சம்பள அதிகரிப்பைக் கோரி இலங்கையில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த செய்வாய் அன்று, இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இருந்து மூவாயிரத்திற்கும் அதிகமான கல்வி சாரா ஊழியர்கள் 15 சதவீத சம்பள அதிகரிப்பையும் தமது மாதாந்த இழப்பீட்டு கொடுப்பனவில் (MCA) 25 சதவீத அதிகரிப்பையும் கோரி கொழும்பில் உள்ள நிதி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மே 12 ஆம் திகதியில் இருந்து வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும்படி பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்து, அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழக ஊழியர்களுக்கோ அல்லது ஏனைய அரச துறை தொழிலார்களுக்கோ ஊதிய அதிகரிப்பு வழங்க தீர்க்கமாக மறுத்த இலங்கை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டகாரர்களை பயமுறுத்த ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதம் ஏந்திய பொலிஸ் மற்றும் துருப்புக்களை அணிதிரட்டினார்.

கண்ணீர் புகை முகக் கவசம் அணிந்தும் துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வைத்திருந்த பொலிஸார், தம்மருகே பல நீர்த்தாரை வாகனங்களுடன் போராட்டக்காரர்களை சுற்றிவளைத்து நின்றனர். அந்த வாகனங்களைக் கடந்து சென்ற தொழிலாளர்கள் கண்வலியால் பாதிக்கபட்டதாக தெரிவித்தனர். இது பொலிஸார் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்துவதற்கு விஷம் கொண்ட இரசாயணங்களை தயார் நிலையில் வைத்திருந்திருந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆர்ப்பாட்டம் வளர்ச்சியடையும் போது அந்தப் பிரதேசத்தில் மேலதிகமான கலகம் அடக்கும் பொலிஸ் படையும் அணிதிரட்டப்பட்டிருந்தது.

இந்த பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் “பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்பு”, “சம்பள முரண்பாட்டை தீர்த்துவை”, “எம்.சி.ஏ கொடுப்பனவை உடனடியாக அதிரி”, “எமது பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்து” மற்றும் “பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுத் தலைவரை அகற்று” ஆகிய பதாதைகளை ஏந்தியவாறு சுமார் 90 நிமிடங்கள்வரை தமது போராட்டத்தை வேலைநிறுத்தகாரர்கள் தொடர்ந்தனர்.

கொழும்பில் வேலை நிறுத்தம் செய்யும் பல்கலைக்கழக கல்வி-சாரா ஊழியர்களைப் பயமுறுத்த விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அணிதிரட்டப்பட்ட 1000ம் பொலிஸ் மற்றும் கடற்படையினர் மற்றும் நீர்த்தாரை வாகனங்கள். June 18, 2024 [Photo: WSWS]

எவ்வித சம்பள உயர்வும் கிடையாது என அரசாங்கம் வலியுறுத்திய போதும், பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் (UTUJC) தலைவர் அதன் ஆரம்பகட்ட கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கினார். பல UTUJC உத்தியோகத்தர்கள் இந்தப் போராட்டத்தின் வேளையில் நிதி அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தனர்.

UTUJC உப-தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த “எமக்கு கிடைத்த தகவலின் படி, எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரதான தடையாக இருப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரே ஆவார். நாம் அவரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு எமது போராட்டத்தை தொடர்வோம்” எனக் கூறினார்.

பல்கலைக்கழக நிர்வாக ஊழியர்கள் அமைப்பின் சார்பாக பேசிய சாணக ரொட்ரிகோ இதையே திரும்பக் கூறினார். அதாவாது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற விருப்பமற்றுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கூறியதாக தெரிவித்துள்ளார்.


[Photo]
https://www.wsws.org/asset/185d1f17-49e8-4ffd-8765-8b8fefc2b3cb?rendition=image1280
18 ஜூன் 2024, கொழும்பில் வேலைநிறுத்தம் செய்யும் கல்வி-சாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
[/Photo]

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அமரதுங்கவே பிரதான குற்றவாளி அவர் இராஜிநாமா செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் உட்பட ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களாலும் விடுக்கப்பட்ட அழைப்பானது, விக்கிரமசிங்கவை நியாயப்படுத்துவதற்கான ஒரு திசை திருப்பும் மூடிமறைப்பு ஆகும்.

விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட அதே சிக்கன நடவடிக்கை தாக்குதலை அமரதுங்கவும் பின்பற்றுவதாலேயே, இலங்கை ஜனாதிபதியால் பதவியில் அமர்த்தப்பட்ட அவர், தொழிற்சங்கங்களின் மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளை வழங்குவதற்கு பிடிவாதமாக மறுக்கின்றார்.

வேலைநிறுத்தம் செய்யும் பல்கலைக்கழக ஊழியர்களதும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் போராட்டமானது இந்த அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் என்பதையே மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. தமது ஊதியங்களை அதிகரிக்கவும் வேலைகள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்குமான ஒரே வழி, அரசாங்கத்திற்கு எதிராகவும் சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாள வர்க்கம் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பதே ஆகும்.

இந்தப் போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தொழிற்சங்கத் தலைமைத்துவம் நடத்திய கலந்துரையாடல் பற்றி சிலவற்றை சண்டே மோர்னிங் பத்திரிகைக்கு பிரியந்த கூறினார்.

“அரசாங்கத்தின் தற்போதைய நிதிப் பற்றாக்கறையை கருத்தில்கொண்டு இவ் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து 12 சதவீத எம்.சி.ஏ. அதிகரிப்புக்கும் மிகுதி 13 சதவீதம் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து அதிகரிக்கவும் உடன்பாட்டை அடைந்துள்ளோம்” என பிரியந்த கூறினார். வேறு வார்த்தையில் கூறுவதானால், தலைமைத்துவமானது உடனடியாக 25 சதவீத அதிகரிப்பை கோரும் வேலைநிறுத்தம் செய்பவர்களின் கோரிக்கையை கீழறுத்துள்ளது.

15 சதவீத சம்பள அதிகரிப்பானது அரசாங்கத்திற்கு 5 பில்லியன் ரூபாய் செலவை ஏற்படுத்துவதோடு, அரசாங்கத்தால் இந்தக் கோரிக்கைளை வழங்க முடியாது என்ற சுரேன் ராகவனின் கூற்றை தொழிற்சங்கங்க கூட்டின் தலைமைத்துவம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

“நாம் இதை ஏற்றுக்கொள்வதோடு ஒரு தனியான குழுவை உருவாக்கிய பின்பு இதை அடுத்த ஆண்டு செய்ய முடியும். தொழிற்சங்கங்களாக நாம் அரசாங்கத்தை நோக்கி கூடுமான அளவு வளைந்து கொடுத்துள்ளதை வெளிக்காட்டியுள்ளோம்” என பிரியந்த கூறினார்.

பிரியந்தவோ அல்லது ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களோ இந்த ஏற்ற-இறக்கங்கள் பற்றி தமது அங்கத்தவர்களுக்கு இதற்கு முன்பு வெளிப்படுத்தியதில்லை. மற்றும் 12 சதவீத எம்.சி.ஏ. கொடுப்பனவு தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியோ அது நிராகரிக்கபட்டது பற்றியோ அங்கத்தவர்களுக்கு தெரிவித்தது கிடையாது. ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் நடக்க வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்த போதும், திரைமறைவில் தொழிலாளர்களின் கோரிக்கையை கரைத்துவிட உத்வேகத்துடன் செயற்படுகின்றன.

இந்த மாதம் 14 திகதி நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டத்தில் அதன் அரசியல் குழு உறுப்பினர் டபிள்யு. ஏ. சுனில் இவ்வாறு கூறினார்: ”நெருக்கடிக்குள்ளாகியுள்ள முதலாளித்துவ அமைப்பு முறையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடையாது. இலங்கையில் நிதி நெருக்கடி உலகப் பொருாளாதார நெருக்கடியின் ஒரு பாகம் ஆகும். அத்தோடு இதே நெருக்கடி பிரதான ஏகாதிபத்திய நாடுகள் உட்பட ஏனைய நாடுகளில் உள்ள தொழிலாளர்களை தமது ஊதியங்கள், வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க போராடத் துாண்டியுள்ளது.

“தொழிலாளர்களின் பிரச்சினைகளை, நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்குப் பின்பு தீர்க்கமுடியும் என தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளும் ஊக்கிவிக்கின்ற பொய்ப்பிரச்சாரத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.“

“இந்தத் தேர்தல்களில் அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கமும் வெகுஜனங்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக, அது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதோடு தொழிலாளர்களின் போராட்டங்களை கொடூரமான அடக்கும். இலங்கையில் உள்ள சகல முதலாளித்துவக் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த உடன்பட்டுள்ளன. அவசியப்படுவது முதலாளித்துவ ஆட்சி கிடையாது. மாறாக, தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கமே ஆகும்” என்று சுனில் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலைத்தளத்திலும் தமது நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம் தமது போராட்டத்தை சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா ஊழியர்களை வலியுறுத்தியதோடு சோசலிச கொள்கைளுக்காக போராடுவதன் அவசியத்தையும் சுனில் தெளிவுபடுத்தினார்.

14 ஜூன் 2024 அன்று கொழும்பில் நடைபெற்ற 3000 கல்வி-சாரா ஊழியர்களின் பலம்வாய்ந்த ஆர்ப்பாட்த்தின் ஒரு பகுதி [Photo: WSWS]

செவ்வாய் அன்று, ஆர்ப்பாட்டம் செய்த பலர் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பியதோடு தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் விமர்சித்தனர்.

பேராதனைப் பல்பலைக்கழத்தில் இருந்து வந்திருந்த அனுருத்த குறிப்பிட்டதாவது: “போராட்டக்காரர்கள் நிதி அமைச்சுக்கு வரத் தொடங்கும் முன்னரே செய்வாய் அன்று நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க பொலிஸார் தாயர் நிலையில் வைக்கப்பட்டனர்.”

அரசாங்கத்தின் கொள்கைகள் தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது தெளிவானது ஆகும் என அவர் கூறினார். அது குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட வழங்க மறுப்பதால், தொழிலாளர்களை வீதிக்கு இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு தொழிலாளர்கள் அழுத்தம் கொடுக்க முடியும் என்ற எந்த முன்மொழிவும் பிழையானது என அவர் கூறினார்.

“அரசாங்கம் அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் என எப்படி நாம் நம்புவது” எனக் கேட்ட அவர், ”எமது கோரிக்கைகளை வெல்லாமல் நாம் வேலைக்குத் திரும்பமுடியாது” என தெரிவித்தார். நாம் தோற்கடிக்கப்பட்டு வேலைக்கு போவோமாயின் எமது விடுமுறை நாள் வெட்டப்படுவதோடு, எமக்கு எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாது. நாம் பொறுமையாக உள்ளோம், கடந்த இரு மாதங்களாக எமக்கு எந்தவித ஊதியமும் வழங்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தம் தோற்கடிக்கப்படுமாயின் பல்கலைக்கழகங்களில் போதுமான கல்வி-சாரா ஊழியர்கள் இல்லாமல், தொழிலாளர்கள் மேலும் அதிக வேலைச் சுமையை எதிர்கொள்வர் என அனுருத்த எச்சரித்தார். வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக, பல்கலைக் கழக அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் புதிய தொழிலாளர்களை உள்ளீர்க்கின்றனர்.

“பல்கலைக் கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது, நாம் கடமையில் ஈடுபட்டோம். ஆனால், அவர்களுக்கும் ஊதியப் பிரச்சினையும் ஏனைய பிரச்சினையும் உள்ளன. எமது வேலைநிறுத்தத்தை மேற்கோள் காட்டி நிர்வாகம் புதிய மாணவர்களின் அனுமதியை நிறுத்தியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு பொதுவான போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும்“ என்று அவர் தெரிவித்தார்.

கற்புல அரங்கேற்றல் கலை பல்கலைக்கழத்தின் ஒரு தொழிலாளி கூறியதாவது: “நேற்று நடந்த கலந்துரையாடல் பயனற்றது என நான் தெரிந்துகொண்டேன். பல கல்வி-சாரா ஊழியர்கள் கடன்களிலேயே வாழ்கின்றனர். எனக்குத் தெரிந்த பலர் வாழ்வதற்காக தற்காலிக வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

“சகல தொழிலார்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற உங்களுடைய முன்மொழிவுடன் நான் உடன்படுகின்றேன். தொலைத்தொடர்பு, மின்சாரம் மற்றும் நீர்பாசன திணைக்களத் தொழிலாளர்களும் தமது வேலை நிலைமைகளைப் பாதுகாக்க ஐக்கியப்பட்ட போராட்டத்தை தொடங்க வேண்டும். ஆனால், தொழிற்சங்கங்களிடம் இவ்வாறான வேலைத்திட்டம் கிடையாது.

“இந்தப் வேலைநிறுத்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிடுகின்னறனர் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. தொழிற்சங்கங்கள் எங்கே போய்கொண்டிருக்கின்றன என்பதுபற்றி எனக்கு எந்த யோசனையும் கிடையாது. வரவிருக்கும் நாட்களில் வேலைக்கு திரும்பும்படி அவர்களை நிச்சயமாக கேட்பார்கள்” என அனுருத்த கூறினார்.

ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ”செவ்வாய் அன்று நடந்த போராட்டத்தில் வடக்கில் யாழ்ப்பாணம் உட்பட தீவு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்துள்ளனர்”

“பல்கலைக்கழக மானியங்கள் அணைக்குழுவுக்கு முன்னால் போராட்டத்திற்கு வந்தபோது, முன்னதாகவே தொழிலாளர்களை விட பொலிசாரே அதிகம் நின்றனர். சுமார் 45 பொலிஸ் வாகனங்கள் அங்கே நின்றன” என அவர் கூறினார். பல்கலைக்கழக அதிகாரிகள் எமது போராட்டத்தை நசுக்குவதற்கு முன்கூட்டியே தயாரிப்பில் இருந்தனர் என விளக்கிய அவர், மின்சார சபையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட 62 இலங்கை மின்சார சபைத் தொழிலாளர்களை அரசாங்கம் இடைநிறுத்தம் செய்ததைச் சுட்டிக்காட்டினார்.

“எவ்வாறாயினும், கல்வி-சாரா ஊழியர்கள் தனிப்படுத்தப்பட்டிருந்தால் அந்த வேலைநிறுத்தத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாது. நிலைமை கடினமாக மாறுகின்றது. வேலைநிறுத்த்தில் ஈடுபடுபவர்கள் தமது வங்கிக் கடன்களை திரும்பச் செலுத்துவது எப்படி என்பது பற்றி சமூக ஊடகங்களில் கலந்துரையாடுகின்றனர். ஒரு புதிய வேலைத்திட்டத்தை கண்டுபிடிப்பதில் நான் ஆர்வத்தோடு உள்ளேன்“ என அவர் கூறினார்.

Loading