இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழில்துறை போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழன் அன்று இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தொழிலாளர்கள் எந்தவொரு தொழிற்துறை போராட்டத்திலும் ஈடுபடுவதைத் தடை செய்யும் “தடை உத்தரவை” பெப்பிரவரி 1 வரை நீட்டித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களை உள்ளடக்கிய 29 தொழிற்சங்கங்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைவர்களுக்கும் இந்த நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது.

2024 ஜனவரி 4 அன்று கொழும்பில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது. [Photo: WSWS]

தொழிற்சங்கத் தலைவர்கள் வியாழன் அன்று மாவட்ட நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு, நீதிமன்றம் ஏன் தனது தடை உத்தரவை மேலும் நீட்டிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கி பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் விளக்கங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. தொழிற்சங்க அதிகாரிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் இருந்தும் அல்லது பல அரச நிறுவனங்களின் வளாகங்களுக்குள் நுழைவதிலிருந்தும் தடுக்கப்பட்டனர்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஜனவரி 3-5 வரை சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ள போதும் கூட, இ.மி.ச. நிர்வாகம் நீதிமன்றத் தீர்ப்பையும் பெற்றது. சுகயீன விடுமுறைப் போராட்டத்தின் போது நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மின்சார ஊழியர்கள் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆகையால், நீதிமன்ற உத்தரவானது நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு எதிராகப் போராட முயற்சிக்கும் அனைத்து ஊழியர்களின் கைகளையும் கட்டிப்போடுகின்றது.

நேற்றைய தினம் இ.மி.ச. நிர்வாகம் 15 ஊழியர்களை வேலை இடைநீக்கம் செய்து கடிதங்களை அனுப்பியது. சுகயீன விடுமுறைப் பிரச்சாரத்தின் போது நிறுவனத்தின் கட்டண பகுதிகளை மூடி, மின்சார நுகர்வோரை “அசௌகரியப்படுத்தினர்” என அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்களின் விடுமுறை இரத்து மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் (EPSA) ஆகியவற்றை மீறி தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கன காரணத்தை விளக்குமாறு கோரி நிர்வாகம் அனுப்பிய கடிதங்களைப் பெற்றுள்ளனர். அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் இ.மி.ச. மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தொழிற்சங்க நடவடிக்கை தடை செய்யப்பட்டுள்ளது. சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இ.மி.ச. நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகளின் கீழ் இலங்கை துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது தொழிற்சங்கங்களுக்கு எதிராக இதே போன்ற நீதிமன்ற உத்தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஜனவரி 9 அன்று, கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி, அகில இலங்கை பொதுத் துறைமுக ஊழியர் சங்கத்திற்கு (ACGPEU) சம்பள அதிகரிப்பு கோரி ஒத்துழையாமை பிரச்சாரத்தை நடத்துவதைத் தடைசெய்யும் உத்தரவை நீட்டித்தார். டிசம்பர் 28 முதல் ஒத்துழையாமை பிரச்சாரத்தைத் தொடங்க தொழிற்சங்கம் திட்டமிட்டிருந்தது.

இந்த வார நீதிமன்ற உத்தரவும், இ.மி.ச. நிர்வாகத்தின் தொழிலாளர்களை வேட்டையாடுவதும், தனியார்மயமாக்கலுக்காக ஒதுக்கப்பட்ட ஏனைய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் மீது இன்னும் ஆழமான ஜனநாயக விரோத அரசாங்க தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படுவதையும் பல்லாயிரக்கணக்கான தொழில்கள் அழிக்கப்படுவதையும் முன்னறிவிக்கிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு தொழிற்சங்க தலைமைத்துவம் பொறுப்பாகும். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபட்ட தொழில்துறை போராட்டத்திலும் அரசியல் நடவடிக்கைகளிலும் அணிதிரட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் சிதறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அதே நேரம், அரசாங்கத்தின் போக்கை மாற்றுவதற்கு அதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று வலியுறுத்துகின்றனர். இந்த அரசியல் கற்பனையுடன், தொழிலாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களை உணர்த்த முடியும் என்ற பொய்யான கூற்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ள தனியார்மயமாக்கல் உட்பட அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் எதனையும் தடுக்க முடியாது என்பதை நீதிமன்றங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. கடந்த ஆண்டு, இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றமானது கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தில் இருந்து 292 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான தொழிற்சங்க மனுவை நிராகரித்ததுடன் நீதித்துறை “அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடையாக இருக்காது” என்று வலியுறுத்தியது.

தற்போது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, இலங்கைத் தொழிலாளர்களின் தொழில்துறை போராட்ட நடவடிக்கை அதிகரித்து வருவதையிட்டு விக்கிரமசிங்க அரசாங்கம் அச்சமடைந்துள்ள நிலையில், இந்த அச்சத்தை தொழிற்சங்கத் தலைமைத்துவமும் உணர்கின்றது.

ஜனவரி 3-5 திகதிகளில் இ.மி.ச. ஊழியர்கள் நடத்திய சுகயீன விடுமுறைப் போராட்டத்தைத் தொடர்ந்து, அதிக பணவீக்கம் மற்றும் இந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியம் திணித்துள்ள பெறுமதி சேர் வரி அதிகரிப்பை சமாளிக்க சம்பள உயர்வு கோரி ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த வாரமும், செவ்வாய்கிழமையும், பல்லாயிரக்கணக்கான சுகாதாரத் துறை ஊழியர்கள், 35,000 ரூபாய் ($100) “விசேட” மாதாந்திர கொடுப்பனவைக் கோரி நாடு தழுவிய அளவில் போராட்ட நடவடிக்கை எடுத்தனர். வியாழனன்று 17 அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 14,000ம் கல்விசாரா ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இ.மி.ச.யின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பிரதிபலித்த இ.மி.ச. தொழிற்சங்கங்கள், ஜனவரி 3 முதல் 5 வரையில் தாங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக நிர்வாகத்திற்கு எழுதுமாறு தங்கள் உறுப்பினர்களை மனநிறைவுடன் வழிநடத்தியுள்ளனர். நிர்வாகத்தினதும் அரசாங்கத்தினதும் அடக்குமுறையை நிறுத்தாத இந்த வேண்டுகோள், அரசாங்கம் மற்றும் அதன் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப் போராட்டம் வளர்ச்சியடைவதைத் தடுப்பதை இலக்காகக் கொண்டதாகும்..

தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மற்றும் அவர்களது சொந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டில் உள்ள நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதே, இ.மி.ச. தொழிலாளர்களும் ஒட்டுமொத்த இலங்கைத் தொழிலாள வர்க்கமும் இந்தத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை தெளிவாக்குவது போல்: “இலங்கை தொழிலாளர்கள் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்பி, தொழிலாளர்கள் மீதான ஒவ்வொரு அரசாங்கத் தாக்குதலையும் தோற்கடிக்க ஐக்கியப்பட்ட நடவடிக்கையை ஒழுங்கமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும், “எங்கள் இ.மி.ச. சகாக்களுக்கு எதிரான பழிவாங்கலை நிறுத்து!” மற்றும் “அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை இரத்துச் செய்!” என்று கோருவதற்கு ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்.

இலங்கைத் தொழிலாளர்களும் அவர்களது நடவடிக்கைக் குழுக்களும், இ.மி.ச. நிர்வாகம் அதன் அனைத்து தடைகளையும் “விளக்கம் கோரும் கடிதங்களையும்” விலக்கிக்கொள்ள வேண்டும், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிரான எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் கைவிட வேண்டும் மற்றும் அனைத்து “கட்டளைகளையும்” இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோர வேண்டும்.

இ.மி.ச. தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவத் தயாராக இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது: மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

தொலைபேசி/வட்ஸப்: 0773562327.

Loading