முன்னோக்கு

COVID-19 பெருந்தொற்றும் 2024 அமெரிக்கத் தேர்தல்களும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

2024 அமெரிக்கத் தேர்தல்களில், கோவிட்-19 பெருந்தொற்று என்ற தலைப்பு இரண்டு பிரதான முதலாளித்துவ வேட்பாளர்களாலும், அத்துடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூன்றாம் தரப்பு பிரச்சாரத்தாலும் கிட்டத்தட்ட முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களான ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரும் மட்டுமே இந்த பெருந்தொற்றுநோயை நடந்து வரும் ஒரு முக்கியமான பிரச்சினையாக அடையாளம் கண்டு, அதைத் தடுக்க ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் பொய்களுக்கு மாறாக, பெருந்தொற்று தொடர்கிறது மற்றும் COVID-19 ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் உள்ள மக்களைப் பாதித்து, கொன்று, பலவீனப்படுத்துகிறது. இப்போது உலகளவில் 28.5 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் உள்ளன. அதே நேரத்தில் உலகளவில் 4,000 க்கும் அதிகமானோர் COVID-19 அல்லது ஆரோக்கியத்தில் அதன் எண்ணற்ற தாக்கங்களால் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இப்போது நெடுங் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன, மேலும் ஒவ்வொரு புதிய அலையிலும் பாரிய தொற்றுநோய்களுடனும் அவர்களின் தரம் அதிகரித்து வருகின்றன.

ஒவ்வொரு மனிதனையும் பாதித்துள்ள மற்றும் உலகளாவிய சமூகத்தை ஆழமாக மாற்றியமைத்துள்ள இந்த உலக வரலாற்று நிகழ்வு குறித்து அனைத்து முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க கட்சிகளும் மௌனமாக இருப்பதற்கு காரணம் என்ன? 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தொற்றுநோய், 2020 அமெரிக்கத் தேர்தல்களில் மையப் பிரச்சினையாக இருந்தது. மிகவும் அப்பட்டமான முதலாளித்துவ-சார்பு கொள்கைகளை அதீத பிற்போக்குத்தனம் மற்றும் விஞ்ஞானத்திற்கு எதிரான குரோதத்துடன் இணைத்த ட்ரம்ப் நிர்வாகத்தின் திகிலூட்டும் விடையிறுப்பு, மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

மட்டுப்படுத்தப்பட்ட முடக்கங்கள் மற்றும் பிற அனைத்து அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளையும் எதிர்க்க ட்ரம்ப் தனது பாசிசவாத ஆதரவாளர்களைத் தூண்டிவிட்ட அதேவேளையில், பைடென், தனது “அறிவியலைப் பின்பற்றுவார்” என்றும் தொற்றுநோயை நிறுத்துவார் என்றும் கூறினார். அக்டோபர் 2020 இல் நடந்த இறுதி விவாதத்தில், 200,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்தபோது, பைடென், “இவ்வளவு இறப்புகளுக்கு காரணமான எவரும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கக்கூடாது” என்று அறிவித்தார். 

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடென் அக்டோபர் 22, 2020 அன்று இறுதி ஜனாதிபதி விவாதத்தில் பங்கேற்கின்றனர் [AP Photo/Chip Somodevilla/Pool via AP]

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பைடன் உடனடியாக பொது முடக்க நடவடிக்கைகளை நிராகரித்து, எந்தவொரு கல்வியாளர்களுக்கும் அல்லது குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பே அனைத்து பொதுப் பள்ளிகளையும் முழுமையாக மீண்டும் திறக்கத் தொடங்கினார். பைடென் பதவியேற்றதிலிருந்து, 720,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர், இது மொத்த 1,186,671 உத்தியோகபூர்வ இறப்புகளில் அதிகமாகும்.

பைடெனின் புதிய நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (சி.டி.சி) இயக்குனர் ரோசெல் வலென்ஸ்கி முகக்கவசங்களை தொற்றுநோயின் “கருஞ்சிவப்பு கடிதம் (Scarlet Letter)” என்று அறிவித்தார் மற்றும் முகக்கவச ஆணைகளை நீக்குவதை ஊக்குவித்தார். ஜூலை 2021 இல் கோவிட்-19 இலிருந்து “சுதந்திரம்” என்று பைடென் முன்கூட்டியே அறிவித்த பிறகு, டெல்டா மாறுபாடு மற்றும் திருப்புமுனை நோய்த்தொற்றுகளின் பரவலை சி.டி.சி மூடிமறைத்தது. 

நவம்பர் 2021 இல் ஓமிக்ரான் மாறுபாட்டின் உலகளாவிய பரவலானது, டிரம்பின் பாசிச “பெருந்தொற்று நோய் எதிர்ப்பு சக்தி” செயற்பட்டியலை முழுமையாக ஏற்றுக்கொள்ள பைடென் நிர்வாகத்தை தூண்டியதுடன், அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் படிப்படியாக நீக்கி, வைரஸ் கட்டுப்படுத்தப்படாமல் பரவ அனுமதித்தது. ஜனவரி 2022 இல், யூஜெனிக் (மரபியல் அடிப்படையில் குழந்தைகளை உருவாக்கும் கோட்பாடு) கருத்தாக்கங்களை ஊக்குவித்த வாலென்ஸ்கி, COVID-19 முதன்மையாக “உடல்நிலை சரியில்லாதவர்களைக்” கொல்கிறது என்ற செய்தியை “ஊக்குவிப்பதாகக்” கருதினார்.

மே 2023 இல், கோவிட்-19 பொது சுகாதார அவசரநிலை பிரகடனம் கைவிடப்பட்டதன் மூலம் தொற்றுநோயின் இயல்புநிலை உச்சக்கட்டத்தை அடைந்தது. இது, அனைத்து தொற்றுநோய் கண்காணிப்பையும் அகற்ற வழிவகுத்ததோடு, மருத்துவ உதவியை பெருமளவில் திரும்பப் பெறுவதற்கும் வழிவகுத்தது. கடந்த ஆண்டில் 19 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை இழந்தனர்.

பைடன் நிர்வாகம் இப்போது தொற்றுநோயின் தற்போதைய ஆபத்துகளை முற்றிலும் புறக்கணிக்கிறது. இதில் நெடுங் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் கட்டுப்பாடற்ற வைரஸ் பரவல் காரணமாக உருவாகி வரும் மிகவும் ஆபத்தான மாறுபாடுகள் எப்போதும் இருக்கும் என்ற அச்சுறுத்தல் ஆகியவை அடங்கும். உத்தியோகபூர்வ விவரிப்பு என்னவென்றால், COVID-19 “எண்டமிக்” உள்ளூர் மற்றும் அடிப்படையில் பாதிப்பில்லாததாக மாறிவிட்டது. முழு கார்ப்பரேட் ஊடகங்களாலும் சித்தரிக்கப்பட்ட இந்த மருட்சியான கற்பனை, 2024 தேர்தல்களில் தொற்றுநோய்க்கான பைடென் நிர்வாகத்தின் அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ட்ரம்ப் அவரது “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம்” என்ற கட்டுக்கதையின் பாகமாக, தொற்றுநோயின் முதல் ஆண்டின் போது அவரின் சொந்த பேரழிவுகரமான விடையிறுப்பை மூடிமறைத்து, அவரது ஜனாதிபதி பதவியை அமெரிக்க வரலாற்றில் ஒரு பொற்காலமாக சித்தரிக்க முனைந்துள்ளார். 

கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே ஜோ பைடென் பிரச்சார நிகழ்வுகளில் தொற்றுநோயை எழுப்பத் தொடங்கியுள்ளார். கிருமிநாசினிகள் அல்லது புற ஊதா ஒளியை செலுத்துவதன் மூலம் கோவிட்-19 க்கு சிகிச்சையளிப்பது குறித்த ட்ரம்பின் மிக தீவிர அறிவியலுக்கு எதிரான அறிக்கைகள் குறித்து மலிவான நகைச்சுவைகளை அவர் உருவாக்கியுள்ளார். ஆனால், பைடெனின் வரலாறு ஜனநாயகக் கட்சியின் மீதான ஒரு பேரழிவுகரமான குற்றப்பத்திரிகையாக நிற்கிறது. அதுவும் அமெரிக்க மக்களின் பாரிய மரணம் மற்றும் பலவீனப்படுத்தலில் அதேயளவுக்கு குற்றவாளியாக உள்ளது. 

பிரதான முதலாளித்துவ கட்சிகளுக்கு வெளியே, முன்னணி மூன்றாவது கட்சி வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் அதிவலது தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரத்தில் இருந்து தொற்றுநோய் குறித்த முழுமையான மௌனம் வரை உள்ளன. 

மிகவும் கட்டுப்பாடற்ற மற்றும் பிற்போக்குத்தனமான விஞ்ஞான-விரோத அரசியலின் கொடியை தாங்கி நிற்பவர் ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் (RFK Jr.) ஆவார். தொற்றுநோய்களின் போது, சமூக ஊடகங்களில் பெரும்பாலான தடுப்பூசி எதிர்ப்பு தவறான தகவல்களுக்குப் பொறுப்பான அவர், “டசின் கணக்கான தவறான தகவல்களின் (Disinformation Dozen)“ உறுப்பினர் ஆவார். பல தசாப்தங்களாக தடுப்பூசிகள் குழந்தைகளிடையே மன இறுக்கம் மற்றும் பிற வளர்ச்சிக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன என்ற தவறான கூற்றுக்களின் முன்னணி வழங்குநராக அவர் இருந்து வருகிறார். 

ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் அக்டோபர் 9, 2023. [Photo by TeamKennedy24]

தொற்றுநோய்களின் போது, RFK.Jr இந்த பிரச்சாரத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் சென்றார். தடுப்பூசி ஆணைகள் மற்றும் COVID-19 பரவுவதைத் தடுக்க தேவையான பிற அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை எதிர்த்து ஏராளமான பேரணிகளை ஏற்பாடு செய்தார். பெரும்பாலான அரசியல் ஸ்தாபனம் மற்றும் ஊடகங்களைப் போலவே, சீன-விரோத இனவெறியைத் தூண்டிவிட்டு, நேரடியாக சீனாவுடன் இராணுவ மோதலுக்கு களம் அமைக்கும் நோக்கத்தைக் கொண்ட வுஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டையும் அவர் ஊக்குவித்தார். 

அடுத்த முன்னணி மூன்றாம் கட்சி வேட்பாளரான கார்னெல் வெஸ்ட், தடுப்பூசிகள் குறித்து முற்றிலும் பிற்போக்குத்தனமான கொள்கையை ஏற்றுக்கொண்டதோடு, விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானத்திற்கு எதிரான வலதுசாரி பிரச்சாரத்திற்கு தன்னை மாற்றியமைத்துக் கொண்டுள்ளார். வெஸ்ட் தனது பிரச்சார வலைத் தளத்தில், “தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் ஒரு கூட்டாட்சி குழுவை கூட்ட வேண்டும்” என்று தனது கோரிக்கைகளில் ஒன்றாக பட்டியலிடுகிறார். 

என்ன சிடுமூஞ்சித்தனம் என்ன கோழைத்தனம்! கொப்பளிப்பான், காய்ச்சல், தட்டம்மை, சளி, ரூபெல்லா மற்றும் பிற நோய்களுக்கான பல தசாப்தங்கள் பழமையான தடுப்பூசிகளின் பாதுகாப்பை வெஸ்டின் “நிபுணர் குழு” ஆய்வு செய்யுமா? 1980ல் பெரியம்மை நோயை ஒழித்த தடுப்பூசியின் பாதுகாப்பை அவர் திரும்பிச் சென்று ஆராய்வாரா? தடுப்பூசி விகிதங்கள் குறைந்து வருவதால் அமெரிக்காவில் தட்டம்மை பரவி வரும் சூழலில் வெஸ்ட் இந்த நிலைப்பாட்டை பாதுகாக்கிறார். இது அவர் உரையாற்றும் சமூக பின்தங்கிய தன்மையின் வெளிப்பாடாகும். 1960 களில் இருந்து ஒரு சொற்றொடரை புதுப்பிக்க, வெஸ்ட் தீர்வின் ஒரு பகுதி அல்ல, அவர் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்கின்றார். 

கடந்த செப்டம்பரில் தீவிர வலதுசாரி நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோருடன் வெஸ்ட் அளித்த பேட்டியில், “உங்களுக்கும் RFK ஜூனியருக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் கவலைகள் நிச்சயமாக நன்கு நிறுவப்பட்டவை என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார். டிசம்பர் 13, 2021ல், தடுப்பூசி ஆணைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளுக்கான கட்சியின் ஆதரவைக் கண்டித்த பசுமைக் கட்சியின் தேசிய கருப்பு காகஸின் (Black Caucus) வலதுசாரி அறிக்கையுடன் அவர் உடன்படுகிறாரா என்று கேட்டதற்கு, வெஸ்ட், “எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தால், நான் கருப்பு காகஸுடன் அதிகம் சாய்ந்திருப்பேன்” என்று கூறினார். 

சுயேச்சையாக போட்டியிடுவதற்கான பசுமைக் கட்சியின் போட்டியில் இருந்து வெஸ்ட் விலகிய பின்னர், டோருடனான வெஸ்டின் நேர்காணலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், ஜில் ஸ்டெய்ன் கடந்த நவம்பரில் தனது ஜனாதிபதி பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்த நேர்காணல் குறித்து அவர் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை, மேலும் அவரது பிரச்சார வலைத் தளம் தொற்றுநோயை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. 

கிம் ஐவர்சனுடனான ஒரு நேர்காணலில், தடுப்பூசி ஆணைகள் குறித்த பசுமைக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வெஸ்ட்டைப் போலவே ஸ்டெயினிடமும் அதே கேள்வி கேட்கப்பட்டது. இதிலிருந்து தன்னை விலக்கி, தடுப்பூசி எதிர்ப்பு உணர்வுக்கு முறையிட்ட ஸ்டெய்ன், “ஆணைகள் செயல்படக்கூடியவை அல்ல, அவை தவறாக இருக்கலாம், சில வழிகளில் அவை தவறாக இருந்தன” என்று கூறினார். வுஹான் ஆய்வக பொய்க்கு தனது ஆதரவையும் அவர் தெரிவித்தார், “கோவிட் எங்கிருந்து வந்தது என்ற முழு பிரச்சினையும் கவனிக்கப்படவில்லை, அது கவனிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

அவர் ஒரு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற மருத்துவராக இருந்தாலும், தடுப்பூசிகளில் இருந்து பாதரசம் நச்சுத்தன்மையைப் பற்றிய ஆதாரமற்ற கூற்றுகளை ஊக்குவிப்பது உட்பட, தொற்றுநோய்க்கு முன் தடுப்பூசி எதிர்ப்பு சொல்லாட்சியை ஸ்டெய்ன் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார். 

2004ல் தொழிலாளர் உலகக் கட்சியிலிருந்து (WWP) பிரிந்த ஸ்ராலினிசக் கட்சியான சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சியின் (PSL) பிரச்சாரமும் இந்த தொற்றுநோயை பெருமளவில் புறக்கணித்துள்ளது. அதன் பிரச்சார இணையதளம் கடந்த காலங்களில் ஏற்பட்ட தொற்றுநோயை சுருக்கமாக மட்டுமே குறிக்கிறது. மேலும் PSL ஜனாதிபதி வேட்பாளர் கிளாடியா டி லா குரூஸ் வெளியிட்ட தொற்றுநோய் பற்றிய வீடியோ, கோவிட் எதிர்ப்பு ஆர்வலர்களால் பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது. இதுபற்றி PSL கருத்து கூறாமல் வீடியோவை விரைவாக நீக்கியது மற்றும் தொற்றுநோயை முற்றிலும் புறக்கணிக்கும் அதன் நடைமுறைக் கொள்கையை மீண்டும் தொடங்கியது. 

விஞ்ஞானரீதியில் அடித்தளமிட்ட, ஒரு சோசலிச பொது சுகாதார திட்டத்தை முன்னெடுத்துவரும் ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் மட்டுமே இந்த பெருந்தொற்றுநோயை அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருப்பொருளாக வைத்துள்ள ஒரே வேட்பாளர்கள் ஆவர். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பல அறிக்கைகள் மற்றும் வீடியோக்களில், இரு வேட்பாளர்களும் முகக்கவசம் அணிவதை வாதிட்டனர். அதே நேரத்தில் உலகளவில் COVID-19 ஐ அகற்ற ஒரு பரந்த மூலோபாயத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

ஜெர்ரி வைட் மற்றும் ஜோசப் கிஷோர்  [Photo: WSWS]

மார்ச் 15, நீண்ட கோவிட் விழிப்புணர்வு தினத்தில் வெளியிடப்பட்ட பிரச்சார அறிக்கையில், கிஷோர் எழுதினார்: 

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) எமது தேர்தல் பிரச்சாரமும், பெருந்தொற்றை ஒழிப்பது சாத்தியமானதும் அவசியமானதும் ஆகும் என வலியுறுத்துகின்றன. உலகளாவிய ஒருங்கிணைந்த ஒழிப்பு மூலோபாயத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம், இதில் முழு உலக மக்களும் ஒற்றுமையுடனும், பரந்த அடிப்படையிலான பொது சுகாதார திட்டத்தை செயல்படுத்துவதற்கான கூட்டு உறுதியுடனும் செயல்படுகிறார்கள். 

அத்தகைய மூலோபாயத்தில் வெகுஜன பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல், உயர்தர முகக் கவசங்களின் உலகளாவிய பயன்பாடு மற்றும் ஹெப்பா (HEPA) வடிகட்டிகள் மூலம் சுத்தமான உட்புற காற்றை வழங்க அனைத்து பொது கட்டிடங்களையும் புதுப்பித்தல் மற்றும் தொலைதூர புற ஊத சாதனங்களை பாதுகாப்பாக செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும். நீண்ட கால COVID பற்றிய ஆராய்ச்சிக்கான நிதி கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் முறையான விஞ்ஞான கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். 

எவ்வாறிருப்பினும், இந்த தொற்றுநோயின் நான்காண்டுகளுக்குப் பின்னர், அனைத்து பொது சுகாதார செலவினங்களையும் பணவெறி பிடித்த நிதியியல் செல்வந்த தட்டுக்களின் தணியாத இலாப நலன்களுக்கு அடிபணியச் செய்கின்ற உலக முதலாளித்துவத்தின் கீழ் இதுபோன்றவொரு மூலோபாயம் ஒருபோதும் எழாது என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதன் மூலமும் மற்றும் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்ய போராடும் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமும் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். 

இந்த தொற்றுநோய்க்கு வெவ்வேறு அரசியல் போக்குகளின் விடையிறுப்பானது, உண்மையான சோசலிஸ்டுகள் யார் என்பதையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை யாருடைய வேலைத்திட்டம் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. தொற்றுநோயை மூடிமறைக்க ஊடகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அரசியலின் முயற்சிகள் இருந்தபோதிலும், அதன் அழிவுகரமான மற்றும் தொடர்ந்து வரும் விளைவுகள் வெகுஜனங்களின் நனவைத் தொடர்ந்து மாற்றும், மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் அரசியல் தீவிரமயமாக்கலுக்கு பங்களிப்பை வழங்கும். இந்த எதிர்ப்பு உலகளவில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், சிதைந்து வரும் முதலாளித்துவ அமைப்புமுறையை சோசலிச முறையில் தூக்கிவீசுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். 

Loading