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதிப்படுத்துவதும் மிகவும் தீர்க்கமானது…” என எச்சரித்தார்:

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச நாணய நிதியமானது ஏற்கனவே 'அனைத்து திட்ட உறுதிப்பாடுகளும்' செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அது முற்றிலும் சோடிப்பாகவே இருக்கும்.

குறிப்பாக, உபரி வருமானம் 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.6 சதவிகிதமாக உள்ள நிலையில், 2.3 சதவிகிதம் நடுத்தர கால முதன்மை இருப்பு உபரியை உறுதிசெய்ய, 2025 வரவுசெலவுத் திட்டத்தில் 'பொருத்தமான வருவாய் நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடுகளை' உள்ளடக்க வேண்டும் என்று ப்ரூயர் குறிப்பிட்டார்.

இதன் அர்த்தம், உழைக்கும் மக்கள் மற்றும் சிறு வணிகங்கள் மீது அதிக வரிகள் சுமத்தப்பட வேண்டும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்பனை செய்ய வேண்டும், அரை மில்லியன் அரச தொழில்களை அழிப்பதோடு பொது சுகாதாரம், கல்வி மற்றும் நலன்புரி திட்டங்களை வெட்ட வேண்டும், என்பதே ஆகும். இலங்கையின் 'கடன் நிலைத்தன்மையை' மீட்டெடுக்க இவை அனைத்தையும் முன்னெடுப்பதோடு விரைவுபடுத்தவும் வேண்டும் - வேறுவிதமாகக் கூறினால், சர்வதேச கடன் திமிங்கிலங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.

புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், திசாநாயக்க சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பு குறித்து பெருவணிகத்திற்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் உறுதியளித்தார். 'நாங்கள் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதுடன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளோம்,' என்று அவர் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இந்த அரசாங்கத்தின் பாதை தெளிவாக உள்ளது என்றும், எதிர்பார்ப்பு அல்லது மாயைகளுக்கு இடமில்லை என்றும் தொழிலாளர்களை எச்சரிக்கிறது. சர்வதேச நாணய நிதியமும் பெருவணிகங்களுமே அரசாங்கத்தின் பொருளாதார திட்ட நிரலை வகுத்துள்ளன. அரசாங்கம் இந்த திட்ட நிரலை ஈவிரக்கமின்றி செயல்படுத்துவதுடன் எந்த எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ளாது.

திசாநாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரதும் உழைக்கும் மக்களிடம் இருந்து வரும் எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கு தயாராகி வருகின்றனர். 'அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக சட்டம் ஒழுங்கைப் பேணுமாறு' உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு செவ்வாயன்று ஹெரத் அறிவுறுத்தினார்.

தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட அதன் சொந்த மூலோபாயத்தை வகுக்க வேண்டும். முதலாளித்துவ கட்சிகளோ அல்லது அவர்களின் கைக்கூலி தொழிற்சங்கங்களோ தொழிலாளர்களின் பக்கம் அல்லது கிராமப்புற வெகுஜனங்களின் பக்கம் நிற்கவில்லை. தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகள், தங்கள் சொந்த சுதந்திரமான போராட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை ஒழுங்கமைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. கிராமப்புற ஏழைகளும் தங்கள் பகுதிகளில் இதுபோன்ற குழுக்களை அமைக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளிகள், வாழ்க்கை நிலைமைகள் மீது இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்ற உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களே ஆவர். பூகோள இராட்சத கூட்டுத்தாபன மற்றும் சர்வதேச நிதி மூலதனத்திற்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்தின் பகுதியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இங்குள்ள நடவடிக்கைக் குழுக்கள் இணைக்கப்பட வேண்டும்.

'ஜனநாயகம்' என்ற திரைக்குப் பின்னால், முதலாளித்துவத்தின் ஊழல் மற்றும் வெறுக்கத்தக்க பிரதிநிதிகளால் பாராளுமன்றம் நிரம்பியுள்ளதுடன் அரசியல் அதிகாரத்தின் மீதான அதன் பிடியை நிலைநிறுத்துவதற்கு முதலாளித்துவம் அர்ப்பணிப்புடன் உள்ளது. உழைக்கும் மக்களுக்கு அவர்களின் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாயத்தை வகுக்கவும் செயல்படுத்தவும் அவர்களின் சொந்த அதிகாரத் தளம் தேவை.

சோசலிச சமத்துவக் கட்சி, தீவு முழுவதிலும் உள்ள நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை ஸ்தாபிக்க அழைப்பு விடுக்கிறது. உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் முதலாளித்துவ மற்றும் தேசிய அரச கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாது. அதனால்தான், திசாநாயக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்துகின்ற நிலையில், அதற்கு எதிரான போராட்டத்திற்கு அடிப்படையாக சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக நாம் வாதிடுகிறோம்.

Loading