அமைதியான ஒரு தீவிலிருந்து கொந்தளிப்பான உலகைப் பகுப்பாய்வு செய்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த உரையானது, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் ஆகஸ்ட் 25, ஞாயிறன்று துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவிலிருந்து வழங்கப்பட்டதாகும். “அமைதியான ஒரு தீவிலிருந்து கொந்தளிப்பான உலகைப் பகுப்பாய்வு செய்தல்” என்று தலைப்பிடப்பட்ட இந்த நிகழ்வானது, 1929 ஆண்டிற்கும் 1933 ஆண்டிற்கும் இடையில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட முதலாவது காலகட்டத்தின் போது, புயுக்கடாவில் அவர் ஆய்வு செய்த பணிகளிற்காக இங்கே நடைபெறும் இரண்டாவது சர்வதேச நினைவுகூரலாக இது இருக்கிறது.

நோர்த் உரையாற்றுவதற்காக, புயுக்கடா ( Büyükada) மேயர் அலி எர்கான் அக்போலட் ( Ali Ercan Akpolat) ஆல் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தார். அக்குழுவில் அவருடன் கலடாசராய் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரிட்வான் அகனும் இணைந்திருந்தார். இந்த நிகழ்வை துருக்கியில் சோசலிச சமத்துவக் குழுவின் ஒரு முன்னணி உறுப்பினரான உலாஸ் அடெசி வழிநடத்தினார். இந்த நிகழ்வில் சுமார் 160 பேர் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் பலர் எமது நூல்களை வாங்கியதுடன், பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்விலும் கலந்து கொண்டனர்.

முதலில், இங்கே இரண்டாவது சர்வதேச லியோன் ட்ரொட்ஸ்கி நினைவு தினத்தில் உரையாற்ற என்னை அழைப்புவிடுத்து ஏற்பாடு செய்தமைக்கு மேயர் அலி எர்கன் அக்போலட் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த நினைவுகூரலை ஒரு வருடாந்திர அறிவுஜீவித நிகழ்வாக நிறுவுவது வரலாற்று ரீதியாகவும், தற்கால சூழலிலும் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

புயுக்கடா மேயர் அலி எர்கான் அக்போலட் (இடது) டேவிட் நோர்த் (வலது) மற்றும் உலாஸ் அடெசி ஆகியோருடன் பேசுகிறார். [Photo: WSWS]

ட்ரொட்ஸ்கி புயுக்கடா தீவில் செலவிட்ட நான்கு ஆண்டுகள், அவரது வாழ்க்கையிலும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1929-இல், அவர் இந்தத் தீவிற்கு வந்த போது, வோல் ஸ்ட்ரீட் சரிவு மற்றும் உலகப் பெருமந்தம் தொடங்கிய ஆண்டாக இருந்தது. 1933 ஆம் ஆண்டானது ஹிட்லரின் நாஜி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஆண்டாகும், இது இரண்டாம் உலகப் போர், யூத இனப்படுகொலை மற்றும் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படுவதற்கு இட்டுச் சென்ற ஒரு வரலாற்று பேரழிவாகும். 1930களில் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அடைந்த தோல்விக்கான விலையை மனிதகுலம் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

1938 இல் ட்ரொட்ஸ்கி, வரலாற்று சகாப்தத்தை முதலாளித்துவத்தின் மரண ஓலம் (இறுதிக் கட்டம்) என்று வரையறுத்தார். 1930களில் சோசலிசப் புரட்சியின் தோல்வியின் விளைவாகவும், பிரான்சிலும், ஸ்பெயினிலும், குறிப்பாக ஜேர்மனியிலும் கூட ஸ்டாலினிசக் காட்டிக்கொடுப்புகளின் விளைவாகவும், முதலாளித்துவத்தின் மரண ஓலம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் தற்போதைய நிகழ்வுகள் ட்ரொட்ஸ்கியின் வரலாற்று முன்கணிப்பை ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஹிட்லரின் மூன்றாம் குடியரசு (ரைக்) வீழ்ச்சியடைந்துடன், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பின்னர், பாசிசத்தின் மீள்வருகையையும், இனப்படுகொலையை அரசுக் கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதையும், அணுஆயுத மூன்றாம் உலகப் போரை நோக்கி இராணுவ மோதல்கள் தீவிரமடைவதையும் நாம் கண்டு வருகிறோம்.

காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்வதிலிருந்தும், நாகரீகம் சுய அழிப்பிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாம் கடந்த காலத்தை ஆய்வு செய்வதும் அதிலிருந்து பொருத்தமான படிப்பினைகளைப் பெறுவதும் அவசியமாகும்.

இருபதாம் நூற்றாண்டின் மையப்புள்ளியில் ஜேர்மனியில் நிகழ்ந்த பாசிசத்தின் வெற்றி என்ற பேரவலத்தின் பின்னணியில்தான், இத்தீவில் ட்ரொட்ஸ்கி வாழ்ந்த ஆண்டுகளானது ஆழமான வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ட்ரொட்ஸ்கி, பிரின்கிபோவிற்கு நாடுகடத்தப்பட்டு இருந்த காலத்தில் அவர் தலைசிறந்த இரண்டு இலக்கியப் படைப்புகளை எழுதினார் என்பது நன்கறியப்பட்டதாகும்: அதாவது, அவரது சுயசரிதையான ‘எனது வாழ்க்கை‘ மற்றும் அவரது மாபெரும் சிறப்புமிக்க படைப்பான ‘ரஷ்யப் புரட்சியின் வரலாறு‘ ஆகியவை ஆகும்.

இருப்பினும் புயுக்கடாவில் இருந்த காலத்தில், ட்ரொட்ஸ்கியின் மாபெரும் சாதனையானது, ஜேர்மனியில் கட்டவிழ்ந்து வரும் அரசியல் நெருக்கடி குறித்த அவரது ஆழமான பகுப்பாய்வாகும். அத்தோடு, நாஜிசத்தால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறித்து ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திற்கு அவர் விடுத்த எச்சரிக்கையும், மற்றும் ஸ்ராலினின் வழிகாட்டுதலின் கீழ் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்பட்ட பேரழிவுகரமான கொள்கைகளை அவர் அம்பலப்படுத்தியதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. பேர்லினில் இருந்து 1,600 கிலோமீட்டர் தொலைவில் ஒரு தீவில் அடைபட்டிருந்த ட்ரொட்ஸ்கி, ஸ்டாலினின் கொள்கைகளின் தவிர்க்கவியலாத பின்விளைவுகள் மற்றும் நாஜிக்களின் வெற்றியைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்ற இரண்டையும் ஈடுஇணையற்ற முன்கணிப்பு அறிவுடன் புரிந்து கொண்டிருந்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி பிரின்கிபோவில் (Prinkipo) அவரது மேசையில் இருக்கிறார்

1930 செப்டம்பரின் ஆரம்பத்திலேயே, அதாவது ஹிட்லரின் வெற்றிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னரே, ட்ரொட்ஸ்கி இவ்வாறு எழுதினார்:

முதலாளித்துவ ஆட்சியின் உதவியற்ற நிலையானது, இந்த ஆட்சியில் சமூக ஜனநாயகத்தின் பழமைவாத பாத்திரம், மற்றும் அதை ஒழிப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுதிரண்ட சக்தியற்ற தன்மை ஆகியவற்றின் கூர்மையான வெளிப்பாடாக, ஜேர்மனியில் பாசிசம் ஒரு உண்மையான ஆபத்தாக மாறியுள்ளது என்பதை மறுப்பவர், ஒன்று குருடராக இருக்க வேண்டும் அல்லது தற்பெருமை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஐரோப்பாவில் ஜேர்மனி மிகப் பெரிய, மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அரசியல்ரீதியாக முன்னேறிய தொழிலாள வர்க்கத்தைக் கொண்டிருந்தது. ஜேர்மனி, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பிறப்பிடமாக இருந்ததுடன், மார்க்சிசத்தின் செல்வாக்கின் கீழ், வெகுஜன சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) தோற்றுவித்த தொழில்துறை அபிவிருத்தியைக் கொண்ட நாடாகவும் இருந்தது. ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியும், இரண்டாம் அகிலத்துடன் இணைந்திருந்த கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும், 1914ஆம் ஆண்டு ஆகஸ்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, தமது முதலாளித்துவ அரசாங்கங்களை ஆதரிப்பதன் மூலம் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துக்குத் துரோகமிழைத்தன.

1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் மூன்றாம் அகிலம் நிறுவப்பட்டமையானது, சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் புரட்சிகரக் கட்சிகளை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியானது (KPD) சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே, புதிய அகிலத்தின் மிகப் பெரிய பிரிவாக எழுந்தது. ஆனால் அதன் வளர்ச்சியானது அரசியல் தலைமையின் நெருக்கடியால் வேரறுக்கப்பட்டது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு இரண்டே வாரங்களுக்குப் பின்னர், 1919 ஜனவரியில் ரோசா லுக்சம்பர்க் மற்றும் கார்ல் லீப்க்னெக்ட் படுகொலை செய்யப்பட்டனர். இது கட்சியின் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர்களை இழப்பதற்கு வழிவகுத்தது. சோவியத் ஒன்றியத்திற்குள் ஸ்டாலின் தலைமையிலான அதிகாரத்துவத்தின் வளர்ச்சியும், உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டம் மறுதலிக்கப்பட்டமையும், “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத வேலைத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதனாலும் தான் தலைமைப் பிரச்சினை தீவிரமடைந்தது.

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இடது எதிர்ப்பு அணியின் தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி, மார்க்சிச வேலைத்திட்டத்தில் இந்த அடிப்படை தேசியவாத திருத்தத்தை எதிர்த்தார். இது, புதிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நோக்குநிலையைத் திசைதிருப்பி, கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரிவுகளை சோவியத் அதிகாரத்துவத்தின் தேசிய நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்வதற்கு வழிவகுத்தது.

இந்தத் தவறான நிலைப்பாடு, அதன் மிகவும் அழிவுகரமான வடிவத்தை ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளில் வெளிப்படுத்தியது. பாசிசத்தின் எழுச்சியை எதிர்கொள்கையில், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைப் பணியானது, தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சக்திகளையும் ஒரு பொதுத் தற்காப்புப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதாக இருந்திருக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் ஆதரவானது சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே பிளவுபட்டிருந்த சூழ்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி அப்போதும் சமூக ஜனநாயகவாதிகளின் தலைமையைப் பின்பற்றிக் கொண்டிருந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கடமைப்பட்டிருந்தது.

சமூக ஜனநாயகக் கட்சியின் சீர்திருத்தவாதத் தன்மையும் சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு அதன் கடுமையான விரோதப் போக்கும் இருந்தபோதிலும்கூட, பாசிசத்தின் எழுச்சியானது அதன் இருப்பையே அச்சுறுத்தியது. எனவே, சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்பான சமூக ஜனநாயகக் கட்சிக்கும் நாஜிக்களுக்கும் இடையே இருந்த புறநிலை முரண்பாட்டைப் பயன்படுத்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி கடமைப்பட்டுள்ளது என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். ஆனால் ஸ்டாலினிஸ்டுகள், இந்த முரண்பாடு இருப்பதையே மறுத்து, அமைப்பு ரீதியான சுய பாதுகாப்பிற்காகக் கூட சமூக ஜனநாயகவாதிகளுடன் எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரித்தனர்.

ஸ்டாலினிஸ்டுகளின் அதிதீவிர-இடது கொள்கையானது — அதாவது சமூக ஜனநாயகக் கட்சியை ‘சமூக பாசிசம்’ என வரையறுத்து, அதனை நாஜிக்களின் அரசியல் நகலாக சித்தரித்ததை, ட்ரொட்ஸ்கி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். “சமூக பாசிசம்” என்ற சுய-அழிவுகரமான கொள்கையைக் கைவிட்டு, நாஜிக்களுக்கு எதிரான ஒரு “ஐக்கிய முன்னணி”க்காக சமூக ஜனநாயகக் கட்சிக்கு அழைப்பு விடுக்குமாறு அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்புவிடுத்தார். ஜேர்மனியில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஆதரவைக் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் இரண்டு வெகுஜனக் கட்சிகளும், நாஜிக்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த தற்காப்பு நடவடிக்கைகளுக்கான ஓர் உடன்படிக்கையை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். இது, அதிகாரத்தை நோக்கிய ஹிட்லரின் பாதையில் கடக்க முடியாத ஒரு தடையை உருவாக்கும். அனைத்திற்கும் மேலாக, இது ஜேர்மன் முதலாளித்துவ ஆட்சிக்கும் அதன் நாஜி கைக்கூலிகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் தாக்குதலை நடத்துவதற்கான பாதைக்கு வழிவகுக்கும்.

1931 டிசம்பரில், “பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணிக்காக” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் ட்ரொட்ஸ்கி இவ்வாறு எச்சரித்தார்” ஜேர்மனி இப்போது அதன் வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றைக் கடந்து செல்கிறது. இந்தத் தருணத்தின் மீதே ஜேர்மன் மக்களின் எதிர்காலமும், ஐரோப்பாவின் எதிர்காலமும், மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் அடுத்த பல தசாப்தங்களுக்கு மனித குலத்தின் எதிர்காலமுமே தங்கியுள்ளது.”

சமூக ஜனநாயகக் கட்சியை பாசிசம் என்று ஸ்டாலினிஸ்டுகள் முட்டாள்தனமாகவும் பொறுப்பற்றதாகவும் வரையறை செய்தமையானது, ஹிட்லரின் உண்மையான பாசிசத்தால் முன்னிறுத்தப்பட்ட அபாயத்தை கடுமையாக குறைத்துக் காட்டும் விளைவைக் கொண்டிருந்தது. ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்புரட்சிகர ஆயுதக்கிடங்கில் பாசிசத்தின் குறிப்பான அரசியல் பாத்திரத்தை ட்ரொட்ஸ்கி எந்தவொரு சமகாலத்தவராலும் வெளிப்படுத்தமுடியாத நிகரற்ற ஒரு தெளிவுடன் விளக்கினார். 1932 ஜனவரியில் பிரசுரிக்கப்பட்ட “அடுத்தது என்ன?” என்ற அவரது கட்டுரையில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் ‘வழக்கமான’ பொலிஸ் மற்றும் இராணுவ வளங்கள், அவற்றின் நாடாளுமன்ற முகமூடிகளுடன் சேர்ந்து, சமூகத்தை சமநிலையில் வைத்திருக்கப் போதுமானதாக இல்லாத தருணத்தில் - பாசிச ஆட்சிமுறையின் காலம் வருகிறது. பாசிச முகவர்கள் மூலமாக, முதலாளித்துவம் வெறிகொண்ட குட்டி முதலாளித்துவ வெகுஜனத்தையும், வர்க்கமற்ற மற்றும் ஒழுக்கக்கேடான லும்பென் பாட்டாளி வர்க்கத்தின் கும்பல்களையும் பாசிச இயக்கத்திற்குள் கொண்டு வருகிறது; நிதி மூலதனமே நம்பிக்கையின்மைக்கும் சீற்றத்திற்கும் தள்ளப்பட்டுள்ள எண்ணற்ற மனிதர்கள் அனைவரையும் அது அணிதிரட்டுகிறது. முதலாளித்துவ வர்க்கமானது பாசிசத்திடமிருந்து முழுமையான பணியைக் கோருகிறது; அது உள்நாட்டுப் போர் முறைகளைக் கையாண்ட பின்னர், பல ஆண்டுகளுக்கு அமைதியை வலியுறுத்துகிறது... ஒரு அரசு பாசிசமாக மாறும்போது, அது வெறுமனே முசோலினியால் வகுக்கப்பட்ட மாதிரிகளுக்கு ஏற்ப அரசாங்க வடிவங்களும் முறைகளும் மாற்றப்படுகின்றன என்பதை மட்டும் குறிக்காது - இந்த வடிவிலான மாற்றங்கள் இறுதியில் சிறியளவிலான பங்கு தான் வகிக்கின்றன - மாறாக, அது முதன்மையாகவும் முக்கியமாகவும், தொழிலாளர் அமைப்புகள் அழிக்கப்படுகின்றன என்பதையும்; பாட்டாளி வர்க்கம் ஒழுங்கமைக்கப்படாத நிலைக்கு குறைக்கப்படுகிறது என்பதையும்; வெகுஜனங்களுக்குள் ஆழமாக ஊடுருவி, பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான உருவாக்கத்தைத் தடுக்கும் ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்படுகிறது என்பதையும் இது குறிக்கிறது. அதுவே துல்லியமாக பாசிசத்தின் சாராம்சமாகும்.”

90 ஆண்டுகளுக்குப் பிறகும், பாசிசம் என்றால் என்ன என்பதற்கு இதைவிட சிறந்த மற்றும் துல்லியமான வரையறை எதுவுமில்லை என்று ஒருவர் கூற முடியும். ட்ரொட்ஸ்கி தனது வாழ்நாளில் வேறு எதையும் எழுதியிராவிட்டாலும், இந்த வார்த்தைகள் மட்டுமே அவரது அரசியல் அழியாத் தன்மையை உறுதி செய்திருக்கும்.

ட்ரொட்ஸ்கி, ஸ்டாலினிஸ்டுகளின் கொள்கைகள் மீதான தனது விமர்சனத்தில், அவர்களின் தவறுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஒரு தேசியவாத நோக்குநிலை என்று வலியுறுத்தினார். அது ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை சர்வதேச சோசலிச முன்னோக்கில் இருந்து பிரித்தது. இது, சோவியத் அதிகாரத்துவத்தின் “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத வேலைத்திட்டத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்ட ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்குப் பதிலாக, கட்சியின் வெளிப்படையான பாட்டாளி வர்க்க நோக்குநிலையை மழுங்கடித்து, நாஜிக்களின் பேரினவாத கிளர்ச்சிக்கு தகவமைத்துக் கொண்ட ஒரு ஜேர்மன் “தேசிய மக்கள் புரட்சி”க்கான அழைப்பை முன்னெடுக்க இட்டுச் சென்றது. இந்த தவறான முன்னோக்கை அம்பலப்படுத்தி, ட்ரொட்ஸ்கி இவ்வாறு எழுதினார்:

ஐரோப்பாவின் பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவற்கான முழக்கமானது, பாசிச தேசியவெறியின் அருவருப்புத் தாக்குதல், பிரான்சை தூற்றுதல் போன்றவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மிக பிரதானமான ஆயுதமாகவும் விளங்குகிறது. மிகவும் தவறானதும், ஆபத்தானதுமான கொள்கை என்னவென்றால், எதிரியைப் போல தன்னைச் சித்தரித்துக் கொண்டு எதிரிக்கு செயலற்ற முறையில் இணங்கிப் போவதாகும். தேசிய விரக்தி மற்றும் தேசிய வெறி முழக்கங்களுக்கு எதிராக சர்வதேச விடுதலைக்கான முழக்கங்களை எழுப்ப வேண்டும். இதற்காக, கட்சியானது தேசிய சோசலிசத்திலிருந்து (NAZI) விடுபட வேண்டும். இதற்கான முதன்மையான காரணமாக இருப்பது, தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற கோட்பாடாகும்.

நாஜிக்களின் பலம் உறுதியாக வளர்ச்சியடைந்த போதும் கூட, ஸ்டாலினிஸ்டுகள் தங்கள் கொள்கைகளை மாற்ற மறுத்தனர். ட்ரொட்ஸ்கி, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உணர்ச்சிகரமான எச்சரிக்கையை பின்வருமாறு விடுத்தார்:

தொழிலாளர்-கம்யூனிஸ்டுகளே, நீங்கள் லட்சக்கணக்கானவர்கள், கோடிக் கணக்கானவர்கள்; நீங்கள் எங்கும் சென்றுவிட முடியாது; உங்களுக்குப் போதுமான கடவுச்சீட்டுகள் இல்லை. பாசிசம் ஆட்சிக்கு வந்தால், அது உங்கள் மண்டை ஓடுகளையும் முதுகெலும்புகளையும் ஒரு கொடூரமான டாங்கியால் நசுக்கிச் செல்லும். உங்கள் மீட்பானது கடுமையான போராட்டத்தில்தான் தங்கியுள்ளது. சமூக ஜனநாயகத் தொழிலாளர்களுடனான போர்க்குணமிக்க ஒற்றுமை மட்டுமே வெற்றியைக் கொண்டுவரும். விரைந்து செயற்படுங்கள், தொழிலாளர்-கம்யூனிஸ்டுகளே, உங்களுக்கு மிகக் குறைந்த நேரமே எஞ்சியுள்ளது!

ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1933 ஜனவரி 30 அன்று, ஆளும் வர்க்க சதிகாரர்களின் சதிக்குழுவால் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படாமல் ஹிட்லர் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டார். ட்ரொட்ஸ்கி முன்கணித்ததைப் போலவே சில நாட்களுக்குள்ளாக, நாஜிக்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு எதிராக நாஜிக்களின் பயங்கர ஆட்சியைத் தொடங்கினர். ஆனால் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் அடைந்த பேரழிவின் அளவை ஒப்புக்கொள்வதற்கு மாறாக, மாஸ்கோவில் இருந்த ஸ்டாலினிச ஆட்சியானது, அது தனது ஜேர்மன் கைப்பாவைக்கு வகுத்துக் கொடுத்த கொள்கைகளே – அதாவது நாஜிக்களின் வெற்றிக்குக் காரணமான அந்தக் கொள்கைகள் சரியானவை தான் என்று அறிவித்தது.

ஜேர்மன் பேரழிவுக்கான அனைத்துப் பொறுப்பையும் ஸ்டாலின் தலைமையிலான கிரெம்ளின் அதிகாரத்துவம் சிடுமூஞ்சித்தனமாகவும் வஞ்சகமாகவும் தட்டிக்கழித்தமையானது மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் நடைமுறையளவிலான பொறிவைக் குறித்தது. 1933 ஜூலை 15 அன்று, புயக்கடா தீவிலிருந்து புறப்படுவதற்கு சற்று முன்னதாக, ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான தனது அழைப்பை அவர் இவ்வாறு விடுத்தார்:

பாசிசத்தின் இடிமுழக்கத்தால் தட்டியெழுப்பப்படாத மற்றும் அதிகாரத்துவத்தின் இதுபோன்ற மூர்க்கத்தனமான நடவடிக்கைகளுக்கு பணிவுடன் அடிபணிந்து போகும் ஒரு அமைப்பானது, அது இறந்துவிட்டது என்பதையும், அதை எதுவும் எப்போதும் புதுப்பிக்கப்பட முடியாது என்பதையும் நிரூபிக்கிறது. இதை நாம் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சொல்வது பாட்டாளி வர்க்கத்துக்கும் அதன் எதிர்காலத்துக்கும் செய்ய வேண்டிய நேரடியான கடமையாகும். நமது அடுத்தடுத்த பணிகள் அனைத்திலும், அதிகாரபூர்வ கம்யூனிச அகிலத்தின் (மூன்றாம் அகிலம்) வரலாற்று ரீதியான வீழ்ச்சியை நமது தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

அதற்குப் பிந்தைய அத்தனை நிகழ்வுகளும் ஒரு புதிய அகிலத்திற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பை ஊர்ஜிதப்படுத்துவதாகத்தான் இருந்தன. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் கொள்கைகள் நனவுபூர்வமாக ஒரு எதிர்ப்புரட்சிகர குணாம்சத்தைப் பெற்றன. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களும் சோசலிசத்திற்கான போராட்டமும் கிரெம்ளின் ஆட்சியால் உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்களுடன் அதன் பிற்போக்குத்தனமான இராஜதந்திர சூழ்ச்சிகளின் நடைமுறைவாத கணக்கீடுகளுக்கு அடிபணியச் செய்யப்பட்டன. 1936-39ம் ஆண்டுகளின் பயங்கரத்தின் போது, பழைய போல்ஷிவிக்குகள் மற்றும் சோசலிசத்திற்கான போராளிகளின் ஒரு முழு தலைமுறையினரின் பாரிய படுகொலை, சோவியத் ஆட்சியானது உலக சோசலிசப் புரட்சியின் நோக்கத்திற்குத் திரும்ப முடியாத வகையில் விலகிவிட்டது என்பதை ஏகாதிபத்திய சக்திகளுக்கு எடுத்துக்காட்டுவதே ஸ்டாலினின் நோக்கமாக இருந்தது. ஸ்டாலினிச ஆட்சியும் அதனுடன் இணைந்த கட்சிகளும் எதிர்ப்புரட்சிக்கான கருவிகளாக உருமாற்றப்பட்டமையானது, இன்று சரியாக 85 ஆண்டுகளுக்கு முன்னர், 1939 ஆகஸ்ட் 23 அன்று ஸ்டாலின்-ஹிட்லர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதில் அதன் உச்சக்கட்டத்தைக் கண்டது. இதற்கு ஓராண்டுக்குப் பின்னர், 1940 ஆகஸ்ட் 20 இல், ட்ரொட்ஸ்கி சோவியத் இரகசியப் போலிஸான ஜிபியு இன் ஒரு முகவரால் படுகாயமடைந்தார்.

நாம் இன்று சந்திக்கும் இவ்வேளையில் இந்த வரலாற்றை நினைவுகூர்வது பொருத்தமானதாகும். இன்றைய நிகழ்வின் தலைப்பில் குறிப்பிட்டதைப் போல, இந்த அமைதியான தீவிலிருந்து தான் ட்ரொட்ஸ்கி கொந்தளிப்பான ஒரு உலகைப் பகுப்பாய்வு செய்தார். உலகம் மீண்டுமொருமுறை பேரழிவின் விளிம்பில் நிற்கும் இத்தருணத்தில், நாம் புயுக்கடாவில் ட்ரொட்ஸ்கி செலவிட்ட ஆண்டுகளை நினைவுகூர்கிறோம். இது இன்றைய நிகழ்வுக்கு அசாதாரண முக்கியத்துவத்தை அளிக்கிறது.

புயுக்கடா ( Büyükada) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்கள். [Photo: WSWS]

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மார்க்சிச தத்துவாசிரியராகவும் புரட்சியாளராகவும் லெனினுடன் தோளோடு தோள்நின்ற மனிதருக்கு மட்டும் நாம் அஞ்சலி செலுத்தவில்லை. சமகால உலக அரசியலில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபுவழி எங்கும் பரவியுள்ளதையும், வரலாற்றில் அவருக்குரிய தனித்துவமான இடத்தையும் நாம் ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கிறோம்.

ட்ரொட்ஸ்கியின் அரசியல் கருத்தாக்கங்களை வெறுமனே “பொருத்தமானவை” என்று விவரிப்பது ஒரு பரந்த குறைமதிப்பீடாகும். ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைக் குறித்த ஒரு முறையான ஆய்வு இல்லாமல் ஒருவர் இன்றைய உலகின் அரசியல் முரண்பாடுகளை —ஏனைய விடயங்களுடன் சேர்த்து அதுவும் பாசிசத்தின் உலகளாவிய மீளெழுச்சியில் இருந்து வெளிப்படுத்துவதை— புரிந்து கொள்ள முடியாது. ஐன்ஸ்ரைன் (Einstein) மற்றும் ஹெய்சன்பேர்க்கின் (Heisenberg) கோட்பாடுகளானது பௌதீக பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியமாக இருப்பதைப் போலவே, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சர்வதேச சோசலிசத்தின் மூலோபாயம் மற்றும் நடைமுறைக்கு அத்தியாவசியமானது. இது மனித இனத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு இன்றியமையாததாகும்.

ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபியத்திற்கு ஒரு நீடித்த சமகால முக்கியத்துவத்தை வழங்குவது தவறு என்ற ஆட்சேபனையானது குறிப்பாக வசதியான நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது அரசியலை நடைமுறைப்படுத்துபவர்களிடம் இருந்து தவிர்க்கவியலாமல் எழுப்பப்படுகிறது. ட்ரொட்ஸ்கி கடந்த நூற்றாண்டின் முதல் பாதியின் ஒரு நபராகத்தான் இருக்கிறார் என்று அவர்கள் வாதிடுகின்றனர். அவர் படுகொலை செய்யப்பட்டு எண்பத்தி நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. சோவியத் ஒன்றியமே இப்போது இல்லை. நாம் மிகவும் வித்தியாசமான உலகில் வாழ்கிறோம். தொழிலாள வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மையத்தின் மீதான மார்க்சிச வலியுறுத்தல் —அதாவது “வர்க்க அத்தியாவசியவாதம்” என்றழைக்கப்படுவது— இனம், நிறம் மற்றும் பாலினத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அடையாள அரசியலால் கடந்து செல்லப்பட்டுவிட்டது என அவர்கள் கூறுகின்றனர். ட்ரொட்ஸ்கியுடன் தொடர்புடைய சிந்தனைகள் மற்றும் முன்னோக்குகளை - அதாவது, உலக சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தை - பாதுகாப்பது ‘உருவ வழிபாடு’ ஆகும் என்கின்றனர். ட்ரொட்ஸ்கியும் ட்ரொட்ஸ்கிசமும் ‘பொருத்தமற்றவை’ என்று அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

இதுதான் பிரிட்டிஷ் கல்வியாளரும், லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான ஜோன் கெல்லி முன்வைத்த வாதத்தின் சாராம்சம் ஆகும். இந்த பேராசிரியர் கடந்த ஆறு ஆண்டுகளின் போது ட்ரொட்ஸ்கிசத்தின் பொருத்தமின்மையை நிரூபிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். சமகால ட்ரொட்ஸ்கிசம் என்ற தலைப்பிலான முதல் தொகுதி 2018 இல் வெளியிடப்பட்டது. உலக ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம் என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதி 2023 இல் வெளியிடப்பட்டது. பொருத்தமற்றது’ என அவர் கருதும் ஒரு இயக்கம் மற்றும் ஒரு மனிதரைப் பற்றிய ஆய்வுக்கு பேராசிரியர் ஏன் இவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணித்தார் என்று ஒருவர் கேட்கலாம். ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் குறித்து அதைக் கண்டனம் செய்வதற்கு இவ்வளவு ஆற்றலை செலவிட பேராசிரியர் கெல்லியை இட்டுச் சென்றது என்ன?

50 முதல் 100 மில்லியன் டாலர்கள் வரை ஆண்டு வருவாய் ஈட்டும் உலகின் மிகப் பெரிய பதிப்பாளர்களில் ஒருவரான ரூட்லெட்ஜால் கெல்லியின் இரண்டு தொகுதிகள் ஏன் வெளியிடப்பட்டன? இந்த சக்திவாய்ந்த முதலாளித்துவ பதிப்பகம் ஏன் ஒரு பொருத்தமற்ற அமைப்பைப் பற்றிய புத்தகங்களை வெளியிட தனது வளங்களை செலவிடுகிறது? 2003 இல் ரூட்லெட்ஜ், லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டது என்பது நினைவுகூரப்பட வேண்டும். அதன் ஆசிரியரான பேராசிரியர் இயன் தாட்சரை அறிவார்ந்த கொள்கையற்ற அவதூறு செய்பவர் என்று அம்பலப்படுத்திய உயர்ந்த கௌரவத்தை நான் பெற்றேன். தெளிவாக, ட்ரொட்ஸ்கி குறித்த ரூட்லெட்ஜின் அக்கறையானது, அவரது ‘பொருத்தமின்மை’ குறித்து அது எந்த விதத்திலும் உறுதியாக இல்லை என்பதைக் காட்டுகிறது.

கெல்லியும் அவரைப் போன்றவர்களும் பொறுத்துக்கொள்ள முடியாதது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் புரட்சிகர நோக்கின் உறுதிப்பாடாகும். நான் அங்கம் வகிக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை அவர் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார். பேராசிரியர் கெல்லியும் நானும் ஒருபோதும் சந்தித்ததில்லை என்றாலும், அவர் என்னை “ஒரு அடக்கமற்ற மற்றும் திமிர்பிடித்த நபர்” என்று விவரிக்கிறார்; மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தை “21 ஆம் நூற்றாண்டின் மார்க்சிசம்” என்று அனைத்துலகக் குழு வரையறை செய்வதை கடுமையாக ஆட்சேபிக்கின்றார்.

பேராசிரியர் கெல்லி, 2020 ஜனவரியில் உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட புத்தாண்டு அறிக்கையின் தலைப்பான “சோசலிசப் புரட்சியின் தசாப்தம் தொடங்குகிறது” என்பதைக் கண்டனம் செய்வதற்கு, கெல்லி இவ்வாறு எழுதுகிறார்:

மரபுவழி ட்ரொட்ஸ்கிச அமைப்புகள், அவற்றின் கோட்பாட்டு வாதத்தில் அடைக்கப்பட்டிருப்பதுடன், உண்மையான அனுபவவாத விசாரணை அல்லது தத்துவார்த்தக் கண்டுபிடிப்புகளுக்கு விரோதமானவையாகவும், இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியின் சுலோகங்கள் மற்றும் கொள்கைகளை என்றென்றும் திரும்பத் திரும்பக் கூறும் நிலைக்கு ஆளாகியுள்ளன. இந்த சிந்தனைகளும் இந்தச் சிந்தனைகள் மட்டுமே, உலகெங்கிலும் முதலாளித்துவ அதிகாரத்தின் மீதான லெனினிச-பாணியிலான தாக்குதல்களுக்குத் தலைமை கொடுக்கும் வெகுஜன புரட்சிகரக் கட்சிகளாக அவை உடனடியாக உருமாறுவதற்கான திறவுகோலைக் கொண்டுள்ளன என்று அவை உறுதியாக நம்புகின்றன. [ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம், பக். 97]

உண்மையில், பேராசிரியர் கெல்லி முன்வைக்கும் வேலைத்திட்டமானது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளுக்கு, அதாவது 1890களின் ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) சமூக சீர்திருத்தக் கட்சியாக மாற்றுவதற்காக முயன்ற எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் பணிக்கு திரும்புகிறது. இன்று கெல்லியால் பயன்படுத்தப்படும் அதே வார்த்தைகளில், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் புரட்சிகர வேலைத்திட்டம் காலாவதியாகிவிட்டது என்றும், முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் சீர்திருத்தங்களுக்கு ஏற்புடையவை என்றும், முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான மோதல்கள் போரை நாடாமல் தீர்க்கப்பட முடியும் என்றும், மேலும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் சீராக முன்னேறும் என்றும் பேர்ன்ஸ்டைன் வாதிட்டார். சோசலிசம், புரட்சியின் மூலமாக அடையப்பட முடியாது, மாறாக, முதலாளித்துவ சமூகத்தைப் படிப்படியாகச் சீர்திருத்துவதன் மூலமாகவே அடையப்பட முடியும் என்று வாதிட்டார். ஆனால், இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் — அதாவது இரண்டு உலகப் போர்கள், அணு ஆயுதங்களின் பயன்பாடு, பாசிசத்தின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் அது தொடர்பான பாரிய ஒடுக்குமுறை வடிவங்கள் — பேர்ன்ஸ்டைனின் கற்பனாவாதக் கருத்தாக்கங்களை மறுத்தன.

எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் (Eduard Bernstein)

உலக முதலாளித்துவத்தின் தீவிரமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியில் தொழிலாள வர்க்கத்திற்கு முன்னேறும் வழியைக் காட்டக்கூடிய - ட்ரொட்ஸ்கியும் லெனினும் முன்வைத்தவற்றை விட முன்னோக்கிய - புதிய முழக்கங்கள், கொள்கைகள் மற்றும் கருத்துக்களை அடையாளம் காண பேராசிரியர் கெல்லி தவறுகிறார்.

அனுபவவாத ஆராய்ச்சிக்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அலட்சியமாக இருப்பதாக பேராசிரியர் கெல்லி குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் ஓய்வுபெற்ற பேராசிரியரான அவர், கால்களில் கதகதப்பான செருப்புகளுடனும், தலைக்கு மேல் ஒரு கம்பளி இரவுத் தொப்பியை அணிந்தபடியும் வசதியாக ஓய்வில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்— உலக முதலாளித்துவம் கொந்தளிப்பு மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ந்து வருவது அதிகரித்தளவில் வெளிப்படையான அறிகுறிகளைக் கவனிக்காததாகத் தெரிகிறது. அவர் பின்வருமாறு எழுதுகிறார்: “சீர்திருத்தவாத சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது மற்றும் உலக அரசியலானது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற ஒரு எளிய இரட்டைத் தேர்வாக சுருங்கி விட்டது என்ற கருத்தானது, கருத்தியல்ரீதியில் அப்பாவித்தனமானதும் அனுபவரீதியில் பிழையானதுமாகும்.” [78]

2020-களின் நடுப்பகுதியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துலகக் குழுவின் முன்னறிவிப்பை கெல்லி, கேலி செய்ததை நிகழ்வுகள் நியாயப்படுத்தியுள்ளனவா? புதிய தசாப்தம் தொடங்கியதிலிருந்து உலக முதலாளித்துவத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் மேலாதிக்கம் செலுத்தும் முக்கிய போக்கு என்னவாக இருந்துள்ளது? பேராசிரியர் கெல்லி, ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ‘கோட்பாட்டு வாதம்’ சமகால உலகின் யதார்த்தங்களைக் காணத் தவறுகிறது என விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் சரியானதாக இருக்குமெனில், கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் பின்வரும் நிகழ்வுகளை அவர் பொருத்தமான அனுபவ ரீதியான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்: அதாவது உலகப் பொருளாதாரம் உள்ளார்ந்து வலுவடைந்திருக்கிறது, சமூக நிலையின்மை குறைந்திருக்கிறது, குறிப்பாக வர்க்க மோதல்கள் குறைந்திருக்கின்றன, புவிசார் அரசியல் பதற்றங்கள் குறைந்திருக்கின்றன, மேலும் முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களின் உயிர்ப்புத்தன்மை வளர்ந்து வருகிறது என்பவற்றை அவர் நிரூபிக்க வேண்டும்.

உண்மையில், சமகால முதலாளித்துவத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளின் நிலை குறித்த ஒரு ஆய்வு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பகுப்பாய்வை சரியென நிரூபிக்கிறது. ஒவ்வொரு துறையிலும், ஸ்திரத்தன்மையை விட நெருக்கடி ஆதிக்கம் செலுத்துகிறது. உலகெங்கிலும் பரவி குறைந்தபட்சம் 2.7 கோடி “அதிகப்படியான இறப்புகளுக்கு” வழிவகுத்த ஒரு பெருந்தொற்று நோயின் வெடிப்புடன் இந்த தசாப்தம் தொடங்கியது. இது இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அதன் உலகளாவிய வெறியாட்டம் தொடர்கிறது. அமெரிக்காவில் மட்டும் 2020 முதல் 1.1 பில்லியன் கோவிட் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தும் ஒரு அறிக்கையை நான் இன்று படித்தேன். இந்த ஆண்டு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பெருந் தொற்றுநோயைப் புறக்கணிப்பதும், அது இனியும் கவலைக்குரிய பிரச்சினையல்ல என்று பாசாங்கு செய்வதுமே ஆளும் உயரடுக்கின் கொள்கையாகவே உள்ளது. இதே அலட்சியம்தான் பூகோள வெப்பமயமாதலுக்கு அவர்களின் விடையிறுப்பையும் குணாம்சப்படுத்துகிறது. ஒரு உலகந்தழுவிய தீர்வு தேவைப்படுகின்ற தற்கால வெகுஜன சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளும், சமூக ரீதியாக பகுத்தறிவிற்கு ஒவ்வாததும் அழிவை ஏற்படுத்தக்கூடியதுமான பெருநிறுவன இலாபங்களின் தேடலுக்கும், அதீத அளவிலான தனிப்பட்ட செல்வக் குவிப்புக்கும் கீழ்ப்படுத்தப்பட்டுள்ளன.

தொழில்நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சி இருந்தபோதிலும், உலக நிதிய அமைப்புமுறையானது பொறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த ஒன்றரை தசாப்த காலத்தில், பொருளாதார பேரழிவுகளைத் தடுக்க இரண்டு முறை —2008ம் ஆண்டு மற்றும் 2020ம் ஆண்டில்— பாரியளவிலான மற்றும் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களுக்கு அரசு தலையீடு அவசியப்பட்டது. இதன் விளைவு தேசியக் கடனானது தாங்க முடியாத மட்டங்களுக்கு உயர்ந்துள்ளது.

2007 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் அரச கடன் 9 டிரில்லியன் டாலர்களாக இருந்தது, இது ஒரு அதிர்ச்சியூட்டும் அளவாகும். 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கடன் $34 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. 330 மில்லியன் மக்களிடையே கடன் பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு அமெரிக்கரும் 104,000 டாலர்கள் கடன்பட்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்க சுழற்சியானது நீடிக்க முடியாதது. கடன்களை அடைக்க வேண்டும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் பாரியளவில் தீவிரப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதை ஜனநாயக ரீதியிலோ அல்லது சமாதான ரீதியிலோ அடைய முடியாது. இருபதாம் நூற்றாண்டைப் போலவே, ஆளும் உயரடுக்குகள் போர் மற்றும் பாசிசத்தின் மூலமாக நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியைத் தேட நிர்பந்திக்கப்படுகின்றன.

அமெரிக்க கூட்டாட்சிக் கடன் [Photo by Federal Reserve Economic Database]

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20, 2023 அன்று நடந்த முதலாவது ட்ரொட்ஸ்கி நினைவு தினத்தில் நான் பேசியதாவது:

நான்காம் அகிலத்தின் நிறுவக ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி விவரித்த நிலைமையை இன்று நாம் துல்லியமாக எதிர்கொள்கிறோம், அதாவது இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டிற்கு முன்பு 1938ல் ட்ரொட்ஸ்கி அதை எழுதினார்: “ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தில், மனிதகுலத்தின் முழு கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது.”

கடந்த ஆண்டின் நிகழ்வுகள் அந்த எச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்தியுள்ளனவா? கடந்த ஆண்டு புயுக்கடாவில் நாங்கள் சந்தித்து ஆறு வாரங்களுக்குப் பின்னர், இஸ்ரேலிய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான காஸா மக்களின் எழுச்சியானது அக்டோபர் 7 அன்று நடந்தது. இஸ்ரேலிய அரசு ஒரு இனப்படுகொலைப் போரைத் தொடுக்க இந்த எழுச்சியைப் பயன்படுத்திக் கொண்டது. இந்த எழுச்சியானது, பாலஸ்தீன மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்ததன் தவிர்க்க முடியாத விளைவாக இருந்தது. 10 மாத போருக்குப் பிறகு, காஸா சிதைந்து கிடக்கிறது.

அதிகாரப்பூர்வ லான்செட் இதழ் நடத்திய ஒரு ஆய்வின்படி, மொத்த இறப்பு எண்ணிக்கை சுமார் 180,000 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது இன்னும் அதிகமாக இருக்கலாம். ஏனெனில், பாசிச இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்கள் உலக மக்களை அச்சுறுத்தியுள்ள நிலையில், அதன் நடவடிக்கைகளானது ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசாங்கத்தாலும் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வதற்கு பயன்படுத்தப்படும் குண்டுகளையும் பீரங்கிகளையும் அமெரிக்காவானது இஸ்ரேலுக்கு வழங்கியதுடன், தொடர்ந்து வழங்கி வருகிறது. “இஸ்ரேலுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு” என்ற சுலோகத்தின் கீழ், ஏகாதிபத்திய ஆட்சிகள் இனப்படுகொலையை அரசு கொள்கையின் ஒரு சட்டபூர்வமான கருவியாக பயன்படுத்த ஒப்புதல் அளித்து வருகின்றன. அதன் அட்டூழியங்களுக்கு மத்தியில், இஸ்ரேலிய ஹிட்லரான நெதன்யாகு அமெரிக்க காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார், இது ஒரு வெளிநாட்டு தலைவருக்கு வழங்கக்கூடிய மிக உயர்ந்த கௌரவமாகும்.

இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ந்திருப்பது, 1940இல் ட்ரொட்ஸ்கி முன்வைத்த முன்னறிவிப்பை உறுதிப்படுத்துகிறது. சியோனிச திட்டத்தை எதிர்த்து, அவர் இவ்வாறு எச்சரித்தார்: “யூதர்களை பாலஸ்தீனத்திற்கு குடியேற்றுவதன் மூலம் யூதப் பிரச்சினையைத் தீர்க்க முயல்வது, யூத மக்களுக்கான ஒரு சோகமான பரிகாசமாக இப்போது பார்க்கப்படலாம்”. இந்த பிற்போக்குத்தன பேரினவாதத் திட்டமானது இப்பொழுது தார்மீக ரீதியில் இஸ்ரேலிய மக்களை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குற்றத்தில் சிக்க வைத்துள்ளது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் வாரிசுகள் இன்று இனப்படுகொலையின் குற்றவாளிகளாக மாறியுள்ளனர். இஸ்ரேலிய தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் சியோனிசத்தின் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் அரசியலில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். 84 ஆண்டுகளுக்கு முன்பாக ட்ரொட்ஸ்கி எழுதிய வார்த்தைகள் ஒரு கசப்பூட்டும் உடனடித் தன்மையைப் பெற்றுள்ளன: அதாவது “யூத மக்களின் விமோசனம் முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கிவீசுவதுடன் பிரிக்கவியலாதவாறு பின்னிப்பிணைந்துள்ளது என்பது இன்று இருப்பதைப் போல ஒருபோதும் இந்தளவுக்கு தெளிவாக இருந்ததில்லை.”

கடந்த ஆண்டு நாங்கள் சந்தித்தபோது, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் நேட்டோவின் பினாமிப் போர் ஏற்கனவே 18 மாதங்களாக நடந்து கொண்டிருந்தது. யுத்தம் மேலும் ஒரு வருடம் மட்டும் தொடரவில்லை; அது முழு அளவிலான அணுஆயுத போராக வெடிக்க அச்சுறுத்தும் புள்ளிக்கு தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவும் நேட்டோவும் தாங்கள் கடக்கத் தயாராக இல்லாத எந்த “சிவப்புக் கோடுகளும்” இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளன. கடந்த மூன்று வாரங்களில், அமெரிக்கா மற்றும் நேட்டோவால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற ஆதாரவளங்களைப் பயன்படுத்தி, உக்ரேன் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்துள்ளது. 1944ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏகாதிபத்தியப் படைகள் ரஷ்யாவை ஆக்கிரமித்ததில்லை. இந்தக் கட்டத்தில், நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால்: புட்டின் ஆட்சி உக்ரேனுக்கு எதிராக மட்டுமல்லாமல், அதன் அமெரிக்க மற்றும் நேட்டோ ஆதரவாளர்களுக்கு எதிராகவும் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு எப்போது வரும்? அத்தகைய முடிவு ஒரு உலகப் பேரழிவிற்கு வழிவகுக்கும்.

ஆகஸ்ட் 16, 2024 வெள்ளிக்கிழமையன்று, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் சுட்சா அருகே ஒரு சாலையோரத்தில் அழிக்கப்பட்ட ரஷ்ய டாங்கி உள்ளது.  [AP Photo]

காஸா இனப்படுகொலையும் நேட்டோ-ரஷ்யா மோதலும் மனித இனத்தின் உயிர்வாழ்வையே அபாயத்தில் வைக்கும் ஓர் உலகளாவிய போராட்டத்தின் இப்போதைய குவிமையப் புள்ளிகளாக உள்ளன. இந்த மோதலுக்கான மூலகாரணமானது, இப்பொழுதுள்ள தேசிய அரசு அமைப்புமுறையும் பூகோள ரீதியில் ஒன்றோடொன்று பிணைந்துள்ள உலகப் பொருளாதார அமைப்புமுறையின் யதார்த்தத்துடன் பொருந்தி இருக்க முடியாத தன்மையில் வேரூன்றியுள்ளது. முதலாளித்துவ கட்டமைப்பிற்குள், இந்த அடிப்படை முரண்பாட்டிற்கு போரைத் தவிர வேறு தீர்வு கிடையாது. உலகப் போருக்கு ஒரே நம்பகமான மாற்றீடு உலக சோசலிசப் புரட்சியாகும்.

பேராசிரியர் கெல்லி கூறுவதைப் போல, முதலாளித்துவத்தின் தீமைகள் சீர்திருத்தவாத மசாஜ் மூலமும் பாதக் குளியல் மூலமும் தீர்க்கப்பட முடியும் என்றால், உலகம் முழுவதும் பாசிசத்தின் மீளெழுச்சியை நாம் ஏன் காண்கிறோம்? மெலோனியின் இத்தாலியின் சகோதரர்கள் கட்சி, பிரான்சில் லு பென்னின் தேசிய பேரணிக் கட்சி, ஜேர்மனியில் AfD (ஜேர்மனிக்கான மாற்றீடு) கட்சி, ஸ்பெயினில் வோக்ஸ் கட்சி மற்றும் அமெரிக்காவில் ட்ரம்ப்பிசம் ஆகியவைகள் இந்த போக்கை எடுத்துக்காட்டுகின்றன. எவ்வாறிருப்பினும், இந்த அமைப்புக்கள் மற்றும் இயக்கங்களின் வளர்ச்சி இந்தக் கட்டத்தில் நாஜி போன்ற ஆட்சியை உருவாக்குவதற்கான வெகுஜன ஆதரவில் இருந்து தோன்றவில்லை. மாறாக, சீரழிந்து வரும் சமூக நிலைமைகள் தொடர்பாக பாரம்பரிய கட்சிகளின் அலட்சியத்தால் எழும் விரக்தியை பாசிஸ்டுகள் சுரண்டிக் கொள்கின்றனர். ஊடகங்களில் ஊக்குவிக்கப்பட்டு, பில்லியனிய செல்வந்த தட்டுக்களின் பிரிவுகளால் நிதியளிக்கப்படும் பாசிஸ்டுக்கள், இந்த விரக்தியை புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களை நோக்கித் திருப்பி விடுகின்றனர். 1930கள் மற்றும் 1940களில் யூதர்களுக்கு நடந்ததுபோல, முதலாளித்துவத்தின் கேடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களை பலிகடாக்களாக பாசிஸ்டுக்கள் சேவையாற்றி வருகின்றனர்.

முதலாளித்துவம் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் கோட்டையில், அமெரிக்க ஜனநாயகம் ஒரு நெருக்கடியின் சுமையின் கீழ் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு இப்போதைய அரசியல் அமைப்புமுறையிடம் எந்த முற்போக்கான பதிலும் இல்லை. ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறித்தது. “அது இங்கே நடக்க முடியாது” —அதாவது, அமெரிக்கா ஒருபோதும் பாசிசமாக செல்ல முடியாது— என்ற கூற்று அன்றைய சம்பவங்களால் சிதறடிக்கப்பட்டது. ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஏற்பாடு செய்தவர் தண்டனையில் இருந்து மட்டும் தப்பவில்லை. அவர் மீண்டும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கிறார். கடந்த வாரத்தில், ஒரு தெளிவான தருணத்தில், ஜனாதிபதி பைடென், பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்:

டொனால்ட் ட்ரம்ப், தான் மீண்டும் தோற்றால் தேர்தல் முடிவை ஏற்க மறுப்பதாக கூறுகிறார். இதைப் பற்றி சிந்தியுங்கள். அவர் தோற்றால் இரத்தக்களரி நடக்கும் என்று அவரே சொற்களில் கூறுகிறார். மேலும் முதல் நாளிலேயே தான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்றும் அவரின் சொற்களில் கூறுகிறார். அந்த முட்டாள் இதை உண்மையாகவே கருதுகிறார். நான் வேடிக்கையாகவே சொல்லவில்லை. கடந்த காலத்தில் வேறு யாராவது இப்படிச் சொல்லியிருந்தால், அவர் பைத்தியம் என்றும், அது மிகைப்படுத்தல் என்று நினைத்திருப்பீர்கள், ஆனால் அவர் இதை உண்மையாகவே கருதுகிறார்.

இந்த எச்சரிக்கையை தற்போதைய ஜனாதிபதியே விடுத்துள்ளார். அமெரிக்கா ஒரு பொலிஸ் அரசாக மாறும் விளிம்பில் இருப்பதாக பைடென் வெளிப்படையாகக் கூறினார். முதலாவதாக, ட்ரம்ப் மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முயன்றால் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அவர் என்ன செய்வார் என்பதை பைடென் கூறவில்லை; இரண்டாவதாக, பைடெனின் எச்சரிக்கையானது ஊடகங்களில் அரிதாகவே அறிவிக்கப்பட்டது. இந்த மௌனமானது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்தியது. உண்மையில், அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள நாடுகளில், ஆளும் தன்னலக்குழுக்களுக்குள்ளேயே வளர்ந்து வரும் ஒரு கருத்தொற்றுமை உள்ளது – அதாவது அவர்களின் நலன்கள், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், ஜனநாயகத்துடன் ஒத்துப்போகாதவை என்பதே அது. சமூக ஏற்றத்தாழ்வின் வளர்ச்சியடைந்து வரும் அதிர்ச்சியூட்டும் அளவானது மக்கள் கோபத்தை தூண்டுகிறது என்றும், ஏகாதிபத்திய இராணுவவாதத்தால் தேவைப்படும் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்கள் வர்க்க மோதலின் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் ஆளும் உயரடுக்கினர் முழுமையாக அறிந்துள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரமயமாக்கத்தையும் அது சோசலிசத்தை நோக்கித் திரும்புவதையும் முன்கூட்டியே தடுத்து, வன்முறையால் அடக்குவதற்கான முயற்சியே ஆளும் வர்க்கத்தின் பாசிசத்தை நோக்கிய திருப்பமாகும்.

ஏகாதிபத்திய சகாப்தத்தில், ஜனநாயகத்திற்கான போராட்டமும், அத்தியாவசிய ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் பிரிக்கவியலாதவாறு சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது என்பதை நிரந்தரப் புரட்சிக் கோடுபாடு நிறுவுகிறது. பாசிசத்தைத் தோற்கடிப்பதற்கு தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ உடைமையைத் தூக்கிவீசுவதும் உற்பத்தி சாதனங்கள் மீதான கட்டுப்பாடும் அவசியமாகும். ஜனநாயகம் இல்லாமல் சோசலிசம் இருக்க முடியாது என்றாலும், சோசலிசம் இல்லாமல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது சாத்தியமற்றதாகும்.

இறுதியாக, பேராசிரியர் கெல்லியின் உலக ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம் என்ற நூலானது பின்வரும் குற்றச்சாட்டுடன் நிறைவு செய்கிறது: “எண்பது ஆண்டுகளுக்கும் அதிகமான ட்ரொட்ஸ்கிச நடவடிக்கைகளுக்குப் பின்னர், புரட்சிகளோ, வெகுஜனக் கட்சிகளோ அல்லது தேர்தல் வெற்றிகளோ இல்லாத ... ட்ரொட்ஸ்கிச இயக்கம் சோசலிஸ்டுகளுக்கு ஒரு முட்டுச்சந்தாகிவிட்டது.” நான்காம் அகிலத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களிலும், இதுவே மிகவும் முட்டாள்தனமானதும் கீழ்த்தரமானதுமாகும்.

இந்த விமர்சனமானது புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கை எந்தவொரு புறநிலை வரலாற்று மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் இருந்தும் அகற்றுவதுடன், ட்ரொட்ஸ்கிச இயக்கமானது ஒரு அரசியல் வெற்றிடத்தில் இயங்கியுள்ளது என்பதையும் உட்குறிப்பாகக் காட்டுகிறது. அது பாதகமான புறநிலைமைகளையோ அல்லது பரந்த ஆதாரவளங்களைக் கொண்டிருந்த வர்க்க எதிரிகளையோ எதிர்கொள்ளவில்லை.

முதலாளித்துவ அரசு மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள அதன் முகவர்களான தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், சமூக ஜனநாயக சீர்திருத்தவாதிகள், ஸ்டாலினிஸ்ட்டுக்கள், அராஜகவாதிகள், முதலாளித்துவ தேசியவாதிகள் ஆகியோரால் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் செல்வாக்கை எதிர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சக்திகள் குறித்து கெல்லி எதுவும் குறிப்பிடவில்லை. வெளிப்படையாகச் சொல்வதென்றால், கெல்லி தானே, தனது சீர்திருத்தவாத அற்பத்தனங்களாலும் நம்பிக்கையின்மையாலும், தொழிலாளர்களிடையே புரட்சிகர அரசியலின் வளர்ச்சியைக் குழிபறிக்க முதலாளித்துவ வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் கருவிகளில் ஒன்றாக இருக்கிறார்.

டேவிட் நோர்த் புயாக்கடா விரிவுரைக்குப் பின்னர் சியோனிசத்தின் தர்க்கம் என்ற அவரது புத்தகத்தின் பிரதிகளில் கையெழுத்திடுகிறார் [Photo: WSWS]

ஒரு புரட்சிகரக் கட்சிக்கான பரிசோதனையானது, எல்லா நேரங்களிலும் மற்றும் புறநிலைமைகளைப் பொருட்படுத்தாமல், ஒரு வெற்றிகரமான புரட்சிக்கு தலைமை கொடுக்க இயலுமா என்பது அல்ல. மாறாக, புறநிலை நிலைமை குறித்த ஒரு சரியான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னெடுக்கும் கொள்கைகளுக்காகவும் கட்சியானது போராடியதா என்பதே அதன் தீர்மானகரமான அளவுகோலாகும்.

போல்ஷிவிக் கட்சி மற்றும் சோவியத் அரசின் அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிராக, 1923ம் ஆண்டில் ட்ரொட்ஸ்கிசம் முதன்முதலில் ஒரு தனித்துவமான அரசியல் போக்காக எழுந்ததில் இருந்து, அது அளப்பரிய அரசியல் அனுபவத்தைப் பெற்றுள்ளது. தொழிலாள வர்க்கமானது வெகுஜன ஸ்டாலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளால் தவறாக வழிநடத்தப்பட்ட சாதகமற்ற நிலைமைகளின் கீழ், அது ‘நீரோட்டத்திற்கு எதிராக’ செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டது . ஆனால் நான்காம் அகிலத்தின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் சரியான தன்மை வரலாற்றால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

1938 ஆம் ஆண்டில், நான்காம் அகிலத்தின் தோற்றத்தைக் கொண்டாடும் உரையில், வரலாற்று நிகழ்வுகளின் பரிசோதனையானது எதிர்ப்புரட்சி முகவர்களின் ‘ஒரு கல்லின் மேல் மற்றொரு கல்லைக்கூட விட்டு வைக்காது’ என்று ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தார். அது உண்மையென நிரூபணமானது.

“உண்மையாக நிலவும் சோசலிசம்’ என்னும் ஸ்ராலினிச பாணி அதிகாரத்துவத்தின் வெகுஜன ஸ்டாலினிச கட்சிகள் சிதைக்கப்பட்டு மதிப்பிழந்து போயுள்ளன. சோவியத் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்தது. மரபார்ந்த முதலாளித்துவ கட்சிகளில் இருந்து பிரித்தறிய முடியாதவகையில் சமூக ஜனநாயகக் கட்சிகள், சோசலிசத்தை ஸ்தாபிப்பது ஒருபுறம் இருக்க, முதலாளித்துவ சீர்திருத்தத்திற்கான செயற்பட்டியலைக் கூட முன்னெடுக்கவில்லை. ஸ்பெயினில் பொடெமோஸ் அல்லது கிரீஸில் சிரிசா, இலத்தீன் அமெரிக்காவில் இளஞ்சிவப்பு அலை போன்ற அமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக, நிகழ்வுகளால் மதிப்பிழந்து போயுள்ளன. வர்க்கப் போராட்டமோ அல்லது சமூகப் புரட்சியோ அவசியமில்லாத சமாதானம் மற்றும் செழிப்புக்கான ஒரு “மூன்றாவது பாதை”யின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக, கோர்பின் போன்ற கையாலாகாத மோசடிக்காரர்களாகவோ அல்லது பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயர் போன்ற வஞ்சகமான அரசியல் குற்றவாளிகளாகவோ அம்பலமாகின்றனர்.

நான்காம் அகிலமானது ஒரு வரலாற்றுக் கட்சியாகும். இது முதலாளித்துவத்தின் மரண ஓலச் சகாப்தத்தில் ஒரு அவசியமான பணிக்காக நிறுவப்பட்டது - அதாவது உலக சோசலிசப் புரட்சியின் மூலம் முதலாளித்துவ ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நிறுவப்பட்டதாகும். சோசலிசத்திற்கான போராட்டமானது மார்க்சும் ஏங்கெல்சும் ஆரம்பத்தில் முன்கணித்திருந்ததைக் காட்டிலும் மிகவும் சிக்கலானதாகவும் நீண்டதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், வரலாறு குறித்த சடவாதக் கருத்தாக்கத்தால் வெளிக்கொணரப்பட்ட சமூக வளர்ச்சி விதிகள் மற்றும் மூலதனத்தில் (Das Kapital) பகுப்பாய்வு செய்யப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள் ஆகியவைகள் அகற்றப்படவில்லை. 1917 அக்டோபரில் தொடங்கிய உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தம் இன்னும் முடிவடையவில்லை. 

புறநிலை நிகழ்வுகள், சமூகத்தின் முதன்மை புரட்சிகரச் சக்தியாக இருந்து வரும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவத்திற்கு எதிராக மேலும் நனவு மிக்க போராட்டத்திற்கும், அதன் விளைவாக, 21ஆம் நூற்றாண்டின் மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கியும் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

Loading