வரலாற்றைப் பொய்மைப்படுத்துவதற்கான ஒரு வேலை: எய்டன் பீட்ரி எழுதிய கட்சி எப்பொழுதும் சரியானது: ஜெரி ஹீலி மற்றும் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசத்தின் கூறப்படாத வரலாறு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

தற்போது பிட்ஸ்பேர்க்கில் உள்ள கார்னகி மெலன் கல்வி நிறுவனத்தில் (Carnegie Mellon Institute) விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் எய்டன் பீட்ரி (Aidan Beatty), கட்சி எப்பொழுதும் சரியானது: ஜெரி ஹீலி மற்றும் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசத்தின் கூறப்படாத வரலாறு  (The Party is Always Right: The Untold Story of Gerry Healy and British Trotskyism) என்ற அவரது புத்தகமானது செப்டம்பர் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகமானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்போது, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அதன் விரிவான திறனாய்வை வெளியிடும். ஆனால், ஏற்கனவே ஒரு மதிப்புரைப் பிரதியைப் பெற்று வாசித்த பிறகு, வரலாற்றைப் பொய்மைப்படுத்துவதற்கான முற்றிலும் இழிவான எழுத்தை பீட்ரி எழுதியிருக்கிறார் என்பதை, இந்த இடத்தில் குறிப்பிடுகிறேன்.

பீட்ரியின் இழிவான மற்றும் வெறித்தனமான இந்தத் தொனியானது, இப்புத்தகத்தின் தொடக்க வாக்கியங்களில் இவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது:

இந்தப் புத்தகமானது ஜெரி  ஹீலி என்ற ஒரு சர்வாதிகார மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் ஐரிஷ் நாட்டுக்காரர் பற்றியது. மேலும், அவர் உருவாக்க உதவிய அரசியல் உலகத்தைப் பற்றியதாக இருக்கிறது. இது வன்முறை மற்றும் அவதூறுகள், பாலியல் துஷ்பிரயோகம், வரட்டுக் கோட்பாடு கொண்ட குழு, சதி கோட்பாடுகள், தவறாக வழிநடத்தப்பட்ட பிரபலங்கள் மற்றும் சாத்தியமாக இருக்கக்கூடிய சர்வதேச உளவு மற்றும் கொலை ஆகியவற்றின் ஒரு வரலாறு; இவைகள் அனைத்தின் மையத்தானத்திலும் ஹீலி என்ற ஒரு மனிதர் இருக்கிறார். மிகவும் அசிங்கமான ஒரு தனி நபர்... ஹீலியின் சரீர ரீதியான அசிங்கம் பெரும்பாலும் ஆழத்தின் ஒரு அறிகுறியாகவும், இன்னும் ஆழமான அரசியல் மற்றும் தார்மீக அசிங்கமாவும் வெளிப்பட்டது. [XVI]

இந்தப் புத்தகமானது ஒரு வாழ்க்கை வரலாறு (biography) எழுதுவதற்கு தேவையான எதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இது ஆய்வுக்கு உட்படுபவரின் வாழ்க்கையின் எந்தவொரு வரலாற்றுப் பின்னணியையும் கவனமாக ஆராயப்படாமல் வரலாற்று உள்ளடக்கத்திற்கு வெளியே வைக்கப்படுகிறது. அயர்லாந்தில் பிறந்து உள்நாட்டுப் போரின்போது வளர்ந்த ஹீலி, மேலாதிக்க தேசியவாத சித்தாந்தத்திலிருந்து மார்க்சிச சர்வதேசியவாதத்திற்கு மாறியது ஏன், எப்படி என்பது குறித்து ஆராயப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். நான்காம் அகிலத்தில் ஹீலி அவரது அரை நூற்றாண்டு காலத்தில் பிரிட்டனுக்குள்ளும் சர்வதேச அளவிலும் போராடிய அரசியல் பிரச்சினைகள் மிகவும் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜெரி  ஹீலி, 1964 [Photo: WSWS]

நான்காம் அகிலத்தின் இருப்புக்கான காரணங்கள், ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தின் கீழமைந்திருந்த அரசியல் பிரச்சினைகள், நான்காம் அகிலத்தில் 1953 ஆண்டு நிகழ்ந்த உடைவு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) உருவாக்கத்திற்கு வழிவகுத்த மோதல்கள், அதனைத் தொடர்ந்து 1963 இல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியுடன் (SWP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முறித்துக் கொண்டமை எல்லாம் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தீவிர அரசியல் உள்ளடக்கம் எதுவும் இல்லாமல், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஒரு சில கருத்துகளைத் தவிர, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஹீலி ஒரு முக்கிய ஆளுமையாக எழுந்திருந்தற்கான காரணங்கள் குறித்த எந்தப் பகுப்பாய்வும் இந்தப் புத்தகத்தில் இல்லை. 1985 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளே (WRP - Workers Revolutionary Party) வெடித்துக்கிளம்பிய கட்சி காரியாளர்கள் மீதான ஹீலியின் தீவிர துஷ்பிரயோகம் அம்பலத்திற்கு வந்ததுடன் பொருந்தியவாறு, பேரழிவுகரமான நெருக்கடியின் அரசியல் தோற்றுவாய்கள் மற்றும் அபிவிருத்தி குறித்து அங்கே எந்தவிதமான மறுஆய்வும் செய்யப்படவில்லை.

உண்மையில், பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு பற்றியோ அல்லது நான்காம் அகிலத்தினைப் பற்றியோ எதுவும் தெரியாமல், ஹீலியின் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதுவதற்காக பீட்ரியால் இந்தப் பிரச்சினைகளை விவாதித்து இலகுவாக தெளிவுபடுத்த முடியவில்லை. ஏனெனில் அவர் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார் - அல்லது, இன்னும் துல்லியமாகச் சொன்னால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறியாமையை வியக்கத்தக்க வகையில் ஒப்புக்கொள்வதற்கு நிகரான வகையில், புத்தகத் தொகுதியின் தொடக்கத்தில் உள்ள நன்றி தெரிவிப்புப் பகுதியில் பீட்ரி இவ்வாறு எழுதுகிறார்:

ஜெரி  ஹீலியைப் பற்றி நான் முதலில் எப்போது கேள்விப்பட்டேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான் அவரைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அது ஒரு நீண்ட கட்டுரை இதழியல் பகுதிக்கு வழிவகுக்கும் அல்லது தனித்துவம் வாய்ந்த அறிவார்ந்த கட்டுரைக்கு வழிவகுக்கும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. [IX]

இரண்டு ஆண்டுகளுக்கும் சற்று மேலாக, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எதுவும் தெரியாமல் இருந்த பீட்ரி, ஜெரி  ஹீலி ஒரு அரக்கன் என்ற உறுதியான முடிவுக்கு வந்துள்ளார். எவ்வாறாயினும், பீட்ரி முன்னரே தீர்மானிக்கப்பட்ட இந்த முடிவுடனேயே தொடங்கினார் என்பதும், தனது “ஆய்வுக்கட்டுரையை” உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தரவுகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டதும் வெளிப்படையாக இருக்கிறது. இவ்வாறே, பீட்ரி, ஹீலியின் அரசியலில் எரிச்சலடைந்த மற்றும் அவரது தனிப்பட்ட எதிரிகளை அவரால் கண்டுபிடிக்க முடிந்தவரை தொடர்புகொள்வதன் மூலமும், நேர்காணல் செய்வதன் மூலமும்  தனது புத்தகத்தை உருவாக்கியுள்ளார். ஒரு விரைவான கூகுள் தேடுதலானது, அவருக்கு எதிராக குற்றஞ்சுமத்துவதற்கான சாத்தியமான சாட்சிகளை வழங்கியிருக்கும்.

பீட்ரி இவ்வாறு எழுதுகிறார்: “2022 மற்றும் 2023 முழுவதிலும், SLL [சோசலிச தொழிலாளர் கழகம் - Socialist Labour League] மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) உடனான தொடர்புடைய குழுக்களின் உறுப்பினர்கள், மற்றும் பரவலான இடதுகளின் செயற்பாட்டளர்களுடன் நான் விரிவான நேர்காணல்களை மேற்கொண்டேன்.” [xi] பீட்ரி எதை “வாய்மொழி வரலாறு” என்று அழைக்கிறாரோ, அது தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிரான அமைப்புக்களுடனும் அல்லது நீண்ட காலத்திற்கு முன்பே சோசலிச இயக்கத்தைக் கைவிட்டு, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர்களாக மாறிய அவ்வியக்கத்தின் (WRP)  முன்னாள் உறுப்பினர்களுடன் தொடர்புடைய அவரது உரையாடல் பங்காளர்கள் பலரால் பரப்பப்பட்ட கண்டனங்கள், பொய்கள் மற்றும் அரைகுறை உண்மைகளை நகலெடுத்தல் மற்றும் இடுகையிடுவதை உள்ளடக்கியிருக்கின்றன. 

இருப்பினும், பீட்ரியால் தொடர்பு கொள்ளப்பட்டவர்களில் நானும் இருக்கிறேன். அவர் தனது “நேர்காணல்கள் பற்றிய குறிப்பில்” பின்வருமாறு எழுதுகிறார்:

டேவிட் நோர்த் ஆரம்பத்தில் நேர்காணலில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். ஒரு வார கால தாமதத்திற்குப் பிறகு, அவர் எனக்கு தொடர்ச்சியாக சீற்றமுள்ள மற்றும் கண்டனச் செய்திகளை அனுப்பினார். பின்னர் அவர் ட்விட்டரில் ஒரு பொது இடுகையில் என்னையும் புத்தகத்தையும் கண்டித்தார். [xi]

பீட்ரியுடன் நான் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றங்கள் பற்றிய ஒரு பதிவு உள்ளது. இது அவரது நேர்காணலுக்கான கோரிக்கையை நான் நிராகரித்ததற்கான காரணங்களைத் தெளிவாக்குகின்றன.

ஜனவரி 9, 2022 அன்று, உலக சோசலிச வலைத் தளத்திலுள்ள (wsws.org) தொடர்புகொள்ளும் படிவத்தில் பீட்ரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

வணக்கம், நான் பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு வரலாற்றாசிரியர் மேலும், நான் தற்போது பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாறு தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறேன்.  குறிப்பாக, ஜெரி  ஹீலி மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மீது கவனம் செலுத்துகிறேன். இதற்காக வாய்மொழி நேர்காணல்களை மேற்கொள்ள நான் ஆர்வமாக உள்ளேன், டேவிட் நோர்த்தை என்னுடன் ஒரு நேர்காணலுக்கு அழைக்க விரும்புகிறேன் - அவரிடம் ஏதேனும் தொடர்புத் தகவல் உள்ளதா அல்லது இந்த மின்னஞ்சலை நீங்கள் அவருக்கு அனுப்புவீர்களா? உங்கள் நேரத்திற்கு நன்றி, எய்டன் (Aidan).

அவரது திட்டத்தின் நோக்கங்களைப் பற்றி கூடுதல் தகவல்களைக் கோரி அதே நாளின் பிற்பகுதியில் நான் பதிலளித்தேன்:

அன்புள்ள பேராசிரியர் பீட்ரி,

உங்கள் கடிதம் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொள்வதற்கு முன், உங்கள் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.

இந்தத் திட்டத்தில் நீங்கள் எவ்வளவு காலம் பணியாற்றி வருகிறீர்கள்? உங்கள் ஆராய்ச்சி எதைக் கொண்டிருக்கிறது? தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வரலாறு மற்றும் ஜெரி ஹீலியின் வாழ்க்கைப் போக்குடன் உங்களுக்கு எந்தளவுக்கு அறிமுகம் உள்ளது? நீங்கள் ஏன் என்னை நேர்காணல் செய்ய விரும்புகிறீர்கள்?

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள, டேவிட் நோர்த்

இதற்கு, பீட்ரி ஜனவரி 10, 2022 அன்று பதிலளித்தார்:

அன்புள்ள டேவிட்,

என்னுடன் மீண்டும் தொடர்பு கொண்டதற்கு நன்றி.

தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் வரலாறு குறித்து எனக்கு வலுவான புரிதல் உள்ளது என்று நான் கூறுவேன் (இருப்பினும், அது குறித்து சவால் விடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!). நான் இப்போது சுமார் இரண்டு ஆண்டுகளாக அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் மேலும் அவைகளின் வெளியீடுகள், செய்தித்தாள்கள் மற்றும் அவர்கள் தயாரித்த பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் இரண்டையும் நிறையப் படித்தேன். ஹீலி மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியைப் பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவாதிக்கும் உங்களால் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளையும் நான் படித்திருக்கிறேன். (எடுத்துக்காட்டாக: 1991 இல் அவரைப் பற்றி நீங்கள் எழுதிய துண்டுப் பிரசுரம் மற்றும் நான்காம் அகிலத்தின் பொது வரலாறு).

எனது ஆராய்ச்சியின் இந்தக் கட்டத்தில் நான் இரண்டு தடைகளால் மேற்கொண்டு போகமுடியாத நிலையைத் தொட்டுவிட்டதாக உணர்கிறேன் (உங்களைப் போன்ற ஹீலியை அறிந்த மற்றும்/அல்லது தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் (WRP) பல்வேறு வகையான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை நேர்காணல் செய்வது இதற்கு உதவும் என்று நான் நம்புகிறேன்):

1.    ஹீலியைப் பற்றிப் பிரசுரிக்கப்பட்ட பல படைப்புகளிலிருந்து வெளிப்படும் ஹீலியின் பிம்பத்துடன் நான் உண்மையிலேயே போராடுகிறேன் (அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார், அவர் ஹெகலிய மெய்யியல் குறித்த அரைவேக்காட்டுத்தனமான புரிதல்களுடன் முடிவற்ற விரிவுரைகளை வழங்கிய ஒரு மோசமான மேடைப் பேச்சாளராக இருந்தார்) அவரைக் குறித்து சிலர் இன்னும் வைத்திருக்கும் முரண்பாடான பிம்பத்துடன், அவர் ஒரு உயர்ந்த எண்ணம் கொண்ட மார்க்சிஸ்டாக இருந்துள்ளார் மற்றும் ஒரு புரட்சியானது ஐக்கிய இராச்சியத்தின் (UK) ஒரு மூலையில் உள்ளது என்று தன்னைப் பின்பற்றுபவர்களை நம்ப வைக்கும் ஒரு ஈர்க்கக்கூடிய தலைவராக இருந்தார். உரை மூலங்களிலிருந்து ஹீலியைப் பற்றி நான் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு உண்மையில் ஒரு வரம்பு இருப்பதாகவே தெரிகிறது. எனவே, அவரை உண்மையில் அறிந்தவர்களுடன் நான் பேச முடிந்தால் அது உண்மையில் உதவியாக இருக்கும் என்பதோடு, எதிர்கால புத்தகத்தில் நான் வழங்கக்கூடிய அவரைப் பற்றிய சித்தரிப்பை வெளிப்படுத்த இது எனக்கு உதவும் என்று நம்புகிறேன்.

2.     அவரைச் சுற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் மற்றும் மறுப்புக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவைகள் அனைத்தையும் பற்றி நேரடியான வரலாற்றைச் சொல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஹீலி தனது குழந்தைப் பருவம் குறித்த வரலாறுகளை இட்டுக்கட்டினார் என்பதற்கு நிறைய ஆதாரங்களையும் நான் கண்டுபிடித்துள்ளேன். இந்த வெளிச்சத்தில், நான் உண்மையை புனைகதையில் இருந்து பிரிக்க முயற்சிக்கையில், ஹீலி மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) பற்றி சில தெளிவுபடுத்தும் கேள்விகளை உங்களிடம் கேட்பதில் நான் உண்மையிலேயே ஆர்வமாக இருப்பேன்.

ஹீலியைப் பற்றி எழுதுவதில் எனது பொதுவான இலக்கு, அவரது சோசலிசப் பிரிவின் ஒரு பொதுவான வரலாற்றையும், சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து இன்றைய சோசலிஸ்டுகள் எடுத்துக் கொள்ளக்கூடிய படிப்பினைகளையும் (பிரதானமாக எதிர்மறையான) எழுத முயற்சிப்பதாகும். ஹீலியும் கூட அயர்லாந்தின் ஒரு பகுதியான கால்வேயைச் (Galway) சேர்ந்தவர் என்பதும், அயர்லாந்தின் அந்தப் பகுதியில் இருந்த சோசலிஸ்டுகள் மத்தியில் இப்போதும் அவர் ஒரு விசித்திரமான செல்வாக்கை செலுத்துகிறார் என்பதும் எனக்கு மற்றொரு உந்துதலாக இருந்தது – குறைந்தபட்சம் உலக இடதின் ஒரு பிரிவினரிடையே அவர் செல்வாக்கு செலுத்த முடிந்த ஒரு காலகட்டத்தை அவர் தெளிவாகக் கொண்டிருந்தார். அப்படியிருந்தும் அவரது நடவடிக்கைகள் உண்மையான சோசலிசத்திற்கு முற்றிலும் முரண்பாடாக இருந்தன. இதன் விளைவாக, அவரது வாழ்க்கை வரலாற்றில் எனக்கு குறிப்பிட்ட ஒரு வகை தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது (தொழிலாளர் புரட்சிக் கட்சியை ஆய்வு செய்ய விரும்புவதற்கான எனது நம்பிக்கையுடைய மிகவும் தீவிரமான காரணங்களுடன் சேர்ந்து, அது வெளிப்படையான ஒரு தீவிர உந்துதலாக இல்லை என்றாலும்).

இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஜூம் (Zoom) அல்லது ஸ்கைப் (Skype) மூலம் தொடர்புகொண்டு இதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைவேன். கோவிட்-19 பாதுகாப்பு அனுமதித்தால், இதை நேரில் செய்வதில் நானும் மகிழ்ச்சியடைவேன். என் மனைவியின் குடும்பம் டெட்ராய்டுக்கு வெளியே வாழ்கிறது, எனவே நான் வழமையாக அங்குதான் இருக்கிறேன் (என் புரிதல் என்னவென்றால், நீங்கள் டெட்ராய்டில் வசிக்கிறீர்கள், இல்லையா?).

உங்கள் நேரத்திற்கு நன்றி

எய்டன்

பீட்ரியின் கடிதம் அவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பதாகத் தோன்றியதால், அவருடன் ஒரு நேர்காணலுக்கான சாத்தியக்கூறு குறித்து விவாதிக்க நான் ஒப்புக்கொண்டேன். ஜனவரி 10 அன்று நான் அளித்த பதில்:

அன்புள்ள எய்டன்,

உங்களுடன் குறைந்தபட்சம் ஒரு பூர்வாங்க விவாதத்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன்.

ஜெரி ஹீலி மிகப்பெரும் சிக்கல் வாய்ந்த மற்றும் சிக்கலான அரசியல் ஆளுமை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

1974க்கும் 1985க்கும் இடையில் மைக் பண்டா மற்றும் கிளிஃப் சுலோட்டருடன் மிக நெருக்கமான அரசியல் உறவை நான் கொண்டிருந்ததைப் போலவே, ஹீலியுடனும் எனக்கு மிக நெருக்கமான அரசியல் உறவு இருந்தது. அந்தக் காலகட்டத்தின் பிற்பகுதியில் நான் அடிப்படையான அரசியலை வளர்த்துக் கொண்டேன் மற்றும் அவர்கள் அனைவருடனும் எனக்கிருந்த அரசியல் வேறுபாடுகளைத் தீவிரமாக ஆவணப்படுத்தினேன். இந்த மனிதர்கள் எவர் மீதும் வெறுப்பு ஒருபுறம் இருக்கட்டும், எனினும், தனிப்பட்ட விரோதத்தைக்கூட நான் வளர்த்துக் கொண்டதில்லை. எனது வேறுபாடுகளை மிகக் கூர்மையான வார்த்தைகளில் வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் கூட, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் அனைவரும் ஆற்றிய உண்மையான குறிப்பிடத்தக்க பாத்திரம் பற்றி நான் எப்போதும் கவனத்தில் கொண்டிருந்தேன்.

சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியில் (WRP) அவர்கள் அங்கத்துவம் வகித்த காலகட்டத்தில் ஹீலியைக் குறித்து ஏறத்தாழ அவருடன் ஒருபோதும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தாதவர்களாலும், பின்னர் —ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கைவிட்ட பின்னர்— அவரை ஒரு அரக்கனாகச் சித்தரித்தவர்களாலேயே ஹீலி குறித்து சொல்லப்பட்டவை மற்றும் எழுதப்பட்டவை ஒவ்வொன்றும் இருந்திருக்கின்றன என்பதால் நான் இந்தப் புள்ளிகளைக் குறிப்பிடுகிறேன்.

நீங்கள் ஜூம் அழைப்பை எப்போது செய்ய விரும்புகிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

வாழ்த்துக்களுடன்,

டேவிட்

இதற்கு, பீட்ரி ஜனவரி 11, 2022 அன்று பதிலளித்தார்:

வணக்கம் டேவிட்,

இதை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி. ஒருவருக்கு எதிராக வெறுப்பில் ஈடுபடுவது ஒரு முட்டுச்சந்து என்ற உங்கள் கருத்துக்களை நான் நிச்சயமாகப் பகிர்ந்து கொள்கிறேன் - அவர்களின் அரசியலைத் தீவிரமாக [தொகுப்பது] பகுப்பாய்வு செய்ய முயற்சிப்பதே நான் அதிகம் செய்ய விரும்புவதாகும்.

17 ஆம் திகதி திங்கட்கிழமை எப்போது வேண்டுமானாலும் பேசுவதற்கு நீங்கள் இருப்பீர்களா? அந்த நாள் முழுவதும் நான் இருக்கிறேன், உங்களுக்கு வேலை செய்யும் நேரம் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

எல்லாம் நன்றாக அமையட்டும், எய்டன்

பின்னோக்கிப் பார்த்தால், பீட்ரி தனது உண்மையான நோக்கங்களைக் கலைத்துக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது. எப்படியிருந்தாலும், ஒரு முறையான நேர்காணலுக்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு எனக்குக் கூடுதல் தகவல் தேவைப்பட்டது. அன்றே (ஜனவரி 11) நான் சொன்ன பதில்:

எய்டன்,

அடுத்த வாரம் எனது கால அட்டவணை ஓரளவு நிலையற்றதாக இருக்கிறது. நாளை அல்லது வியாழக்கிழமை உங்களுக்கு நேரம் கிடைக்குமா? நான் சொன்னது போல், இது ஒரு முதற்கட்ட விவாதமாக இருக்கும். இது, உங்கள் ஆராய்ச்சியின் நோக்கத்தைப் பற்றிய சிறந்த புரிதலைத் தரும். எனது உள்ளீடு உங்கள் முயற்சிகளுக்கு மதிப்புள்ளதா என்பதை தீர்மானிக்க இது உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். 

ஹீலி “ஒரு மோசமான மேடைப் பேச்சாளர்” என்று உங்களுக்கு யார் சொன்னது என்று எனக்குத் தெரியாது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தில் செயலூக்கத்துடன் செயல்பட்ட மிகப் பெரிய பொதுமேடை பேச்சாளராக அவர் இருந்தார். அவர் நிச்சயமாகப் பெவனுக்கு (Bevan) சமமானவர், அநேகமாக இன்னும் சிறந்தவர். ஹீலி ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருந்திரளான பார்வையாளர்கள் முன்னிலையில் உரையாற்றியதை நான் பார்த்துள்ளேன். உழைக்கும் வர்க்கத்தின் திரண்டிருந்த பார்வையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வியக்கத்தக்க திறனை அவர் கொண்டிருந்தார். ஒரு சமூக சக்தியாக அவர்களின் வலிமையின் உணர்வை அவர்களுக்கு வழங்கினார். அவர் சொன்னதில் உண்மையான உள்ளடக்கம் இருந்தது.

மெய்யியல் குறித்த அவரது விரிவுரைகள் —குறிப்பாக தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளாக (WRP) (மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் அத்தனை பிரிவுகளிலும்) நெருக்கடி அதிகரித்திருந்த ஆண்டுகளில்— குறிப்பிடத்தக்க தத்துவார்த்த மற்றும் அரசியல் நோக்குநிலை பிறழ்வை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், அவர் சொல்ல வந்தவைகள், அவர் தவறு செய்திருந்தாலும், அவர் வெளிப்படுத்தியது முட்டாள்தனம் அல்ல.

ஹீலி குறித்த ஒரு புத்தகம் பல சிக்கலான அரசியல், தத்துவார்த்த மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகளை எழுப்புகிறது என்பதை வலியுறுத்துவதற்காகவே நான் இந்த புள்ளிகளைக் குறிப்பிடுகிறேன். புரட்சிகர சோசலிச இயக்கத்தில் அவர் ஒரு முக்கிய அரசியல் ஆளுமையாக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக, “நல்ல மனிதர்கள் தங்கள் எலும்புகளுடன் புதைக்கப்படுகிறார்கள்...” அதாவது “நல்ல செயல்கள் பெரும்பாலும் அதைச் செய்பவர்களுடன் புதைக்கப்படுகின்றன.”

கடந்த மே மாதம் கிளிஃப் சுலோட்டரின் நினைவு அஞ்சலிக்காகப் பிரசுரிக்கப்பட்ட அவரது இரங்கல் குறிப்பின் ஆரம்பப் பகுதிகளை நீங்கள் படித்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. அவைகள் 1963 ஆண்டு வரையான அவரது வாழ்க்கையின் வரலாற்றிற்கு கொண்டு செல்கின்றன. இந்த விவரிப்பில் ஹீலி ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகிக்கிறார். அந்த இணைப்பு இதுதான்: https://www.wsws.org/en/articles/2021/08/05/slau-a05.html

அரசியல் வாழ்க்கை வரலாறு குறித்த எனது அணுகுமுறையை இந்த ஆவணத்திலுள்ள உள்ளடக்கமானது உங்களுக்கு உணர்த்த வேண்டும். அரசியல் எதிரிகளாக மாறியவர்களைப் பற்றி நான் எழுதும்போது - அல்லது “குறிப்பாக எப்போது” என்று சொல்ல வேண்டுமானால் கூட புறநிலையாக இருக்க முயற்சிக்கிறேன்.

வாழ்த்துக்களுடன், டேவிட்

WhatsApp வழியாக ஒரு ஆரம்பக் கட்டக் கலந்துரையாடலை திட்டமிடும் நோக்கத்திற்காக பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள் தொடர்ந்தன. இது ஜனவரி 12, 2022 அன்று நடந்தது. இந்த விவாதம் என் அக்கறைகளைத் தணிக்கவில்லை. இதற்கு நேர் எதிரானது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்கள் மற்றும் வேலைத்திட்டம் ஒருபுறம் இருக்கட்டும், மார்க்சிசத்தின் அடித்தளங்களைக் கூட பீட்ரி புரிந்து கொள்ளவில்லை அல்லது அவற்றுடன் பரிச்சயம் கொண்டிருக்கவில்லை என்பது விரைவில் தெளிவாகியது. 1982க்கும் 1985க்கும் இடையில் வளர்ச்சியடைந்திருந்த வேர்க்கர்ஸ் லீக் (Workers League) இற்கும் (நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) இணைந்த அமெரிக்க அமைப்பு) தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும் (WRP) இடையிலான மோதல் சம்பந்தப்பட்டவை உட்பட, அனைத்துலகக் குழுவின் பிரதான வரலாற்று மற்றும் தத்துவார்த்த ஆவணங்கள் எதையும் அவர் படித்திருந்ததற்கான எந்த அறிகுறியும் அவரிடம் இருக்கவில்லை. ஜெரி  ஹீலியின் ஒரு தீவிர அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுதும் நிலையை பீட்ரி அடைவதற்கு முன்னர், அவருக்கு நிறைய தயாரிப்பு வேலைகள் இருக்கின்றன என்பதை முடிந்தவரை பணிவுடன் வலியுறுத்த நான் முயன்றேன்.

ஹீலி ஒரு “மோசமான மேடைப் பேச்சாளர்” என்பது குறித்த பீட்ரியின் வார்த்தைகளால் குறிப்பாக நான் தாக்கப்பட்டேன். ஏனென்றால், YouTube இல் கிடைக்கக்கூடிய ஹீலி பேசும் ஒரு ஒளிப்படத்தை அவர் பார்த்திருக்கவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. அது அவரது சக்திவாய்ந்த பேச்சுத் திறனைத் தெளிவாகக் காட்டுகிறது. எங்கள் விவாதத்தைத் தொடர்ந்து, ஒளிப்படத்தின் இணைப்பை அவருக்கு அனுப்பினேன்.

பீட்ரி எல்லாவற்றிற்கும் மேலாக, விடாப்பிடியாக இருந்தார். ஜனவரி 27, 2022 அன்று அவர் மீண்டும் எழுதினார்:

வணக்கம், டேவிட்-

நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பிப்ரவரியில் எப்போதாவது ஒரு முறையான நேர்காணலுக்கு நீங்கள் இருப்பீர்களா? எய்டன்.

நான் ஜனவரி 31, 2022 அன்று பதிலளித்தேன்:

வணக்கம் எய்டன், பதில் சொல்வதில் தாமதத்திற்கு மன்னிக்கவும். இதற்கான என்னுடைய பதில் ஆம் என்பதாகும். ஆனால், அநேகமாக வருகின்ற மாதத்தின் நடுப்பகுதியளவில்.

பிப்ரவரி 1, 2022 அன்று, பீட்ரி எழுதினார்:

நன்றி, டேவிட்! உங்களுடன் வேலை செய்ய எந்தத் தேதிகள் சாத்தியம் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். சீக்கிரம் பேசலாம்.

நேர்காணல் முன்னோக்கி திட்டமிட்டபடி நகர்ந்திருக்கும், ஆனால் பீட்ரி, பிப்ரவரி 10, 2022 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவின் பெண் உறுப்பினர் ஒருவருடன் தொடர்புகொள்வதற்காக அவரின் தகவலைக் கோரி மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியில் (WRP) 1985 ஏற்பட்ட அவதூறை மையப்படுத்தியே ஒரு புத்தகத்தை எழுதுவது அவரது உண்மையான நோக்கம் என்பதை நான் இப்போது மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டேன். எனவே, நான் பிப்ரவரி 17, 2022 அன்று பீட்ரிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிருந்தேன். அதில் நான் நேர்காணலில் கலந்துகொள்ளும் நிலையில் இல்லை என்று கூறினேன். அதற்கு பீட்ரி இவ்வாறு பதிலளித்தார்:

அறியத் தந்தமைக்கு நன்றி! எதிர்காலத்தில் உங்களுக்கு நேரம் இருந்தால், நான் இன்னும் ஒரு நேர்காணல் செய்ய மகிழ்ச்சியாக இருப்பேன், வாழ்த்துக்கள்!

மார்ச் 19, 2022 அன்று, உக்ரேன் போரின் வரலாற்றுப் பின்னணி குறித்து நான் எழுதிய உலக சோசலிச வலைத்தள அறிக்கையின் இணைப்பைப் பீட்ரிக்கு அனுப்பினேன். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்:

இதை எனக்கு அனுப்பியதற்கு நன்றி. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பீட்ரியிடமிருந்து அடுத்த தகவல் மே 4, 2022 அன்று வந்தது. அதில் அவர் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு அறிக்கையின் இணைப்பு அங்கே இருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நீங்கள் எப்போதாவது சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) அல்லது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) தொடர்புடைய குழுக்களில் ஏதேனும் உறுப்பினராக இருந்திருக்கிறீர்களா?

நீங்கள் 1960கள், 70கள் அல்லது 80களில் பிரிட்டிஷ் இடதில் செயலூக்கத்துடன் இருந்தீர்களா மற்றும் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) அல்லது தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) உடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா?

இந்தக் குழுக்களின் உங்கள் அனுபவங்கள் மற்றும் நினைவுகள் பற்றி ஒரு நேர்காணலைப் பதிவு செய்ய ஆர்வமாக உள்ளீர்களா?

அனைத்து நேர்காணல்களும் மிகுந்த கவனத்துடன் கையாளப்படுவதோடு, எந்த நேர்காணலும் பொதுவெளியில் வெளியிடப்படாமலும், உங்கள் பெயரினைக் குறிப்பிடாமலும் பதிவு செய்ய முடியும்.

இந்த நேர்காணல்கள் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வரலாறு குறித்த ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும்.

தொடர்புக்கு: Aidan Beatty - wrporalhistoryproject@gmail.org

அனைவருக்கும் பீட்ரி விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவனோ அல்லது அவளோ ஹீலி தொடர்பான அனுபவ அழுக்குகளைக் கொண்டிருக்கலாம், அதை அவருடன் விரும்பிப் பகிர்ந்து கொள்ளலாம். பீட்ரி வழங்கும் தகவலின் வகையானது, பீட்ரி விடயங்களைக் கையாள்வதில் “மிகுந்த கவனத்துடன்” இருப்பதாகவும், நேர்காணல் காண்பவர்களின் “பெயர்களைக் குறிப்பிடாது” பதிவு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்ததன் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இந்த விரும்பத்தகாத வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மே 5, 2022 அன்று வாட்ஸ்அப் வழியாகப் பீட்ரிக்கு எழுதினேன்:

இது ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டவர்களின் கூர்மையான அகநிலைவாத மற்றும் அடிப்படையில் கம்யூனிச-எதிர்ப்பு விவரிப்புகளைத் தவிர வேறு எதையும் இது உருவாக்கப் போவதில்லை. வரலாற்றுரீதியாக, இதற்குப் புத்திஜீவிதமான எந்த மதிப்பும் இல்லை.

பீட்ரி சில நிமிடங்களில் இதற்குப் பதிலளித்தார்:

நிச்சயமாக  நான் உங்களுடன் உடன்படவில்லை, ஆனால் நாம் இதை விட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் நேரத்திற்கு நன்றி.

இதற்கு, நான் இவ்வாறு பதிலளித்தேன்:

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) பிளவுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தையும் புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் என்ன பங்களிப்பு செய்தார்கள் என்று பங்கேற்பாளர்களிடம் கேட்பது பயனுள்ளதாகவும், அரசியல்ரீதியாக வெளிப்படுத்துவதைக் குறிப்பிடாமல் அவர்கள் இருப்பதும் மதிப்புக்குரியதாக இருக்கலாம்.

பீட்ரி இதற்கு பதிலளித்தார்:

நல்லது, சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) அல்லது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) அனைத்து எதிர்மறை அம்சங்களுக்கு மத்தியிலும் கூட, மக்கள் என்ன நேர்மறையான விடயங்களை இந்த அமைப்புகளில் அவர்களுடைய காலத்திலிருந்து எடுத்துக் கொண்டார்கள் என்பதில் நான் நிச்சயமாக ஆர்வமாக உள்ளேன். ஒரு நேர்காணல் செய்ய எனது அழைப்புக் கோரிக்கை எப்போதும் திறந்திருக்கும், ஆனால், நான் அதை உங்களிடம் விட்டுவிடுகிறேன்!

இதற்கு நான் பதிலளித்தேன்:

பல்வேறு சிடுமூஞ்சித்தனமான மற்றும் விரக்தியுற்ற மனிதர்களின் அனுபவங்களை மையப்படுத்தி, ஒரு அரசியல் வழிபாட்டு இயக்கமாக ட்ரொட்ஸ்கிசத்தைப் பற்றி இன்னுமொரு விவரிப்பை எழுத நீங்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த வகையான திட்டத்தில் உங்கள் நேரத்தை ஏன் செலவிட விரும்புகிறீர்கள்? நிச்சயமாக, நீங்கள் மட்டுமே பதிலளிக்கக்கூடிய ஒரு கேள்வி இது. ஆனால், அதற்கும் தீவிர அரசியல் மற்றும் புத்திஜீவித வரலாற்றுக்கும் என்ன தொடர்பு என்பதை என்னால் காண முடியவில்லை.

நான் உங்களிடம் முரட்டுத்தனமாகக் கையாள முயற்சிக்கவில்லை. ஆனால், நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்து நீங்கள் ஒரு அக்கறையான ஆய்வை மேற்கொள்ளவில்லை என்பது எங்களது ஆரம்பகட்ட கலந்துரையாடலிருந்து தெளிவாகப் புரிந்துள்ளது. நான்காம் அகிலத்திற்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளும் நிலவிய மோதல்களின் கீழமைந்திருந்த சிக்கலான அரசியல் மற்றும் தத்துவார்த்த பிரச்சினைகள் குறித்து உங்களுக்கு மிகக் குறைந்த புரிதலே இருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் பரந்த சமகால முக்கியத்துவம் வாய்ந்தவையாகும் - எடுத்துக்காட்டாக, ரஷ்யா-உக்ரேன் போரின் பின்னணி மற்றும் காரணங்கள் தொடர்பானதாகும். உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள எனது மே தின உரையைக் கேட்க நீங்கள் நேரம் ஒதுக்கலாம்.

இந்தக் கட்டத்தில், நான் அவருடைய திட்டத்தை அடையாளம் கண்டுகொண்டேன் என்பதை திரு. பீட்ரி புரிந்துகொண்டார். மரியாதை என்ற முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு இதற்குப் பதிலளித்தார்:

நான் இந்த உரையாடலைத் தொடர விரும்பவில்லை, டேவிட். உங்கள் நேரத்திற்கு நன்றி.

மே 5, 2022 அதிகாலையில், பீட்ரிக்கு எனது இறுதிப் பதிலை அனுப்பினேன்:

நீங்கள் தவறான எண்ணத்துடன் என்னைத் தொடர்புகொண்டீர்கள் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

பீட்ரியின் “நேர்காணல்கள் பற்றிய குறிப்பு” இல், ட்விட்டரில் (இப்போது எக்ஸ் (X) நான் பதிவிட்ட ஒரு அறிக்கையை இங்கே பீட்ரி குறிப்பிடுகிறார். பீட்ரி “ஜெரி  ஹீலி மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி பற்றிய எனது (பீட்ரி) வரவிருக்கும் புத்தகத்திற்காக புளூட்டோ பிரஸ் (@PlutoPress) உடன் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்” என்று ஒரு அறிவிப்பைச் செய்திருந்தார். அதில் நான் ஆசிரியரையும் (பீட்ரி) அவரது புத்தகத்தையும் கண்டனம் செய்தேன். நவம்பர் 1, 2022 அன்று பீட்ரியின் அறிவிப்புக்குப் பதிலளிக்கும் விதமாக நவம்பர் 18, 2022 அன்று நான் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தேன், இந்த அறிவிப்பில் அவர் புளூட்டோ பிரஸ் உடனான அவரது ஒப்பந்தத்தின் ஸ்கேன் செய்த பிரதி ஒன்றையும் இணைத்திருந்தார். அந்தத் தேதியில், புத்தகத்தின் திட்டமிடப்பட்ட தலைப்பு “பிளவு, பிளவு, மற்றும் மீண்டும் பிளவு: ஜெரி  ஹீலியும் தொழிலாளர் புரட்சிக் கட்சியும்” என்பதாக இருந்தது. பின்னர் அவர் அதன் தலைப்பைக் கட்சி எப்பொழுதும் சரியானது என்று மாற்றினார். இந்தச் சொற்றொடர் ஹீலியால் ஒருபோதும் பேசப்படவில்லை, மாறாக செக்கோஸ்லோவாக்கியாவில் இழிபுகழ்பெற்ற 1952 ஆண்டு களையெடுப்பு விசாரணைகளைக் (1952 Purge Trials) கையாளுவதை அற்புதமான திரைப்படமாகத் தயாரித்த கோஸ்டா-காவ்ராஸின் (Costa-Gavras) ஒப்புதல் வாக்குமூலம் (The Confession) என்ற திரைப்படத்தில் ஒரு இழிவார்ந்த ஸ்ராலினிச அதிகாரத்துவவாதியால் பேசப்பட்டதுதான் இந்தச் சொற்றொடராகும்.

பீட்ரியின் இடுகைக்கான எனது பதிலில், நான் இவ்வாறு எழுதினேன்:

திரு. பீட்ரி கடந்த ஆண்டு என்னைத் தொடர்பு கொண்டார். 1) ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு குறித்து பீட்ரிக்கு ஏறத்தாழ எதுவுமே தெரியாது; மற்றும் 2) முற்றிலும் அரசியல் அல்லது புத்திஜீவித மதிப்பு இல்லாத ஒரு மங்கலான புத்தகத்தை எழுத அவர் திட்டமிட்டுள்ளார் என்பது விரைவிலேயே இவைகள் தெளிவானதால், அவருடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன்.

பீட்ரியின் புத்தகத்தின் உள்ளடக்கம் எனது மதிப்பீட்டை முழுமையாக உறுதிப்படுத்துகிறது.

இருந்தாலும் ஒரு கேள்வி கேட்கப்பட வேண்டும்: அதாவது திரு. பீட்ரியை இந்தப் புத்தகத்தை எழுத வழிவகுத்தது எது? இறுதி அத்தியாயமான ”முடிவுரை: இருபத்தியோராம் நூற்றாண்டு ஹீலிசம்” என்று தலைப்பிடப்பட்டதில் இதற்கான பதில் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் சோசலிச சமத்துவக் கட்சியையும் (Socialist Equality Party - SEP) தனிப்பட்ட முறையில் என்னையும் கண்டனம் செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஜோன் கொமரோஃப்  (johncomaroff.com) [Photo]

இந்த அத்தியாயமானது ஹார்வர்ட் பல்கலைக்கழக மானுடவியலாளர் (anthropologist) ஜோன் கொமரோஃப் (John Comaroff) மீதான ஒரு இழிவான தாக்குதலுடன் தொடங்குகிறது. அவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானார். மாணவர் செய்தித்தாளில் (student newspaper) புகழ்பெற்ற அறிஞருக்கு எதிராகக் கடுமையான பிரச்சாரம் இருந்தபோதிலும், குற்றச்சாட்டுக்கள் நம்பத் தகுந்த ஆதாரமற்றவை என்பது அம்பலப்படுத்தப்பட்டது, கிட்டத்தட்ட 80 வயதான கொமரோஃப் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்த வழக்கின் உண்மைகளையும் அதன் விளைவையும் புறக்கணித்துவிட்டு, “கொமரோஃப்  மீது பாலியல் துஷ்பிரயோகம் குறித்த நம்பத் தகுந்த குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும், அவருக்கு ஒரு வக்காலத்து வாங்கும் செய்தியை” பிரசுரித்தது என்று உலக சோசலிச வலைத் தளத்தை பீட்ரி கண்டனம் செய்கிறார். [136-37] உண்மையில், அங்கே எந்த “நம்பத் தகுந்த ஆதாரமும்” இருக்கவில்லை. உலக சோசலிச வலைத் தளம் பிரசுரித்தது என்னவெனில், அது “வெற்று வக்காலத்து” கோரவில்லை, மாறாக அந்த வேட்டையாடலின் தோற்றுவாய்கள் மற்றும் மோசடியான சாராம்சம் குறித்து ஒரு தொடரான அதிர்ச்சியூட்ட வைக்கும் பகுப்பாய்வுகளாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் கலைத்துறை ஆசிரியர் டேவிட் வோல்ஷால் (David Walsh) எழுதப்பட்டு மார்ச் 15, 2022 இல் வெளியிடப்பட்ட இந்தப் பகுப்பாய்வுகளில் மிகவும் விரிவாக “ஹார்வார்ட் மானுடவியலாளர் ஜோன் கொமரோஃப்புக்கு எதிரான அரசியல்ரீதியாக உந்தப்பட்ட பிரச்சாரம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. தகுதியற்ற குற்றச்சாட்டுக்களை கவனமாக அம்பலப்படுத்திய பின்னர், பாலியல் வேட்டையாடுபவர்கள் ஒரு “தனிச்சலுகை படிநிலையால்” பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற போலியான கூற்றுக்களின் அடிப்படையில் — பல்கலைக்கழக போதனையுரைகளில் மேலாதிக்கம் செலுத்தும் பாலின தத்துவவாதிகளால் விடாப்பிடியாக ஊக்குவிக்கப்பட்ட— கொமரோஃப் -விரோத பிரச்சாரத்தின் தத்துவார்த்த அடித்தளங்களை வோல்ஷ் ஆய்வு செய்திருக்கிறார். வோல்ஷ் அதில் இவ்வாறு விளக்கியுள்ளார்:

“தனிச்சலுகை படிநிலை” என்ற கூற்றானது மந்திர சூத்திரமாகவும், அனைத்தையும் சூழ்ந்திருக்கும் சக்தியாகவும், எந்தவொன்றிற்கும் மற்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பேற்கும் சக்தியாக அது மாறுகிறது. ஒரு பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு மறுக்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ அது அத்தகைய “கல்விசார் சாதி அமைப்பு” இருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக மேலும் நிரூபிக்கிறது. கொமரோஃப் மற்றும் பிறர் மீதான தாக்குதல்களுக்குச் செயலூக்கமான எதிர்ப்பைப் பொறுத்தவரை, அது சந்தேகத்திற்கு இடமில்லாத குற்றத்தின் அறிகுறியாக விளக்கப்படுகிறது. எமர்சன் டபிள்யூ. பேக்கரின் (Emerson W. Baker) ஒரு சூனியத்தின் புயல் (A Storm of Witchcraft) என்ற புத்தகத்தில் கோடிட்டுக் காட்டுவதைப் போல, சலேம் விசாரணைக்கான நீதிபதிகளின் (Salem trial judges) அணுகுமுறையை ஊடகங்களும் குற்றம் சாட்டுபவர்களும் பின்பற்றுகின்றனர் (குறிப்பு: சூனியம் தொடர்பான சலேம் விசாரணைகள் என்பது பிப்ரவரி 1692 மற்றும் மே 1693 க்கு இடையில் காலனித்துவ மாசசூசெட்ஸில் சூனியம் தொடர்பாக  குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொடர்ச்சியான விசாரணைகள் மற்றும் வழக்குகள் ஆகும். இந்த விசாரணையின் விளைவாக 20 பேர் தூக்கிலிடப்பட்டனர்), “அவர்களின் மூலோபாயமானது ‘குற்றவாளி ஆனால் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்பாத’ மனநிலையை கொண்டிருந்தனர் என்பதாகும். இதன் மூலம் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மறுத்த பிரதிவாதிகள் பொய் சொல்கிறார்கள் என்று கருதினர்.”

“தனிச்சலுகை படிநிலை” வாதம் சுற்றி வருவதானது, பதிலளிக்க முடியாதது - மற்றும் போலியானது. ஒரு முக்கிய பேராசிரியர், பட்டதாரி மாணவர் X அல்லது Y க்கு வேலை தேட உதவத் தவறினால், அவர் வேண்டுமென்றே X அல்லது Y இன் வாழ்க்கைப் பாதையைத் தடுப்பதற்குத்தான் செய்ய வேண்டும் என்பதாக எடுக்கக் கோருகிறது. ஆனால் வேலைச் சந்தையின் புறநிலை உண்மைகள் மற்றும் தேவைப்படும் தகைமைகள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் விடப்படுகின்றன.

வோல்ஷ் செய்த பகுப்பாய்வைப் பீட்ரி மேற்கோளிடவோ அல்லது எந்த வகையிலும் குறிப்பிடவோ இல்லை. மாறாக, அவர் உலக சோசலிச வலைத் தளத்தை வெட்கமின்றி அவதூறு செய்வதற்காக இவ்வாறு அறிவிக்கிறார்:

கொமரோஃப் மீதான வலைத் தளத்தின் நேரடியான பாதுகாப்பு முற்றிலும் அதன் வழக்கமான நிலைப்பாடாக இருக்கிறது: அவர்கள் ஹார்வி வைன்ஸ்டீன் (Harvey Weinstein) (ஒரு கற்பழிப்பு குற்றவாளி), வூடி ஆலன் (Woody Allen) (சிறுவரை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்) மற்றும் லூயிஸ் சிகே (Louis CK) (சக நகைச்சுவை நடிகர்களுக்கு அதீத பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டவர்) ஆகியோரை குற்றமற்றவர்களாக விடுவித்து வெளியிட்டுள்ளனர், மேலும் பல்வேறு #MeToo வெளிப்பாடுகளைத் தொடர்ந்து வந்த பாலியல் துன்புறுத்தல் மீதான விவாதங்கள் மீது ஒரு பொதுவான அவமதிப்பு உள்ளது. [137]

இந்த அறிவிப்பானது பொய்களின் மூட்டையாகும். உலக சோசலிச வலைத் தளமானது ஹார்வி வைன்ஸ்டீனுக்கு எந்த ‘நியாயப்படுத்தலையும்’ வழங்கவில்லை.  அக்டோபர் 12, 2017 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், டேவிட் வோல்ஷ் இவ்வாறு எழுதினார்:

ஒரு புகழ்பெற்றவர், தனது ஊழியர்களைக் கொடுமைப்படுத்துபவரும் துஷ்பிரயோகம் செய்பவருமான ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு நாங்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களில் ஒரு மிகச் சிறு பகுதி மட்டுமே உண்மையாக இருந்தால் கூட, அவரது செயலானது அருவருக்கத்தக்கது மற்றும் ஒருவேளை குற்றகரமானது ஆகும்.

எவ்வாறாயினும், “வைன்ஸ்டீனுக்கு அரசியலமைப்பு உரிமைகள் உள்ளன, இதில் முறையான சட்ட நடைமுறை மற்றும் நிரபராதி என்று கருதுவதும் உள்ளடங்கும்” என்று வோல்ஷ் வாசகர்களை எச்சரித்தார். அவர் மேலும் இவ்வாறு தொடர்ந்தார்:

அமெரிக்காவில் (மற்றும் ஹாலிவுட்-சார்லி சாப்ளின் மற்றும் பிறர்) பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அவற்றில் எதுவுமே முற்போக்கான திசையில் இட்டுச் செல்லப்படவில்லை. பாலியல் துஷ்பிரயோகம் என்பது மற்றையப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையாகும், பல சந்தர்ப்பங்களில் சக்திவாய்ந்த பொருளாதார நலன்கள் திருப்தியடையும் வகையில், பொதுவாக அரசியல் வலதிற்கு தள்ளப்படுகிறது. கிளிண்டன்-லெவின்ஸ்கி (Clinton-Lewinsky) விவகாரம், வலதுசாரி மற்றும் அடிபணிந்த செய்தி ஊடகத்தால் சூழ்ச்சியுடன் கையாளப்பட்டு, அமெரிக்க அரசியல் வாழ்வில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மையப் பிரச்சனையாக எடுக்கப்பட்டதுடன், ஏறத்தாழ ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியாகத் தொடங்கி, இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை அகற்றுவதற்கும் அது இட்டுச் சென்றது.

மெக்கார்த்திய (McCarthy) சகாப்தத்திற்குப் பின்னர் பார்த்திராத மட்டத்திற்கு — வெறுப்பூட்டும், நிரூபிக்கப்படாத மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் — கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் ஏனைய பிரபலங்களின் தொழில் வாழ்க்கையை அழித்த ஒரு வேட்டையாடும் சூழலைத் தூண்டிவிட்டுள்ள பிற்போக்குத்தனமான #MeToo இயக்கம் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் செய்திகளையும் கண்டனங்களையும் இந்தக் கோட்பாட்டுரீதியான பரிசீலனைகள் தெரிவிக்கின்றன. வைன்ஸ்டீன் விடயத்தைப் பொறுத்த வரையில், ஒரு நேர்மையற்ற நீதிபதியின் மேற்பார்வையில் போலி நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் மீதான தண்டனை நியூயோர்க் மாநில மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அப்படியானால், ஹீலியின் வாழ்க்கை வரலாறு என்றழைக்கப்படுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை அவர் முடிவுரையில் கண்டனம் செய்ததற்கும் இடையிலான தொடர்பு என்ன? இது 1970கள் மற்றும் 1980களில் ஹீலியின் முறைகேடான நடத்தையைச் சோசலிச சமத்துவக் கட்சியின் மார்க்சிச வர்க்க அடிப்படையிலான அரசியலுடன் தொடர்புபடுத்துவதற்கான ஒரு நேர்மையற்ற முயற்சியாகும். அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

சோசலிச சமத்துவக் கட்சி, ஒருகாலத்தில் ரிம் வொல்ஃபோர்த் (Tim Wohlforth) தலைமையில் ஜெரி ஹீலியால் நெருக்கமாகச் செல்வாக்கு செலுத்தப்பட்ட வேர்க்கர்ஸ் லீக் (Workers League) இன் வேர்களைக் கொண்டுள்ளது. தொழிலாளர் புரட்சிக் கட்சியிடம் (WRP) இருந்து கற்றுக்கொண்ட சிந்தனைகளை அபிவிருத்தி செய்த சோசலிச சமத்துவக் கட்சி (SEP), ஏனைய அனைத்திற்கும் மேலாக வர்க்கத்திற்கு தனிச்சலுகை வழங்கியமையானது இனம் மற்றும் பாலினத்தை மட்டும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை, மாறாக வெளிப்படையான பாலியல்வாதம் (பாலின அடிப்படையிலான பாகுபாடு) மற்றும் இனவாதத்தையும் (இன அடிப்படையிலான பாகுபாடு) குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் போய் முடிந்துள்ளது. [137]

இந்தக் கட்டத்தில், பீட்ரியின் புத்தகத்தின் உள்ளடக்கத்திலிருக்கும் அரசியல் நோக்கங்கள் மிகவும் தெளிவாகின்றன. அவர் ஒரு வரலாற்றாசிரியராக எழுதவில்லை, மாறாக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு அரசியல் ஊதுகுழலாக எழுதுகிறார். சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) “நடப்பு நிகழ்வுகள் மீதான அதிதீவிர-இடதுசாரி முன்னோக்குகளுக்காகவும், குறிப்பாக அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) மீது, குறிப்பாகப் பேர்ணி சாண்டர்ஸ் (Bernie Sanders) மற்றும் ஜெர்மி கோர்பின் (Jeremy Corbyn) மீதும் சமீபத்திய ஜனநாயக சோசலிச அரசியல்வாதிகள் மீதான மோசமான நம்பிக்கை தாக்குதல்களுக்காகவும்” அவர் அதைக் கண்டனம் செய்கிறார். [137] ஏகாதிபத்தியத்தின் நடுத்தர வர்க்க அரசியல் முகவர்கள் மீதான நன்கறியப்பட்ட மார்க்சிச விமர்சனத்தை அவர் “தீய நம்பிக்கை” என்று அழைக்கிறார்.

ஹீலி இறந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டதால், பீட்ரி அந்தத் தீய ஆவியின் மறுபிறவியாக முன்வைக்கக்கூடிய மற்றொரு பிசாசைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனால் பீட்ரி தனது கவனத்தை என் பக்கம் திருப்புகிறார், “நோர்த் தனது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கிறார் ... என்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்குள்ளேயே (SEP) கூட, அவரது பின்னணி பற்றி அதிகம் தெரியாது” என்றும் அறிவிக்கிறார். இந்தச் சிக்கலான சூழ்நிலையைச் சரிசெய்யும் பொருட்டு, ஜெரி  ஹீலியின் வாழ்க்கை வரலாறு என்று கூறிக்கொள்ளும் ஒரு புத்தகத்திற்கு முற்றிலும் பொருத்தமில்லாத எனது குழந்தைப் பருவ மற்றும் மாணவப் பருவ ஆண்டுகளின் விவரங்களைப் பீட்ரி நிர்ணயிக்கிறார். ஹீலியுடனான எனது அரசியல் வேறுபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணற்ற ஆவணங்களை அவரது முந்தைய அத்தியாயங்களில் புறக்கணித்திருந்த அவர், அதற்குப் பதிலாக எனது குடும்பப் பின்னணி குறித்த ஆவணங்களை வெளிக்கொணர Ancestry.com என்ற இணையத்தளம் பக்கம் திரும்புகிறார்.

அவரது கண்டுபிடிப்புகளில் ஒன்று, எனது சட்டப்பூர்வ பெயர் (டேவிட் கிரீன்) 1953 இல் எனது உயிரியல் தந்தை இறந்ததைத் தொடர்ந்து என் தாயார் திருமணம் செய்த மனிதரிடமிருந்து பெறப்பட்டது. எனது தாத்தா போலந்து-ஜேர்மன் மற்றும் யூத இசையமைப்பாளர் (composer) மேலும் இசைநிகழ்ச்சி நடத்துனர் (conductor), இக்னாட்ஸ் வாக்ஹால்டர் (Ignatz Waghalter) (1881-1949) என்றும், என் தாயார் ஒரு ஒபேரா பாடகி என்றும், அவர் பாடுவதில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, ஒரு பயண ஏற்பாட்டு நிறுவனத்தை நிறுவினார் என்றும் அவர் என்னைச் சேதப்படுத்துவதற்காக இவ்வாறான தகவல்களை வெளிப்படுத்துகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “குடும்பம் சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தைக் கழிக்கும் அளவுக்குச் செல்வந்தர்களாக இருந்தனர். சிறு வயதில் இருந்தே, டேவிட் நோர்த் கலாச்சார மூலதனத்துடனும் அத்துடன் மூல நிதி ஆதாரங்களுடனும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்.” வேறு ஏதேனும் புகார்கள்?

(எனது தாத்தாவின் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ளவர்கள் இக்னாட்ஸ் வாக்ஹால்டரில் விக்கிபீடியா உள்ளீட்டை அணுகலாம்  அல்லது Spotify அல்லது YouTube இல் அவரது இசைகளைக் கேட்கலாம்)

எனது மர்மமான பின்னணி குறித்த பீட்ரியின் ஆராய்ச்சியில் 1967 முதல் 1971 வரை நான் படித்த டிரினிட்டி கல்லூரியின் காப்பகங்களைத் தேடுவதும் அடங்கும். அந்த ஆண்டுகளில் நான் பெருமளவில் ஏமாற்றமடைந்த 18 வயது இடது தாராளவாதியாக இருந்து 21 வயது ட்ரொட்ஸ்கிசவாதியாக முன்னேறினேன் என்ற திடுக்கிடும் உண்மையை அவர் வெளிக்கொணர்ந்துள்ளார். 1968 இல் நடத்தப்பட்ட ஒரு செய்தித்தாள் நேர்காணலை அவர் கண்டுபிடித்தார். அதில் நான் குறிப்பிட்டேன், “நான் தனிப்பட்ட முறையில் அமெரிக்க சமூகத்தின் மீது மிக, மிக அதிருப்தி அடைந்துள்ளேன்.” அது மட்டுமல்ல, நான் பல்கலைக்கழக வளாக செய்தித்தாளின் ஆசிரியராக பணியாற்றினேன் மற்றும் 1969 இல் ஒரு செமஸ்டர் (பீட்ரி கூறியது போல் 1970 அல்ல) போர்-எதிர்ப்பு ஜனநாயகக் கட்சி செனட்டர் வான்ஸ் ஹார்ட்கேயின்(Vance Hartke) அலுவலகங்களில் ஒரு பயிற்சியாளராகவும் உரை எழுதுபவராகவும் பணியாற்றினேன்.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஒரு வர்த்தக அச்சக நிறுவனத்தை பராமரித்து அதன் வருமானத்தை ஈட்டிக் கொண்டது என்பது போன்ற பல பக்கங்கள் கூடுதல் அம்பலப்படுத்தல்களைத் தொடர்ந்து, அவர் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மீதான ஒரு கடுமையான அரசியல் கண்டனத்துடன் தனது குற்றச்சாட்டை இவ்வாறு முடிக்கிறார்:

நிக்கோல் ஹன்னா-ஜோன்ஸ்சின் 1619 திட்டம் (Nikole Hannah-Jones 1619 Project) மீதான போலித்தனமான விமர்சனங்களுக்கான ஒரு களமாக உலக சோசலிச வலைத் தளம் இழிவார்ந்த முறையில் சேவையாற்றியது. அவ்விதத்தில் 2021 இல் அதிவலது விமர்சன இனக் கோட்பாடு பீதியைத் தூண்டிவிட உதவுவதில் ஒரு சாத்தியமில்லாத பாத்திரத்தை வகித்தது. அவர்களின் மார்க்சிச தோரணைகள் ஒருபுறம் இருக்க, சோசலிச சமத்துவக் கட்சியானது (SEP) கோர்டன் வூட் (Gordon Wood) போன்ற பழமைவாத வரலாற்றாசிரியர்களுக்குப் பல அரங்குகளை வழங்கி, ஒழுங்கமைக்கப்பட்ட இனவெறி மீதான ஒரு இகழ்வுணர்வை அவர்களுடன் பகிர்ந்து கொண்டது. விமர்சன இனக் கோட்பாட்டை நோக்கிய நோர்த்தின் விரோதப் போக்கு போதுமானளவுக்கு வலுவாக இருந்தது, கல்லூரியின் இன உணர்வு கொண்ட கற்பித்தல் முறைகளைக் கண்டனம் செய்வதற்காக, அவர் படித்த முன்னாள் மாணவர்களுக்கான இதழான டிரினிட்டி ட்ரைபாட்டுக்கு (Trinity Tripod)  [!] அவரது அரசாங்க பெயரில் ஒரு கடிதம் எழுத அவர் தயாராக இருந்தார். [147] [குறிப்பு: டிரினிட்டி ட்ரைபாட் பல்கலைக்கழக வளாக செய்தித்தாள், அதன் முன்னாள் மாணவர்களின் இதழ் அல்ல. பீட்ரியின் கையெழுத்துப் பிரதியில் உள்ள எண்ணற்ற தரவுப் பிழைகளுக்கு இது ஒரு சிறிய உதாரணம்.]

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் மீதான ஒரு விரிவான கண்டனத்துடன் பீட்ரி தனது தொகுதியை இவ்வாறு முடிக்கிறார்:

ஒரு உண்மையான சோசலிச வர்க்கப் போராட்டம் பற்றிய ஒரு குறுகிய வரையறுக்கப்பட்ட கருத்தாக்கத்தில் மட்டுமே அக்கறை காட்ட வேண்டும் என்ற கூற்றை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உலகக் கண்ணோட்டமானது, ஒரு குறிப்பிட்ட வகையான வறட்டு மார்க்சிச தர்க்கத்தை ஆதரிக்கிறது; இனம் அல்லது பாலினம் பற்றிய எந்தவொரு அரசியலும் இவ்வாறு பிளவுபடுத்துவதாகவும், கவனச் சிதறலாகவும், அனுமதிக்க முடியாததாகவும் அதற்கு இருக்கிறது. வர்க்க நனவின் கைவிடுதலாக பார்க்கப்படும் அடையாள அரசியலுக்கு 1968க்குப் பிந்தைய விரோதமும் இங்கே விளையாடுகிறது. ஹீலியிடம் இருந்து மரபுரிமையாகப் பெறப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) மிகவும் மரபுவழி ட்ரொட்ஸ்கிச இழையானது, ட்ரொட்ஸ்கிச தலைமையுடன் கூடிய போல்ஷிவிக்-பாணியிலான வெகுஜன பாட்டாளி வர்க்கக் கட்சி என்ற ஒரு வரம்புக்குட்பட்ட சிந்தனைக்குள் இயங்காத எந்தவொரு சமூக இயக்கத்துடனும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைக் கொண்டுள்ளது. [147]

பீட்ரியின் புத்தகமானது ஒரு அறிவார்ந்த வாழ்க்கை வரலாற்று வேலை அல்ல, மாறாக ஒரு அரசியல்ரீதியான வெற்றிகரமான தாக்குதல் வேலை ஆகும். வரலாற்றைப் பொய்மைப்படுத்துவதற்கான இந்த வேலை குறித்துப் பல கேள்விகள் உள்ளன, அவைகள் அடுத்தடுத்த மதிப்பாய்வில் ஆராயப்படும். இந்த நூலின் ஒரே ஆசிரியர் திரு.பீட்ரி அல்ல என்று நம்புவதற்கு சிறந்த காரணம் உள்ளது. மேலும், இந்த வாசனையான பொருட்களைச் சேகரிப்பதில் அவருக்குக் கணிசமான உதவிகள் கிடைத்துள்ளன. அனைத்துலகக் குழுவிற்கு (ICFI) விரோதமான ஒரு அரசியல் போக்குடன் இணைந்த புளூட்டோ பிரஸ் (Pluto Press) ஆல் அது வெளியிடப்படுவதால், இந்தத் தொகுதியை “ஆராய்ச்சி செய்வதிலும்” எழுதுவதிலும் அது பீட்ரிக்கு கணிசமான ஆதரவை வழங்கியிருக்கும் என்று ஒருவர் நியாயமாக அனுமானிக்க முடியும்.

அனைத்திற்கும் மேலாக, 2015 இல் இருந்து அவர் பணியாற்றி வந்த ஒரு முக்கிய புத்தகத்தை எழுவதிலும் வெளியிடுவதிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டிருந்தபோது, இந்தப் புத்தகத்தை உருவாக்க அவருக்கு எப்படி நேரம் கிடைத்தது என்று ஒருவர் ஆச்சரியப்பட வேண்டும்.

தனியார் சொத்துடைமையும் சமூக குழப்பத்தின் அச்சமும் என்ற புத்தகத்திற்கான அவரது நன்றி தெரிவிப்புப் பகுதியில் 2023 இல் வெளியிடப்படுவதற்கு வழிவகுத்த செயல்முறையின் விரிவான கணக்கை வழங்குகிறது. இறுதியாகவுள்ள விமர்சனப் பணிகளின் பெரும்பகுதி, குறிப்பாக எழுத்தும் திருத்த வேலையும், அவரது ஹீலியின் வாழ்க்கை வரலாற்றை அவர் ஆராய்ச்சி செய்து எழுதிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட சமயத்தில் நடந்தேறின. இரண்டு திட்டங்களையும் பீட்ரி எவ்வாறு இணைக்க முடிந்தது.

தனியார் சொத்துடைமையும் சமூக குழப்பத்தின் அச்சமும் என்ற புத்தகம் வெளியிடப்படுவதற்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிப்போக்கை விளக்குகையில், பீட்ரி எழுதுகிறார், “கையெழுத்துப் பிரதி குழப்பமான மற்றும் மும்முர வேலையாக இருந்த ஒரு நீண்ட காலகட்டத்தை கடந்து சென்றது.” [IX] “இரண்டு பெயர் குறிப்பிடப்படாத சக விமர்சகர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களின் மிகவும் பயனுள்ள தொடரை வழங்கினர், இது அதிகப்படியான கடினமான வரைவை (நம்பிக்கையுடன்) மிகவும் ஒத்திசைவானதாக வடிவமைக்க எனக்கு உதவியது” என்று அவர் அதில் குறிப்பிடுகிறார். [ix]

பீட்ரியின் பிரிட்டன் ஆராய்ச்சிக்கு, பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள யூத ஆய்வுகள் மற்றும் உலக வரலாற்று மையத்தின் திட்டத்தால் (Program on Jewish Studies and the World History Center) நிதியளிக்கப்பட்டது. அவர்கள் இந்தத் திட்டத்தின் யூத, இஸ்ரேலிய-பாலஸ்தீன மற்றும் உலகளாவிய தொடர்புகளைக் காண போதுமான அளவிற்கு தாராளமாக இருந்தனர்“ [சாய்வு எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது] என்ற அவரது ஹீலி மீதான இழிவான தாக்குதல் எழுத்து வேலைக்கு முன்னதான புத்தகத்தில் நன்றி தெரிவிப்புகளில் சேர்க்கப்பட்ட தகவல்கள் ஒரு குறிப்பிடத்தக்க விபரமாகும். திரு. பீட்ரியிடமிருந்து கூடுதல் தகவல்கள் இல்லாமல், இந்த “தொடர்புகள்” என்ன என்பது எந்த வகையிலும் வெளிப்படையாக இல்லை. இது சம்பந்தமாக, ஒரு வரலாற்றாசிரியராக பீட்ரியின் முக்கிய நிபுணத்துவம் யூத மற்றும் இஸ்ரேலிய ஆய்வுத் துறையில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது முதல் புத்தகமான, ஐரிஷ் தேசியவாதத்தில் ஆண்மையும் அதிகாரமும், ஐரிஷ் தேசியவாதம் மற்றும் சியோனிசம் குறித்த —குட்டி-முதலாளித்துவ கல்விசார் பாலின தத்துவத்தால் பெரிதும் செல்வாக்கு செலுத்தப்பட்ட— ஒரு ஒப்பீட்டு ஆய்வாக இருந்தது. அந்த திட்டத்திற்கான கணிசமான நிதி ஒரு பெரிய சியோனிச சார்பு அறக்கட்டளையான அஸ்ரிலி கல்வி நிறுவனத்தில் (Azrieli Institute) இருந்து வந்துள்ளது.

இந்தத் தாக்குதலின் தொடக்கமும், அது வெளியிடப்படுவதன் வேகமும், பாசிச இஸ்ரேலிய ஆட்சியால் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போருக்கு எதிராக உலக சோசலிச வலைத் தளம் (WSWS) நடத்திவரும் பிரச்சாரத்திற்கு பதிலுறுப்பு என்ற முடிவிற்கு வருவது முற்றிலும் நியாயமானதாகும். அவரது ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் “யூத, இஸ்ரேலிய-பாலஸ்தீன மற்றும் உலகளாவிய தொடர்புகளைக் காண அவரது ஆதரவாளர்கள் தாராளமாக இருந்தனர்” என்று பீட்ரி குறிப்பிட்டபோது, இதைத்தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

உண்மை எதுவாக இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம்: அதாவது இந்த வெறுக்கத்தக்கப் புத்தகத்தை எழுதியதன் மூலம் திரு. பீட்ரி தனது தொழில்முறை நற்பெயருக்கு ஒரு அடியைக் கொடுத்துள்ளார். அதிலிருந்து அவர் ஒருபோதும் மீள முடியாது. ஜெரி ஹீலியின் இறுதி ஆண்டுகளின் துன்பகரமான தன்மை இருந்தபோதிலும், பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றிலும் சோசலிசத்திற்கான சர்வதேச போராட்டத்திலும் ஒரு முக்கியமான ஆளுமையாக அவர் நினைவு கூரப்படுவார். பல தசாப்தங்களாக ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் குற்றங்களுக்கு எதிராகப் புரட்சிகர முன்னோக்கைப் பாதுகாப்பதில் அவர் செய்த பங்களிப்பு அனைத்தும் மறக்கப்படாது.

ஆனால் பீட்ரிக்கு மகிழ்ச்சியற்ற வகையில், புத்தகங்களும் அவைகளின் ஆசிரியர்களின் தலைவிதியும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. தீயவர்கள் அவர்களுக்குப் பின் வாழ்க்கையை எழுதுகிறார்கள். (தீயவர்கள் வாழ்க்கையில் நீடித்த தீய தாக்கத்தை விட்டுச் செல்கிறார்கள்) இந்தப் புத்தகத்திற்காகத்தான் பீட்ரி நினைவு கூரப்படுவார்.

ஜெரி ஹீலி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த கூடுதல் தகவல்களுக்கு:

●      நாம் காக்கும் பாரம்பரியம்

●      ஜெரி  ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும்  

●      சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்

●      சோசலிச சமத்துவக் கட்சிக்கான விரிவுரைகள் 2023 கோடைப் ளி

●      லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்

Loading