1964 இராணுவ சதியின் 60வது ஆண்டு நினைவு நாளில்: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரேசிலியப் பிரிவைக் கட்டியெழுப்புவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரேசிலில், 1964 ஆட்சிக்கவிழ்ப்பின் 60வது ஆண்டு நிறைவையொட்டி, 7 April 2024 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் ஆங்கிலப் பக்கத்தில் வெளியான இந்த வரலாற்று ஆய்வுக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி, தமிழில் வெளியிடுகிறோம்.

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31, பிரேசிலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் 21 ஆண்டுகால இரத்தக்களரி சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்த 1964 இராணுவ சதியின் 60வது ஆண்டு நிறைவு தினத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நிறுவப்பட்டதற்குப் பிறகு, இதற்கு முன்னர் ஏற்பட்டிராத அரசியல் நிலைமைகளின் கீழ் மார்ஷல் காஸ்டெல்லோ பிராங்கோ (Marshal Castello Branco) தலைமையிலான இராணுவம் இழிவான முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றியதைக் குறிக்கும் வகையில் இந்த 60வது ஆண்டு நிறைவுதினம் நடைபெற்றது.

ஏப்ரல் 2, 1964 இல் ரியோ டி ஜெனிரோவின் (Rio de Janeiro) மையத்தை ஆக்கிரமித்த கவச வாகனங்கள்

ஜனவரி 8, 2023 அன்று, முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) மற்றும் இராணுவத் தலைமையின் ஒரு பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சதித்திட்டமானது, பிரேசிலியாவில் அதிகாரத்தின் இருக்கைகள் மீதான பாசிசத் தாக்குதலை நடத்துமளவுக்கு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த சதி முயற்சியில் ஆயுதப்படைகள் ஆழமாக ஈடுபட்டிருப்பது நாளுக்கு நாள் அதிகமாக அம்பலமாகி வருகிறது.

1964 ஆட்சிக் கவிழ்ப்பு ஆண்டு நிறைவு தினத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, முன்னாள் விமானப்படைத் தளபதி ஜெனரல் கார்லோஸ் பாப்டிஸ்டா ஜூனியர் (Carlos Baptista Júnior) ஃபெடரல் பொலிசுக்கு அளித்த சத்தியப் பிரமாண சாட்சியத்தை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஆயுதப்படைகளின் தலைமையகம், போல்சனாரோவுடன் பல சந்திப்புகளில் பங்கேற்றதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பதவியேற்பதைத் தடுக்கவும் மற்றும் பிரேசிலில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான திட்டங்களை வெளிப்படையாக விவாதித்தாகவும் ஒப்புக்கொண்டது.

இந்த பாரதூரமான அரசியல் நிலைமைகளின் கீழ், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் (Luiz Inácio Lula da Silva) தொழிலாளர் கட்சி (Workers Party - PT) அரசாங்கம் 1964 சதியின் வரலாற்று மற்றும் அரசியல் உசிதத்தை மறுப்பதற்கும், இராணுவ சர்வாதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவை நசுக்குவதற்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. 1964 முதல் 1980 களின் நடுப்பகுதி வரை நீடித்த இரத்தக்களரி சர்வாதிகார ஆட்சி மற்றும் போல்சனாரோவின் தனிப்பட்ட தலைவிதியைப் பொருட்படுத்தாமல் தொடரும் தற்போதைய சதித்திட்டங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் ஆயுதப் படைகளின் உருவத்தை விலக்குவதே அதனது மறைக்கப்படாத நோக்கமாக இருந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் நினைவை உயர்த்தி, தொழிலாளர் கட்சி (PT) யைச் சேர்ந்த அப்போதைய பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெஃப் (Dilma Rousseff), தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, பிரேசிலிய அரசின் சார்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார். 1960கள்-1980களில் பிராந்தியத்தின் சர்வாதிகாரங்களுக்கு எதிரான அரசியல் எதிர்ப்புடன் தொடர்புடைய கட்சிகளால் வழிநடத்தப்பட்ட “முற்போக்கு” முதலாளித்துவ அரசாங்கங்கள் என்று அழைக்கப்படும் லத்தீன் அமெரிக்காவின் “இளஞ்சிவப்பு அலை” (Pink Tide) உச்சத்தில் இருந்த நேரம் அது.

இந்த ஆண்டு, இதற்கு நேர்மாறாக, இந்த வரலாற்று நிறைவுதினம் தொடர்பான முக்கிய தலைப்புச் செய்திகள், 60 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைப் பற்றிய அதிகாரப்பூர்வக் குறிப்பு எதையும் தடைசெய்யும் அளவுக்கு, லூலாவின் உத்தரவுகள் மையமாகக் கொண்டிருந்தன.

பெப்ரவரி 27 அன்று பத்திரிகையாளர் கென்னடி அலென்காருக்கு (Kennedy Alencar) அளித்த பேட்டியில், பிரேசில் ஜனாதிபதி லூலா, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி “வரலாற்றின் ஒரு பகுதி” என்று அறிவித்தார். தற்போதைய ஜெனரல்கள், 1964 இல் “பிறக்கவே இல்லை” என்று அவர் விளக்கினார். லூலாவைப் பொறுத்தவரை, இதைப்பற்றி விவாதிக்க எதுவும் இல்லை. ஏனென்றால், “இந்த நாட்டை ஜனநாயகப்படுத்துவதற்கான உரிமையை மக்கள் ஏற்கனவே வென்றுள்ளனர்” மேலும் “வரலாற்றை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும், [அதற்கு பதிலாக] எப்போதும் அதில் வாழ்பவராக இருக்க வேண்டும்.”

சில நாட்களுக்குப் பிறகு, முன்னாள் நீதி மந்திரி ஃபிளேவியோ டினோவால் (Flávio Dino) முன்மொழியப்பட்ட “நினைவகம் மற்றும் ஜனநாயகம்” என்ற அருங்காட்சியகத்தைக் உருவாக்குவதற்கான திட்டத்தை தடுத்துநிறுத்தி, ஆட்சி கவிழ்ப்பின் நினைவு தினத்தை ரத்து செய்யப்போவதாக தொழிலாளர் கட்சி (PT) அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது.

சமீபத்திய நிகழ்வுகளின் வெளிச்சத்தில் லூலாவின் அறிக்கைகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. பிரேசிலிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு 1964 ஆட்சிக்கவிழ்ப்பின் படிப்பினைகளின் புதுப்பிக்கப்பட்ட பொருத்தமான அளவுக்கு நேரடியாகச் சரியான தொடர்பைக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினையில் முதலாளித்துவ தொழிலாளர் கட்சி (PT) அரசாங்கம் பதட்டம் அடைந்திருக்கிறது.

பிரேசிலிய அரசியலில் 1964 ஆட்சியுடன் தொடர்புடைய அரசியல் உத்தியோகபூர்வ சக்திகளுடன் இராணுவத்தின் மீள் எழுச்சியானது, 1985 இல் இராணுவ ஆட்சிக் குழுவின் வீழ்ச்சியுடன், முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ அரசையும் நொறுக்காமல், பிரேசிலில் ஒரு நிலையான ஜனநாயகத்தையும் ஒரு பொதுநல அரசையும் நிறுவ முடிந்தது என்ற தொழிலாளர் கட்சி (PT) இன் நிறுவனர்களின் பிற்போக்குத்தனமான வாக்குறுதிகளை நிராகரித்திருக்கிறது.

லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் இதே அடிப்படையிலான அரசியல் போக்கு வளர்ச்சியடைந்து வருகிறது. விரக்தியடைந்த “இளஞ்சிவப்பு அலை” (Pink Tide) கட்சிகள் சமீப ஆண்டுகளில் மீண்டும் ஆட்சிக்கு வந்த நாடுகளில், அவை மிகக் கடுமையான முதலாளித்துவ நெருக்கடிகளைச் அமுல்படுத்தியதன் மூலம் அரசியல் அதிகாரத்திற்கு பாசிச சக்திகள் எழுச்சிபெற்று வருவதற்கு வழி வகுத்துள்ளன.

பெருவில் இது மிகவும் மோசமான வகையில் பிரபலமடைந்திருந்தது. அங்கு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவின் (Pedro Castillo) தொழிலாள வர்க்க எதிர்ப்புத் தாக்குதல்கள் அவரது வீழ்ச்சியைத் தயார்படுத்திக் கொடுத்தது மற்றும் டினா போலுவார்ட்டின் (Dina Boluarte) பொலிஸ் அரச ஆட்சியைத் கொண்டுவந்தது. மற்றும் அர்ஜென்டினாவில், பெரோனிச சிக்கன நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சியானது பாசிச ஜேவியர் மிலே (Javier Milei) வருவதற்கான தேர்தலுக்கு வழிவகுத்தது.

சிலியில் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் வெடிப்பை அமைதிப்படுத்தும் சீர்திருத்தங்களை உறுதிப்படுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போலி-இடது கேப்ரியல் போரிக் (Gabriel Boric) மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் கூட்டணிக் கட்சியின் பலவீனமான தன்மை சமீபத்தில் நடந்த அரசியலமைப்புத் தேர்தல்களில் பாசிச குடியரசுக் கட்சியையும் சர்வாதிகாரி அகஸ்டோ பினோச்சேயின் (Augusto Pinochet) ஆதரவாளர்களையும் மட்டுமே பலப்படுத்தியிருக்கிறது.

லூலா அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் பதாகையானது போல்சனாரோவிற்கு எதிராக முதலாளித்துவ ஸ்தாபனத்தின் திவாலான கட்சிகளை ஒன்றிணைத்தது. இது ஆரோக்கியமான ஜனநாயக ஆட்சிக்குள் ஒரு அரசியல் பிறழ்வு என்று விவரிக்கப்பட்டதோடு, மேலும் பிரேசில் எப்படி ஒரு புதிய சர்வாதிகார அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்பதை விளக்கத் தவறிவிட்டது.

போல்சனாரோவிற்கு எதிராக முதலாளித்துவ அமைப்பின் திவாலான அல்லது செயலிழந்த கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய தேர்தல் பதாகையாக இருந்ததாக லூலா அரசாங்கம் சித்தரிக்கப்பட்டது. இது, ஆரோக்கியமான ஜனநாயக ஆட்சிக்குள் ஒரு அரசியல் பிறழ்வு என்று விவரிக்கப்பட்டதோடு, மேலும் பிரேசில் எப்படி ஒரு புதிய சர்வாதிகார அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்பதை விளக்கத் தவறிவிட்டது.

பிரேசிலிய தொழிற்கட்சியின் (Brazilian Labor Party - PTB) ஜனாதிபதி ஜோவோ கவுலார்ட்டின் (João Goulart,) ஆட்சிக் கவிழ்ப்பு, போருக்குப் பிந்தைய காலத்தில் பிரேசிலிய முதலாளித்துவத்தின் நான்காம் குடியரசு (Fourth Republic) என்று அழைக்கப்படும் ஆழமான முரண்பாடுகளில் வேரூன்றியிருந்த நீண்டகால நெருக்கடியின் உச்சக்கட்டமாகும்.

ஜோவோ கவுலார்ட் (João Goulart) (இடது) மற்றும் லியோனல் பிரிசோலா (Leonel Brizola)

முதலாளித்துவத்தின் தேசியவாத சீர்திருத்தவாதியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட கவுலார்ட், இரண்டு ஆண்டுகளில் கொந்தளிப்பான அரசு ஆணைகளை வெளியிட்டு, பன்னாட்டு நிறுவனங்களால் வெளிநாட்டிற்கு லாபத்தை மாற்றுவதில் பயமுறுத்தும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, “அடிப்படை சீர்திருத்தங்கள்” என்று அழைக்கப்படும் ஒரு தொகை நடவடிக்கைகளுக்கு உறுதியளித்தார். அதில் விவசாய சீர்திருத்தம் மற்றும் “நகர்ப்புற சீர்திருத்தம்” என்கிற திட்டங்களும் அடங்கும். கியூபாவிற்கு எதிரான அமெரிக்கத் தடைகளை எதிர்த்து, பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சட்டப்பூர்வமாக்குவதாக உறுதியளித்து, கௌலார்ட் “அணிசேரா” வெளியுறவுக் கொள்கையையும் பின்பற்றினார்.

1964 ஆட்சிக்கவிழ்ப்பு, பிரேசில் நாட்டின் அரசியலில் இராணுவத்தின் தொடர்ச்சியான சர்வாதிகாரத் தலையீடுகளுக்குப் பிறகு ஒரு பாசிச இராணுவ சர்வாதிகாரத்தை பலப்படுத்தியது. போருக்குப் பிந்தைய ஜனாதிபதி ஆட்சியே 1945 இல் ஒரு இராணுவ சதி மூலம் நிறுவப்பட்டதுதான், இது கெட்டுலியோ வர்காஸின் (Getúlio Vargas) சர்வாதிகார எஸ்டாடோ நோவோவை (Estado Novo) அகற்றியது மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஜெனரல் யூரிகோ காஸ்பர் டுத்ராவை (Eurico Gaspar Dutra) ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது.

1955 ஆம் ஆண்டில், வர்காஸின் (Vargas) தற்கொலையால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு மத்தியில், கவுலார்ட் (Goulart) முதன்முதலில் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​ஜுசெலினோ குபிட்செக்கின் (Juscelino Kubitschek) அரசாங்கம் பதவியேற்பதை தடுக்க இராணுவம் முயன்றது. 1961 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜானியோ குவாட்ரோஸ் (Jânio Quadros) ராஜினாமா செய்த பின்னர் இரண்டாவது இராணுவச் சதி முயற்சி நடந்தது. மீண்டும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுலார்ட், சீனாவிற்கு இராஜதந்திரப் பணியில் இருந்தார். மேலும், அவரது அதிகாரங்களை பறித்த பாதி-ஜனாதிபதி முறையை ஏற்றுக்கொண்ட பின்னரே பதவியேற்றார். அவர் பிரேசிலுக்குத் திரும்புவதற்கு, நாட்டின் வான்வெளிக்குள் நுழைந்தபோது கௌலார்ட்டின் விமானத்தை இராணுவக் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்த முயன்றனர்.

1962 இல் பொது வாக்கெடுப்பு மூலம் முழு ஜனாதிபதி அதிகாரங்களும் மீட்டெடுக்கப்பட்டன, இது சதித்திட்டங்களை மீண்டும் தூண்டியது. கௌலார்ட்டின் தலைமையிலான தேசியவாதிகள், இராணுவ அரசாங்கத்தின் ஆதரவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையின் “ஜனநாயகக் கோட்பாட்டிலும்” மாயைகளை உருவாக்கியதன் மூலம் வரவிருக்கும் இராணுவ சதிக்கு வழி அவர்களே வகுத்தனர். உண்மைக்கு அப்பால் எதுவும் இதில் இருந்திருக்க முடியாது.

கென்னடி நிர்வாகத்தின் கீழ், குறைந்தபட்சம் 1961 இல் இருந்து பிரேசிலில் ஒரு அரசியல் தலையீட்டிற்கு வாஷிங்டன் முறையாகத் திட்டமிட்டு வந்தது. சோவியத் ஒன்றியத்துடன் (USSR) தன்னை இணைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்திய கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் (Fidel Castro) தீவிரமான குட்டி முதலாளித்துவ தேசியவாத ஆட்சியின் பாதையை, இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் பின்பற்றுவதைத் தடுக்க வாஷிங்டன் தீர்மானித்தது.

1964 ஆம் ஆண்டில், “ஆபரேஷன் பிரதர் சாம்” (Operation Brother Sam) நடவடிக்கையை தொடங்கிய லிண்டன் ஜோன்சனின் (Lyndon Johnson) நிர்வாகம், பிரேசிலின் கடற்கரைக்கு ஒரு கடற்படை தாக்குதல் குழுவை அனுப்பியதோடு, பிரேசிலில் ஆட்சிக் கவிழ்ப்பு துருப்புகளுக்கு ஆதரவாக இராணுவத் தளவாடங்களைச் சேகரித்தது. மார்ச் 31 இரவு அவர்கள் சி.ஐ.ஏ உடன் இணைந்து, ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) மற்றும் பிற முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர். நாட்டிற்கான அமெரிக்க தூதர் லிங்கன் கார்டனால் (Lincoln Gordon) கணிக்கப்பட்டிருந்த “இரத்தக்களரி” மற்றும் “உள்நாட்டுப் போர்” ஆகியவற்றை எதிர்பார்த்து அமெரிக்க இராணுவ எந்திரம் அணிதிரட்டப்பட்டது.

இதனை எதிர்ப்பதற்கு போதுமான தளபதிகளின் விசுவாசம் தனக்கு இருப்பதாக நம்பிய ஜனாதிபதி ஜோவோ கவுலார்ட், ஒரு சிறிய குழு அதிகாரிகளால் அவரது சொந்த மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலுக்கும் (Rio Grande do Sul) பின்னர் உருகுவேக்கும் வெளியேற்றப்பட்டார், அங்கு அவர் 1976 இல் பிரேசிலிய உளவுத்துறையால் படுகொலை செய்யப்பட்டார். கவுலார்ட்டுடன் இணைந்த 20 பேரில் இரண்டு ஆளுநர்கள், காவல்துறையின் அடிப்படையில் எதிர்ப்பை ஏற்பாடு செய்ய முயன்றனர், ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர்.

இந்த ஆட்சி கவிழ்ப்பை பத்திரிக்கைகள் மற்றும் கவுலார்ட்டுக்கான அரசியல் எதிர்ப்புகள் வரவேற்றிருந்தன. இரண்டாம் உலகப் போரில் பிரேசிலின் சார்பாக தலையீடு செய்த மூத்த தலைவரான மார்ஷல் காஸ்டெலோ பிராங்கோவின் (Marshal Castelo Branco) தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சி, படிப்படியாக ஜனநாயக உரிமைகளை அடக்குவதற்கு முன், மே 1968 இல் விதிக்கப்பட்ட பிரபலமற்ற நிறுவனச் சட்டம் [Institutional Act Number 5 (AI-5)] எண் 5 (AI-5) மூலம் ஜனநாயக உரிமைகளை முழுமையாக ஒழிக்கும் வரை, அடுத்த ஆண்டு தேர்தல்களுக்கு வாக்குறுதி அளித்தது.

ஆட்சி கவிழ்ப்புக்கு பின், அடுத்த பத்தாண்டுகளில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், விவசாயத் தலைவர்கள் மற்றும் தீவிரமான இளைஞர்கள் பாரியளவில் சி.ஐ.ஏ-ஆதரவு பயங்கரவாத ஆட்சியால் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். லத்தீன் அமெரிக்கா முழுவதும் அமெரிக்க தலையீட்டிற்கான அடித்தளத்தை நிறுவிய பிரேசிலிய சர்வாதிகார ஆட்சி, இராணுவ சதிகளை ஏற்பாடு செய்ததுடன், பொலிவியா, சிலி, உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெருவிற்கு அதன் அடக்குமுறை மற்றும் சித்திரவதை அமைப்புகளை ஏற்றுமதி செய்தது.

அதன் அரசியல் சாராம்சத்தில், பிரேசிலில் இடம்பெற்ற 1964 இராணுவச் சதி லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டினை எதிர்மறையான முறையில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில் எந்த முற்போக்கான வரலாற்றுப் பாத்திரத்தையும் வகிக்க இலாயக்கற்றது என்பதை நிறுவியிருக்கிறது.

ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அரசியல் அரங்கில் வெளிவரும் தேசிய முதலாளித்துவம், நிலங்களை உடமையாக வைத்திருக்கும் நிலபிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் எதிர்ப்புரட்சிகர சேவைகளை நேரடியாக நம்பியிருக்கிறது. கௌலார்ட்டால் வாக்குறுதியளிக்கப்பட்ட விவசாய சீர்திருத்தம் போன்ற தீர்க்கப்படாத ஜனநாயகப் பணிகளை முடிக்க, சோசலிச நடவடிக்கைகளைத் தொடங்குவதும், தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தேவையாக இருக்கிறது.

1964 ஆட்சிக்கவிழ்ப்புக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியால் வரையப்பட்ட இந்தத் திட்டம், 1917 இன் வெற்றிகரமான ரஷ்யப் புரட்சியின் போக்கில் தீர்க்கமாக உறுதிப்படுத்தப்பட்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால், அடுத்த தசாப்தங்களில் மென்ஷிவிக்குகளின் (Menshevik) “இரண்டு-கட்ட” புரட்சியின் கோட்பாட்டின் அடிப்படையில், திட்டமிடப்பட்ட பேரழிவுகரமான தோல்விகளால் அதன் கோட்பாடுகள் எதிர்மறையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

1945 மற்றும் 1964 க்கு இடையில் பிரேசிலிய முதலாளித்துவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட சுமாரான சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் நிலைப்படுத்தல் மூலம் உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட நிலைமைகளினால் ஏற்பட்டதாகும். அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தங்கியிருக்கும் சாத்தியக்கூறுகள் மற்றும் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளை ஸ்ராலினிச அதிகாரத்துவம் குற்றவியல் முறையில் நிராயுதபாணியாக்கியதன் அடிப்படையில், குறிப்பாக ஐரோப்பாவில், ஏகாதிபத்திய முதலாளித்துவம் அதன் அரசியல் ஆதிக்கத்தை மீண்டும் நிறுவ முடிந்தது.

ஒரு குறுகிய காலத்திற்கு, வெளிநாட்டு முதலீட்டின் வருகை மற்றும் ஏகாதிபத்தியத்துடன் பேரம் பேசுவதற்கு சோவியத் ஒன்றியத்துடனான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவை பிரேசிலிய முதலாளித்துவம் ஒரு சுதந்திரமான தேசிய பொருளாதார வளர்ச்சியில் மாயைகளை வளர்க்க அனுமதித்தது.

இந்த நிலைமைகள், அவற்றின் இயல்பிலேயே தற்காலிகமானது, நான்காம் அகிலம் நிறுவப்பட்டபோது கண்டறியப்பட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை அது மாற்றவில்லை, அவை உலகப் புரட்சியின் ஒரு புதிய அலையை உருவாக்கியிருக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் பிரேசிலில், தொழில்துறை தொழிலாள வர்க்கத்தின் பாரிய விரிவாக்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் வர்காஸின் மூன்றாம் பிரேசிலிய குடியரசு, (Vargas’ Estado Novo) வழங்கப்பட்ட பெருநிறுவன தொழிற்சங்க எந்திரத்துடன் மோதல் வளர்ச்சியடைந்திருந்தது.

பிரேசில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக முதலாளித்துவம் மற்றும் அதன் முகவர்களிடம் இருந்து போராடி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தயார்படுத்தும் ஒரு புரட்சிகர ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதே தீர்க்கமான அரசியல் பணியாக இருந்தது. இதற்கு முதலில், பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (PCB) பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ராலினிசத்தின் அரசியல் செல்வாக்கிற்கு எதிராக ஒரு சமரசமற்ற போராட்டம் தேவைப்பட்டது.

ஸ்ராலினிசம் பிரேசில் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குகிறது

இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரேசிலிய மக்களிடையே நிலவிய அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (PCB), இன்னும் சட்டவிரோதமானதாகவும் மற்றும் அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலும், பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியானது, வர்காஸ் சர்வாதிகாரத்திற்கு எதிரான மிகப்பெரும் எதிர்ப்பை, முதலாளித்துவ அரசின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க முறையாக வேலை செய்தது.

அடுத்த தசாப்தங்களில் பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக இருக்கும் அரசியல் கட்டமைப்பை அறிவித்து, கட்சியின் வரலாற்றுத் தலைவரான லூயிஸ் கார்லோஸ் பிரஸ்டெஸ் (Luís Carlos Prestes), 1944 இல் ஒரு சிறிய பேட்டியில் கீழ்கண்டவாறு அறிவித்தார்:

கொடூரமான மற்றும் நீண்ட பாசிச இரவு மற்றும் பல ஆண்டுகால போர், வலி மற்றும் துயரங்களுக்குப் பிறகு, மக்கள் அமைதியைக் கோருகிறார்கள் மற்றும் மிகவும் முன்னேறிய மற்றும் உணர்வுள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு வார்த்தையில் கூறுவதானால், குடியரசு, முற்போக்கான மற்றும் பிரபலமான ஆட்சியின் கீழ் ஜனநாயக வெற்றிகளின் உறுதியான ஒருங்கிணைப்பு தேவை.

அத்தகைய குடியரசு, ஒழுங்கு மற்றும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் பெரிய மோதல்கள் மற்றும் போராட்டங்கள் இல்லாமல் நிறுவப்பட்டால், அது சோவியத் குடியரசாக, அதாவது ஒரு சோசலிசமாக இருக்க முடியாது. மாறாக, அனைத்து சமூக, ஜனநாயக மற்றும் முற்போக்கான வர்க்கங்களின் பொதுவான நடவடிக்கையின் விளைவாக, பாட்டாளி வர்க்கம் முதல் பெரிய தேசிய முதலாளித்துவம் வரை, எண்ணிக்கையில் முக்கியமற்றிருக்கும் அதன் மிக பிற்போக்கு கூறுகளை மட்டும் தவிர்த்து, முதலாளித்துவ குடியரசாக இருக்கும்.

ஏகாதிபத்தியத்துடன் “அமைதியான சகவாழ்வு” என்ற ஸ்ராலினிசக் கோட்பாட்டின் அடிப்படையில் அதன் முன்னோக்கை விளக்கி, பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) 1944 இல் பின்வருமாறு எழுதியது:

உண்மையில், போருக்குப் பிந்தைய காலத்தைப் பற்றிய நேர்மறையான கூறுகள் டெஹ்ரானில் சேர்ச்சில், ரூஸ்வெல்ட் மற்றும் ஸ்டாலின் ஆகியோரால் நிறுவப்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் கொள்கைகளாக இருக்கின்றன, இது ஒவ்வொரு மக்களின் அமைதியான வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.

அடுத்த ஆண்டு, பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) சட்டப்பூர்வமானதாக அறிவிக்கப்பட்டது மற்றும் அதன் தலைவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. நாசிசத்தின் இராணுவத் தோல்வி மற்றும் பிரேசிலிய முதலாளித்துவக் கட்சிகளின் நெருக்கடி ஆகியவற்றுடன் சோவியத் தொழிலாளர் அரசு பெற்ற கௌரவத்தின் அடிப்படையில், ஒரு மீள் எழுச்சி பெற்ற தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்திருந்த நேரத்தில், பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி திடீரென்று வெகுஜனக் கட்சியாக மாற்றப்பட்டு, அப்போது விடுதலையாகியிருந்த பிரஸ்டெஸ் (Prestes), நாட்டில் உள்ள எந்த செனட்டரையும் விட அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஆனால், தேசிய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் முற்போக்கான தன்மை மற்றும் ஒரு புதிய ஜனநாயக சகாப்தத்தின் எழுச்சி ஆகியவற்றில் ஸ்ராலினிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட குற்றவியல் மாயைகள் விரைவாக யதார்த்தத்துடன் மோதின. துத்ரா (Dutra) அரசாங்கம், வாஷிங்டனுடன் தன்னை இணைத்துக் கொண்டதுடன் 1947 இல் பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) ஐ சட்டவிரோதமாக்கியது மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகளையும் முறித்துக் கொண்டது.

ஏகாதிபத்தியம் “ஒவ்வொரு மக்களின்” “அமைதியான வளர்ச்சியை” அனுமதிப்பதற்கு பதிலாக, குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் அது 1940 இல் “ஏகாதிபத்தியப் போர் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய நான்காம் அகிலத்தின் அறிக்கை”யின் கணிப்பை தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறது: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான ஆயுதம் “நல்ல அயலவர்” (good neighbor) கொள்கைக்கு பதிலாக மேற்கு அரைக்கோளத்தில் இரும்புக்கரம் கொண்டு ஆதிக்கம் செலுத்துவதற்கு தயார்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் உள்ளூர் முகவர்களையும் கண்டிக்கத் தொடங்கிய பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) ஒரு அரசியல் மாற்றத்தை மேற்கொண்ட போதிலும், ஸ்ராலினிஸ்டுகள் தேசிய முதலாளித்துவத்தை நோக்கிய அவர்களின் நோக்குநிலையையும் பிரேசிலிய தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சியின் பாதையில் செல்வதைத் தடுப்பதற்கான அவர்களின் உறுதியையும் முழுமையாகப் பாதுகாத்தனர். மாவோயிசம் மற்றும் விவசாயிகளின் கெரில்லா போரை நோக்கி 1962 இல் பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) யுடன் முறித்துக் கொண்ட பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (PcdoB) போன்ற அவர்களின் எதிர்கால அதிருப்தியாளர்களும் திவாலான அதன் “இரண்டு-கட்ட” கோட்பாட்டிற்கு விசுவாசமாக இருந்தார்கள்.

ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், 1963

1964 ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னதாக, மார்ச் 1958 இன் இழிவான பிரகடனத்தின் பிற்போக்குத்தனமான வழிகாட்டுதல்களை PCB பாதுகாத்தது, இது பிரேசிலிய முதலாளித்துவத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தை அறிவித்தது மற்றும் “வளர்ந்து வரும் தேசியவாத, முற்போக்கான மற்றும் ஜனநாயக சக்திகளால் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதை ஆதரிக்கும் தொழிலதிபர்களுடன் [விற்பனையாளர்கள்]” மோதலில் வழிநடத்தியது.

பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தை நசுக்க வழிவகுத்த இந்தக் கொள்கையின் தொடர்ச்சி, இராணுவத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஜனநாயக சக்தியாக உயர்த்தியது. 1961 இல், ஜாங்கோவின் பதவியேற்பைத் தடுக்கும் முயற்சிகளுக்கு மத்தியில், “பிற்போக்குத்தனமான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக் குழுவானது, பாசிச அடக்குமுறையை எதிர்கொண்டு”, ஜனநாயக சட்டத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த இயக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டதாக PCB அறிவித்தது.... அதே நேரம், ஆயுதப் படைகளின் முக்கியமான துறைகளில் இருந்து பாசிசத்துக்கு ஆதரவு அதிகரித்து வந்தது.

ஜனவரி 1964 இல், இராணுவம் அதன் இரத்தக்களரி சதித்திட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்த போது, பிரஸ்டெஸ் (Prestes) ஒரு அறிக்கையை வெளியிட்டார், அது முதலாளித்துவத்திற்கு ஸ்ராலினிஸ்டுகளின் குற்றவியல் சரணடைதலை சுருக்கமாகக் கூறியிருக்கிறது:

பிரேசிலில் உள்ள ஆயுதப்படைகள் மிகவும் குறிப்பிட்ட குணாதிசயங்களைக் கொண்டுள்ளன, மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன. பிரேசிலியப் புரட்சியின் குறிப்பிட்ட பிரச்சினைகளில் ஒன்று ஜனநாயகத் தன்மை, ஆயுதப்படைகளின் ஜனநாயக பாரம்பரியம், குறிப்பாக இராணுவம் ஆகும்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பிரஸ்டெஸின் (Prestes’) சிலி (Chile) ஸ்ராலினிஸ்டுகளின் சகாக்கள் சிலியின் இராணுவத்தின் தனித்துவமான ஜனநாயகப் பண்புகள் - “சீருடை அணிந்த மக்கள்” என்று அதே பேரழிவு விளைவுகள் தரக்கூடிய இதேபோன்ற சந்தேகத்திற்குரிய கூற்றுக்களை முன்வைத்தனர்.

ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விட்டோடிய துரோகிகள் புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப நாசவேலை செய்கிறார்கள்

பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்கு மகத்தான ஆற்றல் இருந்தது. ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத தலைமைகளின் காட்டிக்கொடுப்பை அவர்களால் தடுக்க முடிந்திருக்கும், மற்றும் சோசலிசப் புரட்சியின் வழிமுறைகள் மூலம் பாசிச எதிர்வினைக்கு எதிராக தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கியிருக்க முடியும்.

1920 களில் இருந்து, சர்வதேச இடது எதிர்ப்பின் (International Left Opposition) ஆண்டுகளில், ட்ரொட்ஸ்கிச இயக்கம் பிரேசிலில், குறிப்பாக தொழிலாள வர்க்கம் மற்றும் நாட்டின் மிகவும் தொழில்மயமான பகுதியான சாவோ பாலோவில் (São Paulo) உள்ள மாணவர்களிடையே பெரும் அரசியல் ஈர்ப்பைக் கொண்டிருந்தது.

ஆனால், சாதகமான புறநிலை நிலைமைகள் இருந்தபோதிலும், பிரேசிலில் நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவின் கட்டுமானம் முறையாகக் குட்டி-முதலாளித்துவ கலைப்புவாதம் போக்குகளின் நடவடிக்கையால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டது. இது போருக்குப் பிந்தைய ஸ்திரத்தன்மையின் சக்திவாய்ந்த அழுத்தங்களை சர்வதேச புரட்சிகர முன்னணிப்படை மீது வெளிப்படுத்தியது.

1940 இல், பிரேசிலிய இடது எதிர்ப்பின் நிறுவனத் தலைவரான மரியோ பெட்ரோசா (Mario Pedrosa), நான்காம் அகிலத்துடன் முறித்துக் கொண்டு, அமெரிக்க சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (Socialist Workers Party - SWP) மேக்ஸ் ஷாட்மேன் (Max Shachtman) மற்றும் ஜேம்ஸ் பர்ன்ஹாம் (James Burnham) தலைமையிலான குட்டி முதலாளித்துவ எதிர்ப்புக் குழுவில் சேர்ந்தார். பெட்ரோசா பிரேசிலில் பெரும் அரசியல் குழப்பத்தை விதைத்தார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னாள் தலைவர் என்ற பெருமையைப் பயன்படுத்தி ஸ்ராலினிசத்தை பாசிசத்துடன் ஒப்பிடும் மார்க்சிச எதிர்ப்பு கோட்பாடுகளை பிரபலப்படுத்தினார். மேலும் “ஜனநாயகத்திற்காக” போராடுவது என்ற பெயரில் பிரேசிலிய முதலாளித்துவத்தின் பல்வேறு பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய சார்பு பிரிவுகளை ஆதரித்தார்.

பெட்ரோசாவின் அரசியல் சரணடைவு இருந்த போதிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (Revolutionary Socialist Party - PSR) இரண்டாம் உலகப் போரின் கடுமையான ஆண்டுகளில் நான்காம் அகிலத்தின் முன்னோக்கின் அடிப்படையில் பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்தியது. இந்த காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் செல்வாக்கின் மீதான ஸ்ராலினிஸ்டுகளின் துயரத்தின் மோசமான ஆனால் பிரதிநிதித்துவ வெளிப்பாடாக, பிரபல நாவலாசிரியரும் பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) உறுப்பினருமான ஜோர்ஜ் அமடோ (Jorge Amado) கீழ்கண்டவாறு எழுதினார்:

ட்ரொட்ஸ்கிஸ்டுகள், சர்வதேச பிரச்சனையிலிருந்து தேசிய பிரச்சனையை துண்டித்து, வன்முறை, சதி என்று பிரச்சாரம் செய்தனர், போரை அறியாதவர்கள், கட்சியின் முக்கிய வார்த்தையாக இருந்த தேசிய ஒற்றுமைக்கு எதிராக போராடினர். அவர்கள் பல நேர்மையான மனிதர்களைப் பிரித்து, அவர்களை “எதிர்ப்பு” இயக்கங்களுக்கு இழுத்துச் சென்றனர் ...

பிரேசிலிய மக்களுக்கு எதிரான இந்த அவலமான கூட்டு இந்த அழுகலின் மையம், இதயம், சாவோ பாலோவில் இருந்தது. அங்கு ... ஒரு ட்ரொட்ஸ்கிச கௌரவம் பிறந்தது, அது இலக்கிய மற்றும் மாணவர் சூழலை அழித்து, பாட்டாளி வர்க்கத்தை எச்சரிக்கையடையச் செய்தது. சாவோ பாலோவின் போர் கட்சிக்கு தீர்க்கமான போராட்டக்களமாக இருந்தது.

அந்த நேரத்தில் பிரேசிலில் இருந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவர் ஹெர்மினியோ சச்செட்டா (Hermínio Sacchetta), போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிசத்துடனான பெட்ரோசாவின் முறிவை முன்னரே துரிதப்படுத்திய குட்டி முதலாளித்துவத்தின் அரசியல் பலவீனத்தின் அதே அழுத்தங்களுக்கு அடிபணிந்தார். 1950 களில், சாச்செட்டா போல்ஷிவிசத்தை வெளிப்படையாக மறுத்து, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைக் (PSR) உடனடியாக கலைக்கத் தூண்டினார்.

அவரது முறிவுக்கான காரணங்களை அவர் ஒருபோதும் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், 1951 இல் நான்காம் அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸில் கலந்துகொண்ட பிறகு அவர் ஆழ்ந்த ஏமாற்றமடைந்ததாக சச்செட்டாவின் நெருங்கிய கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர். இதில் மைக்கேல் பப்லோ (Michel Pablo) ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை ஒரு புரட்சிகர சக்தியாக மறுவாழ்வு செய்த அவரது கலைப்புவாத கொள்கையை முன்வைத்ததுடன், ட்ரொட்ஸ்கிசக் கட்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் அவற்றின் தற்போதைய வடிவங்களில் “வெகுஜன இயக்கங்களுக்குள்” கலைக்கப்படுவதைப் போதித்தார்.

நான்காம் அகிலத்தின் அடிப்படை முன்னோக்குகள் மீதான இந்த முன்னணி தாக்குதலை, 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிறுவப்பட்டதுடன், ஒருங்கிணைக்கப்பட்ட பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான அரசியல் போரை மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின் ஆதரவாளர்கள் எதிர்கொண்டனர்.

மறுபுறம், பாப்லோவின் ஆய்வறிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், ஆனால் ட்ரொட்ஸ்கிசத்தின் வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவைக் சாச்செட்டா கண்டதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (PSR) விட்டுச்சென்ற வெற்றிடத்தில் லத்தீன் அமெரிக்க தீவிர பப்லோவாதி ஜுவான் போசாடாஸ் (Pabloite Juan Posadas) பிரேசிலில் தன்னை ஒரு ட்ரொட்ஸ்கிசத்தின் பிரதிநிதியாக ட்ரொட்ஸ்கிச புரட்சிகர தொழிலாளர் கட்சி [Trotskyist Revolutionary Workers’ Party (POR-T)] என்று அழைக்கப்படும் கட்சியை நிறுவுவதற்கும், அதை மோசடியான முறையில் முன்வைப்பதற்கும் அவரது சரணாகதி வழியமைத்துக் கொடுத்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் “இடதுசாரி” பிரிவை உருவாக்கும் நோக்கத்துடன் பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் (PCB) “மொத்த நுழைவுவாதத்தை” (total entryism) பாதுகாப்பதன் மூலம் 1954ல் இருந்து ட்ரொட்ஸ்கிச புரட்சிகர தொழிலாளர் கட்சி (POR-T) கட்டமைக்கப்பட்டிருந்தது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 1963 இல், லியோனல் பிரிசோலாவின் (Leonel Brizola) தொழிற்சங்க இயக்கத்தில் மேலும் இழிவுபடுத்தும் வடிவத்தை பாதுகாப்பதற்காக, பப்லோவாதிகள் இந்த போலிக் கொள்கையைக் கைவிட்டு போசாடாஸால் (Posadas) “உள் நுழைவுவாதம்” (interior entryism) என்று வகைப்படுத்தியிருந்தது. அதாவது, அதன் முதலாளித்துவ தலைமைக்கு வெறும் ஆலோசகர்களாக செயல்படுவதாகும்.

பிரேசிலில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவதற்கான முழுமையான முன்னுரிமையாக நிரூபிக்கப்பட்டிருந்த பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் அர்ஜென்டினாவின் நஹுவேல் மோரேனோ (Nahuel Moreno) தலைமையிலான அனைத்துலகக் குழுவின் லத்தீன் அமெரிக்கப் பிரிவுகளின் காட்டிக்கொடுப்பினால் குறிப்பிடத்தக்க அளவில் சமரசம் செய்யப்பட்டது. ஒரு மார்க்சிச கட்சி இல்லாவிட்டாலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டாமல் ஒரு சோசலிசப் புரட்சியை நடத்த முடியும் என்பதை கியூபப் புரட்சி நிரூபித்தது என்று பப்லோவாத பகுப்பாய்வு கூறுகிறது.
அவர்கள் 1963 இல் பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் தங்கள் கட்சிகளை மீண்டும் இணைத்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) கலைத்து, ட்ரொட்ஸ்கிசத்தை ஒரு தனித்துவமான அரசியல் போக்கிலிருந்து அழிக்கும் முயற்சியில், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (SWP) தலைவர் ஜோசப் ஹேன்சன் (Joseph Hansen) 1962 மற்றும் 1963 க்கு இடையில் தென் அமெரிக்காவில் நான்கு மாத பத்திரிகைதுறைச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். “கியூப உதாரணம்” கண்டம் முழுவதும் பரவி, அதை உலகப் புரட்சியின் புதிய மையமாக மாற்றுகிறது என்பதை நிரூபிக்கும் முயற்சியாக விவசாயிகள் கழகத்தின் (Ligas Camponesas) தலைவர் மற்றும் பிரேசிலிய சோசலிஸ்ட் கட்சியின் (Brazilian Socialist Party - PSB) உறுப்பினர் பிரான்சிஸ்கோ ஜூலியாவோவை (Francisco Julião) பேட்டி காண வடகிழக்கு பிரேசிலுக்கு ஹேன்சன் சென்றிருந்தார்.

விவசாயிகள் கழகத்தின் பிற்போக்குத்தனமான மார்க்சிச-எதிர்ப்பு முன்னோக்குகளைப் பாராட்டி, ஜனவரி 15 அன்று தி மிலிட்டண்டில் (The Militant) வெளியிடப்பட்ட கட்டுரையில் ஹேன்சன் எழுதினார்:
“விவசாயிகள் கழகம் விரும்புவது, விவசாயிகள் [அதே வார்த்தையில்] இயக்கத்தை அரசியல் நிலைக்கு உயர்த்தி, இந்த பகுதி மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்”.

குட்டி-முதலாளித்துவ சீர்திருத்தவாதியான ஜூலியாவோவை பிரேசிலில் சோசலிச இயக்கத்தின் மறுக்கமுடியாத தலைவராக முன்வைத்து “சோசலிசத்திற்கான நமது சொந்த போராட்டத்தை தீவிரப்படுத்துவதே அவர்களுக்கு பதிலளிப்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் சிறந்த வழி. அதற்காக நாம் சில வட-அமெரிக்க ஜூலியாவோக்களுடன் செயற்படலாம்”. என்று அவர் குறிப்பிட்டார்.

ஹான்சனும், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியும் (SWP) ஆற்றிய குற்றவியல் அரசியல் பாத்திரம், இந்த மங்கலான நேர்காணலுக்கும் மிலிட்டண்டின் (The Militant) முந்தைய இதழில் உள்ள தலையங்கத்திற்கும் உள்ள வேறுபாட்டின் மூலம் வரைபடமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

“லத்தீன் அமெரிக்காவின் மிகவும் தொழில்மயமான பகுதியில்” உள்ள தொழிலாளர்களின் “காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்துடன்” ஹான்சன் சாவ் பாலோவிற்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்ட்டிருக்கிறது. சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவர், தொழிலாள வர்க்க இயக்கத்தின் தலைமைக்காக போராடுவதற்கும் தெளிவான பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக அதை ஆயுதபாணியாக்குவதற்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தேவையையோ திறனையோ எழுப்பவில்லை. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் ஹான்சன் அமெரிக்க அரசின் இரகசிய முகவராக இருந்ததை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) பின்னர் வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் அவரது அரசியல் நாசகார நடவடிக்கைகளின் நேரடி உந்துதல்களை புரிந்துகொள்ளமுடியும்.

ஆனால் ஹான்சனின் அரசியல் திட்டவட்டமான வர்க்க உணர்வுகளுக்கு அழைப்பு விடுத்தது, அது குட்டி முதலாளித்துவத்தின் பரந்த அடுக்குகளிடையே ஆதரவைக் பெற்றிருந்தது மற்றும் அடுத்த பத்தாண்டுகளில் பாட்டாளி வர்க்கத் தலைமையின் நெருக்கடியைத் தீர்க்கும் நான்காம் அகிலத்தின் திறனை அது குறைமதிப்பிற்கு உட்படுத்திய பப்லோவாத எதிர்வினைக்கு வலிமையைக் கொடுத்தது.

இராணுவ ஆட்சியின் மிருகத்தனமான அடக்குமுறையின் ஆண்டுகளில், பிரேசிலில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் சித்திரவதைகளை எதிர்கொண்டனர் மற்றும் அவர்கள் உண்மையான ட்ரொட்ஸ்கிசம் என்று அவர்கள் நம்பி போராடியதால் கொல்லப்பட்டனர்.

மரியோ பெட்ரோசா தொழிலாளர் கட்சி (PT) பேரணியில் லூலாவின் பின்னால் நிற்கிறார்

1970களின் இறுதியில், பிரேசிலிய சர்வாதிகாரத்தை வீழ்த்திய பாரிய தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் வெடித்ததன் மூலம் பப்லோவாதத்தின் அழிவுகரமான பாத்திரம் முழுமையாக அம்பலமானது. முந்தைய காலகட்டத்தில் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய கருவியாக செயல்பட்ட பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) இன் முழுமையான பலவீனத்துடன், பிரேசிலிய முதலாளித்துவம் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விட்டோடிய துரோகிகளின் எதிர்ப்புரட்சிகர சேவைகளை எண்ணிக்கொண்டிருந்தது.

மரியோ பெட்ரோசா (Mário Pedrosa) முதல், பப்லோவாத ஒருங்கிணைந்த செயலகம் (Pabloite Unified Secretariat) மற்றும் மோரேனாய்ட் (Morenoite) மற்றும் லம்பேர்டைட் (Lambertite) போக்குகள் வரை, அவர்கள் அனைவரும் 1980 களில் லூலாவின் முதலாளித்துவ சார்பு தொழிலாளர் கட்சியின் அரசியல் மருத்துவச்சிகளாக பணியாற்றியிருக்கின்றனர். இது பிரேசிலில் முதலாளித்துவ ஆட்சியை நிலையாக வைத்திருப்பதற்கு அனுமதித்தது.

1964 ஆட்சிக்கவிழ்ப்பின் 60வது ஆண்டு நிறைவையொட்டி, லூலா அரசாங்கம் இந்த அரசியல் பேரழிவின் நினைவை அகற்ற முற்படுகையில், பிரேசிலில் உள்ள சோசலிச சமத்துவக் குழு (Socialist Equality Group) அதன் முக்கியமான படிப்பினைகளைப் படிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. உங்களை மீண்டும் காட்டிக்கொடுக்க நீங்கள் அனுமதிக்க விடக்கூடாது. பிரேசிலில் பிற்போக்கு முதலாளித்துவ ஒழுங்கின் வீழ்ச்சியைத் தூண்டும் உலகளாவிய முதலாளித்துவத்தின் வளரும் நெருக்கடியானது, சர்வதேச சோசலிசத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இம்முறை ஒரு உண்மையான புரட்சிகர தலைமை சரியான நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரேசிலியப் பிரிவைக் கட்டியெழுப்புவதாகும்!

Loading