இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கல் நான்கு வருடங்களாக தொடர்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலாம்.

இலங்கையின் மத்திய பெருந்தோட்ட பிரதேசமான மஸ்கெலியாவில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல், 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கையுடன் நான்காவது ஆண்டை எட்டியுள்ளது. முன்னதாக ஜூன் 5 அன்று நடக்கவிருந்த நீதிமன்ற விசாரணை, ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

28 ஆகஸ்ட் 2022 அன்று மறியல் போராட்டம் நடத்துவதற்காக மஸ்கெலியாவில் சாமிமலை நகரை நோக்கி அணிவகுத்துச் செல்லும் தொழிலாளர்கள். [Photo: WSWS]

22 மார்ச் 2021 அன்று மொத்தமாக வேலைநீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த தோட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. இவர்களில் 22 தொழிலாளர்களின் பெயர்கள் நீதிமன்ற வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன.

15 பெப்ரவரி 2021 அன்று தோட்ட முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணன், உதவி முகாமையாளர் அனுஷன் திருச்செல்வம் ஆகியோரை அடித்ததாகவும், முகாமையாளரின் வீட்டை சேதப்படுத்தியதாகவும் 22 தொழிலாளர்கள் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக அன்றைய தினம் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் போதே தாக்குதல்கள் நடந்ததாக நாராயணனும் பொலிசும் கூறுகின்றனர். ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் உடனடியாக வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்தவும், சட்டக் குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளவும் கோரி ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்தன. இந்த பிரச்சாரம் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளதுடன், ஏராளமான மனுக்கள் மற்றும் கடிதங்கள் இலங்கை அரச அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இலக்கு வைக்கப்பட்ட ஓல்டன் தொழிலாளர்கள் மீதான அவர்களின் அடக்குமுறையைத் தொடர்வதற்கு தீர்மானித்த அரச அதிகாரிகளும் தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரண பெருந்தோட்டக் கம்பனியும் இந்த வேண்டுகோள்களை புறக்கணித்துள்ளன. கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணையை நடத்தத் தவறிய ஹொரண பெருந்தோட்டக் கம்பனி, தொழிலாளர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பதற்கான உரிமையை மறுத்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையின் சட்டமா அதிபர், பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.

23 ஜூன் 2023 அன்று ஹட்டனில் பெருந்தோட்ட இளைஞர்கள் பாதிக்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மனுவில் கையெழுத்திட்டனர். [Photo: WSWS]

இந்த விடயங்கள் முழு வழக்கிலும் புனையப்பட்டது என்பதையும், ஹொரண பெருந்தோட்டக் கம்பனி, பொலிஸ் மற்றும் இந்த தொழிலாளர்களை மேலாதிக்கம் செலுத்தும் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசினதும் (இ.தொ.கா) கூட்டு சதியின் ஒரு பாகம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. உண்மையில், அந்த நேரத்தில், உள்ளூர் இ.தொ.கா. தலைவர்கள் சில தொழிலாளர்களை பொலிஸில் சரணடையுமாறு கட்டளையிட்டனர்.

1,000 ரூபா நாள் சம்பளம் (அந்த நேரத்தில் 5 அமெரிக்க டொலர்களுக்கு சமம்) கோரி தோட்டத் தொழிலாளர்கள் நாடு தழுவிய பிரச்சாரம் செய்த போதே இந்த ஜனநாயக விரோதத் தாக்குதல் நடந்தது.

2 பெப்ரவரி 2021 அன்று, சுமார் 500 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, பெப்ரவரி 5 அன்று, இதே பிரச்சினையில் இ.தொ.கா. அழைப்பு விடுத்திருந்த தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலட்சக் கணக்கான இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் இணைந்தனர். ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறை மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக மார்ச் 26 வரை வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர்.

இந்த பழிவாங்கலில் ஹொரண பெருந்தோட்டக் கம்பனியுடனும் பொலிஸாருடனும் இ.தொ.கா. நேரடியாக ஒத்துழைத்த அதேவேளை, தேசிய தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (DWC), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட ஏனைய அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாக்க மறுத்து வாயை மூடிக்கொண்டன.

இந்த தொழிற்சங்கங்கள் பாராளுமன்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ளன. முதல் நான்கு சங்கங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதோடு, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி.) கட்டுப்படுத்தப்படுகிறது. இலங்கையில் உள்ள பல தொழிற்சங்கங்களில் ஒன்று கூட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் கட்டமைப்பு மற்றும் பலிவாங்கலை எதிர்க்க ஒரு விரலைக்கூட தூக்கவில்லை.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான ஆர். கவிதாமணி, உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் இப்போது தனது குடும்பம் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலை பற்றி கூறினார்.

“கடந்த மூன்று வருடங்களில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோட்டங்களில் தற்காலிக ஊழியர்களாக வேலை செய்கிறோம். அதாவது காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டும். மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு கூட திரும்பி வர முடியாது.

“இந்தச் சூழ்நிலையில் நாம் சம்பாதிக்கும் சிறு வருமானத்தில் நம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது அல்லது அன்றாடச் செலவுகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இப்போது எங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளால் இரண்டு மகன்களுக்கு படிப்பைத் தொடர முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

'அனைத்து தொழிற்சங்கங்களும் எங்களுக்கு துரோகம் இழைத்தன,' என்று மேலும் கூறிய அவர், ஹட்டன் தொழில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 'ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த வழக்குகளில் கலந்துகொள்ளும் போது ஒவ்வொரு தொழிலாளியும் பயணம் மற்றும் வழக்கறிஞர் கட்டணமாக சுமார் 4,000 ரூபாய் செலவழிக்க வேண்டும்,' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மற்றொரு தொழிலாளி கணேசன் கூறுகையில், 'நாங்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நிர்வாகம் மற்ற தோட்டங்களில் இருந்து தற்காலிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது ஆனால் அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் இல்லை. தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் பக்கம் உள்ளன, எங்கள் பக்கம் அல்ல.

2021 தேசிய வேலைநிறுத்தத்திற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் தினசரி ஊதியம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர். இந்த அதிகரித்து வரும் போர்க்குணத்தை எதிர்கொண்டு, ஹொரண பெருந்தோட்டக் கம்பனி ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையானது, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் (RPCs) சார்பில் அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் அச்சுறுத்தும் ஒரு திட்டமிடப்பட்ட முயற்சியாகும்.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளும இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் 1,000 ரூபாய் ஊதிய கோரிக்கையை எதிர்த்து, வருவாய் பங்கீடு மாதிரியை சுமத்துவதை வலியுறுத்தின. இத்திட்டத்தின் கீழ், 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தேயிலைச் செடிகளுடன் கூடிய நிலம் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. உரம் மற்றும் விவசாய இரசாயனங்கள் போன்ற உள்ளீடுகளை தோட்ட நிர்வாகம் வழங்கும்.

தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் தேயிலை செடிகளை பராமரிப்பதற்கும் கொழுந்து பறிப்பதற்கும் பொறுப்பாகும். தோட்ட நிர்வாகம் அதன் 'உள்ளீடுகளின்' செலவைக் கழித்துக்கொண்டு, அதன் பங்கையும் எடுத்துக்கொண்ட பிறகே தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கின்றது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் வெளிப்படையாக கம்பனிகளுடன் இணைந்து இந்த மிகவும் சுரண்டலான முறைமையை திணிக்க முயற்சிக்கின்றன.

ஓல்டன் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையில் பங்களிப்புச் செய்த தோட்டத் தொழிற்சங்கத் தலைமைகள், தோட்டத் தொழிலாளர்கள் மீது தொடரும் சம்பள வெட்டுக்கள், வேலைச் சுமை அதிகரிப்பு, சீரழிந்து வரும் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்படுவதை எதிர்ப்பதற்கான போராட்டங்களை தடுத்து நிறுத்தி, தோட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வருகின்றன.

ஓல்டன் தோட்ட வேட்டையாடலுக்குப் பிறகு, ஹட்டனில் உள்ள வெலிஓயா தோட்டத்தில் ஐந்து தொழிலாளர்கள் 2021 ஜூனில் கோவிட்-19 முடக்க காலத்தில் அரசாங்கத்தை உணவு நிவாரணத்தை ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

29 செப்டம்பர் 2021 அன்று, தலவாக்கலையில் உள்ள கட்டுகலை தோட்டத்தில் 11 தொழிலாளர்களை பொலிசார் கைது செய்தனர். தோட்ட நிர்வாகத்தால் பெண் தொழிலாளி பி. பொன்னீர்செல்வி பழிவாங்கப்படுவதை எதிர்த்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் தன்னிச்சையாக போராட்டங்களை ஏற்பாடு செய்த போதிலும், இந்த நடவடிக்கைகள் தொழிற்சங்கங்களால் முடித்து வைக்கப்பட்டன.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் உண்மையான சம்பளம், 2013 ஆம் ஆண்டை 100 புள்ளிகளின் அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொண்டால், 2023 ஆம் ஆண்டின் ஊதியம் நடுப்பகுதியில் 82 புள்ளிகள் வரை குறைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையானது, 2022 மார்ச்சில் தொடங்கிய இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெருந்தோட்டத் துறை மக்களின் குடும்ப வருமானம் 62.9 வீதத்தால் குறைந்துள்ள போதிலும், அவர்களின் செலவு 90.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.

2021 ஏப்ரலில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கோபத்தை தணிப்பதற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறையான 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வர்த்தமானியில் அறிவித்தார். பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே இந்த உயர்வை ஏற்றுக்கொண்ட போதிலும், தேயிலை பறித்தல் மற்றும் இறப்பர் பால் சேகரிப்புக்கும் சாத்தியமற்ற உயர் தினசரி இலக்குகளை திணிப்பது உட்பட பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி செலவுகளைக் குறைக்கின்றன. இலக்குகள் அடையப்படாவிட்டால், 1,000 ரூபாய் தினசரி ஊதியம் சுமார் 750 ரூபாய் அல்லது அதற்கு குறைவாகவும் குறைக்கப்படலாம்.

இப்போது விக்கிரமசிங்க அரசாங்கத்தால் சுமத்தப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளின் கீழ், நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுடன் 21 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளும் மறுகட்டமைக்கப்படும்.

சில தோட்டங்களை அகற்றி, அவற்றை சுற்றுலா தளங்களாக மாற்றுதலும் 'இலாபம் தரும்' தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களை மட்டும் பராமரிப்பில் வைத்துக்கொண்டு வெவ்வேறு பயிர்களை பயிர்செய்தலும் இதில் அடங்கும். இந்த 'சீர்திருத்தங்கள்' தற்போதைய ஒரு மில்லியன் பலம்வாய்ந்த பெருந்தோட்ட மக்கள் மற்றும் அதன் 115,000 சுறுசுறுப்பான தொழிலாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக வேலை அழிப்பு, ஊதிய வெட்டுக்கள் மற்றும் கடுமையான வேலை நிலைமைகளும் திணிக்கப்படும்.

வருமான பங்கீட்டு முறைமையின் தன் சொந்த வடிவத்தை முன்வைக்கும் விக்கிரமசிங்க அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களை சிறு நில உரிமையாளர்களாக மாற்றினால் வருமானம் மேம்படும் என்று பொய்யாகக் கூறிக்கொள்கின்றது.

கடந்த நவம்பரில், ஜனாதிபதி விக்கிரமசிங்க, கொழும்பில் நடைபெற்ற நாம் 200 நிகழ்வில் -இந்திய வம்சாவளி தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்ததன் 200வது ஆண்டு விழாவில்- உரையாற்றினார்.

'தொழிலாளர்கள் வெளி உற்பத்தியாளர்களாக்கி, அவர்களிடம் கொழுந்து பறிப்பதை ஒப்படைக்குமாறு பிராந்திய தோட்டக் கம்பனிகள் கேட்டுக்கொள்ளப்படும், இது தற்போதுள்ள பெருந்தோட்ட முறைமையை அகற்றி, தொழிலாளர்களை நிலத்தின் உரிமையுடன் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றும்' என்று அவர் அறிவித்தார்.

இந்த முன்மொழிவை அந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்வைத்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன், ஜூன் 23 அன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது இவ்வாறு அறிவித்தார்: “பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளை மறுசீரமைப்பது பற்றி அரசாங்கம் பேசுகிறது, இது நல்லது. நாங்கள் கொள்கை அடிப்படையில் உடன்படுகிறோம், ஆனால் மறுசீரமைப்புடன், தோட்டத் தொழிலாளர்களும் அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதோடு, இது போன்ற முறைமைகளில் சிறு உரிமையாளர்களாக பணிபுரியும் பங்காளிகளாக ஆக்கப்பட வேண்டும்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த கொடூரமான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளைத் திணிப்பதற்கு அரசாங்கம் மற்றும் தோட்ட முதலாளிகளுடன் ஒத்துழைப்பதில் தோட்டத் தொழிற்சங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

தொழிலாளர்கள் இந்தத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட, தொழிற்சங்கங்கள், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவர்களது தொண்டர்களிலும் இருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த அமைப்புகளை, அதாவது தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொண்டு, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரும் ஓல்டன் மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய தோட்டங்களின் தொழிலாளர்களை உடனடியாக மீள வேலைக்கு அமர்த்துமாறும் அனைத்து நீதி மன்ற வழக்குகளையும் விலக்கிகொள்ளவும் கோர வேண்டும்.

இலாப முறைமையைத் தூக்கி எறிந்து, பிரதான தொழிற்துறைகள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குகின்ற, ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

Loading