மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 60,000 க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்ற பிரிவு தொழிலாளர்களிடமிருந்து ஆதரவைப் பெறத் தொடங்கிய வேளையில், தொழிற்சங்க எந்திரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்து ஜனவரி 10 அன்று அதை விரைவாகக் கைவிட்டது.
அவர்களின் துரோகத்தை நியாயப்படுத்தும் முயற்சியில், தொழிற்சங்க அதிகாரிகள், ஐந்து நாட்கள் நீடித்த தமிழ் விவசாயிகளின் அறுவடைக் கொண்டாட்டமான “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்களின் பெரும் நலன் கருதி”, ஜனவரி 19ஆம் தேதி தொழிலாளர் ஆணையர் முன் மாநில அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் வரை, “தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக” கூறினர்.
பல பத்தாயிரக்கணக்கான பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் வெடிப்பு, பூகோள அளவிலான வர்க்கப் போராட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்.
ஊதிய உயர்வுக்கான 15வது ஊதிய திருத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவது, மற்றும் 96 மாதங்களாக வழங்கப்படாத தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (வாழ்க்கைச் செலவு) கொடுப்பனவுகள் (DA) ஆகியவை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எழுப்பிய கோரிக்கைகளில் அடங்கும். இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் அவர்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை DA வழங்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை அவை திருத்தப்படுகிறது.
சாமானிய தொழிலாளர்களின் பெரும் அழுத்தத்தின் கீழ், தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JTC) பரந்தளவிலான வெளிநடப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. JTC என்புது இந்திய ஸ்ராலினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இணைக்கப்பட்டுள்ள இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உடன் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), முன்னாள் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான அண்ணா தொழிற்சங்க பேரவை (ATP) மற்றும் ஹிந்து மஸ்தூர் சபை (HMS) அகியவற்றை உள்ளடக்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மாநில அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் வேலைநிறுத்தத்தைத் தடுக்க JTC தொழிற்சங்க எந்திரம் முயற்சித்தது. தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக மானத்தை காப்பாற்றும் உடன்பாட்டைப் பெற முடியும் என்று நம்பியது. இருப்பினும், திமுக தலைமையிலான மாநில அரசாங்கம் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிக்கும் அளவுக்கு ஆழ்ந்த நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறுகிறது. மற்றும் பிரமாண்டமான நிதி நெருக்கடி ஒரு புறம் இருக்க, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன், பின்வாங்கினால் அது மற்ற பிரிவு தொழிலாளர்களையும் இதேபோன்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க ஊக்குவிக்கும் என்று மாநில அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், JTC வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனாலும் இரண்டே நாட்களில் அது கைவிடப்பட்டது.
வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதையும் மற்றும் இந்திய முதலாளித்துவம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதையும் முக்கிய செயல்பாடாக கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசின் ஒருங்கிணைந்த பகுதியாக நீதிமன்றங்கள் இருக்கின்றன என்பதை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.
தெளிவாகவே, தொழிலாளர்கள் மத்தியில் கோபத்தின் வெடிப்பு குறித்து கவலை கொண்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் (AAG) ஜே ரவீந்திரன் உறுதியளித்தபடி பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் வேலை நிறுத்தத்தை உடைக்கும் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் கூறியது.
காலவரையற்ற போக்குவரத்து வேலைநிறுத்தத்தை தடை செய்யக்கோரி வலதுசாரி மாணவர் ஒருவரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலைநிறுத்தம் செய்யும் தொழிற்சங்கங்கள், ஜனவரி 19 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்ட சமரச செயல்முறை நடைபெறும் வரை காத்திருந்திருக்க வேண்டும் என்று கூறியது.
அதே நேரத்தில், பொதுப் போக்குவரத்து வசதிகளுக்கு மாநில அரசாங்கம் பொறுப்பு என்றும், எனவே வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் “சட்டவிரோத வேலைநிறுத்தம்” நடத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதாவது, போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்தால் அது சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு, மாநில அரசாங்கத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்
எட்டு ஆண்டுகளாக அகவிலைப்படி கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ள 82,000ம் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டபடி, தற்காலிகத் தொகையான 2,000ம் ரூபாய் (US$24) வழங்க AAG மறுத்து விட்டது. தொழிலாளர்களின் எதிர்ப்பை எதிர்கொண்ட ஜே.ரவீந்திரன், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கும் (STC) ஊழியர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்றார்.
2017ஆம் ஆண்டு முதல் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இந்தக் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து வந்த மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் இந்த எரியும் பிரச்சினைகளைக் கண்டும் காணாததுபோல் இருந்து வருகின்றன.
போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 20,000ம் பணியிடங்கள் காலியாக உள்ளன, ஏனெனில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த மாநில அரசாங்கங்கள் இறப்பு மற்றும் ஓய்வு பெற்ற பணியிடங்களை நிரப்பத் தவறிவிட்டன. ஆயினும்கூட, முழு இந்திய ஆளும் உயரடுக்கின் அதிகரித்து வரும் நிலை மாற்றத்திற்கு ஏற்ப, STC வெளிச் சேவை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நாடுகிறது.
மதியம் பணி செய்ய வேண்டிய நிலையிலும், காலையிலேயே பேருந்துகளை இயக்க மாநில அரசாங்கம் வற்புறுத்துவதாக போக்குவரத்து ஊழியர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும், பேருந்துகளை இயக்கவும், பயணச்சீட்டு வழங்கவும் தற்காலிக பணியாளர்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
2021ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சனைகள் தொடர்பாக திமுக பல மோசடியான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து, திமுக அரசாங்கம் மற்ற பிரிவு தொழிலாளர்களுக்கு வழங்குவது போல், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளது.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டதால், குழந்தைகள் பராமரிப்பு, அரசு மின்சாரம், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பல்வேறு பொதுத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நடத்தினர். இந்த ஆண்டு அதிக அளவிலான தொழிலாளர்கள் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஐடியுவுடன் இணைந்திருக்கும் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் ஏஐடியுசியுடன் இணைந்த சிபிஐ ஆகியவை திமுகவின் தேர்தல் கூட்டணிக் கட்சிகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இன்னும் தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணியின் ஒரு பகுதியாக திமுகவை ஆதரிக்கின்றனர், மேலும் இந்து மேலாதிக்க மற்றும் பாசிச பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கத்திற்கு வளர்ந்து வரும் எதிர்ப்பைப் பயன்படுத்தி வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் வலதுசாரி மாற்று அரசாங்கத்தை அமைக்க அவர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று திமுக போக்குவரத்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வெளிப்படையாகத் தாக்கி, வேலைநிறுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். “நிதி நிலைமை மேம்படும் போது” தொழிலாளர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்று அவர் பொய்யாக உரைத்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழ் நாடு தான் அதிக கடன் நிலுவையில் உள்ளது. 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டின்படி, மாநிலத்தின் நிலுவையில் உள்ள கடன் 75,400 பில்லியன் ரூபாயாக இருந்தது. தி.மு.க அரசாங்கம் மாநில அளவில் அதன் முன்னோடியான அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்தைப் போல, இந்தப் பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாளர்களின் முதுகில் சுமத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால், அரசாங்கத்தின் அல்லது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதி நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பொறுப்பல்ல, அதற்குப் பணம் செலுத்தக் கூடாது. எனவே, தொழிலாளர்களுக்குரிய ஊதியத்தை உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
தொழிற்சங்க எந்திரங்களின் துரோகப் பாத்திரம் அவர்கள் இணைந்திருக்கும் அரசியல் கட்சிகளின் பிற்போக்கு அரசியலில் இருந்து எழுகிறது. ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை பல தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவினருக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அடிபணியச் செய்ததன் மூலம் இந்திய முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய முட்டுக்கட்டைகளாக செயல்பட்டு வருகின்றன. பல தசாப்தங்களாக, அவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளை இந்து மேலாதிக்க பிஜேபிக்கு “மதச்சார்பற்ற” மாற்றாக ஊக்குவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், திமுகவின் பிற்போக்கு வர்க்கத் தன்மையையும் அதன் தொழிலாள வர்க்க விரோத சாதனைகளையும், வேலைத்திட்டத்தையும் ஸ்ராலினிசக் கட்சிகள் மறைத்துவிட்டன. அவர்கள் திமுகவை “மதச்சார்பற்ற” மற்றும் “முற்போக்கு” கூட்டாளியாகவும், “சமூக நீதியின் நாயகனாகவும்” தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இந்திய தொழிலாள வர்க்கம், ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து அரசியல்ரீதியாக முறித்துக் கொண்டு கிராமப்புற ஏழைகளை அதன் பின்னால் அணிதிரட்டவும், முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிந்து, சோசலிச கொள்கைகளுக்கு உறுதிபூண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் அரசியல்ரீதியாக ஒரு சுயாதீன சக்தியாக தன்னை அணிதிரட்ட வேண்டும். இது போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரானதாக தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்திய தொழிலாள வர்க்கத்தின் அத்தகைய ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டியெழுப்புவதாகும்.