முன்னோக்கு

மே தினம் 2024: தொழிலாள வர்க்கமும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 4 சனிக்கிழமை, 2024 அன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய உரையை இங்கு பிரசுரித்துள்ளோம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, மனிதகுலத்தை ஒரு உலகளாவிய பேரழிவிற்கு இட்டுச் செல்லும் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் குற்றவியல் கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கான ஓர் அழைப்போடு இன்றைய மே தின நிகழ்வை ஆரம்பிக்கிறது.

தொழிலாள வர்க்கமானது காஸாவில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாக்கவும், ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் பென்ஜமின் நெத்தன்யாகுவின் நாஜி பாணியிலான அரசாங்கத்தால் நடத்தப்படும் இனப்படுகொலைப் போரை நிறுத்தச் செய்வதற்கும் முன்வரவேண்டும்.

சர்வதேச தொழிலாள வர்க்கமானது, காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கும், ரஷ்யாவிற்கு எதிரான போரில் அமெரிக்க ஏகாதிபத்தினதும் அதன் நேட்டோ கூட்டாளிகளினதும் ஈவிரக்கமற்ற விரிவாக்கத்திற்கும், ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளுக்கும் எதிரான உலகளாவிய இயக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்திற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பை அறிந்துகொள்ள வேண்டும். ஏகாதிபத்திய சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களுக்காக இலட்சக்கணக்கான உக்ரேனிய உயிர்கள் கொடூரமாக பலிகொடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொலிஸ் அதிரடிப் படையினரால் தாக்கப்படும் மாணவ இளைஞர்களைப் பாதுகாக்க அமெரிக்கத் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் இதே பொறுப்பு உள்ளது.

இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை யூத-விரோதத்துடன் அவதூறாக அடையாளப்படுத்துவதை அனைத்துலகக் குழு கண்டிக்கிறது. யூத-விரோதமானது, வலதுசாரி முதலாளித்துவ அரசியலின் அடையாளமாகவும், சோசலிசத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் போரில் ஒரு ஆயுதமாகவும் எப்போதும், இன்றும் இருந்து வருகின்றது.

அசான்ஜை சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற தனது அழைப்பை அனைத்துலகக் குழு மீண்டும் முன்வைக்கின்றது. அவரது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சதி நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த வாரம் பாசிச செலென்ஸ்கி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட, உக்ரேனில் சோசலிச போர் எதிர்ப்பாளரும், உக்ரேனிய, ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராளியுமான தோழர் போக்டான் சிரோட்யூக்கை விடுவிக்க வலியுறுத்துவதற்கான உலகளாவிய பிரச்சாரத்திற்கு அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கிறது.

போக்டன் சிரோடியுக் [Photo: WSWS]

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்துலகக் குழு தனது முதல் இணையவழி மே தின நிகழ்வை நடத்தியது. அந்த நேரத்தில், அது உலக முதலாளித்துவத்தின் நிலை பற்றிய பின்வரும் விளக்கத்தை வழங்கியது:

சமூகத்தின் அரசியல் ரீதியான ஒழுங்கமைப்பானது நாளுக்கு நாள் குற்றவியல்தனமான கிறுக்கர்களது ஒரு சிறைச்சாலையின் கட்டமைப்பின் வடிவத்தை எடுப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் இந்த உலகளாவிய சிறையில், புத்திசாலித்தனமான பெருந்திரளான மக்கள் சிறைகளின் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அதேநேரம், முதலாளித்துவ அரசியல்வாதிகள், அரசு உளவுத்துறை முகமைகளைச் சேர்ந்த தொழிற்முறை கொலைகாரர்கள், பெருநிறுவன தாதாக்கள் மற்றும் உயர் நிதி சுருட்டல்தாரர்களை கொண்ட கிறுக்கர்கள் கையில் துப்பாக்கிகளை ஏந்தியபடி சிறைச்சாலை சுவர்களை ரோந்து வருகின்றனர்.

அமெரிக்காவாலும் ஜேர்மனியாலும் தூண்டப்பட்டு கியேவில் நடந்த மைதான் சதிக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர்தான் 2014 ஆம் ஆண்டு மே தினக் கொண்டாட்டம் நடந்தது. இந்த நிகழ்வை மதிப்பீடு செய்த அனைத்துலகக் குழு, மே தினப் பேரணியில் பின்வருமாறு கூறியது:

அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உக்ரேனை வைக்கின்ற ஒரு ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதே அந்த ஆட்சிக் கவிழ்ப்பின் நோக்கமாய் இருந்தது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பது அமெரிக்காவிலும் ஜேர்மனியிலும் உட்கார்ந்து திட்டம் தீட்டியவர்களுக்கு நன்கு புரிந்தேயிருந்தது. இன்னும் சொல்லப் போனால், ஒரு மோதலைத் தவிர்க்கும் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக, ஜேர்மனியும் அமெரிக்காவும் தங்களது தொலைநோக்கு பூகோள-அரசியல் நலன்களை அடைய வேண்டுமாயின் அதற்கு ரஷ்யாவுடனான ஒரு மோதல் அவசியமாக இருக்கிறது என்று நம்புகின்றன.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரை, ஹிட்லரின் மூன்றாவது பேரரசின் ஆண்டுகளில் இழைக்கப்பட்ட சொல்லொணா குற்றங்களினால் அதன் மீது சுமத்தப்பட்ட இராணுவவாதத்தின் மீதான கட்டுப்பாடுகளை மறுதலிப்பதற்கான ஒரு சாக்குப்போக்காக, அது ரஷ்யாவுடனான மோதலை வரவேற்கிறது.

அமெரிக்காவின் பங்கைப் பொறுத்தவரை, அனைத்துலகக் குழு பின்வருமாறு எச்சரித்தது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முன்னெடுப்பதில், ஈவிரக்கமற்ற தன்மை அசாதாரண மட்டத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்கா தூண்டிவிடுகின்ற எந்தவொரு மோதலும், அமெரிக்காவுக்கும் அத்துடன் ஒட்டுமொத்த பூமிக் கிரகத்திற்கும் பேரழிவுகரமான பின்விளைவுகளுடன் கைமீறிப் போகக் கூடும்.

ஆனால், வாஷிங்டனின் ஈவிரக்கமற்ற முரட்டுத்துணிச்சல் என்பது இறுதி ஆய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் அதீத நெருக்கடியின் வெளிப்பாடே ஆகும். அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய பொருளாதார செல்வாக்கு நிலையின் நீடித்த சரிவுக்கு எதிர்வினையாற்றுவதற்கு, வாஷிங்டனில் இருக்கும் ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளுக்கு, போர் பொறிமுறையைத் தவிர வேறெந்த வழியும் புலப்படவில்லை. மிகச் சமீபத்திய அறிக்கைகளின் படி 2014 ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளாக உலகின் மிகப் பெரும் பொருளாதாரமாக சீனா அமெரிக்காவை விஞ்சி சென்று விடும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையானது, அதிகார சமநிலையை தன்பக்கமாய் சாய்ப்பதற்கு இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் மனப்பாங்கை அதிகப்படுத்தும்.

கடந்த தசாப்தத்தின் நிகழ்வுகள் அனைத்துலகக் குழு முன்வைத்த பகுப்பாய்வை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் எங்கள் பகுப்பாய்வின் உறுதிப்படுத்தல், சுய புகழ்ச்சிக்கு காரணமல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட பகுப்பாய்வு ஒரு எச்சரிக்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் நாம் எச்சரித்தது உண்மையாகிவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளால் வேண்டுமென்றே தூண்டப்பட்ட ஒரு பினாமிப் போராக தொடங்கியது, ரஷ்யாவுடனான ஒரு வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது. ஒருமுறை கடந்துவிட்டால், அணு ஆயுதப் போரை நோக்கி விரைவான விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில், பைடென் நிர்வாகம் “சிவப்பு கோடுகளை” புறக்கணித்துள்ளது.

ஜேர்மன் லெபர்ட் 2 பிரதான போர் பீரங்கிகள் உக்ரேனுக்குச் செல்கின்றன

உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்களை ஒர் உண்மையான போர் வெறி பீடித்துள்ளது. தி எகனாமிஸ்ட் இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், மீண்டும் உக்ரேனில் துருப்புக்களை நிலைநிறுத்துவதை நேட்டோ நிராகரிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறார். “ஆக்கிரமிப்பாளர் என்பதைத்தவிர வேறு எவ்விதத்திலும் குறிப்பிடப்பட முடியாத ஒருவருக்கு எதிரான எங்களது நடவடிக்கைக்கு வரம்புகளை விதிப்பதன் மூலம் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் தயங்குகிறோம்” என்று அவர் அறிவித்தார்.

அரசியல் தலைவர்களும் ஊடகப் பண்டிதர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மூலோபாய விருப்பமாக அணு ஆயுதப் போரை சர்வசாதாரணமாக குறிப்பிடுகின்றனர். ஏப்ரல் 24 அன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ரஷ்யாவுடனான போரின் விளைவுகள் குறித்து குறிப்பிடத்தக்க அக்கறையின்மையுடன் ஊகித்து, ரஷ்யாவின் எல்லைகளில் பாரிய நேட்டோ இராணுவப் பயிற்சிகளைப் பற்றி பின்வருமாறு அறிவித்தது:

நேட்டோவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் மூழுமானால், அமெரிக்கா மற்றும் நட்பு துருப்புக்களும், ஆரம்பத்தில் பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நேட்டோவின் “கிழக்கு பிராந்தியத்தில்” ரஷ்யப் படையின் ஊடுருவலைத் தடுக்க முயற்சிக்கும்.

அந்தப் போர் எப்படி முடிவடையும், அதில் எத்தனை பேர் கொல்லப்படக்கூடும் என்பது வேறு விடயம். இரண்டாம் உலகப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த முறை, பணயத்தில் வைக்கப்பட்டுள்ள அளவு இன்னும் அதிகமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததில் இருந்து திரு. புட்டின் அணுவாயுத போரின் சாத்தியம் தொடர்பாக பல தடவை குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடனான பேரழிவுகரமான மோதலின் ஆபத்தை குறைக்க முயற்சிப்பதற்கு பதிலாக, பைடென் நிர்வாகமும் நேட்டோவும் இடைவிடாமல் மோதலை அதிகரித்து வருகின்றன. நேட்டோவின் இராணுவப் பயிற்சிகள் குறித்த அறிக்கை வெளியான ஒரு நாள் கழித்து, நியூ யோர்க் டைம்ஸ் அதன் வாசகர்களுக்கு பின்வருமாறு அறிவித்தது:

ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள ரஷ்யப் படைகளை மிகவும் திறம்பட குறிவைக்க உக்ரேன் படைகளால் புதிதாக வழங்கப்பட்ட நெடுந்தூர ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்த முடியும் என்று மூத்த பென்டகன் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

100 க்கும் மேற்பட்ட நெடுந்தூர தாக்குதல் கருவிகளை உக்ரேனுக்கு அனுப்ப பெப்ரவரியில் ஜனாதிபதி பைடென் எடுத்த முடிவு ஒரு பாரிய கொள்கை மாற்றமாகும்.

இந்த “பாரிய கொள்கை மாற்றத்தின்” ஈவிரக்கமற்ற தன்மையை மிகைப்படுத்திக்கூற முடியாது. தாம் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு, ரஷ்ய பிரதேசத்தினுள் உக்ரேன் நடத்திய தாக்குதல்களுக்கு, அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் தான் பொறுப்பு என புட்டின் அரசாங்கம் கூறாது, என்று பொதுமக்கள் நம்ப வேண்டும், என பைடென் நிர்வாகம் விரும்புகிறது.

ஆனால் 1962 இல் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது, ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி காட்டிய முன்னுதாரணத்தை புட்டின் செயல்படுத்தினால் என்ன செய்வது. கென்னடியின் எச்சரிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டு, நேட்டோ வழங்கிய ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய பிரதேசத்தின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்துவது, “ரஷ்யா மீது நேட்டோ நடத்திய ஒரு தாக்குதலாகக் கருதப்படும்”. இதற்கு “நேட்டோ நாடுகள் மீது முழு பதிலடி கொடுக்க வேண்டுமா?” என புட்டின் கேட்கலாம்.

பைடெனும் அவரது நேட்டோ சகாக்களும் “உக்ரேனில் வெற்றி” பெறுவது என்பது, அணு ஆயுதப் போர் அபாயத்தை ஏற்படுத்துவதாகும் என்று மக்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது. ரஷ்யாவுடனான மோதல் அணுவாயுதப் போராகிவிட்டால் தங்கள் நாடுகளுக்கும் உலகிற்கும் என்ன நடக்கும் என்பதை தேவையான விவரங்களுடன் விபரிக்கவும் வேண்டும்.

காஸல் ப்ராவோ (Castle Bravo) அமெரிக்காவால் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த வெப்ப அணுக்கரு சாதனம்

உண்மையில், 1950கள் மற்றும் 1960களில் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்பட்ட விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு வெப்ப-அணு ஆயுதப் போரின் விளைவு என்னவாக இருக்கும் என்பது பைடென் நிர்வாகத்திற்கு நன்றாகத் தெரியும். 2015 பெப்ரவரியில், அமெரிக்க அணு விஞ்ஞானிகளின் சஞ்சிகை (The Bulletin of the Atomic Scientists), “800 கிலோ தொன் அணுவாயுதம் மன்ஹாட்டன் நகரத்தின் மையப்பகுதியின் மேலே வெடித்தால் என்ன நடக்கும்?” என்ற தலையங்கத்துடன் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் குறிப்பிடப்பட்ட பல பகுதிகள் பின்வருமாறு:

அதன் வெடிப்பு அலையால் உருவாக்கப்பட்ட சேதத்தை அதிகரிக்க, அநேகமாக குண்டானது நகரத்திற்கு ஒரு மைலுக்கு சற்று மேலே வெடிக்க வைக்கப்படும். வெடித்த பின்னர், வினாடியை ஒரு கோடியால் பிரித்து அதில் பத்து இலட்சம் நுண்வினாடிகளுக்குள் குண்டின் மையம் அண்ணளவாக 200 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் (சுமார் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையை எட்டும். இது சூரியனின் மையத்தில் உள்ள வெப்பநிலையை விட நான்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிகமாக இருக்கும்.

அதிகூடிய வெப்பத்துடனான காற்றின் ஒரு பந்து உருவாகும். இது ஆரம்பத்தில் மணிக்கு மில்லியன் மைல் வேகத்தில் வெளிப்புறமாக விரிவடையும், இது சுற்றியுள்ள காற்றில் வேகமாக நகர்கின்ற பிஸ்டன் போல செயல்படும், காற்றானது தீப்பந்தத்தின் விளிம்பில் அதை அழுத்தி, பரந்த அளவு மற்றும் சக்திமிக்க அதிர்ச்சி அலையை உருவாக்கும்.

இந்த நெருப்புபிளம்பு அதன் கீழே உள்ள கட்டமைப்புகளை ஆவியாக்கி மற்றும் ஒரு பெரிய வெடிப்பு அலையையும், அதிவேக காற்றையும் உருவாக்கும். இது வெடித்த இடத்தில் இருந்து ஒரு சில மைல்களுக்குள் கட்டப்பட்டிருக்கும் சீமெந்து கொன்கிரீட் கட்டமைப்புகளை கூட தகர்க்கும்.

தொடக்கப் பூச்சிய புள்ளியில் இருந்து (Ground zero), ஒன்றரை முதல் முக்கால் மைல் தொலைவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம், கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷன், கிறைஸ்லர் கட்டிடம் மற்றும் புனித பாட்ரிக் கதீட்ரல் ஆகியவை உள்ள பகுதிகளில், வெடித்த அரை நொடிக்குள் நெருப்பு பிளம்பிலிருந்து வரும் வெளிச்சம், தெருக்களின் தரையை உருக்கி, சுவர்களில் வண்ணப்பூச்சுகளை எரித்து, உலோகப் பரப்புகளை உருகச் செய்யும். ஏறக்குறைய ஒரு வினாடிக்குப் பின்னர், குண்டுவெடிப்பு அலையும் மற்றும் மணிக்கு 750 மைல் வேகத்தில் வீசும் காற்றும் கட்டிடங்களை தரைமட்டமாக்கி, எரியும் வாகனங்களை காற்றில் பறக்கும் இலைகளைப் போல தூக்கிவீசும். நகரத்தின் மையப்பகுதி முழுவதும், நெருப்பு பிளம்பினால் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் உட்புறங்கள் தீயில் எரியும். …

தொடக்கப் பூச்சிய புள்ளியில் இருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள பெருநகர கலை அருங்காட்சியகம் அதன் அனைத்து அற்புதமான வரலாற்று பொக்கிஷங்களுடன் அழிக்கப்படும். பூச்சியப் புள்ளியில் இருந்து இரண்டரை மைல் தொலைவில் உள்ள லோயர் மன்ஹாட்டன், கிழக்கு கிராமம் மற்றும் ஸ்டுய்வெசன்ட் நகரம் ஆகிய இடங்களில், நண்பகலில் பாலைவன சூரியனை விட 2,700 மடங்கு பிரகாசமான தீப்பிளம்பு தோன்றும். …

பத்து நிமிடங்களுக்குள், மன்ஹாட்டன் நகரத்தின் மையப்பகுதியில் இருந்து ஏறக்குறைய ஐந்து முதல் ஏழு மைல்களுக்குள் உள்ள அனைத்தும் ஒரு மாபெரும் தீப்புயலால் மூழ்கடிக்கப்படும். ஒரு தீ மண்டலம் 90 முதல் 152 சதுர மைல்கள் (230 முதல் 389 சதுர கிலோமீட்டர்) வரை ஆக்கிரமிக்கும். இந்த தீப்புயலானது மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை பொங்கி எழும். …

தெருக்களில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், நெருப்புப்பொறிகள் மற்றும் தீப்பிழம்புகளால் நிரம்பிய சூறாவளி காற்றால் எரிக்கப்பட்டிருப்பார்கள். …

தீ எல்லா உயிர்களையும் இல்லாதொழித்து, கிட்டத்தட்ட அனைத்தையும் அழித்துவிடும். உடனடி அழிவிற்குள்ளான பகுதியிலிருந்து பத்து மைல்கள் தொலைவில் காற்றின் திசையிலுள்ள பகுதிகளுக்கு வெடித்த சில மணி நேரங்களுக்குள் கதிரியக்கம் வரத் தொடங்கும்.ஆனால் அது மற்றொரு கதை.

மன்ஹாட்டனில் ஒரு அணு ஆயுதத்தின் தாக்கம் பற்றிய இந்த விளக்கம் வெறும் ஊகம் அல்ல. இது ஒரு அணு குண்டுவெடிப்பின் கொடூரமான விளைவை துல்லியமாக சித்தரிக்கிறது. ஆயினும்கூட, நேட்டோவானது அணுவாயுதப் போரின் சாத்தியக்கூறுகளால் மிரட்டப்படுவதை அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கும், ஊடகங்களில் திரும்ப திரும்ப கூறப்படும் அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் ஏராளமான அறிக்கைகள் உள்ளன. இதன் பொருள் என்னவென்றால், அணு குண்டுகள், அவற்றை வைத்திருக்கும் சக்திகளுக்கு இடையிலான மோதலைத் தடுப்பதற்கே உள்ளன என்ற நீண்டகால அனுமானம் இனி செல்லுபடியாகாது.

இத்தகைய பேரழிவை தடுக்கும் கொள்கையை மறுக்கும் அறிக்கைகளை பாரதூரமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டால் (அவை அவ்வாறே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்) பூமியின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய முடிவுகள் பைத்தியக்காரர்களால் எடுக்கப்படுகின்றன என்ற முடிவுக்கு வருவதை ஒருவர் தவிர்க்க முடியாது. ஆனாலும், இது போதுமான விளக்கமும் அல்ல. சரியானதும் அல்ல. பைடென், சுனாக், மக்ரோன், ஷோல்ஸ் ஆகியோர் பைத்தியக்காரர்கள் அல்ல. ஆனால் அவர்கள், முற்போக்கான, சமூக ரீதியில் பகுத்தறிவான மற்றும் மனிதாபிமான தீர்வுகளை கண்டுபிடிக்க முடியாத நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட, ஒரு முதலாளித்துவ அமைப்பின் தலைவர்களாவர்.

போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி உந்தும் நவீன ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் குணாம்சம், நீண்ட காலமாக மார்க்சிச பகுப்பாய்விற்கு உள்ளாக்கப்பட்ட ஒன்றாகும். இது பற்றி 1914 இல் முதல் ஏகாதிபத்திய உலகப் போர் வெடிப்பதற்கு முன்னரே ஆராயப்பட்டது. 1910 சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸின் பிரதிநிதிகள் கோபன்ஹேகன் நகரில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது :

இப்போதைய போர்கள் முதலாளித்துவத்தினதும் குறிப்பாக வெளி உலகச் சந்தைகளுக்காக முதலாளித்துவ அரசுகளின் போட்டிப் போராட்டத்தினதும் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் முதலாளித்துவ வர்க்க மேலாதிக்கத்திற்கும், தொழிலாள வர்க்கத்தின் மீதான பொருளாதார மற்றும் அரசியல் அடக்குமுறைக்குமான முதலாளித்துவத்தின் பிரதான கருவியாக இருக்கும் இராணுவவாதத்தினதும் விளைவாகும். முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கு இல்லாதொழிக்கப்பட்டால்தான் போர் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

லியோன் ட்ரொட்ஸ்கி [Photo: WSWS]

சோசலிச இயக்கம் முன்னனுமானித்த உலகப் போர், ஆகஸ்ட் 1914 இல் வெடித்தது. இரத்தக்களரியான மோதலின் வரலாற்று முக்கியத்துவத்தை ட்ரொட்ஸ்கி 1915 இல் எழுதிய தனது அற்புதமான ஆவணமான போரும் சர்வதேசமும் என்பதில் பின்வருமாறு விளக்கினார்:

போர் தேசிய அரசின் வீழ்ச்சியை அறிவிக்கிறது. அதே நேரத்தில், அது முதலாளித்துவ பொருளாதார முறைமையின் வீழ்ச்சியையும் அறிவிக்கின்றது. தேசிய அரசின் மூலம், முதலாளித்துவம் உலகின் முழுப் பொருளாதார அமைப்பையும் புரட்சிகரமாக்கியுள்ளது. இது ஒட்டுமொத்த பூமியையும் பெரும் சக்திகளின் தன்னலக்குழுக்களுக்கு இடையில் பிரித்துள்ளது. இந்த பெரிய நாடுகளுக்கு இடையிலான போட்டியில் தங்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் அவற்றைச் சுற்றியுள்ள சிறிய நாடுகள் உள்ளன. முதலாளித்துவ அடிப்படையில், உலகப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி என்பது, முதலாளித்துவ சுரண்டலின் புதிய மற்றும் எப்போதும் புதிய களங்களைப் பெறுவதற்கான இடைவிடாத போராட்டமாகும். இவை ஒரே மூலஆதாரமான பூமியிலிருந்து பெறப்பட வேண்டும். இராணுவவாதத்தின் பதாகையின் கீழான பொருளாதாரப் போட்டியானது மனிதப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகின்ற, கொள்ளையடிப்புடனும் அழிவுடனும் இணைந்துள்ளது. உலக உற்பத்தியானது, தேசிய மற்றும் அரசு பிளவுகளால் உருவாக்கப்பட்ட குழப்பத்திற்கு எதிராக மட்டுமன்றி, முதலாளித்துவ பொருளாதார அமைப்புகளுக்கு எதிராகவும் கிளர்ச்சி செய்கிறது. இது இப்போது காட்டுமிராண்டித்தனமான ஒழுங்கின்மை மற்றும் குழப்பமாக மாறியுள்ளது.

கடந்த நூற்றாண்டில், உலகப் பொருளாதாரத்திலும், முதலாளித்துவ தேசிய அரசுகளுக்கிடையிலான சக்திகளின் சமநிலையிலும், நிச்சயமான, பரந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் அதன் சிக்கலான தன்மையும் மற்றும் அது சார்ந்துள்ள உற்பத்தி சக்திகளின் அளவும் பல மடங்கு பெரிதாக உள்ளன. ஆனால், அவை அவ்வாறிருந்தும் ஏகாதிபத்திய அமைப்பின் நெருக்கடியின் அளவும் அத்தகையதாகவே உள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கம், அதற்கு எதிரான சாத்தியமான அனைத்துப் போட்டியாளர்களுக்கு எதிராகவும் தனது மேலாதிக்கத்தை பாதுகாப்பதில் உறுதிப்பாட்டுடன் உள்ளது. அது “விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கமைப்பு” என்று அழைக்கப்படுவதைப் பாதுகாப்பதாக ஆணவத்துடன் அறிவிக்கிறது, இதன் பொருள்: “நாங்கள் விதிகளை உருவாக்குகிறோம், உலகம் எங்கள் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்” என்பதாகும். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலக ஒழுங்கமைப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நாடுகளை, பிரதானமாக ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவை, அது “கிளர்ச்சியின் மையம்” என்று கண்டித்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை வெளிப்படுத்தும் வெளியுறவுக் கொள்கை இதழ்களில், அச்சுறுத்தும் மற்றும் போர்க்குணமிக்க தொனி வியாபித்துள்ளது. இந்த வகையின் ஒரு பொதுவான உதாரணம் இந்த மாத தொடக்கத்தில் Foreign Affairs (வெளி விவகாரம்) இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை ஆகும். இதற்கு “வெற்றிக்கு மாற்று இல்லை: சீனாவுடனான அமெரிக்காவின் போட்டி வெல்லப்பட வேண்டும், சமாளிக்கப்படக்கூடாது” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உலகளாவிய மேலாதிக்கத்திற்கான உந்துதலின் அடித்தளத்தை தகர்ப்பது, யதார்த்தத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார அடித்தளங்களின் சீரழிவாகும். விடயத்தை அப்பட்டமாக கூறுவதானால், அது ஒரு சீரழிந்த பொருளாதார அமைப்பை, அதாவது அரசு திவால் நிலைமை என்னும் அடிப்படைப் பிரச்சனையை தவிர்க்கவியலாதபடி எதிர்கொள்கிறது.

ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன், டொலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான இணைப்பைத் துண்டித்த 1971 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசியக் கடன் 398 பில்லியன் டொலர்களாக இருந்தது. 1982 இல், தேசியக் கடன் 1.1 டிரில்லியன் டொலர்களை கடந்தது. 2001 அளவில், தேசிய கடன் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்து, 5.8 டிரில்லியன் டொலர்களாக இருந்தது. வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சியின் ஆண்டான 2008 ஆம் ஆண்டில், அது 10 டிரில்லியன் டொலர்களாக உயர்ந்தது. எங்கள் முதல் இணையவழி மே தின நிகழ்வு நடந்த 2014 இல், தேசிய கடன் 17.8 டிரில்லியன் டொலர்களை எட்டியது. இந்த கட்டத்தில், கடன் தொல்லையின் வளர்ச்சியானது கட்டுப்படுத்த முடியாத வீரியம் மிக்க நோய்க்கட்டியுடன் ஒரு நோய் பிடித்த ஒற்றுமையைக் கொண்டிருந்தது. கடந்த தசாப்தத்தில், தேசியக் கடன் கிட்டத்தட்ட இருமடங்காகி இப்போது 33.2 டிரில்லியன் டொலர்களாக உள்ளது.

[Photo by Wikideas1 / undefined]

பொதுக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதத்தில் கணக்கிடும்போது பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகத் தெரிகிறது. 1971 இல், பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 சதவீதமாக இருந்தது. இது 2001ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவீதமாக உயர்ந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன், 2014ல், பொதுக்கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டில், தேசிய கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதத்தை எட்டியது.

அதன் உலகளாவிய போட்டியாளர்களுடன் தொடர்பட்ட அமெரிக்க முதலாளித்துவத்தின் சீரழிவானது பற்றாக்குறை பற்றிய வர்த்தக புள்ளிவிவரங்களில் அப்பட்டமாக அம்பலமானது. 1971 இல், அமெரிக்கா 626 மில்லியன் டாலர்கள் சிறிய உபரியைப் பதிவு செய்தது. 2001 வாக்கில், வருடாந்திர அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறை 377 பில்லியன் டாலர்களை எட்டியது. 2014ல் வர்த்தக பற்றாக்குறை 509 பில்லியன் டாலர்களை எட்டியது. துல்லியமான அளவீடு இருந்த கடைசி ஆண்டான 2022 இல், வர்த்தகப் பற்றாக்குறை 971 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டது. இது 1 டிரில்லியன் டொலர்களுக்கும் சற்றே குறைவாகும்.

அமெரிக்காவும் அதன் பிரதான நேட்டோ நட்பு நாடுகளும், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதானது இறுதி ஆய்வில், போரின் மூலம் தங்கள் போட்டியாளர்களை அழிப்பதிலேயே தங்கியுள்ளது என்பதில் உறுதியாக உள்ளனர்.

யூரேசியாவின் பரந்த மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மூலவளங்களை ஏகாதிபத்தியம் தடையின்றி அடைய வேண்டுமெனில், போரின்றி முடியாது. பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் மிகவும் புத்திசாலித்தனமான வர்ணனையாளர்களில் ஒருவரான கிடியோன் ராச்மன், சமீபத்தில் எழுதியதாவது:

யதார்த்தத்தில் “மேற்கத்திய கூட்டணி” என்பது இப்போது ஒரு தொடர் இணைக்கப்பட்ட பிராந்திய போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் கூட்டாளிகளின் உலகளாவிய வலையமைப்பாகும். ஐரோப்பாவின் முக்கிய எதிரியாக ரஷ்யா உள்ளது. மத்திய கிழக்கில் மிகவும் சீர்குலைக்கும் சக்தியாக ஈரான் உள்ளது. வடகொரியா ஆசியாவில் ஒரு நிலையான ஆபத்தாக உள்ளது. சீனாவின் நடத்தை மற்றும் வாய்ச்சவடால் மிகவும் ஆக்ரோஷமாகி வருவதுடன், அதனால் மொஸ்கோ அல்லது தெஹ்ரானுக்கு கிடைக்காத மூலவளங்களை அணிதிரட்ட முடியும்.

ஒரு அணுசக்தி பேரழிவை நோக்கிய இராணுவ மோதலின் இடைவிடாத விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டமே, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பணியாகும். ஆனால், மனிதகுலத்தின் உயிர்வாழ்வு சார்ந்திருக்கும் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு, ஏகாதிபத்தியத்தின் இயல்பைப் பற்றிய சரியான மதிப்பீட்டில் வேரூன்றிய ஒரு மூலோபாயம் தேவைப்படுகிறது. உலக முதலாளித்துவ முறைமையின் முரண்பாடுகளுக்கு, ஒரு வன்முறையற்ற தீர்வை ஏற்றுக்கொள்ளும்படி ஆளும் வர்க்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து வற்புறுத்தலாம் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அனைத்து போர்-எதிர்ப்பு வேலைத்திட்டங்களும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு உண்மையான வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் சுய-ஏமாற்று தீர்வுகளாகும்.

2020 ஜனவரியில் கோவிட் பெருந் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து ஏற்பட்ட வெகுஜன மரணங்கள் மற்றும் நோய் பாதிப்புகள் சம்பந்தமாக காட்டப்பட்ட அலட்சியம், முதலாளித்துவ வர்க்கத்தின் மனசாட்சிக்கு அழைப்புவிடுவதால் பலனில்லை என்பதற்கான நிரூபணமாகும். பெருநிறுவன இலாபங்கள் மற்றும் தனியார் செல்வக் குவிப்புக்கான இடைவிடாத உந்துதலுக்காக, மனித வாழ்விற்கான அனைத்து தேவைகளையும் அடிபணியச் செய்து, முதலாளித்துவ உற்பத்தியின் தடையற்ற செயல்பாட்டின் ஒரு இன்றியமையாத விளைவாக ஆளும் உயரடுக்குகள் 27 மில்லியன் அதிகப்படியான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

பாரிசில் ஒரு கோவிட்-19 நோயாளி, 22 ஏப்பிரல் 2021 [AP Photo/Lewis Joly]

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நாட்டை கோவிட் நாசமாக்கியபோது “உடல்கள் குவியட்டும்” என மகிழ்ச்சியுடன் அறிவித்த கொள்கை என்பது, ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தில், அதன் உலகளாவிய நலன்களைப் பெறுவதற்கான மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலை வன்முறை, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் கோபத்தைத் தூண்டியுள்ளது. ஆனால் காஸாவில் நடக்கும் இனப்படுகொலையும் ரஷ்யாவிற்கு எதிரான போரும் ஏகாதிபத்தியத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட உலகளாவிய போரில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முனைகள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மத்திய கிழக்கில், இனப்படுகொலையாளி ஜோ பைடெனின் கொள்கைகளை ஆணையிடும் அதே நலன்களே, மத்திய ஐரோப்பாவிலும் அதே போல் ஆசியாவிலும் அவரது நிர்வாகத்தின் நடவடிக்கைகளையும் தீர்மானிக்கின்றன.

போர்களுக்கு வழிவகுக்கும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆழமாக வேரூன்றிய முரண்பாடுகளே, சமூகப் புரட்சிக்கும் வழிவகுக்கிறது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. போரை நடத்துவதற்குத் தேவையான வளங்களை திரட்டும் நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை அதிகரிக்க ஆளும் உயரடுக்குகளை நிர்ப்பந்திக்கின்றது. இது இன்னும் பெரிய எதிர்ப்பை சந்திக்கும்.

ஆனால் இந்த எதிர்ப்பு, வரலாற்று பணிக்கு சமமாக வளர்ச்சியடைவதற்கு ஒரு புரட்சிகர முன்னோக்கை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். இந்த நெருக்கடியின் தாக்கம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலையில் பரந்த மாற்றங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த உந்துதலை வழங்கும். ஆனால் புறநிலை நிகழ்ச்சிப்போக்கினை புரட்சிகர அரசியல் நடவடிக்கையாக மாற்றுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிசத் தலைமையை கட்டியெழுப்ப வேண்டும்.

இது எவ்வாறு அடையப்படும்? இரண்டாம் உலகப் போர் வெடித்த சிறிது காலத்திற்குப் பின்னரும், அவர் ஸ்டாலினிச முகவரால் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பும் எழுதப்பட்ட தனது இறுதி மாபெரும் அறிக்கையில், போருக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தின் சாராம்சத்தை ட்ரொட்ஸ்கி பின்வருமாறு வரையறுத்தார்:

போரின் போக்கில் இருந்து சுயாதீனமாக, நாங்கள் எங்கள் அடிப்படை பணியை நிறைவேற்றுகிறோம்: அதாவது தொழிலாளர்களின் நலன்களுக்கும் இரத்தவெறி பிடித்த முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் இடையே உள்ள சமரசமின்மையை நாங்கள் அவர்களுக்கு விளக்குகிறோம்; ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உழைப்பவர்களை அணிதிரட்டுவோம்; போரில் ஈடுபட்டுள்ள மற்றும் நடுநிலை வகிக்கும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்; ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் சகோதரத்துவத்திற்கும், போர் முனையின் எதிர்த்தரப்பில் உள்ள இருதரப்பு சிப்பாய்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்; நாங்கள் போருக்கு எதிராக பெண்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுகிறோம், புரட்சிக்கான உறுதியான, விடாமுயற்சியான, அயராத தயாரிப்பில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.…

இந்த சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அனைத்துலகக் குழு மட்டுமே போருக்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறது. இந்த போராட்டத்தின் மூலோபாய அடித்தளம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமாகும். முதலாளித்துவ அரசுக்களுக்கு எதிரான சமரசம் செய்ய முடியாத எதிர்ப்பின் மூலம் மட்டுமே இந்த ஐக்கியம் அடையப்பட முடியும். இந்த மூலோபாயம், ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் கொள்கைகளுக்கு நமது எதிர்ப்பை மட்டுமல்லாது, ரஷ்யா மற்றும் சீனாவில் உள்ள முதலாளித்துவ ஆட்சிகளின் பிற்போக்கு தேசியவாத கொள்கைகளுக்கு எதிரான எமது எதிர்ப்பையும் தீர்மானிக்கின்றது. நான்காம் அகிலம், ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியது போல், சமரசம் செய்ய முடியாத புரட்சிகர எதிர்ப்பின் கட்சியாக உள்ளது. நாங்கள் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை எந்த முதலாளித்துவ அரசுடனுமான கூட்டணி ஊடாக அல்லாது, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தனித்துவமாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டல் மூலமாக நடத்துகிறோம்.

போக்டன் சிரோடியுக், 2024 ஏப்பிரல் நடுப்பகுதியில். [Photo: WSWS]

இந்த இணையவழி பேரணியில் உரையாற்ற திட்டமிட்டிருந்த தோழர் போக்டான் சிரோடியூக், கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு எழுதிய ஒரு உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான நாளில், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களின் உக்ரேனிய கிளை உறுப்பினர்களும் மற்றும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களின் சகல உறுப்பினர்களும் இந்த போரை முடிவிற்கு கொண்டுவர ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்துடன் உக்ரேனிய மற்றும் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்த அழைப்பு விடுக்கிறோம்!

அனைத்து முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்ப நாம் அழைப்பு விடுக்கிறோம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையின் பதாகையின் கீழ் ஐக்கியப்படுமாறு உலகம் முழுவதிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தையும் நாங்கள் அழைக்கிறோம்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸின் வார்த்தைகளான “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”! என்பது பலமாகவும் வலுவாகவும் ஒலிக்கட்டும்.

இந்த வார்த்தைகள், முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாகரீகத்தை அழிவில் இருந்து காப்பாற்ற நான்காம் அகிலத்தை, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்ப உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கட்டும்.

மேலும் படிக்க

Loading