இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் போலி வாக்குறுதிகளை வழங்கும் அதே நேரம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டுக்களை அமுல்படுத்த சதி செய்கிறார்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் செப்டம்பர் 21 நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, அரசாங்கத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தில் இருந்து வெகுஜனங்களுக்கு நிவாரணம் அளிப்பதாக பிரதான முதலாளித்துவ வேட்பாளர்கள் தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

இதில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்களான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச) சஜித் பிரேமதாச மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் மட்டுப்படுத்தி நசுக்கிய தேசிய மக்கள் சக்தி / மக்கள் விடுதலை முன்னணி (தே.ம.ச./ஜே.வி.பி.) வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க மாத்திரமன்றி, சிக்கன நடவடிக்கைகளை நேரடியாகவே திணித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அடங்குவார்.

அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் பிணை எடுப்பு உடன்படிக்கையில் முன்னறிவிக்கப்பட்ட, ஆழமான சமூக வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கல் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கத் தாங்கள் துணை நின்று செயல்படுத்துவோம் என்று அவர்கள் பெருவணிகத்திற்கும் உறுதியளிக்கிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத சமூக சமத்துவமின்மை, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், ஏகாதிபத்திய ஆதரவுடன் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்கின்றமை, மற்றும் ஆளும் உயரடுக்குகள் பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புகின்றமை போன்ற உலக முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பூகோள நெருக்கடியானது குறிப்பாக இலங்கையில் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முதலாளித்துவக் கட்சிகள் இந்த ஆபத்தான அபிவிருத்திகள் குறித்து செவிட்டுத்தனமான மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவும் மட்டுமே, உலகப் போரின் ஆபத்து, ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்கள் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுகள் பற்றிய எச்சரிக்கையை விடுத்து வருகின்றார்.

2022 ஏப்ரல்-ஜூலையில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன எழுச்சி நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த எழுச்சியின் போது, விண்ணை முட்டும் விலைவாசிகள், அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு நீடிப்பு மூலம் அரசாங்கம் அதனது பொருளாதார நெருக்கடியின் சுமையை தம்மீது சுமத்துவதற்கு எடுத்த முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதில் வெகுஜனங்கள் உறுதியாக இருந்தனர். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை ஒன்றிணைத்த இந்த சக்தி வாய்ந்த இயக்கம், இலங்கை முதலாளித்துவத்தால் ஊக்குவிக்கப்பட்ட பல தசாப்த கால இனவாத அரசியலை முறியடித்தது.

வளர்ச்சி கண்ட எதிர்ப்பு அலையை அரச வன்முறையைப் பயன்படுத்தி முறியடிக்க முடியாமல், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ ஜூலை தொடக்கத்தில் நாட்டை விட்டு வெளியேறியதோடு அவரது அரசாங்கம் கவிழ்ந்தது. எவ்வாறாயினும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் அதன் அரசியல் கூட்டாளிகளும், அரசியல் நிலைமையையும் முதலாளித்துவ ஆட்சியையும் ஸ்திரப்படுத்துவதற்காக 'ஒரு இடைக்கால அரசாங்கத்தை' அமைக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தியும் முன்வைத்த முன்மொழிவுக்குப் பின்னால் இந்த இயக்கத்தை வழிநடத்தியதால் அது காட்டிக்கொடுக்கப்பட்டது.

இது, இந்த நெருக்கடிக்கு, அதன் சொந்த சோசலிச தீர்வுடன், தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக போராடும் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கம் தலையிடுவதைத் தடுத்ததுடன், இராஜபக்ஷவின் சிதைந்த ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), அமெரிக்க கைக்கூலியான ரணில் விக்கிரமசிங்கவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்கு வழிவகுத்தது. அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்காக பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர், இதை ஒரு 'கொடூரமான பரிசோதனை' என்று விவரித்தார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, சர்வதேச நாணய நிதியத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் பலமுறையும் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டுள்ளனர். பெறுமதி சேர் வரி, சம்பாத்தியத்தை ஒத்த வரி, மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணங்களில் பெரும் உயர்வு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவது இந்த சமூகத் தாக்குதல்களில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் ஏழ்மையான மக்களிடமிருந்து கூடுதல் வருவாயைப் பெறுவதற்கும், ஏப்ரல் 2022 இல் செலுத்தத் தவறிய வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும் உத்தரவாதம் அளிப்பதாகும்.

சர்வதேச நாணய நிதியத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வாஷிங்டன், இந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, பிரதான உலகளாவிய கப்பல் பாதைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் இலங்கையை, இந்தோ-பசிபிக் முழுவதும் சீனாவிற்கு எதிரான போருக்கான அதன் தயாரிப்புகளில் ஒரு முக்கிய மையமாக மாற்றுவதற்கான அதன் நீண்டகால முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் மற்றொரு வெகுஜன எழுச்சியைப் பற்றிய பீதியால் நடுங்கிப்போன, பெருமளவில் மதிப்பிழந்த முதலாளித்துவக் கட்சிகள், தொடர்ச்சியான பிளவுகளுக்கு உட்பட்டுள்ளன. இதன் விளைவாக 38 ஜனாதிபதி வேட்பாளர்களின் நீண்ட பட்டியல் உருவாகியுள்ளது. அவர்களில் பலர் தங்கள் போட்டியாளர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக அல்லது அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களை ஊக்குவிக்க பிரதான போட்டியாளர்களால் நிதி வழங்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர்.

கென்யாவில் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களையும் பங்களாதேஷில் சமீபத்திய வெகுஜன எழுச்சி, நீண்டகால சர்வாதிகார பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற நிர்பந்தித்ததையும் விக்கிரமசிங்க பதட்டத்துடன் குறிப்பிட்டார். 'தேசிய ஐக்கியம்' என்ற பெயரில், விக்கிரமசிங்க, சர்வதேச நாணயத நிதிய சிக்கன நடவடிக்கைகள் மீதான அவர்களின் தவறான, நம்பிக்கையற்ற விமர்சனங்களைத் தணிக்குமாறு தனது போட்டியாளர்களை வலியுறுத்தியுள்ளார். அவை தவிர்க்க முடியாதவாறு வெகுஜன எதிர்பார்ப்புகளையும் சமூக அமைதியின்மையையும் என்படுத்தும் என்பதே அவரின் அச்சமாகும்.

28 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே   [AP Photo/Eranga Jayawardena]

விக்கிரமசிங்க இலங்கை முதலாளித்துவத்தின் 'பெரும் பழைய கட்சி'யான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியாக அன்றி, மாறாக 'சுயேச்சை வேட்பாளராகவே' போட்டியிடுகின்றார்.

சுதந்திரம் பெற்றதில் இருந்து 76 வருடங்களில் 37 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டை ஆட்சி செய்துள்ளது. 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதற்காக தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையையும் வாக்களிக்கும் உரிமைகளையும் பறிப்பதன் மூலம் முதலாளித்துவ அரசின் தலைமைப் பதவியில் அது தனது பதவிக்காலத்தை ஆரம்பித்தது. 1978 இல், ஐக்கிய தேசியக் கட்சி திறந்த சந்தைக் கொள்கைகளை ஆரம்பித்து, பல்லாயிரக்கணக்கான வேலைகளை அழித்ததுடன் சமூக உரிமைகளை பறித்தது; 1983ல் அது 26 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாதப் போரைத் தூண்டிவிட்டு, தமிழ் சிறுபான்மையினரையும் நாட்டின் பிற பகுதியினரையும் பேரழிவிற்கு உட்படுத்தியது; மற்றும் 1987-1990 க்கு இடையில் இந்த கட்சி தீவின் தெற்கில் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை படுகொலை செய்தது.

2020 இல் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டதுடன், ஒரு பெரிய பிரிவு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி தேசிய தேர்தல்களில் தனித்து போட்டியிடுகிறது. ஆகஸ்ட் 2020 தேசியத் தேர்தலில் விக்கிரமசிங்க மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெகுஜன எதிர்ப்புகளின் போது இராஜபக்ஷ அவரை 2022 ஏப்ரலில் பிரதமராகவும், ஜூலையில் பதில் ஜனாதிபதியாகவும் நியமித்தார்.

விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது அமைச்சரவையில் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சர்களுக்கு இடமளிக்காததால், தற்போதைய தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க அதன் தலைவர்கள் மறுத்துவிட்டனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தனது ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவை நிறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், மேலும் 90 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி, விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கூட்டணி ஒன்றை அமைத்துள்ளனர்.

தேர்தல் நாள் நெருங்குகையில், தனது சிக்கன நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் கடுமையாக வெறுக்கப்படும் விக்கிரமசிங்க, 2025ல் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், வரிகளை குறைப்பதாகவும் வாக்குறுதியளித்து வாக்காளர்களை கவர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதிய திட்டத்தை பற்றி அதனுடன் 'மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம்' என்று பரிந்துரைக்கும் தனது போட்டியாளர்களை அவர் தாக்கியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் எந்தவொரு கணிசமான மாற்றமும், இலங்கைப் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைத் தூண்டிவிட்டு, நிதி நிறுவனம் மேலும் கடன் கொடுப்பனவுகளை வழங்காமல் இடைநிறுத்துவதற்கு வழிவகுக்கும் என்று அவர் அப்பட்டமாக எச்சரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரேமதாச, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை வாய்ச்சவடாலாக விமர்சிக்கும் அதே நேரம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு, அரச ஊழியர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் விவசாயிகளுக்கு உர விலை குறைப்பு போன்ற பொய்யான வாக்குறுதிகளையளித்து வருகிறார். ஆனால் பெருவணிக எதிர்ப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய கோரிக்கைகளுக்கு பயந்து, புதன்கிழமை ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிய பிரேமதாச, 'இலங்கை இனியும் ஒரு நலன்புரி நாடாக இருக்க முடியாது' என்று கூறினார். வறுமை ஒழிப்புத் திட்டம் என்று அழைக்கப்படுவதைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரேமதாச, இது ஏழைகளை தொழில்முனைவோராக மாற்றும் என்று கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க, கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் மற்றும் பாராளுமன்ற பிரதான நீரோட்டத்தில் தன்னை ஒருங்கிணைக்க முயற்சித்து வரும் குட்டி முதலாளித்துவ சிங்கள பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி.க்கு தலைமை தாங்குகிறார். பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் மேலாதிக்கம் செலுத்தி வரும் ஊழல்மிக்க முதலாளித்துவ குடும்பங்கள் மீதான கடும் வெகுஜன விரோதத்திற்கு அறைகூவல் விடுக்க அவர், 'ஸ்தாபனத்திற்கு எதிரான' வேட்பாளராக பொய்யாகக் காட்டிக்கொண்டு ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்.

அனுரகுமார திசாநாயக்க செப்டம்பர் 11 கூட்டத்தில் உரையாற்றிய போது [Photo by Facebook/nppsrilanka/photos]

இந்த நிலைப்பாடு ஒருபுறம் இருக்க, தேசிய மக்கள் சக்தி/ஜே.வி.பி. ஒரு முதலாளித்துவ சார்பு கட்சியாகும். தனது அரசியல் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் ஆர்வத்தில், திசாநாயக்க அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் உயர்மட்ட இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் மீண்டும் மீண்டும் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

திசாநாயக்க, தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், வேலையற்றோர் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் என்ற வெற்று வாக்குறுதிகளுடன் 2023 ஆகஸ்ட்டில் தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தின் கற்பனையான கருப்பொருள்: செல்வந்த நாடு! அழகான வாழ்க்கை!

திசாநாயக்க எப்போதாவது பொது கூட்டங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் பற்றி கவலை தெரிவித்தாலும் அது போலியானதே. கட்சியின் வர்த்தக மன்றத்தின் சமீபத்திய கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து எந்த வகையிலும் விலகாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பளத்தில் 'பெரியளவில்' அதிகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கொடுக்கும் வாக்குறுதிகளை வலதுசாரி நிலையில் இருந்து கண்டித்ததோடு, பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை இந்தக் கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை என்றும் அறிவித்தார். 'ஊதியத்தை அதிகரிப்பதில் எந்த ஒரு சிறிய நடவடிக்கையும் ஆபத்தானது,' என்று அவர் கூறினார்.

முந்தைய ஜனாதிபதித் தேர்தல்களில், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியவாதக் கட்சிகள், தமிழ் உயரடுக்கிற்குச் சிறந்த ஒப்பந்தத்தை வழங்கும் கட்சியாக எந்தக் கட்சியைக் கருதுகிறதோ அந்த கட்சியை ஆதரிப்பது வழக்கம். இந்த பிராந்தியங்களில் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் ஜனநாயக உரிமைகள் பற்றி அவர்கள் பிரச்சாரம் செய்யும் அதே வேளையில், தமிழ் கட்சிகளின் உபாயங்கள் தமிழ் மக்களின் சமூக அவலத்தை போக்குவதில் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய பேரவை, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு முன்னணியை உருவாக்கி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேந்திரனை “பொது ஜனாதிபதி வேட்பாளராக” நிறுத்தியுள்ளன.

பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கச்சி பிளவுபட்டுள்ளது. இதில் ஒரு பிரிவினர் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரை ஆதரிக்கும் அதே நேரம் மற்றைய பிரிவு விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றது. தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

அவர்களின் துரோக வரலாற்றின் படி, தமிழ் கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாயமானதுடன் கொழும்புடன் எவ்வாறு சிறந்த கொடுக்கல் வாங்கலைப் பெறுவது என்பதை மையமாகக் கொண்டுள்ளது. தமிழ் உயரடுக்குகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பங்காளியான இந்தியாவின் பிராந்திய புவிசார் அரசியல் நோக்கங்கள் மற்றும் நலன்களை முழுமையாக ஆதரிக்கின்றன.

இந்த வெடிக்கும் அரசியல் சூழ்நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவும் மட்டுமே, இலங்கை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு ஒரேயொரு முன்நோக்கிய வழியை வழங்குகின்றனர். அனைத்து முதலாளித்துவ பாராளுமன்றக் கட்சிகள் மற்றும் போலி-இடது மக்கள் போராட்ட கூட்டணிக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தேசிய தீர்வு இல்லை அல்லது முதலாளித்துவத்திற்குள் தீர்வு கிடையாது என்று வலியுறுத்துகிறது.

முன்னிலை சோசலிசக் கட்சி, மாவோயிஸ்டுகள் மற்றும் ஏனைய மத்தியதர வர்க்க கூறுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியான மக்கள் போராட்ட கூட்டணியின் நோக்கம், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு வெகுஜன இயக்கத்தையும் முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்போடு கட்டி வைத்திருப்பதாகும். சுருக்கமாக சோசலிசம் பற்றிய பிரகடனங்களைச் செய்யும் அதேவேளையில், மக்கள் போராட்ட முன்னணியானது அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிக்கக் கூட அழைப்பு விடுக்கவில்லை.

முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராக ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தில் இலங்கை தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியாகும். இதற்குத் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக ஒவ்வொரு வேலைத் தளத்திலும், சுற்றுப்புறங்களிலும் கிராமப்புற மக்களிடையேயும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதலுக்கு உள்ளான அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை கலந்துரையாடி, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயகத் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்த சோசலிச கொள்கைகளுக்கு சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை அதிகாரத்திற்கு கொண்டுவருவது அவசியமாகும்.

பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களித்து, இந்த முன்னோக்கிற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.

Loading