இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சியானது எமது வேலைத்திட்டத்திற்கும் சோசலிச சர்வதேசவாத முன்னோக்கிற்கும் உங்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 21 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், எமது வேட்பாளர் பானி விஜேசிறிவர்தனவிற்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. எமது கட்சியின் சின்னம் கத்தரிக்கோல் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, 8 ஆகஸ்ட் 2024 அன்று கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போது. [Photo: WSWS]

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்மையைக் கூறுகிறது: நீங்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளான பெருகிவரும் வறுமை, வேலையின்மை, ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அல்லது தேசிய அரசு எல்லைக்குள் தீர்க்கப்பட முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அணு ஆயுத சக்திகளுக்கு இடையே உருவாகி வரும் உலகப் போரை எடுத்துக்கொண்டால் இது முற்றிலும் உண்மை ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகவும், மத்திய கிழக்கு முழுவதும் விரிவடைந்து வரும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவளித்தும் ஏற்கனவே இரண்டு முனைகளில் போர்களைத் தூண்டி தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அது சீனாவிற்கு எதிராக மூன்றாவது முன்னணியைத் திறப்பதற்கான மேம்பட்ட தயாரிப்புகளைச் செய்து வருகிறது. இவை அனைத்தும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை தூக்கி நிறுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏனைய வேட்பாளர்கள் எவரும் அணுசக்தி பேரழிவினால் மனிதகுலத்திற்கு பெருகி வரும் ஆபத்து பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் மக்களை இருட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், ஏதோ ஒரு வகையில், தீவை வாஷிங்டனின் போர்த் திட்டங்களுக்குள் ஒருங்கிணைப்பதில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் அதே கொள்கையைத் தொடர்ந்தும் பின்பற்றுவார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியானது ஏனைய பகுதிகளுடன் ஒத்துழைத்து, முதலாளித்துவத்தை தூக்கி வீசவும் போர் தோன்றுவதற்கு மூல காரணமாக இருக்கும் போட்டி தேசிய அரசுகளாக உலகம் பிரிக்கப்பட்டிருப்பதை ஒழிப்பதற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுகிறது.

முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிந்து, சோசலிச வழிகளில் சமுதாயத்தை மறுசீரமைக்க அர்ப்பணித்துக்கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக, ஒரு புரட்சிகர இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கும், அதன் பின்னால் கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைக்கவும், நாங்கள் போராடுகிறோம். இதன் மூலம் மட்டுமே போர், சிக்கன வெட்டுக்கள், சர்வாதிகாரம் போன்ற கொடுமைகளை ஒழிக்க முடியும்.

தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் அரசியல் போராட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியானது அனைத்து வகையான தேசியவாதம், வகுப்புவாதம் மற்றும் இனவாதத்தையும் எதிர்க்கிறது. தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசை ஸ்தாபிப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் முன்னணி முதலாளித்துவ வேட்பாளர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.ப.இ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) அனுரகுமார திஸாநாயக்கவும், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது பற்றி வாக்காளர்களிடம் பொய்களை கூறியுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒவ்வொருவரும் தங்கள் பொய் வாக்குறுதிகளை விரைவாகக் கிழித்தெறிந்துவிட்டு, சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடுமையான புதிய சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பர்.

தாங்கள் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசும் அதேவேளை, இந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் அனைவரும் பெருவணிக மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இலாப நலன்களைப் பாதுகாப்போம் என்று உறுதியளித்துள்ளனர். மூவரும் சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டாலர் பிணை எடுப்பு கடனுக்கான நிபந்தனைகளை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளனர். பொது சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளில் கொடூரமான வெட்டுக்கள், 400 க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் / மறுசீரமைப்பு செய்தல் மற்றும் அரை மில்லியன் அரசுதுறை தொழில்களை அழிப்பதும் இதில் அடங்கும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் பெரும்பகுதி இன்னும் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய மக்கள் சக்தி/ஜே.வி.பி. மற்றும் ஏனையோரும் சர்வதேச நாணய நிதிய கடனில் எளிதான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது பற்றி கூறும் அனைத்து பேச்சுகளும் ஒரு மோசடியாகும். 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியின் மிக மோசமான வெடிப்புக்கு மத்தியில், இலங்கையில் அடுத்து பதவிக்கு வரும் முதலாளித்துவ அரசாங்கத்துக்கு, உயர்ந்து வரும் விலைவாசிகள், வேலை இழப்புக்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் பற்றாக்குறை போன்றவற்றால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் மீது, பெரும் புதிய சுமைகளை சுமத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அடுத்த அரசாங்கத்தின் பதிலடி, தவிர்க்க முடியாமல் ஜனநாயக விரோதச் சட்டங்களையும், பொலிஸ், இராணுவம் மற்றும் குண்டர் படைகளைப் பயன்படுத்தி வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறோம். விக்கிரமசிங்கவின் கீழ் ஏற்கனவே தெளிவாகத் வெளிப்பட்டுள்ள சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய நகர்வு இன்னும் தீவிரமடையும்.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை வரவிருக்கும் வர்க்கப் போர்களுக்கு தயார்ப்படுத்தவே இந்த தேர்தலில் நிற்கிறது. அவ்வாறு செய்யும்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்த 2022ஆம் ஆண்டு வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புக்களின் எழுச்சியின் அரசியல் பாடங்களைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். இந்த இயக்கம் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான பலத்தை வெளிப்படுத்திய அதே வேளையில், அது அதன் அரசியல் பலவீனங்களையும் அம்பலப்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது அமர்ந்து கொண்டு அவற்றுக்கு தலைமை வகித்த முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி இடதுகளும் தொழிற்சங்கங்களும், ஒரு 'இடைக்கால அரசாங்கம்' அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி/ஜே.வி.பி. உட்பட எதிர்க் கட்சிகள் பரப்பிய பிரேரணைக்குப் பின்னால் போராட்டங்களை கட்டிப்போட்டன. இதன் விளைவு விக்கிரமசிங்க ஜனநாயக விரோதமான முறையில் பதவியில் அமர்த்ப்பட்டதும் சமூக அழிவுமாகும்.

28 ஏப்ரல் 2022 வியாழன் அன்று, இலங்கையின் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நடந்த வேலைநிறுத்தம். [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

வெகுஜன இயக்கத்தை பாராளுமன்றம் மற்றும் முதலாளித்துவ எதிர்க் கட்சிகளுக்கு பின்னால் திருப்பிவிட முற்படும் அதே வேளையில், முன்னிலை சோசலிசக் கட்சியும் பிற குட்டி முதலாளித்துவ இடதுகளும் சோசலிச சமத்துவக் கட்சியை கடுமையாக எதிர்த்தன. 'அரசியல் வேண்டாம்' என்ற அவர்களின் கோஷம், எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சியின் புரட்சிகர சோசலிச அரசியலை ஒதுக்கி வைக்கும் முயற்சியாகும். அவர்களின் தணிக்கையை மீறி, சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் அரசியல் ரீதியாக சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது.

கடந்த இரண்டு வருடங்களாக அலை அலையாக தோன்றிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் முதலாளித்துவக் கட்சிகளின் சார்பாக செயல்படும் தொழிற்சங்கங்களால் மட்டுப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டன. ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தங்களை விற்றுத்தள்ளுவதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், தேசிய மக்கள் சக்தி/ஜே.வி.பி. அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதன் பேரில் தேர்தலுக்கு முன்னர் அனைத்து தொழிற்சங்கப் போராட்டங்களையும் முடக்க வேண்டும் என்ற ஜே.வி.பி.யின் கட்டளையை அவை பின்பற்றி செயற்பட்டதை பற்றி நாங்கள் குறிப்பாக எச்சரிக்கிறோம். தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தேசிய மக்கள் சக்தி/ஜே.வி.பி. ஆளும் வர்க்கத்திற்கு தனது தகுதியை நிரூபிக்க முற்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலுக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பை ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் வலுவாக நசுக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் எதிர்ப்பைத் தடம் புரளச் செய்யும் முயற்சியில் முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு மோசமான அரசியல் பாத்திரத்தையும் வகிக்கும். அதன் முன்னணி உறுப்பினரான நுவான் போபகே, அது போன்ற போலி-இடது வங்குரோத்து சந்தர்ப்பவாத கூட்டமைப்பான மக்கள் போராட்டக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதன் விஞ்ஞாபனம், பிற்போக்கு ஸ்ராலினிச இரண்டு-கட்ட வேலைத் திட்டத்தின், அதாவது முதலில் உடனடி பணிகளுக்காக 'முற்போக்கு' முதலாளித்துவத்துடன் கூட்டணி சேருவதும், சோசலிசத்திற்கான போராட்டத்தை தொலைதூர எதிர்காலத்திற்கு விட்டு வைக்கின்ற வேலைத் திட்டத்தின் மற்றொரு பதிப்பாகும்.

லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் நிரூபித்தது போல், இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட முதலாளித்துவத்தின் 'முற்போக்கான' பிரிவு எதுவும் கிடையாது - இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு வெகுஜன இயக்கத்திற்கும் கடும் விரோதமானவை. இன்று அமெரிக்கா உட்பட, உலகெங்கிலும் ஆளும் வர்க்கங்கள் எதேச்சதிகார ஆட்சி மற்றும் பாசிசத்திற்கு மாறி வருகின்றன. 2022 இல் இல்லாத 'முற்போக்கு' முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் ஓடியதன் விளைவே விக்கிரமசிங்க ஆவார். எந்தவொரு புதிய எழுச்சியிலும், முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் பாதையானது மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறோம்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு நெருக்கடியிலும் செய்தது போல், இலங்கை ஆளும் வர்க்கமும் அதன் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதத்தை நாடுவார்கள். சோசலிச சமத்துவக் கட்சி இந்த அரசியல் விஷத்தை முற்றுமுழுதாக நிராகரிக்குமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது. தீவை பேரழிவிற்கு உட்படுத்திய மற்றும் இலட்சக் கணக்கான மக்களின் படுகொலை செய்யப்பட்ட, பலர் காயமடையச் செய்து மற்றும் பலரை முடமாக்கிய மற்றொரு 26 ஆண்டுகால சகோதர படுகொலைப் போரை இலங்கையில் உள்ள வெகுஜனங்களால் அனுபவிக்க முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், இனவாத தமிழர்-விரோதப் போரை எதிர்ப்பதிலும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. அதே நேரம், தற்போதைய தேர்தலில் குறிப்பாக தமிழ் உயரடுக்கின் இழிவான இனவாத அரசியலையும் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ் தொழிலாளர்களும் கிராமப்புற உழைப்பாளிகளும் தங்களுடைய சிங்கள, முஸ்லீம் வர்க்க சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து துன்பப்படும் அதேவேளை, எண்ணற்ற தமிழ் முதலாளித்துவக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, புளோட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பல கட்சிகளும் எத்தகைய தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் நோக்கம் ஒன்றே ஆகும். அது, தமிழ் உழைக்கும் மக்களின் இழப்பில் தமிழ் உயரடுக்குகளுக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்காக அடுத்த கொழும்பு அரசாங்கத்திடம் பிச்சையெடுப்பதும் அதற்கு அழுத்தம் கொடுப்பதும் ஆகும்.

முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் மற்றும் அவர்களின் போலி-இடது மற்றும் தொழிற்சங்க ஏஜன்டுகளுக்கும் எதிராக, தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு புதிய அரசியல் பாதையில் சுயாதீனமாக நின்று தாக்குதலைத் தொடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து போராட கிராமப்புற ஏழைகள் மத்தியில் நடவடிக்கை குழுக்களை உருவாக்க உதவுங்கள்!

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியானது ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டியெழுப்புவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடவடிக்கை குழுக்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை பரிந்துரைக்கின்றது:

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கை வேண்டாம்! அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்!

தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களை தேசியமயமாக்குங்கள்!

தனியார்மயமாக்கலுக்கு இலக்கான அனைத்து அரசு நிறுவனங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கவும்!

கிராமப்புற விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு மானியங்கள் மற்றும் சமூக திட்டங்களை வழங்கு!

உழைக்கும் வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக! அனைத்து வகையான இனவாதத்தையும் தேசியவாதத்தையும் நிராகரி! அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக!

சோசலிச சமத்துவக் கட்சி, அதன் சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக தேர்தலில் நிற்கும் அதே வேளையில், தொழிலாள வர்க்கமானது பாராளுமன்றம் மற்றும் முதலாளித்துவ அரசு ஊடாக அதன் நலன்களை பெற முடியும் என்ற அபாயகரமான மாயையை நாங்கள் நிராகரிக்கிறோம். முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளின் சூழ்ச்சிகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தங்கள் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதற்கான வேஎலைத் திட்டத்தை வகுத்து செயல்படுத்துவதற்கு உழைக்கும் மக்களுக்கு அவர்களது சொந்த அமைப்புகள் அவசியமாகும்.

2022 எழுச்சியின் போது, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கூட்டுவதற்கான அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி விடுத்தது. அந்த அழைப்பு இன்று அவசரமானதாக இருக்கிறது. தொழிலாள வர்க்கம் அரசியல் முன்முயற்சியை ஆளும் வர்க்கத்திடமும் அதன் கட்சிகளின் கைகளிலும் விட்டுவிட்டால், அது பேரழிவில்தான் முடியும்.

எங்கள் வேலைத் திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால் இப்போதே செயல்படுங்கள் என்று நாங்கள் கூறுகிறோம்.

உங்கள் அரசியல் ஆதரவைக் காட்ட சோசலிச சமத்துவக் கட்சிக்கும் எமது வேட்பாளர் பானி விஜேசிறிவர்தனவிற்கும் வாக்களியுங்கள்!

வாக்களிப்பது முக்கியம், ஆனால் அது எதையும் தீர்க்காது. நீங்கள் வசிக்கும் அல்லது வேலை செய்யும் இடத்தில் ஒரு நடவடிக்கைக் குழுவை நிறுவத் தொடங்குங்கள்! உங்களுக்கு அரசியல் உதவி தேவைப்பட்டால் சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடர்பு கொள்ளுங்கள்!

நீங்கள் பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் இளைஞராக இருந்தால், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பில் சேருங்கள்! நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த கிளையும் இல்லை என்றால், ஐ.வை.எஸ்.எஸ்.இ.யைத் தொடர்புகொண்டு, கிளை ஒன்றை உருவாக்குங்கள்!

எங்களுடைய வரலாற்றையும் வேலைத்திட்டத்தையும் படியுங்கள், உலக சோசலிச வலைத் தளத்தை வாசியுங்கள், இதன் மூலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வரவிருக்கும் போராட்டங்கள் குறித்து அரசியல்ரீதியில் கல்வி கற்பிக்க முடியும்!

எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியில் சேரவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கும் சோசலிசக் கொள்கைகளுக்காகவும் போராடுவதற்குத் தேவையான தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாகக் அதை கட்டியெழுப்பவும் விண்ணப்பித்திடுங்கள்!

சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடர்பு கொள்ளுங்கள்:

தொலைபேசி/வாட்ஸ்அப்: +94773562327

மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

Loading