இலங்கை கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் திகதிகள் சம்பந்தமாக மோசமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ரணில் விக்கிரமசிங்க [Photo by United National Party Facebook]

இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத் தேர்தல்களில் எது முதலில் நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக மோதலில் ஈடுபட்டுள்ளன. அவற்றின் 'வேறுபாடுகள்' முதலாளித்துவ பாராளுமன்ற நெறிமுறைகள் அல்லது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுடன் எந்தத் தொடர்பும் அற்றவை. மாறாக, இந்த மதிப்பிழந்த முதலாளித்துவக் கட்சிகள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றவும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தவும் செய்யும் மோசமான சூழ்ச்சிகளே இவையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) முதல், எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) வரை அனைத்தும் அடிப்படை சமூக நிலைமைகள் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் தாக்குதல்களை திணிப்பதற்கு உறுதிபூண்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஆட்சியையும் அகற்றிய 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் இந்தக் கட்சிகள் அனைத்தும் பீதியடைந்துள்ளன. தொழிற்சங்கங்களும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.), முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. விடுத்த அழைப்புகளுக்கு அடிபணிந்து, இந்த வெகுஜன எழுச்சியை காட்டிக் கொடுத்தன. இது பாராளுமன்றம் அமெரிக்க சார்பு விக்கிரமசிங்கவை நிறைவேற்று ஜனாதிபதியாக அமர்த்துவதற்கு வழி வகுத்தது.

மின்சாரம், துறைமுகம், ரயில், தபால் மற்றும் சுகாதார ஊழியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பிரதான பிரிவுகளின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களின் எழுச்சி குறித்து இலங்கை ஆளும் வர்க்கமும் அதன் கட்சிகளும் மிகவும் பதற்றமடைந்துள்ளன. கல்வி வெட்டுக்களை எதிர்க்கும் மாணவர்களும், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக கிராமப்புற ஏழைகளும் நடத்தும் ஆர்ப்பாட்டங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.

அரசியலமைப்பு ரீதியாக, ஜனாதிபதித் தேர்தல் அக்டோபர் 18 ஆம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் முதல் விக்கிரமசிங்க வலியுறுத்தி வந்தார். ஆளும் உயரடுக்கின் கணிசமான பகுதியினர் மற்றும் உயர்-மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவுடன், தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, தான் ஜனாதிபதி பதவியை வெல்ல முடியும் என்று அவர் கணக்கிடுகிறார்.

1977 இல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய விக்கிரமசிங்க, தனது ஜனநாயக விரோதத் தாக்குதல்களுக்குப் பேர் போனவராவார். தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகளை அழித்த ஜயவர்த்தனவின் 'திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள்', பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் இனவாதப் போர் மற்றும் 1987-1990 இல் 60,000 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட கிராமப்புற கிளர்ச்சியை இரத்தக்களரியில் அடக்கியமை ஆகியவற்றில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்தார்.

9 ஜூலை 2022, சனிக்கிழமை, இலங்கையின் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த போது. [AP Photo/Amitha Thennakoon]

2022ல் பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பில் வெகுஜன எதிர்ப்புக்களை கொடூரமாக நசுக்கி, பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் சமூகத் தாக்குதல்களை விரைவாக நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். 2023 மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியடைவதையிட்டு பீதியடைந்த அவர், அரசாங்கத்திடம் 'நிதி இல்லை' என்று கூறி எதேச்சதிகாரமாக அதை ஒத்திவைத்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர்களான முன்னாள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ மற்றும் கட்சியின் அமைப்பாளர் பசில் இராஜபக்ஷவும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்து, மார்ச் 8 அன்று விக்கிரமசிங்கவை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். விக்கிரமசிங்க பாராளுமன்ற ஆதரவிற்காக ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யை அதிகளவு சார்ந்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அது ஒரு கட்சிக்கு 'வரம்பற்ற அதிகாரத்தை' வழங்குவதுடன், அது பொதுத் தேர்தல் முடிவுகளில் பாரிய செல்வாக்கைச் செலுத்தும் என்பதால், முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த விரும்புவதாக பசில் இராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக அவர் மார்ச் 20 அன்று விக்கிரமசிங்கவை மீண்டும் சந்தித்தார்.

பாராளுமன்றத் தேர்தல்களை தங்களுக்குத் தேவையானவாறு கையாளுவதற்கு கடந்த காலத்தில் 'வரம்பற்ற அதிகாரத்தை' பயன்படுத்திய ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைமைத்துவம், 'நியாயமான' பொதுத் தேர்தல் பற்றி காட்டும் தோரணை ஒரு மோசடியாகும். விக்கிரமசிங்கவைப் போலவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் கொடூரமான ஜனநாயக விரோத ஆட்சிகளை வழிநடத்தினார். அது தொழிலாள வர்க்கத்தை கொடூரமாகத் தாக்கியதுடன் புலிகளுக்கு எதிரான கொழும்பின் போரைத் தொடர்ந்தது. 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த போது சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

2022 இல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது இரக்கமின்றி சுமத்தியதால் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பரவலாக வெறுக்கப்பட்டு, இராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்திய வெகுஜன எழுச்சியை உருவாக்கியது. 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில், 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது. இன்று பலர் வெளியேறிவிட்டதால், அது 110 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளதுடன், எதிர்க்கட்சிகளில் ஒன்றின் ஜனாதிபதியின் கீழ் தேசிய தேர்தல்கள் நடத்தப்பட்டால் அது இன்னும் தோல்வியடையும் என்று அஞ்சுகிறது.

விக்கிரமசிங்கவின் ஐ.தே.க.யில் இருந்து பிரிந்த பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐ.ம.ச., அதன் முந்தைய குற்றங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறது. எந்தவொரு பெரிய தேர்தலுக்கும் கட்சி தயார் என அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பெருமையடித்துள்ள நிலையில், முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதே கட்சியின் விருப்பம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜே.வி.பி. தனது ஜனநாயக விரோத கடந்த காலத்தை மூடிமறைக்க முயற்சிக்கும் ஒரு தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி மூலம் தேர்தலில் போட்டியிடும். அப்போதைய இலங்கை அரசாங்கங்களுக்கு உள்ளே இருந்த போதும் சரி, வெளியில் இருந்த போதும் சரி, சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. கொழும்பின் இனவாத யுத்தத்துக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் சளைக்காமல் ஆதரவளித்தது. ஏற்கனவே தனது வேட்பாளரை அறிவித்துள்ள ஜே.வி.பி., கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

மார்ச் 23 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, “எதிர்பார்த்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த 113 ஆசனங்களுடன் [பாராளுமன்றத்தில்] அரசாங்கத்தை அமைப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். நாம் விரும்பியதைச் செய்ய நமக்கு வலுவான சக்தி இருக்க வேண்டும்,” என்றார்.

சில்வாவின் 'சமூக மாற்றங்கள்' சர்வதேச நாணய நிதியத்தின சமூகத் தாக்குதல்களை நேரடியாகத் திணிப்பதைக் காட்டிலும் குறைவானதல்ல.

ஜே.வி.பி/தே.ம.ச. கடந்த ஆறு மாதங்களில் இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவைச் சந்தித்துள்ள அதேநேரம், இந்த கலந்துரையாடல்கள் பற்றிய எந்த விவரங்களையும் அது வெளியிடவில்லை. சில்வாவின் கருத்து சர்வதேச மூலதனத்திற்கும் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஒரு தெளிவான செய்தியாகும். தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என அது கூறுகிறது.

இந்த அனைத்து அரசியல் கட்சிகளினதும் இழிவான சூழ்ச்சிகள், இலங்கை ஆளும் உயரடுக்கு எதிர்கொள்ளும் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன.

2022 இல் வெடித்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதான பரந்த வெகுஜனங்களின் விரோதப் போக்கை மட்டும் வெளிப்படுத்தவில்லை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இராஜினாமா செய்ய வேண்டுமெனக் கோரினர். கொழும்பு சிந்தனைக் குழுவான மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பாராளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை முறையே 22 சதவீதம் மற்றும் 19 சதவீதமாக குறைந்துள்ளது.

விக்கிரமசிங்கவும் ஆளும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை திணிப்பதற்கு விரோதமாக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை (EPSA) அறிவித்துள்ளதுடன் பொலிஸ் மற்றும் இராணுவத்தை அணிதிரட்டுகின்றது. எதிர்கட்சியான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும் வரவிருக்கும் தேர்தல்களில் தங்கள் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தொழிலாளர்களிடம் கூறின.

ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள், விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த தேசிய தொழிற்சங்க நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன் தொழிலாளர்களின் கோபத்தைத் திசைதிருப்ப முயல்கின்றன.

பெப்ரவரி 20 அன்று, இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கும் அதன் 62 தொழிலாளர்கள் பலிகடா ஆக்கப்பட்டதற்கும் எதிரான ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி. தலைவருமான ரஞ்சன் ஜெயலால், “இந்த அரசாங்கத்திற்கு [நாட்டை] ஆட்சி செய்ய இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நாட்டு மக்கள் இந்த நாட்டிற்கு வெகுஜன வெற்றியைக் கொண்டு வருவார்கள்,” என்றார்.

துறைமுகங்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் புகையிரதம் போன்ற ஏனைய பிரதான துறைகளில் உள்ள ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்கள், சகலரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி/தே.ம.ச.யின் வெற்றியை நோக்கிச் திருப்ப ப்பட வேண்டும் என்ற அதே பொய்களை இழிந்த முறையில் மீண்டும் கூறுகின்றனர்.

அவர்களின் பேச்சுக்கள் மற்றும் தேர்தல்களைப் பற்றிய அவற்றின் 'வேறுபாடுகள்' என்று அழைக்கப்படுபவைக்குப் பின்னால், இந்தக் கட்சிகள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளதுடன், முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்க சர்வாதிகார நடவடிக்கைகளைப் பயன்படுத்தத் தயாராக உள்ளன.

மார்ச் 21, செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர், எந்த இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளில் இருந்து விலகியிருக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தினார்: “தேர்தலைப் பொறுத்தவரை, ஆம், நாங்கள் பல்வேறு பிரேரணைகளைக் கேட்டோம். எங்களைப் பொறுத்தவரை, திட்டத்தின் குறிக்கோள்கள் அடையப்படுவதே முற்றிலும் முக்கியமானது ஆகும். ஏனெனில், அவற்றிலேயே இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த பாதை கத்தி முனையில் நடப்பது போன்ற பாதை” ஆகும்.

கொழும்பு தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் 14 பெப்ரவரி 2024 அன்று சுகாதார அமைச்சுக்கு வெளியே பேரணி சென்ற போது [Photo by Facebook/Unions Lanka]

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்களின் எதிர்ப்பை பாராளுமன்ற மாயைகளுக்குள் திருப்பிவிடும் இலங்கையின் முதலாளித்துவக் கட்சிகளின் அவநம்பிக்கையான முயற்சியை நிராகரிக்குமாறு தொழிலாள வர்க்கத்தை வலியுறுத்துகிறது. தனியார் இலாப அமைப்பு மற்றும் பாராளுமன்றத்தின் கட்டமைப்பிற்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு தீர்வு கிடையாது. இலங்கையின் பொருளாதாரக் கொந்தளிப்பு உலக முதலாளித்துவ நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடாகும்.

தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவுகளில் இருந்தும் அவற்றின் தொழிற்சங்கங்களில் இருந்தும் பிரிந்து, அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தில் தலையிட்டு, கிராமப்புற ஏழைகளை அவர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க ஒன்று திரட்டி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராக வேண்டும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் வீழ்த்தப்பட்டு, அதாவது பெரிய நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது மற்றும் வெளிநாட்டுக் கடனை தள்ளுபடி செய்வது உள்ளடங்களாக, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வேலைத்தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும், கிராமப்புற ஏழைகள் மத்தியிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் மட்டுமே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்தக் கொள்கைகளுக்காகப் போராடுவதற்கான வழிமுறையாக, இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கூட்டுவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம்.

நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் ஒருங்கிணைத்து இலங்கைத் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளை நெருங்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியில் சேரவும், இந்தத் வேலைத் திட்டத்திற்காகப் போராடவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading