முன்னோக்கு

தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்

பகுதி நான்கு

இது நான்கு பகுதிகளைக் கொண்ட அறிக்கையின் நான்காவது பகுதி ஆகும். 

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும் சோசலிசத்திற்கான போராட்டமும்

1. இந்த அறிக்கையின் முந்தைய பகுதிகள் 2024 இன் தொடக்கத்தில் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியின் முக்கிய கூறுகளில் கவனம் செலுத்தியுள்ளன: அவைகளாவன 1) அமெரிக்காவால் தலைமையேற்று வழிநடத்தப்பட்டுவரும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் விரிவாக்கமும், இதன் விளைவாக ரஷ்யாவுக்கு எதிரான பினாமிப் போர், சீனாவுக்கு எதிரான போருக்கு வெளிப்படையான தயாரிப்பு மற்றும் காஸாவில், இனப்படுகொலையை அரசு கொள்கையின் சட்டபூர்வமான கருவியாக ஏற்றுக்கொள்வது; 2) கோவிட்-19 பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதற்கும், உலகெங்கிலுமுள்ள எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்களை நோய், பலவீனம் மற்றும் இறப்புகளிலிருந்து காப்பாற்றுவதற்கும் அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை வேண்டுமென்றே நிராகரிப்பதன் மூலம் சமூகக் கொள்கையில் ஒரு பாரிய பின்னடைவு; 3) முதலாளித்துவ சமூகத்தின் மேல் மட்டங்களில் செல்வத்தின் அதீத குவிப்பும், இதன் விளைவாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் உலகளாவிய அளவிலும் அதிர்ச்சியூட்டும் சமூக சமத்துவமின்மை நிலவுகிறது; 4) உலகெங்கிலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் சிதைவு மற்றும் உடைவு மற்றும் 1930 களில் இருந்து காணப்படாத அளவில், எதேச்சதிகார மற்றும் பாசிச அரசியல் அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களின் எழுச்சிகள், ஆகியவைகளாகும்.

2. நாகரீகத்தை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து பிரிக்கும் “சிவப்புக் கோடுகள்” அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. முதலாளித்துவ அரசாங்கங்களின் குறிக்கோள் இதுதான்: அதாவது “குற்றமற்ற எதுவும் நமக்கு அன்னியமானது அல்ல.” அணுஆயுதப் போர் “இயல்பாக்கப்படுகிறது”, இனப்படுகொலை “இயல்பாக்கப்படுகிறது”, பெருந்தொற்று நோய்கள் மற்றும் பலவீனமானவர்கள் மற்றும் வயதானவர்களை வேண்டுமென்றே கொல்வது “இயல்பாக்கப்பட்டுள்ளது”, செல்வக் குவிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மையின் அளவிட முடியாத அளவுகள் “இயல்பாக்கப்பட்டுள்ளன”, ஜனநாயகத்தை நசுக்குவதும், எதேச்சதிகாரம் மற்றும் பாசிசத்தை நாடுவதும் “இயல்பாக்கப்படுகின்றன.”

3. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், சமூக காட்டுமிராண்டித்தனத்தின் பல்வேறு வடிவங்களின் இயல்பாக்கம் முதலாளித்துவ வர்க்கம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. பல்வேறு வகையான சமூகக் கொலைக் கொள்கைகளைக் கொண்ட ஒரு வர்க்கம் அதன் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சட்டபூர்வத்தன்மையை தெளிவாக இழந்துவிட்டது.

4. முதலாளித்துவத்தை அழிவை நோக்கித் தள்ளும் முரண்பாடுகள், அது தூக்கியெறியப்படுவதற்கான நிலைமைகளையும், சமூகத்தை ஒரு புதிய மற்றும் முற்போக்கான, அதாவது சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றன என்ற வரலாற்றுரீதியாக சரிபார்க்கப்பட்ட உண்மை இல்லாவிட்டால், மனிதகுலத்தின் வாய்ப்புகள் இருண்டதாக இருந்திருக்கும். இந்த மறுஒழுங்கமைப்பிற்கான சாத்தியக்கூறு தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இருப்பில் வேரூன்றியுள்ளது. வர்க்கப் போராட்டம் என்பது நடைமுறையில் சோசலிச மறுஒழுங்கமைப்பின் புறநிலை சாத்தியத்தை அடைவதற்கான வழிமுறையாகும்.

5. எனவே வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த ஆண்டு தொடங்குகின்ற நிலையில், முதலாளித்துவத்தின் நெருக்கடி எந்த அளவிற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்விளைவான இயக்கத்தை உருவாக்கியுள்ளது?

6. 2023 சமூகப் போராட்டங்களை ஆராய்ந்தால், வர்க்கப் போராட்டத்தின் கணிசமான அளவுரீதியான மற்றும் பண்புரீதியான வளர்ச்சிக்கு தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. சுரண்டல், வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய எதிர்ப்பு வடிவங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையானது சந்தேகத்திற்கிடமின்றி அதிகரித்திருப்பது இதன் அளவுரீதியானதாகும். பண்புரீதியான வளர்ச்சி என்பது வர்க்கப் போராட்டத்தின் பூகோளரீதியான மட்டமாகும், தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தின் தேசிய எல்லைகளைத் துடைத்தெறிந்து ஒரு சர்வதேசத் தன்மையை அடைகின்ற போக்கு ஆகும்.

பிப்ரவரி 7, 2023 அன்று பாரிஸில், பிரான்சின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். [AP Photo/Michel Euler]

7. இந்த நிகழ்ச்சிப்போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் 1988 ஆம் ஆண்டிலேயே எதிர்பார்க்கப்பட்டது. உற்பத்தி செயல்முறையின் அதிகரித்துவரும் பூகோளமயமாக்கல் மற்றும் நாடுகடந்த பெருநிறுவனங்களின் தோற்றம் ஆகியவற்றின் தாக்கங்களை ஆராய்ந்து, ஆகஸ்ட் 30, 1988 அன்று தொழிலாளர் கழகத்தின் (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) பதின்மூன்றாவது தேசிய காங்கிரசில் முன்வைக்கப்பட்ட தொடக்க அறிக்கை பின்வருமாறு கூறியது:

பாட்டாளி வர்க்கப் போராட்டங்களின் அடுத்த கட்டம், புறநிலைப் பொருளாதாரப் போக்குகள் மற்றும் மார்க்சிஸ்டுகளின் அகநிலை செல்வாக்கு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அழுத்தத்தின் கீழ், ஒரு சர்வதேசியப் பாதையில் தவிர்க்கவியலாமல் அபிவிருத்தியடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறுத்துக் கொள்ள முனையும்; இந்த உள்ளார்ந்தப் போக்கின் வெளிப்பாடாக இருக்கும் மார்க்சிச சர்வதேசியவாதிகள், இந்த நிகழ்முறையை வளர்த்து அதற்கு நனவான வடிவம் கொடுப்பார்கள். [நான்காம் அகிலம், ஜூலை-டிசம்பர் 1988, ப. 39]

8. இந்த முன்னோக்கானது, நிகழ்வுகளால் சரிபார்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை அதிகரிக்கும் போக்கு தொடர்ந்தது. “சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலுமுள்ள நாடுகளை உலுக்கிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் அலை 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது” என்று சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையானது (Carnegie Endowment for International Peace) டிசம்பரில் தெரிவித்தது. இதில் 83 வெவ்வேறு நாடுகளில் புதிய போராட்டங்களும் அடங்குகின்றன. “கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய போராட்டங்களை சந்திக்காத ஏழு நாடுகளும் இந்தக் குழாமில் இணைந்தன: டென்மார்க், பிரெஞ்சு பொலினீசியா, மொசாம்பிக், நோர்வே, அயர்லாந்து குடியரசு, சுரினாம் மற்றும் ஸ்வீடன் ஆகியவையாகும். மேலும், ஹங்கேரியில் ஆசிரியர்களின் போராட்டங்கள், பங்களாதேஷில் ஆளும் கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் துனிசிய ஜனாதிபதி கைஸ் சயீத்தின் ஜூலை 2021 ‘சுய-ஆட்சிக்கவிழ்ப்பு’ மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான அவரது ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பைக் காட்டுவது உட்பட இந்த ஆண்டுக்கு முன்னர் தொடங்கிய சில ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன” என்று அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

9. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரால் விரைவுபடுத்தப்பட்ட விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், பாகிஸ்தான், போர்த்துக்கல் மற்றும் ஸ்லோவேனியா உட்பட பல நாடுகளில் நடந்தன. கானா மற்றும் நைஜீரியாவில் பணக்கொள்கை மற்றும் பணத்தட்டுப்பாடு குறித்த குறைகள் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டின. பிரான்சில், தேசிய ஓய்வூதிய வயதை அறுபத்திரண்டுலிருந்து அறுபத்து நான்கு ஆக உயர்த்திய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டை சீற்றமடையச் செய்தன. செக் குடியரசு மற்றும் பல இந்திய மாநிலங்களிலும் ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

பிப்ரவரி 1, 2023, வையிட்ஹாலில் நடந்த தொழிற்சங்க காங்கிரஸ் பேரணியில் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் [Photo: WSWS]

10. பிரிட்டனில் நூறாயிரக்கணக்கான இரயில்வே தொழிலாளர்கள், கப்பல்துறைத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பிரிவு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வேலைநிறுத்தங்களும் இருந்தன. அவைகள் 2022 நடுப்பகுதியில் இருந்து 2023 வரை தொடர்ந்தன. போர்த்துக்கல், பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியில் பெரும் வேலைநிறுத்தங்கள், கியூபெக்கில் 420,000 பொதுத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், அதிதீவிர வலதுசாரிக் கட்சியான சட்டம் மற்றும் நீதிக் கட்சிக்கு (Law and Justice Party) எதிராக போலந்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் ஆர்ப்பாட்டங்கள், மற்றும், காஸா இனப்படுகொலைக்கு முன்னர், நெதன்யாகுவின் ஜனநாயக விரோத நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராக இஸ்ரேலில் நூறாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்களும் அடங்கும். இந்த ஆண்டு முடிவடையும் தருவாயில், ஆர்ஜென்டினாவின் புதிய அதிவலது ஜனாதிபதி ஜேவியர் மிலேக்கு எதிராக பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.

11. கடந்த ஆண்டு அமெரிக்காவில் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டது, இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும், தொழிலாள வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளிலும் போராட்டங்கள் உள்ளடக்கியிருந்தன. 2023 ஆம் ஆண்டில், 1,000ம் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 36 பெரிய வேலைநிறுத்தங்கள் நடந்திருந்தன, இது 2022 இல் 23 ஆக இருந்தது என்று தொழிலாளர் புள்ளிவிவர பணியகம் (Bureau of Labor Statistics) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பெரிய வேலைநிறுத்தங்களில் கிட்டத்தட்ட 500,000ம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர், இது 2022 இல் வேலைநிறுத்தம் செய்த 120,600 தொழிலாளர்களை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். அக்டோபர் 2023 இல், வேலைநிறுத்தங்கள் காரணமாக 4.5 மில்லியன் நாட்கள் இழக்கப்பட்டன, இது நான்கு தசாப்தங்களில் எந்த மாதத்திலும் நடந்ததை விட மிக அதிகமாகும். முக்கிய வேலைநிறுத்தங்களில் (12) மூன்றில் ஒரு பங்கு செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களை உள்ளடக்கியிருந்தது, இதில் 75,000ம் கைசர் (Kaiser) நிரந்தர தொழிலாளர்களும் அடங்கியிருந்தனர். மேலும் 7 வேலைநிறுத்தங்களில் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களும் உள்ளடங்கியிருந்தனர்.

12. கார்னெல் பல்கலைக்கழக தொழில்துறை மற்றும் தொழிலாளர் உறவுகள் (Cornell University School of Industrial and Labor Relations) கல்லூரியின் வேலைநிறுத்தங்களின் தரவுத்தளம் 508,000ம் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அளவுகளிலும் 421 வேலைநிறுத்தங்கள் நடந்ததாக தெரிவிக்கிறது. இதில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களின் 70 வேலைநிறுத்தங்களும் அடங்கும், இது ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தது, இது முந்தைய ஆண்டை விட 59 சதவீதம் அதிகமாகும். 2023 ஆம் ஆண்டில் அனைத்து அளவுகளின் மொத்த வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை 2022 இல் இருந்ததைப் போலவே (424 உடன் ஒப்பிடும்போது 421), வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 224,000 லிருந்து 508,000 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள பாரமவுண்ட் பிக்சர்ஸ் முன்பு WGA எழுத்தாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். [Photo: WSWS]

13. வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தில் 11,000ம் எழுத்தாளர்கள் மற்றும் 65,000ம் நடிகர்களின் ஈடுபாடு பங்குபற்றலானது, முன்னர் தங்களை “நடுத்தர வர்க்கம்” என்று கருதிய மக்கள்தொகையின் வளர்ந்து வரும் அடுக்குகளை உள்ளடக்கிய தொழிலாள வர்க்கத்தின் வரையறையை விரிவுபடுத்துவதை வெளிப்படுத்தியது. மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு மகத்தான ஆற்றலைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட விஞ்ஞானத்தில் புரட்சிகர முன்னேற்றங்கள் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப தொழிலாளர்களின் சுரண்டலை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பரந்த மறுசீரமைப்பை எளிதாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

14. வர்க்கப் போராட்டத்தின் இந்த உலகளாவிய வளர்ச்சியுடன், காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான ஒரு வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கம் 2023 இன் கடைசி மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது, மற்றும் இந்த புத்தாண்டிலும் தொடர்ந்து நிகழும். ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிரான 2003 ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், உலக முதலாளித்துவத்தின் உடைவில் மிகவும் முன்னேறிய கட்டத்தில் நடைபெறும் இது, ஏற்கனவே மிகப் பெரிய மற்றும் மிகவும் நீடித்த போர்-எதிர்ப்பு இயக்கமாகும். ஒவ்வொரு வாழத்தகுந்த கண்டத்திலுமுள்ள நூற்றுக்கணக்கான நகரங்களில், மில்லியன் கணக்கான மக்கள் இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வீதிகளில் இறங்கியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் சமூகத்தின் பரந்த பன்முகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன. இதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

15. ஏகாதிபத்திய நாடுகளில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் லண்டனில் நடந்துள்ளன (நவம்பர் 11 அன்று கிட்டத்தட்ட 1 மில்லியன் மற்றும் பல போராட்டங்களில் 100,000 பேர்கள்); வாஷிங்டன் டி.சி (நவம்பர் 4 அன்று 300,000 க்கும் மேற்பட்டவர்கள்); நியூயோர்க் நகரம், சிக்காகோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் (பல ஆர்ப்பாட்டங்களில் 10,000 பேர்கள்); சிட்னி மற்றும் மெல்போர்ன் (நவம்பர் 12 அன்று தலா 50,000 க்கும் மேல்); பேர்லின் (போலீஸ் தடையை மீறி அக்டோபர் 28 அன்று 10,000 க்கும் மேற்பட்டவர்கள்); பாரிஸ் (அக்டோபர் 22 அன்று 15,000 க்கும் மேற்பட்டவர்கள்); ஆம்ஸ்டர்டாம் (அக்டோபர் 15 அன்று 15,000 க்கும் மேல்); ரொறன்ரோ (அக்டோபர் 10 அன்று 15,000 க்கும் மேற்பட்டவர்கள்); மற்றும் டோக்கியோ (நவம்பர் 20 அன்று 1,500). இனப்படுகொலைக்கு எதிராக, குறிப்பாக அரபு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் ஆர்ப்பாட்ட எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோவில் சுகாதார ஊழியர்களின் அணிவகுப்பு, அக்டோபர் 28, 2023. [Photo: WSWS]

16. இனப்படுகொலையையும் பூகோளரீதியான போராட்டங்களையும் மூடிமறைக்க பெருநிறுவன ஊடகங்கள் இயன்ற அனைத்தையும் செய்துள்ளன. போரின் யதார்த்தம் மற்றும் அதற்கு எதிரான எதிர்ப்புக்களை சமூக ஊடகங்கள் மூலம் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த முன்னேற்றங்களை வெகுஜன மக்கள் நெருக்கமாகப் பின்பற்றி போராட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் விளைவாக, இந்த சமூகத் தளங்களைக் கட்டுப்படுத்தும் தன்னலக்குழுக்கள், குறிப்பாக எலான் மஸ்க் (Twitter/X) மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் (பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ்) ஆகியோர் வெளிப்படையான தணிக்கையை அதிகளவில் நாடுகின்றனர்.

17. வர்க்கப் போராட்டத்தின் பூகோளரீதியான மீளெழுச்சியின் ஆரம்ப கட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டப் போராட்டங்களின் புறநிலை முக்கியத்துவத்திலிருந்து அது விலகிச் செல்லவில்லை. புறநிலை நெருக்கடியின் முன்னேறிய மட்டத்திற்கும் இந்த நெருக்கடியின் அகநிலை புரிதலுக்கும் தொழிலாள வர்க்கத்தின் நனவில் அதன் அரசியல் தாக்கங்களுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி உள்ளது. சமூக ஜனநாயக, முன்னாள் ஸ்ராலினிச மற்றும் குட்டி முதலாளித்துவ போலி-இடது அமைப்புகளின் பல்வேறு வடிவங்களில் பிற்போக்கு ஏகாதிபத்திய-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளால் தொழிலாளர்களின் போராட்டங்கள் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதில் இந்த இடைவெளி முதலாவதாகவும் முதன்மையாகவும் வெளிப்பாட்டைக் காண்கிறது.

18. ஒவ்வொரு நாட்டிலும், தொழிலாளர்களின் போராட்டங்கள் பெருநிறுவன சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்க இயந்திரத்தால் கழுத்து நெரிக்கப்பட்டன, அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பகுதியாக செயல்படும் பல்வேறு இடது மற்றும் போலி-இடது அமைப்புகளால் வெகுஜன போராட்டங்கள் மூச்சுத்திணறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன.

19. பிரான்சில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான எதிர்ப்பு மிகப்பெரியதாக இருந்தது. மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் அவற்றை நிறுத்தித் தடுப்பதற்காக ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்தனர். எவ்வாறெனினும், CGT மற்றும் CFDT தொழிற்சங்க அதிகாரத்துவங்களானது ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை கலைக்கவும் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும் வேலைசெய்தன. மக்ரோன் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ அல்லது பாராளுமன்ற அமைப்புகள் மூலமாகவோ ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலை நிறுத்த முடியும் என்ற கட்டுக்கதையை அவர்கள் ஊக்குவித்தனர், அதே நேரத்தில் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கும் இடையிலான தொடர்பை மூடிமறைத்தனர். இறுதியில், மக்ரோன் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தந்திரோபாயத்தை மேற்கொண்டதன் மூலம் இந்த வெட்டுக்களை கட்டாயப்படுத்த முடிந்தது. அதே நேரத்தில் தொழிற்சங்கங்கள் அதைத் தொடர்ந்து நடந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தனிமைப்படுத்தவும் நசுக்கவும் வேலை செய்தன.

20. இலங்கையில், விலைவாசி உயர்வு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு சீர்திருத்தங்கள் குறித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜூலை 2022 இல் இராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தியது. முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) போன்ற குழுக்களின் ஆதரவுடன் தொழிற்சங்க இயந்திரம், இந்த எதிர்ப்புக்களை பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் மற்றும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகளுக்குள் வைத்திருக்க வேலை செய்தன. முழுவதிலும் மிகவும் வெறுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷவுக்குப் பதிலாக பதவியேற்றார். கடந்த ஆண்டு முழுவதும், விக்கிரமசிங்க அனைத்து பிரதான முதலாளித்துவ கட்சிகளுடனும் இணைந்து, 2023 இன் இறுதியில், அடிப்படை பொருட்களின் விலையை கூர்மையாக அதிகரிக்கும் மற்றும் வறுமையில் கூர்மையான அதிகரிப்பைக் கொண்டுவரும் புதிய வரிகள் உட்பட, இராஜபக்ஷ ஆதரித்த அதே சர்வதேச நாணய நிதியக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக செயற்பட்டு வருகிறார்.

2023 பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைவர்களுடன் கலந்து கொண்டார். [Photo by Sri Lanka president’s media division]

21. அமெரிக்காவில், 2023 இன் அனைத்து முக்கிய வேலைநிறுத்தங்களும் பைடென் நிர்வாகத்துடன் நெருக்கமாக பணியாற்றி, தொழிற்சங்க இயந்திரத்தால் தனிமைப்படுத்தப்பட்டு முடிவிற்கு கொண்டுவரப்பட்டன. தொழிற்சங்கத் தலைவர் ஷான் ஃபைன் தலைமையில் UAW தொழிற்சங்கமானது, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஒரு போலியான “வரம்புக்கு உட்பட்ட வேலைநிறுத்தத்தை” நடத்தியது. இது, மிகப் பெரும் மூன்று வாகன நிறுவனங்களில் (Big Three) பணியிலுள்ள 145,000ம் தொழிலாளர்களின் பெரும்பகுதியை, அவர்களின் கோரிக்கைகள் எதையும் பூர்த்தி செய்யாத விற்றுத்தள்ளல் ஒப்பந்தங்கள் மீது தொழிலாளர்கள் வாக்களிக்கும் முன்பே, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) உட்பட போலி-இடது குழுக்களால் ஃபெய்ன் இதற்குப் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டதுடன், இது நேரடியாக பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க இயந்திரத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

22. UAW இன் நடவடிக்கைகள் தனித்துவமானவை அல்ல. எல்லா இடங்களிலும், தொழிற்சங்கங்கள் தனித்துவமான சமூக நலன்களைக் கொண்ட ஒரு உயர்-நடுத்தர வர்க்க அடுக்குகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவைகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தொழிலாளர்களின் நலன்களிலிருந்து சுயாதீனமானவையாகவும் மற்றும் விரோதமானவையாகவும் இருக்கின்றன. நூறாயிரக்கணக்கான தனிநபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள அமெரிக்காவில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒட்டுமொத்த வருமானம் பல பில்லியன் டாலர்கள் ஆகும். UAW தொழிறுசங்கத்தின் டெட்ராய்ட் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதியம் 75 மில்லியன் டொலர்களை தாண்டுகிறது. AFL-CIO தொழிற்சங்கத்துடன் இணைந்த தொழிற்சங்கங்களிலுள்ள உயர்மட்ட நிர்வாகிகளான, அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் ராண்டி வெய்ன்கார்டன் போன்றவர்கள், தொழிற்சங்கங்களின் சாமானிய உறுப்பினர்களின் ஊதியத்தை விட பத்து முதல் இருபது மடங்கு அதிகமாக, கணிசமான ஆறு இலக்க சம்பளங்களைப் பெறுகின்றனர்.

23. 1940ல் ட்ரொட்ஸ்கி “ஏகாதிபத்தியத்தின் அழியும் சகாப்தம்” என்று அவர் அழைத்ததில் தொழிற்சங்கங்களின் சீரழிவை இவ்வாறு பகுப்பாய்வு செய்தார்.

உலகம் முழுவதிலும் நவீன தொழிற்சங்க அமைப்புகளின் வளர்ச்சியில், அல்லது இன்னும் சரியாகச் சொல்வதானால், சீரழிவில் ஒரு பொதுவான அம்சம் உள்ளது: அதாவது அவைகள் அரசு அதிகாரத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து வளர்வதே ஆகும். இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிப்போக்கு நடுநிலை எனப்பட்ட, சமூக-ஜனநாயக, கம்யூனிஸ்ட் மற்றும் ‘அராஜகவாத’ தொழிற்சங்கங்களிடையே சமமாக பகிரப்பட்ட பண்பாகும். இந்த உண்மை மட்டுமே “ஒன்றாக வளர்ச்சியடையும்” போக்கு இந்த அல்லது அந்த கோட்பாட்டில் உள்ளார்ந்ததாக இல்லை, மாறாக அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் பொதுவான சமூக நிலைமைகளிலிருந்து பெறப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

ஏகபோக முதலாளித்துவமானது போட்டி மற்றும் கட்டுப்பாடற்ற தனியார் முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதற்கு பதிலாக, இது மையப்படுத்தப்பட்ட கட்டளையை நம்பியுள்ளது. பலமான அறக்கட்டளைகள், சிண்டிகேட்கள், வங்கிக் கூட்டமைப்புகள் போன்றவற்றின் தலைமையில் இருக்கும் முதலாளித்துவக் கும்பல்கள், பொருளாதார வாழ்க்கையை அரசு அதிகாரத்துவத்தைப் போலவே அதே உயரத்திலிருந்து பார்க்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் பிந்தையவர்களின் (அரசு அதிகாரத்துவம்) ஒத்துழைப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. தொழில்துறையின் மிக முக்கியமான கிளைகளிலுள்ள தொழிற்சங்கங்கள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து இலாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை பெறமுடியாமல் இழக்கின்றன. அரசு அதிகாரத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ள ஒரு மையப்படுத்தப்பட்ட முதலாளித்துவ எதிரியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். எனவே, தொழிற்சங்கங்கள் (அவர்கள் சீர்திருத்தவாத நிலைப்பாட்டில் இருக்கும் வரை, அதாவது, தனியார் சொத்துக்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் நிலைகளில்) முதலாளித்துவ அரசுக்கு தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும், அதன் ஒத்துழைப்பிற்காகப் போராடவும் வேண்டும்.

மெக்சிகோவில் லியோன் ட்ரொட்ஸ்கி

24. 84 ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியால் அடையாளம் காணப்பட்ட போக்கு, தற்போது “தொழிற்சங்கங்கள்” என்று வர்ணிக்கப்படும் அமைப்புக்கள் நடைமுறையில், இச்சொல்லின் வரலாற்று அர்த்தத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்காத அளவுக்கு அசுரத்தனமான மாற்றங்களை அடைந்துள்ளது. “ஏகாதிபத்திய அழிவின் சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள்” என்ற தனது 1940 ஆண்டு கட்டுரைக்கு முன்பே, ட்ரொட்ஸ்கி (1937 இல்) ஒரு குறிப்பிட்ட அமைப்பின் புறநிலை பாத்திரத்தின் அடிப்படையில் அல்லாமல், அதன் உத்தியோகபூர்வ தலைப்பின் அடிப்படையில் கொள்கையை தீர்மானிக்கும் அளவிற்கு, கலைச்சொல்லின் வழிபாட்டு மோகத்தை உருவாக்கும் போக்குக்கு எதிராக எச்சரித்தார். அவர் பின்வருமாறு எழுதினார்:

தொழிற்சங்கம் போன்ற ஒரு தொழிலாளர் அமைப்பின் பண்பானது தேசிய வருமானப் பகிர்வுடன் அதன் உறவால் தீர்மானிக்கப்படுகிறது. கிரீன் அண்ட் கம்பெனி [அந்த நேரத்தில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் தலைமைகள்] உற்பத்திச் சாதனங்களில் தனியார் சொத்துடைமையைப் பாதுகாக்கிறார்கள் என்ற உண்மை அவர்களை முதலாளித்துவ வர்க்கத்தினராக வகைப்படுத்துகிறது. இந்த கனவான்கள் கூடுதலாக தொழிலாளர்களின் மீதான தாக்குதல்களில் இருந்து முதலாளித்துவ வர்க்கத்தின் வருமானத்தை பாதுகாக்க வேண்டுமா; வேலைநிறுத்தங்களுக்கு எதிராக, ஊதிய உயர்வுக்கு எதிராக, வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு எதிராக அவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டுமா; அப்போது நாங்கள் கருங்காலிகளின் அமைப்பைத்தான் கொண்டிருப்போம், தொழிற்சங்கம் அல்ல. [”தொழிலாளர் வர்க்கத்தின் அரசோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் அரசோ அல்ல“]

25. ட்ரொட்ஸ்கியின் அளவுகோல்களைப் பயன்படுத்தி, பிரதான தேசிய தொழிற்சங்க அமைப்புக்களும் மற்றும் கூட்டமைப்புகளும் வார்த்தையின் மிகவும் நேரடியான அர்த்தத்தில் கூட ,”கருங்காலி” அமைப்புகளாக செயல்படுகின்றன. அனைத்துலகக் குழுவின் பிரிவுகளின் பணியானது, தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக சாமானியர்களின் ஒரு முழு அளவிலான கிளர்ச்சியைத் தயாரிப்பதில் தொழிலாள வர்க்கத்திற்கு உதவுவதும், தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் போர்க்குணமிக்க சாமானிய அமைப்புகளிற்கு அனைத்து முடிவெடுக்கும் அதிகாரமும் மாற்றப்படும் புதிய வடிவங்களை அபிவிருத்தி செய்வதும் ஆகும். இந்த அணுகுமுறை இடைமருவு வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, அதில் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் காரியாளர்களை “முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான வெகுஜன போராட்டத்தின் பணிகளுக்கு மிகவும் நெருக்கமாக தொடர்புடைய சுயாதீனமான போர்க்குணமிக்க அமைப்புக்களை சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் உருவாக்க வேண்டும்; தேவைப்பட்டால், தொழிற்சங்கங்களின் பழமைவாத இயந்திரத்துடன் ஒரு நேரடி உடைவை எதிர்கொண்டாலும் கூட பின்வாங்கக்கூடாது” என்று குறிப்பிட்டார்.

26. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் அமைப்புக்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழிற்சங்க இயந்திரத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து தொழிலாளர்களை விடுவிக்க போராடி வருகிறது. 2021 ஏப்ரலில் சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கான (IWA-RFC) முன்முயற்சியைத் தொடங்கியபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, “தொழிலாள வர்க்கத்தை மோதலிடும் பிரிவுகளாகப் பிளவுபடுத்துவதற்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் எண்ணற்ற வடிவிலான தேசிய, இன மற்றும் இனப் பேரினவாதம் மற்றும் அடையாள அரசியலின் பிற்போக்கு முன்மொழிவாளர்களின் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து, ஒரு பொதுவான உலகளாவிய போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த பாடுபடும்” என்று விளக்கியது.

இயற்கையாகவே, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம், நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன, மேலும் இவைகள் தந்திரோபாயங்களின் தேர்வில் செல்வாக்கு செலுத்தலாம். ஆனால் எல்லா நாடுகளிலும், தற்போதுள்ள அதிகாரத்துவ தொழிற்சங்கங்கள், வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக ஆளும் உயரடுக்கின் மற்றும் அவற்றின் அரசாங்கங்களின் பெருநிறுவன மற்றும் நிதிய நலன்களைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட பொலிஸ் படையாக செயல்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

27. தொழிற்சங்க அதிகாரத்துவம் சாமானியர்கள் மத்தியில் சோசலிச செல்வாக்கை அபிவிருத்தி செய்வதைத் தடுக்க தேவையான எந்த வழியையும் கையாளும். ஆனால் அதன் வளங்கள் இருந்தபோதிலும், முதலாளித்துவ அரசு மற்றும் போலி-இடதுகளின் ஆதரவால் பெருக்கப்பட்ட போதிலும், அது தோற்கடிக்க முடியாதது அல்ல. அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போர்க்குணம் முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியால் உந்தப்பட்டு வருகிறது. தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் செயலூக்கத்துடன் பங்கெடுப்பதும், முதலாளித்துவத்தை தூக்கியெறிவதையும் உலகளவில் தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதையும் நோக்கமாகக் கொண்ட முற்றிலும் நனவுடன் இயக்கப்படும் ஒரு முழுமையான சோசலிச முன்னோக்குடன் போர்க்குண உணர்வை ஊட்டுவதே கட்சி எதிர்கொள்ளும் பணியாகும்.

28. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலக சோசலிச வலைத் தளத்தின் புத்தாண்டு அறிக்கையானது ஜனவரி 3, 2020 அன்று “சோசலிசப் புரட்சியின் தசாப்தம் தொடங்குகிறது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. உலக நிலைமை குறித்த இந்த மதிப்பீடு நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகளின் அரசியல் திவாலானவர்களுக்கு ஒரு நல்ல சிரிப்பைத்தான் ஏற்பத்தியது என்பதில் சந்தேகமில்லை. முதலாளித்துவ மேலாதிக்கத்தை விட, குறிப்பாக அதன் வட அமெரிக்க கோட்டைக்குள் வெல்ல முடியாதது எதுவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் 2020 களில் ஒரு புரட்சிகர நெருக்கடியின் தொடக்கத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று கருதியது மட்டுமல்லாமல் , இருபத்தோராம் நூற்றாண்டின் எஞ்சிய 76 ஆண்டுகளில் ஒரு சோசலிசப் புரட்சியை அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை நிராகரிக்கும் போலி-இடதுகளின் அரசியல் நடைமுறையானது, முதலாளித்துவத்தின் நிரந்தரத்தன்மையில் அசைக்க முடியாத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

29. ஆனால் ஜனவரி 2020 முதல் நடந்தவைகள் அனைத்தும் அனைத்துலகக் குழுவின் அரசியல் முன்கணிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளன. புதிய தசாப்தத்தின் முதல் மாதம் முடிவதற்குள், கோவிட்-19 உலகம் முழுவதும் பரவியது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து, அரசியலமைப்பை தூக்கியெறிந்து ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க ட்ரம்ப் மற்றும் அவரது கும்பலால் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மூன்று மற்றும் நான்கு ஆண்டுகள் தீவிரமடைந்து வரும் போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பெருகிய சமூக எதிர்ப்பால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டுள்ளன.

30. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி தணியும் என்றும் அதன் அறிகுறிகள் ஒரு குறுகிய கால காய்ச்சல் போல குறையும் என்றும் நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. மாறாக, நெருக்கடி தீவிரமடைந்து, தொழிலாள வர்க்கத்தின் பூகோளரீதியான எதிர்ப்பும் மேலும் உறுதியான மற்றும் அரசியல் நனவுடன் வளர்ச்சியடையும். பிந்தைய நிகழ்முறையில், அனைத்துலகக் குழுவின் பாத்திரம் ஒரு தீர்க்கமான பண்பை எடுக்கும்.

32. இது வீண் தற்பெருமை அல்ல. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு வரலாற்றுக் கட்சியாகும். அதன் தத்துவார்த்த, அரசியல் மற்றும் நடைமுறை வேலைகள் ஏகாதிபத்திய சகாப்தத்தில் புரட்சிகர போராட்டத்தின் பரந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதோடு, இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. இது மட்டுமே மார்க்சிசத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஏனெனில் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், பப்லோவாத திருத்தல்வாதம், முதலாளித்துவ தேசியவாதம், மற்றும் ஒவ்வொரு பிற்போக்குத்தனமான வகையறா குட்டி-முதலாளித்துவ தீவிரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக, அது 1923ல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

33. அனைத்துலகக் குழுவானது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களையோ அல்லது புரட்சிகர முன்னணிப்படை எதிர்கொள்ளும் சவாலின் மாபெரும் அளவையோ குறைத்து மதிப்பிடவில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இன்னும் ஒரு வெகுஜன இயக்கத்தை வழிநடத்தவில்லை. அது நிகழ்வதற்கு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்களில் ஒரு அபிவிருத்தி தேவைப்படுகிறது. எவ்வாறெனினும், தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சிச செல்வாக்கின் வளர்ச்சியானது, ஐக்கிய வாகனத் தொழிலாளர்களின் தலைவர் பதவிக்கு வில் லேமனின் சமீபத்திய பிரச்சாரத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சோசலிஷ்டாக பகிரங்கமாக பிரச்சாரம் செய்து, சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் வேலைத்திட்டத்திற்காக வாதாடிய லேஹ்மன் கிட்டத்தட்ட 5,000ம் வாகனத்துறை தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றார். UAW தொழிற்சங்க அதிகாரத்துவம் தேர்தல் பற்றி தொழிலாளர்களுக்குத் தெரிவிக்காததாலும், அதன் உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களையே வாக்களிப்பதை மட்டுப்படுத்தியிருந்த போதிலும், இந்த சாதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

34. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் காரியாளர்களின் கணிசமான வளர்ச்சிக்கும், புதிய பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கும் அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளமானது, கால் நூற்றாண்டு தொடர்ச்சியான தினசரி வெளியீட்டின் போக்கில், ஒரு மிகப்பெரும் சர்வதேச வாசகர்களை ஸ்தாபித்துள்ளது. இடைவிடாத தணிக்கைகள் இருந்தபோதிலும், உலக சோசலிச வலைத் தளம் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திலும் மாணவர் இளைஞர்கள் மத்தியிலும் அதனுடைய செல்வாக்கு சீராக வளர்ந்து வருகிறது.

35. மேலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பணியானது ஒரு அரசியல் வெற்றிடத்தில் நடைபெறவில்லை. உலக நெருக்கடியானது நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை தீவிரப்படுத்தி வருகிறது. வெகுஜனங்களின் அடிப்படை நலன்களுக்கும் ஆளும் வர்க்கத்தின் சலுகைகளுக்கும் இடையிலான பிளவு முன்னெப்போதையும் விட வெளிப்படையாகி வருகிறது. போர், இனப்படுகொலை, பெருந்தொற்று நோய் மற்றும் பாசிசம் ஆகியவற்றின் ஏகாதிபத்தியத்தின் இயல்பாக்கலானது, வெகுஜன நனவை புரட்சிகரமாக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கண்ணோட்டத்தில் சோசலிசத்தை இயல்பாக்குவதற்கும் ஒரு சக்திவாய்ந்த உந்துதலை வழங்கும்.

36. உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களையும் இந்த முன்னோக்கிலிருந்து வரும் தவிர்க்க முடியாத முடிவுக்கு வருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். காட்டுமிராண்டித்தனத்தில் இறங்குவதை நிறுத்து! சர்வாதிகாரம், சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டுவோம்! இருபத்தியோராம் நூற்றாண்டின் மார்க்சியமான ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை மேற்கொள்ளுவோம்! சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்!

Loading