இலங்கை அரசாங்கமும், கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்கள் மீது வறிய மட்டத்திலான சம்பளத்தை திணிப்பதற்கு சதி செய்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

விக்கிரமசிங்க அரசாங்கம், பிராந்திய தோட்டக் கம்பனிகள் (RPCs) மற்றும் இலங்கை தொழிற்சங்கங்கள் என்பன தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (வலது) 8 டிசம்பர் 2024 அன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றுகிறார் [Photo by Sri Lankan President Media Division]

அரசாங்கம் 1,700 ரூபா ($US5.5) நாள் சம்பளத்தை, அதாவது தற்போதைய ரூபா 1,000 வறிய ஊதியத்துக்கு 700 ரூபா அதிகரிப்பை முன்மொழிந்துள்ளது.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் இரண்டு முறைகளை முன்மொழிகின்றன. முதலாவதாக மொத்தம் 1,200 ரூபா நாள் சம்பளம் ஆகும். ஆனால் அது தொழிலாளர்களின் வருகையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கம்பனி நிர்ணயித்த வருகைநாள் எண்ணிக்கையை தொழிலாளர்கள் பூர்த்திசெய்யத் தவறினால், அவர்களுக்கு 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

இரண்டாவது முன்மொழிவு 1,300 ரூபாய் நாள் சம்பளம் ஆகும். ஆனால் அது அதிக உற்பத்தித்திறன் விகிதத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு தொழிலாளி 20 கிலோ தேயிலை கொழுந்துகளை பறித்தால், அவருக்கு கிலோவிற்கு 65 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். தொழிலாளர்கள் அந்த இலக்கை அடையத் தவறினால், அவர்களுக்கு குறைந்த சம்பளமே கிடைக்கும். எவ்வாறாயினும், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 20 கிலோ பச்சை கொழுந்தை பறிப்பது பெரும்பாலும் சாத்தியமற்றது -ஆகக் கூடுதலாக 15 கிலோவில் இருந்து 18 கிலோ வரைதான் பறிக்க முடியும். சிறந்த பருவ காலத்தில் மட்டுமே ஒருவருக்கு 20 கிலோ தினசரி இலக்கை அடயை முடியும்.

பெரும்பாலான தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் சம்பளப் பிரேரணையை பற்றிக்கொண்டிருக்கும் நிலையில், என்ன முடிவெடுத்தாலும் இந்த நிபந்தனைகள் திணிக்கப்படும்.

இந்த முத்தரப்பு சந்திப்புகளின் முடிவுகள் என்னவாக இருந்தாலும், இந்த சம்பள தொகை ஒரு வாழ்வதற்குப் போதுமான சம்பளத்தை வழங்காது அல்லது மிகவும் சுரண்டப்படும் இந்தத் தொழிலாளர்களை துன்புறுத்தும் வறுமையைமையை நிவர்த்தி செய்யாது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இலங்கையில் மிகக் குறைந்த தினசரி சம்பளம் பெறுபவர்களில், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தனியார் துறை ஊழியர்களின் உண்மையான சம்பளம் 2023 நடுப்பகுதியில் 82 புள்ளிகளாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டை அதன் அடிப்படை ஆண்டாகக் கொண்டு 100 புள்ளிகளுக்கு சமமாக கணக்கிடப்படுகிறது.

விளைச்சல் குறைந்துள்ளதாலும், இறப்பர் தொழிலில் வருமானம் வீழ்ச்சியடைவதாலும், இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கத் தயாராக இல்லை என்று தோட்ட முதலாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

2021 ஏப்ரலில், அப்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, தோட்டத் தொழிலாளர்களின் அதிக சம்பளக் கோரிக்கை மற்றும் நாடு தழுவிய வேலைநிறுத்தங்களையும் தடுப்பதற்காக வர்த்தமானி அறிவித்தல் மூலம் 1,000 ரூபா ($US4) தினசரி ஊதியத்தை அறிவித்தார்.

தோட்ட உரிமையாளர் சங்கம் ஆரம்பத்தில் இந்த அற்ப உயர்வை நிராகரித்த போதிலும், 1,000 ரூபா அற்பத் தொகையை செலுத்துவதை தவிர்ப்பதற்காக தினசரி உற்பத்தி இலக்குகளை அதிகரிப்பது உட்பட, பல்வேறு வழிமுறைகளை வகுத்த பின்னர் அதை ஏற்றுக்கொண்டது. ஒரு தொழிலாளி நிர்வாகத்தின் இலக்குகளை அடையத் தவறினால், அவருக்கு 500 முதல் 750 ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படும்.

1,700 ரூபா சம்பளத்திற்கான அரசாங்கத்தின் தற்போதைய பிரேரணையை நிராகரித்த தோட்ட உரிமையாளர் சங்கம், இலங்கையின் விவசாயத் துறையில் பணிபுரியும் ஏனைய தொழிலாளர்களை விட தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய சம்பள நிர்ணய சபை தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் அதிக சம்பளத்தைப் பெறுவதாகக் கூறுகிறது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு (300 ரூபாய் முதல் $US1 வரை) சமீபத்தில் உயர்ந்து வருவதால், தங்களின் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது என்றும், சர்வதேச தேயிலை சந்தை சரிந்து வருகிறது என்றும், உற்பத்தி செலவில் 70 சதவீதம் சம்பளத்துக்கே செலவாகிறது என்றும் தோட்ட உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தோட்டத் தொழிற்சங்கங்கள், அவற்றின் தொடக்கத்திலிருந்தே, வறுமை மட்ட சம்பளத்தை பேணுவதற்கு அரசாங்கங்களுடனும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடனும் எப்போதும் ஒத்துழைத்து வருகின்றன. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைமையிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்சங்கம் ஆகியவை அடங்கும்.

ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தியை அதிகரிக்கவும் இலாபத்தை அதிகரிக்கவும் “வருமானப் பங்கீட்டு முறையை” (RSM) முன்மொழிந்தன. இந்த முறைமையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு சுமார் 1,000 தேயிலை செடிகளைக் கொண்ட ஒரு நிலம் ஒதுக்கப்படும். அதில் அறுவடை செய்யப்படும் கொழுந்துகள் தோட்டக் கம்பனிக்கு விற்கப்படவேண்டும். அந்த நிலத்தைப் பராமரிக்க அவர்களது குடும்பத்தைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. வழங்கப்பட்ட உரம், விவசாயக் கருவிகள், அலுவலகச் செலவுகள் மற்றும் தமது சொந்த இலாபத்தையும் அறுவடையிலிருந்து கழித்த பின்னர், மீதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி, சில தோட்டங்களில் திணிக்கப்பட்ட இந்த மிகவும் சுரண்டல்மிக்க குத்தகை விவசாய முறைமையை தொழிற்சங்கங்கள் ஆதரித்தன.

தோட்டத் தொழிற்சங்கங்கள், கம்பனிகளுக்கும் அரசுக்கும் ஒரு தொழில்துறை பொலிஸாகச் செயல்பட்டு, வறுமை மட்டத்திலான சம்பளம் மற்றும் அதிக வேலைச் சுமைகளைச் சுமத்துவதற்கும் அவற்றுடன் திட்டமிட்டு ஒத்துழைப்பதோடு தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிசாருக்கு உதவி வருகின்றன.

2020 இல், 1,000 ரூபா நாள் சம்பளம் கோரி நடாளவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்களுடன் ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர்.

தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களின் பின்னர், ஓல்டன் தோட்ட முகாமையாளர், தொழிலாளர்கள் தன்னை உடல்ரீதியாக தாக்கியதாக பொய்யாகக் முறைப்பாடு செய்ததில் 22 தொழிலாளர்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட இந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு இன்னும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், கம்பனி 38 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது. இ.தொ.கா. நேரடியாக அவர்களுக்கு எதிரான பழிவாங்கலில் ஈடுபட்டு தொழிலாளர்களின் பெயர் பட்டியலை வழங்கியதுடன் மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் திரைக்குப் பின்னால் ஒத்துழைத்தன.

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு சரியான சுகாதாரம், கல்வி அல்லது வீட்டு வசதிகள் இல்லை மற்றும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் இல்லை. தோட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பிள்ளைகள் மற்றும் அவர்களின் தாய்மார்கள் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் எந்தவொரு வெகுஜனக் கூட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை அல்லது தொழிலாளர்கள் தங்கள் சொந்த கோரிக்கைகளை எழுப்புவதற்கு எந்த வழியையும் வழங்கவில்லை.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சமீபத்தில் தோட்டத் தொழிலாளர்களுடன் அவர்களது ஊதியம் மற்றும் சமூக நிலைமைகள் பற்றிப் பேசினர்.

இலங்கையில் உள்ள பிரன்சுவிக் தோட்ட தேயிலை தோட்டத்தில் லைன் அறைக்கு வெளியே ஒரு தொழிலாளி நிற்கிறார் [Photo: WSWS]

மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியான கிருஷ்ணன் (43), தோட்ட நிர்வாகம் பல தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை இல்லாதொழித்து, அவர்களை தற்காலிக தொழிலாளர்களாக மாற்றியுள்ளது, எனத் தெரிவித்தார். “எங்கள் பிரிவில் நான் உட்பட பதின்மூன்று தொழிலாளர்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“எங்கள் சம்பளம் சாப்பாட்டுக்கு கூட போதாத காரணத்தால், ஏதாவது வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல தொழிலாளர்கள் கொழும்பில் சென்று வேலை செய்வதற்காக, ஓரிரு மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறார்கள்,” என்று கோலிசம்மா கூறினார்.

அவர்கள் கொழும்பில் இருந்து திரும்புவதற்கு சில நாட்கள் தாமதமானால், நிர்வாகம் அவர்களைப் பதிவேட்டில் இருந்து நீக்கிவிட்டு, புதிய மற்றும் தற்காலிக தொழிலாளர்களாகச் சேருமாறு கூறியதாக அவர் விளக்கினார். “இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவுமாறு தொழிற்சங்கங்களிடம் நாங்கள் கேட்டோம். அவர்கள் எங்களைக் குற்றம் சாட்டி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறார்கள்,” என்று கோலிசம்மா விளக்கினார்.

புதிய சம்பள முன்மொழிவுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார். “எனது குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர். போதுமான சத்தான உணவை சாப்பிட எங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 2,000 ரூபாய் தேவை. மருத்துவச் செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் செய்ய வேண்டுமானால், ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் வேண்டும்,” என்றார்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி மாடசாமி முத்துமாலை (50) கொடூரமான வேலை நிலைமைகளை விளக்கினார்.

“நாங்கள் ஓய்வு இடைவேளை இல்லாமல் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை செய்கிறோம். எங்கள் என்றாட தேவைகளை பூர்த்தி செய்ய ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மாதத்திற்கு 30 நாட்கள் வேலை செய்வதற்கு நிர்பந்திக்கப்படுகின்றோம். இதனால் பெண் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் மெலிந்து, நோய்வாய்ப்பட்டவர்கள் போல் தோற்றமளிக்கின்றனர்,’' என அவர் கூறினார்.

ஏற்கனவே தனது தோட்டத்தில் ஓரளவு அறிமுகப்படுத்தப்பட்ட வருமானப் பங்கீட்டு முறையை பற்றி அவர் விளக்கியதாவது: “[இந்தத் திட்டத்தின் கீழ்] அங்கு வேலை செய்பவர்கள் தற்காலிகத் தொழிலாளர்களாகக் கணக்கிடப்படுகின்றனர். அவர்களுக்கு விடுமுறை அல்லது வேறை சலுகைகள் இல்லை.

“பால்மா விலை அதிகம் என்பதால் அதனை வாங்குவதை நிறுத்திவிட்டோம். எனது சம்பளத்திலிருந்து கழிக்கவேண்டியவை அனைத்தும் கழிக்கப்பட்ட பிறகு நான் பெறும் 10,000 ரூபாயில் மற்ற அத்தியாவசியப் பொருட்களைய வாங்குவது கடினம். என் மனைவி கொழும்பில் வேலை செய்கிறார், மாதம் 30,000 ரூபாய் அவளுக்கு சம்பளம் கிடைக்கும். அவள் எங்களுக்கு 20,000 ரூபாய் அனுப்புகிறாள், அது இல்லாவிட்டால், எங்களால் குறைந்தபட்ச செலவுகளைக் கூட சமாளிக்க முடியாது.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 62 தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கும் இடைநீக்கம் செய்ததற்கும் இலங்கை மின்சார சபை நிர்வாகத்தை முத்துமாலை கண்டித்தார். “இது தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல். தோட்டங்களிலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன” என அவர் தெரிவித்தார்.

அரசாங்கம், தோட்ட முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படும் எந்தவொரு சம்பள முன்மொழிவையும் தோட்டத் தொழிலாளர்கள் நிராகரிப்பதோடு உயர்ந்த சம்பளம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை நிலைமைகளுக்கான தங்கள் சொந்த சுயாதீன கோரிக்கையை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அரசாங்கத்தின் நெருக்கடிக்கோ அல்லது கம்பனிகளின் இலாபத்தை உயர்த்துவதற்கோ தோட்டத் தொழிலாளர்கள் பொறுப்பல்ல. தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

  • வாழ்க்கைச் செலவுக்குக் ஏற்ப உத்தரவாதமான மாதாந்த சம்பளம் மற்றும் கண்ணியமான ஓய்வூதியம்.
  • லைன் அறைகளை ஒழித்து, அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு வசதிகளுடன் கூடிய கண்ணியமான வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
  • மற்ற தொழில் துறைகளைப் போலவே சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும்.
  • உயர்தரமான சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளுக்கான உத்தரவாதம் வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காக ஒரு ஐக்கியப் போராட்டத்தை ஒழுங்கமைக்க, தொழிலாளர்கள் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாகவும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியமாகவும் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஒவ்வொரு தோட்டத்திலும் ஸ்தாபிப்பது அவசியமாகும்.

இந்த போராட்டம் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் ஏனைய தொழிலாளர்களுடன் முன்னெடுக்கப்படும் ஒரு பொதுவான போராட்டத்தின் பகுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியிருப்பதோடு தோட்டங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய இராட்சத கூட்டுத்தாபனங்களை தேசியமயமாக்குவது உட்பட சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த, ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும்.

Loading