முன்னோக்கு

மொமோடோ தாலுக்கு எதிரான துன்புறுத்தலை எதிர்க்க வேண்டும்! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

மொமோடோ தால் [Photo]

அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழக சர்வதேச மாணவரும் பட்டதாரி பயிற்றுவிப்பாளருமான மொமோடோ தால் (Momodou Taal), காஸாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக உடனடி நிரந்தர இடைநீக்கத்தையும் நாடு கடத்தலையும் எதிர்கொள்கிறார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), ஜனநாயக உரிமைகள் மீதான இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டிக்கிறது. இது அனைத்து மாணவர்களாலும் முழு தொழிலாள வர்க்கத்தாலும் எதிர்க்கப்பட வேண்டும்.

வியாழக்கிழமை மாணவர் மற்றும் பல்கலைக்கழக வளாக வாழ்க்கைக்கான துணைத் தலைவரால் அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று தால், கார்னெலின் துணைவேந்தரிடம் தனது இடைநீக்கத்திற்கான இறுதி மேல்முறையீட்டைச் சமர்ப்பித்தார். இந்த மேல்முறையீடு தோல்வியுற்று, அவர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டால், இது அவரது F-1 விசாவை இரத்து செய்யும் என்பதை கார்னெல் அறிந்துள்ளது, இதனால் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

தாலுக்கு எதிரான நடவடிக்கைகள், வளாகங்களில் எதிர்ப்பை அடக்குவதற்கான ஓராண்டு கால பிரச்சாரத்தில் ஒரு பெரும் தீவிரமாக்கலாகும், இது மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. தாலின் குடிவரவு வழக்கறிஞர் எரிக் லீ, இந்த வழக்கு குறித்து ஒரு அறிக்கையில் கூறியதுபோல், கார்னெல் “கல்வி நிறுவனத்திற்கும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் அமலாக்கப் பிரிவிற்கும் இடையிலான எல்லையை மங்கலாக்குகிறது.”

பிரிட்டிஷ்-காம்பிய மாணவரான தால், செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் பங்கேற்றதற்காக திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போராட்டத்தில் அவர், வளாகத்தில் ஆட்சேர்ப்பு நடத்தும் அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த எதிர்ப்பு குறிப்பாக போயிங் மற்றும் எல்3ஹாரிஸ் ஆகிய இரு நிறுவனங்களை இலக்காகக் கொண்டது, இவை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை போரிலிருந்து இலாபமடைகின்றன.

பல்கலைக்கழக வளாகக் கொள்கைகளை மீறியதன் அடிப்படையில் இந்த இடைநீக்கம் செய்யப்பட்டது என்ற பல்கலைக்கழகத்தின் கூற்று, அதன் உண்மையான நோக்கமான காஸா மீதான இஸ்ரேலிய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கான வெளிப்படையான மூடிமறைப்பாகும்.

வியாழனன்று உலகளாவிய கற்றலுக்கான கார்னெல் அலுவலகத்திற்கு டால் எழுதிய ஒரு கடிதத்தில் எழுதியதைப் போல, “நான் ஒரு அறிஞன், இங்கே அமெரிக்காவில் நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளேன், ஏனென்றால் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் அதேவேளையில் பாலஸ்தீன மக்களின் அடிப்படை மனித உரிமைகளை நான் பாதுகாக்கிறேன். என்னிடம் செல்லுபடியாகும் விசா உள்ளது. கார்னெலில் இருக்க எனக்கு உரிமை உண்டு, என்னை வெளிப்படுத்தவும் எனக்கு உரிமை உண்டு.”

தால், மாணவர்களிடமிருந்தும் பேராசிரியர்களிடமிருந்தும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளார். புதன்கிழமையன்று, 130-க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆதரவாளர்களும் கார்னெல் நிர்வாகக் கட்டடத்திற்கு வெளியே ஒன்றுகூடி, அவரது இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரினர்.

தாலை இடைநீக்கம் செய்து நாடு கடத்தும் நடவடிக்கையானது, தீவிரமடைந்து வரும் உலகப் போர் சூழ்நிலையில் ஜனநாயக உரிமைகள் மீதான விரிவான தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

வெள்ளிக்கிழமையன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார். அவர் காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையை நியாயப்படுத்தினார், இது தற்போது மேற்குக் கரை மற்றும் லெபனானுக்கும் விரிவடைந்து வருகிறது. நெதன்யாகு உரையாற்றிய சிறிது நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள கட்டடங்களை இலக்காகக் கொண்டு பெரும் குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடங்கியது.

அதே வேளையில், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ரஷ்ய நிலப்பரப்பை இலக்காகக் கொள்ள நீண்ட தூர நேட்டோ ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அனுமதி வழங்குவது குறித்து விவாதித்து வருகின்றன. இது கட்டுப்பாடற்ற உலகப் போரை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. வியாழக்கிழமையன்று உலக சோசலிச வலைத் தளம் எழுதியதைப் போல, “ரஷ்யாவின் எந்தவொரு பதிலடியும் செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களைப் போன்று, ஆனால் இன்னும் பெரிய அளவில், ஜனநாயக உரிமைகள் மீதான விரிவான தாக்குதல்களுடன் இணைந்து, போரை மிகப்பெரும் அளவில் தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும்.”

கடந்த ஆண்டில், அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றங்களுக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களும் மாணவர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களும் அடக்குமுறையையும் வன்முறையான ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டன. நாடு முழுவதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பொலிஸ்-அரசு சூழலில் இலையுதிர்கால பருவ கற்கைக்கான கல்லூரி வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மிச்சிகனில், ஜனநாயகக் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்ததற்காக 11 மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எதிராக குண்டர் குற்றச்சாட்டுக்களை அழுத்தி வருகிறது. மற்றும் உள்ளூர் பொலிசார் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் வளாகத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதை தடை செய்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் கோவிட்-19 பாதுகாப்பிற்கும், போராட்டக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை அணிவதைத் தடை செய்துள்ளது. அதேவேளை, கொலம்பியா பல்கலைக்கழகம் மாணவர் முகாம்களுக்கு முழுமையான தடை விதித்து, பல்கலைக்கழக அடையாள அட்டைகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே வளாக அணுகலை அனுமதித்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழகம் சியோனிச விமர்சனத்தை யூத-எதிர்ப்புடன் இணைக்கும் வகையில் தனது கொள்கைகளைப் புதுப்பித்துள்ளது, இது இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை உண்மையில் தடை செய்கிறது. ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் இப்போது எதிர்ப்பு தெரிவிக்க “கருத்து சுதந்திர அறிவிப்புப் படிவம்” சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகிறது, மேலும் பாலஸ்தீன நீதிக்கான அமைப்பு மாணவர்களை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கினரின் இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும், இனப்படுகொலை மற்றும் போர் எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதை முழுமையாக ஆதரிக்கின்றன.

இரு கட்சிகளும் போராட்டங்களை “யூத-எதிர்ப்பு” என்று அவதூறு செய்வதில் பங்கேற்றுள்ளன. அதேவேளை, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆளுநர்கள் மற்றும் மேயர்களின் கீழுள்ள மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் மாணவர்களைக் கைது செய்யவும் தாக்கவும் வளாகங்களுக்குள் போலிஸை அனுப்பியுள்ளன.

ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளைத் தாக்குவதை மையமாகக் கொண்ட ஒரு பாசிச இயக்கத்தை உருவாக்க முயற்சிக்கும் அதேவேளை, பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் காஸாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு நிதியுதவி செய்து, ஆயுதம் வழங்கி, அரசியல் ரீதியாக நியாயப்படுத்தியுள்ளதுடன், இப்போது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி வருகிறது.

காஸாவில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான ஏறக்குறைய ஓராண்டு கால போராட்டங்களின் அனுபவங்கள் உள்வாங்கப்பட வேண்டும். வெகுஜன எதிர்ப்பு ஆளும் உயரடுக்கினரின் போக்கை மாற்ற நிர்ப்பந்திக்கும் என்ற, ஜனநாயகக் கட்சிக்குள்ளும் அதைச் சுற்றியும் உள்ள நடுத்தர வர்க்கத்தின் பல்வேறு அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் முன்னோக்கு, ஒரு முட்டுச்சந்துக்கு இட்டுச் சென்றுள்ளது. கடந்த கால போர்-எதிர்ப்பு இயக்கங்களின் கசப்பான படிப்பினை என்னவெனில், ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படிந்து நடுத்தர வர்க்க எதிர்ப்பு அரசியலின் கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள எந்த இயக்கமும் தவிர்க்க முடியாமல் முதலாளித்துவ வர்க்கத்தால் சூழ்ச்சியுடன் கையாளப்படும் என்பதாகும்.

வளாகங்களில் ஜனநாயக உரிமைகள் மீதான தீவிரமடைந்து வரும் தாக்குதல்கள், போருக்கு எதிரான எதிர்ப்பு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களுடன் இணைக்கப்படும் என்ற ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் அச்சத்தால் தூண்டப்படுகிறது. மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கினரின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் அடக்கவும் குற்றமயமாக்கவும் பயன்படுத்தப்படும்.

போயிங் உள்ளிட்ட இராணுவ ஒப்பந்ததாரர்களுடன் கார்னெல் கொண்டுள்ள தொடர்புகளை எதிர்த்ததற்காக தால் பழிவாங்கப்படுவது, 33,000 போயிங் தொழிலாளர்களின் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தின் போது நிகழ்கிறது. IAM தொழிற்சங்க அமைப்பால் ஆதரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் நிராகரித்து வாக்களித்ததைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் தொடங்கியது. இது வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதியங்கள் மீதான தீவிரமடைந்து வரும் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது..

மிச்சிகனில் உள்ள மற்றொரு இராணுவ ஒப்பந்த நிறுவனமான ஈட்டனில், UAW தொழிற்சங்க ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களை நிராகரித்த பின்னர் ஐந்நூறு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் வாரத்தில், அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை முழுவதும் உள்ள 45,000 துறைமுகத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் காலாவதியாகிறது. இதனால் ஏற்படக்கூடிய வேலைநிறுத்தம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பானது, கார்னெல் மற்றும் நாடு முழுவதுமுள்ள வளாகங்களில் உள்ள அனைத்து மாணவர்களையும் தால் மீதான தாக்குதலை எதிர்க்க அழைப்பு விடுக்கிறது. அவரை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும், அவரது விசாவை இரத்து செய்வதற்கான அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். நாடு முழுவதும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிடவும், கருத்து சுதந்திரத்தை குற்றமயமாக்குவதை முடிவுக்குக் கொண்டு வரவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

எனினும், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும் போருக்கு எதிரான எதிர்ப்பும், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே வெற்றி பெற முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மாணவர் இயக்கமான IYSSE அமைப்பும், புரட்சிகர மார்க்சிசத்தின் கோட்பாடுகளில் உறுதியாக வேரூன்றி, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடி வருகிறது.

Loading