ஆசிரியர்களுக்கு எதிரான இலங்கை ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களை நடவடிக்கை குழு கண்டனம் செய்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலவசக் கல்வியைக் காப்பதற்கான ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் நடவடிக்கை குழுவின் (TSPAC) உறுப்பினர்களாகிய நாம், 250,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களுக்கு எதிரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க [AP Photo/Eranga Jayawardena]

சம்பள அதிகரிப்பு, மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களின் செலவைக் குறைத்தல் மற்றும் பொதுக் கல்விக்கான அரசாங்க செலவினங்களை அதிகரிப்பதற்குமான எமது கோரிக்கைகளுக்கு முற்றிலும் எதிராக இருக்கும் விக்கிரமசிங்க, ஜூலை 3 அன்று கொழும்பில் ஆயிரக்கணக்கான கல்வியியலாளர்களின் கூட்டத்தில் தனது சமீபத்திய அச்சுறுத்தலை வெளியிட்டார்.

“நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரும் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாடசாலைக் கல்வியை சீர்குலைக்கக் கூடாது. இந்த பிரச்சினை தொடர்பான நடவடிக்கைகளை முன்மொழியுமாறு நான் சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளேன்,” என்று அவர் அறிவித்தார், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் “நியாயமற்றது” என்றும் அவர் கூறினார்.

2022 இல் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருப்பதாலும், அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அண்மையில் 10,000 ரூபா ($32.84) கொடுப்பனவு வழங்கப்பட்டதாலும், “நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேலும் அதிகரிப்பு சாத்தியமில்லை” என்றும் விக்கிரமசிங்க கூறினார்.

ஆசிரியர்களை இனப் பாகுபாட்டின் மூலம் பிளவுபடுத்த முற்பட்ட அவர், “தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் வேலை நிறுத்தங்கள் நடக்கவில்லை... [ஆனால்] சிங்கள-மொழி பாடசாலைகள் இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது” என்று கூறி இனவாத துருப்புச் சீட்டைப் பயன்படுத்தினார்.

கொழும்பில் ஜூன் 26 அன்று, சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த, பல்லாயிரக்கணக்கான வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்கள் மீது பொலிசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடர்ந்து விக்கிரமசிங்கவின் சமீபத்திய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதலில் தங்களது கண்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டவர்கள் உட்பட டஸின் கணக்கான ஆசிரியர்கள் காயமடைந்தனர்.

மறுநாள், அஸ்கிரிய பீடத்தின் பிரதான பௌத்த பீடாதிபதியை சந்திப்பதற்கு விஜயம் செய்த விக்ரமசிங்க, அரசாங்கத்தின் கொடூரமான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் (EPSA) கீழ் கல்விச் சேவையை கொண்டு வரப்போவதாக எச்சரித்தார். இந்த அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அதை மீறுபவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனைகள், கடுமையான அபராதங்கள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகளை அபகரிப்பது போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம்.

26 ஜூன் 2024 அன்று, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியே நடந்த ஆசிரியர்களின் போராட்டத்தின் ஒரு பகுதி [Photo: WSWS]

ஆசிரியர்களுக்கு எதிரான விக்கிரமசிங்கவின் அச்சுறுத்தல்களைக் கண்டிப்பதுடன் இப்போது ஊதியங்கள் மற்றும் தங்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலாக அதை அடையாளம் காணுமாறும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் நாம் வலியுறுத்துகிறோம்.

அண்மையில், விக்கிரமசிங்க அரசாங்கம் சுகாதாரம், மின்சாரம் மற்றும் பெட்ரோலிய துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டுள்ளது. ரயில் மற்றும் பிற பொது போக்குவரத்துகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விக்கிரமசிங்க, கல்வியாளர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும், அவர்களின் பொறுப்புகள் மற்றும் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிடுமூஞ்சித்தனமாக அறிவுறை வழங்குகிறார். என்ன திமிர்! உழைக்கும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினர் மற்றும் ஏழைகளைப் போலவே ஆசிரியர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை ஈடுகட்ட மிகவும் சிரமப்படுகின்றனர்.

2022 இல், 100 நாள் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தின் பின்னர், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கம் அவர்களின் சம்பளக் கோரிக்கைகளில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே வழங்கியது. அது அவர்களின் தரங்களுக்கு ஏற்ப 3,000 முதல் 15,000 ரூபா வரையான மிகக் குறைந்த அதிகரிப்பு ஆகும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் செலுத்துவதாக உறுதியளித்த போதிலும் அது நடக்கவில்லை.

விண்ணை முட்டும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் பாரிய சீரழிப்புகளுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க கோபத்தை எதிர்கொண்ட விக்கிரமசிங்க, ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்கினார். இந்த அடிப்படையில், ஆசிரியர்களும் ஏனைய தொழிலாள வர்க்கமும் இப்போது ஓரளவு தன்னிறைவு பெற்ற நிலையில் இருப்பதாக அவர் வலியுறுத்துகிறார். இது என்ன ஒரு கேலிக்கூத்து!

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வில், ஒரு தனிநபருக்கு மிகவும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள குறைந்தபட்ச மாத வருமானம் 16,619 ரூபாய் தேவைப்படுகிறது, அதாவது ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 85,000 ரூபாய் தேவைப்படுகிறது என அறிவித்துள்ளது.

கடன் மீள் செலுத்துகை கழிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியம் சிறியதாக இருப்பதால், பலர் தங்கள் அடிப்படை வாழ்க்கைச் செலவினங்களுக்காக தனியார் கல்வி வகுப்புகள் நடத்த அல்லது மேலதிக வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். குறைந்த சம்பளம் காரணமாக கடந்த ஆண்டு சுமார் 5,000 ஆசிரியர்கள் தங்கள் தொழிலை இராஜினாமா செய்துள்ளனர்.

விக்கிரமசிங்க மாணவர்கள் மீது அனுதாபம் காட்டி, அவர்கள் தொடர்ச்சியான கல்வியைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், அவரது அரசாங்கம் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலைமையை கடுமையாக மோசமாக்கியுள்ளது.

சமீப ஆண்டுகளில் புத்தகங்கள் மற்றும் பிற தேவைகளான காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகள் உட்பட அடிப்படைப் பாடசாலைப் பொருட்களின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளன அல்லது சில சமயங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதன் காரணமாக, வறுமையில் வாடும் குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலக தள்ளப்பட்டுள்ளனர். அரசு நிதி மிகவும் குறைவாக இருப்பதால், பாடசாலை நிர்வாகங்கள், கட்டடம் சீரமைப்பு மற்றும் இதர தேவைகளுக்கான செலவை பெற்றோர்களிடம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தமானது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை விக்கிரமசிங்க கொடூரமாக அமுல்படுத்தியதன் மூலம் உருவாக்கப்பட்ட நிலைமை ஆகும். இந்த சமூகத் தாக்குதல்களுக்கு இணங்க, வரி அதிகரிப்பு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்தல், தனியார்மயமாக்குதல் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளுக்கான நிதிகளை வெட்டுவதன் மூலமும் அரசாங்கம் பெரும் வருவாயை ஈட்டுகிறது.

இது எதற்காக? பெரிய வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் இலாபத்தை உயர்த்தவும் இது முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கு எதுவும் செய்யவில்லை.

இலவச பொது சுகாதாரத்தைப் போலவே, இலவச பொதுக் கல்வியும் இப்போது வெட்டுப் பலகை மீது வைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய சமூக சேவைகள் மீதான தாக்குதல்கள், 1980களின் தொடக்கத்தில் இருந்து தீவிரமடைந்து வருகின்றன. இது ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியினால் கோரப்பட்ட “திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை” நடைமுறைப்படுத்தியதன் மூலம் தொடக்கி வைக்கப்பட்டது.

ஜயவர்தனவின் கல்வி அமைச்சராக இருந்த விக்கிரமசிங்க, 1981 ஆம் ஆண்டு தனது “கல்வி வெள்ளை அறிக்கை” மூலம் பொதுக் கல்வியை தனியார்மயமாக்கும் திட்டங்களைத் தொடங்கினார். தொழிலாளர் வர்க்கம் பல தசாப்தங்களாக போராடி வென்ற உரிமையான இலவச பொதுக் கல்வியை முறையாக அழிப்பதற்காக இது ஒரு வரைபடமாக இருந்தது.

தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாரிய எதிர்ப்பு, விக்கிரமசிங்கவின் அனைத்து வெள்ளை அறிக்கை முன்மொழிவுகளையும் செயல்படுத்துவதைத் தடுத்த போதிலும், அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் பாடசாலைகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் கட்டணம் செலுத்தும் கற்கைநெறிகள் என்பன காளான்களாக வளர்ந்து வருவதை இலங்கை கண்டுள்ளது.

கொழும்பு அரசாங்கம், கல்விக்கான நிதியுதவியையும் வெகுவாகக் குறைத்துள்ளது. வருடாந்த வரவு செலவுத் திட்டம் 1981 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திலிருந்து 2010 இல் 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் இந்த ஒதுக்கீடு அடுத்த தசாப்தத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.2 சதவீதமாகக் குறையவுள்ளது.

இந்த தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஆசிரியர் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் நெருக்கடியை அவை மீண்டும் மீண்டும் ஒப்புக்கொண்டு பொதுக் கல்வியைப் பாதுகாப்பதைக் கைவிட்டன.

2022 இல், இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU), மக்கள் விடுதலை முன்னணி சார்பு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் (CTSU), போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்த ஐக்கிய ஆசிரியர் சேவைகள் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள். அப்போதைய பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுடன் ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகள் தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தினர்.

கோவிட்-19 தொற்றுநோயால் நாட்டின் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்துள்ளதால், அரசாங்கத்திடம் பணம் இல்லை, என்ற இராஜபக்ஷவின் கூற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டதோடு பணவீக்கத்திற்கும் குறைவான சம்பள உயர்வுக்கு ஒப்புக்கொண்டனர். விக்கிரமசிங்க இப்போது அதே கோரிக்கையை முன்வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தைத் திணிப்பின் மூலம் பொருளாதாரம் மீண்டு வளரும் வரை ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஆசிரியர் இடமாற்ற சபைகளை அரசாங்கம் கலைத்தமைக்கு எதிராக இலங்கை ஆசிரியர்கள் கொழும்பில், 22 மார்ச் 2023 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம். [Photo: WSWS]

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம், என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து, இந்த பொய்யான கூற்றின் மீது தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகள் உட்பட ஆசிரியர்களும் நடத்திய எத்தனையோ எதிர்ப்பு போராட்டங்கள் பயனற்றவையாகப் போயின.

அரசாங்கத்திற்கு “அழுத்தம்” கொடுக்கும் வகையில் ஏனைய அரச துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஆசிரியர் சங்க கூட்டணி அண்மைய சுகயீன விடுப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களும் நமது கோரிக்கைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் என்று பொய்யாக வலியுறுத்துகின்றனர்.

விக்கிரமசிங்கவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்த இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தினதும் தலைவர்கள், “அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அஞ்சவில்லை” என இடித்துரைத்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கும் அரசாங்கத்தை இந்த வெற்று தோரணை தடுத்து நிறுத்தாது.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தங்கள் நியாயமான உயர் ஊதியக் கோரிக்கைக்காகப் போராடுவதற்கும், பெற்றோர்கள் மீதான பொருளாதாரச் சுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இலவச பொதுக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் ஒரு உண்மையான வேலைத்திட்டம் அவசியமாகும்.

முதலாளித்துவ ஆதரவு அமைப்புகளான தொழிற்சங்கங்களின் கைகளில் விட்டுவைத்தால் இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை நடத்த முடியாது என்று இலவசக் கல்வியைக் காப்பதற்கான ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர்களின் நடவடிக்கை குழு வலியுறுத்துகிறது. கடந்த கால மற்றும் நிகழ்கால போராட்டங்களில் இருந்து இது அத்தியாவசியமான அரசியல் படிப்பினை இதுவே ஆகும்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை நிறுவவும், இலவச பொதுக் கல்வி மற்றும் கண்ணியமான சம்பளம் மற்றும் அனைத்துக் கல்வி ஊழியர்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பல பில்லியன் ரூபாய்களை ஒதுக்கவும் வேண்டும் என்று நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இதை அபிவிருத்தி செய்ய முடியும். அதனால்தான், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இலாப அமைப்பை தூக்கி நிறுத்துவது உட்பட அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய கோரிக்கைகளைத் தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.

உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியான உங்கள் நெருக்கடிக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஆசிரியர்களும் அனைத்து உழைக்கும் மக்களும் கூறும் அதே நேரம், சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்.

இலவசக் கல்வியை காப்பதற்கான ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் நடவடிக்கை குழுவானது ஜூலை 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஒரு இணையவழி கூட்டத்தை நடத்தியது. அதல் இந்த முன்னோக்குப் பற்றி கலந்துரையாடப்பட்டது. அந்த கூட்டத்தை இந்த இணைப்பில் செவிமடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading