சோசலிச சமத்துவக் கட்சி சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஏகாதிபத்தியப் போருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தீவிரமடைந்து வரும் தாக்குதல்களுக்கும் எதிராக, ஒரு சோசலிச மாற்றீட்டை மேம்படுத்துவதற்காக செப்டம்பர் 21 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறது.

பாணி விஜேசிறிவர்தன [Photo: WSWS]

எமது வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, நீண்ட கால கட்சித் தலைவர்களில் ஒருவர் ஆவார். அவர் 2015 மற்றும் 2019 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களிலும் போட்டியிட்டார். தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக போராடுவதில் அவர் ஐந்து தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ளார். ஓய்வு பெற்ற ஆசிரியரான அவர், இலவசக் கல்வி உட்பட, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்தின் காரணமாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கணிசமான மதிப்பை வென்றுள்ளார்.

அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக, நாங்கள் மட்டுமே தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு உண்மையைக் கூறுகிறோம்: மோசமடைந்து வரும் வறுமை, வேலையின்மை மற்றும் ஏனைய சமூக நெருக்கடிகளுமாக, அவர்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகள், முதலாளித்துவ மற்றும் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாதவை ஆகும்.

தொழிலாளர்கள் தங்களது நலன்களுக்காகப் போராடுவதற்கு, விஷயங்களை அவர்களது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தலைப் பயன்படுத்தும். முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கும், உடனடி சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சமூகத்தை சோசலிச வழியில் மறுசீரமைப்பதற்கும் மனிதகுலம் எதிர்கொள்ளும் பேரழிவுகளுக்கு முடிவுகட்டுவதற்கும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் ஒருங்கிணைந்த இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை இதுவே ஆகும்.

முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடி

1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள உலக முதலாளித்துவத்தின் மிகப்பெரிய நெருக்கடியின் ஒரு பகுதியாக, இலங்கையில் முதலாளித்துவ ஆட்சி எதிர்கொள்ளும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கை அரசாங்கம், உலகெங்கிலும் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைகளை ஒன்றுவிடாமல் அமுல்படுத்துவதன் மூலம், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் மீது முழு சுமையையும் தினிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியும், சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் மட்டுமே, அணு ஆயுதப் பேரழிவை ஏற்படுத்த மனிதகுலத்தை அச்சுறுத்தி வரும் உலகப் போரின் அபாயம் குறித்து எச்சரிக்கின்றன. போரானது ஏற்கனவே மூன்று முனைகளில் தலைதூக்கியிருக்கிறது.

மூன்றாவது ஆண்டாக உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக வேகமடைந்து வரும் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க-நேட்டோ சக்திகள், இப்போது தங்கள் சொந்த நேரடி பங்குபற்றலுக்குத் திட்டமிட்டுள்ளன. மத்திய கிழக்கில், அதே ஏகாதிபத்திய சக்திகள், காஸாவில் பாசிச இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைகளுக்கும் அதன் குற்றவியல் ஆத்திரமூட்டல்களுக்கும் ஆதரவளிப்பதோடு, அனைத்துக்கும் மேலாக, ஈரானைக் குறிவைத்து பேரழிவு தரும் பிராந்தியப் போரைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன. இந்த மோதல்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலக மேலாதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாகக் கருதுகின்ற சீனாவிற்கு எதிராக, ஒரு மூன்றாவது களமுனையைத் திறப்பதற்குத் தேவையான தயாரிப்புகளாகக் வாஷிங்டனால் கருதப்படுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் முன்னெடுக்கும் குற்றவியல் போர்களை, அரசாங்கமோ அல்லது எந்த எதிர்க்கட்சியோ எதிர்க்கவில்லை. உண்மையில், நீண்டகால அமெரிக்க கைக்கூலியான ஜனாதிபதி விக்கிரமசிங்க, மூலோபாய ரீதியில் அமைந்துள்ள தீவை, அமெரிக்க இராணுவப் படைகளுக்குத் திறந்துவிட்டதன் மூலம், சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போர் உந்துதலில் இலங்கையை இன்னும் அதிகமாக ஒருங்கிணைத்துள்ளார்.

போரின் மூலத் தோற்றுவாயான முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டுவதற்காக, போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையிலும் தெற்காசியாவிலும் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக, இந்த ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்யும்.

நவம்பர் 9 அன்று கொழும்பில் உள்ள கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்பாக காஸா இனப்படுகொலைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி / IYSSE நடத்திய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி. [Photo: WSWS]

ஏகாதிபத்தியம் அணு ஆயுதப் போரில் இருந்து பின்வாங்கும் என்று நம்புவது ஒரு மாயை ஆகும். பெருநிறுவன இலாபம் மற்றும் தேசிய நலன்களுக்காக வெகுஜன மரணங்கள் இயல்பாக்கப்படுவதை கோவிட்-19 தொற்றுநோயின் மிகப்பெரிய மரண எண்ணிக்கை நிரூபிக்கின்றது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட தொற்றுநோய் தணிப்பு நடவடிக்கைகளையும் கூட முற்றிலுமாக கைவிட்டுள்ள நிலையில், ஏற்கனவே உலகளவில் 28 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காவுகொண்ட கோவிட் இப்போது அதன் ஐந்தாவது ஆண்டில் பரவிக்கொண்டிருக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், மரணங்கள் குவிவதை நிறுத்துவதற்கும் நீண்ட கால கோவிட் நோயை தடுப்பதற்குமான ஒரே வழிமுறையாக, பூகோள ரீதியில் கோவிட் தொற்றை ஒழிப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் போராடவேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன.

இலங்கையில் 2022 வெகுஜன எழுச்சி

2022 இல் கொழும்பு அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியானது இலங்கையில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது. இது விலைவாசியை வானளவு உயர்த்தியதுடன் உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளின் பெரும் பற்றாக்குறையை உருவாக்கியதோடு வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியின் பாகமாக, அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பாரிய எழுச்சியைத் தூண்டிவிட்டது.

உழைக்கும் மக்களை தொடர்ந்து நெருக்கிவரும் மோசமான சமூக நெருக்கடியைத் தணிக்க, 2022 எழுச்சியின் தோல்வியில் இருந்து தொழிலாளர்கள் பெறவேண்டிய இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை விளக்குவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சாரம் செய்யும்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் பங்குபற்றலுடன் நடந்த இரண்டு தேசிய வேலைநிறுத்தங்களும் அடக்குமுறை அச்சுறுத்தல்களை மீறி, கொழும்பிலும் பிற நகரங்களிலும் தெருக்களில் வெகுஜனங்கள் குவிந்தமை தொழிலாள வர்க்கத்தின் சக்தியை நிரூபித்தது. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியும் வேலைத்திட்டமும் இல்லாததால், இராஜபக்ஷ ஆட்சியை பதிலீடு செய்வது எது என்ற கேள்வி, முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான பாராளுமன்றக் கட்சிகள், அவற்றின் தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுகளின் கைகளில் விடப்பட்டது. இதன் விளைவாக விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஜனநாயக விரோதமான முறையில் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை ஈவிரக்கமின்றி திணித்து, எந்த எதிர்ப்பையும் தடுக்கவும் நசுக்கவும் பொலிஸ்-அரச வழிமுறைகளை நாடினார்.

தொழில்கள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகள் மீதான விக்கிரமசிங்கவின் தாக்குதலுக்கு தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளுடன் பலமுறை பதிலளித்துள்ளனர். ஆனால், தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே வளர்ந்து வரும் எதிர்ப்பை பிளவுபடுத்தவும், வீச்சை மட்டுப்படுத்தவும், சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் வீண் வேண்டுகோள் விடுப்பதற்குள் அடக்கி வைக்கவும் செயற்படுகின்றன.

சம்பள அதிகரிப்புக்கோ அல்லது அடிப்படை சேவைகளைப் பேணுவதற்கோ பணம் இல்லை என்றும், வேலைகளை அழிப்பதும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை வேகமாக விற்றுத்தள்ளுவதும் தொடர வேண்டும் என்று விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவர் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்ய அத்தியாவசிய சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தியதோடு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளுக்கு எதிராக இராணுவத்தையும் பொலிஸையும் நிலைநிறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற எதிர்க்கட்சிகளோ அல்லது தொழிற்சங்கங்களோ விக்கிரமசிங்கவுக்கு சவால் விடும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை. இலங்கை முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு மாற்றீடு இல்லை என்பதே அவர்கள் அனைவரதும் ஒருமித்த நிலைப்பாடாகும். 2022ல் கண்டதை விட மிகப் பரந்த அளவிலான வெகுஜன எழுச்சியொன்று, முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் வகையில் மீண்டும் வெடிக்கும் என்பதையிட்டு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் பீதியடைந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை யாரும் நம்பக் கூடாது. ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தியும் சேர்ந்து, 2022 எழுச்சியை பாராளுமன்ற அரங்கிற்குள் மட்டுப்படுத்தியதன் மூலம், அதை அரசியல் ரீதியாக முடக்க முக்கிய பங்கு வகித்தன.

விக்கிரமசிங்கவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட ஐ.ம.ச., விக்கிரமசிங்கவைப் போலவே சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை திணிப்பதில் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது. உண்மையில், 2022 இல், ஐ.ம.ச. தலைவர்கள், கையில் திருவோடு ஏந்தி சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லத் தாமதித்தமைக்காக இராஜபக்ஷவை விமர்சித்தார்கள்.

ஜே.வி.பி., முதலாளித்துவ ஆட்சியின் நம்பகமான பாதுகாவலராக தன்னை முன்னோக்கி செலுத்தும் நோக்கத்தில் உள்ளது. அதன் தலைவர்கள் பலமுறை சர்வதேச நாணய நிதிய திட்ட நிரலுக்கு தங்கள் ஆதரவை அறிவித்து, உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்கும் திறனை ஆளும் வர்க்கத்திற்கு நிரூபிப்பதற்காக தேர்தலுக்கு முன்னதாக அனைத்து வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புகளையும் கைவிட்டனர். ஜே.வி.பி. தலைவர்கள் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் மூடிய கதவுகளுக்குள் சந்திப்புகளை நடத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் போர்களுடனும் இணைந்து கொள்வதற்கான அவர்களின் விருப்பத்தை சுட்டிக்காட்டினர்.

பல்வேறு பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் உட்பட தமிழ் கட்சிகள் எதுவும் போர், சிக்கன வெட்டுக்கள் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு சிறிதளவு எதிர்ப்பையும் கூட பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. தமிழ் கட்சிகள் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களுக்காக பேசுகின்றன. தமிழ் முதலாளித்துவமானது, தமிழ் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கான தங்களின் திறனை அதிகரித்துக்கொள்வதன் பேரில், ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை பெறுவதற்காக ஏதாவதொரு பிரதான கட்சியுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதையே தங்களின் ஒரே அக்கறையாகக் கொண்டுள்ளது.

எவர் ஜனாதிபதி பதவியை வென்று அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் பாதையில் கால் பதித்து, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவார். அதே சமயம், இலங்கையானது ஏதோ ஒரு வழியில், தலைதூக்கி வரும் பூகோளப் போர் சுழலுக்குள் தவிர்க்க முடியாமல் இழுக்கப்படும்.

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாடு

விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததோடு 2022 எழுச்சி முடிவுக்கு வருவேண்டும் என்பது தவிர்க்க முடியாதது அல்ல. அந்த அரசியல் எழுச்சியின் போக்கில், சோசலிச சமத்துவக் கட்சியானது வெகுஜனங்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதையை வழங்கும் ஒரு சோசலிச முன்னோக்கை விரிவுபடுத்தி அதற்காகப் போராடியது. ஸ்தாபகக் கட்சிகளின் கீழ்த்தரமான சூழ்ச்சிகளுக்கு எதிராக, ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டை ஏற்பாடு செய்து கூட்டுவதற்காக உழைக்கும் மக்களும் இளைஞர்களும் நாடு தழுவிய பிரச்சாரத்தை முன்னெடுக்க நாம் அழைப்பு விடுத்தோம்.

28 ஏப்ரல் 2022 வியாழன் அன்று, இலங்கையின் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நடந்த வேலைநிறுத்தம். [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

2022 ஜூலை மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவிற்கு தீர்வாக, எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுகளால் ஊக்குவிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்பதை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரித்தது. இது “தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பேரழிவுகரமான தாக்குதலைத் தயாரிக்கும் போது ஆளும் வர்க்கத்திற்கு நேரத்தை வாங்குவதற்கான ஒரு கருவியாக இருக்கும்' என்று நாங்கள் எச்சரித்தோம்.”

'மக்கள் சபைகளை' உருவாக்குவதன் மூலம் 'பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு பலத்தை' கட்டியெழுப்ப முன்னிலை சோசலிசக் கட்சி விடுத்த அழைப்பையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்த்தது. இந்த மக்கள் மன்றங்கள் என்று அழைக்கப்படுபவை, உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சுயாதீனமான அமைப்புகள் அல்ல, மாறாக எந்த எதிர்ப்பையும் முதலாளித்துவக் கட்சிகளுடன் முடிச்சுப்போட்டு வைத்திருப்பதற்கான கருவிகளே ஆகும். வெகுஜனங்களால் செய்யக்கூடிய ஒரே விடயம், சலுகைகளைப் பெறுவதற்காக அடுத்துவரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே, என்று முன்னிலை சோசலிசக் கட்சியும் அதன் கூட்டாளிகள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான பாதையில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும். எங்கள் 2022 அறிக்கை அறிவித்தது போல்: “ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான மாநாட்டிற்கான அடித்தளம், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களால் தீவு முழுவதிலும் உள்ள வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள், குடியிருப்புக்கள் மற்றும் கிராமப்புறங்களிலும், தங்கள் வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கான நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பதன் மூலமே அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்கள் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளுக்கு உண்மையான குரல் கொடுக்க வேண்டுமானால், அவை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அதன் தொழிற்சங்க அடிவருடிகளிடம் இருந்து சுயாதீனமாக இருப்பது அவசியம்.”

சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் அரசாங்கம்

இந்த வேலைத்திட்டத்திற்கும் முன்னோக்கிற்குமான போராட்டம் இன்று உடனடி அவசரத் தேவையாகியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியானது ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான மாநாட்டுக்கான அழைப்பை பிரசித்தப்படுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு தீவு முழுவதும் நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கும், சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் அரசாங்கத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தும்.

அதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை பரிந்துரைக்கின்றது:

* சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கை வேண்டாம்! அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்!

* வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கு!

* கிராமப்புற விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கான அனைத்து மானியங்கள் மற்றும் சமூக திட்டங்களை மீள ஸ்தாபித்து விரிவுபடுத்து!

* ஏழை விவசாயிகள், சிறு மீனவர்கள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்!

* கொழும்பு ஸ்தாபகத்தின் சிங்கள-பௌத்த பேரினவாதம் மற்றும் தமிழ் முதலாளித்துவத்தின் தமிழ் தேசியவாதம் உட்பட அனைத்து வகையான தேசியவாதத்தையும் இனவாதத்தையும் எதிர்த்திடுவோம். தங்கள் வர்க்க நலன்களுக்காக போராட, தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்கான அரசியல் போராட்டம், தொழிலாள வர்க்கம் கிராமப்புற மக்களை அணிதிரட்டிக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது. பெரும் செல்வந்தர்களின் இலாபங்களுக்காக அன்றி, அவசரமான மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சோசலிச வழிகளில் பொருளாதார வாழ்க்கையை முழுமையாக மறுசீரமைப்பது அவசியமாகும்.

போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு, முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதன் பேரில் தொழிலாளர்களால் ஒரு ஒருங்கிணைந்த சர்வதேச போராட்டத்தை உருவாக்குவது அவசியமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய மையங்கள் உட்பட தெற்காசியா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும், தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இதேபோன்ற தாக்குதலை எதிர்கொள்கின்றனர். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இலங்கையில் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களும் இணைய வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த புரட்சிகர பணிகளை மேற்கொள்வதற்கு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி ஊட்டுவதற்கும் தயார்படுத்துவதற்கும் இந்த தேர்தல் பிரச்சாரத்தை பயன்படுத்தும். தொழிலாளர்கள், மாணவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் அனைவருக்கும், சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் அதில் பங்கேற்குமாறும், கத்தரிக்கோல் சின்னத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களிக்குமாறும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ள விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அனைத்து அரசியல் கைக்கூலிகளுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு, ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியம் என்பதே, 2022 எழுச்சியின் பிரதான படிப்பினையாகும். சோசலிச சமத்துவக் கட்சி, வரவிருக்கும் போராட்டங்களில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்க, கட்சியையும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பையும் கட்டியெழுப்ப இந்த தேர்தல் பிரச்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளும்.

Loading