மின்சார ஊழியர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்ப்போம்! எதிர் தாக்குதலை தயார் செய்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் உள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுவினராகிய நாங்கள், இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) தனியார்மயமாக்குவதற்கு எதிராக, ஜனவரி 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இ.மி.ச. ஊழியர்கள் மீதான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடக்குமுறையை எதிர்க்குமாறு தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

கடந்த வாரத்தில், இ.மி.ச. நிர்வாகமானது, நுகர்வோருக்கு சேவை செய்யும் கடமையை கைவிட்டனர், என்ற அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் 66 ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளது. எமக்கு கிடைத்த தகவலின்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மேலும் கடிதங்களை அனுப்புவதற்கு இ.மி.ச. தயாராகி வருகின்றது. ஒரு தொழிற்சங்க தலைவரான கோசல அபேசிங்க கொழும்புக்கு வெளியே உள்ள இ.மி.ச. கிளைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 4 ஜனவரி 2024 அன்று கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த போது. [Photo: WSWS]

பெருமளவான இ.மி.ச. ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இ.மி.ச. போராட்டத்திற்கு முன்னதாக ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளையும் இரத்து செய்து, மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் போக்குவரத்து சேவைகளில் வேலைநிறுத்தங்கள் உட்பட அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடைசெய்யும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை (EPSA) அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் தடுப்புப்பட்டியலில் வைக்கவும் பயன்படுத்த முடியும். அத்துடன் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு இழுத்துவரப்பட்டு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஊழியர்களுக்கான தடைக் கடிதங்களில் அவர்கள் “பாரதூரமான தவறான நடத்தையை” மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காலத்தில், அவர்களின் ஊதியத்தில் பாதியே வழங்கப்படும்.

அரசாங்கத்தின் பார்வையில் “குற்றம்” என்பது, இ.மி.ச.யை 14 பிரிவுகளாக உடைத்து, பின்னர் சிலவற்றை தனியார் கைகளுக்கு விற்று மற்றவற்றை வணிகமயமாக்கும் மறுசீரமைப்புக்கு, இ.மி.ச. ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதே ஆகும். இந்த “மறுசீரமைப்பு”, தொழில்களை அழித்து, ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை குறைக்கும் என்பதை ஊழியர்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள்.

தொழிலாளர்கள், நுகர்வோரின் சேவைகளைப் பறித்ததாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் வஞ்சத்தனமானதாகும். ஏற்கனவே, விக்கிரமசிங்கவின் நிர்வாகம் மின் கட்டணத்தை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தாங்க முடியாத கட்டணத்தை அரை மில்லியன் மக்களால் செலுத்த முடியாமல் போனது. அவர்களது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இ.மி.ச. சகோதர சகோதரிகள் மீதான தாக்குதலானது நம் அனைவருக்கும் எதிரான தாக்குதல் ஆகும்! சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட அரசாங்கத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை நாம் அனைவருமே எதிர்கொள்கிறோம். நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்பின் வரிசையில், அதாவது தனியார்மயமாக்கல் அல்லது வணிகமயமாக்கல் வரிசையில் காவுகொடுக்க வைக்கப்பட்டுள்ளன. இவை தொழில் அழிப்பு, ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலை நிலைமைகளை சீரழிக்கும். இவை கடந்த கால போராட்டங்களில் வென்றெடுத்த உரிமைகள் ஆகும்.

அதே சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான விலைகள் மற்றும் கட்டணங்களை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தி, முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துகின்றன. மில்லியன் கணக்கான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு பொது சுகாதாரம் மற்றும் கல்வியில் சீரழிவு காரணமாக சொல்லொணா சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதைத் தவிர “நாட்டிற்கு வேறு வழியில்லை” என்று கூறுகிறது. சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், கடந்த வாரம் “பொருளாதாரம் மீட்புப் பாதையில் உள்ளது” என்றும் மக்கள் அதன் கொடிய துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். “மீட்பு” என்பதன்கீழ், முதலாளித்துவ நெருக்கடியை சரிசெய்வதற்கும், முதலீட்டாளர்களின் இலாபத்தை உயர்த்துவதற்குமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் பல தசாப்தங்களாக வாங்கப்பட்ட பெரும் கடன்களை செலுத்துமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில், அரசாங்கம் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறை போன்ற அடக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்துவதுடன் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்க நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா போன்ற புதிய சட்டங்களைக் கொண்டுவருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் அதன் தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச), அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் குழுக்கள் உட்பட அனைத்து எதிர் முதலாளித்துவக் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளன. அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ள ஐ.ம.ச மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச., தேர்ந்தெடுக்கப்பட்டால் அதே சிக்கன நடவடிக்கைகளை இரக்கமின்றி செயல்படுத்தும்.

தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன?

உண்மையில், தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இந்த சிக்கனத் தாக்குதல்களைத் தோற்கடிக்க ஐக்கியப்பட்ட நடவடிக்கையில் இணைந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், தொழிற்சங்கத் தலைவர்கள் இத்தகைய ஒன்றுபட்ட வர்க்க நடவடிக்கையைத் தடுத்து, சிதறிய, மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கடுமையான நடவடிக்கைகளை இடைவிடாமல் திணிக்கும் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தி ஒடுக்குகின்ற அதே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை அவர்கள் வழிநடத்தியுள்ளனர்.

இ.மி.ச. தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? தொழிற்சங்கத் தலைவர்கள் அதன் உறுப்பினர்களின் நடவடிக்கையை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதற்கு மட்டுப்படுத்தி, இந்த பழிவாங்கலுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு “விளக்கம் கோரி” கடிதங்களை அனுப்பிய போது, சுகயீனம் காரணமாக தங்கள் கடமைகளில் கலந்து கொள்ளத் தவறிவிட்டதாக பதில் எழுதுமாறு தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர். இது அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணிவதைத் தவிர வேறில்லை.

நேற்றைய தினம் இ.மி.ச. சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் கொழும்பில் கூடி அடக்குமுறையை எதிர்கொள்ள என்ன செய்வது என்று ஆலோசித்தன. அவற்றில் இலங்கை மின்சார ஊழியர் சங்கம், அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம், அரசாங்க அபிவிருத்தி சேவைகள் உத்தியோகத்தர் சங்கம், சுகாதார தொழிலறிஞர்கள் சங்கம் மற்றும் இன்னும் பல தொழிற்சங்கங்கள் உள்ளடங்கியுள்ளன. அவர்கள் முடிவு செய்தது இதுதான்:


1. ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை ஜனவரி 29 அன்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் சமர்ப்பிப்பித்தல். தொழிற்சங்க நடவடிக்கையை தடை செய்யுமாறு கேட்டு, நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுப்பதை நிறுத்துமாறு இ.மி.ச. நிர்வாகத்திடம் வலியுறுத்துவதும் இதில் அடங்கும். கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்தத் தடையை பெப்ரவரி 1 வரை நீட்டித்துள்ளது. ஏன் இதனை நீடிக்கக் கூடாது என அன்றைய தினம் தொழிற்சங்கத் தலைவர்கள், நீதிமற்றுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

2. பெப்ரவரி 5 அன்று தனியார்மயமாக்கலுக்கு ஒதுக்கப்பட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களின் அடையாள எதிர்ப்பு மறியல் போராட்டம் நடத்துவது.

அத்தகைய வேண்டுகோள்கள் பயன்தரப் போவதில்லை. இ.மி.ச.வை மறுசீரமைப்பதிலும் அடக்குமுறைக்கும் தலைமை தாங்கும் அமைச்சர் விஜேசேகர, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்க இராணுவத்தையும் பொலிஸையும் நிலைநிறுத்தியதோடு 20 தொழிற்சங்க தலைவர்களையும் பிற ஆர்வலர்களை பதவி நீக்கம் செய்தார்.

நேற்று மாலை, அந்த தொழிற்சங்கங்களின் தலைவர்கள், பெரும்பாலும் ஜே.வி.பி.யின் தலைமையில் இருப்பவர்கள், ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தி, அரசாங்க அடக்குமுறைக்கு எதிராக முழங்கினர்.

2024 ஜனவரி 4 அன்று கொழும்பில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது. [Photo: WSWS]

எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் அடக்குமுறைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக தொழிலாளர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதை எதிர்க்கின்றனர். இத்தகைய வர்க்க நடவடிக்கை அரசாங்கத்துடனும் முதலாளித்துவ ஆட்சியுடனும் மோதலாக வளரும் என்பதால் அவர்கள் நடுங்குகிறார்கள். ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகள் இந்த தொழிற்சங்கத் தலைவர்களின் கை கால்களைக் கட்டி வைத்து இயக்குகின்றன. அவர்கள் சர்வதேச நாணய நிதியக் கொள்கைகளையும் இலாப முறைமையையுமே ஆதரிக்கின்றனர்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்?

தங்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு பொது வேலைநிறுத்தம் உட்பட சுயாதீனமான வர்க்க நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் ஒழுங்கமைக்கவும் தொழிலாள வர்க்கத்துக்கு நாங்கள் அழைப்பு விடுகின்றோம். இ.மி.ச. ஊழியர்களுக்கு எதிரான வேட்டையாடலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது அனைத்து வர்க்க சகோதர சகோதரிகளுக்கும் ஒரு அணிதிரட்டல் புள்ளியாக இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளை நம்பியிருக்க முடியாது.

உங்களது வேலைத் தளங்கள், தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்கள் மற்றும் பெருந்தோட்டங்களில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கோ முதலாளித்துவக் கட்சிகளுக்கோ எந்தப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படக்கூடாது.

நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

  • இடை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து இ.மி.ச. ஊழியர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீண்டும் வேலையில் அமர்த்து. தொழில்துறை போராட்ட நடவடிக்கை மீதான தடையை நீக்கு!
  • வேலை நீக்கம் செய்யப்பட்ட பெட்ரோலிய தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிற ஆர்வலர்களை மீண்டும் வேலையில் அமர்த்து!
  • இ.மி.ச. ஊழியர்களுக்கு ஆதரவாக உங்கள் வேலைத் தளத்தில் ஒத்துழைப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்யுங்கள்!
  • அரசாங்கத்தின் கொடூரமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு எதிராகப் போராடு!
  • தனியார்மயமாக்கல் அல்லது மறுசீரமைப்பு வேண்டாம். அனைத்து அரச நிறுவனங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!
  • வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டாம்!

இந்தப் போராட்டத்தில் நமது கூட்டாளிகள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளே ஆவர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இன்னும் பரந்த அளவில், பெருநிறுவனங்களதும் அரசாங்கங்களினதும் தாக்குதல்களில் இருந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அனைத்து தொழிலாளர்களும் ஏழை மக்களும் கோவிட்-19 தொற்றுநோய், உக்ரேன் மற்றும் காசாவில் அமெரிக்க/நேட்டோ ஆதரவு போர்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய இராணுவ உந்துதலாலும் ஆழமடைந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் சுமையை எதிர்கொள்கின்றனர். பதிலுக்கு, நாங்கள் சொல்கிறோம்:

  • சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பு!
  • நாம் கட்டியெழுப்பும் நடவடிக்கைக் குழுக்களானவை தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் சர்வதேசப் போராட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை உடனடியாக செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இழப்பதற்கு நேரமில்லை. பிற்போக்கு விக்கிரமசிங்க ஆட்சியானது அதன் எதிர்ப்புரட்சிக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளது. இந்தத் திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் எதிர்க்கட்சிகளின் இருமுக விமர்சனங்கள் மக்களை ஏமாற்றும் கபடத்தனமான வேலையாகும்.

எங்கள் நடவடிக்கைக் குழுக்களில் பின்வருவன அடங்கும்:

துறைமுக தொழிலாளர் நடவடிக்கை குழு

சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழு

ஆசிரியர்கள்-மாணவர்கள்-பெற்றோர்கள் நடவடிக்கை குழு

ஆடை தொழிலாளர் நடவடிக்கை குழு

தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு

கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு

ரயில் தொழிலாளர் நடவடிக்கை குழு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடவடிக்கை குழு

உங்கள் வேலைத் தளத்தில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலே உள்ள திட்டத்தை விளக்கி உங்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம். உங்கள் முன்மொழிவுகளை எங்களுக்கு அனுப்பவும்.

Loading