முன்னோக்கு

உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக் மீதான அரசியல்ரீதியான பொய் வழக்கை நிறுத்து!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உக்ரேன், ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் செயலூக்கத்துடன் செயல்படும் ஒரு சோசலிச-ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் 25 வயதான போக்டன் சிரோட்டியுக் (Bogdan Syrotiuk), பாசிச செலென்ஸ்கி ஆட்சியின் இழிபுகழ்பெற்ற SBU என்னும் அரசு உளவுத்துறையால் 25 ஏப்பிரல் 2024 அன்று கைது செய்யப்பட்டார். தெற்கு உக்ரேனில் அமைந்துள்ள மிகோலேவ் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் போக்டன் கொடூரமான நிலைமைகளில் அடைக்கப்பட்டுள்ளார்.

YGBL அமைப்பு அரசியல் ரீதியாக இணைந்திருக்கும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), போக்டன் சிரோட்டியுக்கிற்கு எதிராக SBU அரச உளவுத்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மையான ஆவணங்களை இறுதியில் பெற்றுள்ளது. போக்டன் ஒரு அரக்கத்தனமான அரச சூழ்ச்சியில் அகப்பட்டுள்ளார் என்பதை அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கான அடிப்படையை உருவாக்கும் இந்த ஆவணங்கள் தெளிவாகக் எடுத்துக் காட்டுகின்றன. SBU ஆல் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள், பொய்கள், வெளிப்படையான கட்டுக்கதைகள் மற்றும் அரசியல் அபத்தங்களின் ஒரு அப்பட்டமான கலவையாகும். 

போக்டன் சிரோட்டியுக், ஏப்ரல் 2023 [Photo: WSWS]

மேலும் SBU சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போக்டனுக்கு எதிராக மட்டும் இலக்கு வைக்கப்படவில்லை. அவை, செலென்ஸ்கி ஆட்சிக்கு எதிரான அனைத்து இடதுசாரி மற்றும் சோசலிச எதிர்ப்புக்கு எதிரான, விசேடமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் ஊடகமான உலக சோசலிச வலைத் தளத்துக்கும் எதிரான போர்ப் பிரகடனமாகும்.

போக்டன் சிரோட்டியுக் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டு அவர் பெரும் தேசத்துரோகக் குற்றவாளி என்பதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்டன் “ரஷ்ய பிரச்சார மற்றும் தகவல் நிறுவனமான உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப்பட்ட பிரசுரங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார்” என்பதே இந்த குற்றச்சாட்டின் அடித்தளமாகும் [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.] 

உலக சோசலிச வலைத் தளமானது ரஷ்யாவினால் நடத்தப்பட்டு வரும் “உக்ரேனுக்கு எதிரான ஒரு செயலூக்கமான தகவல் போரின்” ஒரு கருவி என கண்டிக்கப்படுகிறது.

சர்வதேச பங்காளிகள் உக்ரேனுக்கு வழங்கும் ஆதரவை இழிவுபடுத்தவும், விசேட இராணுவ நடவடிக்கை என்றழைக்கப்படுவதைத் தொடங்க ரஷ்யா நிர்பந்திக்கப்படுவதற்கான நிலைமைகளை மேற்கத்திய நாடுகளே உருவாக்கியதாகவும் அவை ஆயுதங்களையும் இன்னும் பிறவற்றையும் வழங்குவதன் மூலம் உக்ரேனுக்குள் போர்களைத் தூண்டிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும் “இடதுசாரி” எனப்படும் பிரச்சாரகர்கள் மற்றும் அவர்களின் தகவல் தளங்களை (வலைத் தளங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகத் தளங்களை) உலக சோசலிச வலைத் தளம் பயன்படுத்தி வருகின்றது. இதன் விளைவாக, உக்ரேன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மக்களுக்கு கிரெம்ளின் சார்பு கதைகளை திட்டமிட்டு தெரிவிக்க ரஷ்யாவால் அவை பயன்படுத்தப்படுகின்றன...

உக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, உலக சோசலிச வலைத் தளம் “WSWS” உக்ரேனையும், ஆக்கிரமிப்பு அரசுக்கு எதிரான போராட்டத்தில் உக்ரேனுக்கு உதவியதற்காக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் பிரதிநிதிகளையும் இழிவுபடுத்தும் நோக்கில், பல்வேறு மொழிகளில் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போருக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சோசலிச மற்றும் சர்வதேசியவாதக் கோட்பாடுகளில் ஆழமாக வேரூன்றிய அதன் அரசியல் வேலைத்திட்டத்தின் ஒரு அத்தியாவசிய அங்கமாகும். இந்த எதிர்ப்பை, புட்டினின் பிரச்சார வலையமைப்பின் ஒரு கருவியாக சித்தரிக்க உக்ரேனிய ஆட்சி செய்யும் முயற்சியானது, அரசியல் ரீதியாக அபத்தமானது போலவே விஷமத்தனமான பொய்யும் ஆகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோசலிசம் இறுதியாக காட்டிக்கொடுக்கப்பட்தனதும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியினதும் விளைவாக எழுந்த புட்டின் ஆட்சிக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சமரசமற்ற எதிர்ப்பு என்பது ஒரு அடிப்படை அரசியல் உண்மையாகும். இது நூற்றுக்கணக்கான எழுத்துககளில் மட்டுமன்றி, பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய ஆட்சி அதன் பாசிச குணாம்சத்திற்கு உண்மையாக, ஹிட்லர் மற்றும் அவரது பிரச்சார மந்திரி ஜோசப் கோயபல்ஸின் நன்கறியப்பட்ட போதனையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது: அதாவது “பொய் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அவ்வளவு எளிதாக அது நம்பப்படும்.”

இந்த குறிப்பிட்ட விடயத்தில், SBU பொய்களின் அளவு, சிந்திக்கும் பொதுமக்களை சாதாரணமாக ஆட்கொள்ளுமளவுக்கு பிரமாண்டமானதாக செலென்ஸ்கி ஆட்சி நம்புவதாகத் தெரிகிறது. இவ்விதத்தில், புட்டின் ஆட்சியானது WSWS இன் வேலைகளை வழிநடத்துகிறது என்பதை பொதுக் கருத்து ஏற்றுக்கொள்ளும் என்று அது எதிர்பார்க்கிறது. இதனை SBU யின் குற்றச்சாட்டு பின்வருமாறு விவரிக்கிறது,

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடன் இணைந்த பிரிவுகளான உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளின் இணையவழி வெளியீடானது, சோசலிசப் புரட்சியின் மூலம் உலக சோசலிசத்தை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன், முதலாளித்துவ சந்தை அமைப்புமுறைக்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பு நிலையில் இருந்து உலகெங்கிலுமான பிரதான சமூக-அரசியல் பிரச்சினைகளை வெளியிடுகிறது.

போக்டனுக்கு எதிரான அதன் வழக்கை சிதைக்கும் முரண்பாட்டை எந்தக் கட்டத்திலும் SBU விளக்க முயலவில்லை. அதாவது, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நடத்தும் போர்களுக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத எதிர்ப்பாளர் என்ற முறையில் போக்டன் உயர்த்திப் பிடிக்கும் அரசியல் கோட்பாடுகள் சமரசத்திற்கு இடமில்லாத வகையில் புட்டின் ஆட்சியின் கொள்கைகளுக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளன. இதில் உக்ரேன் மீதான படையெடுப்பும் அடங்கும்.

வெறுமனே பொய் சொல்வதன் மூலம் SBU முரண்பாட்டைத் தவிர்க்க முயற்சிக்கிறது. அதாவது ”உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு பிரதிநிதியின் அறிவுறுத்தல்களின் பேரில் செயல்பட்டுவரும்” போக்டனின் நடவடிக்கைகள், “உக்ரேன் பிராந்தியத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதை ஆதரித்தும் நியாயப்படுத்தியும்” வந்ததாக அந்தக் குற்றப்பத்திரிகை வாதிடுகிறது.

ஒவ்வொரு வார்த்தையும் பொய் ஆகும். ரஷ்ய படையெடுப்புக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதனுடன் இணைந்த அமைப்புகளும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் படையெடுப்பை எதிர்க்கின்றன என்ற விடயம், அது தொடங்கிய முதல் நாளிலிருந்து  பதிவிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 21, 2022 திங்கட்கிழமையன்று, உக்ரைனின் கியேவில் ஒரு வணிக மையத்தின் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அழிவுகளுக்கு மத்தியில் மக்கள் கூடுகிறார்கள்.  [AP Photo/Rodrigo Abd]

ரஷ்ய படையெடுப்பு நாளான 24 பெப்ரவரி 2022 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, “புட்டின் அரசாங்கத்தின் உக்ரேன் படையெடுப்பையும் அமெரிக்க-நேட்டோ போர்வெறியையும் எதிர்ப்போம்! ரஷ்ய, உக்ரேன் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக நிற்போம்!” என்று தலைப்பிட்ட ஒரு அறிக்கையை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்டது. அது இவ்வாறு தொடங்கியது:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் உக்ரேனில் ரஷ்ய இராணுவத் தலையீட்டைக் கண்டிக்கின்றன. அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு சோசலிஸ்டுகள் மற்றும் வர்க்க நனவுள்ள தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட வேண்டும். 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட பேரழிவை ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் தடுக்க முடியாது. இது, விளாடிமிர் புட்டின் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் ஆழ்ந்த பிற்போக்கு சித்தாந்தமாகும். 

இப்போது தேவையாக இருப்பது 1917க்கு முந்திய ஜாரிச வெளியுறவுக் கொள்கைக்குத் திரும்புவதல்ல. மாறாக, 1917 இல் அக்டோபர் புரட்சிக்கு ஆதர்சமளித்ததும் ஒரு தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு இட்டுச் சென்றதுமான சோசலிச சர்வதேசியவாதத்திற்கு, ரஷ்யாவிலும் மற்றும் உலகெங்கிலும் புத்துயிரூட்டுவதே தேவையாகும். உக்ரேனியப் படையெடுப்புக்கு, புட்டின் ஆட்சியால் கொடுக்கப்படும் நியாயங்கள் என்னவாக இருந்தாலும், அது ரஷ்ய மற்றும் உக்ரேனியத் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கே சேவைசெய்யும் என்பதுடன், அதற்கும் மேலாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கே சேவைசெய்யும்.

புட்டின், கடந்த வாரத்தின் போது அவர் விடுத்த இரண்டு முக்கியமான அறிக்கைகளில், அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் குற்றங்களைப் பட்டியலிட்டு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருந்தார். வாஷிங்டனின் கபடவேடத்தின் மீதான அவரது கண்டனத்தில் பெரும்பகுதி தரவு ரீதியாக உண்மைகளைக் கொண்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் முன்னிழுக்கின்ற நச்சுத்தனமான கம்யூனிச-விரோத மற்றும் அந்நியர்-வெறுப்பு சித்தாந்தமும் மற்றும் அவர் பாதுகாப்பதாக கூறிக்கொள்கின்ற நலன்களும் முற்றிலும் பிற்போக்கானவையாக இருப்பதுடன் உக்ரேனிலுள்ள மற்றும் உலகளாவிய தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடாதது ஒருபுறம் இருக்க ரஷ்யாவின் தொழிலாள வர்க்க பரந்துபட்ட மக்களுக்கே கூட அழைப்புவிட திறனற்றவையாக உள்ளன. அக்டோபர் புரட்சியையும், பல-இனம் சேர்ந்த அரசாக சோவியத் ஒன்றியம் இருந்ததையும் கண்டனம் செய்யும் அதேவேளையில், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட தீரமிக்க போராட்டத்தை புட்டின் புகழ்பாடுவதில் உள்ள சிடுமூஞ்சித்தனம், ரஷ்யாவிலும் உக்ரேனிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவினால் வெறுக்கப்படுவதாய் இருக்கும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சோசலிச எதிர்ப்பு என்பது, எந்த வடிவிலான தேசிய பேரினவாதத்துடனும் பொருத்தமற்றது என்று வலியுறுத்தி வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இந்த படையெடுப்பிற்கு புட்டின் ஆட்சி மற்றும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களின் அனைத்து நியாயப்படுத்தல்களையும் நிராகரித்தது. “தேசிய பாதுகாப்பு” குறித்த அவர்களின் பிரார்த்தனையை சோசலிஸ்டுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதும், அதனை தூக்கிவீசுவதும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் மூலமாக மட்டுமே சாத்தியமானது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையானது, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளை மேற்கோளிட்டது: “போர்க்காலத்தில் தேசிய அரசுடன் தன்னைக் கட்டிப்போட்டுக் கொள்ளாமல், போர் வரைபடத்தை அல்ல, மாறாக வர்க்கப் போராட்ட வரைபடத்தைப் பின்தொடர்வது, சமாதான காலத்தில் தேசிய அரசின் மீது ஏற்கனவே சமரசமற்ற போரை அறிவித்துள்ள ஒரு கட்சிக்கு மட்டுமே சாத்தியமாகும்.”

போக்டன் சிரோட்டியூக் [Photo: WSWS]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, “போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு” அழைப்புவிடுத்தது. மேலும், “உக்ரேன் படையெடுப்பை எதிர்ப்பதன் மூலம், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் அமெரிக்க/நேட்டோ ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை நாங்கள் கண்டனம் செய்கிறோம், அவைகள் பாசாங்குத்தனத்தால் இரத்தம் தோய்ந்தவை” என்று அது விளக்கியது.

இந்த அரசியல் பிரகடனம், போர் தொடங்கியதில் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வேலைகளை வழிநடத்திய கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை விவரித்தது.

26 பெப்ரவரி 2022 அன்று, ஒரு சர்வதேச இணையவழிக் கருத்தரங்கை நடத்திய அனைத்துலகக் குழுவானது, அதில் போருக்கான அதன் எதிர்ப்பை திட்டவட்டமாக முன்வைத்திருந்தது. பேச்சாளர்களில், என்னைத் தவிர, அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவின் நீண்டகால தலைவரான நிக் பீம்ஸ், ஜேர்மனியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு தலைவரான ஜோஹானஸ் ஸ்டேர்ன், பிரிட்டனில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவின் ஒரு முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸ், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர், மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் இன்னுமொரு முன்னணி உறுப்பினரான இவான் பிளேக் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, போரின் முதல் நாட்களில் அது முன்னெடுத்த நேட்டோ மற்றும் ரஷ்யாவின் கொள்கைகளுக்கு எதிரான கோட்பாட்டு ரீதியான எதிர்ப்பில் இருந்து ஒருபோதும் விலகவில்லை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் YGBL இன் தோழர்களுக்கும் இடையிலான உறவு ஏறத்தாழ சரியாக போர் வெடிப்புடன் பொருந்தி இருந்தது. ரஷ்யா மற்றும் உக்ரேனிய ஆட்சிகளின் போர், தேசிய பேரினவாதம் ஆகிய இரண்டையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எதிர்ப்பதன் காரணமாகவே அவர்கள் துல்லியமாக அதனால் ஈர்க்கப்பட்டனர்.

உலக சோசலிச வலைத் தளம் போக்டனுக்கு “தயாரித்தல், எழுதுதல், திருத்துதல் மற்றும் வெளியிடுதல்” ஆகிய பணியை வழங்கியதாக SBU குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டுகிறது. அத்தோடு, “உலக சோசலிச வலைத் தளம் மற்றும் பிற கம்யூனிஸ்ட் சார்ந்த ஊடகங்கள், கட்டுரைகள், வெளியீடுகள், கருத்துகள் போன்றவற்றில், 24 பெப்ரவரி 2022 அன்று தொடங்கிய உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு தொடர்பான ரஷ்ய சார்பு கதைகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தன, அதற்கு [போக்டன் சிரோடியுக்] தனது தன்னார்வ ஒப்புதலை அளித்தார்” என்று SBU குற்றம் சாட்டுகிறது

இந்த கூற்றுக்கு ஆதரவாக, “போருக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தை ஒழுங்கமைப்பதற்காக!” என்று தலைப்பிட்ட YGBL அறிக்கையை SBU மேற்கோள் காட்டுகிறது. 12 அக்டோபர் 2022 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், “பகுதிகள், அறிக்கைகள், வாக்கியங்கள் மற்றும் சொற்றொடர்கள்... என்பன 2014 இல் தொடங்கிய ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துகின்றன...” என்று அது கூறுகிறது. 

ஆனால், உண்மையான ஆவணமானது, இந்தக் கூற்று ஒரு பொய் என்பதை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. YGBL பிரகடனத்தில் உக்ரேன் மீதான படையெடுப்புக்கு ஆதரவைக் குறிக்கும் ஒரு சொற்றொடர் கூட இல்லை. SBU ஆனது, 4, 7, 8, 10, 13 ஆகிய எண்ணிடப்பட்ட பத்திகளில் இருந்து சில வாக்கியங்களை மட்டுமே உள்ளடக்கி, ஆவணத்தில் இருந்து தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டுகிறது. SBU, 5 மற்றும் 6 ஆம் பத்திகளை விட்டுவிட்டு YGBL இன் பகுப்பாய்வின் தொடர்ச்சியை குறுக்கறுக்கின்றது. 4 முதல் 8 வரையான பத்திகள் புறநிலை முதலாளித்துவ நெருக்கடி பற்றியும் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகள் போரைத் தூண்டியதன் அடிநிலையில் உள்ள அரசியல் நோக்கங்கள் பற்றிய சுருக்கமான மார்க்சிச விளக்கத்தை வழங்குகின்றன. YGBL இன் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

4. அமெரிக்கா ஸ்தாபிக்க விரும்பும் புதிய உலக ஒழுங்கு இவ்வாறான மிகவும் சாத்தியமான சித்திரத்தைப் போல் தெரிகிறது: ரஷ்யா மற்றும் சீனாவின் இயற்கை, தொழில்துறை-தொழில்நுட்ப மற்றும் மனித வளங்கள் மீதான நேரடியான கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அவசியமெனில், ஏகாதிபத்தியம் அவற்றை அடிபணிய வைக்க வேண்டும் மற்றும் பிளவுபடுத்த வேண்டும்.

5. உலகினை புதிதாக மறுபங்கீடு செய்வதில் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், அவற்றின் சொந்த இடத்திற்காக அமெரிக்காவை ஆதரிக்கின்றன. அதேநேரத்தில், ஐரோப்பிய ஏகாதிபத்தியமானது, அமெரிக்காவினால் பங்கீட்டில் வைக்கப்ப்ட்டுள்ள அதே வேளை, உலகை மறுபங்கீடு செய்வதை மட்டுமே தனது இக்கட்டான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையில் இருந்து வெளியேறுவதற்கும், அதன் முந்தைய மேன்மையை மீண்டும் பெறுவதற்குமான ஒரு வழியாக காண்கிறது.  

6. ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவும், பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் தங்களின் நலன்களுக்கு எந்த அளவிற்கு பொருந்துகிறதோ, அந்தளவுக்குத்தான் அமெரிக்காவை ஆதரிக்கின்றன. இந்த நாடுகள் சீனாவுடன் போட்டியிட அனுமதிக்கப்படும் வரை அமெரிக்காவை ஆதரிக்கும். செல்வாக்கு மண்டலங்களைப் பிரிக்கும் வழிவகை, ஐரோப்பாவைப் போலவே உறுதியற்றவையாக உள்ள பசிபிக் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை புதுப்பிக்கும்.

7. 2008 நெருக்கடியானது உலகெங்கிலும் வர்க்கப் போராட்டங்களுக்கு புத்துயிரூட்டியது. 2010 களின் ஆரம்பத்தில் நடந்த அரபு வசந்தம், இந்த புதிப்பித்தலுக்கு தெளிவான சான்றாகும். அது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை இன்னும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்தித்தது. 2014 இல், அவர்கள் உக்ரேனில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தனர். இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு எதிர்கால போரில் ஒரு பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நிலைமைகளையும் அமெரிக்காவால் உருவாக்க முடிந்தது.

8. 2020 இல் வெடித்த கோவிட்-19 பெருந்தொற்று நோய் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை தீவிரப்படுத்தியதுடன், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போருக்கான தயாரிப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னும் விரைவான விரிவாக்கத்திற்கு தூண்டுதலாக இருந்தது. அமெரிக்கா “ஒரே சீனா” கொள்கையை கைவிட்டும், செலென்ஸ்கியின் “கிரிமியனுக்கான செயற்பாட்டுத் தளத்தை” ஆதரித்த 2021 ஆகஸ்ட் நேட்டோ உச்சிமாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டபடி, உக்ரேனுக்கான அதன் ஆதரவை அதிகரித்தும் இன்னுமொரு ஆத்திரமூட்டும் பாதையில் அடியெடுத்து வைத்தது.

குறிப்பிடத்தக்க வகையில், YGBL பிரகடனத்தில் புட்டின் ஆட்சி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கின்ற பத்தி 9ஐ SBU விட்டுவிட்டுள்ளது. அந்தப் பத்தி பின்வருமாறு கூறுகிறது:

விளாடிமீர் புட்டினின் பிற்போக்கு ஆட்சியானது, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் துரோகத்தனமாக கலைக்கப்பட்டு முதலாளித்துவ மீட்சி செய்யப்பட்டதில் இருந்தே எழுந்தது. புட்டினின் கொள்கைகள், இறுதி ஆய்வில், மேலிருந்து வரும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்திற்கு எதிராகவும், இன்னும் விமர்சன ரீதியாக, கீழிருந்து ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கு எதிராகவும் சோவியத்துக்கு பிந்தைய தன்னலக்குழுவின் செல்வத்தைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டுள்ளன.

புட்டின் ஆட்சி மீதான விமர்சனத்தைத் தொடர்கின்ற 10 வது பத்தியை SBU மேற்கோளிடுகிறது. அது கூறுவதாவது:

இந்தப் புவிசார் அரசியல் மற்றும் சமூக உள்ளடக்கத்திற்குள், பெப்ரவரி 24 அன்று உக்ரேன் மீதான புட்டினின் சாகசவாத படையெடுப்பு, கிழக்கு நோக்கிய நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கத்திற்கு ரஷ்ய செல்வந்த தன்னலக்குழுக்களின் பதிலடியாக இருந்தது. புட்டினின் படையெடுப்புக்குக் காரணமான அமெரிக்க-நேட்டோவின் தரப்பில் “சிவப்புக் கோடுகள்” கடக்கப்பட்டு கடைசிச் சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்ததால், புட்டின் ஆட்சியின் பிரதான இலக்கு, அதன் “சிறப்பு நடவடிக்கையின்” அழுத்தத்தின் மூலம் அமெரிக்க-நேட்டோவுடன் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தையை அடைவதாகும். [அழுத்தம் சேர்க்கப்பட்டது].

புட்டினின் படையெடுப்பை “சாகசமானது” என்று குணாம்சப்படுத்துவது, எதை “ரஷ்ய-சார்பு கதை” என்று SBU கூறுகிறதோ அதனுடன் எந்த விதத்திலும் பொருந்தாது. YGBL இன் அறிக்கையை புட்டின்-ஆதரவு பிரச்சாரமாக சித்தரிப்பதற்கான அதன் முயற்சியின் பலவீனத்தை வெளிப்படையாக உணர்ந்த SBU, அந்த ஆவணத்தில் இருந்து மேலும் மேற்கோள்களுக்கு எதிராக முடிவெடுத்து, 11 மற்றும் 12 ஆம் பத்திகளில் புட்டினின் கொள்கைகள் சம்பந்தமாக YGBL அபிவிருத்தி செய்த அதன் கண்டனத்தை விட்டுவிட்டது. அவை பின்வருமாறு வலியுறுத்துகின்றன:

11. மேற்குடன் ஒரு “சமமான பங்காண்மைக்கு” ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பம் மிகவும் கற்பனாவாத பிரமைகளில் ஒன்றாக இருந்தது. வரலாற்றுரீதியில் ஸ்ராலினின் “மக்கள் முன்னணிகள்” மற்றும் பின்னர் “சமாதான சகவாழ்வு” கொள்கையில் இருந்து பெறப்பட்ட இந்த மயக்கம், 1990 களில் ரஷ்ய முதலாளித்துவவாதிகளின் வளர்ந்து வந்த வர்க்கத்தின் மத்தியில் அபிவிருத்தி கண்டது.

12. புட்டின் ஆட்சியானது இந்த கற்பனாவாத மாயையில் இருந்து விடுபடவில்லை. ரஷ்ய தன்னலக்குழுக்கள் “சம அந்தஸ்தில்” இருக்க விரும்பி, மேற்குடன் சூழ்ச்சி செய்து சமரசத்திற்கு முயல்வதே அதன் ஒட்டுமொத்த கொள்கையாக இருந்து வந்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியம், ரஷ்யாவை வெற்றிகொள்ளும் இலட்சியங்களைத் தவிர, புட்டினின் ஆட்சியின் இந்த சமரசத் தொனிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.

YGBL அறிக்கையின் பத்தி 17 ஐ மேற்கோள் காட்ட வேண்டாம் என்று SBU தேர்வு செய்துள்ளது, அந்தப் பத்தி இவ்வாறு அறிவிக்கிறது:

உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்புக்குப் பிந்தைய போரின் போக்கு இந்த படையெடுப்பின் பிற்போக்குத் தன்மையை அதிகரித்தளவில் வலியுறுத்துகிறது. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்ய மக்களின் சுதந்திரத்திற்காக போராடுவதாக கூறிக்கொண்டாலும், உண்மையில் புட்டின் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தையும் நாட்டின் மூலப்பொருள் செல்வத்தையும் சுரண்டுவதற்கு ரஷ்ய தன்னலக்குழுவின் சுதந்திரத்தை மட்டுமே பாதுகாத்து வருகிறார்.

மேற்கோளிடப்படாமல் விடப்பட்டுள்ள 18 வது பத்தி, ரஷ்ய பிரச்சாரத்தின் கருவிகளாக போக்டன், YGBL மற்றும் WSWS மீது SBU இன் குற்றச்சாட்டைக் கூடுதலாக தகர்க்கிறது. அந்தப் பத்தி இவ்வாறு வலியுறுத்துகிறது,

ரஷ்ய சமூகத்தின் தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளியேற புட்டின் ஆட்சிக்கு எந்த வழியும் இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வழியும் இருக்காது. புட்டின் ஆட்சியின் அனைத்து இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் விரிவாக்கத்திற்கும் ரஷ்ய, உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் மோசமடைவதற்கும் மட்டுமே பங்களிப்பு செய்யும்.

19 மற்றும் 20 பத்திகளையும் SBU மேற்கோளிடத் தவறிவிட்டது, அவை போர் எத்தகைய பேரழிவிற்கு இட்டுச் செல்லக்கூடும் என்று தீர்க்கதரிசனமாக பின்வருமாறு எச்சரித்தன.

19. முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் சிந்தித்துப் பார்க்கையில், தற்போதைய போரிலான வெற்றிவாய்ப்பு நிலை மிகவும் இருண்டதாகவே உள்ளன. முதலாவதாக, இந்தப் போர் ஒரு நீண்டகால தன்மையை எடுக்கும் மற்றும் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மட்டும் சண்டையிடப்படாது. ஒரு மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தல் தவிர்க்க முடியாதது என்ற புள்ளிக்கு உலக நிலைமையை எரியூட்டுவதில் இது முதல் படியாகும். எதிர்கால போரில் உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்.

20. இரண்டாவதாக, போரின் தன்மையானது இப்போது அப்பட்டமான மனித-விரோத நிலைப்பாட்டில் நிற்கின்ற ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளால் தீர்மானிக்கப்படும். இந்த மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நோக்கி பொறுப்பற்ற முறையில் நகர்ந்து கொண்டிருக்கின்ற, ஆளும் வர்க்கங்கள் ஓர் அணு ஆயுத  இறுதி அழிவுப்போரின் நிஜமான சாத்தியத்தை உருவாக்கி வருகின்றன. ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் பைத்தியக்காரத்தனமான கொள்கைகளில் இருந்து பூமிக் கிரக அழிவின் கோரக்காட்சி எழுகிறது. ஆளும் முதலாளித்துவ உயரடுக்கின் பொறுப்பற்ற தன்மையானது, இளைஞர்களின்  எதிர்காலத்துக்கு அனுமதிக்கப்படுமா என்று கேட்க தூண்டுகிறது.

SBU குறிப்பாக இந்த ஆவணத்தை போக்டன் சிரோட்டியூக் இன் தேசத்துரோக நடவடிக்கைக்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுகிறது. ஆனால், இந்த ஆவணத்தின் உரை, போக்டனும் YGBL உம் புட்டின்-ஆதரவு கதையாடலை முன்னெடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை உறுதியாக மறுக்கிறது. 

அனைத்திற்கும் மேலாக, மற்றும் மிகவும் தீர்க்கமாக, உக்ரேனிய ஆட்சியானது உலக சோசலிச வலைத் தளம் ஒரு “ரஷ்ய பிரச்சார மற்றும் தகவல் நிறுவனம்” என்ற அதன் அபத்தமான மற்றும் பொய்யான கூற்றை ஊர்ஜிதப்படுத்த ஒரு சிறு ஆதாரத்தைக் கூட முன்வைக்கவில்லை. இந்த இழிவான அவதூறுடன், செலென்ஸ்கி ஆட்சியானது —ரஷ்யாவுடன் நடந்து வரும் போர் ஒருபுறம் இருக்க— ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான ஸ்ராலினிசத்தின் வெறித்தனமான வெறுப்பின் நீடித்த செல்வாக்கைக் காட்டிக்கொடுக்கிறது. ரஷ்யாவைப் போலவே, உக்ரேனில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திடம் இருந்து முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு அரசியல் பொலிஸ் வழிமுறையில் எந்த மாற்றமும் அவசியப்படவில்லை. மாஸ்கோ விசாரணைகள் மற்றும் 1936-39 பயங்கரத்தின் சகாப்தத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக ஸ்ராலினிச ஆட்சியால் பயன்படுத்தப்பட்ட இட்டுக்கட்டுதல் மற்றும் அவதூறு கூறும் அதே நுட்பங்கள்தான் கியேவிலும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.

போக்டன் சிரோடியுக் தேசத்துரோக குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மரண தண்டனைக்கு சமமான ஆயுள் தண்டனை அச்சுறுத்தலை முகங்கொடுக்கிறார். ஆனால், போக்டனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முற்றிலுமாக உலக சோசலிச வலைத் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள கட்டுரைகள் மற்றும் உரைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். அதில் அவர், ஒரு சோசலிச சர்வதேசியவாதியாக, செலென்ஸ்கி மற்றும் புட்டினின் முதலாளித்துவ ஆட்சிகளுக்கும், இலட்சக் கணக்கான உக்ரேனிய மற்றும் ரஷ்ய உயிர்களைப் பலி கொண்டுள்ள நடந்து வரும் போருக்கும் தனது எதிர்ப்பை அறிவித்துள்ளார்.

கடுமையான போர்கள் நடந்த இடமான பக்முத்தில் உள்ள கட்டிடங்களில் இருந்து புகை எழுகிறது. ஏப்ரல் 26, 2023 புதன்கிழமை. [AP Photo/Libkos]

உக்ரேனிய ஆட்சி மற்றும் போரின் பிற்போக்குத்தனமான தன்மையை அம்பலப்படுத்தி, உக்ரேனிய குடிமக்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைவரும் அணுகக்கூடிய, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட அவரது உரைகள் மற்றும் எழுத்துக்களில் போக்டன் தகவல்களை முன்வைப்பதாக SBU குற்றம் சாட்டுகிறது.

போக்டனின் “குற்றவியல் நடவடிக்கைகளானது, ஒரு சட்ட அமுலாக்க முகமையின் தலையீட்டால் மட்டுமே நிறுத்தப்பட்டன” என்று SBU அறிவிக்கிறது. அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் உக்ரேனில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே நடத்தப்பட்டு வருகிறது என்ற வாதங்கள், என்னவொரு பேரழிவுகரமான சுய-அம்பலப்படுத்தலாக இருக்கிறது. 

யதார்த்தம் என்னவென்றால், உக்ரேனில் இருப்பது ஒரு பாசிச சர்வாதிகாரமாகும். மக்களுக்கு சொல்லொணா துன்பங்களையும் மரணங்களையும் கொண்டு வந்துள்ள, அதன் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு வெளிப்படுவதைத் தடுக்க, அது பொலிஸ் வழிமுறைகளைப் பிரயோகிக்கிறது.

போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டிருப்பது செலென்ஸ்கி ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு பெருகிச் செல்லும் ஒரு கட்டத்தில் துல்லியமாக வருகிறது. மே 18 அன்று, உக்ரேனிய இராணுவத்தின் ஆட்சேர்ப்பு வலையமைப்பை பரந்த அளவில் விரிவாக்கும் ஒரு புதிய மற்றும் பரந்த செல்வாக்கற்ற அணிதிரட்டல் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. நியூ யோர்க் டைம்ஸ் கூட “சோர்வடைந்த, பெரும்பாலும் விரக்தியடைந்த ஒரு படையை விடுவிக்க புதிய துருப்புகளைக் கண்டுபிடிப்பதற்கு” செலென்ஸ்கியின் திறன் குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 30 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், செலென்ஸ்கி ஆட்சியால் துன்புறுத்தப்பட்ட ஒரு உக்ரேனிய சோசலிஸ்டான மாக்சிம் கோல்டார்ப் அறிவிக்கையில், “வேறொருவரின் சுயநல நோக்கங்களுக்காக உயிரிழக்க விரும்பாமல், மேலும் மேலும் அதிகமான உக்ரேனிய மக்கள் நாட்டை விட்டு வெளியேற பெரும்பிரயத்தனத்துடன் முயன்று வருகின்றனர்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

பணக்காரர்களாக இருக்கும் சிறுபான்மையினர் அல்ல, மாறாக ஏழைகளாக இருக்கும் பெரும்பான்மையினர் — அதாவது வேலையில்லாதவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், அலுவலக தொழிலாளர்கள்— இரத்தந்தோய்ந்த இறைச்சி அரைக்கும் இயந்திரத்திற்குள் அனுப்பப்படுவார்கள். இப்போது, புதிய சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அவர்கள் பிடிக்கப்பட்டு விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டு போர்முனைக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்தப் போரில் பயனடைபவர்களின் இலாபமும் பல மடங்கு அதிகரிக்கும் ... இந்த பிரமாண்டமான இலாபங்கள் இராணுவ-தொழில்துறை வளாகம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஸ்தாபகத்தில் உள்ள அதன் செல்வாக்காளர்கள், மற்றும் உக்ரேனிய செல்வந்த தட்டுக்களின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

போக்டன் சிரோடியுக்கின் உயிருக்கு ஆபத்து உள்ளது. உக்ரேனுக்குள் நிலவும் பயங்கரவாத சூழலில், அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து வழிவகைகளையும் இழந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்களுக்கு எதிரான அரசாங்க அச்சுறுத்தல்களால் தகுதிவாய்ந்த சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு குழிபறிக்கப்பட்டுள்ளன. சுமார் ஐந்து வழக்கறிஞர்கள் போக்டனுக்காக வாதாட மறுத்துவிட்டனர். ஏனெனில் அவ்வாறு செய்வது அவர்களை கணிசமான சரீர ஆபத்திற்கு உட்படுத்தும். 

சோவியத் வெற்றியை கௌரவிக்கும் வகையில் மே 9 அன்று நடந்த ஒரு பேரணியில் போக்டன் சிரோடியுக் கலந்து கொண்டார். [Photo: WSWS]

போக்டனைப் பாதுகாப்பதற்கும் அவருடைய சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குமான போராட்டத்தின் முக்கியத்துவமானது உக்ரேனுக்கும் அப்பாலும் விரிவடைகிறது. உலகம் முழுவதிலும் ஏகாதிபத்தியம் அதன் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்ற நிலையில், ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்து வரும் சர்வதேச தாக்குதலுக்கு அவரது சிறைவாசம் இன்னுமொரு உதாரணமாகும். ஜூலியான் அசான்ஜை அழிப்பதற்கான அரசியல் சூழ்ச்சியானது, உலகெங்கிலும் பிரதிபலிக்கப்படும் ஒரு செயல்முறையை இயக்க வைத்து வருகிறது.

ஏகாதிபத்திய ஆட்சிகளின் குற்றங்களை எதிர்த்து அம்பலப்படுத்துபவர்கள், அரசின் துன்புறுத்தலுக்கு இலக்காக்கப்படுகின்றனர். அடிப்படை ஜனநாயக உரிமைகள் —முதலும் முக்கியமானதுமாக, சிந்தனை மற்றும் பேச்சு சுதந்திரம்— மீதான தாக்குதல் எப்போதும் பொய்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகிறது.

காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை போரின் எதிர்ப்பாளர்கள், போராட்டக்காரர்கள் யூதர்களாக இருந்தாலும் கூட, யூத-எதிர்ப்பாளர்களாக கண்டனம் செய்யப்பட்டு வருகின்றனர். உக்ரேனில் பினாமிப் போரை எதிர்க்கின்றமைக்காக போக்டன் சிரோட்டியுக் ரஷ்யாவின் ஒரு முகவர் என்று கண்டனம் செய்வதில், அதே பொய் வழிமுறை வேலை செய்கிறது.

போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதற்கான உண்மையான காரணம், அவர் அனைத்து நாடுகளின் ஆளும் முதலாளித்துவ உயரடுக்குகளுக்கு எதிராக உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடி வருகிறார். போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் ரஷ்யக் கிளையின் தோழர் அந்திரேய் ரிட்ஸ்கி, அனைத்துலகக் குழு நடத்திய 2024 மே தின நிகழ்வில் வழங்கிய ஒரு உரையில் மிகத் தெளிவாக இதனை விளக்கினார்:

ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து செயல்படும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தின் மூலம் மட்டுமே, உக்ரேன் உண்மையிலேயே சுதந்திரம் அடைய முடியும் என்ற அவரது நம்பிக்கை தான் போக்டன் செய்த ஒரே “குற்றம்” ஆகும். உக்ரேனிய தேசியவாதம், புட்டின் ஆட்சியின் பிற்போக்கு ரஷ்ய தேசியவாதம் ஆகியவற்றை வெறித்தனமாக வழிபடுவதை எதிர்த்து, போர் குறித்த மார்க்சிச புரிதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கை ரீதியான அரசியல் நிலைப்பாட்டை அவர் முன்வைத்தார். எங்களது ஒட்டுமொத்த இயக்கத்தைப் போலவே, குறைந்தபட்சம் அரை மில்லியன் உக்ரேனியர்கள் மற்றும் பத்தாயிரக் கணக்கான ரஷ்யர்களின் உயிர்களைப் பறித்துள்ள ஒரு சகோதரத்துவ போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரஷ்யா மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த அவரும் போராடி வந்துள்ளார்.

நான்காம் அகிலத்தின் பணிகளுக்கு கீழமைந்திருக்கும் அடிப்படை முன்னோக்கு குறித்த ஒரு பிரகடனத்துடன் அவர் தனது கருத்துக்களை நிறைவு செய்திருந்தார்:

எந்த முதலாளித்துவ ஆட்சியும் போர் மற்றும் அழிவுகளைத் தவிர நெருக்கடிகளைத் தீர்க்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், வேறு எந்த வழியும் அதன் அடிப்படை முதலாளித்துவ நலன்களுக்கு முரணாக இருக்கும். முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தேசிய எல்லைகளுக்குள்ளே மற்றும் தனியார் சொத்துடைமையை பாதுகாத்தல் என்ற அடிப்படையில் தீர்க்கப்பட முடியாது. உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே போர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அடிப்படை நெருக்கடியைத் தீர்க்க முடியும். எவ்வாறாயினும், அவ்வாறு செய்ய, அது உலகெங்கிலும் உள்ள அதன் சகோதர சகோதரிகளின் ஐக்கியத்திற்காக, போராட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, போக்டன் சிரோட்டியுக்கை சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்கக் கோரும் ஒரு உலகளாவிய பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கிறது. போக்டனின் விடுதலைக்கான போராட்டமானது, தொழிலாளர்கள், மாணவர்கள், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாகவுள்ள மற்றும் ஏகாதிபத்தியப் போர்களின் விரிவாக்கத்தை எதிர்க்கும் அனைவராலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் போர்கள் நிறுத்தப்படாவிட்டால், அணு ஆயுத பேரழிவு மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.

போக்டனின் விடுதலைக்கான போராட்டத்தில் சேர்ந்து கொள்ளுங்கள். இந்த அறிக்கையை சமூக ஊடகங்களில் முடிந்தவரை பரவலாக பரப்புங்கள். இந்த அறிக்கையை சக ஊழியர்கள், சக மாணவர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். போக்டனை விடுவிக்கக் கோரும் ஒரு மனுவில் கையெழுத்திடவும், பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு நிதி வழங்கவும், மற்றும் அவரது விடுதலைக்கான போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் செயலூக்கத்துடன் செயற்படுவதற்கும், wsws.org/freebogdan இணைப்பிற்குச் செல்லுங்கள்.

Loading