இலங்கை மின்சார ஊழியர்கள் பழிவாங்கப்படுவதை நிறுத்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில், 66 இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்களின் வேலை இடைநிறுத்தம் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், நிறுவன முகாமைத்துவம் வேலை நீக்கம் உட்பட கொடூரமான தண்டனைகளை விதிக்கத் தயாராகி வருகிறது. அவர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது அல்லது அவர்களுக்கு வேறு தண்டனை கொடுக்கக் கூடாது என்பதற்கு 'விளக்கம்' கேட்டு, 62 ஊழியர்களுக்கு குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்டுள்ளது.

7 பெப்ரவரி 2024 அன்று களனிதிஸ்ஸ மின் நிலையத்துக்கு அருகில், 66 தொழிலாளர்களை அரசாங்கம் பழிவாங்கியதற்கு எதிராக இ.மி.ச. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [Photo by CEB workers]

நிறுவனத்தை தனியார் மயமாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து, ஜனவரி 3 அன்று தொடங்கிய மூன்று நாள் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சக ஊழியர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இ.மி.ச. தொழிலாளர்களே இவ்வாறு பழிவாங்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 1980 இல், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கம், அதன் கொடூரமான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், வேலைநிறுத்தம் செய்த சுமார் 100,000 அரச ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. நான்கரை தசாப்தங்களுக்குப் பின்னர், விக்கிரமசிங்க ஆட்சியானது அதே சட்டத்தைப் பயன்படுத்தி இ.மி.ச. ஊழியர்களை தண்டிக்கத் தயாராகிறது.

2023 மார்ச்சில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், இராணுவத்தை நிலைநிறுத்தியும் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை மீறியதற்காக 20 தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இடைநிறுத்தியும் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் நசுக்கப்பட்டது. பின்னர், அவர்கள் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டாலும் கூட, அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்கிறன.

இ.மி.ச. மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், விக்கிரமசிங்க ஆட்சியானது தனியார்மயமாக்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட ஏனைய சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துகிறது என்பதை தெளிவுபடுத்துகிறன. விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், இ.மி.ச. முகாமைத்துவம், தொழிலாள வர்க்கம் தொழிற்துறை போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையை 'குற்றமாக' ஆக்கியுள்ளது.

இந்த மாபெரும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டானது (CWAC), துறைமுகங்கள், பெருந்தோட்டங்கள், புகையிரதம், சுகாதாரம், கல்வி மற்றும் ஆடைத் தொழில்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் உள்ள நடவடிக்கைக் குழுக்களின் கூட்டணியாகும். இந்த 66 தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, இந்த தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் தொழிலாளர்களை அணிதிரட்டி, பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்வது உட்பட தொழில்துறை நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்துகிறது.

தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டானது இ.மி.ச. முகாமைத்துவத்தினால் எழுதப்பட்ட பல கடிதங்கள் மற்றும் குற்றப்பத்திரிகைகளைப் படித்தது. இந்த ஜனநாயக விரோத தாக்குதலின் நஞ்சுத் தன்மையை அனைத்து தொழிலாளர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சில விவரங்களை கீழே வெளியிடுகிறோம்.

கடிதத்தில் பெயரிடப்பட்ட தொழிலாளர்கள், ஒரு விசாரணையைக் கேட்டும் அத்தோடு, அவர்கள் ஏன் வேலையில் இருந்து நீக்கப்படக்கூடாது அல்லது வேறு தண்டனையை அனுபவிக்கக்கூடாது என்பதை விளக்கியும், 14 நாட்களுக்குள் முகாமைத்துவத்திற்கு பதிலளிக்க வேண்டும், என்று அந்தக் கடிதங்கள் கோருகின்றன. அந்த காலப் பகுதிக்குள் பதிலளிக்கத் தவறிய எந்தவொரு ஊழியரும் குற்றவாளியாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவார், என்று இ.மி.ச. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முதல் குற்றச்சாட்டு, ஜனவரி 3, 4 மற்றும் 5 அல்லது இந்த காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மின் கட்டணம் செலுத்தும் பிரிவுகளை மூடியதன் மூலம், அந்த தொழிலாளி 'பாரதூரமான தவறான நடத்தையில்' ஈடுபட்டதாக மேற்கோள் காட்டி, அங்கு வேலை செய்யும் காசாளருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் ஆகும்.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 'அத்தியாவசிய சேவையாக' அறிவிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத் துறையில் வேலைக்குச் செல்லாமை 'அதன் விதிகளை மீறியதற்கான கடுமையான தண்டனைகளை' உள்ளடக்கியுள்ளது என்று இரண்டாவது குற்றச்சாட்டு கூறுகிறது. அதே காலகட்டத்தில் வேலைக்கு வராமல் இருப்பதும் அனைத்து ஊழியர்களின் விடுமுறையை இரத்து செய்யும் முந்தைய நிர்வாக சுற்றறிக்கையை மீறுவதும் குற்றமாகும் என்றும் அது கூறுகிறது.

மற்றொரு குற்றச்சாட்டில், பெயர் குறிப்பிடப்பட்ட தொழிலாளி, இ.மி.ச.க்கு பணப் பங்களிப்புகளைப் பெறாமல் செய்ததன் மூலம் நிறுவனத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டுகிறது. எந்த ஒரு ஊழியரும் மேற்கூறிய குற்றங்களில் ஒன்றை அல்லது அனைத்தையும் செய்திருந்தால், அது நிறுவனத்துடன் நல்ல நம்பிக்கையை மீறுவதாகும், என மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறுகிறது. இலக்கு வைக்கப்பட்ட தொழிலாளர்கள், இ.மி.ச. பொது முகாமையாளர் அங்கீகரித்தால் மட்டுமே, தங்கள் பாதுகாப்புக்காக மற்றொரு இ.மி.ச. அலுவலரை நியமிக்கவோ அல்லது ஒரு வழக்கறிஞரை வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவார்கள், என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சட்டத்தின் கீழ், வேலைநிறுத்தங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளை பாதிக்கும் அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதற்கு இணங்காத தொழிலாளர்கள் 'ஒரு நீதவானின் முன் சுருக்கமான விசாரணைக்குப் பின்பு' தண்டிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்ட எவருக்கும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான 'கடுமையான சிறைத்தண்டனை' அல்லது 2,000 முதல் 5,000 ரூபாய் ($US11–$US25) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். தண்டிக்கப்பட்ட எவரினதும் 'அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்' அரசால் பறிமுதல் செய்யப்படலாம், மேலும் அவரது பெயர் 'தொழில் அல்லது தொழில் வாப்புக்காகப் பராமரிக்கப்படும் எந்தப் பதிவேட்டில் இருந்தும்' நீக்கப்படும். 'செயல்பாட்டில் அல்லது பேச்சு மூலம் அல்லது எழுத்து மூலம்' யாரையும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று தூண்டுதல் அல்லது ஊக்குவித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் இதேபோல் தண்டிக்கப்படுவார்கள்.

நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்பனை செய்வது உட்பட, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வர்க்கப் போர் நடவடிக்கைகளாலேயே 66 இ.மி.ச. தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வருமான வரி மற்றும் பெறுமதிசேர் வரிகள், தண்ணீர் மற்றும் மின்சார கட்டண உயர்வுகள், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவிலான கடுமையான வெட்டுக்களும் இந்த சிக்கன திட்டத்தில் உள்ளடங்கும்.

இடைநிறுத்தப்பட்ட இ.மி.ச. ஊழியர் ஒருவர் சரியாகக் கூறியது போல், 'இந்த பிரதான நிறுவனத்தை [இ.மி.ச.] தனியார்மயமாக்க அனுமதித்தால் மற்றும் அதன் 22,000 தொழிலாளர்களின் எதிர்ப்பை தோற்கடித்தால், அது அரசாங்கம் ஏனைய அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை எளிதாக்கும்.'

2024 ஜனவரி 4 அன்று கொழும்பில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது. [Photo: WSWS]

பாதிக்கப்பட்ட 66 தொழிலாளர்களைப் பாதுகாப்பது என்பது இ.மி.ச. ஊழியர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல, தனியார்மயமாக்கல் என்னும் விற்பனைத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் போராட்டமாகும். இந்தத் தாக்குதல்களைத் தொடர அனுமதித்தால், அது அரசுக்குச் சொந்தமான துறையில் உள்ள சுமார் அரை மில்லியன் தொழிலாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அது வேலை அழிப்பு, ஊதிய வெட்டை தினிப்பதோடு கடினமாக போராடி வென்ற வேலை நிலைமைகளையும் இல்லாதொழிக்கும்.

ஆனால், அரசாங்கமும் இ.மி.ச. நிர்வாகமும் இந்த கொடூரமான தாக்குதல்களை முன்னெடுக்கும் போது, இ.மி.ச. தொழிற்சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

தற்போது இந்த தொழிற்சங்கங்கள், இலங்கை மின்சார ஊழியர் சங்கம் (ACEEU), ஐக்கிய ஊழியர் சங்கம் (SEU), ஸ்ரீ லங்க சுதந்திர மின்சார ஊழியர் சங்கம் (SLNEEU), பொறியாளர்கள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார ஊழியர் சங்கம், ஐக்கிய ஊழியர் சங்கம், ஸ்ரீ லங்க சுதந்திர மின்சார ஊழியர் சங்கம் ஆகியவை முறையே பாராளுமன்ற எதிர்க்கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க..) ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இ.மி.ச. தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் மத்தியில் அதிகரித்து வரும் கவலைகளால், ஜனவரி 3-5 மூன்று நாள் நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் இந்த நேரடித் தாக்குதலுக்கு எதிராக இ.மி.ச. அல்லது ஏனைய அரச நிறுவனங்களின் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த தேசிய தொழிற்துறை போராட்டத்தில் அணிதிரட்டுவதற்கு எதுவும் செய்யவில்லை. இடைநிறுத்தப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்துமாறு அரசாங்கத்திடம் பலவீனமான வேண்டுகோள்களை விடுப்பதே அவர்களின் பிரதிபலிப்பாகும். நிச்சயமாக இந்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

இ.மி.ச. தொழிற்சங்கத் தலைமைத்துவமானது தொலைத்தொடர்பு, வங்கிகள், துறைமுகம், தபால், புகையிரதம் மற்றும் இன்னும் பல நிறுவனங்களில் உள்ள தமது பல சமதரப்புகளுடன் இணைந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்துமாறு கெஞ்சி கேட்கும் ஒரு மனுவை நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. பெப்ரவரி 7 அன்று, நாடு முழுவதும் உள்ள இ.மி.ச. கிளைகளுக்கு வெளியே சிதறிய போராட்டங்கள் நடத்தப்பட்டதோடு இடைநீக்கங்களுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளர்களின் நேர்மையான அணிதிரட்டலை, ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன. அதற்குப் பதிலாக, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரும் ஏழு மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், அதன் தேசிய மக்கள் சக்தி என்ற தேர்தல் முன்னணிக்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன!

தொழிலாள வர்க்கம் இத்தகைய சகல மாயைகளையும் நிராகரிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி/ஜே.வி.பி. அல்லது ஐ.ம.ச. ஆட்சியில், தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்கும் என்ற ஒரு தேர்தல் வாக்குறுதிகளும் அப்பட்டமான பொய்களாகும். விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் போலவே, இந்தக் கட்சிகளும் அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு உட்பட சர்வேதேச நாணய நிதியத்தின் தாக்குதல்களுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், அரசாங்கத்தின் போக்கை மாற்றுவதற்கு அதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று தொடர்ந்து கூறுகின்ற அதே நேரம், தொழிலாளர்கள் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. எவ்வாறாயினும், அரசாங்கம் இ.மி.ச. தொழிலாளர்களை பழிவாங்குவதையும், சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகளை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜனவரி 22 அன்று, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டு, “மின்சார ஊழியர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்த்திடு! எதிர்த் தாக்குதலை தயார் செய்!” என்ற தனது அறிக்கையை வெளியிட்டது. அதில், 'எங்கள் இ.மி.ச. சகோதர சகோதரிகள் மீதான தாக்குதல், நம் அனைவருக்கும் எதிரான தாக்குதல்!' என்று அது விளக்கியது. மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களைப் பாதுகாப்பதற்கும் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தேவையான வேலைத்திட்டத்தை அது கோடிட்டுக் காட்டியது:

“இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து இ.மி.ச. ஊழியர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீண்டும் வேலையில் அமர்த்து! அவர்களைப் பாதுகாக்க, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்தல் உட்பட, ஒரு தொழில்துறை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திடு. தொழிலாளர்கள் அத்தியாவசிய சட்டம் மற்றும் பிற அடக்குமுறைச் சட்டங்களை அகற்றுமாறு கோர வேண்டும்.

“இந்தப் போராட்டம் தனியார்மயப்படுத்தல் அல்லது மறுசீரமைப்பு வேண்டாம் என்ற கோரிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும்! அனைத்து அரச நிறுவனங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க வேண்டும்! வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டாம்!”

இ.மி.ச. ஊழியர்களதும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய அனைத்து பிரிவினரதும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்ப வேண்டும் என தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டு அழைப்பு விடுத்தது.

தொழிலாளர்கள், ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் தங்களுடைய சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க முன்முயற்சி எடுக்க வேண்டும். முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகள் இந்தக் குழுக்களில் இடம் பெறக்கூடாது. ஏனெனில் அவை விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு உண்மையான அரசியல் போராட்டத்தையும் எதிர்க்கின்றன.

இ.மி.ச.யின் 66 தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் கொள்கைகள் மற்றும் பிற சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு நேர்மையான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும், எத்தகைய தொழில்துறை மற்றும் அரசியல் போராட்ட நடவடிக்கை அவசியம் என்பதை இந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டில் உள்ள நடவடிக்கைக் குழுக்களே தீர்மானிக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தைக் கையில் எடுப்பது அவசரம்! உங்கள் வேலைத் தளத்திலும், மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையேயும் இந்தக் கொள்கைகள் பற்றிய கலந்துரையாடல்ளைத் தொடங்குங்கள், இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைக் குழுக்களை அமைத்திடுங்கள்.

Loading