சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது காங்கிரஸிற்கு வழங்கிய ஆரம்ப அறிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது காங்கிரஸில், தேசியத் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப உரையை இங்கே பிரசுரிக்கின்றோம். “2024 அமெரிக்கத் தேர்தல்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்மற்றும் போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!ஆகிய இரண்டு தீர்மானங்களை இந்தக் காங்கிரஸ் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

[Photo: WSWS]

இந்தக் காங்கிரஸைத் தொடங்குகையில், நவம்பர் 28, 2023 அன்று 73வது வயதில் இறந்த எங்கள் கட்சியின் நிறுவக உறுப்பினரான தோழர் ஹெலன் ஹால்யார்ட் (Helen Halyard) நினைவாக நாம் இத்தருணத்தில் அஞ்சலி செலுத்துவது பொருத்தமானதாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் (Socialist Equality Party - SEP) முன்னோடி அமைப்பான தொழிலாளர் கழகத்தின் (Workers League) வரலாற்றுடன் ஒருவர் பரிச்சயம் கொண்டிருந்தால், அரை நூற்றாண்டுக்கும் மேலான தோழர் ஹெலனின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பிரிவின் பங்களிப்பில், ஒரு காங்கிரஸ் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளாதது இதுவே முதல் முறையாகும்.

ஹெலன் ஹால்யார்ட் [Photo: WSWS]

கட்சியில் 52 ஆண்டுகள் நீண்டகால உறுப்பினராக ஹெலன் செயலாற்றியிருக்கிறார். அதில் பல ஆண்டுகள், கட்சியில் ஒரு தலைமைப் பதவியை அவர் வகித்துள்ளார். இவர் 1973 முதல் இறக்கும் வரை அமெரிக்கப் பிரிவின் தேசியக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். 1976 முதல் 2008 வரை, ஹெலன் துணைத் தேசியச் செயலாளர் பதவியை வகித்திருக்கிறார். 1974 இலும் மற்றும் 1976 இலும், ஹெலன் ஒரு அமெரிக்க காங்கிரஸ் வேட்பாளராக தொழிலாளர் கழகத்தை (Workers League -WL) பிரதிநிதித்துவப்படுத்தினார். 1984 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1992 இல், ஹெலன் தொழிலாளர் கழகத்தின் அமெரிக்க ஜனாதிபதிக்கான வேட்பாளராக போட்டியிட்டார்.

தொழிலாளர் கழகம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வரலாற்றில் மட்டுமல்ல, மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றிலும் ஹெலன் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். அவரது பங்களிப்பானது நமது உலகக் கட்சியின் அடித்தளங்களில் பொதிந்துள்ளது. ஹெலன் இப்போது நம்முடன் உயிருடன் இல்லை என்றாலும், அவர் கட்சிக்கு அளித்த பங்களிப்புகள் அனைத்தும் உயிர்வாழ்கின்றன.

நான்காம் அகிலம் ஒரு வரலாற்றுக் கட்சியாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவுகட்டுவதற்கும், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிப்பதற்கும் அவசியமான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் ஒரு போராட்டத்தில், அதன் காரியாளர்கள் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியானது, அதாவது “மனிதன் தேவை என்ற நிலையிலிருந்து சுதந்திரம் என்ற நிலைக்கு உயர்வது” என்பது மனிதகுலத்தின் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையானது. இந்த இலக்கை அடைய பெரும் முயற்சியும் நீண்டகால அர்ப்பணிப்பையும் கோருகிறது. ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதுபோல், “இதைவிட மிகப் பெரிய பணி இப்பூமியில் முன்பு ஒருபோதும் இருந்ததில்லை. இதற்காக நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.” மேலும் அவர் தொடர்ந்து கீழ்வருமாறு கூறியதாவது:

நமது கட்சியானது நம் ஒவ்வொருவரையும் முழுமையாகவும் முற்றிலுமாகவும் அர்ப்பணிக்குமாறு கோருகிறது. தனிப்பட்ட நலன்கள் மற்றும் அடையாளங்களை மட்டுமே பிரதானமாகக் கருதுபவர்கள் வெற்று வெளியில் தங்கள் தனிப்பட்ட தனித்துவத்தைத் தேடியோடட்டும். ஒரு புரட்சியாளரைப் பொறுத்தவரை, தன்னை முழுமையாகக் கட்சிக்கு அர்ப்பணிப்பது என்பது தன்னைக் கண்டறிவதைக் குறிக்கிறது.

ஹெலன் மற்றும் வாடிம் ரோகோவின் (Vadim Rogovin) [Photo: WSWS]

தோழர் ஹெலன் சோசலிசத்திற்கான போராட்டத்தில் காரியாளர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளார். நமது உலக இயக்கத்தின் காரியாளர்கள் ஒரு பரந்த கூட்டு வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இந்தக் காங்கிரஸில் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) பிரதிநிதிகளின் ஒரு பாகமாக கலந்து கொண்டவர்களில் மிகவும் வயதான பிரதிநிதியாக தோழர் பார்பரா சுலோட்டர் (Barbara Slaughter) இருக்கிறார். இவர் தற்போதுதான் தனது 96 வயதைக் கடந்திருக்கும் நிலையில், தனது சுயசரிதையின் வரைவை எழுதி முடித்திருக்கிறார். தோழர் பார்பரா, அக்டோபர் புரட்சிக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர், 1927 இல் பிறந்தார், அதன் பின் நடந்த அதிர்வுகளில் ஒன்றாக மே 1926 ஆண்டு பிரிட்டிஷ் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடந்திருந்தது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தர்ப்பவாதக் கொள்கைகளால் எளிதாக வழிநடத்தப்பட்ட தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவத் தலைமையால் அந்த வரலாற்று வேலைநிறுத்தப் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது, 1930களில், பார்பராவின் ஆரம்ப கால வாழ்க்கையில், தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகள் கடுமையான வறுமையை அனுபவிக்க நேரிட்டது.

தோழர் பார்பரா இரண்டாம் உலகப் போரின்போது, சோசலிசத்திற்கான போராட்டத்தில் தன்னை முதலில் அர்ப்பணித்துக் கொண்டார். 1944 செப்டம்பரில் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, அவர் மாணவர் தொழிலாளர் கூட்டமைப்பில் (Student Labour Federation) இணைந்தார். இக்கூட்டமைப்பு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கட்டுப்பாட்டில் இருந்தது. இது 80 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

பார்பரா சுலோட்டர் [Photo: WSWS]

பார்பரா பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் பத்தாண்டுகள் உறுப்பினராக இருந்தார். 1956 பிப்ரவரியில் அப்போதைய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நிகிதா குருஷ்சேவ் அவரது “இரகசிய உரையில்” ஸ்ராலினின் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து 1956 அக்டோபர், நவம்பரில் ஸ்ராலினிச-எதிர்ப்பு ஹங்கேரிய புரட்சியை கிரெம்ளின் இரத்தம் தோய்ந்த முறையில் ஒடுக்கியது. இந்நிகழ்வுகள், பார்பராவை பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முறித்துக் கொண்டு, பின்னர் விரைவில் 1959ல் சோசலிச தொழிலாளர் கழகத்தை (Socialist Labour League - SLL) நிறுவிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். 1973 இல், மத்தியவாத மற்றும் பப்லோவாத அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சோசலிச தொழிலாளர் கழகம், தொழிலாளர் புரட்சிக் கட்சியாக (Workers Revolutionary Party - WRP) தன்னை “உருமாற்றிக் கொண்டது”.

1982க்கும் 1984க்கும் இடையில் ஜெரி ஹீலியின் மார்க்சிசத்தின் மீதான அகநிலை கருத்துவாத திரித்தல் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இன் அரசியல் சந்தர்ப்பவாதம் மீது தொழிலாளர் கழகம் செய்த விமர்சனங்களானது, பிரிட்டிஷ் பகுதியின் சாமானிய உறுப்பினர்களிடமிருந்து மூடிமறைக்கப்பட்டன. ஆனால், 1985 இலையுதிர் காலத்தில் தொழிலாளர் கழகத்தின் ஆவணங்கள் முதன்முறையாகக் கிடைக்கத் தொடங்கியபோதும், தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் வெடித்தெழும்பிய நெருக்கடியின்போதும், பார்பரா நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் கூட்டுச் சேர்ந்திருந்த மரபுவழி ட்ரொட்ஸ்கிச போக்கை ஆதரித்தார். கடந்த 40 ஆண்டுகளாக, தொடர்ந்து இன்றுவரை, தோழர் பார்பரா நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவின் தலைமையில் ஒரு இன்றியமையாத பாத்திரம் வகித்துவருகிறார்.

நமது காங்கிரஸிற்கான பிரிட்டிஷ் பிரதிநிதியான மற்றொரு உறுப்பினர் தோழர் விக்கி ஷோர்ட் (Vicky Short) கலந்துகொண்டுள்ளார். கடந்த வாரம் அவரது 90வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஸ்பெயினில் புரட்சி வெடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1934ம் ஆண்டு, ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் அவர் பிறந்தார். ஸ்ராலினிசத்தால் புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்டதன் துயரகரமான விளைவாக, பிராங்கோவின் கீழ் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருந்தது, இது அவர் சிறுமியாக இருந்தபோது நிகழ்ந்தது என்றாலும் அது விக்கியின் அறிவுசார் மற்றும் அரசியல் வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவர் 1959 இல் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார்.

விக்கி ஷோர்ட் [Photo: WSWS]

அவரது தந்தை, ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலில் செயலூக்கத்துடன் இருந்தபோதிலும், விக்கி ட்ரொட்ஸ்கிசத்தால் ஈர்க்கப்பட்டு 1967 இல் சோசலிச தொழிலாளர் கழகத்தில் (SLL) சேர்ந்தார். 1985 இல், தோழர் விக்கி, பார்பராவைப் போலவே, ஹீலி (Healy), பண்டா (Banda) மற்றும் சுலோட்டரின் (Slaughter) பப்லோவாத தேசிய சந்தர்ப்பவாத கன்னைகளுக்கு எதிராகச் சோசலிச சர்வதேசியவாதம் மற்றும் நிரந்தரப் புரட்சியை அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டமாகப் பாதுகாத்த டேவ் ஹைலண்ட் (Dave Hyland) தலைமையிலான தொழிலாளர் புரட்சிக் கட்சியில் (WRP) இருந்த ட்ரொட்ஸ்கிச போக்கை ஆதரித்தார்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் அமெரிக்கப் பிரிவின் மூத்த உறுப்பினர்களின் செயல்பாடுகள் இப்போது 65 ஆண்டுகளை கொண்டிருக்கின்றன. உலக சோசலிச வலைத் தளத்தை (wsws) சாதாரணமாக வாசிப்பதன் மூலம் நீங்கள் அனைவரும் அறிந்தவாறு, தோழர் ஃப்ரெட் மஜேலிஸ் (Fred Mazelis) தனது 83 வயதில், உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும் மிகச் சிறந்த சில கட்டுரைகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார். கடந்த மாதத்தில், அவர் ஜேர்மன் இடதுசாரி இசையமைப்பாளர் ஹான்ஸ் ஐஸ்லர் (Hanns Eisler) தொடர்பான இரண்டு அற்புதமான கட்டுரைகளையும், ஆறு நாட்களுக்கு முன்னர்தான், பிரெஞ்சு நாவலாசிரியர் எமில் ஸோலாவின் (Émile Zola) வாழ்க்கை குறித்து ஒரு திறனாய்வையும் எழுதியுள்ளார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும் அதனுடைய அமெரிக்கப் பிரிவிலும் ஃப்ரெட் ஒரு வரலாற்று ஆளுமையாளராக இருக்கிறார். ஃப்ரெட் மே 1941 இல் பிறந்தார். அவரது குடும்பத்தின் கலாச்சார மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை தீர்மானித்த வரலாற்று நிகழ்வுகள் உக்ரேனில் நிகழ்ந்தன. 1918 மற்றும் 1921 க்கு இடையில் சுமார் 200,000 உக்ரேனிய யூதர்கள் படுகொலை செய்யப்படுவதில் போய் முடிந்த சைமன் பெட்லியூராவின் (Symon Petliura) போல்ஷிவிக்-விரோத ஆட்சியால் நடத்தப்பட்ட கொலைகார படுகொலைகளிலிருந்து தப்பிய அவரது பாட்டியும் தந்தையும் அமெரிக்காவிற்கு அகதிகளாக வந்திருந்தனர். ஃப்ரெட்டின் தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தாக்கள் 1919 இன் முற்பகுதியில் ஒரு இனப்படுகொலையில் கொல்லப்பட்டனர். இப்போது கியேவிலுள்ள (Kiev) பாசிசவாத அரசாங்கத்தால் அப்போதைய ஆட்சி பெருமைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவிற்குள், அவரது பெற்றோர் — கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாக இல்லாவிட்டாலும் — ஸ்டாலினிசத்தால் அரசியல்ரீதியாகச் செல்வாக்குச் செலுத்தப்பட்ட ஒரு சமூக சூழலுக்குள் வாழ்ந்து வந்தனர்.

1950 களில் ஃப்ரெட் தனது இளம் வயதிலும் பதின்ம காலத்திலும், பனிப்போர் கம்யூனிச-விரோதத்தின் பிற்போக்குத்தனமான சூழலை ஃப்ரெட் அனுபவித்துள்ளார்: அதாவது மெக்கார்த்திய வேட்டைகள் (McCarthyite witch-hunts), எங்கும் பரவலான தடைப் பட்டியல் மற்றும் ஜூலியஸ் (Julius) மற்றும் எதெல் ரோசன்பேர்க் (Ethel Rosenberg) ஆகியோருக்கு மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஸ்டாலினிசம் மற்றும் தீவிர இடதுகளின் சூழலுக்குள், குருஷ்சேவின் இரகசிய உரையையும் மற்றும் ஹங்கேரிய புரட்சியின் தாக்கத்தையும் ஃப்ரெட் அனுபவமாக பெற்றுக்கொண்டார். ஃப்ரெட் ஒரு ஆர்வமிக்க வாசகராக இருந்தார், இறுதியில் அனைத்துலகக் குழுவுடன் இணைந்திருந்த சோசலிச தொழிலாளர் கட்சியின் (Socialist Workers Party - SWP) செல்வாக்கின் கீழ் வளர்ச்சியடைந்துகொண்டிருந்த இளைஞர் இயக்கத்துடன் அப்போது அவர் தொடர்பு கொண்டார்.

ட்ரொட்ஸ்கிசத்தைக் கைவிட்டு கம்யூனிச-விரோத AFL-CIO அதிகாரத்துவத்திற்கு ஒரு முன்னணி அரசியல் ஆலோசகராக ஆகியிருந்த மக்ஸ் சாக்ட்மனிடம் (Max Shachtman) இருந்து முறித்துக் கொண்ட ரிம் வொல்ஃபோர்த் (Tim Wohlforth) சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) இளைஞர் பணிகளின் தலைவராக இருந்தார். ஃப்ரெட் முதன்முதலில் வொல்ஃபோர்த்தையும் மற்றொரு இளம் ட்ரொட்ஸ்கிஸ்டான டானி பிரீமானையும் (Danny Freeman) 1958 இல் சந்தித்தார். ஃப்ரெட் இளைஞர் இயக்கத்தின் பணிகளில், ஒரு முக்கியமானவராகப் பங்காற்றத் தொடங்கினார், அது 1960ல் ஒரு தேசிய அமைப்பாக நிறுவப்பட்டபோது, இளம் சோசலிசக் கூட்டணி (Young Socialist Alliance - YSA) என்ற அமைப்பாக அறியப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நேரத்தில், சோசலிச தொழிலாளர் கட்சியானது பப்லோவாதத்திற்கு எதிரான 1953 ஆண்டு போராட்டத்தில் அது போராடிய கோட்பாடுகளை மறுதலிக்கின்ற நிகழ்ச்சிப்போக்கில் ஏற்கனவே இருந்துகொண்டிருந்தது. ஜோசப் ஹான்சனின் (Joseph Hansen) தலைமையின் கீழ், சோசலிச தொழிலாளர் கட்சியானது பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் ஒரு மறுஐக்கியத்திற்காகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சோசலிச தொழிலாளர் கட்சியின் திருத்தல்வாத நோக்குநிலை குறித்து சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) செய்த விமர்சனங்களுக்குத் தனது ஆதரவை அறிவித்திருந்த வொல்ஃபோர்த், YSA இன் தலைமையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சோசலிச அரசியலுடன் முந்தைய தொடர்புகள் இல்லாத ஒரு மாணவர் குழு வந்தது, அவர்கள் மர்மமான முறையில் மின்னசோட்டாவில் (Minnesota) உள்ள கார்லேடன் கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். 1963 இல் பப்லோவாதிகளுடனான மறுஐக்கியத்தை எதிர்த்த சோசலிச தொழிலாளர் கட்சி இன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு-ஆதரவு சிறுபான்மையின் பாகமாக ஃப்ரெட் இருந்தார். 1964 செப்டம்பரில், பப்லோவாத அகிலத்துடன் இணைந்திருந்த இலங்கை லங்கா சம சமாஜக் கட்சியானது (LSSP) பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைவது குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்தவேண்டும் எனக் கோரியதற்காக ஃப்ரெட், வொல்ஃபோர்த் மற்றும் ICFI ஆதரவு குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஃப்ரெட் மஜேலிஸ் [Photo: WSWS]

ஃப்ரெட் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் (ACFI) ஒரு நிறுவக உறுப்பினரானார். 1966 ஏப்ரலில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது காங்கிரஸில் அதைப் பிரதிநிதித்துவமும் செய்தார். நவம்பர் 1966 இல், அவர் தொழிலாளர் கழகத்தின் ஒரு இணை-நிறுவனராக இருந்தார். வொல்ஃபோர்த்தின் வளர்ச்சியடைந்த சந்தர்ப்பவாத மற்றும் கொள்கையற்ற நடத்தையானது, தொழிலாளர் கழகம் மற்றும் அனைத்துலகக் குழுவின் பாதுகாப்பு மீதான ஒரு பொறுப்பற்ற மீறலிலும் மற்றும் கட்சியிலிருந்து அவர் விட்டோடியதன் மூலமும் நிலைமை உச்சத்தை அடைந்த போது, ஃப்ரெட் தேசிய செயலாளர் பொறுப்பை ஏற்றார். அவர் 1974 இலையுதிர் காலத்திலிருந்து ஜனவரி 1976 வரை அந்தப் பொறுப்பை வகித்துள்ளார்.

அடுத்த 45 ஆண்டுகளுக்கு, அவர் தேசியக் குழுவின் ஒரு உறுப்பினராகத் தொழிலாளர் கழகம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியில் (SEP) தொடர்ந்து ஒரு முன்னணி பாத்திரம் வகித்துள்ளார், தேசியக் குழுவிலிருந்து 2014 இல் அவர் ஓய்வு பெற்றார். 1984 பிப்ரவரியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் தொழிலாளர் கழகத்தின் ஒரு பிரதிநிதியாக தோழர் ஃப்ரெட் இருந்தார், அனைத்துலகக் குழுக் கூட்டத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) பப்லோவாத அரசியல் குறித்த விரிவான விமர்சனங்களை நான் முன்வைத்தேன். தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களால் சுமத்தப்பட்ட கோட்பாடற்ற மற்றும் அவதூறான கண்டனங்களுக்கு எதிராக ஃப்ரெட் உறுதியான குரலில் என்னை அப்போது பாதுகாத்தார்.

அனைத்துலகக் குழுவின் பணியானது, 20 ஆம் நூற்றாண்டின் மூன்றில் இரண்டு பங்கையும் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியையும் கொண்ட கூட்டுத் தோழர்களையும் மற்றும் கூட்டு அரசியல் அனுபவத்தையும் கொண்டவர்களால் வழிநடத்தப்படுகிறது. தோழர் பார்பரா 1920 களிலும், தோழர் விக்கி 1930 களிலும், தோழர் ஃப்ரெட் 1940 களிலும் பிறந்தனர். நான் சார்ந்துள்ள கட்சித் தலைவர்களின் தலைமுறையானது 1940 களின் பிற்பகுதியிலும் 1950 களின் ஆரம்பத்திலும் பிறந்தவர்கள். எமது அரசியல் வளர்ச்சியானது இரண்டாம் உலகப் போரின் நீடித்த இருண்ட நிழலின் கீழும் மற்றும் 1960களின் பாரிய அரசியல் தீவிரமயப்படலின் கீழும் நிகழ்ந்துள்ளது. 1970 கள் மற்றும் 1980 களின் ஆரம்பத்தில் பிறந்த சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் இருந்தாலும் —இந்த மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானது அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் கலாச்சார பிற்போக்குத்தனத்தின் சூழ்நிலையைப் பிரதிபலிக்கிறது— கணிசமான எண்ணிக்கையிலான இளம் தலைவர்கள் 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் ஆரம்பத்திலும் பிறந்தவர்களாவர். இந்தக் காங்கிரஸில், 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் பிறந்த, ஏற்கனவே கட்சியின் பணிகளில் முக்கிய பாத்திரங்களை வகித்து வரும் தோழர்களும் உள்ளனர்.

நமது கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும் இளைய உறுப்பினர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்கள் இடைவெளி உள்ளது என்ற அசாதாரண உண்மையை நாம் எதிர்கொள்கிறோம். ட்ரொட்ஸ்கி துன்புறுத்தப்பட்டபோதிலும், சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில், மூத்த தோழர் பார்பரா பிறந்தார். நமது இளம் தோழர்கள் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் பிறந்தவர்கள்.

இந்தக் காங்கிரஸில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் வாழ்க்கை இவ்வளவு பரந்த வரலாற்றை உள்ளடக்கியதாக இருப்பதன் முக்கியத்துவம் என்ன? மேலும், மூத்த தோழர்கள் கடந்து வந்த அரசியல் அனுபவங்கள் நமது இளைய தோழர்களின் அரசியல் பணிக்கு மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றதா? இது நான்காம் அகிலத்தின் இன்றியமையாத தன்மையை எடுத்துக்காட்டுகிறது. உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தமான ஒரு ஒட்டுமொத்த வரலாற்று சகாப்தத்தின் பிரச்சினைகளின் மீதே அதன் இருப்பும் பணியும் குவிந்துள்ளது என்ற அர்த்தத்தில் இது ஒரு “வரலாற்றுக் கட்சியாகும்”. தோழர்கள் பார்பரா, விக்கி, ஃப்ரெட் மற்றும் இப்போது எழுபதுகளில் இருக்கும், என்னையும் சேர்த்து, எதிர்கொள்ளும் அடிப்படை அரசியல் பிரச்சினைகள், இப்போது முப்பது, இருபதுகளின் முற்பகுதியிலும் மற்றும் இளம் பருவத்தில் இருக்கும் தோழர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவே இருக்கின்றன.

[Photo: WSWS]

பார்பரா பிறந்து ஒரு வருடத்திற்கு சற்று மேலாக இருக்கும்போது, ட்ரொட்ஸ்கி சுருக்கமாக மார்க்சிச முன்னோக்கை இவ்வாறு வகுத்திருந்தார் :

தேசிய வரம்புகளுக்குள் சோசலிசப் புரட்சியை நிறைவு செய்வது என்பது எண்ணிப் பார்க்க முடியாததாகும். முதலாளித்துவச் சமூகத்தின் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, அதனால் உருவாக்கப்பட்ட உற்பத்திச் சக்திகள் தேசிய அரசின் கட்டமைப்புடன் இனிமேல் சமரசம் செய்துகொள்ள முடியாது என்பது யதார்த்தமாக இருக்கிறது. இதிலிருந்து ஒருபுறம், ஏகாதிபத்தியப் போர்களும், மறுபுறம், ஒரு முதலாளித்துவ ஐரோப்பிய ஐக்கிய அரசுகளின் கற்பனாவாதமும் பின்தொடர்கின்றன. சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்குகிறது, அது சர்வதேச அரங்கில் கட்டவிழ்கிறது, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது வார்த்தையின் ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது; நமது ஒட்டுமொத்த பூமியிலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது முழுமையடைகிறது. [நிரந்தரப் புரட்சி, அத்தியாயம் 10: “நிரந்தரப் புரட்சி என்றால் என்ன?“]

கடந்த நூற்றாண்டு அதன் வரலாற்றுப் பணிகளை நிறைவு செய்யாமல் முடிந்தது. நாம் ஏற்கனவே எழுதியது போல, அது முடிவுறாத நூற்றாண்டு ஆகும். நடைமுறையில் அதனால் தீர்க்க முடியாத உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளால் முன்நிறுத்தப்பட்ட பிரச்சினைகளை அது 21ம் நூற்றாண்டுக்கு விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை நீண்ட காலத்திற்கு தள்ளிப் போட முடியாது. துல்லியமாக 110 ஆண்டுகளுக்கு முன்பாக, 1914 ஆகஸ்ட் 4 அன்று, முதலாம் உலகப் போர் வெடிப்புடன் தொடங்கிய வரலாற்றுச் சகாப்தத்தின் மிக முன்னேறிய மற்றும் கடைசிக் கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். ஆனால், ஒரு எச்சரிக்கை செய்யப்பட்டாக வேண்டும்: அதாவது முதலாளித்துவத்தின் மரண ஓல நிகழ்ச்சிப்போக்கு என்றென்றும் நீடிக்க முடியாது மேலும் நீடிக்காது. நாம் ஏற்கனவே ஒரு மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளோம், அது நிறுத்தப்படாவிட்டால் சந்தேகத்திற்கு இடமின்றி அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கு கொண்டு செல்லும். முதலாளித்துவமானது மனித நாகரீகத்தின் அழிவில் போய் முடியும் முன் அது தூக்கியெறியப்பட்டு சோசலிசத்தால் பிரதியீடு செய்யப்பட வேண்டும். இப்போதைய புறநிலை நிலைமையானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் இந்தக் காங்கிரஸின் பணிகளுக்கு மிகப்பெரும் அவசரத்தன்மையை அளிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியானது (SEP) எந்த வரலாற்று இலக்கை நிறைவேற்றத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்பது அதன் வேலைத்திட்டத்தால் வரையறுக்கப்படுகிறது. 2008 ஆகஸ்டில் நடந்த அதன் நிறுவக காங்கிரஸில், சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசியவாத அடித்தளங்கள் என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த ஆவணமானது சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் வரலாற்றை விளக்கியுள்ளது. இந்த நிறுவக காங்கிரஸ் ஆவணம் குறித்த ஒரு விரிவான விவாதத்திற்கு பல நாட்களை அதற்காக அர்ப்பணித்திருந்தது. இந்த ஆவணத்தில் அடங்கியுள்ள 255 எண்ணிக்கை கொண்ட பத்திகள் அனைத்தும் காங்கிரஸில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் ஒருமனதான வாக்கெடுப்பில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்டன. கோட்பாட்டு அறிக்கை என்ற மற்றொரு ஆவணத்தையும் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. 40 எண்ணிக்கை கொண்ட பத்திகளில் ஒவ்வொன்றும் விரிவாக விவாதிக்கப்பட்டு பிரதிநிதிகளால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டன.

கோட்பாட்டு அறிக்கை [Photo: WSWS]

இந்த இரண்டு ஆவணங்களும், “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டும் மற்றும் அதன் ஒற்றுமையுடனும்” ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பாக சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாறு வேரூன்றியுள்ள அரசியல் அடையாளத்தைத் தெளிவாக உருவாக்கியுள்ளன. விரைவான மற்றும் தற்காலிக வெற்றியைப் பின்தொடர்வதிலும், கோட்பாடுகளைக் கைவிட்டு அப்பட்டமான நடைமுறைவாத பரிசீலனைகளுக்கு தங்களை தகவமைத்துக் கொள்ளும் அத்தனை சந்தர்ப்பவாத அமைப்புகளின் குணாம்சமான தொலைநோக்குப் பார்வை இன்மையும் மற்றும் பொறுமையின்மையையும் எதிர்த்து, கோட்பாட்டு அறிக்கையானது இவ்வாறு அறிவிக்கிறது:

நனவான அரசியல் போராட்டத்திற்குள் பெருந்திரளான மக்கள் பலவந்தமாக நுழைவதை குறிக்கும் சோசலிசப் புரட்சியானது, உலக வரலாற்றில் மனிதனின் சமூக ஒழுங்கமைப்பின் வடிவத்தின் மாபெரும் மற்றும் மிகவும் முற்போக்கான மாற்றத்தை —அதாவது வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டதும், மனிதர்களை மற்ற மனிதர்கள் சுரண்டும் சமூகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையும் — முன்னறிவிக்கிறது. ஒரு ஒட்டுமொத்த வரலாற்று சகாப்தத்தின் பணியே இந்தளவுக்குப் பிரம்மாண்டமான ஒரு மாற்றமாகும். [பக்கம் 1, பத்தி 1]

நான்காம் அகிலத்தின் எதிரிகளைப் பொறுத்தவரை, கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் குறித்த அக்கறையே ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மிகப் பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. ஒரு பிரிட்டிஷ் கல்வியாளரான ஜோன் இ. கெல்லி (John E.Kelly) சமீபத்தில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார், இரண்டுமே ரூட்லெட்ஜ் (Routledge) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன, அவற்றில் அவர் ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டனம் செய்திருக்கிறார். அதில் சமகால ட்ரொட்ஸ்கிசம் (Contemporary Trotskyism) என்ற தலைப்பில் முதலாவது புத்தகம் 2018 இல் வெளியிடப்பட்டது. இரண்டாவது, ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம் (The Twilight of Trotskyism), கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ரூட்லெட்ஜ் போன்ற ஒரு பிரதான பதிப்பகத்தால், அதன் வரலாற்றின் “அந்திம நேரத்தில்” மறைந்துகொண்டிருக்கும் ஒரு பொருத்தமற்ற இயக்கத்தின் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு புத்தகங்களை வெளியிடுவதற்கு ஐந்து ஆண்டு இடைவெளிக்குள் கணிசமான ஆதார வளங்களை செலவிட ஏன் முடிவு செய்தது என்று ஒருவர் ஆச்சரியப்படலாம்.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த (இப்போதும் இருக்கலாம்) கெல்லி, ட்ரொட்ஸ்கிசத்தின் முக்கிய குறைபாடு இதுதான் என்று வலியுறுத்துகிறார்.

வர்க்கச் சுரண்டல், வர்க்கப் போராட்டம், ஒரு முன்னணிப்படை கட்சியைக் கட்டியெழுப்புதல் மற்றும் புரட்சிகர மற்றும் சீர்திருத்தவாத அரசியலுக்கு இடையிலான போராட்டம் ஆகியவற்றை அது முன்னிலைப்படுத்துகிறது. அரசியல் நடவடிக்கை குறித்த ட்ரொட்ஸ்கிச மொழியானது, வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு ஆவணங்களில், எப்போதும் அருவமான பாத்திரம் வகிக்கும் தொழிலாள வர்க்கம் அல்லது வெகுஜனங்களை தவிர்க்கவியலாமல் எப்போதும் மையமாகக் கொண்டுள்ளது. அவ்வப்போது, சரியாக வரையறுக்கப்படாத குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரையும் சேர்த்துக் கொள்கிறது. [சமகால ட்ரொட்ஸ்கிசம், பக். 237]

கெல்லியைப் பொறுத்த வரையில், தொழிலாள வர்க்கம் என்பது ஒரு “அருவமான பாத்திரம் வகிப்பது” ஆகும். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் புறக்கணிக்கின்ற அல்லது போதுமான கவனம் செலுத்தாத மிகவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளாக இருப்பது,”பாலினம், பாலியல் நோக்குநிலை மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறையின் பிற வடிவங்களால்...வடிவமைக்கப்படுவதாக இருக்கின்றன” . [பக். 237] ஒரு விஞ்ஞானபூர்வ சடவாத நிலைப்பாட்டிலிருந்து, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்படும் சமூக-பொருளாதார உறவுகள் குறித்த விரிவான பகுப்பாய்வுக்கு துல்லியமான சமூக-பொருளாதார உள்ளடக்கம் இல்லாத அருவமான சமூக வகைப்பாடுகளை எதிர் நிலைப்பாட்டில் வைக்கிறார் கெல்லி.

மார்க்சிச மரபியத்தின் மீதான அதன் அர்ப்பணிப்பின் விளைவாக:

ட்ரொட்ஸ்கிச இயக்கமானது அரசியல் தோல்வியில் ஈடிணையற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாற்றில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒருபோதும் ஒரு புரட்சிக்குத் தலைமை தாங்கியதில்லை, ஒரு தேசியத் தேர்தலை வென்றதில்லை அல்லது ஒரு நீடித்த, வெகுஜன அரசியல் கட்சியைக் கட்டியெழுப்பவில்லை (1950களில் இலங்கை லங்கா சமசமாஜக் கட்சி விதிவிலக்காக இருந்தது). [ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம், பக். xi]

கெல்லி தன்னுடைய கடுமையான விமர்சனத்தைத் தொடரும் வகையில் இவ்வாறு வலியுறுத்துகிறார்:

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் முயற்சி செய்தும் எங்கும் நடைமுறைப்படுத்தப்படாத ட்ரொட்ஸ்கிச தலைமையிலான புரட்சிகர நிகழ்வானது, தீவிர அரசியலிலிருந்து அரசியல் ஆற்றலையும் வளங்களையும் திசைதிருப்பி வீணடிக்கும் சோகமான மற்றும் ஆபத்தான தவறான வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. [ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம், பக். XIII]

கெல்லியின் கூற்றுப்படி, ட்ரொட்ஸ்கிச குழுக்கள் அனைத்திலும் மோசமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும் (ICFI), அவர் இவ்வாறு எழுதுகிறார்:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஆரம்பத்தில் 1953 இல் உருவாக்கப்பட்டபோதிலும், ஒரு அநாகரீக மற்றும் திமிர்பிடித்த தனிநபரான அமெரிக்க செயல்பாட்டாளரான டேவிட் நோர்த்தின் தலைமையின் கீழ், 1985 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) உள்ளே ஏற்பட்ட உடைவிலிருந்து மீண்டும் எழுந்தது. நோர்த் மற்றும் அவரது சகாக்களைப் பொறுத்த வரையில், “ட்ரொட்ஸ்கிசம் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மார்க்சிசம்” என்பதும், ட்ரொட்ஸ்கிச பிரபஞ்சத்திற்குள்ளாக, ஒரேயொரு உண்மையான ட்ரொட்ஸ்கிச கட்சி மட்டுமே உள்ளது. [ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம், பக். 96]

கெல்லி, அவரது குற்றச்சாட்டை நிரூபிக்க, ஜனவரி 3, 2019 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் பதிவிடப்பட்ட புத்தாண்டு அறிக்கையிலிருந்து பின்வரும் பத்தியை மேற்கோள் காட்டுகிறார், அதில் குறிப்பிடப்பட்டதாவது:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுதான் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரே புரட்சிகரக் கட்சி என்பதையும், உண்மையான மார்க்சிசத்தின் ஒரே பிரதிநிதி என்பதையும் தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அது நிறுவிக்காட்டியுள்ளது. 1938 இல் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட சர்வதேசக் கட்சியின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்வதாக நம்பத்தகுந்த விதத்தில் கூறக்கூடிய ஒரு அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு வெளியே இந்த உலகத்தில் வேறு எதுவுமில்லை. [இது முதலில் உலக சோசலிச வலைத் தளத்தில் பின்வரும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது: “சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்“]

திரு.கெல்லிக்கு விரிவாக விடையளிப்பதற்கு இது நேரமும் இடமும் அல்ல. ஆனால் இரண்டு புள்ளிகள் கூறப்பட வேண்டும். ஒரு சோசலிசப் புரட்சிக்குத் தலைமை கொடுப்பதில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தோல்வியுற்றதை ஏளனத்துடன் நிராகரிக்கும் அதேவேளையில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைத் தனிமைப்படுத்தி அழிக்கவும் முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாக்க, வெகுஜன ஸ்டாலினிச, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளால் அரசுடன் கூட்டுச் சேர்ந்து எடுக்கப்படும் கொலைகார வன்முறை தொடர்பான எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளைக் கெல்லி புறக்கணிக்கிறார். ட்ரொட்ஸ்கிச இயக்கமானது அதன் புரட்சிகரப் பணியைச் சிறந்த ஆய்வக நிலைமைகளின் கீழ் நடத்திக் கொண்டிருந்ததாகக் கெல்லி பாசாங்கு செய்கிறார்.

இரண்டாவது புள்ளியில், உண்மையாகவே ஒரு கேள்வியாக இருப்பது இதுதான்: கெல்லி “தீவிரமானது” என்று குறிப்பிடும் புரட்சிகரமற்ற அரசியலில் ஈடுபட்டுள்ள அமைப்புகளும் அவற்றின் தலைவர்களும் அடைந்த பெரிய அரசியல் வெற்றிகள் தான் என்ன? 1980களில் தாம் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்ததாக திரு. கெல்லி தனது வாசகர்களுக்குத் தெரிவிக்கிறார்.1920 களில் இருந்து 1991 இல் சோவியத் ஒன்றியம் பேரழிவுகரமாகக் கலைக்கப்படும் வரையில் கிரெம்ளினில் ஸ்டாலினிச ஆட்சியால் நடத்தப்பட்ட ஒவ்வொரு குற்றத்திலும் காட்டிக்கொடுப்பிலும் உடந்தையாக இருந்த இந்தக் கட்சியின் பெருமளவான மற்றும் நீடித்த சாதனைகள் தான் என்ன?

தொழிற் கட்சியைப் (Labour Party) பொறுத்த வரையில், அது உருவாக்கப்பட்டு 118 ஆண்டுகளுக்குப் பின்னர், அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு ஈவிரக்கமற்ற கருவியாக உள்ளது, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து விரைவாக வந்த ஆண்டுகளில் தொழிற் கட்சி அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களைக் கூட அகற்றுவதற்கு அர்ப்பணித்துக் கொண்ட வலதுசாரிப் போர் வெறியர்களின் ஒரு குழுவால் தலைமை தாங்கப்படுகிறது. போலி-இடது, மார்க்சிச-விரோத மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத அரசியலின் சமகால நடைமுறையாளர்களின் கையாலாகாத்தனத்தின் உருவகமாக விளங்கும் அரசியல் திறனற்ற ஜெர்மி கோர்பினின் ஒரு அர்ப்பணிப்புள்ள சீடர்தான் திரு. கெல்லி என்று ஒருவர் அனுமானிக்க முடியும். பெருவாரியான மக்கள் ஆதரவுடன் தொழிற் கட்சியின் தலைமைக்குள் நுழைந்த கோர்பின், அதிகாரத்தை மீண்டும் பிளேயரிச (Blairite) வலதுசாரிக்கு திருப்பித் தருவதற்கு முன்சென்றார். பிரிட்டனுக்கு வெளியே, இதேபோன்று அரசியல் திவால் நிலைமைக்கு உள்ளான உதாரணங்களாக கிரேக்கத்தில் சிரிசா (Syriza) மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் (Podemos) இருக்கின்றன.

அனைத்துலகக் குழுவின் தலைமையில், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டமானது புறநிலை நிலைமை மற்றும் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் தர்க்கத்துடன் அணிசேர்ந்திருப்பது தான் அதன் மாபெரும் பலமாகும். எத்தனை பெரிய இடர்பாடுகள் இருந்தாலும், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டமானது அமெரிக்காவிற்குள்ளும் உலகளவிலும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படையாக முன்னிறுத்துகிறது.

இந்த எட்டாவது காங்கிரஸானது முதலாளித்துவ அமைப்புமுறையின் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியானது (SEP) இந்தத் தேர்தலில் தலையிட்டுப் பல மாநிலங்களில் வாக்குச்சீட்டில் இடம்பெறும் தகுதியைக் கோருகிறது. இந்தத் தேர்தலில் இரண்டு அடிப்படைப் பிரச்சினைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன: அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகப் போரை நோக்கித் தீவிரமாக விரிவடைதல் மற்றும் அமெரிக்காவிற்குள் ஜனநாயகத்தின் உடைவு ஆகியவைகளாகும்.

காங்கிரஸ் பிரதிநிதிகள் , இந்த இரண்டு முக்கியமான மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாட்டைச் சுருக்கமாக விளக்கும் ஒரு விரிவான தீர்மானத்தைப் பெற்றுள்ளனர். உண்மையில் இத்தீர்மானங்கள் கடந்த பத்தாண்டுகளில் சோசலிச சமத்துவக் கட்சியால் அபிவிருத்தி செய்யப்பட்ட பகுப்பாய்வுகளைச் சுருக்கமாகக் கூறுவதோடு, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட பல அறிக்கைகளின் கருப்பொருளாக இருந்து வருகின்றது. தோழர்கள் ஜோ கிஷோர் (Joe Kishore) மற்றும் ஆண்ட்ரே டேமன் (Andre Damon) அவர்களது அறிக்கைகளில், அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்புக்குக் கட்சியின் விடையிறுப்பாக வரலாற்று அபிவிருத்தியை மீளாய்வு செய்கிறார்கள்.

ரோசா லுக்செம்பேர்க் [Photo: WSWS]

எவ்வாறிருப்பினும், தேர்தல் பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தில் போருக்கு எதிரான கட்சியின் பிரச்சாரத்தின் அடிப்படை அரசியல் உள்ளடக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் அவர்களின் அறிக்கைகளுக்கு முன்னுரை அளிக்க நான் விரும்புகிறேன். இறுதியில் போராக வெடிக்கவிருந்த புவிசார் அரசியல் பதட்ட தீவிரப்பாட்டின் பின்புலத்தில், 1911 ஆம் ஆண்டில், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியானது ஒரு முக்கியமான தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ரோசா லுக்செம்பேர்க் இவ்வாறு எழுதினார்:

இதுவரை, நமது கட்சியின் பெருமைக்குரியதும், உறுதியான அறிவியல் அடிப்படையுமான விஷயம் என்னவென்றால், நமது வேலைத்திட்டத்தின் பொதுவான நிலைப்பாடுகள் மட்டுமல்லாமல், நமது அன்றாட நடைமுறைக் கொள்கையின் முழக்கங்கள் கூட வெறுமனே விரும்பத்தக்கதாக இங்குமங்குமாகச் சேகரித்து உருவாக்கப்பட்டவை அல்ல. மாறாக, எல்லா விஷயங்களிலும், சமூக வளர்ச்சியின் போக்குகள் பற்றிய நமது அறிவை நம்பியிருந்தோம், மேலும் இந்த வளர்ச்சியின் புறநிலை வரைகோடுகளை நமது நிலைப்பாட்டிற்கான அடிப்படையாக ஆக்கினோம். இதுவரை, நமக்குத் தீர்மானிக்கும் காரணியாக இருந்தது, அரசுக்குள் உள்ள சக்திகளின் உறவு நிலையின் அடிப்படையில் நமது கோரிக்கைகளைச் செயல்படுத்தும் சாத்தியக்கூறு அல்ல, மாறாக சமூக வளர்ச்சியின் போக்குகளின் அடிப்படையில் அவ்வாறு செய்யும் சாத்தியக்கூறே ஆகும். …

உலகக் கொள்கையும், அதற்கு சேவை செய்யும் நிலம் மற்றும் கடல் சார்ந்த இராணுவவாதமும், போர் அல்லது அமைதிக் காலங்களில், சர்வதேச முரண்பாடுகளை வளர்த்துத் தீர்ப்பதற்கான குறிப்பான முதலாளித்துவ வழிமுறையைத் தவிர வேறொன்றுமில்லை. முதலாளித்துவம் மற்றும் உலகச் சந்தையின் மேலதிக வளர்ச்சியுடன், இந்தப் பகைமைகள் உள்நாட்டு வர்க்க முரண்பாடுகளுடன் சேர்ந்து, அளவிட முடியாதவாறு அதிகரிக்கின்றன, அவைகள் சகிக்க முடியாதவையாக மாறிச் சமூகப் புரட்சியைக் கொண்டு வருகின்றன. வர்க்கப் பகைமைகளை மட்டுப்படுத்துவதிலும், மழுங்கடிப்பதிலும், முதலாளித்துவத்தின் பொருளாதார அராஜகத்தைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறிலும் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே, இந்தச் சர்வதேச மோதல்களை எப்படியாவது தளர்த்தப்படலாம், குறைக்கப்படலாம் மற்றும் துடைத்தெறியப்படலாம் என்று நம்ப முடியும். முதலாளித்துவ அரசுகளின் சர்வதேச பகைமைகள் வர்க்கப் பகைமைகளின் விரிவாக்கமே அன்றி வேறில்லை, உலக-அரசியல் அராஜகம் என்பது முதலாளித்துவத்தின் அராஜக உற்பத்தி முறையின் மறுபக்கமே அன்றி வேறில்லை. இரண்டும் ஒன்றாக வளர்ந்து ஒன்றாக வெல்லப்பட மட்டுமே முடியும். எனவே “கொஞ்சம் ஒழுங்கும் அமைதியும்” சாத்தியமில்லை; அது உலகக் கொள்கையைப் பொறுத்த வரையில், முதலாளித்துவ உலகச் சந்தையைப் பொறுத்த வரையில் ஒரு குட்டி முதலாளித்துவக் கற்பனாவாதமேயாகும். நெருக்கடிகளை மட்டுப்படுத்துவது அல்லது ஆயுத தளவாடங்களை வரம்புக்குட்படுத்துவது குறித்தும் இதுவே பொருந்துகிறது. [அமைதி கற்பனாவாதங்கள், “ரோசா லுக்சம்பேர்க் எழுதியது, ஏகாதிபத்தியத்தைக் கண்டறிதலில்: முதலாம் உலகப் போருக்கு சமூக ஜனநாயகம் [“Peace Utopias,” by Rosa Luxemburg, in Discovering Imperialism: Social Democracy to World War), ரிச்சர்ட் பி. டே (Richard B. Day) மற்றும் டானியல் கெய்டோவால் (Daniel Gaido) மொழிபெயர்க்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது, சிகாகோ: ஹேமார்க்கெட் புக்ஸ் (Haymarket Books ), 2012, பக். 448-49]

113 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டுகையில், நாம் வெறுமனே பழைய உண்மைகளை மீண்டும் கூறவில்லை. அவைகள் உண்மையில் “பழைய உண்மைகளாக” இருக்கலாம், ஆனால் இந்த “பழைய உண்மைகள்” தற்போதைய சூழலில் புதிய மற்றும் ஆழமான சமகால பொருத்தத்தைப் பெறுகின்றன. ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய போரைத் தீவிரப்படுத்துவதிலும், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு ஒரே நேரத்தில் ஆதரவளிப்பதிலும், சீனாவுடனான மோதலைத் தொடர்ந்து அதிகரிப்பதிலும் பைடென் நிர்வாகத்தின் கொள்கைகளில், ஈவிரக்கமற்ற தன்மையைக் குறிப்பிட வேண்டியதே இல்லை, மலைப்பூட்டும் அளவிற்கு பொறுப்பற்ற தன்மை உள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், பொறுப்பற்ற தன்மை மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை இரண்டுமே தேசிய-அரசு அமைப்புமுறையின் இடைத்தொடர்பு, உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் பூகோளத் தன்மை, மற்றும் அமெரிக்க பெருநிறுவன-நிதியியல் உயரடுக்குகள் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு எதிரான அனைத்து சவால்களையும் முறியடிப்பதற்கான பெரும்பிரயத்தன முயற்சிகளானது, உயிர்வாழ்வதற்கான அவசியத்தில் வேரூன்றிய பெரும்பிரயத்தனத்திலிருந்து எழுகின்ற புறநிலை முரண்பாடுகளில் வேரூன்றி இருக்கின்றன.

டேவிட் நோர்த் [Photo: WSWS]

1987 செப்டம்பரில், பல வாரங்களுக்கு முன்னர் அனைத்துலகக் குழுவின் நான்காவது நிறைபேரவையில் (Plenum) நடந்த ஒரு விவாதத்தின் அடிப்படையில், தொழிலாளர் கழகத்தின் (Workers League) கோடை முகாமில் முன்வைக்கப்பட்ட ஆரம்ப அறிக்கையானது, உலக முதலாளித்துவத்தின் பொருளாதார கட்டமைப்பில் குறிப்பிட்ட முக்கியமான முன்னேற்றங்களுக்கு கவனம் செலுத்தப்பட்டது. இவற்றில் முதலாவது:

உலகச் சந்தையின் முன்னொருபோதும் இல்லாத அளவிலான ஒருங்கிணைப்பும் உற்பத்தியின் சர்வதேசமயமாக்கலுமானது, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையே உள்ள அடிப்படை முரண்பாட்டையும், சமூக உற்பத்தி மற்றும் தனியார் உடைமைக்கும் இடையே, வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமான முரண்பாட்டிற்கு இட்டுச் சென்றுள்ளது. அனைத்து தேசியப் பொருளாதாரங்களின் மீதும் உலகப் பொருளாதாரத்தின் முழுமையான மற்றும் செயலூக்கமான மேலாதிக்கமானது, தேசியப் பொருளாதாரங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சவால் செய்யமுடியாத வாழ்வின் உண்மையாக உலகப் பொருளாதாரம் இருக்கிறது. [”நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகள் மீதான அரசியல் அறிக்கை,” டேவிட் நோர்த் நான்காம் அகிலம், ஜனவரி-மார்ச் 1988, தொகுதி 15, எண் 1]

முதலாளித்துவ உற்பத்தியின் இந்த புதிய வளர்ச்சியின் தனித்துவமான அம்சமானது, நாடுகடந்த பன்னாட்டு பெருநிறுவனங்களின் (transnational corporation) தோற்றமாகும். இது பண்ட உற்பத்திக்கான ஒரு சர்வதேசச் செயல்முறையை ஒழுங்கமைத்து ஒருங்கிணைத்துள்ளது. இது பல்தேசிய பெருநிறுவனங்களுக்கு (multi-national corporation) அப்பாற்பட்ட ஒரு வளர்ச்சியாகும், இது ஒரு பெருநிறுவனத்தின் பொருட்களின் உற்பத்திக்கான வசதிகளைப் பல நாடுகளில் பராமரித்து வருகிறது, முக்கியமாக வெளிநாடுகளில் உள்ள தேசிய சந்தைகளில் ஊடுருவதற்கான நோக்கத்திற்காகும். தொழிலாள வர்க்கத்திற்கு இந்த நாடுகடந்த பன்னாட்டு பெருநிறுவனங்களின் அபிவிருத்தியின் நீண்டகால மற்றும் புரட்சிகர தாக்கங்களைக் குறித்து அனைத்துலகக் குழு அங்கீகரித்தது. முதலாவதாக, பிரதானமாகத் தேசிய மூலோபாயங்கள் மற்றும் ஒழுங்கமைப்பை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்ட வடிவங்களின் தகமையை அது கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறது. இரண்டாவதாக, அதேநேரத்தில், உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேசப் போராட்டத்தில் உலகத் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய ஐக்கியத்திற்கான நிலைமைகளை அது அவசியமாக்கியிருப்பதுடன், அதேநேரத்தில் அதை உருவாக்கியுமிருக்கிறது.

அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வானது நீண்டகாலத்திற்கு முன்னரே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாடுகடந்த உற்பத்தியின் இயக்கவியல் மற்றும் அதன் பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் இராணுவத் தலையீட்டு தாக்கங்களை ஆய்வு செய்தமைக்கும், விளக்கியதற்கும் ஒரு பரந்த ஆய்வுத் தொகுதிகள் எம்மிடம் இப்போது உள்ளன. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் மோதலின் மையத்தில் 21 ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தை வகைப்படுத்தும் பூகோள உற்பத்தி வலையமைப்புகள் (networks) மீதான மேலாதிக்கத்திற்கான போராட்டமே உள்ளது என்பது நன்கு அறியப்பட்டதாகும். 21 ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தை குணாம்சப்படுத்தும் பூகோள உற்பத்தி வலையமைப்புகள் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கான ஒரு போராட்டம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடைந்து வரும் மோதலின் இதயத்தானத்தில் உள்ளது என்பது நன்கு உணரப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடிப்படையிலான தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட புரட்சியால் உந்தப்பட்டு, இப்போது “ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உற்பத்தி உலகம்” ஒன்றுள்ளது, இது பொருளாதார நிபுணர் மார்ட்டின் கென்னியால் (Martin Kenney) சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது:

நாம் வாங்கும் பொருட்களானது உதிரிப் பகுதியாக வடிவமைக்கப்பட்ட நாடுகடந்த பயணத்தின் இறுதி விளைவாகும். இப்பொருட்கள் ஒரு பொருளாதாரத்தின் அங்கமாக மட்டுமல்லாமல், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிவாகப் பரவுகின்றன. இவை தொலைதூர மற்றும் அருகிலுள்ள இடங்களை இணைப்பதோடு, அவற்றை ஒருங்கிணைத்து மாற்றியமைக்கின்றன.” [மேற்கோள் : பூகோள உற்பத்தி வலையமைப்புகள்: ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் பொருளாதார வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்குதல், நீல் எம். கோ (Neil M. Coe) மற்றும் ஹென்றி வாய்-சுங் யுங் (Henry Wai-Chung Yeung), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2015, பக். 2]

பூகோள மாற்றம்: உலகப் பொருளாதாரத்தின் மாறும் வரையறைகளை வரைபடமாக்குதல் என்ற தலைப்பில் புதிய பூகோள உற்பத்தி வலையமைப்புகள் பற்றிய ஒரு ஆழமான ஆய்வில், பொருளாதார நிபுணர் பீட்டர் டிக்கன் (Peter Dicken) பின்வருமாறு எழுதுகிறார்

... இருபதாம் நூற்றாண்டின் கடைசி மூன்று தசாப்தங்களில், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் முந்தைய காலகட்டங்களில் இருந்தவற்றிலிருந்து பண்புரீதியில் மிகவும் வேறுபட்ட வழிகளில் அபிவிருத்தி அடைந்ததோடு, தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிகழ்முறையில், நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்திய பல பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றில் அதிகரித்துவரும் சிக்கலான வலையமைப்புகளிலிருந்து பெறப்பட்டவையாக மாறின, அதன் புவியியல் அளவு மிகவும் விரிவானதாக மாறியிருக்கிறது மற்றும் அதன் ஒருங்கிணைப்பு மேலும் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. உண்மையில், பெரும்பாலான பொருட்களின் தயாரிப்புகள் அத்தகைய சிக்கலான வலையமைப்புகளை உருவாக்கியுள்ளன – பொருட்களின் உதிரிப் பகுதிகள் வெவ்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட பின், வேறு எங்காவது இடத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன – அந்த உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மூலத்திற்கான இலட்சினை அடையாளங்களின் (labels) அர்த்தத்தை இழக்கத் தொடங்கின. ஒட்டுமொத்தமாக, இத்தகைய பூகோளமயமாக்கல் பெருமளவில் பலரால் “இயற்கை ஒழுங்கு” என்று பார்க்கப்பட்டது: அதாவது அதிகரித்து வரும் புவியியல் பரவல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையில் செயற்பாட்டு ஒருங்கிணைப்பானது அதிகரிக்கும் இன்றியமையாத மற்றும் தவிர்க்க முடியாத செயல்முறையாக ஆகியிருக்கின்றது . [பக். 1]

செப்டம்பர் 2008 நெருக்கடியானது, கிட்டத்தட்ட சர்வதேச நிதிய அமைப்புமுறையில் பொறிவை ஏற்படுத்தி, பூகோளமயமாக்கலின் முழு நிகழ்ச்சிப்போக்கையும் அச்சுறுத்தியது. ஆனால், பெடரல் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட மிகப் பெரும் மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர், நெருக்கடியின் உண்மையான தாக்கமானது பூகோளரீதியான உற்பத்தி வலையமைப்புகளின் விரிவாக்கத்திற்கான நிதியியல் நிர்பந்தங்களை அதிகரிப்பதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் தவிர்க்க முடியாத விளைவானது புவிசார் அரசியல் மோதல்களில் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறது. தோழர் காப்ரியல் பிளாக் (Gabriel Black) எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டுள்ளது, அது நாடுகடந்த உற்பத்தியின் (transnational production) செயல்பாட்டு அடித்தளமாக இருக்கும் தொழில்நுட்பங்களின் உள்ளடக்கத்தில் முக்கிய கனிமங்கள் மற்றும் உலோகங்களுக்கான போராட்டத்தை விளக்குகிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தின் உற்பத்தி வலையமைப்புகளில் மேலாதிக்கத்திற்கான போராட்டத்திற்கு இன்றியமையாத கனிமங்கள் மற்றும் உலோகங்களைத் தடையின்றி அணுகுவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான போராட்டத்துடன் இணைந்திருக்கிறது.

“இரண்டாம் பனிப்போர்: உள்கட்டமைப்பு, டிஜிட்டல், உற்பத்தி மற்றும் நிதியியல் வலையமைப்புகளில் மையத்தன்மைக்கான அமெரிக்க-சீனப் போட்டி” என்ற தலைப்பில் புவிசார் அரசியல் (Geopolitics) இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவார்ந்த கட்டுரையில், மோதலின் தன்மையும் முக்கியத்துவமும் விளக்கப்படுகிறது:

... அமெரிக்காவும் சீனாவும் வலையமைப்புகளில் (networks) மையத்தன்மையை உருவாக்க முயல்கின்றன, இதன் மூலம் அவைகள் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார சக்தியை முன்னிலைப்படுத்த முடியும். நடைமுறையில், இந்த (1) வலையமைப்புகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதை தீர்மானிக்கும் விளையாட்டின் விதிகளை நிறுவுதல், அவற்றில் யார் பங்கேற்கலாம் மற்றும் இணக்கத்தை உறுதிசெய்தல், (2) வலையமைப்புகளை மறுசீரமைத்தல், அல்லது, வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், (3) மாற்று போட்டி வலையமைப்புகளை உருவாக்குதல் போன்ற பல உத்திகள் மூலம் இவைகள் செய்யப்படுகின்றன. …

வலையமைப்புகளின் மையத்தன்மையை அடைவதும் மேம்படுத்துவதன் மூலமும் - குறிப்பாக முக்கிய முனைகளை இணைப்பதும் கட்டுப்படுத்துவதன் மூலமும் - பங்கேற்பாளர்கள் மூலோபாய உள்ளீட்டு பயனடைதலுக்கான அணுகலைப் பெறலாம், தகவல்களின் சுழற்சியை நிர்வகிக்கலாம், பரந்த உழைப்புப் பிரிவின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்தலாம், தரங்களை நிறுவலாம் மற்றும் போட்டியாளர்களை விலக்கலாம் (அல்லது அவர்கள் ஒரு துணைப் பாத்திர நிலையில் இருப்பதை உறுதி செய்யலாம்), மற்றும் உற்பத்தி வலையமைப்புகளுக்குள் மதிப்பைக் கைப்பற்றலாம். வலையமைப்புகளின் மையத்தன்மை என்பது மூலோபாய அனுகூலம், அதிகாரம் மற்றும் இலாபத்தின் ஒரு ஆதாரமாகும், இது ஒன்றோடொன்று தொடர்புடைய வலையமைப்புகளில் நன்மைகளுக்கு வழிவகுக்கும். [பக். 1094-95]

பூகோளரீதியான உற்பத்தி வலையமைப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வது, சிக்கலானதும் மற்றும் விரிவான ஆய்வும் அதற்குத் தேவைப்படுகிறது. ஆனால், பொருளாதார பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் முன்னேற்றங்களானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளைப் பரந்தளவில் தீவிரப்படுத்தி உள்ளன என்பது ஏற்கனவே தெளிவாக உள்ளது. இது, இராணுவ மோதலை ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரின் புள்ளிக்குத் தீவிரப்படுத்துவதிலோ அல்லது உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தின் அடிப்படையில், சர்வதேச வர்க்கப் போராட்டத்தை அரசியல்ரீதியில் நனவுபூர்வமாக ஐக்கியப்படுத்துவதிலோ போய் முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளதும் பணியானது, உலகப் போரை நோக்கிய போக்கை விட சோசலிசப் புரட்சியை நோக்கிய புறநிலைப் போக்கு மேலோங்கும் வகையில் தொழிலாள வர்க்கத்தில் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவதாக இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1924 இலையுதிர் காலத்தில், ட்ரொட்ஸ்கி அக்டோபரின் படிப்பினைகள் என்ற தலைப்பில் ஒரு துண்டறிக்கையை எழுதினார். 1917ம் ஆண்டின் புரட்சிகரப் போராட்டங்களின் சமயத்தில் போல்ஷிவிக் கட்சி முகம்கொடுத்த இன்றியமையாத பிரச்சினைகளை ஆய்வு செய்வதே அதன் நோக்கமாக இருந்தது. சினோவியேவ் மற்றும் காமனேவ் போன்ற “பழைய போல்ஷிவிக்குகளின்” அரசியல் பிழைகளை அடையாளம் கண்டுகொண்டு, கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் குறித்த அவரது வெளிப்படையான விவாதம், ட்ரொட்ஸ்கியின் அரசியல் எதிரிகளை சீற்றமடையச் செய்தது. ஆனால், ட்ரொட்ஸ்கியின் நோக்கங்கள் கன்னைவாதமாக இருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் வெற்றியை அடைவதற்கு சர்வதேச புரட்சிகர இயக்கத்தின் காரியாளர்களால் உட்கிரகிக்கப்பட வேண்டியிருந்த அக்டோபர் புரட்சியின் இன்றியமையாத படிப்பினைகளை அவர் அடையாளம் கண்டார்.

ஏகாதிபத்திய சகாப்தத்தில், ஜனநாயகத்திற்கான போராட்டமானது சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட முடியாது என்பதே முதல் படிப்பினையாக இருந்தது. “ஜனநாயக கோரிக்கைகளுக்கான” போராட்டமானது, சோசலிசத்திற்கான ஒரு நீண்டகால போராட்டத்தில் ஒரு தனித்துவமான கட்டத்தை உள்ளடக்கியது என்று நம்பியிருந்த போல்ஷிவிக் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு, தவறு என்று நிரூபிக்கப்பட்டது. முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, தொழிலாளர்களின் அரசு அதிகாரத்தை அமைத்து, முதலாளித்துவச் சொத்துக்கள் மீது நேரடித் தாக்குதல் நடத்தி, சோசலிசத்திற்கான மாற்றத்தைத் தொடங்குதலின் பின்னணியில் மட்டுமே முக்கியமான ஜனநாயகக் கோரிக்கைகளை அடைவது மட்டுமே சாத்தியமானது.

அக்டோபரின் படிப்பினைகள் [Photo: WSWS]

இரண்டாவது படிப்பினையானது, ஒரு புரட்சிகர சூழ்நிலை உருவாகுவதற்கு மார்க்சிசக் கட்சியினதும் அதன் காரியாளர்களினதும் பதிலிறுப்பு தொடர்பானது; அதாவது, அரசியல் அதிகாரப் பிரச்சினையானது, நேரடியாக முன்நிற்கும் ஒரு சூழ்நிலையில் புறநிலை மற்றும் அகநிலை காரணிகளின் உறவு தொடர்பானதாகும். 1917 அக்டோபரில் போல்ஷிவிக் கட்சி மேற்கொண்ட வெற்றியின் சாதகமான அனுபவம் மற்றும் 1923 அக்டோபரில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தோற்கடிக்கப்பட்டதன் எதிர்மறை அனுபவம் ஆகியவற்றின் மீது தன்னை அடித்தளமாகக் கொண்டு, ட்ரொட்ஸ்கி, போராட்டத்தின் ஒரு முக்கிய கட்டத்தில், அகநிலைக் காரணியின், அதாவது கட்சியின் நடவடிக்கைகள், பல வாரங்களுக்கு மேல் நீடித்திருக்காத ஒரு கால வரையறைக்குள், அல்லது பல நாட்கள் கூட - பல ஆண்டுகளுக்கும் ஏன் பல தசாப்தங்களுக்கும் கூட புரட்சியின் தலைவிதியை தீர்மானிக்க முடியும். இந்த விடயத்தை முடிந்தவரை அப்பட்டமாக முன்வைத்து, ட்ரொட்ஸ்கி இவ்வாறு எச்சரித்தார்: “தனது சொந்த வர்க்கத்தின் வரலாற்றுக் கடமைகளுடன் அடியெடுத்து வைக்காத கட்சியானது, மற்ற வர்க்கங்களின் மறைமுக கருவியாக ஆகிறது, அல்லது ஆகிவிடும் அபாயத்தில் செயல்படுகிறது.” [இடது எதிர்ப்பினரின் சவால் (1923-25), பக். 261]

1924 ஆண்டு இலையுதிர் காலத்தில், ட்ரொட்ஸ்கி வரைந்த இரண்டு படிப்பினைகளுமே 2024ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் கட்சிக்குத் தீர்மானகரமான முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. எதேச்சாதிகாரம் மற்றும் பாசிசத்தின் வளர்ச்சிக்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் போருக்கு எதிரான போராட்டமும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் அரசியல் கட்டமைப்பிற்குள் மட்டுமே வெற்றிகரமாகத் தொடுக்கப்பட முடியும். மேலும், புறச்சூழலின் கோரிக்கைகளை எதிர்கொள்ளக் கட்சிப் பணியின் மட்டமானது கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்.

அந்தக் கோட்பாடுதான் தொழிலாள வர்க்கத்தில் பணியாற்றுவதற்கான நமது அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. இடைமருவு வேலைத்திட்டம் குறித்த விவாதங்களில் ட்ரொட்ஸ்கி கூறியதைப் போல, அவரால் ஒரு மிக அருமையான வேலைத்திட்டத்தை எழுத முடியும். மிக எளிமையான ஒரு வேலைத்திட்டமானது, எளிதில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. ஆனால், அது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவையாற்றாது. தொழிலாளர்களுக்கு நாம் உண்மையைக் கூற வேண்டும். நமது வேலைத்திட்டம் ஏதாவதொரு தருணத்தில் வெகுஜனங்களிடையே பிரபலமடையக்கூடிய அகநிலை மனநிலைகள் மற்றும் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. எமது வேலைத்திட்டமானது புறநிலை அவசியத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த நேரத்தில் ட்ரொட்ஸ்கி கூறியதைப் போல, தொழிலாளர்கள் எங்களது வேலைத்திட்டத்தை ஏற்கத் தயாராக இல்லை என்றால், அவர்கள் பாசிச வேலைத்திட்டத்தை ஏற்க நிர்ப்பந்திக்கப்படலாம். ஏனெனில், இவைதான் வெளிப்படும் தெரிவுகளாக இருக்கும்.

அத்தகைய நிலைமைக்குள் அமெரிக்கா நுழைந்து கொண்டிருக்கிறது. ஒரு ஒட்டுமொத்த நூற்றாண்டின் சமூகப் புரட்சியினதும் எதிர்ப்புரட்சியினதும் மாபெரும் வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளை தொழிலாள வர்க்கத்திற்கு எடுத்துச் செல்ல நாம் தேர்தல் காலத்தைப் பயன்படுத்துவோம். நமது காலத்தின் மையமான சவால் —தொழிலாள வர்க்கம் இறுதியாக உலகளவில் அதன் வரலாற்றுக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான நனவின் மட்டத்தை அபிவிருத்தி செய்வது— அந்த நோக்கமானது வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நமது அனைத்து பணிகளையும் உந்தித் தள்ளும்.

இந்த அணுகுமுறையைத்தான் நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கடைப்பிடிப்போம். இது, நமது இயக்கத்தின் காரியாளர்களுக்கு முன்னால் ஒரு மாபெரும் சவாலை முன்வைக்கிறது. எமது கட்சியானது புரட்சிகர மார்க்சிசத்தின், சோசலிசத்தின் ஏக பிரதிநிதி என்பது பற்றி நாம் பேசும்போது நாம் வீண் தற்பெருமை பேசவில்லை. இத்தேர்தலில் போட்டியிடும் வேறு எந்த அமைப்பும் தொழிலாள வர்க்கத்தின் முன், பிரமாண்டமான போரின் ஆபத்தை எடுத்துரைக்காது என்பது உண்மை. தற்போது, பாசிசம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் தற்போதைய வடிவங்களின் விரைவான சிதைவால் ஏற்படும் ஆபத்தைப் பற்றிய கேள்வியை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது, மேலும் இக்கேள்வியை நாம் முன்னிலைப்படுத்துகிறோம். வேட்பாளர் கமலா ஹாரிஸிற்குப் (Kamala Harris) பின்னால் போலி இடதுசாரி கூட்டம் ஏற்கனவே திரண்டு வருவதைக் காணலாம்.

எம்மிடம் அப்படி எதுவும் கிடையாது. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியைப் பற்றிய புறநிலையாக, விஞ்ஞானபூர்வமாக அடித்தளமிட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கு நாங்கள் முன்வைப்போம். தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் பணிகளை விளக்குவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உள்ள சிறந்த தட்டுக்களைச் சென்றடைவதற்கும், இப்போது இந்த நாட்டிலும் உலகெங்கிலும் வீசிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் போர்க்குணம் மற்றும் தீவிரமயப்படலுக்கு ஒரு முற்போக்கான, புரட்சிகர வடிகாலை வழங்குவதற்கும், நமது இயக்கத்தின் அனைத்து புத்திஜீவித மற்றும் அரசியல் ஆதார வளங்களையும் நாங்கள் பயன்படுத்துவோம்.

எதிர்காலத்தில் நம்மை எதிர்கொள்ளவிருக்கும் பிரமாண்டமான சவால்களுக்கு நமது கட்சியைத் தயார்படுத்துவதற்கே இந்த காங்கிரஸின் பணிகள் அர்ப்பணிக்கப்படும். இந்தத் தேர்தல் காலத்தை, கட்சியின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கும் தீவிரமான மற்றும் பிரதானமான பணிகளின் காலகட்டமாகக் கருதுகிறோம். இந்த அடித்தளம் தேர்தலின் போது மட்டுமல்லாமல், அதற்குப் பிந்தைய காலத்திலும் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

Loading