பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அதிகளவானோர் பங்கேற்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கல்விசாரா தொழிற்சங்கங்களின் ஒன்றியம் மே 07 செவ்வாய்க்கிழமை கொழும்பு வோர்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர். [Photo: WSWS]

சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, மே 02 அன்று பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தொடங்கப்பட்ட தொடர் வேலைநிறுத்தத்தின் பாகமாக கொழும்பு வோர்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்றுமுன்தினம் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்புக்கு வந்திருந்ததுடன், கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் இருந்தும் தொழிலாளர்களின் குழுவினர் ஒழுங்கமைந்து அன்று காலை கொழும்பு வந்திருந்தனர்.

போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்ட கலகத் தடுப்பு பொலிசார்

தண்ணீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் ட்ரோன் கமராக்களுடன் ஆயுதபாணியான கலகத்தடுப்பு போலீசார், எதிர்ப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு சுவரை உருவாக்கியிருந்தனர். பொலிசார், தங்களுக்கு உத்தரவு கிடைத்த கணத்தில் தாக்குதலுக்குத் தயாராக இருந்தனர். இந்த அச்சுறுத்தலையும் வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாமல், தொழிலாளர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2015ஆம் ஆண்டு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 107 சதவீத சம்பள உயர்வில் கல்விசாரா ஊழியர்களுக்கு 95 வீத அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதால் எஞ்சிய 15 வீதத்தை வழங்க வேண்டும் என்பதே, அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இக்கோரிக்கை 8 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டாலும், அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் அதை நிராகரித்து வந்துள்ளன. “எம்.சி.ஏ. (மாதாந்திர கொடுப்பனவு) 25 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும்”, “தேசிய பல்கலைக்கழக அமைப்பை பாதுகாக்க வேண்டும்”, “பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இல்லாமல் ஆக்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும்”, “பல்கலைக்கழக நிதியை வெட்டாதே, ஓய்வூதியத்தை வெட்டுவதை நிறுத்த”, “உடனடியாக பல்கலைக்கழக செயலமைப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்”, போன்றவை ஏனைய கோரிக்கைகளாகும். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த பிரச்சாரத்தில் நாடு முழுவதிலும் இருந்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கல்விசாரா ஊழியர்கள் ஆர்வமாகப் பங்குபற்றியமையும், அரச பல்கலைக்கழக அமைப்பிலுள்ள கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளமையும், அந்தக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு அவர்களுக்கு உள்ள வலுவான தேவையையும் முதலாளித்துவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட வகுப்புவாதப் பிளவுகளைக் கடந்து ஒன்றிணைந்து போராடுவதற்கான அவர்களது உறுதிப்பாட்டையும் காட்டுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மற்றைய அனைத்து தொழிலாளர் போராட்டங்களையும் போலவே இந்த வேலைநிறுத்தத்தையும் நசுக்குவதில் குறியாக உள்ளது.

போராட்டக் கார ர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுவர் எழுப்பியுள்ள பொலிசார்

அதற்குத் தேவையான பின்னணி தயார் செய்யும் வகையில், வேலை நிறுத்தத்தை “அரசியல் நோக்கம்” கொண்டதாக முத்திரை குத்துவதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்வந்தார். கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தாம் ஏற்கனவே அமைச்சுப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் அது குறித்து ஆராயப்படும் எனவும் மே 03 அன்று சிரச ஊடகத்திற்கு தெரிவித்த அவர், “சில தொழிற்சங்கங்களுக்கு அரசியல் இலக்குகள் உள்ளன, அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தாலும் வேலை நிறுத்தத்தை முடிப்பதில்லை, எனது பங்களிப்பை நான் செய்வேன் என்பதை அவர்களுக்கு அறிவித்துள்ளேன்,” எனக் கூறினார்.

இதற்கிடையில், உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், மே 07 அன்று தி மார்னிங் செய்தித்தாளிடம் பேசியபோது, கல்வி சாரா ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு வர வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும் என்றும் கூறியிருந்தார். வேலைநிறுத்தத்தால் அரசுக்கு நாளாந்தம் 125 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும், “கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்களின் கல்வி வாழ்க்கையை பாதிக்கச் செய்கிறார்கள்” எனவும் கூறினார். இது மாணவர்களையும் பொதுமக்களையும் கல்விசாரா ஊழியர்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் முயற்சியாகும். ‘.

இரண்டு அமைச்சர்களின் இந்த அறிக்கைகள் அனைத்தும், நேரடியாக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் மீதான அரச ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இலக்காகக் கொண்டவை.

மறுபுறம், அரச ஊழியர்களின் ஊதியத்தை முடக்குவதும் கல்விக்கான ஒதுக்கீட்டை மேலும் மட்டுப்படுத்துவதும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள வெட்டுக்களில் பிரதான அங்கமாக உள்ள நிலையில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கல்வி சாரா தொழிலாளர்கள் இந்த கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று நம்பக்கூடாது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையான தனியார்மயமாக்கலுக்கு எதிரான இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்களின் போராட்டத்தின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனியார்மயமாக்கலை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இ.மி.ச. தொழிற்சங்க அதிகாரத்துவம் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தத்தில் பங்குபற்றியதற்காக, அதன் ஊழியர்கள் 62 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அரசாங்கம் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் இ.மி.ச. உட்பட 430 அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்தும், ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே, கல்விசாரா ஊழியர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம், அரசுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என தொடர்ந்தும் அதன் உறுப்பினர்களுக்கு கூறி வருகிறது.

பிரச்சாரத்தின் முடிவில் பேசிய தொழிற்சங்கத்தின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த, தொடர் வேலை நிறுத்தத்தில் அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், தற்போது இயங்கும் அனைத்து அத்தியாவசிய சேவைகளில இருந்தும் கல்வி சாரா ஊழியர்கள் விலகுவதாக தெரிவித்தார். மருத்துவமனைகளின் மாதிரி பரிசோதனை, பண்ணை பராமரிப்பு போன்றவற்றில் இருந்து ஊழியர்கள் விலகுவதாக அறிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கை பொதுஜன முன்னணி போன்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பல சுயாதீன தொழிற்சங்கங்களின் பேச்சாளர்களும் பிரியந்தவின் உரையை அங்கீகரித்தனர்.

ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஐக்கிய சுதந்திர தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் துஷார சஞ்சீவ பெரேரா, அமைச்சர் பிரேமஜயந்தவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், “போராட்டத்தை எந்த வகையிலும் அரசியலாக்க இடமளிக்கப் போவதில்லை” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் அரைவாசிப் பகுதியினர்

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இந்த அறிக்கைகள் கல்விசாரா தொழிலாளர்களால் பாரதூரமானதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். உண்மையில், சர்வதேச மூலதனத்தின் அவசியத்தின் பேரில் விக்கிரமசிங்க அரசாங்கம் மேற்கொள்ளும் சிக்கனத் தாக்குதல்கள், முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ முறைமைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்த்தாக்குதலினால் மட்டுமே தோற்கடிக்கப்பட முடியும். இந்தப் போராட்டம் எந்த வகையிலும் அரசியலாக்கப்படாது என்று, அவர்கள் சபதம் செய்யும் போதும், தொழிற்சங்க அதிகாரத்துவம் அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று கூறும்போதும், அதன் நோக்கம், ​​தொழிலாள வர்க்கத்தின் அத்தகைய அரசியல் போரைத் தடுப்பதே ஆகும்.

‘பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதம் தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரத்தை ஆழமாக அம்பலப்படுத்துகிறது’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளவாறு, தொழிற்சங்கங்கள் இன்று எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுப்பது, அதன் உறுப்பினர்களின் அழுத்தத்தினாலேயே அன்றி, அவர்களின் எரியும் தேவைகளுக்காக ஒரு உண்மையான போராட்டத்தைத் தொடங்கும் விருப்பத்துடன் அல்ல.

அதை, கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க தலைவர்கள் உறுதி செய்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கமான சுதந்திர ஊழியர் சங்கத்தின் பல்கலைக்கழக கிளையின் சார்பில் உரையாற்றிய ஹர்ஷபால பண்டார, “எங்களை இங்கு தள்ளியது தொழிற்சங்கத் தலைவர்கள் அல்ல. வரலாற்று ரீதியாக, தொழிற்சங்கங்களே உறுப்பினர்களைத் முன்தள்ளியுள்ளன. ஆனால் இப்போதெல்லாம் அது நடப்பதில்லை. முதன்முறையாக தொழிற்சங்கத் தலைவர்கள் முழுக்க முழுக்க பல்கலைக்கழக அமைப்பின் ஊழியர்களால் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உறுப்பினர்கள் அந்த அளவுக்கு அழுத்தத்தில் இருக்கின்றனர்,” எனத் தெரிவித்தார்.

மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, “தொழிற்சங்க அதிகாரத்துவம் தூக்கிப் பிடிக்கின்ற, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் திவாலான வேலைத் திட்டத்திற்கு எதிராக, தங்களது கோரிக்கையை வெல்வதற்கான சாத்தியமான வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு தரத்திலும் கல்விசாரா தொழிலாளர்களின் ஒன்றிணைந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்குமாறும், மாநாட்டில் முழு ஜனநாயக ரீதியான விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு கல்விசாரா தொழிற்சங்க உறுப்பினர்களும் போராட வேண்டும்.”

முதலாளித்துவ அமைப்புடன் தலை முதல் கால் வரை பிணைக்கப்பட்டிருக்கும் தொழிற்சங்கங்களும் அவற்றின் அதிகாரத்துவமும் அத்தகைய திட்டத்திற்கு முற்றிலும் விரோதமாக இருப்பதால், அந்த தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளைச் சாராமல், தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீன அதிகார நிறுவனங்களைக் கொண்டிருப்பது அவசியமாகும். அத்தகைய அதிகார நிறுவனங்களாக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், மருத்துவமனையிலும், பாடசாலையிலும், பல்கலைக்கழகத்திலும், பண்ணையிலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சர்வதேச அளவில் அமைக்கப்படும் அத்தகைய குழுக்களுடன் கூட்டணியை அமைக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கு முன்முயற்சி எடுக்குமாறு அனைத்து கல்விசாரா தொழிலாளர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

Loading