மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் குறித்து இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் மௌனம் காக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போலியான மற்றும் வரம்பு கடந்த தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எவ்வாறாயினும், ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரின் தீவிரமடைந்து வரும் ஆபத்து குறித்து அவர்கள் முழு, மயான அமைதியைக் கடைப்பிடிக்கின்றனர்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, (பின்வரிசையில் இடது பக்கம்), மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன (வலது), 2023 இல். [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

உலகப் போரின் அச்சுறுத்தல் மிகவும் நிச்சயமானது. பாசிச இஸ்ரேலிய ஆட்சி, வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகளின் முழு ஆதரவுடன், இப்போது காசாவில் பாலஸ்தீனியர்களை இடைவிடாமல் படுகொலை செய்வதை மேற்குக் கரைக்கு விரிவுபடுத்தி, முழு மத்திய கிழக்கையும் போருக்குள் மூழ்கடிக்கும் வகையில், ஈரானுடன் போரை தொடுக்க அச்சுறுத்தி வருகிறது.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், இப்போது அதன் மூன்றாவது ஆண்டிற்குள் நுழைகிறது. உக்ரேனின் படையெடுப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் வழங்கப்பட்ட நீண்ட தூர ஏவுகனைகள் ரஷ்ய எல்லைக்குள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் நேட்டோ துருப்புக்களை நேரடியாக நிலைநிறுத்துவது பற்றிய மேம்பட்ட கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. இந்த அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நேரடி மோதல் நடக்கக்கூடிய வாய்ப்பை புறக்கணிக்க முடியாது.

ஆசியாவில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதன்மையான நோக்கம் தனது பிரதான போட்டியாளராகக் கருதும் சீனாவை அடிபணியச் செய்வதாகும். சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இராணுவத்தை கட்டியெழுப்புவதும் கூட்டணிகளை வலுப்படுத்துவதும் வேகமாகத் தொடர்கின்ற நிலையில், தாய்வான் மற்றும் தென்சீனக் கடலில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டல்கள், பெய்ஜிங்கை பதிலடி கொடுக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பாரதூரமான அபிவிருத்திகள் தொடர்பாக இலங்கையின் முதலாளித்துவக் கட்சிகள் மௌனம் சாதிப்பது தற்செயலான சறுக்கல் அல்ல, மாறாக மக்களை இருட்டில் வைத்து அவர்களின் ஏகாதிபத்திய சார்பு கொள்கைகளை மூடிமறைக்கும் திட்டமிட்ட கொள்கையாகும்.

அனைத்து முதலாளித்துவ கட்சி வேட்பாளர்களுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவும், கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில், உலகளாவிய போருக்கு எதிரான போராட்டத்தை மையப் பிரச்சினையாக முன்வைக்கின்றனர். சர்வதேச அளவில் நமது சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, உலகப் போரைத் தடுக்க சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, இலங்கையில் தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டிய போராட்டமானது ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையானது போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது.

அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பிரதான பிராந்திய நட்பு நாடான இந்தியாவின் புவிசார் அரசியல் சூழ்ச்சிகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் அதே நேரம், இலங்கையின் பிரதான கடன் வழங்கும் நாடுகளில் ஒன்றான சீனாவுடன் உறவுகளைப் பேணுவதற்கும் முயற்சிக்கின்றன. ஆனால் சீனாவிற்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பை வாஷிங்டன் தீவிரப்படுத்துவதால், இந்த சமநிலைப்படுத்தும் செயல் பெருகிய முறையில் சாத்தியமற்றதாகி வருகிறது.

விக்கிரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்தவொரு வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினைகளை பற்றியும் குறிப்பிடத் தவறினாலும், அவரும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் வாஷிங்டனுக்கு அடிபணிந்து சேவையாற்றும் நீண்டகாலப் பதிவைக் கொண்டுள்ளனர். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் பெய்ஜிங்கை நோக்கிய நோக்குநிலையின் காரணமாக, அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கும், கொழும்பின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவிற்கு ஆதரவாக மாற்றுவதற்கும், 2015ல் விக்கிரமசிங்க இலங்கையின் ஆளும் உயரடுக்கின் முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு நேரடியாக ஆதரவளித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம், 'இந்தியப் பெருங்கடலில் ஒரு விதிகள் அடிப்படையிலான ஒழுங்கே, இந்து சமுத்திர பிராந்திய மக்களின் நலன்' என்று பிரகடனம் செய்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது அமெரிக்கா அதன் விதிகளை கட்டமைத்துள்ள, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஒழுங்கை குழப்புகிறது. இந்த ஒழுங்கைப் பேணுவதை மையமாகக் கொண்ட வாஷிங்டனின் பிரச்சாரத்தை வெறுமனே மீண்டும் உச்சரிப்பதே 'விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு' என்பதாகும்.

வெளிப்படையாக இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி விஞ்ஞாபனம், “இந்தியா உட்பட பிராந்தியத்தை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையை நிலம், வான் அல்லது கடல்' பரப்பை பயன்படுத்துவதை கட்சி அனுமதிக்காது என்று அறிவிக்கிறது. அமெரிக்கா சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதில் இந்தியா ஒரு முக்கியமான அமெரிக்க மூலோபாய பங்காளியாக இருப்பதால், ஜே.வி.பி. வாஷிங்டனுடன் அணிவகுத்து நிற்கிறது. ஜே.வி.பி. தலைவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகளுடன் மூடிய கதவுகளுக்குள் பல சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

2023 ஒக்டோபர் 19 அன்று ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, (இடதுபுறத்தில் இருந்து) அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரியான மெத்யூ ஹின்சன், தூதுவர் ஜூலி சங், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத். [படம்: X/Twitter @anuradisanayake] [Photo by X/Twitter @anuradisanayake]

வாஷிங்டனின் செழுமை பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த ஆண்டு கடற்படை கப்பல்களை செங்கடலுக்கு அனுப்பியமை, அதன் ஏகாதிபத்திய சார்பு கண்ணோட்டத்தை மிகவும் வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கான கப்பல் போக்குவரத்து மீது நடத்தக்கூடிய தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதே அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் நோக்கமாக இருந்தது.

எதிர்கட்சிகள் எப்படி இதை எதிர்கொண்டன? ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி இந்த ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கை பற்றி வாயை மூடிக் கொண்டிருக்கும் போது, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் பிரேமதாச செங்கடல் நடவடிக்கைக்கான செலவு குறித்து புலம்பினார்.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், அமெரிக்காவுடன் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் (ACSA), மற்றும் படைகள் நிலைநிறுத்தல் ஒப்பந்தம் (SOFA-சோஃபா) ஆகிய இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம், 2007ல் கையெழுத்திடப்பட்டு 2017ல் நீட்டிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. இது, மனிதாபிமான நடவடிக்கைகள், கூட்டுப் பயிற்சிகள் மற்றும் அமைதி காக்கும் பணிகள் என அழைக்கப்படுவன முன்னெடுக்கப்படும் போது, தளவாடங்கள், விநியோகங்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்ள அமெரிக்காவையும் இலங்கையையும் அனுமதிக்கிறது: யதார்த்தத்தில், இது அமெரிக்கா தடையின்றி இலங்கைக்குள் பிரவேசித்து, அதன் இராணுவ வசதிகளைப் பயன்படுத்துவதை அனுமதிப்பதாகும்.

அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு தொழில்நுட்ப தகவல் மையத்தின்படி, சோஃபா உடன்படிக்கைகள் 'பொதுவாக ஒரு வெளிநாட்டில் அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் செயல்படும் கட்டமைப்பை, அதாவது ஒரு நாட்டில் இருக்கும் போது அமெரிக்க சிப்பாய்களுக்கு, வெளிநாட்டு சட்ட அதிகாரங்களுடன் தொடர்புபட்ட உள்நாட்டு சட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்ற விடயங்களை ஸ்தாபிக்கின்றன.'

1995 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் முதலாவது சோஃபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு பல்வேறு 'சலுகைகள், சிறப்பு விலக்குரிமை மற்றும் சட்ட விலக்களிப்புடன்' கூட்டிய புதிய சோஃபா உடன்படிக்கையில் கையெழுத்திட அமெரிக்கா 2018 முதல் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

அமெரிக்க மற்றும் இந்திய இராணுவத்துடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளுடன் அமெரிக்க மற்றும் இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடனான இருதரப்பு சந்திப்புகளும், இலங்கையில் வழக்கமான நிகழ்வுகளாகும். இந்த வருடம் அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அங்கு சென்று, விக்கிரமசிங்கவுடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலைத்தீவுகள் மற்றும் மொரிஷியஸை உள்ளடக்கிய கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டனர். உண்மையில் இது ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். கொழும்பில் இருந்தபோது, ​​பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் வடக்கின் அரசியல் கட்சிகளுடனும் மத்திய பெருந்தோட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர்களுடனும் தோவல் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற ஏகாதிபத்திய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் போன்று இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகுக்குப் பின்னால் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன் அவர்களின் வர்க்க நலன்களுடன் நேரடியாக முரண்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் ஆதரவை கண்டிப்பதுடன் எதிர்ப்பதோடு, தொழிலாள வர்க்கமும் அதைக் கண்டித்து எதிர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அனுபவங்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பெரும் மரபுகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் போது, ​​இலங்கையானது இந்தியப் பெருங்கடலில் அதன் பிரதான மூலோபாய அமைவிடத்தின் காரணமாக, நேச நாடுகளின் தென்-கிழக்கு ஆசியக் கட்டளையகத்தின் தலைமையகமாக மாறியது.

(அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட) இலங்கையில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை (BLPI) உருவாக்கி, போரை எதிர்த்ததுடன் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்திய துணைக் கண்டம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடினர். உயர்மட்ட பி.எல்.பீ.ஐ. தலைவர்களை சிறையில் அடைத்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பதிலடி கொடுத்திருந்தாலும், வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் இந்தப் பெரும் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்கினர்.

இன்றைய இந்திய துணைக்கண்டத்தின் அனைத்து முதலாளித்துவ கட்சிகளதும் ஆரம்பகாலத் தலைவர்களான பூர்வீக முதலாளித்துவவாதிகள் எனப்படுவோர், தங்கள் காலனித்துவ எஜமானர்களுக்கு முன்னால் மண்டியிட்டு ஏகாதிபத்திய போரை ஆதரித்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகின் மீது போரின் சுமையைத் திணிக்க உதவினர். ட்ரொட்ஸ்கிஸ்டுகள், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் இந்த அடியாட்களையும் ஸ்ராலினிஸ்டுகளதும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களதும் துரோகத்தையும் அம்பலப்படுத்த போராடினர்.

இன்று இலங்கை முதலாளித்துவம் சர்வதேச மூலதனத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் முற்றிலும் அடிபணிந்து சேவை செய்கின்றது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவுடன், ஆளும் வர்க்கம் இந்த கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. அதே நபர்கள்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் திட்ட நிரலுடன், தொழிலாளர்களை இருட்டில் வைத்து, மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை தியாகம் செய்ய தயாராக உள்ளனர்.

இந்த மாபெரும் வரலாற்று மரபுகளை நினைவுகூர்ந்துகொண்டு, சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணையுமாறு, இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். மூன்றாம் உலகப் போரையும், அணு குண்டு வெடிப்பையும் தடுப்பதற்கான ஒரே வழி இதுதான்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்:

கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவை ஒப்பந்தம் மற்றும் சோஃபா போன்ற அமெரிக்காவுடனான அனைத்து இரகசிய ஒப்பந்தங்களையும் வெளியீடு செய்!

ஏகாதிபத்திய சக்திகளுடனும், இந்தியா போன்ற பிற நாடுகளுடனும் கைச்சாத்திட்டுள்ள அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்!

சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள்!

இந்தக் கோரிக்கைகள், சோசலிச சமத்துவக் கட்சியும் இம்மாதத் தேர்தலில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பாணி விஜேசிறிவர்தனவும் முன்னெடுக்கும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அத்தியாவசிய கூறுகளாகும்.

Loading