இலங்கையின் எதிர்க்கட்சியான ஜே.வி.பி.யின் தலைவரின் இந்திய பயணம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.), அதன் பாராளுமன்ற முன்னணியான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) ஆகியவற்றின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க, உத்தியோகபூர்வ ஐந்து நாள் பயணமாக திங்கட்கிழமை இந்தியாவுக்குப் பயணமானார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளருமான விஜித ஹேரத், தே.ம.ச. செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் சென்றிருந்தனர்.

2024 பெப்ரவரி 5 அன்று அனுரகுமார திஸாநாயக்க டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடிய போது [Photo by Facebook/Sunil Handunneththi]

பிராந்தியம் முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் பிற்போக்கு ஆட்சிகளுடன் உறவுகளை வளர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியான இந்தப் பயணம், ஏகாதிபத்திய-சார்பு ஜே.வி.பி./தே.ம.ச.யின் மேலும் வலதுசாரி மாற்றத்தைக் குறிக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதமானவர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று இலங்கை சுகாதாரக் கொள்கை நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு வெளிவந்த பின்னணியிலேயே திஸாநாயக்கவை புதுடில்லி அழைத்தது. கருத்துக்கணிப்பின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய சாத்தியமான வேட்பாளர்களை விட திஸாநாயக்க கணிசமான அளவில் முன்னிலையில் உள்ளார். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

இந்தியச் பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஜே.வி.பி.யானது 'கடும் போக்கு மார்க்சிசப் பாதையில்' இருந்து 'நெகிழ்வான மார்க்சிசத்திற்கு' மாறிவிட்டதாக ஊடகப் பிரிவுகள் கூறுகின்றன, அல்லது இதே போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளன. மற்றவர்கள் ஏனையவை ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு பேரினவாதத்தை சுட்டிக் காட்டின; இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களை 'இந்திய விரிவாக்கத்தின் ஐந்தாம் படையின் கருவி' என்று முன்னர் ஜே.வி.பி. கண்டனம் செய்து வந்துள்ளது.

ஜே.வி.பி. ஒருபோதும் ஒரு மார்க்சிஸ்ட் கட்சியாக இருக்கவில்லை, மாறாக 1960 களில் சிங்கள ஜனரஞ்சகவாதம், மாவோவாதம் மற்றும் காஸ்ட்ரோவாத விவசாயி கெரில்லாவாதத்தின் நச்சு கலவையை அடிப்படையாகக் கொண்ட, ஒரு தீவிர தேசியவாத இயக்கமாக வெளிப்பட்டது. தீவின் தெற்கில் அதிருப்தியடைந்த சிங்கள இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்து முன்னெடுக்கப்பட்ட அதன் 'ஆயுதப் போராட்டங்கள்' ஒன்றன் பின் ஒன்றாக இரத்தக்களரி பேரழிவை விளைவித்தன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்க தீவின் வடக்குக்கு 'அமைதி காக்கும் படையை' அனுப்பிவைக்க கைச்சாத்திடப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1980களில் ஜே.வி.பி.யின் வலது நோக்கிய நகர்வு துரிதப்படுத்தப்பட்டது.

இந்த உடன்படிக்கையை பேரினவாத அடிப்படையில் கண்டனம் செய்த ஜே.வி.பி., இந்தியா நாட்டைப் பிரிக்கத் திட்டமிடுவதாகக் கூறி அதற்கு எதிராக குண்டர் தாக்குதல்கள் மற்றும் படுகொலை வன்முறைப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் சமூக அமைதியின்மைக்கு எதிராக ஒரு கொடூரமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதன் பேரில் அரசாங்கம் ஜே.வி.பி.யின் வன்முறையை பற்றிக்கொண்டது. இதில் சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர்.

ஜே.வி.பி. தலைமைத்துவம் 1994ல் மீண்டும் ஒன்றுகூடி, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன், அதன் வெற்று சோசலிச வாய்ச்சவடால்களை பெருமளவில் கைவிட்டுவிட்டு, புலிகளுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்தை ஆதரித்துடன், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்ற ஒரு பாராளுமன்றக் கட்சியாக தன்னை மாற்றிக்கொண்டது.

போருக்கான அதன் ஆதரவு மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களில் அதன் பங்கேற்பு அல்லது அரசியல் ஆதரவளிப்பினால் மதிப்பிழந்து போன ஜே.வி.பி. 2015 இல் தே.ம.ச.யை ஒரு பாராளுமன்ற முன்னணியாக ஸ்தாபித்தது. தே.ம.ச. ஆனது கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், சில கலைஞர்கள், சிறு வணிகர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் ஜே.வி.பி.யுடன் இணைந்த அமைப்புக்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. ஜே.வி.பி./தே.ம.ச., அமெரிக்கா உட்பட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளினதும், அதே போல் பெரிய பிராந்திய வல்லரசான இந்தியாவினதும் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம், திஸாநாயக்கவை ஐந்து நாள் சுற்றுப்பயணத்திற்கு அழைக்க முடிவுசெய்தமை, அடுத்த இலங்கை ஜனாதிபதியாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் 'இந்தியா முதலில்' என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும்-அதாவது, புது டெல்லியின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களின் பாதையில் நிற்க வேண்டும், என்பதைத் தெளிவுபடுத்துவதற்கே ஆகும்.

சமீபத்தில் நடந்த மாலைத்தீவு தேர்தலில், இந்திய ஆதரவு அதிபரான இப்ராகிம் முகமது சோலி பதவி நீக்கம் செய்யப்பட்டு, சீன சார்பு முகமது முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில், இலங்கையின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையில் கணிசமான செல்வாக்கை உருவாக்கியுள்ள இந்தியா, தனது உறவுகளைப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆர்வமாக உள்ளது.

திசாநாயக்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் பெருவணிகத்தின் ஒரு பகுதியினர் உட்பட சிரேஷ்ட அரசாங்கப் பிரமுகர்களுக்கும் இடையே அடுத்தடுத்த சந்திப்புகளை நடத்த மோடி அரசாங்கம் நேரம் ஒதுக்கியது.

திசாநாயக்கவுடனான சந்திப்பிற்குப் பிறகு, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், 'எங்கள் இருதரப்பு உறவுகள் பற்றியும் அது மேலும் ஆழமடைவதன் மூலம் பரஸ்பர நன்மைகள் பற்றியும் நல்ல கலந்துரையாடல் நடத்தப்பட்டது,' என குறிப்பிட்டிருந்தார். புதுடெல்லியானது அதன் அயல் நாட்டுக்கு முதலிடம், SAGAR [பாதுகாப்பு, பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் அபிவிருத்தி] ஆகிய கொள்கைகளுடன், 'இலங்கைக்கு நம்பகமான மற்றும் விசுவாசமான பங்காளியாக' தொடர்ந்து இருக்கும் என்று அமைச்சர் வலியுறுத்தினார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெய்சங்கர் மற்றும் ஏனைய சிரேஷ்ட இந்திய அதிகாரிகளுடன் திஸாநாயக்க என்ன கலந்துரையாடினார் என்பது பற்றி அதிகம் அறியப்படாத நிலையில், ஜே.வி.பி. தலைவர் டிசம்பர் 9 அன்று ஹிந்துவிற்கு அளித்த பேட்டியில் அறிவித்ததாவது: 'எங்கள் நெருங்கிய அயல் நாடான இந்தியா ஒரு பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நாம் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றி எப்போதும் அக்கறை காட்டுவோம்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான பங்காளியான மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கான வாஷிங்டனின் இராணுவக் கட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள புதுடெல்லியின் பக்கம் நிற்பதற்கான தனது விருப்பத்தை திஸாநாயக்க ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார். கடந்த ஆண்டு, இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்க மோடி அரசாங்கத்துடன் ஒரு 'கூட்டு நோக்க' அறிக்கையில் கையெழுத்திட்டார். இது இந்திய முதலீடுகளை மேம்படுத்துதல், நிதி உதவி வழங்குதல் மற்றும் அவர்களின் நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை சுட்டிக்காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

புதனன்று, இந்திய அதிகாரிகள் திஸாநாயக்க, குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்குச் சென்று, மாநில முதல்வர் மற்றும் உள்ளூர் பெருவணிகப் பிரமுகர்களைச் சந்திக்கவும், 'குஜராத் மாதிரி' பற்றிய விளக்கக்காட்சியைப் பார்க்கவும் ஏற்பாடு செய்தனர்.

ஜே.வி.பி. இணையத்தளமான லங்காறுத், குஜராத் மாதிரியை 'சந்தை-தலைமையிலான' பொருளாதார சீர்திருத்த திட்டமாக விவரிக்கும் ஒரு கட்டுரையை வெளியிட்டது. உண்மையில், குஜராத் மாதிரி என்பது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை வணிக அதிபர்களுக்கு தனியார்மயமாக்குவதன் மூலம், பெருவணிக இலாபத்தை பெருக்கும் ஒரு கொடூரமான அபிவிருத்திக் கொள்கையாகும். இப்போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி, இந்த 'சந்தை-தலைமையிலான' மாதிரியால் பயனடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.

2002ல், மோடி குஜராத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு, அவரும் அவரது இந்து அடிப்படைவாத அரசியல்வாதிகளது கும்பலும் மாநிலம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியதில், சுமார் 2,000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்வேறு எதேச்சதிகார சக்திகளைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும் இந்தத் தாக்குதல்களுக்கு எதிரான ஏனைய எதிர்ப்பையும் கொடூரமாக நசுக்கி, மோடி குஜராத் மாதிரியை செயல்படுத்தத் தொடங்கினார். 2014ல் இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோடி ஈவிரக்கமின்றி நாடு முழுவதும் அதே 'சந்தை தலைமையிலான' கொள்கைகளை அமல்படுத்தினார்.

ஜே.வி.பி.யும் அதன் தே.ம.ச. பாராளுமன்ற முன்னணியும், சிங்கப்பூரும் வியட்நாமும் ஏற்றுக்கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை இலங்கையை 'அபிவிருத்தி' செய்வதற்கான மாதிரிகள் என்று முன்னர் பாராட்டியுள்ளன. சாராம்சத்தில், இந்த மாதிரிகள் சகலதும் அனைத்து உழைக்கும் மக்களையும் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பெருவணிகத்தின் இலாபங்களைக் கொழுக்க வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதன் இறுதி வடிவம் எதுவாக இருந்தாலும், திசாநாயக்க இலங்கையில் திணிக்கத் தயாராகும் வேலைத்திட்டத்தின் அடித்தளங்கள் இவைதான்.

அதன் பங்கிற்கு, தே.ம.ச./ஜே.வி.பி., திசாநாயக்கவின் இந்திய விஜயத்தையும் அவரது உயர்மட்ட கலந்துரையாடல்களையும் அவரது கட்சிக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாகவும் அதை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் சான்றாகவும் செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை வெளியிட்டுள்ளது.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், அதனுடன் இணைந்த வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொது சுகாதாரத்திலும் ஏனைய அத்தியாவசிய சேவைகளிலுமான சரிவு சம்பந்தமாக இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் கோபம் கொதிநிலையில் உள்ளது.

தே.ம.ச./ஜே.வி.பி. இந்த எழுச்சி பெறும் வெகுஜன எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று தனது சொந்த ஆட்சியை ஸ்தாபிக்க சுரண்டிக்கொள்வதற்காக இழிந்த முறையில் முயற்சிக்கும் அதே வேளை, அது அதே காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை விக்கிரமசிங்கவை விட மோசமாக இரக்கமின்றி அமுல்படுத்தும். மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளைப் போலவே, ஜே.வி.பி.யும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

கடந்த மாதம், பீட்டர் புரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தூதுக் குழு அதிகாரிகள், ஜேவிபியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஜே.வி.பி. தலைவர்களைச் சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் தூதுவர்களோ அல்லது ஜே.வி.பி. தலைவர்களோ தங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் பற்றி எதையும் வெளிப்படுத்தவில்லை.

ஜனவரி 8 அன்று, தே.ம.ச.யின் முதலாளித்துவ சார்பு பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைத்து சியாத தொலைக்காட்சியில் திஸாநாயக்க தோன்றினார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தே.ம.ச. அரசாங்கம் பணக்காரர்களின் செல்வத்தைக் கைப்பற்றுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. கோபத்துடன் கேள்வியை நிராகரித்த திசாநாயக்க, இலங்கையின் மிகப்பெரிய கூட்டுத்தாபனங்களில் ஒன்றான LOLC குழுமத்தையும் தென்னாபிரிக்காவில் அதன் முதலீட்டைப் பாராட்டினார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷில் முதலீடு செய்துள்ள இலங்கை நிறுவனங்களைப் பாராட்டிய திஸாநாயக்க, 'இந்த தொழில்முனைவோர் எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்' என்று கூறினார். எதிர்கால தே.ம.ச. அரசாங்கத்தின் பணி, அத்தகைய நிறுவனங்களை ஊக்குவிப்பதும், அவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குவதும், அவற்றுக்கான சந்தைகளைக் கண்டுபிடிப்பதும் ஆகும், என அவர் தெரிவித்தார்.

இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதுதான் உழைக்கும் மக்களுக்கு திஸாநாயக்க தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறிய செய்தி: “சிறிது காலத்திற்கு நாம் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால், அதைச் செய்ய வேண்டும். வலிமிகுந்த நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவோம். இந்த இலாப உந்துதல், 'சந்தை தலைமையிலான' திட்ட நிரலுக்கு இணங்க, ஜே.வி.பி. தேவையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தை ஒழுக்கப்படுத்துவதற்கும் அதன் தொழிற்சங்கங்களை தயார்படுத்துகிறது.

நவம்பர் தொடக்கத்தில் அகில இலங்கை துறைமுகத் தொழிலாளர் பொதுச் சங்கத்தில் உரையாற்றிய சிரேஷ்ட ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர் வசந்த சமரசிங்க, 'துறைமுக அமைச்சர் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்... நாட்டிற்கு நல்ல உற்பத்தித் திறனை வளர்க்கும் பொறுப்பு தொழிலாளர்களுக்கு உள்ளது,' என அறிவித்தார். எளிமையான மொழியில், தொழிற்சங்கங்கள் உற்பத்தியை அதிகரிக்க அரசுடன் இணைந்து செயல்படுவதோடு இந்தக் கொள்கைகளை எதிர்க்கும் அனைத்து தொழிலாளர்களையும் வேட்டையாடும்.

2023 ஒக்டோபர் 19 அன்று ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இடதுபுறத்தில் இருந்து, அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரியான மேத்யூ ஹின்சன், தூதுவர் ஜூலி சங், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத். [Photo by X/Twitter @anuradisanayake]

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜே.வி.பி. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் கீழ்மட்ட இராணுவத்தினரை 'முப்படைகளின் கூட்டுக்கு' அணிதிரட்டியுள்ளது. இது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் மாநாடுகளை நடத்தியது. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் தளபதியுமான அருண ஜயசேகர எதிர்கால தே.ம.ச. அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவார் என திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் இவ்வாறான துணை இராணுவப் படையை ஸ்தாபிப்பது இலங்கையின் எந்தவொரு முதலாளித்துவக் கட்சியும் இதற்கு முன்னர் செய்திராத ஒன்று. திசாநாயக்க, ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் தயாராகி வருகின்றனர் என்ற ஒரு கூர்மையான எச்சரிக்கையை தொழிலாள வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கும் விடுக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்வைத்துள்ள வேலைத்திட்டத்திற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் போராடுவதற்கும் அதன் அணிகளில் சேருவதற்குமான அவசரத்தை இந்த அனைத்து முன்னேற்றங்களும் வலியுறுத்துகின்றன.

ஜே.வி.பி. மற்றும் அதன் தே.ம.ச. பாராளுமன்ற முன்னணி உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு புரட்சிகர மார்க்சிச முன்னோக்கை முன்வைத்துள்ளது. அதன் வேலைத்திட்டம் ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டிய லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக அணிதிரட்டவும், முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களை தொழிலாளர்கள் பக்கம் வெல்லவும் ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் மற்றும் பிரதான பொருளாதார மையங்களிலும் தொழிலாளர்களின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்துள்ளோம்.

விக்கிரமசிங்க ஆட்சியை வீழ்த்துவதற்காக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை அணிதிரட்டுவதற்கான வழிமுறையாக, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்காக இந்த நடவடிக்கை குழுக்கள் போராட வேண்டும். இது ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கும் சோசலிச மற்றும் அனைத்துலகவாத கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் வழி திறக்கும்.

Loading