தோழர் ஹலீல் செலிக்கிற்கு ஒரு நினைவு அஞ்சலி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவான சோசலிச சமத்துவக் குழுவை (Sosyalist Eşitlik Grubu) நிறுவியவரும் தலைவருமான ஹலீல் செலிக்கிற்கு (Halil Çelik) வழங்கிய அஞ்சலியை இங்கு வெளியிடுகிறோம். ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஹலீலின் ஐந்தாவது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் நோர்த்தின் நினைவு அஞ்சலிக் கருத்துக்கள் வாசிக்கப்பட்டன.

ஹலீல் செலிக் (1961-2018) [Photo: WSWS]

தோழர் ஹலீல் அகால மரணமடைந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. இந்த தைரியமான மற்றும் சளைக்காத புரட்சியாளரின் ஆளுமை மிகவும் தெளிவாக உள்ளது: அதாவது அவரது வாதங்களின் வலிமை, அவரது அறிவுஜீவித மற்றும் கலாச்சார ஆர்வங்களின் விரிவாக்கம், அவரது தாராள மனப்பான்மை, உறுதியான நம்பிக்கை மற்றும் குறிப்பிடத்தக்க நகைச்சுவை உணர்வு ஆகியவைகளாகும்.

தோழர் ஹலீல் தனது முதிர்ச்சியான வாழ்நாள் முழுவதையும் அதாவது நாற்பத்தொரு வருடங்களை சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக அர்ப்பணித்துள்ளார். அவர் துன்புறுத்தப்படல், சிறைவாசம் மற்றும் எல்லாவற்றையும் விட கடினமான அமைப்புகளின் துரோகங்களையும், வரலாற்றின் படிப்பினைகளைப் புறக்கணித்த போக்குகளையும், குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக கொள்கைகளை நிராகரிப்பவர்களையும் எதிர்கொண்டார். ஆனால் ஹலீல் இந்த அனுபவங்களின் படிப்பினைகளைப் எடுத்துக்கொண்டு, பெரும் புறநிலை சிக்கல்கள் இருந்தபோதிலும், தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகரக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்காக தொடர்ந்து பணியாற்றினார்.

பல தசாப்தகால அரசியல் பணிகளுக்குப் பிறகு தோழர் ஹலீல் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) தொடர்பை ஏற்படுத்தினார். ஸ்ராலினிசம், மாவோயிசம், ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் பல்வேறு பிரிவுகளின் காட்டிக்கொடுப்புகளுடன் அவர் தனது சொந்த அனுபவங்களில் இருந்து எடுத்த முடிவுகள், அக்டோபர் புரட்சியின் பாரம்பரியம் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் ட்ரொட்ஸ்கிச மூலோபாயம் மீதான ICFI இன் வரலாற்றுப் பாதுகாப்போடு ஒன்றிணைந்தன.

தோழர் ஹலீல் தனது சொந்த அனுபவத்தில் இருந்து பெற்றுக்கொண்ட மிக முக்கியமான படிப்பினை என்னவென்றால், ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு, அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் முழு வரலாற்றையும் அதாவது 1923ல் அதனுடைய தோற்றத்திலிருந்து 1938ல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டமை, 1953 இல் அனைத்துலகக் குழுவின் உருவாக்கம், அதன்பின் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான நீண்ட நெடிய போராட்டம், 1985-86 இல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசிய சந்தர்ப்பவாதத்துடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முறித்துக் கொண்டது வரையானதுமானவைகளை அதனுடைய காரியாளர்களுக்கு முறையாக கல்வியூட்டப்பட வேண்டும் என்பதாகும்.

இளம் காரியாளர்களுக்கு கல்வியூட்டுவது மற்றும் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச காரியாளர்களாக அவர்களை அபிவிருத்தி செய்வதன் மீது கவனம் குவித்திருந்த தோழர் ஹலீல் அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் அவர் நடத்திய பணியானது, நீடித்த வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். ஹலீல் இப்போது நம்முடன் இல்லை என்றாலும், அவரது வாழ்நாள் பணியானது சோசலிச சமத்துவக் குழுவின் காரியாளர்களின் பணியில் தொடர்கிறது.

தோழர் ஹலீல் செலிக் அவர்களின் நினைவு நிடூழி வாழ்க!

Loading