முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டதன் விளைவுகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இங்கு பிரசுரிக்கப்படுவது மே 4 அன்று இடம்பெற்ற 2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் ரஷ்யாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் அமைப்பின் பிரதிநிதியான அன்ட்ரேய் ரிட்ஸ்கி ஆற்றிய உரையாகும்.

இன்றைய மே தினத்தில், 1886 ஆம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற மே தின ஆர்ப்பாட்டங்களில் தோற்றம் பெற்ற, 1889 இல் இரண்டாம் அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட, சர்வதேச தொழிலாளர் ஒற்றுமை தினத்தைக் கொண்டாட மீண்டும் கூடியிருக்கும் சர்வதேச தோழர்கள் மற்றும் கேட்போருக்கு எனது பாராட்டுக்களையும் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமையின் இந்த நாளில், உக்ரேனில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களின் ஸ்தாபகரும் தலைவருமான எனது தோழரான போக்டன் சிரோட்டியுக்கைப் பாதுகாக்க முன் வருமாறு உலகத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். கடந்த வாரம், 'உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறினார்' என்ற சோடிக்கப்பட்ட வழக்கில் உக்ரேனிய இரகசிய சேவையால் (SBU) போக்டன் கைது செய்யப்பட்டார். அவர் ஆயுள் தண்டனை வரை கடுமையான சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.

போக்டன் சிரோட்டியுக் அவரது அலுவலகத்தில். [Photo: WSWS]

ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து செயல்படும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தின் மூலம் மட்டுமே உக்ரேன் உண்மையிலேயே சுதந்திரமடைய முடியும் என்று நம்பிக்கை கொண்டதுதான் போக்டன் செய்த ஒரே 'குற்றம்' ஆகும். அவர் உக்ரேனிய தேசியவாதத்தின் வெறித்தனமான வழிபாட்டையும், புட்டின் ஆட்சியின் பிற்போக்கு ரஷ்ய தேசியவாதத்தையும் எதிர்த்து, போரைப் பற்றிய மார்க்சிச புரிதலின் அடிப்படையில், ஒரு கொள்கை ரீதியான அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்தார். குறைந்தபட்சம் அரை மில்லியன் உக்ரேனியர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்களின் உயிரைப் பறித்த சகோதர யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ரஷ்யாவிலும் உக்ரேனிலும் உள்ள தொழிலாளர்களை ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்காக, நமது ஒட்டுமொத்த இயக்கத்தைப் போலவே, அவரும் போராடினார்.

7 நவம்பர் 2023 அன்று, அக்டோபர் புரட்சியின் 106 வது ஆண்டு நிறைவின் போது, சிவப்பு அணியை சேர்ந்தவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவிடத்திற்கு அருகில் போக்டன் [Photo: WSWS]

இந்தப் போர் சம்பந்தமாக, அனைத்துலகக் குழுவினதும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களதும் நிலைப்பாடு, மார்க்சிசத்தின் தத்துவார்த்த மற்றும் வரலாற்று மரபுகளில் வேரூன்றியதாகும். எங்களைப் பொறுத்தவரை, வரலாறு மிகவும் முக்கியமானது. சோவியத் ஒன்றியத்தின் வரலாறு, அது கலைக்கப்பட்டமை மற்றும் புதிய முதலாளித்துவ ஆட்சிகள் ஸ்தாபிக்கப்பட்டமை பற்றிய சரியான புரிதல் இல்லாமல், முதலாளித்துவத்தின் நவீன நெருக்கடியையும், உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும் போர்களின் மூலம் ஏற்கனவே பற்றவைக்கப்பட்டுள்ள, மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தெளிவான மற்றும் நிலையான செயல்திட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை.

மார்க்சிசத்தின் புறநிலை சக்தியும் அதன் கோட்பாட்டு அடித்தளமான வரலாற்றுப் பொருள்முதல்வாதமும், வரலாற்றை சமூக வர்க்கங்களின் போராட்டமாகப் புரிந்துகொள்வதிலேயே உள்ளது. முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒரு நிறுவனத்தின் எதிரெதிர் பக்கங்களில் உள்ளவர்கள் மட்டுமல்ல, தங்கள் சொந்த வரலாற்று பொருள் நலன்களின் அடிப்படையில் இரு பகைமை வர்க்கங்களாக இருக்கின்றனர்.

எங்களைப் பொறுத்தவரை, ஒரு ஆட்சி தன்னை எப்படி முன்வைக்க முயற்சிக்கிறது என்பதை விட அதன் சமூக அடித்தளம் முக்கியமானது. மார்க்சியக் கோட்பாட்டில் உள்ள இந்த அடிப்படை விடயமானது, தாம் மார்க்சியம் அல்லது போல்ஷிவிசத்தைப் பின்பற்றுபவர்களாக பாசாங்கு செய்ய முயற்சித்த போதிலும், உண்மையில் முதலாளித்துவ தேசியவாதத்தை அல்லது ஏகாதிபத்தியத்தை வணங்குகின்ற 'போலி-இடதுகளால்' பெரும்பாலும் மறுக்கப்படுகின்றது.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்பின் விளைவு மட்டுமல்ல. 1980களில் உற்பத்தியின் பூகோளமயமாக்கலுக்கு வழிவகுத்த உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவும் அது இருந்தது. இந்த நிலைமைகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நடைமுறைக் கொள்கையான 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்பதன் அடிப்படையை கீழறுத்தது. ஒரு முட்டுச்சந்தை அடைந்த நிலையில், தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சிக்கு அஞ்சிய சோவியத் அதிகாரத்துவம், சோவியத் ஒன்றியத்தை உலக முதலாளித்துவ அமைப்புடன் மீண்டும் ஒருங்கிணைக்க முடிவு செய்தது.

போர் மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் மாநாடு, பேர்லின், 1991 [Photo: WSWS]

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை பரந்த பெரும்பான்மையான மக்களுக்கு ஒரு கோரக்கனவாக இருந்தது. பரவலான வறுமை, அரச சொத்துக்களை கொள்ளையடித்தல், சூறையாடல், சமூக சமத்துவமின்மையில் பிரமாண்ட அதிகரிப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் விஞ்ஞானத்திலும் பேரழிவு தலைதூக்கியது. சுருக்கமாகச் சொன்னால், போர்கள் மற்றும் இயற்கைப் பாதிப்புகள் பொதுவாக இட்டுச் செல்லும் பேரழிவு போன்ற நிலைமைக்குள் நாடு வாழ்ந்துகொண்டிருந்தது. சோவியத் தொழிலாள வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டு நசுக்கப்பட்டது. ஏகாதிபத்தியம் புதிதாக உருவாக்கப்பட்ட ரஷ்ய, உக்ரேனிய மற்றும் பிற தன்னலக்குழுக்களுடன் இணைந்து வெற்றியைக் கொண்டாடியது. இன்று, சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, மீண்டும் உக்ரேன் போரில் தன்னை உணர வைக்கிறது.

ரஷ்யத் தன்னலக்குழுவின் நலன்களை மதிக்கின்ற மற்றும் அங்கீகரிக்கின்ற ஒரு ஏகாதிபத்தியத்துடன் சம பங்காளியாக வேலை செய்ய முடியும் என்று நம்பிய ரஷ்ய தன்னலக்குழு, 'அமைதியான சகவாழ்வு' என்ற ஸ்ராலினிசக் கொள்கையைத் தொடர்கிறது. இப்போதும் கூட, நேட்டோவுடன் நேரடிப் போருக்கான அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இதே பாரம்பரியத்தில் செயல்படும் கிரெம்ளின், ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வமாக உள்ளது.

உக்ரேனில் நேட்டோவின் பினாமி போர் வெடித்தவுடன், புட்டினின் ஆட்சி மற்றும் செலென்ஸ்கியின் ஆட்சி இரண்டினதும் பாதுகாவலர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தரப்பை ஆதரிப்பதற்கு சார்பான தங்கள் சொந்த வாதங்களைக் கொண்டுள்ளனர். ஆனால், இரு தரப்பைப் பொறுத்தளவிலும், அங்கு வர்க்கப் போராட்டம் என்பது இல்லை. போருக்கு யார் 'பொறுப்பு' என்பதைப் பற்றி அடிக்கடி பேச விரும்பும் இந்த பாதுகாவலர்கள், கேள்வியை பிரச்சினையின் அடிப்படையில் இருந்து திசை திருப்பி, முதலில் 'தொடங்கியது யார்' என்று கேட்கிறார்கள். ஆனால் ட்ரொட்ஸ்கி சரியாக அவதானித்தவாறு:

தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி என்னவெனில், யார் முதலில் 'தொடங்கியது', யார் 'ஆக்கிரமிப்பாளராக' தோன்றினார் என்பது அல்ல, மாறாக எந்த வர்க்கம் போரை வழிநடத்துகிறது மற்றும் என்ன வரலாற்று முடிவுகளின் சார்பாக உள்ளது என்பதே ஆகும். ஒடுக்கப்பட்ட வர்க்கமோ அல்லது ஒடுக்கப்பட்ட தேசமோ அதன் விடுதலைக்காக 'ஆக்கிரமிப்பாளர்' பாத்திரத்தில் தோன்றினால், அத்தகைய ஆக்கிரமிப்பை நாங்கள் எப்போதும் வரவேற்போம்.

செலென்ஸ்கி ஆட்சியின் பாதுகாவலர்களின் பிரதான வாதம் என்னவென்றால், அது தேசிய சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதாகவும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போரிடுவதாகவும் கூறுவதாகும். தோழர் போக்டனின் கைது, இந்த போர் பிரச்சாரம் அனைத்தையும் பொய்யாக்குகிறது. செலென்ஸ்கி ஆட்சியை எதிர்க்கும் அனைவரும் கிரெம்ளினின் முகவர்களாக அறிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறைவாசம் அல்லது மரண அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். செலென்ஸ்கி ஆட்சி ஜனாதிபதித் தேர்தல்களை நடத்த மறுத்து, நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் தடை செய்துள்ளதுடன், தொழிலாளர் விரோதச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, அந்நிய வர்க்க நலன்கள் என்ற பெயரில் அரை மில்லியன் மக்களை வலுக்கட்டாயமாக அணிதிரட்டுகிறது.

புட்டின் ஆட்சியின் பாதுகாவலர்களின் பிரதான வாதம், அது நேட்டோ ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்கிறது என்பதும் ரஷ்யாவை சிதைக்கப்படாமல் பாதுகாக்க முயல்கிறது என்பதுமாகும். புட்டின் ஆட்சியினதும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்பினதும் பாதுகாவலர்கள், ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை மட்டுமே நினைவுபடுத்துகின்றனர், தங்கள் சொந்த வரலாற்றைக் குறிப்பிட விரும்புவதில்லை.

அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததிலும், 1917 அக்டோபர் புரட்சிக்கு எதிரான பிற்போக்குத்தனத்திலிருந்துமே புட்டினின் ஆட்சி தலைதூக்கியது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வாரிசாக, அது அதன் அனைத்து எதிர்ப்புரட்சிகர அம்சங்களையும் பெற்றுள்ளது. தன்னலக்குழுவின் சார்பாக முதலாளித்துவ மறுஸ்தாபிதத்தின் ஆதாயங்களைப் பாதுகாப்பதே அதன் அடிப்படை செயல்பாடு ஆகும். உக்ரேனில் நடந்துவருகின்ற போருடன், புட்டின் 'ரஷ்யாவைப் பாதுகாக்கவில்லை', மாறாக ரஷ்ய பில்லியனர்களின் வங்கிக் கணக்குகளின் தேசிய இறையாண்மையையே பாதுகாக்கின்றார்.

6 பெப்ரவரி 2024 அன்று, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேர்காணல் செய்கிறார். [Photo by Gavriil Grigorov/Kremlin]

உக்ரேனில் போர் வெடித்தமை அந்நாட்டில் அரசியல் நெருக்கடியை மோசமாக்கியுள்ளது, அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் 'சாதகமான முடிவுகள்', பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னரங்கில் வெற்றிகள் இருந்தபோதிலும், நாடு மந்தநிலையில் உள்ளதுடன் ஆளும் வர்க்கத்தின் ஒரு வெளிப்படையான நடவடிக்கை நவீன ரஷ்யாவின் வரலாற்றில் இதுவரை கண்டிராத சமூக கோபத்தின் அலையைத் தூண்டும். பொருளாதாரம் மற்றொரு பெரிய எழுச்சியைத் தாங்காது, பொருளாதாரம் இல்லாமல் களமுனை நிலைக்காது.

ரஷ்யாவில் ஆளும் வர்க்கம் ஒரு முட்டுச்சந்தில் உள்ளது. ஒருபுறம் அது நேட்டோ ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தின் கீழ் இருப்பதுடன் மறுபுறம் தன்னலக்குழுவில் காணப்படும் கன்னை உட்பூசல்களால் கிழிந்து போயுள்ளது. மறுபுறம் அது, ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் வெறுப்பைக் மதிப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏகாதிபத்தியத்தை விட, ரஷ்ய தன்னலக்குழு புரட்சிக்கு அஞ்சுகிறது. ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியில் போல்ஷிவிக் கட்சி ஆட்சிக்கு வந்ததன் மூலம் ரஷ்யாவில் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது என்பதை அது நன்றாகவே நினைவுபடுத்திக்கொள்கிறது. இன்று தேசிய பாதுகாப்பு பற்றி அலறும் ரஷ்ய பில்லியனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாளைய புரட்சியில் இருந்து தங்களை 'பாதுகாக்குமாறு' இன்றைய நேட்டோ 'எதிரிகளிடம்' கேட்க எந்த தயக்கமும் கொள்ளமாட்டார்கள்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் மறுமலர்ச்சிக்காகப் போராடும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு, ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தன்னலக்குழுக்களின் ஆட்சிக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்திற்காகப் போராடும் தொழிலாள வர்க்க அமைப்புகள் மற்றும் கட்சிகளை உருவாக்குவதற்கான களத்தைத் தயாரித்து வருகிறது.

முன்னாள் சோவியத் யூனியனில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இப்போது மாபெரும் போராட்டங்களுக்குள் இழுக்கப்படுகின்றனர். இந்தப் போராட்டங்களையே தனிப்பட்ட ஆட்சிகளின் தலைவிதி மட்டுமல்ல, மனிதகுலத்தின் தலைவிதியும் நம்பியிருக்க வேண்டும்.

போக்டன் சிரோடியுக் உருவாக்கிய ட்ரொட்ஸ்கியின் சிற்பம் [Photo: WSWS]

எந்த முதலாளித்துவ ஆட்சியாலும் போர் மற்றும் அழிவு இல்லாமல் வேறு வழியில் நெருக்கடியைத் தீர்க்க முடியாது, ஏனென்றால் வேறு எந்த வழியும் அதன் அடிப்படை முதலாளித்துவ நலன்களுக்கு முரணானதாக இருக்கும். முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தேசிய எல்லைகளுக்குள்ளும் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பதன் அடிப்படையிலும் தீர்க்கப்பட முடியாது. உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணி ஆன சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் அடிப்படை நெருக்கடியைத் தீர்க்க முடியும். எவ்வாறாயினும், அவ்வாறு செய்ய, அது உலகெங்கிலும் உள்ள அதன் சகோதர சகோதரிகளுடனான ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.

இன்றைய மேதினக் கொண்டாட்டம் இந்த திசையில் ஒரு சிறந்த அடியெடுப்பாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வாழ்க!

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் வாழ்க!

தோழர் போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!

ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக!

தேசியவாதமும் ஏகாதிபத்தியமும் வேண்டாம்!

உலக சோசலிசப் புரட்சிக்காக முன்னோக்கி செல்வோம்!

Loading