முன்னோக்கு

நேட்டோவின் பினாமிப் போருக்கு எதிரான சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை உக்ரேனிய சிறையில் இருந்து விடுவிக்கக் கோருங்கள்

இந்த அறிக்கையை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யவும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாசிச செலென்ஸ்கி ஆட்சிக்கும், நேட்டோ மற்றும் உக்ரேன்-ரஷ்யா போருக்கும் எதிரான சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக் (Bogdan Syrotiuk), ஏப்ரல் 25, வியாழன் அன்று, உக்ரேனின் பாதுகாப்பு சேவை ( Security Service of Ukraine - SBU) ஆல் அவரது சொந்த ஊரான தெற்கு உக்ரேனில் உள்ள பெர்வோமைஸ்கில் (Bervomaisk) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்டன் சிரோடியுக் (Bogdan Syrotiuk) [Photo: WSWS]

உடல் நலம் பாதிக்கப்பட்ட 25 வயதான போக்டான், உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தினார் மற்றும் ரஷ்யாவின் நலன்களுக்கு சேவை செய்தார் என்ற மோசடிக் குற்றச்சாட்டின் பேரில், கொடூரமான சூழ்நிலையில் நிகோலேவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் ஒரு போலியான நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டால், போக்டனுக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறது, இது மரண தண்டனைக்கு சமமாகும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இடதுசாரி இயக்கங்கள் மீதான செலென்ஸ்கி ஆட்சியின் கொடூரமான அடக்குமுறையின் சமீபத்திய உதாரணம் போக்டனின் கைதாகும். அதன் போருக்கான எதிர்ப்பானது, உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தினரிடையே வளர்ந்து வரும் ஆதரவைக் கண்டு வருகிறது.

SBU அதிகாரிகள் போக்டனின் அடுக்குமாடி குடியிருப்பையும், அரசியல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அவர் பயன்படுத்திய அலுவலகத்தையும் சூறையாடினர். போக்டனின் அலுவலகத்தில், ரஷ்ய இராணுவ அங்கி, ரஷ்ய இராணுவப் பேரினவாதத்துடன் தொடர்புடைய ஒரு சின்னமான “Z” என்ற எழுத்தைக் கொண்ட ஒரு முதுகுப்பை, மற்றும் ஒரு வாயு முகக்கவசம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக SBU கூறுவதாக உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கியின் புகைப்படத்தை முக்கியமாகக் காண்பிக்கும் மற்றும் பரந்த அளவிலான மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச இலக்கியங்களை கொண்டிருக்கின்ற ஒரு அலுவலகத்தில், இத்தகைய பொருட்கள் இருப்பதாக கூறுவதை, மக்கள் நம்புவார்கள் என்று முட்டாள் பாசிச பொலிஸ் துறை மட்டுமே எதிர்பார்க்கும்.

போக்டனின் அலுவலகத்தில் அத்தகைய பொருட்கள் “கண்டுபிடிக்கப்பட்டன” என்றால், அவை SBU ஆல் அங்கு விட்டுச் செல்லப்பட்டுள்ளன என்பதாகும். SBU இன் ஏமாற்றுத்தனமும் கெஸ்டபோவின் வழிமுறையைப் போல பயன்படுத்துவதும் உக்ரேனில் பொதுவானவையாக இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியின் நினைவாக, மே 9 அன்று நடந்த பேரணியில் போக்டன் சிரோடியுக். [Photo: WSWS]

போக்டானை புட்டினின் ஆட்சியினதும் அதன் உக்ரேன் மீதான படையெடுப்புக்கும் ஆதரவாளராகச் சித்தரிக்கும் முயற்சிகள் அரசியல் ரீதியாக அபத்தமானதாகும். தோழர் போக்டன், உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் செயல்படும் ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் (YGBL) இளம் காவலரின் முன்னணி உறுப்பினர் ஆவார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) அரசியல் ஒற்றுமையுடன் செயல்பட்டுவரும் YGBL, உக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டிலும் உள்ள தன்னலக் குழுக்களின் முதலாளித்துவ அரசாங்கங்களை எதிர்க்கிறது. உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட பல கட்டுரைகளிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனுசரணையுடன் கூடிய நிகழ்வுகளில் ஆற்றிய உரைகளிலும் போக்டன் சந்தேகத்திற்கு இடமின்றி போரைக் கண்டனம் செய்ததோடு, கியேவ் மற்றும் மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட பிற்போக்குத்தனமான தேசிய பேரினவாத ஆட்சிகளுக்கு எதிராக, உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தார். ரஷ்யாவில் உள்ள போக்டனின் தோழர்கள், புட்டினின் முதலாளித்துவ மறுசீரமைப்பு ஆட்சியையும், நவ-ஜாரிச ரஷ்ய தேசியவாதத்தின் மருட்சியான மகிமைப்படுத்தலையும் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்த்து வருகின்றனர்.

அவர் கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அனைத்துலகக் குழுவின் இந்த வருட மே தின நிகழ்வில் உரையாற்றுவதற்கு திட்டமிட்டிருந்து எழுதிய உரையில், தோழர் போக்டன் பின்வருமாறு கூறுகிறார்:

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை நாளில், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களின் உக்ரேனிய கிளை மற்றும் முழு YGBL உறுப்பினர்களாகிய நாங்கள், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்துடன் உக்ரேனிய மற்றும் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைக்க முழு YGBL உறுப்பினர்களும் அழைப்பு விடுக்கின்றோம்!

போரை எதிர்ப்பவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக செலென்ஸ்கி ஆட்சியின் மிருகத்தனமான அடக்குமுறை நடவடிக்கைகளின் ஒரு வடிவத்தின் பகுதியாக, தோழர் போக்டன் சிரோடியுக் கைது செய்யப்பட்டிருப்பது, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நடத்தப்படுகிறது என்ற பொய்யான கூற்றை அம்பலப்படுத்துகிறது. உக்ரேனில் இருப்பது ஒரு போலீஸ் அரசாகும். அதன் மக்கள் தொகை இராணுவச் சட்டத்திற்கு உட்பட்டுள்ளது. தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு, செலன்ஸ்கி சர்வாதிகாரியாக ஆட்சி செய்கிறார். மேலும் அவர் தனது நேட்டோ ஆதரவாளர்களின் சர்வாதிகாரிகள், பில்லியனர் தன்னலக்குழுக்களின் நிதி நலன்கள் மற்றும் உக்ரேனிய மக்களை மிரட்டுவதற்கு அவர் தொடர்புடைய நவ-நாஜி குண்டர்களுக்கு மட்டுமே உட்பட்டுள்ளார்.

உண்மையில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஜனநாயகப் பணியகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் அமைப்பு இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட அதன் சமீபத்திய அறிக்கையில், உக்ரேனிய ஆட்சியின் கொடூரமான அடக்குமுறை தன்மையை ஒப்புக் கொண்டுள்ளது. அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட கடுமையான 'மனித உரிமை பிரச்சினைகளில்' சில:

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல்; சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற, அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை; கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள்; தன்னிச்சையான கைது அல்லது தடுப்புகள்; நீதித்துறையின் சுதந்திரத்தில் கடுமையான சிக்கல்கள்; ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல்கள், நியாயமற்ற கைதுகள் அல்லது ஊடகவியலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தல் மற்றும் தணிக்கை உட்பட ஊடக உறுப்பினர்களுக்கான கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள்; இணைய சுதந்திரத்தின் மீதான கடுமையான கட்டுப்பாடுகள்; அமைதியான கூட்டம் மற்றும் அமைப்புகளின் சுதந்திரத்தில் கணிசமான குறுக்கீடு; சுதந்திரமான நடமாட்டம் மீதான கட்டுப்பாடுகள்; மோசமான அரசாங்க ஊழல்; பரவலான பாலின அடிப்படையிலான வன்முறை; தொழிலாளர் அமைப்புக்களின் சுதந்திரத்தின் மீதான முறையான கட்டுப்பாடுகள்; மற்றும் குழந்தைத் தொழிலாளர்களின் மோசமான வடிவங்களின் இருப்பு ஆகியவை அடங்கும். இந்த மனித உரிமைச் சிக்கல்களில் சில, இராணுவச் சட்டத்தில் இருந்து உருவானவையாகும். இது ஜனநாயக சுதந்திரம், சுதந்திரமான நடமாட்டம், பத்திரிகை சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் சட்டப் பாதுகாப்புகள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து குறைக்கிறது.

இந்த மோசமான அடக்குமுறையின் கீழ், போக்டன் சிரோடியுக்கின் உயிர், உடனடி ஆபத்தில் உள்ளது. சிறைச்சாலைகளுக்குள் இருக்கும் கைதிகள், உக்ரேனிய பாசிஸ்டுகளால் இட்டுநிரப்பப்பட்ட ஆட்சி நிர்வாகத்தின் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வெளியுறவுத்துறை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசியலமைப்பு சட்டமானது, சித்திரவதை மற்றும் பிற கொடூரமான மற்றும் அசாதாரண தண்டனைகளை தடை செய்திருந்தாலும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அத்தகைய துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. சாதாரண சூழ்நிலையில், காவலில் உள்ள நபர்களிடமிருந்து பொலிசார் கட்டாயப்படுத்தி வாங்கிய வாக்குமூலங்கள் மற்றும் அறிக்கைகளை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆதாரமாக நீதிமன்றங்கள் சட்டப்பூர்வமாக பயன்படுத்த முடியாது. ஆனால், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, இராணுவச் சட்டத்தின் நிறுவனம் இதை அனுமதித்துள்ளது.

போக்டானை ரஷ்ய இராணுவத்தின் ஒரு முகவராக பொய்யாக குற்றஞ்சாட்டுவதற்கான SBU இன் முயற்சியைக் கருத்தில் கொண்டால், குறிப்பாக அச்சுறுத்துவதாக இருப்பது வெளியுறவுத்துறையின் கண்டுபிடிப்பாகும்:

சட்ட அமுலாக்க மற்றும் இராணுவ அதிகாரிகள், பொதுவாக ரஷ்யாவுடன் ஒத்துழைத்ததாகக் கூறப்படும் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, தடுப்புக்காவலில் உள்ள மக்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும் சில சமயங்களில் சித்திரவதை செய்ததாகவும் செய்திகள் உள்ளன.

இந்த அட்டூழியங்களுக்குப் பொறுப்பான கியேவில் உள்ள ஆட்சி, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள, அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் அதிநவீன ஆயுதங்களைக் கொண்டுள்ளது. ஏற்கனவே சுமார் 500,000 உக்ரேனிய படையினர்களின் உயிர்களை குடித்த இந்தப் போருக்கு 60 பில்லியன் டாலர்கள் கூடுதலான நிதியை ஒதுக்க அமெரிக்க காங்கிரஸ் வாக்களித்த வேளையில், போக்டனின் கைது நடந்துள்ளது. பைடென் நிர்வாகமும் லண்டன், பாரிஸ், பேர்லின், ரோம் மற்றும் இந்த பினாமிப் போரின் திசையில் ஈடுபட்டுள்ள பிற தலைநகரங்களில் உள்ள அதன் சகாக்களும், போக்டன் சிரோட்டியுக்கின் தலைவிதிக்கு, கியேவில் உள்ள அவர்களின் முகவர்களை விட குறைவான பொறுப்பாளிகள் அல்ல.

உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் காஸா மக்களுக்கு எதிராக பைடென் நிர்வாகம் மற்றும் நேட்டோவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வருகின்ற குற்றவியல் போரால் நியாயமான முறையில் சீற்றம் அடைந்துள்ளனர். ஆனால், காஸா இனப்படுகொலைக்கு ஒத்துழைக்கும் அதே அரசாங்கங்கள், உக்ரேனில் பினாமிப் போருக்கு நிதியுதவி செய்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காஸா மற்றும் உக்ரேனில் இடம்பெற்றுவரும் வன்முறைகள், அணு ஆயுத பேரழிவால் மனிதகுலத்தை அச்சுறுத்தும் இராணுவ மோதல்களின் உலகளாவிய விரிவாக்கத்தில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரு போர்முனைகளாகும்.

போக்டனின் விடுதலைக்கான போராட்டம் மற்றும் பினாமிப் போருக்கு முடிவு கட்டும் போராட்டமானது, ஏகாதிபத்தியம், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் இன்றியமையாத அங்கமாக பார்க்கப்பட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் போக்டன் சிரோடியுக்கை உடனடியாக விடுவிக்கக் கோரும் உலகளாவிய பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

உலகத் தொழிலாள வர்க்கம் மற்றும் மாணவர் இளைஞர்களுக்கு போக்டன் கைது செய்யப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும், மற்றும் அவரை பாதுகாப்பதற்காக அவர்களை அணிதிரட்ட வேண்டும்.

கிடைக்கக்கூடிய அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்த அறிக்கையை பரவலாகப் பரப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். போக்டனின் விடுதலைக்கு அழைப்பு விடுக்கும் இணையவழிக் கோரிக்கை மனு Change.org இல் நிறுவப்பட்டுள்ளது. இந்த மனுவில் கையெழுத்திட்டு, அவரது விடுதலைக்கான உங்கள் கோரிக்கையை விரிவுபடுத்துவதற்கு தளத்தில் ஒரு அறிக்கையை பதிவிடுமாறும் நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். இந்தப் பிரச்சாரத்தை உங்கள் சக பணியாளர்கள் மற்றும் சக மாணவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். சிறையிலிருந்து போக்டனின் விடுதலைக்கான போராட்டத்தில் நீங்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, உலக சோசலிச வலைத் தளத்தை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

போக்டன் சிரோடியுக் விடுதலை செய்யப்பட வேண்டும்!

Loading