முன்னோக்கு

இனப்படுகொலை போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் 274 காஸா மக்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது

அமெரிக்க காங்கிரஸ் நெதன்யாகுவுக்கு விடுத்த அழைப்பை எதிர்த்து, வாஷிங்டன் டி.சி.யில் ஜூலை 24 அன்று பாரிய ஆர்ப்பாட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த சனிக்கிழமையன்று, ஒட்டுமொத்த இனப்படுகொலையின் மிகக் கொடூரமான படுகொலைகளில் ஒன்றை இஸ்ரேலிய படைகள் நடத்தியுள்ளன. மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர். இறப்பு எண்ணிக்கையில் குறைந்தது 64 குழந்தைகள், 57 பெண்கள் மற்றும் 37 முதியவர்கள் உள்ளனர். மேலும் 680 பேர்கள் காயமடைந்துள்ளனர்.

வாஷிங்டன் டி.சி.யில் காஸா இனப்படுகொலைக்கு எதிரான பேரணி, நவம்பர் 5, 2023 [Photo: WSWS]

இஸ்ரேலிய துருப்புக்கள், உதவிப் பணியாளர்கள் போல் மாறுவேடமிட்டு, இந்த முகாம் முழுவதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தப் படுகொலையானது “பணயக்கைதிகளை மீட்கும்” நடவடிக்கையாக வெளிப்படையாக நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மீட்கப்பட்ட ஒவ்வொரு பணயக் கைதிகளுக்கும், குறிப்பாக மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் ஒரு அமெரிக்க குடிமகன் உட்பட 68 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

காங்கிரஸின் இரு அவைகளின் தலைவர்களும், ஜூலை 24 ஆம் தேதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன், டி.சி.யில் காங்கிரஸின் கூட்டு அமர்வில் பேசுவதற்குத் தேதி நிர்ணயித்த சில நாட்களுக்குப் பிறகு இந்தப் படுகொலை நடந்துள்ளது. இது, இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனப்​​படுகொலையின் (Holocaust) உச்சக்கட்டத்தில் ஹிட்லரை பேச அழைப்பதற்கு ஒப்பானது.

உலக சோசலிச வலைத் தளம், நெத்தன்யாகு வரும் நேரத்தில் வாஷிங்டன் டி.சி.யில் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்துடன் பதிலளிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. எவ்வாறாயினும், இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், வெறுமனே நெதன்யாகுவை எதிர்ப்பது மட்டுமல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இனப்படுகொலையை வழிநடத்தி, நிதியளித்து, ஆயுதம் வழங்கி மற்றும் அரசியல்ரீதியாக நியாயப்படுத்திவரும் முழு அரசியல் ஸ்தாபனத்தின் பங்கிற்கு எதிராகவும் இருக்க வேண்டும்.

“அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் அமெரிக்க செனட்டின் இரு கட்சித் தலைமையால்” கையெழுத்திட்டு நெதன்யாகுவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பானது, காஸா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பிற்கு எதிரான அரசியல் ஆத்திரமூட்டலாகும். அத்தோடு இது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உயர்மட்ட வழக்கறிஞரால் போர்க் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு கொலைகாரனுக்கான அரசியல் மற்றும் தார்மீக ஒற்றுமையின் பிரகடனமாகும்.

அதே நேரத்தில், இந்த அழைப்பு அமெரிக்க அரசாங்கத்திற்கும் இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையிலான உண்மையான உறவை அம்பலப்படுத்துகிறது. அவரது முன்னேற்ற அறிக்கைக்கு எவ்வளவு விலைகொடுக்க வேண்டும் என்று நெதன்யாகு கேட்கப்படுகிறார். “ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், பிராந்தியத்தில் நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்டவும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் பார்வையைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அழைக்கிறோம்,” என்று அந்த அழைப்பு கூறியது.

இஸ்ரேலிய ஆட்சி “பயங்கரவாதத்தை எதிர்த்து” போராடவில்லை. அது முழு மக்களையும் கொன்று குவித்து வருகிறது, மேலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக அது செயல்பட்டு வருகிறது.

உண்மையில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற படுகொலையானது, அமெரிக்கப் படைகளின் நேரடி ஈடுபாட்டுடன் நடந்துள்ளது. இஸ்ரேலில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவத்தினர், இந்த தாக்குதலுக்கு “உளவு மற்றும் பிற ஆதரவை” வழங்கினர் என்பதை நியூயோர்க் டைம்ஸ் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், இஸ்ரேலிய படைகள் மறைந்திருந்த “மனிதாபிமான உதவி” வாகனம் அமெரிக்காவிலிருந்து இறக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்துக்கு முந்தைய நாள் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் பாலஸ்தீனிய ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

“இவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்ட போதிலும், இதே வழியில் இன்னும் பல நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளுவதை அமெரிக்கா ஆதரிக்கிறதா?” என்ற கேள்விக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “அதற்காக இஸ்ரேலுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று அறிவித்தார்.

நெதன்யாகுவை அழைப்பதன் மூலம், இஸ்ரேலிய ஆட்சியால் படுகொலை செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையில் “சிவப்பு கோடுகள்” இல்லை என்பதை அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் தெளிவுபடுத்துகிறது. இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000 ஐ நெருங்குகிறது. பாரிய பட்டினி உட்பட நூறாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படலாம். இவை, இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

உலக சோசலிச வலைத் தளம் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களில் இருந்தும் தொழிலாளர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பிரதிநிதிகளை ஏற்பாடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறது. ஜூலை 24 அன்று ஆர்ப்பாட்டம் செய்ய வாஷிங்டனுக்கு வருமாறு மாணவர்களையும் இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் போர்க் குற்றவாளிகளின் மனதை மாற்றுவது அல்ல. அவர்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள். ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு உண்மையான மூலோபாயத்தின் அடிப்படையில் ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை அது இயக்க உள்ளது.

இந்த மூலோபாயம் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்:

முதலாவதாக, காஸா இனப்படுகொலை, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அமெரிக்கப் போர் விரிவாக்கத்தின் இன்றியமையாத பகுதியாக இருப்பதுடன், அமெரிக்க தலைமையிலான உலக ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெடிப்புடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

இதில், நேட்டோ சக்திகள் நேரடியாகப் பங்கேற்பாளர்களாக, உக்ரேன் போரில் நுழையும் பெரும் போர் விரிவாக்கத்தின் மத்தியில் நெதன்யாகுவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், நேட்டோவின் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்குள் தாக்குதல்களை நடத்த உக்ரேனுக்கு அதிகாரம் அளித்துள்ளதாக பைடென் அறிவித்தார். மேலும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் நாடுகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்தார்.

காஸாவில் இனப்படுகொலையை ஆதரிக்கும் அதே அரசாங்கங்கள் உக்ரேனில் பினாமி ஆட்சிக்கு ஆயுதம் கொடுக்கின்றன. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்படுவதை மேற்பார்வையிட்டுவரும் நிலையில், ​​உண்மையான பாசிஸ்டுகளால் ஆன உக்ரேனிய அரசாங்கமானது, உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ள முதலாளித்துவ ஆட்சிகளுக்கும், போருக்கும் எதிரான சோசலிஸ்ட்டான போக்டன் சிரோட்டியுக்கைக் கைது செய்துள்ளது.

இரண்டாவதாக, போருக்கு எதிரான இயக்கம் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

யுத்தத்தில் சண்டையிட்டு மடிவதும் தொழிலாளி வர்க்கம்தான், அதற்குக் விலை கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதும் தொழிலாளி வர்க்கம்தான். போரை உருவாக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடியானது, சமத்துவமின்மை, வறுமை மற்றும் ஊதியங்கள், வேலைகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களின் வடிவத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடிப்படையையும் உருவாக்குகிறது.

மூன்றாவதாக, போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமாகவும், விரோதமாகவும் இருக்க வேண்டும்.

பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியினரும் ஆரம்பத்தில் இருந்தே நேரடியாக போரில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வாரம், 2024 தேர்தலில் பைடெனின் போட்டியாளரான குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப், “இஸ்ரேல் வேலையை முடிக்க வேண்டும்” என்று அறிவித்தார். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதிலும், அதற்கு எதிரான எதிர்ப்பை “யூத எதிர்ப்பு” என்று அவதூறு செய்வதிலும் கைகோர்த்து செல்கின்றனர்.

அவர்கள் நாட்டுக்கு வெளியே போரை தீவிரப்படுத்தி வரும்போது, ஆளும் உயரடுக்குகள் உள்நாட்டில் பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு இன்னும் வெளிப்படையாகத் திரும்பி வருகின்றன. இது பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் அனைத்து எதிர்ப்பின் மீதும் இலக்கு வைத்துள்ளது.

நான்காவதாக, இனப்படுகொலைக்கு எதிராகவும் போருக்கு எதிராகவும் உள்ள ஒரு இயக்கம் சர்வதேச இயக்கமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களை அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டும்.

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் போன்று தீவிரமடைந்து வரும் உலகப் போர், உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளில் இருந்து எழுகிறது. சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்து, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் சதித்திட்டங்களை எதிர்ப்பதற்குத் தேவையான சமூக மற்றும் பொருளாதார சக்தியைக் கொண்ட உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, ஒரு புதிய உலகளாவிய மோதலைத் தடுக்க முடியும்.

தமது நலன்கள் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறையைப் பாதுகாக்க, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு, மனிதகுலத்தை படுகுழியை நோக்கி இட்டுச் செல்கிறது. ஆளும் வர்க்கத்தின் நிரந்தரப் போருக்கு, தொழிலாள வர்க்கத்தால் நிரந்தரப் புரட்சி என்ற முன்னோக்கின் மூலம் பதிலளிக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய இலக்கு தேசிய-அரசு அமைப்பு முறையை ஒழித்து, உலக சோசலிச கூட்டமைப்பை ஸ்தாபிப்பதாகும்.

Loading