சோ.ச.க./IYSSE (இலங்கை) போக்டன் சிரோடியுக்கை உடனடியாக விடுவிக்கக் கோரும் சக்திவாய்ந்த கூட்டத்தை நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் ஜூலை 7 அன்று உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோரி மண்டபம் நிறைந்த பகிரங்க கூட்டமொன்றை நடத்தியது.

இலங்கை, கொழும்பில், 7 ஜூலை 2024 அன்று சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. போக்டனை விடுதலை செய்யக் கோரி நடத்திய பகிரங்க கூட்டம். [Photo: WSWS]

போக்டன், ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஏனைய நாடுகளில் செயல்படும் ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் இன் முன்னணி உறுப்பினர் ஆவார். ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் பாசிச உக்ரேனிய அரசாங்கத்தின் அரச இரகசிய சேவையான SBU, ஏப்ரல் 25 அன்று 25 வயதான சிரோடியுக்கை கைது செய்தது. அவர் தற்போது தெற்கு உக்ரேனில் உள்ள மைகோலயவ்வில் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜூன் நடுப்பகுதியில், வை.ஜி.பி.எல். அரசியல் உடன்பாடுகொண்ட உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகள், அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் துருக்கியிலும் உக்ரேனிய தூதரகங்களுக்கு வெளியே சிரோடியக்கை உடனடியாக விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

இலங்கையில் நடைபெற்ற கூட்டம் கொழும்பில் உள்ள தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இது கட்சியின் முகநூல் பக்கத்தில் ஒரே நேரத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இக்கட்டுரையை எழுதும் நேரத்தில், கூட்டத்தை 2,200க்கும் மேற்பட்டவர்கள் முகநூலில் பார்த்திருந்ததுடன் கிட்டத்தட்ட 200 பேர் பகிர்ந்திருந்தனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலாளர் சமன் குணதாச, சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜெயசேகர ஆகியோரின் உரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ போருக்கு எதிராக உக்ரேனிலும் ரஷ்யாவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்காக போராடியதற்காகவும் இரு நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக போராடியதற்காகவும் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டு அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்பதை விளக்கி குணதாசா நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

சோ.ச.க. துணைச் செயலாளர் சமன் குணதாச [Photo: WSWS]

“தோழர் போக்டனுக்கு தகவல்தொடர்புகள் மறுக்கப்பட்டுள்ளதுடன் அவருக்காக வாதாடுவதற்காக தொடர்பு கொண்ட வழக்கறிஞர்கள் செலென்ஸ்கி ஆட்சியின் அடக்குமுறையின் காரணமாக முன்வரத் தயங்கினார்கள்,” என்று அவர் கூறினார்.

“உக்ரேனிய ஆட்சியானது, சிரோடியுக்கும் உலக சோசலிச வலைத் தளமும் ரஷ்ய அரசாங்கத்தின் முகவர்கள் என்று ஒரு துளி ஆதாரமும் இல்லாமல் போலியாக குற்றம் சாட்டியுள்ளது. ஜூன் 3 முதல் உக்ரேனில் உலக சோசலிச வலைத் தளத்திற்குள் பிரவேசிப்பதும் தடை செய்துள்ளது,” என்று அவர் விளக்கினார்.

யுத்தம் தொடங்கியதில் இருந்து 500,000 உக்ரேனிய படைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போருக்கு பெரும் எதிர்ப்பு இருப்பதாகவும் குணதாச கூட்டத்தில் கூறினார். “இந்தச் சூழலில் போக்டனின் புரட்சிகர தலையீடு செலென்ஸ்கி ஆட்சியில் எச்சரிக்கை மணியை அடித்தது. இந்த சூழ்நிலைதான் அவரை கைது செய்ய அதிகாரிகளை தூண்டியது,’' என அவர் கூறினார்.

IYSSE சார்பில் பேசிய சகுந்த ஹிரிமுத்துகொட, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரின் உண்மையான தன்மையை கோடிட்டுக் காட்டினார்.

“தோழர் சிரோடியுக் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 25 முதல் எழுபத்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. இந்த நடவடிக்கை உக்ரேனிய ஆட்சியின் ஜனநாயக விரோதத் தன்மையை சுட்டிக் காட்டுகிறது,” என அவர் தெரிவித்தார்.

சகுந்த ஹிரிமுத்துகொட [Photo: WSWS]

தோழர் பொக்டனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஹிரிமுத்துகொட எச்சரித்தார். செலென்ஸ்கி ஆட்சி எண்ணற்ற “காணாமல் ஆக்குதல்”, எதேச்சதிகாரமான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள், அத்துடன் சிறைகளில் சித்திரவதை, மனிதாபிமானமற்ற நடத்தை மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை மேற்பார்வையிட்டது.

“16 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது, கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு வயது 27 லிருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து மக்களும் போருக்குச் செல்வது குறித்து அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.

“பெரும்பான்மையான சாதாரண உக்ரேனியர்கள் தினசரி தங்கள் உறவினர்களும் அன்புக்குரியவர்களும் உயிரழப்பதைப் பார்க்கிறார்கள். அதனால் ஒரு போர் எதிர்ப்பு மனநிலை பரவுகின்றது. எவ்வாறாயினும், ஏகாதிபத்திய சக்திகள் உலகை மறுபங்கீடு செய்யும் தமது வியாபாரத்திற்கு இன்றியமையாத செலவாக இந்த உயிரிழப்புகளை கருதுகின்றன,” என்று ஹிரிமுத்துகொட கூறினார்.

பிரதான உரையை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர ஆற்றினார், அவர் சிரோடியுக் கைது செய்யப்பட்டிருப்பது “நமது உலக இயக்கத்தின் மீதான, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மீதான தாக்குதல்” என்று கூறினார்.

சிரோடியுக், புட்டின் ஆட்சியின் முகவர் என்ற செலென்ஸ்கி ஆட்சியின் குற்றச்சாட்டு ஒரு அப்பட்டமான பொய்யாகும். “WSWS இற்கு போக்டன் எழுதிய கட்டுரைகள், அவர் உக்ரேனிய மற்றும் ரஷ்ய ஆட்சிகளுக்கு சளைக்காத எதிர்ப்பாளர் என்பதை தெளிவுபடுத்துகிறது” என்று ஜயசேகர கூறினார்.

சோ.ச.க. பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர [Photo: WSWS]

WSWS ஒரு “ரஷ்ய பிரச்சார மற்றும் தகவல் நிறுவனம்” என்ற SBU குற்றப்பத்திரிகையை சவால் செய்த ஜயசேகர, ரஷ்ய படையெடுப்பிற்கும் உக்ரேனிய மற்றும் ரஷ்ய முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் வலைத் தளத்தின் கொள்கை ரீதியான எதிர்ப்பை மதிப்பாய்வு செய்தார்.

24 பெப்ரவரி 2022 அன்று, ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்த நாளில், அந்த இராணுவத் தலையீட்டைக் கண்டித்து, WSWS இல் வெளியிடப்பட்ட அனைத்துலகக் குழுவின் அறிக்கையிலிருந்து அவர் மேற்கோள் காட்டினார். “அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, சோசலிஸ்டுகளாலும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களாலும் எதிர்க்கப்பட வேண்டும்” என்று அறிக்கை கூறியது.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் அதன் தொடக்கத்திலிருந்தே சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளுக்காகப் போராடியதாக ஜயசேகர கூறினார். “இந்த வரலாற்றை அறிந்த எவரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தையும், 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் தோன்றிய உக்ரேன் மற்றும் ரஷ்யா உட்பட முதலாளித்துவ அரசுகளையும் உறுதியாக எதிர்த்து வருவதை அறிவர்,” என்று அவர் மேலும் கூறினார்.

“உக்ரேனின் அரச பாதுகாப்பு சேவையான SBU, சிரோட்டியுக்கிற்கு எதிரான தங்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருக்கிறது. 1936-38 மொஸ்கோ விசாரணைகளின் போது, நாஸி ஜேர்மனியின் முகவர்கள் என்று குற்றம் சாட்டி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக அப்போதைய ஆளும் சோவியத் அதிகாரத்துவம் பொய்களை சோடித்ததைம் போலவே போக்டனை பலிகடா ஆக்குவதற்கு அவர்கள் பொய்களை நாடுகிறார்கள்,” என்று பேச்சாளர் கூறினார்.

உக்ரேனுக்குள் வளர்ந்து வரும் போர்-எதிர்ப்பு பற்றிய சர்வதேச ஊடக அறிக்கைகளைக் சுட்டிக்காட்டிய ஜயசேகர, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போருக்கு எதிராக உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களை ஒன்றிணைக்க போக்டன் நடத்தும் போராட்டத்தின் மூலம் அந்த எதிர்ப்புக்கு அரசியல் வெளிப்பாடு கிடைக்கும் என்று செலென்ஸ்கி ஆட்சி பீதியடைந்துள்ளது என்றார்.

“உக்ரேன் ஒரு ஜனநாயக நாடு என்ற நேட்டோவின் கூற்றுக்கு மாறாக, செலென்ஸ்கி ஆட்சி ஒரு சர்வாதிகாரமாகும். இது இராணுவச் சட்டத்தின் மூலம் ஆளுவதோடு உக்ரேனில் அனைத்து சோசலிச மற்றும் இடதுசாரி அமைப்புகளும் தடைசெய்யப்பட்டுள்ளன” என்று பேச்சாளர் கூறினார்.

போக்டானை விடுவிப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் உலகளாவிய பிரச்சாரம் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று ஜயசேகர விளக்கினார். ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ போர், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஏகாதிபத்திய ஆதரவு இனப்படுகொலைப் போர் மற்றும் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளும், வளர்ந்து வரும் ஏகாதிபத்திய உலகப் போரின் அங்கங்கள் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, இந்த வளர்ந்து வரும் உலகப் போரின் அபாயத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய அனைத்து பிரிவுகளுடனும் இணைந்து போராடுகிறது என்று அவர் தெரிவித்தார். இலங்கை, இந்தியா மற்றும் தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் புத்திஜீவிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி/நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்து இந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்து ஜயசேகர உரையை முடித்தார்.

நேரடி கேள்வி பதில் கலந்துரையாடலுக்குப் பிறகு, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரச்சாரத்திற்காக 10,500 ரூபாயை ($US35) வழங்கியதுடன் 7,465 ரூபாய்களுக்கு இலக்கியங்களை வாங்கினார்கள். அனைத்து பங்கேற்பாளர்களும் “போக்டனை விடுதலை செய்” என்ற இணையவழி மனுவில் கையொப்பமிடுவதோடு சர்வதேச பிரச்சாரத்திற்கான ஆதரவு அறிக்கைகளை அனுப்புமாறு தலைவர் விடுத்த வேண்டுகோளுடன் நிகழ்வு நிறவடைந்தது.

Loading