முன்னோக்கு

பொது சுகாதாரத்தின் அழிவும் H5N1 பறவைக் காய்ச்சல் பெருந்தொற்று நோயின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

“நான் எச்சரிக்கை விடுவதற்கு எதிரானவன், ஆனால் நான் H5N1 பற்றி கவலைப்பட்டதை விட, எனது வாழ்க்கையில் நான் அதிகம் கவலைப்பட்டதில்லை என்று கூறுவேன். நான் இப்போது H5N1 பற்றி கவலைப்படுவதுபோல், 2019 இல் கோவிட்-19 சீனாவுக்கு வெளியே பரவலாகப் பரவத் தொடங்கியபோதும், நான் கவலைப்பட்டதில்லை.” - டாக்டர் மேத்யூ மில்லர், வைரஸ் நோயெதிர்ப்பு நிபுணர் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய் ஆராய்ச்சிக்கான மைக்கேல் ஜி டிக்ரூட் நிறுவனத்தின் இயக்குனரும் ஆவார்.

1997 முதல் H5N1 பறவைக் காய்ச்சலின் உலகளாவிய பரவல் இதுவாகும். H5N1 ஆல் மனிதர்கள், கோழிகள் மற்றும் காட்டு பறவைகள் கொல்லப்பட்ட நாடுகள் கறுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. கடுஞ் சிவப்பு நிறத்தில் உள்ள நாடுகளில் H5N1 ஆல் கோழி அல்லது காட்டு பறவைகள் கொல்லப்பட்டன மற்றும் H5N1 மனிதர்களில் தொற்றும் பதிவாகியுள்ளன. ஆரஞ்சு நிறத்தில் உள்ள நாடுகளில் கோழி அல்லது காட்டு பறவைகள் H5N1 ஆல் கொல்லப்பட்டுள்ளன.

உலகெங்கிலும், புகழ்பெற்ற பத்திரிகைகளில் எழுதப்பட்ட எண்ணற்ற நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளில், விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் அதிக நோய்த்தன்மை கொண்ட பறவைக் காய்ச்சல் (H5N1 பறவை காய்ச்சல்) மனிதர்களிடையே பரவி அடுத்த பெருந்தொற்று நோயாக மாறக்கூடும் என்ற அதிகரித்து வரும் ஆபத்து குறித்து எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர். இது நடந்தால், இதன் விளைவாக ஏற்படும் பொது சுகாதார பேரழிவு தற்போதைய கோவிட்-19 தொற்றுநோயை விட பெரிதாக இருக்கும். கோவிட்-19 கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளது மற்றும் உலகளவில் நெடுங் கோவிட் நோயால் நூறு மில்லியன் கணக்கானவர்களை பலவீனப்படுத்தியுள்ளது.

மனிதர்களிடையே இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக —கோவிட்-19 ஐ விட சுமார் 50 மடங்கு அதிகம்— இருக்கையில், H5N1 பறவைக் காய்ச்சல் பெருந்தொற்று நோய் பேரழிவாக இருக்கும் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்டதல்ல. இதைத் தவிர்ப்பது மிக அவசரமானது, பறவைக் காய்ச்சலுக்கு எதிராக ஒரு உலகளாவிய பொது சுகாதாரத் திட்டத்திற்கான கோரிக்கை சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

H5N1 பறவை காய்ச்சல் ஆரம்பத்தில் 1996 ஆம் ஆண்டில் தெற்கு சீனாவில் வளர்க்கப்பட்ட பறவைகளில் கண்டுபிடிக்கப்பட்டது, அடுத்த ஆண்டு மனிதர்களிடையே முதல் பதிவு செய்யப்பட்ட தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, வைரஸ் அதன் விரைவான பிறழ்வுகள் மற்றும் அதிக இறப்பு காரணமாக பெருந்தொற்று நோய் திறன் கொண்ட மிகவும் ஆபத்தான நோய்க்கிருமிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

2020 முதல், COVID-19 பெருந்தொற்று நோய் வெடித்துப் பரவியதைத் தொடர்ந்து, H5N1 ஆனது காட்டு பறவைகள் மற்றும் கோழிகள், பூனைகள், கடல் சிங்கங்கள், துருவ கரடிகள் மற்றும் மிக சமீபத்தில், அமெரிக்காவில் பால் தரும் கால்நடைகள் மற்றும் வீட்டு எலிகள் உட்பட டசின் கணக்கான உயிரினங்களிடையே விரைவாக பரவியுள்ளது, நூற்றுக்கணக்கான மில்லியன் விலங்குகள் உலகளவில் இறந்துவிட்டன அல்லது கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கறவை மாடுகளுக்கு வைரஸ் பரவுவது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. ஏனெனில் அவை பண்ணைத் தொழிலாளர்களுக்கு அருகாமையில் இருப்பதாலும், பாலூட்டிகளிலிருந்து மனிதனுக்கு பரவுவதற்கான அதிக உள்ளார்ந்த ஆபத்துகளும் உள்ளன. இதுவரை, அமெரிக்க பண்ணைத் தொழிலாளர்களிடையே மூன்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நிகழ்வுகள் உள்ளன. மூன்றாவது தொற்றியவருக்கு சுவாச அறிகுறிகள் தோன்றுவதால் எச்சரிக்கையை எழுப்புகிறது.

கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 விடயத்தில் நடந்ததைப் போலவே, பறவைக் காய்ச்சல் ஒரு உலகளாவிய பெருந்தொற்று நோயாக அபிவிருத்தி அடைவதற்கான இன்றியமையாத பரிணாம வழி, மனிதனிடம் இருந்து மனிதனுக்கு காற்றுவழியாக பரவும் திறனாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மிக மோசமான சூழ்நிலையில், வைரஸ் இந்த திறனை அபிவிருத்தி செய்யும். இது, சீனாவின் வூஹானில் உள்ள ஒரு ஈரமான சந்தையில் SARS-CoV-2 இன் ஆரம்ப பரவலை நினைவூட்டும் ஒரு காட்சிக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கும். சராசரியாக 2-5 நாட்கள் (மற்றும் 17 நாட்கள் வரை) இனப்பெருக்க வளர்ச்சிக் காலத்தில், அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான மக்கள் அறியாமலேயே தங்கள் சமூகத்தில் வைரஸை பரப்புவார்கள். பின்னர் உலகளவில் விமானப் பயணம் மூலம், ஒரே நேரத்தில் பல நாடுகள் வழியாக பரவும் சங்கிலிகள் விரிவடைகின்றன. இந்த முறை வுஹானில் உள்ள ஒரு ஈரமான சந்தையை விட மிச்சிகன் அல்லது டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணையில் பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பறவைக் காய்ச்சல் பெருந்தொற்று நோயின் ஆழமடைந்து வரும் அச்சுறுத்தல் இப்போது அமெரிக்காவில் குவிந்துள்ளது, அங்கு பைடென் நிர்வாகம் மற்றும் அனைத்து பொறுப்பான கூட்டாட்சி முகமைகளுடன் கூட்டு சேர்ந்து, பால் உற்பத்தித் தொழில்துறையின் விடையிறுப்பு குற்றகரமானதாக உள்ளது. ஒரு தொற்றுநோயியல் நேர வெடிகுண்டின் மீது அமர்ந்திருக்கும் அவர்கள், அமெரிக்கா மற்றும் உலக மக்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர்கள் குறித்த பொறுப்பற்ற அலட்சியத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களில், H5N1 அமெரிக்கா முழுவதும் பால் தரும் கால்நடைகளிடையே வேகமாக பரவியுள்ளது, இப்போது 94 மந்தைகளை பாதித்திருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் தொற்று நிகழ்வு டிசம்பர் 2023 இல் கண்டறியப்பட்டுள்ளது, மார்ச் பிற்பகுதி வரை கால்நடைகளிடையே வைரஸ் கண்டறியப்படாமல் பரவியது. அப்போதிருந்து, வேளாண் துறை (USDA), நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அமைப்பு மற்றும் பைடென் நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற கூட்டாட்சி முகமைகள் பால்துறைத் தொழிலுக்கு இடமளிக்கவும், பொது சுகாதாரத்தின் செலவில் அதன் நிலையான இலாப ஓட்டத்தை உறுதி செய்யவும் பின்னோக்கி வளைந்துள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதற்குப் பதிலாக, அலட்சியம் மற்றும் மூடிமறைக்கும் ஒரு மனோபாவம் இப்போது உத்தியோகபூர்வ வட்டாரங்களில் மேலோங்கி உள்ளது. மே மாதத் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலர் கரினே ஜோன்-பியர் “அபாயம் குறைவாக உள்ளது” என்று திரும்பத் திரும்ப கூறிய ஒரேயொரு அறிக்கையைத் தவிர, பறவைக் காய்ச்சலின் அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்து வெள்ளை மாளிகை எதுவும் கூறவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று நோயின் போது அதன் பாத்திரத்தை மீண்டும் கூறும் விதத்தில், பெருநிறுவன ஊடகங்கள் மக்கள் முகங்கொடுக்கும் “குறைந்த அபாயம்” குறித்து தொடர்ந்து குறிப்பிடுகின்றன. உண்மையில், பறவைக் காய்ச்சல் பெருந்தொற்று நோயின் அபாயம் முன்னொருபோதும் இந்தளவுக்கு அதிகமாக இருந்ததில்லை.

மிக முக்கியமாக, கால்நடை மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் மத்தியில் தொற்றுக்களை முறையாக பரிசோதிக்க, அறிக்கை செய்ய அல்லது கண்காணிக்க அனுமதிக்க பால் உற்பத்தித் தொழில்துறைக்கு பைடென் நிர்வாகம், CDC மற்றும் பிற ஏஜென்சிகளுக்கு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.

ஒவ்வொரு நோய்த்தொற்று குறித்த தரவுகளை வெளியிடுமாறு விஞ்ஞானிகள் ஏஜென்சிக்கு பல முறையீடுகள் செய்த போதிலும், இன்றுவரை, 239 வைரஸ் மரபணு மாதிரிகள் மட்டுமே USDA ஆல் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட வரிசை தரவுகள் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து சமீபத்தியவையாகும், எனவே வைரஸின் பரிணாம பாதையை அவைகள் தெளிவுபடுத்தவில்லை.

கோவிட்-19 பெருந்தொற்று நோயின் ஆரம்ப கட்டங்களில் செய்த மிகப் பெரிய குற்றங்களில் ஒன்றை மீண்டும் செய்து, பைடென் நிர்வாகமும் CDC யும் பெருந்தொற்று நோய்களைத் தடுப்பதற்கு, பொது சுகாதார மூலோபாயத்தின் அடித்தளமான குறைந்தபட்ச பரிசோதனைகளை மட்டுமே நடத்தியுள்ளன. 45 பால் பண்ணை தொழிலாளர்கள் அல்லது பாதிக்கப்பட்ட கால்நடைகளுடன் தொடர்பு கொண்ட மற்றவர்கள் மட்டுமே சளிக்காய்ச்சல் பரிசோதனை செய்துள்ளனர். இதன் அர்த்தம், பண்ணைத் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், அவர்களின் பெருநிறுவன முதலாளிகளின் கருணையிலும் விடப்பட்டுள்ள நிலையில், அதிகரித்த எண்ணிக்கையிலான நோயாளிகள் கண்டறியப்படாமல் போகக்கூடும் என்பதாகும்.

மே மாதத்தில், முன்னணி மூலக்கூறு வைரஸ் நிபுணர் மற்றும் கழிவுநீர் கண்காணிப்பாளர் டாக்டர் மார்க் ஜான்சன் வழங்கிய H5N1 க்கான கழிவுநீர் கண்காணிப்பு பரிசோதனையை CDC ஊக்கப்படுத்தவில்லை.

சமீபத்திய USDA தொற்றுநோயியல் சுருக்க அறிக்கை, அனைத்து அமெரிக்க பண்ணைகளிலும் 28 சதவீதம் தங்கள் கால்நடைகளை பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தம் செய்யப்படாத பிற பண்ணைகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட டிரக்குகளைப் பயன்படுத்தி கொண்டு செல்கின்றன என்பதை வெளிப்படுத்தியது. கடந்த மூன்று மாதங்களில் இதுபோன்ற வசதிகளை சுத்தம் செய்வதற்கான மிக அடிப்படையான பொது சுகாதார நடவடிக்கை செயல்படுத்தப்படவில்லை. மேலும், பைடென் நிர்வாகம் இந்த நிலையை மாற்ற விரும்புகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

பல நாடுகளில் கோழிகளில் பயன்படுத்தப்படும் மற்றும் அமெரிக்க பால் உற்பத்தி கால்நடைகளிடையே பரிசோதிக்கக்கூடிய பறவைக் காய்ச்சல் தடுப்பூசி இருந்தபோதிலும், பால் உற்பத்தி தொழிலின் இலாப கட்டாயங்கள் காரணமாக இது விதிக்கப்படவில்லை, ஏனெனில் சில நாடுகள் தடுப்பூசி போடப்பட்ட விலங்குகளிலிருந்து பெறப்படும் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்கின்றன.

பைடென் நிர்வாகமோ அல்லது பொறுப்பான எந்தவொரு நிறுவனமோ நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படாத பால் மற்றும் பிற பால் பொருட்களுக்கு தடை விதிக்கவில்லை. இந்த தயாரிப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் திறனை வைரஸ் வளர்ப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்ற உண்மை இருந்தபோதிலும் இதைச் செய்யவில்லை. H5N1 சாதாரண நுண்ணுயிர் நீக்கத்தில் அது உயிர்வாழ முடியும் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்த போதிலும், அதிவுயர்- நுண்ணுயிர் நீக்கத்தினைப் பயன்படுத்துவதையும் அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை.

ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இருந்த ஒரு நோயெதிர்ப்பு நிபுணரும் கோவிட்-19 இரகசிய செய்தி வெளியீட்டாளருமான டாக்டர் ரிக் பிரைட் இந்த நிகழ்முறையை தொகுத்து இவ்வாறு கூறினார்:

நாங்கள் அதைத் தடுக்கவில்லை. அந்தப் பாதிக்கப்பட்ட பால் மற்றும் தொற்றுள்ள பாலை பண்ணையில் வைத்திருக்க நாங்கள் எதுவும் செய்யவில்லை. இந்த மாடுகளை மீண்டும் பால் கறக்கும் வரிசையில் வைப்பதற்கு முன்பு அல்லது இறைச்சிக்கு வெட்டுவதற்கு அனுப்புவதற்கு முன்பு நாங்கள் பரிசோதிக்கவில்லை... நாங்கள் அதை விட்டுவிட்டு மிகவும் ஏமாற்றுத்தனமான வழியில் பரப்புகிறோம்.

மிகச் சமீபத்தில், நியூ மெக்ஸிகோவில் H5N1 தொற்று ஏற்பட்ட 66 வீட்டு எலிகளை பரிசோதனை செய்துள்ளதாகவும், அவைகள் ஒரு கோழி பண்ணைக்கு அருகில் இருப்பதாகவும் USDA வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், மரபணு தரவுகளுடன் இது நிரூபிக்கப்படவில்லை. இது மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல் பரவும் அபாயங்களை மட்டுமே எழுப்புகிறது, ஏனெனில் கொறித்துண்ணிகள் நோய்க்கான முக்கிய திசையன்களாக இவை உள்ளன. 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பாதி மக்கள்தொகையைக் கொன்ற கருப்பு மரண இறப்புகளின் (Black Death) போது மிகவும் நோயுற்ற மோசமான எலிகள்தான் காரணமாக இருந்தன.

இன்னுமொரு, மேலும் அதிக அபாயகரமான பெருந்தொற்று நோயின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு ஒரு கூட்டு தோள் குலுக்கலுக்கு நிகரானதாகும். இந்த நவீன கால மால்தூசியர்களுக்கு, அவர்கள் தங்கள் இலாபங்களில் தேவையற்ற வடிகால் என்று பார்க்கும் “உபரி மக்கள்” அதாவது வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக் கொல்வதற்கான ஒரு வரம் கோவிட் ஆகும். கடந்த நான்கு ஆண்டுகள், நிதிய உயரடுக்கிற்கு அபரிமிதமான இலாபங்களைத் தவிர வேறொன்றையும் காணவில்லை. ஏனெனில் அவைகள் ட்ரில்லியன் கணக்கான பணத்தை தங்கள் சொந்த கருவூலத்திற்குள் பாய்ச்சின.

கோவிட்-19 பெருந்தொற்று நோயின் முழு அனுபவமும், ஒரு புதிய பெருந்தொற்று நோயின் தற்போதைய மற்றும் அதிகரித்து வரும் அபாயத்தைத் தடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அவசர நடவடிக்கையைக் கோருகிறது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் கட்டவிழ்ந்து வரும் இந்தப் பொது சுகாதார நெருக்கடியை உண்மையில் நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம், இவைகள் பின்வருமாறு:

  • கடுமையான தொடர்புத் தடமறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து கால்நடை மற்றும் பண்ணைத் தொழிலாளர்களையும் பாரியளவில் பரிசோதித்தல்

  • H5N1 இல் உள்ள அனைத்து தரவுகளின் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, சாமானிய பொதுச் சுகாதாரப் பணியாளர்களின் கட்டுப்பாட்டில் CDC, USDA மற்றும் பிற கூட்டாட்சி நிறுவனங்கள் இருக்க வேண்டும்

  • சுகாதாரப் பராமரிப்பின் அனைத்து அம்சங்களையும் சமூகமயமாக்குவதன் மூலமாக H5N1 மற்றும் பிற தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது சுகாதார நிதி மற்றும் ஆதாரவளங்களின் ஒரு பரந்த விரிவாக்கம் தேவை.

  • பொது சுகாதாரத்திற்கான அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பதில் பெருநிறுவன இலாபங்களுக்கு அல்லாமல், பாதுகாப்பை உறுதிப்படுத்த பால் உற்பத்தி மற்றும் இறைச்சி தொழில்துறைகள் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாடு வழிகாட்டும் கோட்பாடாக இருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டமானது, பங்குச் சந்தை மற்றும் இலாப ஓட்டத்தில் எந்த இடையூறையும் தடுக்க உறுதிபூண்டுள்ள அரசாங்கம், பெருநிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும்.

பீட்டர் டாஸ்ஸாக் (Peter Daszak), கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Kristian Andersen) மற்றும் பீட்டர் ஹோடெஸ் (Peter Hotez) போன்ற பெருந்தொற்று நோய் தயார்நிலை மற்றும் பரிணாம உயிரியல் துறைகளில் மையமாக ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் உட்பட விஞ்ஞானிகள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கு இணையாக, பறவைக் காய்ச்சல் பெருந்தொற்று நோயின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு விஞ்ஞான-விரோத விடையிறுப்பு இணையாக உள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் பிற காரணிகள் எதிர்கால பெருந்தொற்று நோய்களின் அச்சுறுத்தலைத் தூண்டுவதால், விஞ்ஞான சமூகமும் பொது சுகாதாரமும் மிக முக்கியமான கட்டத்தில் முடக்கப்படுகின்றன.

பொது சுகாதாரத்தின் பொறிவும் தொற்று நோய்களால் ஏற்படும் பாரிய உயிரிழப்புகளை இயல்பாக்குவதும், முதலாளித்துவம் ஒரு முட்டுச்சந்தை எட்டியுள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அது பூகோளச் சமூகத்தை சோசலிச முறையில் மறுஒழுங்கமைப்பதன் மூலமாக பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

Loading