இலங்கையில் ஆழமான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இடம்பெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல், நாட்டின் ஸ்தாபனக் கட்சிகளின் முன்னெப்போதும் இல்லாத பிளவு மற்றும் ஆழமடைந்துவரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சனிக்கிழமை நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ள ஸ்தாபனக் கட்சிகள், மோசமடைந்து வரும் வறுமை மற்றும் சமூக நிலைமைகள் மீது பெருகும் வெகுஜன கோபத்தையும் விரக்தியையும் எதிர்கொள்கின்றன. இந்த வெடிக்கும் அரசியல் பிரச்சினைகள் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தீவிரமடையும்.

28 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே   [AP Photo/Eranga Jayawardena]

அரசியல் அதிருப்தியின் ஆழம் எந்தளவுக்கெனில், சக்திவாய்ந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக வென்றெடுப்பதற்குத் தேவையான முதல் விருப்பு வாக்குகளில் 50 வீதத்திற்கு மேல் எந்தவொரு வேட்பாளரும் பெறமாட்டார்கள் என்று ஊடகப் பண்டிதர்கள் கணித்துள்ளனர். இதற்கு முன்னர் நடைபெற்ற எட்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களிலும் வாக்குச் சீட்டுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகள் எண்ணப்பட வில்லை.

கொழும்பை தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகையில் செப்டம்பர் 15 அன்று ஒரு பதட்டமான ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு கூறியது: “இனி இலங்கையின் வாக்குப்பதிவு முறைகள் அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குபடுத்தப்படுவதில்லை. கடந்த காலத்தில் போல் இரண்டு பிரதான கட்சிகளான ஐ.தே.க. [ஐக்கிய தேசியக் கட்சி] மற்றும் ஸ்ரீ.ல.சு.க. [ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி] ஆகியவற்றிற்கு இடையில் வாக்காளர்கள் பிரிந்திருப்பதை இனி காணமுடியாது. இவை இப்போது சர்ச்சைக்கு அப்பாற்பட்டவை. வடக்கில் கூட, ஒற்றைக் கட்சி இல்லை. இடதுசாரிக் கட்சிகள் கலைந்துபோய் கிடக்கின்றன. எனவே வாக்குகள் சிதறி, வெற்றியாளரை கணிப்பது கடினம். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.”

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய அனைத்து பிராதன ஸ்தாபனக் கட்சிகளும், பல தசாப்தங்களாக வெகுஜனங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கொடூமான தாக்குதல்களில் பங்கெடுத்துக்கொண்டதன் காரணமாக ஆழமாக மதிப்பிழந்துள்ளதன் விளைவாகவே இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (NPP) மூலம் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி., தனது அரசாங்கம் ஊழலை ஒழிப்பதன் மூலம் 'மாற்றத்தை' ஏற்படுத்தும் என்று கூறி, பாரம்பரிய ஆளும் வர்க்கக் கட்சிகள் மீதான மக்களின் கோபத்தை சுரண்டிக்கொள்ள முயற்சித்தது. எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்துவேன் என்று பெரு வணிகங்களுக்கும் அரச எந்திரத்தின் பிரதான பிரிவுகளுக்கும் உறுதியளித்துள்ளார்.

2023 ஒக்டோபர் 19 அன்று ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, (இடதுபுறத்தில் இருந்து) அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரியான மெத்யூ ஹின்சன், தூதுவர் ஜூலி சங், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத். [படம்: X/Twitter @anuradisanayake] [Photo by X/Twitter @anuradisanayake]

பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் நீட்டிக்கப்பட்ட மின்சார வெட்டுக்கள் தொடர்பாக 2022 ஏப்ரல்-ஜூலையில் நடந்த பாரிய போராட்டங்களினால் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் கவிழ்ந்த பின்னர், தொழிலாள வர்க்கம் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. உண்மையில், சாதாரண இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சமூக நிலைமைகள் கடுமையாக மோசமடைந்துள்ளதுடன் இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் தீவிர வறுமை மற்றும் சமூக நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலக வங்கியின் பின்னூட்டம்: மீட்சிக்கான பாலங்கள் என்ற அறிக்கை ஏப்ரல் 2 அன்று வெளியிடப்பட்டது. அது, விக்கிரமசிங்க மற்றும் அவரது நிர்வாகத்தின் போலியான 'பொருளாதார மீட்பு' கூற்றுக்களை அம்பலப்படுத்துகிறது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் வறுமையின் கூர்மையான அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது. அதன்படி வறுமையானது 2019 இல் 11 சதவீதத்திலிருந்து 2024 இல் கிட்டத்தட்ட 26 சதவீதமாக அல்லது மக்கள்தொகையில் கால் பகுதிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் உள்ள 60 சதவீத குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும், பலர் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றியிருப்பதை எதிர்கொள்வதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. 'அதிக பணவீக்கம், ஊதியம் மற்றும் தொழில் இழப்புகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் அனுப்பும் வருமானம் சரிவு போன்றவற்றால் குடும்பங்களின் வாங்கும் திறன் வீழ்ச்சியடைந்தமையால் அவை வறுமையில் வாடுகின்றன' என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சர்வதேச நாணய நிதிய சிக்கனக் கோரிக்கைகளை விக்கிரமசிங்க தினித்தமை, கடந்த 18 மாதங்களாக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், பிரதானமாக அரச துறையில் உள்ளவர்களை, வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தள்ளியது. தொழிற்சங்கs; இத்தகைய தொழிற்துறை நடவடிக்கைகயை தனிமைப்படுத்தி நசுக்கின. குறிப்பாக, ஜே.வி.பி சார்பு தொழிற்சங்கங்களின் தலைவர்கள், ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து இந்த நாச வேலையை செய்தனர். இந்த போராட்டங்கள் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வெடிக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, தீவு முழுவதிலும் உள்ள பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட பிரச்சாரங்களின் போது, வெகுஜனங்கள் அரசாங்கம் மற்றும் தற்போதுள்ள முதலாளித்துவ ஒழுங்கின் மீதான கடும் அவநம்பிக்கையையும் கோபத்தையும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தினர்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் உள்ள சிறிய தீவான ஊர்காவற்துறையில் தமிழ் பேசும் மெக்கானிக் நுகேஸ்வரம், 45, கூறியதாவது: “எமது பொருளாதார பிரச்சினைகளுக்கும் தேசிய பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழர் உரிமைகள் பற்றி வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் அதே வேளை, இந்த சிங்கள தலைவர்கள் எவரையும் நம்ப முடியாது. அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் முறையிடுவதன் மூலம் தமிழர்களின் உரிமைகளை உறுதிசெய்து நிலைநாட்ட முடியும் என்ற தமிழ் அரசியல்வாதிகள் கூறுவது அபத்தமானது.”

கொழும்பில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் காவலாளியாக இருக்கும் 60 வயதான மூன்று குழந்தைகளின் தாயார் கூறுகையில், 'நாங்கள் சென்று வாக்களிக்கிறோம், ஆனால் அரசியல்வாதிகள் பணக்காரர்களாகிறார்கள். காசு இல்லாதவர்களிடம் சாப்பிட எதுவும் இல்லை. அடிப்படை பொருட்களின் விலை எவ்வளவு அதிகம் என்று பாருங்கள்? பெட்ரோல் எவ்வளவு? மோட்டார் சைக்கிளை ஓட்டக்கூட உங்களால் முடியாது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை பாருங்கள்” என்றார்.

இந்த ஆழமான அவநம்பிக்கையை நன்கு உணர்ந்துள்ள முதலாளித்துவ பாராளுமன்றக் கட்சிகள், தங்களுக்கு ஆதரவு இருப்பதாக ஒரு மாயையை காட்டுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதற்காக மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிடுகின்றன. தொலைதூரப் பகுதிகளில் இருந்து கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லவும், வீடு வீடாகப் பிரச்சாரம் செய்யவும் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கின்றன.

கடந்த வாரம் சண்டே டைம்ஸ் பத்திரிகை, ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்பிலான பிரச்சார திட்டங்களை வழங்குவதாக செய்தி வெளியிட்டது. எடுத்துக்காட்டாக, “மூன்று மணிநேரத்திற்கு 3,000 நபர்களை பொது கூட்டங்களுக்கு வழங்குவதற்கான சேவையில், ஒரு நபருக்கு ரூ. 1,500 (சுமார் $US5) (சில சமயங்களில் ஒரு நபருக்கு ரூ.3,000) அல்லது முழு திட்டமிடலுக்கும் 4.5 மில்லியன் ரூபா கட்டணம்… மேலும், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய 50 மில்லியன் ரூபா திட்டங்களும் வழங்கப்படுகின்றன.”

2022ல் நடந்த வெகுஜன எதிர்ப்புகள் மீண்டும் நடந்தால் அதை நசுக்கத் தீர்மானித்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அவரது ஆட்சியும் அனைத்து மக்கள் எதிர்ப்பையும் நசுக்க புதிய கொடூரமான சட்டங்களைத் திணித்து அரச இயந்திரத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

ஆளும் உயரடுக்கைப் பொறுத்தளவில், சிக்கன நடவடிக்கையை அமுல்படுத்த ஜனநாயக உரிமைகள் பொருந்தாதவை. தேர்தலுக்குப் பிந்தைய இரண்டு 'அரசியல்-பொருளாதார சூழ்நிலைகள்' பற்றி ஊகிக்கும் ஐலண்ட் பத்திரிகையின் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் இது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டது. இவற்றில், 'பொருளாதாரம் புத்துயிர் பெறுகிறது, ஆனால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது; பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்படுகிறது, ஆனால் ஜனநாயகம் அடக்குமுறையிலிருந்து விடுபட்டுள்ளது,” என்று அது கூறியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்காமல், சர்வாதிகார நடவடிக்கைகளை நோக்கி நகராமல் இலங்கை முதலாளித்துவ பொருளாதாரத்தை பாதுகாக்க முடியாது.

இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும், தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தங்களின் அடிப்படை, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இன்னும் கொடூரமான தாக்குதலை எதிர்த்தும் சர்வாதிகார வடிவங்களை திணிப்பதை எதிர்த்தும் போராடுவதற்கு தயாராக வேண்டும்.

இதற்கு, முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான போராட்டத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை அணிதிரட்டுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவினால் விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டம் இதுவாகும். இந்த வேலைத்திட்டத்தை கற்றுக்கொள்ளுமாறும், விஜேசிறிவர்தனவிற்கு வாக்களிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதனைக் கட்டியெழுப்புமாறும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading