இலங்கை மின்சார சபையில் பழிவாங்கல் தொடர்பான தொழிற்சங்கங்களின் கலந்துரையாடல் அரசாங்கத்திடம் வீண் வேண்டுகோள் விடுப்பதுடன் முடிவடைகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

திங்கட்கிழமை, இலங்கை தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள சமுதாய மற்றும் மத மையத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தியது. இக்கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) துறைமுகம், தபால், வங்கி, அரசாங்க அபிவிருத்தி சேவைகள் உத்தியோகத்தர்கள், புகையிரத மற்றும் சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. கலந்துரையாடலில் பங்கேற்ற பெரும்பாலான தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி.) கட்டுப்படுத்தப்படுபவை அல்லது அதனுடன் இணைந்தவை.

4 ஜனவரி 2024 அன்று கொழும்பில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். [Photo: WSWS]

இந்த கலந்துரையாடலின் நோக்கம் இ.மி.ச. தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலை எதிர்த்துப் போராடுவதாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஏற்கனவே 66 ஊழியர்களை வேலை இடைநிறுத்தம் செய்துள்ளதாக இ.மி.ச. தெரிவித்துள்ளது. நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஜனவரி 3-5 ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு எதிராக மேலும் அடக்குமுறை நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன.

எவ்வாறாயினும், கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள், இந்த வேட்டையாடலை அல்லது இ.மி.ச. தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிரான தொழிலாளர்களின் பொதுவான போராட்டத்தைத் தடுப்பதே அவர்களின் உண்மையான நோக்கம் என்பதை வெளிப்படுத்தியது.

விக்கிரமசிங்க அரசாங்கம் இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு கொடூரமான அடக்குமுறையுடன் பிரதிபலித்துள்ளது. அதற்கு எதிராக நீதிமன்றங்களில் அரசாங்கம் தடை உத்தரவு பெற்றது. எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் தடைசெய்து பெப்ரவரி 1 வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் பெற்றோலியத்தை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை விதித்து ஜனாதிபதி விக்ரமசிங்க அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டார். இ.மி.ச. நிர்வாகம், ஜனவரி 2 முதல் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்ததுடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்தது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மீறி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஒடுக்குமுறைக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.

தொழிற்சங்க தலைவர்களின் பல மணிநேர கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி. தலைவருமான ரஞ்சன் ஜயலால், வேட்டையாடலுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒரு “பெரும் போராட்டத்தை” ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

அவரைத் தொடர்ந்து அகில இலங்கைப் பொதுத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகான பேசினார். அவரும் முன்னணி ஜே.வி.பி. உறுப்பினராவார். போராட்டத்தின் “முதல் படியாக” ஜனவரி 29 அன்று தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றை அமைச்சர் விஜேசேகரவிடம் கையளிப்பதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் விளக்கினார்.

அமைச்சர் பதிலளிக்கவில்லை என்றால், இரண்டாவது கட்டமாக, இ.மி.ச. தலைமை அலுவலகம் முன்பாக மறுசீரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களில் இருந்தும் தொழிலாளர்களை அழைத்து போராட்டம் நடத்தவுள்ளனர்.

இந்த நடவடிக்கையும் தோல்வியடைந்தால், தொழிற்சங்கங்கள் பாராளுமன்றத்திற்கு செல்லும் பாதையில் பொல்துவ சந்தியில், இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிராக போராட்டத்தை நடத்தும்.

இறுதியாக, மறுசீரமைப்பு மசோதாவை அங்கீகரிக்கும் நாளில் வேலை நிறுத்தம் ஒன்று நடைபெறும். நிச்சயமாக தொழிலாளர்கள் “மின் நிலையங்கள் மற்றும் மின்சார இயக்க செயற்பாட்டில்” இருந்து வெளியேறுவார்கள் என்று அமைச்சருக்கு தெரிவிக்கும் வகையில் இது நடைபெறும்.

“இராணுவத்தையும் பொலிஸாரையும் நிலைநிறுத்தி அவர்களை இயக்குமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொள்வோம்” தேவைப்பட்டால், இ.மி.ச.யின் 23,000ம் ஊழியர்களும் “ராஜினாமா செய்யத் தயார்” என்று ஜயலால் கூறினார்.

இ.மி.ச.யின் மற்றும் தனியார்மயமாக்கலை நிறுத்த முன்வரும் அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தொழிலாளர்களையும் நசுக்குவதற்கு உறுதிபூண்டுள்ள விக்கிரமசிங்க நிர்வாகத்தை, இது போன்ற அச்சுறுத்தல்கள் மூலம் பின்வாங்க வைக்க முடியும் என்று நம்பவைக்க தொழிற்சங்கத் தலைவர்கள் முயல்கிறார்கள். இவை 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பு கடனை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தால் தினிக்கப்பட்ட மற்றும் அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.

அதுமட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து தொழிற்சங்கங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன. வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை அழிக்கும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை எதிர்க்கின்ற தொழிலாளர்களின் கண்களில் மண்தூவும் நோக்கில் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் மீது பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள், வர்க்கப் போராட்டங்களைத் தடுப்பதற்காக, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரத்தை நோக்கி தொழிலாளர் எதிர்ப்பைத் திசை திருப்ப முயற்சிக்கின்றன. இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜயலால், தேசிய மக்கள் சக்தி விரைவில் ஆட்சிக்கு வரும் என்று குறிப்பிட்டு, “இந்த வருஷம் அள்ளிக் கட்டிக்கொண்டுதான் போக வேண்டும்” என்று விக்கிரமசிங்கவை மிரட்டினார்.

மக்களின் சுமையை குறைக்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தொழிற்சங்கங்களும் வதந்தி பரப்பி வருகின்றன.

இந்த அறிக்கைகள் அனைத்தும் முழு பொய்களாகும். இந்தக் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன வேலைத்திட்டத்தை விக்கிரமசிங்க ஆட்சியை விட கொஞ்சமும் குறைவில்லாத கொடூரத்துடன் செயல்படுத்தும்.

கடந்த ஆண்டில், தொழிலாளர் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன. சர்வதேச நாணய நிதிய தாக்குதல்களை கைவிடுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடம் கூறிவந்தன. அரசாங்கம் எந்தவொரு பின்வாங்கும் நடவடிக்கையையும் எடுக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னேறியது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பொதுப் போராட்டத்தை ஒழுங்கமைக்க மறுப்பதற்கு காரணம், அத்தகைய போராட்டம் அரசாங்கத்துடனும் முழு முதலாளித்துவ வர்க்கத்துடனும் ஒரு அரசியல் மோதலாக வளர்ச்சியடையக்கூடும் என்பதாலேயே ஆகும். இந்த தொழிற்சங்கங்கள் தலை முதல் கால் வரை முதலாளித்துவ அமைப்புக்கும் அதன் அரசுக்கும் கட்டுப்பட்டவை.

இ.மி.ச. தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் உந்துதல், அனைத்து தொழிலாளர்களின் கண்களையும் திறக்கும். அவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க போர்க்குணமும் உறுதியும் மட்டும் போதாது. தொழிலாளர்கள் மாற்று வழியைத் தேட வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்க முன்வர வேண்டும். முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒவ்வொரு வேலைத் தளத்திலும் பெருந்தோட்டங்களிலும் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் தொழிலாளர்கள் அத்தகைய முன்முயற்சியை எடுக்க முடியும்.

அத்தகைய போராட்டத்தை வழிநடத்துவதன் மூலம், தொழிலாள வர்க்கம் சர்வதேச நாணய நிதிய வெட்டுக்கள் மற்றும் அரச அடக்குமுறைக்கு எதிராகப் போராட அதன் சொந்த சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.

வர்க்க நடவடிக்கை மூலம் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தூக்கியெறிந்து, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கம் தனது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

இலங்கை நடவடிக்கைக் குழுக்களின் கூட்டு, மின்சார ஊழியர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்த்திடு! என்ற தலைப்பில் பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது: இந்தக் கூட்டம் பெப்ரவரி முதலாம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு 02 இல், இ.மிச. தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள JMC ஜயசேகர முகாமைத்துவ நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இ.மி.ச. ஊழியர்களின் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் செயற்பாடு வேலைத்திட்டம் குறித்து இதில் கலந்துரையாடப்படும். இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அழைக்கிறோம்.

Loading