அரசாங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மறுத்த நிலையில் இலங்கை சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பல்லாயிரக்கணக்கான இலங்கை அரச மருத்துவமனை ஊழியர்கள் செவ்வாயன்று 35,000 ரூபாய் ($108) இடையூறுகள், காத்திருத்தல் மற்றும் மாதாந்திர போக்குவரத்து (DAT-டட்) கொடுப்பனவைக் கோரி தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தினர். இதே கோரிக்கையை முன்வைத்து கடந்த வியாழன் தொடங்கிய இரண்டு நாள் நடவடிக்கையைத் தொடர்ந்து இது அவர்களின் இரண்டாவது வெளிநடப்பு ஆகும்.

16 ஜனவரி 2024 அன்று இலங்கையில் மாத்தறை மருத்துவமனைக்கு வெளியே செவிலியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது. [Photo: WSWS]

72 அமைப்புகளின் கூட்டணியான சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மூலம் இந்த மருத்துவ விடுமுறை வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது கதிரியக்க வல்லுநர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளர்கள் மற்றும் மருந்து கலப்பவர்கள், மருத்துவச்சிகள், இ.சி.ஜி. தொழில்நுட்ப வல்லுநர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் அதிகாரிகள் மற்றும் சுகாதார உதவியாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என்று சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு முன்பு தெரிவித்திருந்தது.

அரசாங்க மருத்துவ மருத்துவர்களுக்கான டட் கொடுப்பனவில் 35,000 ரூபா மாதாந்த அதிகரிப்பை வழங்குவதாக கடந்த வார தொடக்கத்தில் அரசாங்கம் அறிவித்ததற்கு பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பதில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அறிவித்ததை அடுத்து, தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைமை நேற்று காலை நடவடிக்கையை கைவிட்டது. நிதியமைச்சராக உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இலங்கை திரும்பியதும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அவரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சேமசிங்க தெரிவித்தார்.

சுகாதாரத் தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகாரத்துவம், டட் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது, சுகாதார ஊழியர்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க ஒரு உண்மையான போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக அல்ல. மாறாக அவர்களின் உறுப்பினர்களின் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை தணிப்பதற்கே ஆகும்.

அதன் உறுப்பினர்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, சுகாதார அமைச்சர் பத்திரனவுக்கு கடிதம் அனுப்பி, “உங்கள் தரப்பில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தடுக்க, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளது.

தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒரு தலைவரான ரவி குமுதேஷ் ஜனவரி 16 அன்று ஐலண்ட் செய்தித்தாளிடம் பேசும் போது, “ஜனாதிபதியின் அமைச்சரவை முன்மொழிவு உருவாக்கிய பிரச்சினைகளை தீர்க்க அவருக்கு சிறிது கால அவகாசம் வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதனால் நிறுத்திவிட்டோம். எவ்வாறாயினும், ஜனாதிபதி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று கூறியதோடு தொழிற்சங்கங்கள் சமரசம் செய்யத் தயாராக உள்ளன என மேலும் கூறினார்.

தொழிற்சங்கத் தலைமையின் உண்மையான கவலை என்னவென்றால், இந்த “அமைதியின்மையானது” அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் மற்றும் வேலை-அழிப்புக் கொள்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்களின் ஏனைய பிரிவினரின் எழுச்சி பெறும் போராட்டங்களுடனும், பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் உருவாக்கப்பட்ட சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிரான போராட்டங்களுடனும் ஐக்கியப்பட்டுவிடுமோ என்பதுதான். ஜனவரி முதல் வாரத்தில், பல்லாயிரக்கணக்கான இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்து மூன்று நாள் சுகயீன விடுமுறைப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

2023 மார்ச் மாதம், “கூட்டுப் போராட்டத்தில் பங்கேற்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தால், அனைவரும் வீதிக்கு வருவார்கள். இதுபோன்ற வேலைநிறுத்தங்களை எங்களால் செய்ய முடியாது என்று கூறி மக்களை அடக்கி வைத்திருக்கின்றோம்” என்று குமுதேஷ் குறிப்பிட்டார்.

நேற்று ஊடகங்களுக்கு பேசிய பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, நாட்டின் ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் சிப்பாய்களும் வைத்தியசாலைகளில் வேலை செய்வதற்காக அணிதிரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அம்புலன்சிகளில் நோயாளர்களை ஏற்றிச் செல்வது, தள்ளு வண்டிகளை இயக்குவது, பதிவு செய்வது போன்ற வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தின் போதும், அரசாங்கம் கருங்காலி வேலைக்காக இராணுவத்தினரை அனுப்பியது.

தொழிற்சங்கத் தலைமைத்துவமானது வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதை எதிர்க்காத அதே வேளை,  அனைத்து சுகாதார தொழிலாளர்களும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலை நேரடியாக எதிர்க்க வேண்டும். அரசாங்கத்தின் ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இன்னும் ஈவிரக்கமற்ற தலையீடுகளுக்கான ஒரு வெளிப்படையான ஒத்திகையாகும்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு அகில இலங்கை தாதிமார் சங்கம் (ACNU), அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் (GNOA), பொதுச் சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்கம் (PSUNU) ஆகியவை நேற்றைய நடவடிக்கையில் பங்கேற்கவில்லலை. அகில இலங்கை தாதிமார் சங்கமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் இன்னும் பல வைத்தியசாலைகளிலும் மதிய உணவு நேர போராட்டங்களை தனித்தனியாக நடத்தியது. எவ்வாறாயினும், பொதுச் சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்க உறுப்பினர்கள், வேலைநிறுத்தம் வேண்டாம் என்ற தங்கள் தொழிற்சங்கத் தலைமையின் வேண்டுகோளை மீறி கடந்த வாரம் தொழிற்சங்க கூட்டமைப்பு நடத்திய எதிர்ப்புக்களில் பெருமளவில் இணைந்திருந்தனர்.

அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தின் (GMOA) தலைமை, அவர்களது சக சுகாதார தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக,  வேலை நிறுத்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. டட் கொடுப்பனவு, வைத்தியர்களுக்கானதே வேறு யாருக்கும் இல்லை என அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தின் அதிகாரத்துவம் சிடு மூஞ்சிதனமாக அறிவித்துள்ளது. இத்தகைய பிளவுபடுத்தும் பிரதிபலிப்பானது, ஏனய சுகாதார தொழிற் சங்கங்களைப் போலவே, சுகாதார தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை தரம் மற்றும் தொழில்களுக்கு ஏற்ப பிரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் கைபொம்மைகளாக தொழிற்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், அரசாங்க ஊழியர்களுக்கான எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் எதிர்க்கிறது. செலவினங்களைக் கடுமையாகக் குறைத்து அரசாங்க வருவாயில் கூர்மையான அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கைகளுக்கு இணங்க, தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் மற்றும் ஏழை மக்களின் சொற்ப வருமானத்தை வெட்டுவதில் உறுதியாக உள்ளது.

16 ஜனவரி 2024 அன்று மாத்தறை மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் பங்குபற்றியுள்ள தாதிமார். [Photo: WSWS]

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஏனய அனைத்து பிரிவுகளையும் போலவே, சுகாதார சங்கங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை ஆதரிக்கின்றன. குமுதேஷ் அதன் சிக்கன திட்டத்தை “தனிப்பட்ட முறையில்” ஆதரிப்பதாக பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்..

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட வேலை நிறுத்தம் மற்றும் அரசியல் நடவடிக்கை வளர்ச்சியடைவதை எதிர்க்கும் தொழிற்சங்கத் தலைமையானது தனித்தனியான தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் ஊடாக தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என வலியுறுத்துகிறது. இத்தகைய செயல்கள் பயனற்றவை என்பதை கடந்த கால அனுபவம் நிரூபித்துள்ளது.

சுமார் 35 ஆண்டுகளாக வைத்தியசாலையில் வேலை செய்த, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளி, தனது நிலைமையை விளக்கினார். “நான் ஓய்வுபெறுவதற்கு இரண்டு வருடங்களே உள்ளன. ஆனால் கடன்கள் கழிக்கப்பட்ட பின்னர் மாதந் தோறும் 35,000 ரூபாய் மட்டுமே வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன். தொற்றுநோய்களின் போது எங்களுக்கு ஒரு மாதத்திற்கு மட்டுமே கொரோனா வைரஸ் உதவித்தொகை வழங்கப்பட்டது.

“பஸ் கட்டணம் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நமக்குத் தேவையானதில் பாதியை மட்டுமே சாப்பிட முடிகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் அதிகமாக உள்ளது. எனது மூன்று பிள்ளைகளுக்கும் வேலை இல்லை, என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை, நோயாளியாக இருக்கிறார்,” என அவர் கூறினார்.

“நாங்கள் வேலைநிறுத்தம் செய்யும்போது, ​​​​அது நோயாளிகளை பாதிக்கிறது என எங்கள் மீது குற்றம் சாட்டலாம், ஆனால் நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் எதனையும் பெற முடியும் என நாம் நம்பவில்லை. அரசாங்கம் எங்கள் பேச்சைக் கேட்டால், நாம் இன்று இருக்கும் நிலைமையில் இருந்திருக்க மாட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

2020ல் இருந்து இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் வேறு எந்தப் பிரிவினரையும் விட அதிகமான வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களில் இலங்கை சுகாதார தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்போது அவர்கள் என்ன நடந்தது என்பதை அரசியல் ரீதியாக மீளாய்வு செய்ய வேண்டும்.

தங்களின் உரிமைகளுக்காகவும், இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனய தொழிலாளர்களுடன் ஐக்கியப்படவும் ஒரு உண்மையான ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைக்க, சுகாதாரத் தொழிலாளர்கள் விடயங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் அர்த்தம், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவ சார்புக் கட்சிகளிலும் இருந்து சுயாதீனமாக, தமது ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ், தங்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபித்து, இலாபத்தை விட மனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதே ஆகும்.

வைத்தியர்கள், தாதிமார், தொழில்நுட்பப் தொழிலாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உட்பட சுகாதாரத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைய வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு, ஒரு நடவடிக்கைக் குழுவை ஏற்கனவே உருவாக்கி, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் ஊடாக தங்கள் உலகளாவிய சகாக்களுடன் இணைந்துள்ளனர்

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள், சுகாதாரப் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவைத் தொடர்புகொண்டு, உங்கள் வேலைத் தளத்தில் இதேபோன்ற குழுவை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி கலந்துரையாடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

health.action.committee@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும் அல்லது தொலைபேசி +94 (71) 342 1150

Loading