சிறந்த சம்பள உயர்வை வென்றெடுக்கவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்வோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சம்பள உயர் மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், இன்றும் நாளையும் வேலைநிறுத்தம் செய்யும் இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுடன் சோசலிச சமத்துவக் கட்சி இணைந்து கொள்கின்றது. இந்த வேலைநிறுத்தத்தில் அரச, அரை-அரச மற்றும் மாகாண அரசாங்கத் துறைகள், சுகாதாரத் துறை மற்றும் தபால் ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுமாக சுகயீன விடுமுறையில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26 ஜூன் 2024 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் செய்த ஆசியரியர்களின் ஒரு பகுதியினர். [Photo: WSWS]

கடந்த இரண்டு ஆண்டுகளாக வானளாவ உயர்ந்துள்ள பணவீக்கம், பெரும் வரிச்சுமை, மின்சாரம், தண்ணீர் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களும் அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளினதும் வாழ்க்கை நிலமையை பாதாளத்துக்குள் தள்ளியுள்ளன. அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவுகள் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன.

அரச ஊழியர்கள் சம்பள உயர்வுக்கான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ள போதிலும், ஜனாதிபதி விக்கிரமசிங்க, “இந்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பணம் இல்லை” என்று மீண்டும் மீண்டும் மிரட்டுகிறார்.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதே அவரது கவலை ஆகும். அதாவது, முதலாளித்துவ நெருக்கடிக்கு ஒட்டுப் போடுவதற்காக சர்வதேச நிதிய தன்னலக்குழுக்களிடம் இருந்து பெற்ற பெரும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும் முதலாளித்துவ பெரும் வணிகர்களின் இலாபத்தை அதிகரிப்பதற்காகவும் பொதுமக்களை நெருக்குவதன் மூலம் அரச திறைசேரியை நிரப்புவதைப் பற்றியே அவர் அக்கறை காட்டுகிறார்.

தங்களுக்கான சிறந்த வாழ்க்கை நிலைமைகளை வென்றெடுப்பதற்காக கடந்த ஆண்டு முதல் அரச ஊழியர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை எண்ணுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. தொழிலாளர்கள் மத்தியல் வளர்ந்து வரும் எதிர்ப்பின் மத்தியிலேயே தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளச் செய்து கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற மாயையை பரப்பியே இந்த தொழிற்சங்கப் நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுத்துள்ளன.

விளைவு என்ன? இது ஒரு வெற்றுப் பிரச்சாரம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்று தெரிந்தே தொழிற்சங்கத் தலைவர்கள் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இந்த தொழிற்சங்கத் தலைவர்களில் அநேகமானோர், சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, இராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். அனைத்து பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும் இந்த மூர்க்கத்தனமான வேலைத்திட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் உள்ளன. அவை, இந்தப் போராட்டங்களை ஒன்றுடன் ஒன்று தனிமைப்படுத்தி சிதறடிக்கவும் தொழிலாளர்களின் கோபத்தைத் தணித்து கரைத்துவிடும் நோக்கிலுமே இந்த நாள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

தொழிலாளர்கள் உண்மையான அக்கறையுடனேயே இந்த இரண்டு நாள் போராட்டத்திற்கு இறங்கியுள்ளார்கள். தொழிலாளர்களின் பெருகிய எதிர்ப்பிற்கு மத்தியிலேயே இந்த இரண்டு நாள் சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், இதை அரச ஊழியர்களின் “பொது வேலைநிறுத்தம்” என்று அறிக்கை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும், தொழிற்சங்க அதிகாரிகள் எந்தவொரு கூட்டு நடவடிக்கையையும் ஒழுங்கமைக்க அல்லது பொதுவான கோரிக்கைகளை முன்வைக்க மறுத்துவிட்டனர். அவர்களைப் பொறுத்தளவில் இந்தச் நடவடிக்கைக்கு அவர்கள் அழைப்பு விடுத்தது தொழிலாளர்களின் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் மற்றொரு தந்திரமாகும்.

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் கூட்டு, ஆசிரியர்-அதிபர் சங்கங்களின் ஒன்றியம், ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் முன்னணியும் இந்த வரையறுக்கப்பட்ட கூட்டு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த பரந்த வேலை நிறுத்தத்தின் மூலம். தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர். இது தொழிலாளர்களை சிக்க வைக்கும் மற்றொரு மாயை ஆகும். கோரிக்கைகளை வழங்குவதற்கு பணமில்லை என மீண்டும் எச்சரித்துள்ள விக்கிரமசிங்க, முடிந்தால் தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கலாம் எனக் கூறியுள்ளார். இது ஒரு பொய் ஆகும்.

ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தியும் தேர்தலில் தமது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று கூறுகின்றன. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கட்சிகள் முன்னெடுக்கும் இத்தகைய பிரசாரத்திற்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஆகும். சொத்து வரி உட்பட வரிவிதிப்பை மேலும் அதிகரித்தல், அனைத்து அரச நிறுவனங்களையும் தனியார்மயமாக்குதல், இலட்சக்கணக்கான அரசாங்க தொழில்களை வெட்டுதல், மீதமுள்ள தொழிலாளர்கள் மீது அதிக வேலை சுமைகளை ஏற்றுதல் மற்றும் இலவச மருத்துவத்திலும் இலவசக் கல்வியிலும் எஞ்சியுள்ளதையும் இல்லாமல் ஆக்குதல் ஆகியவை சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்தில் மீதமுள்ள கட்டளைகளாகும்.

விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தாலும், ஐ.ம.ச. அல்லது ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தாலும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்புகள் இன்னும் கொடூரமாக நசுக்கப்பட்டு, சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. அப்படி நடக்காது என்ற எந்த மாயையும் இருக்கக் கூடாது!

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளால் முதலாளித்துவ முறைமையின் கீழும் பாராளுமன்ற கட்டமைப்பிற்குள்ளும் தங்களது வாழ்க்கை நிலைமைகள், சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. முன்னெப்போதும் இல்லாத முதலாளித்துவ நெருக்கடியின் சுமையே பொதுமக்கள் மீது திணிக்கப்படுகிறது. இந்த பொருளாதார பேரழிவானது ஆழமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாகவே வெடிக்கின்றது. நீடித்த கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேன் பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-நேட்டோ சக்திகள் முன்னெடுக்கும் போரினாலும் இந்த நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகள், உலகைப் பங்கீடு செய்துகொள்ளும் போர்களுக்குத் தயாராகின்றன. இந்த நெருக்கடியின் சுமையை தங்கள் மீது சுமத்துவதற்கு எதிராக அந்த நாடுகள் உட்பட ஒவ்வொரு நாட்டிலும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் கிளர்ந்து எழுகின்றன.

இதற்கு சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதுதான் ஆளும் அரசாங்கங்களின் பதிலடியாக இருக்கின்றது. விக்கிரமசிங்க, அத்தியாவசிய சேவை ஆணைகளைக் கொண்டு ஆசிரியர்களைக் அடக்குவதாக அச்சுறுத்துவது வெற்று வார்த்தை அல்ல. உலகம் பூராவும் நடப்பது போலவே இலங்கையின் ஆட்சியாளர்களும் இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது ஒருமுறை இரண்டு முறை அல்ல.

இந்த நெருக்கடியின் சுமையை திணிப்பதை எதிர்த்துப் போராட, தொழிலாள வர்க்கத்திற்கு மாற்று வேலைத்திட்டம் ஒன்று தேவை. “வர்க்கப் போராட்டங்களை எதிர்வரும் தேர்தல்களுக்கு அடிபணியச் செய்யும் இலங்கை தொழிற்சங்கங்களின் முயற்சியை எதிர்த்திடு! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்! சோசலிச கொள்கைகளுக்காகப் போராடு!” என்ற தலைப்பில் ஜூன் 26 வெளியிட்ட அறிக்கையில் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன அவையாவன:

*சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள அனைத்து சிக்கன நடவடிக்கைகளையும் இரத்துச் செய்!

*அனைத்து தொழிலாளர்களுக்கும் 100,000 ரூபாயில் தொடங்கி வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கும் வாழக்கூடிய ஊதியத்தை உறதிப்படுத்து!

*அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! கடனை செலுத்துவதற்குப் பதிலாக, உழைக்கும் மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், மின்சாரம், தண்ணீர், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் விகிதங்களைக் குறைக்க நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.

*பயனுள்ள கல்வி மற்றும் சிறந்த சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும், கிராமப்புற விவசாயிகளுக்கு உரங்களை வழங்கவும், விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்தவும், போதுமான நிதியை வழங்குவதற்காக அனைத்து மானியங்களையும் மீண்டும் அமுல்படுத்து!

*,வேலை வழங்கவும் உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பெரிய தொழில்துறைகளை கையகப்படுத்தி, தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வைத்திடு!

* சிறந்த மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்!

* கிராமப்புற விவசாயிகளதும் சிறு தொழில் முனைவோரதும் கடன்களை இரத்து செய்!

இந்தக் கோரிக்கைகளை முதன்மையாகக் கொண்டு, விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கும் எதிராக ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்வது இன்றியமையாததாகும்.

ஒரு போலி வேலைத்திட்டத்தில் உறுப்பினர்களை கட்டுப்படுத்தி வைப்பதற்காவே தலைவர்களால் தொழிற்சங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்சங்கங்களின் வேலைத்திட்டம், அவற்றின் அதிகாரிகளால் அவர்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகிறது. உறுப்பினர்களுக்கு ஜனநாயக உரிமைகள் கிடையாது. அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்வதையும் எதிர்ப்பர். அரசாங்கத்துடன் முரண்படுவது ஏற்புடையதல்ல என்று கூறுவார்கள். தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ அரசின் ஒரு அங்கமாகவே செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் விட்டுவைக்க முடியாது. தங்களது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக ஒவ்வொரு வேலைதை தளத்திலும் நிறுவனங்களிலும் பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

ஜூன் 26 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை கூறியதாவது:

“ஒரு வெற்றிகரமான அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு, தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கை குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னோக்கிச் செல்வது அவசியமாகும்.” “தங்களின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும் போருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டியது அவசியமாகும்.”

இந்த அறிக்கையை வாசித்து எங்களுடன் விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading