இலங்கையின் புதிய ஜனாதிபதி திடீர் தேர்தலை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செவ்வாய்கிழமை மாலை, இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்து, நவம்பர் 14 அன்று பொதுத் தேர்தலை நடத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) தலைவர் திசாநாயக்க, சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு திங்கள்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க, 24 செப்டம்பர் 2024 அன்று கொழும்பில் இராணுவத் தளபதிகளைச் சந்தித்த போது [Photo by Sri Lankan Presidents' Media Division]

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் வரவிருந்த புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று திசாநாயக்க பலமுறை வலியுறுத்தி வந்தார். சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜே.வி.பி./தே.ம.ச. தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையுடன் 'நிலையான' அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என அவர் விரும்புகிறார்.

திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச.யும், பரந்த தனியார்மயமாக்கல், இலட்சக் கணக்கான அரச தொழில்களை அழித்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஆழமான வெட்டுக்களை மேற்கொள்வதையும் உள்ளடக்கிய சர்வதேச நாணய நிதிய திட்ட நிரல், பரவலான விரோதத்தையும் எதிர்ப்பையும் தூண்டும் என்பதை நன்கு அறிவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2022 இல், நாடு கடன் தவணை தவறியதை அடுத்து ஏற்பட்ட ஒரு பாரிய எழுச்சியை எதிர்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, நாட்டை விட்டு வெளியேறி பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் கடுமையான தட்டுப்பாடு, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் விலை உயர்வு மற்றும் நீண்ட நேர மின்வெட்டு போன்றவற்றால் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் பங்குபற்றி வீதிக்கு இறங்கினர்.

பாராளுமன்றம் வழியாக ஜனநாயகமற்ற முறையில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய பின்னர், மேலும் பாரிய வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புகளையும் தூண்டினார். தொழிற்சங்கங்கள், குறிப்பாக ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள், மீண்டும் மீண்டும் வெடித்த தொழில்துறை போராட்ட நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலும் விற்றுத்தள்ளுவதிலும் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தன.

திசாநாயக்கவின் வெற்றி உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என்று கூறி ஜே.வி.பி. இறுதியாக தேர்தலுக்கு முன்னர் அனைத்து வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை முடக்கியது. அதே நேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​ஜே.வி.பி/தே.ம.ச. சர்வதேச நாணய நிதியத்துடன் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய முயற்சிக்கும் அதேவேளை, அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் என்று திசாநாயக்க பெருவணிகர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் உறுதியளித்தார்.

தற்போது 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஜே.வி.பி./தே.ம.ச. மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளன. 'இடதுசாரி' மற்றும் 'மார்க்சிஸ்ட்' என்று ஊடகங்களில் பொய்யாக தூக்கிப்பிடிக்கப்படும் ஜே.வி.பி., இதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்ததில்லை. 1966 இல் மாவோவாதம்/காஸ்ட்ரோவாதம் மற்றும் பிளவுபடுத்தும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி., 1990களின் பின்னர் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்வதற்கு முன்னதாக, சிங்கள இளைஞர்களின் இரண்டு பேரழிவுகரமான ஆயுத கிளர்ச்சியை வழிநடத்தியது. கடந்த சனிக்கிழமை வாக்கெடுப்பில், 2019 ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்க பெற்ற வெறும் 3.8 வீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில், ஜே.வி.பி. அரச ஸ்தாபனத்திற்கு எதிரான தோரணையை காட்டி, 42 சதவீத விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டது.

ஜே.வி.பி. பெருவணிகம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் மற்றொரு அரசியல் கருவியாகும் என்பது உணரப்படும் முன், தனது ஆதரவுத் தளத்தை தூக்கிநிறுத்தும் அவநம்பிக்கையான முயற்சியில் திசாநாயக்க திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜே.வி.பி./தே.ம.ச., மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை அடைய விரும்புவதாகவும், அதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பை மாற்றும் திறனை பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர், தே.ம.ச.யின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை திசாநாயக்க பிரதமராக நியமித்தார். அவர் நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் ஏற்கனவே பாராட்டப்பட்டுள்ளார்.

2024 செப்டெம்பர் 25 அன்று ஜனாதிபதி செயலகத்தில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற கலாநிதி ஹரினி அமரசூரிய உடன் ஜனாதிபதி திசாநாயக்க [Photo by Sri Lankan President's Media Division]

முன்னாள் கல்வியாளரான அமரசூரிய, ஜே.வி.பி.யுடன் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்காததுடன் உறுப்பினராக அறியப்பட்டிருக்கவில்லை. அவர் அதன் தே.ம.ச. என்ற முன்னணி அமைப்பில் உறுப்பினராக உள்ளார். தே.ம.ச. ஊடாக, ஜே.வி.பி. கல்வியாளர்கள், வணிக தட்டினர் மற்றும் முன்னாள் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளின் குழுக்களை ஒன்று திரட்டியது. அவர்கள், திசாநாயக்கவின் 2019 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திலும் பங்குகொண்டிருந்தனர்.

அமரசூரிய 2020 பொதுத் தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும் அதன் மொத்த தேசிய வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படும் தேசிய பட்டியல் ஆசனத்தில் இருந்து, தே.ம.ச. உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தே.ம.ச. ஊடாக ஜே.வி.பி. அணிரட்டிக்கொள்ளும் உயர்-மத்தியதர வர்க்க அடுக்குகளின் அடையாளமாக அவரது வர்க்கப் பின்னணி உள்ளது. அவர் ஒரு தேயிலை தோட்ட உரிமையாளரின் மகள் ஆவார். அவரது குடும்ப பின்னணி மூலம், நாட்டின் ஆளும் உயரடுக்குகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார்.

திசாநாயக்க, அவரை பிரதமராக நியமித்ததன் மூலம், ஆளும் வர்க்கத்திற்கும் பெருவணிகத்திற்கும் மற்றும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும், அவர்களின் நலன்களுக்கு சேவை செய்வதில் தனது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்ற மிகத் தெளிவான செய்தியை அனுப்புகிறார். அமரசூரிய நீதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சராகவும் மேலும் பல இலாகாக்களுக்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கம் இப்போது திசாநாயக்க, அமரசூரிய, விஜித ஹேரத் ஆகிய மூன்று உறுப்பினர்களையே கொண்டுள்ளது. நவம்பர் 14 தேர்தல் முடிவுகள் அறியப்பட்டு புதிய பாராளுமன்றம் சத்தியப்பிரமாணம் செய்யும் வரை. திசாநாயக்க தன்னை சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகளுக்கு நியமித்துக் கொண்டார். பாதுகாப்பு மற்றும் நிதி, அத்துடன் எரிசக்தி, விவசாயம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சுக்களை அவர் எடுத்துக்கொண்டார்.

ஆளும் முக்கூட்டின் மூன்றாவது உறுப்பினரான ஹேரத், நீண்டகால ஜே.வி.பி உறுப்பினர் ஆவார். அவர் திசாநாயக்கவைப் போலவே, 2004-05 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரதமர் சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார். அந்த அரசாங்கத்தில் ஜே.வி.பி. கனிஷ்டப் பங்காளியாக இருந்தது. ஹேரத் கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய மரபுகள் அமைச்சராக இருந்தார். அதன் மூலம், திசாநாயக்க, ஹேரத் இருவரும் அரசாங்கத்தின் கடுமையான பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு அரசியல் பொறுப்பை ஏற்கின்றனர்.

ஹேரத், தற்போதைய மூன்று நபர் அரசாங்கத்தில், வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, பௌத்த விவகாரங்கள், மத மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு, ஊடகம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆகிய பிரதான இலாகாக்களை வைத்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் பரந்த அதிகாரங்களுக்கு இணங்க, அரசாங்கத்திற்கு சொந்தமான ஊடகங்கள் உட்பட பிரதான அரசாங்க சபைகளுக்கும் திசாநாயக்க புதிய நியமனங்களை வழங்கியுள்ளார். இதில் அரசு எந்திரத்தில் உள்ள உயர் நிர்வாகப் பதவிகள்-பல அமைச்சுக்களின் செயலாளர்களும் அடங்குவர்.

அவர் மீண்டும் மஹிந்த சிறிவர்தனவை திறைசேரி செயலாளராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான சிறிவர்தன, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிர்வாக இயக்குநராக முன்னர் இருந்துள்ளார். திறைசேரி செயலாளராக இருந்த போது, முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க உடன்பட்ட பிணை எடுப்புக் கடன் தொடர்பான நிபந்தனைகள் சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் அவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

திசாநாயக்க, சிறிவர்தனவை மீண்டும் நியமிப்பதன் மூலம், சர்வதேச நாணய நிதியம், வெளிநாட்டு கடன் வழங்குபவர்கள் மற்றும் பெருவணிகர்களுக்கு அவரது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை அமுல்படுத்தும் என்ற தெளிவான சமிக்ஞையை கொடுக்கிறார்.

ஒரு நாள் முன்னதாக, சர்வதேச நாணய நிதியமானது '2022 இல் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியதில் இருந்து, பொருளாதார மீட்சிக்கான பாதையில் இலங்கையை கொண்டு செல்ல உதவிய, கடின-வெற்றிகளின் மீது இலங்கையை கட்டியெழுப்புவதை நோக்கி' திசாநாயக்கவுடனும் அவரது குழுவினருடனும் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அறிவித்தது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் தனது வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வுக்கான நேரம் குறித்து அரசாங்கத்துடன் 'நடைமுறைசாத்தியமான வகையில் கூடிய விரைவில்' பேச்சுக்களை நடத்த முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது. ஏற்கனவே எதிர்ப்பைத் தூண்டிவிட்ட விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளின் ஆரம்பம் மட்டுமே. 400க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களை விற்கும் அல்லது மறுசீரமைக்கும் வேலையில் திசாநாயக்க ஈடுபட வேண்டும், வரிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் மற்றும் பொதுச் செலவினங்களில் பாரிய வெட்டுக்களைச் மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தும்.

திசாநாயக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் 'மறுசீரமைப்பு' திட்ட நிரலுக்கு இணங்கும் என்று உலகளாவிய தரமதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. 'திசாநாயக்கவின் தேர்தல் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் அதேவேளை, மறுசீரமைப்புக்கான பரந்த விருப்பம் அப்படியே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நடப்பு கடன் மறுசீரமைப்பு மற்றும் கட்டமைப்பு ஒழுங்குபடுத்தல்களும் உள்ளடங்கிய நாட்டின் மறுசீரமைப்பு திட்ட நிரலில் அல்லது நுண் பொருளாதாரக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று அது கூறியுள்ளது.

புதிய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், வாழ்க்கை நிலைமை மேம்பாடு பற்றிய வாக்குறுதிகளை கிழித்தெறிந்துவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துவதோடு எந்தவொரு எதிர்ப்பு அல்லது விமர்சனத்திற்கும் எதிராக பொலிஸ் அரச நடவடிக்கைகளை நாடும் போது அதற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மோதலுக்கு வரப் போகிறது.

ஜே.வி.பி. உட்பட கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவும், உலகப் போருக்கான உந்துதலையும் இடைவிடாத சிக்கன நடவடிக்கைகளையும் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய நகர்வுகளையும் நிறுத்துவதற்கான ஒரே வழிமுறையான, சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்காகப் பிரச்சாரம் செய்தனர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் இந்தியா முதல் கொழும்பில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் பல்வேறு போலி இடதுகள் வரை, திசாநாயக்கவிற்கு வாழ்த்துக் குரல் எழுப்புவதற்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி இந்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை ஆழப்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட உலக சோசலிச வலைத் தள முன்னோக்கு கூறியது போல், 'சோசலிச சமத்துவக் கட்சி இப்போது தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக ஐக்கியப்படுத்தி அணிதிரட்டவும், கிராமப்புற மக்களையும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் அதன் பின்னால் அணிதிரட்டி, வரவிருக்கும் ஜே..வி.பி. அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், போருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கும் எதிராக, சமூக சமத்துவத்திற்கான —அதாவது புரட்சிகர சோசலிசத்திற்கான— போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் போராட்டத்தை அபிவிருத்தி செய்யும்.”

Loading