முன்னோக்கு

தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்

பகுதி மூன்று

இது நான்கு பகுதி அறிக்கையின் மூன்றாவது பகுதி .

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

அதிதீவிர வலதுகளின் எழுச்சியும் ஜனநாயகத்தின் உலகளாவிய உடைவும்

1. காஸா மீதான ஏகாதிபத்திய ஆதரவு இஸ்ரேலிய தாக்குதலில், இனப்படுகொலையானது வெளிப்படையாக ஒரு கொள்கைக் கருவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பெருந்தொற்று நோய்க்கான ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பில் வெகுஜன இறப்புக்கள் இயல்பாக்கப்பட்டதைப் போலவே, பாசிச மற்றும் எதேச்சதிகார இயக்கங்கள் மீண்டும் உலகெங்கிலுமுள்ள பிரதான நீரோட்ட அரசியல் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக உள்ளன. தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கைத் தரங்களுக்கு மத்தியதர வர்க்க மற்றும் போலி-இடது அமைப்புகளால் எந்தவொரு உண்மையான முதலாளித்துவ-எதிர்ப்புப் பதிலிறுப்பும் இல்லாத நிலையில், அரசியல் ஆதாயங்கள் அதிதீவிர வலதுகளால் திரட்டப்பட்டு வருகின்றன.

2. புத்தாண்டின் ஆரம்ப நாட்களில், முதலாளித்துவ ஊடகங்களில் 2024 இல் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அபாயகரமான நிலை குறித்து வர்ணனைகள் இவ்வாறு பெருகின: “உலகளாவிய ஜனநாயகத்திற்கான ஒரு உருவாக்கம் அல்லது உடைவு ஆண்டு” (டைம் இதழ்); “2024 உலகளாவிய ஜனநாயகத்துடன் தேர்தல் அலையை வாக்குகளில் கொண்டு வருகிறது” (வாஷிங்டன் போஸ்ட்); “2024 ஜனநாயகத்திற்கு மிகவும் கடினமான ஆண்டாக இருக்கலாம்” (நியூ யோர்க்கர்); “2024 இன்னும் ஏன் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆண்டாக இருக்க முடியும்” (எகனாமிஸ்ட்); மேலும் “2024 இல் ஜனநாயகம் நீடிக்குமா?” (பைனான்சியல் டைம்ஸ்).

3. 2024 ஆம் ஆண்டில், உலகளவில் 70 முதல் 80 தனித்தனி தேர்தல்கள் இருக்கும், இதில் 4.2 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர். இதில் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், மெக்சிகோ, இந்தோனேசியா, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா மற்றும் டசின் கணக்கான பிற நாடுகளின் தேர்தலும் அடங்கும்.

4. இந்தத் தேர்தல்களுக்கு மத்தியில், முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களின் கட்டமைப்பு உடைந்து வருகிறது. “சமூகத்திற்குப் பிறகு சமூகத்தில், தாராளவாதமற்ற விழுமியங்களும், அவற்றை அரவணைக்கும் அரசியல்வாதிகளும் வலுப்பெற்று வருகின்றன”, என்று போஸ்ட் எழுதுகிறது. “பல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை, பத்திரிகை சுதந்திரம் முதல் நீதித்துறை போன்ற நிறுவனங்களின் சுயாதீனம் வரை, ஆளும் ஸ்தாபகத்திற்கு எதிராக நியாயமாக போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் திறன் வரை கீழறுப்பதில் முனைந்திருப்பதாகத் தெரிகிறது.” பைனான்சியல் டைம்ஸ் இவ்வாறு எழுதுகிறது, “ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான ஸ்வீடனின் சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட உலகளாவிய ஜனநாயக நிலைபற்றிய முன்முயற்சியில், 2023 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவையில், ஜனநாயகம் வீழ்ச்சியடைந்த ஆறாவது ஆண்டைக் குறிக்கிறது என்பதைக் கண்டறிந்தது, இது அவர்களின் பதிவுகள் 1975 இல் தொடங்கியதிலிருந்து மிக நீண்ட சரிவாகும்” என்று எழுதியது.

5. எவ்வாறெனினும், சர்வாதிகாரம் மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கிய உந்துதலுக்குப் பின்னாலுள்ள அடிப்படை சமூகக் காரணிகளை ஆராய்வது ஒருபுறம் இருக்க, முதலாளித்துவ ஊடகங்களில் எங்கும் இந்த “ஜனநாயக நெருக்கடியின்” அடித்தளத்திலுள்ள அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளைப் பற்றிய வரலாற்றுரீதியாக அறியப்பட்ட பகுப்பாய்வு இல்லை.

6. அதிவலதுகள் பலம் பெறுவது என்பது ஓரு உலகளாவிய நிகழ்வாகும். ஜனவரி 6, 2021 பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த ஆண்டு அமெரிக்காவில் தேர்தல்கள் நடைபெறும். குடியரசுக் கட்சியின் வேட்புமனுவுக்கு முக்கிய போட்டியாளரான டிரம்ப், தற்போது பைடெனுடன் எந்தப் போட்டியிலும் முன்னணியில் உள்ளார். ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல்கள் பற்றிய தற்போதைய கருத்துக் கணிப்புகள், பிரான்சில் மரின் லு பென்னின் தேசியப் பேரணி (Rassemblement National)  மற்றும் பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய, அதிவலதுசாரி அடையாளம் (far-right Identity) மற்றும் ஜனநாயகக் குழு (Democracy Group) ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய கட்சியாக மாறுவதற்கு போதுமான இடங்களை வெல்லும் என்று தற்போதைய கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.

ஆகஸ்ட் 13, 2023 ஞாயிற்றுக்கிழமையன்று, ஆர்ஜென்டினாவின் புவனோஸ் அயர்ஸில் முதன்மைத் தேர்தலின் போது வாக்குச் சாவடிகள் மூடப்பட்ட பின்னர் ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேவியர் மிலே தனது பிரச்சார தலைமையகத்தில் பேசுறார். [AP Photo/Natacha Pisarenko]

7. கடந்த ஆண்டு நவம்பரில் ஆர்ஜென்டினாவில் பாசிச தொலைக்காட்சி ஆளுமையான ஜேவியர் மிலே தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் நெதர்லாந்தில் கீத் வில்டர்ஸின் முஸ்லிம்-விரோத சுதந்திரத்திற்கான கட்சி (PVV) இன் நிலை உயர்த்தப்பட்டது, இது டிசம்பரில் தேர்தல்களைத் தொடர்ந்து டச்சு அரசியலில் வலுவான சக்தியாக மாறியது. இத்தாலியின் பிரதமராக 2022 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியார்ஜியா மெலோனி உள்ளார். அவரது அரசியல் பரம்பரை நேரடியாக முசோலினியிடம் செல்கிறது. இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாசிசவாத பாரதிய ஜனதா கட்சியும் (BJP) டிசம்பரில் மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. அரசியல் ரீதியாக, பாசிசக் கட்சிகள் மற்றும் தனிநபர்களின் எழுச்சி என்பது அடிமட்டத்திலிருந்து வரும் வெகுஜன இயக்கமாக இருப்பதைக் காட்டிலும் ஆளும் வர்க்கத்தின் வலதிற்கு செல்லும் ஒரு உலகளாவிய மாற்றத்தின் விளைவாகும். சமூக ஜனநாயகம், ஜனநாயகக் கட்சி, தொழிற்கட்சி அல்லது கன்சர்வேடிவ் என்ற முத்திரை எதுவாக இருந்தாலும், ஸ்தாபனக் கட்சிகளின் கொள்கைகள் அடிப்படையில் ஒன்றுதான்: அதாவது சமூக செலவினங்களில் பாரிய வெட்டுக்கள் மற்றும் இராணுவ செலவினங்களில் அதிகரிப்பு, அத்துடன் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கான ஆதரவு ஆகும்.

9. அதே நேரத்தில், ஸ்தாபன முதலாளித்துவக் கட்சிகள் பாசிஸ்டுகளின் வேலைத்திட்டத்தையும் கொள்கைகளையும் அதிகரித்தளவில் ஏற்றுக்கொள்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் “பொது ஐரோப்பிய புகலிட முறையை” (CEAS) ஏற்றுக்கொண்டதுடன், இது தஞ்சம் கோரும் உரிமையை ஒழித்து, ஐரோப்பாவின் கோட்டை அரணை விரிவுபடுத்துகிறது. மேலும், பாரிய நாடுகடத்தல்கள் மற்றும் அகதிகளை வதைமுகாம்களில் தடுத்து வைத்து தண்டனைகளை விதிக்கிறது.

10. வலது நோக்கிய இந்த மாற்றமானது பெயரளவிலான “இடது” கட்சிகளையும் உள்ளடக்கியது: அதாவது 2015 இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த கிரேக்கத்தில் சிரிசா, அதன் முன்னோடியை விட இன்னும் ஆழமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியது. தொழிற்கட்சியின் பின்னால் எதிர்ப்பைத் திருப்புவதற்காக வேலை செய்த பிரிட்டனில் கோர்பினிசம், கெய்ர் ஸ்டார்மரின் எழுச்சியிலும் மற்றும் கோர்பின் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதிலும் உச்சக்கட்டத்தையும் அடைந்தது. ஜேர்மனியில் இடது கட்சி, அதன் வலதுசாரி கொள்கைகள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலான ஆதரவில் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

தன்னலக்குழு மற்றும் சமூக சமத்துவமின்மை

11. இந்த அரசியல் நிகழ்வுப்போக்குகளுக்கு அடித்தளமாக இருப்பது மிகவும் அடிப்படையான சமூக நிகழ்வுப்போக்குகளாகும். முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் நெருக்கடியை விளக்கிய ட்ரொட்ஸ்கி, ஜனநாயகத்தை “தேசிய அல்லது சமூகப் போராட்டத்தால் அதிகளவு அழுத்தம் ஏற்றப்பட்ட மின்சாரத்திற்கு எதிரான பாதுகாப்பிற்கான, பாதுகாப்பு சுவிட்சுகள் (safety switches) மற்றும் மின்னிணைப்புத் துண்டிப்புகள் (circuit breakers) கொண்ட ஒரு அமைப்புடன் ஒப்பிட்டார்... வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளின் தாக்கத்தின் கீழ், மிக அதிக அழுத்தத்தால், ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகள் எரிக்கப்படுகின்றன அல்லது வெடிக்கின்றன. சர்வாதிகாரத்தின் குறு மின்சுற்றிணைப்பு (short circuit) அதைத்தான் பிரதிபலிக்கிறது” என்றார்.

12. ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகளை குறு மின்சுற்றிணைப்பு (short circuiting) செய்யும் சர்வதேச முரண்பாடுகள், உலகளாவிய மோதலின் விரிவாக்கத்திற்கும், வெளியுறவுக் கொள்கையின் கருவியாக இனப்படுகொலையை இயல்பாக்குவதற்கும் அடித்தளமாக உள்ளன. லெனின் விளக்கியபடி, ஏகாதிபத்தியம் என்பது “எல்லா வழிகளிலும் பிற்போக்குத்தனமானது” ஆகும். நிதி மூலதனம், அதன் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கை இரண்டிலும், “ஜனநாயகத்திற்காக அல்ல, மாறாக சர்வாதிகாரத்திற்காக பாடுபடுகிறது.” முடிவற்ற போர்க் கொள்கைக்கு சமூகம் முழுவதையும் அடிபணியச் செய்வது, வெடிக்கும் இராணுவ வரவுசெலவுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக சமூக வளங்களை திசைதிருப்புவது மட்டுமல்லாமல், போருக்கு எதிரான எதிர்ப்பை உள்நாட்டில் நசுக்குவதற்கு இன்னும் கூடுதலான நேரடி நகர்வுகளையும் உள்ளடக்குகிறது.

13. ஜனநாயக ஆட்சி வடிவங்களை கீழறுக்கும் இன்றியமையாத வர்க்க முரண்பாடுகள், எல்லாவற்றிற்கும் மேலாக சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சியில் வெளிப்படுகின்றன. முதலாளித்துவ சமூகம் ஒரு தன்னலக்குழுவின் வடிவத்தை எடுத்துள்ளது. இதில் அனைத்து பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கைகளும் ஒரு மிகச் சிறிய உயரடுக்கினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்றொரு ஒப்பீட்டை இதற்குச் செய்வதற்கு, அதாவது செல்வத்தின் அதீத ஒன்றுகுவிப்புகள் கட்டுப்படுத்தமுடியாத பெருக்கமுறும் கட்டியைப் போல உருமாற்றமடைந்து, அரசின் ஒவ்வொரு நிறுவனத்தையும், நீதிமன்றங்களையும், ஊடகங்களையும் பாதிக்கின்றன.

14. உலகளவில், ஒக்ஸ்பாமின் கூற்றுப்படி, மக்கள்தொகையில் 1 சதவீத செல்வந்தர்கள் இப்போது உலகின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை வைத்துள்ளனர். அதே நேரத்தில், மிகவும் ஏழ்மையான 50 சதவீதத்தினர் வெறும் 0.75 சதவீதத்தை மட்டுமே வைத்துள்ளனர். வெறும் 81 பில்லியனர்கள் உலக மக்கள் தொகையில் பாதி மக்கள் வைத்திருக்கும் செல்லவத்தை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளனர்.

15. தோமஸ் பிக்கெட்டி, இம்மானுவேல் சேஸ் மற்றும் கேப்ரியல் சுக்மான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட உலக சமத்துவமின்மை தரவுத்தளமானது (WID), மக்கள்தொகையில் 0.01 சதவீத செல்வந்தர்களுக்கு (இன்று, சுமார் 800,000 பேர்) சொந்தமான செல்வம் 1995 இல் 8 சதவீதத்திலிருந்து இன்று 12 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கணக்கிடுகிறது. உயர்மட்ட 0.01 சதவீதத்தினருக்கும் கீழ்மட்ட 50 சதவீதத்தினருக்கும் இடையிலான செல்வத்தின் இடைவெளி 2008ல் இருந்ததை விட இன்று 50 சதவீதம் அதிகமாக உள்ளது. வருமான ஏற்றத்தாழ்வும் அதிகரித்து வருகிறது. உலக மக்கள்தொகையில் 10 சதவீத செல்வந்தர்கள் மொத்த உலக வருமானத்தில் பாதிக்கும் மேல் (52 சதவீதம்) எடுத்துக்கொள்கிறார்கள், அதே நேரத்தில் அடிமட்டத்திலுள்ள பாதிப் பேர் வெறும் 8.5 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.

16. WID இன் “உலக சமத்துவமின்மை அறிக்கை 2022” கிடைக்கக்கூடிய சமீபத்திய புதுப்பிப்பு இவற்றைக் கண்டறிந்தது:

உலக பன்முக மில்லியனர்கள் (multimillionaires) கடந்த பல தசாப்தங்களாக உலகளாவிய செல்வ வளர்ச்சியில் ஒரு சமமற்ற பங்கைக் கைப்பற்றியுள்ளனர்: அதாவது 1990 களின் நடுப்பகுதியில் இருந்து திரட்டப்பட்ட அனைத்து கூடுதல் செல்வங்களிலும் 38 சதவீதத்தை மேல்மட்ட 1 சதவீதம் பேர் எடுத்துக் கொண்டனர், அதே நேரத்தில் அடிமட்ட 50 சதவீதம் பேர் அதில் 2 சதவீதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டனர். இந்த சமத்துவமின்மை செல்வப் பகிர்வின் மேல் மற்றும் கீழ் பிரிவுகளுக்கு இடையிலான வளர்ச்சி விகிதங்களில் கடுமையான சமத்துவமின்மையிலிருந்து உருவாகிறது. 1995 முதல் பூமியிலுள்ள செல்வந்தர்களின் செல்வம் ஆண்டுக்கு 6 முதல் 9 சதவீதம் வரை வளர்ந்துள்ளது, அதே நேரத்தில் மக்களின் சராசரி செல்வம் ஆண்டுக்கு 3.2 சதவீதம் வளர்ந்துள்ளது. 1995 முதல், பில்லியனர்கள் வைத்திருக்கும் உலகளாவிய செல்வத்தின் பங்கு 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் போது இந்த அதிகரிப்பு அதிகரித்தது. உண்மையில், 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய பில்லியனர்களின் செல்வத்தின் பங்கு மிகக் கடுமையான அதிகரிப்பைக் குறித்துக்காட்டியது.

17. உலகிலேயே அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது, அவர்களின் கூட்டு செல்வம், அமெரிக்கர்களுக்கான வரி நியாயத்திற்கான (Americans for Tax Fairness) அமைப்பின் கூற்றுப்படி, நவம்பர் 2023 இல் 5.2 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளன. இது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த தொகையாகும். 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, அமெரிக்க மக்கள்தொகையில் உயர்மட்ட 10 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருந்தனர், அதே நேரத்தில் அடிமட்டத்திலுள்ள பாதிப் பேர் 2.6 சதவீதத்தை மட்டுமே வைத்திருந்தனர்.

18. “ஒரு துருவத்தில் செல்வம் குவிவது என்பது அதே நேரத்தில் பெரும்துயரம், உழைப்பின் வேதனை, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனச் சீரழிவு என்பன எதிர் துருவத்தில் குவிகிறது” என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். சுமார் 700 மில்லியன் மக்கள், அல்லது உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் பேர், 333 மில்லியன் குழந்தைகள் உட்பட ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தின் அதீத வறுமையில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை வரையறுக்கிறது.

19. தனிப்பட்ட செல்வக் குவிப்பு, அதன் சொந்த உரிமையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அது ஒரு இரண்டாவது நிலை இடத்தைத்தான் பெறுகிறது, மற்றும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்குச் சொந்தமான ஒரு சிறிய எண்ணிக்கையிலான மாபெரும் குழுமங்களில் (mega conglomerates) பொருளாதார அதிகாரத்தின் மாபெரும் ஒருங்கிணைப்பதோடு அது பின்னிப் பிணைந்துள்ளது.

ஜேபி மோர்கன் ஹெல்த்கேர் முதலீட்டு மாநாட்டில் ஜேமி டிமோன். [Photo by Steve Jurvetson / undefined]

20. மாபெரும் இராட்சத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் வளங்களின் அளவு மிகப் பெரியதாகும். 2023 ஆம் ஆண்டில், ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase - தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன்) ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் (First Republic) வங்கியை வாங்கிய பிறகு, 3.7 டிரில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் (பெரிய பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இது அதிகமாகும்) உலகின் மிகப் பெரிய வங்கியாக உயர்ந்தது. வான்கார்ட் (Vanguard - நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள், 7.7 டிரில்லியன் டாலர்கள்) மற்றும் பிளாக்ரொக் (BlackRock - 9.4 டிரில்லியன் டாலர்கள்) போன்ற பிரம்மாண்டமான தனியார் பங்கு நிறுவனங்கள் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தங்கள் வசம் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் கட்டுப்படுத்துகின்றன. S&P 500 இல் 330 நிறுவனங்களின் மிகப் பெரிய பங்குதாரராக வான்கார்ட் உள்ளது, அதே நேரத்தில் வான்கார்ட் மற்றொரு 38 நிறுவனங்களில் முதலாவது முதலீட்டாளராக உள்ளது.

21. 2023 ஆம் ஆண்டில் S&P 500 பங்கு குறியீட்டில் கூர்மையான அதிகரிப்பு ஏழு தொழில்நுட்ப நிறுவனங்களால் இயக்கப்பட்டது: அதாவது அமேசான், ஆப்பிள், ஆல்பாபெட் (கூகிள்), மெட்டா பிளாட்ஃபார்ம்கள் (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்), மைக்ரோசொப்ட், என்விடியா மற்றும் டெஸ்லா ஆகியவைகளாகும். அவற்றின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் கடந்த ஆண்டில் 5.2 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்தன. இது ஒட்டுமொத்தமாக S&P 500 இல் 8.2 டிரில்லியன் டாலர்கள் அதிகரிப்பில் 60 சதவீதத்திற்கும் அதிகமாகும். இந்த பங்குகளில் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos -அமேசான்), மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg -மெட்டா), எலான் மஸ்க் (Elon Musk -டெஸ்லா) மற்றும் தனியார் முதலீட்டு மேலாளர் வான்கார்ட் (Vanguard) ஆகிய நான்கு முதலீட்டாளர்கள் மட்டுமே தங்கள் பங்குகளிலிருந்து 491 பில்லியன் டாலர்களை சம்பாதித்தனர். ஃபோர்ப்ஸின் (Forbes) கூற்றுப்படி, கடந்த ஆண்டு அமெரிக்க பில்லியனர் செல்வத்தில் பாதி ஆதாயங்கள் அதிகரித்து வரும் தொழில்நுட்ப பங்குகளிலிருந்து வந்தன, எட்டு தொழில்நுட்ப பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை குறைந்தது 10 பில்லியன் டாலர்களால் அதிகரித்தனர்.

22. இந்த நிறுவனங்களும் அவற்றின் உரிமையாளர்களும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மீது மாபெரும் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் Twitter/X நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய பிறகு. அவர்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் எதிர்ப்பு மற்றும் போர் எதிர்ப்பு கருத்துக்களை தணிக்கை செய்ய தகவல்தொடர்புகள் மீதான தங்கள் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகின்றனர். உலக சோசலிச வலைத் தளம் தொடர்ந்து முக்கிய சொற்களுக்கான தேடல் முடிவுகளில் நிலை குறைக்கப்படுகிறது. இது ஆரம்பத்தில் 2017 இல் அம்பலப்படுத்தப்பட்ட தணிக்கைச் செயல்முறையாகும், ஆனால் அது அப்போதிருந்து தொடர்கிறது.

பிரான்சின் தலைநகர் பாரீஸிலுள்ள லூவ்ர் அருங்காட்சியகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வரவேற்கிறார். [AP Photo/Aurelien Morissard]

23. இந்த சமூக இயக்கவியல் ஏகாதிபத்திய நாடுகள் அனைத்திலும், குறைந்த சக்திகளுடன் உள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரான தற்போது இந்தியாவின் முகேஷ் அம்பானி (Mukesh Ambani - நிகர மதிப்பு 100 பில்லியன் டாலர்கள்), மோடியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக உள்ளார். கடந்த டிசம்பரில் மாநில தேர்தல்களில் பாஜக (BJP) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது சொத்துகள் உயர்ந்தன. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) ஆனது, எரிசக்தி, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு மற்றும் ஜவுளி ஆகியவற்றில் முக்கிய வணிகங்களைக் கொண்ட ஒரு குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீதான அவரது கட்டுப்பாட்டிலிருந்து அம்பானியின் செல்வம் பெறப்படுகிறது. மெக்சிகோவின் மிகப் பெரிய செல்வந்தரான கார்லோஸ் ஸ்லிம் (Carlos Slim - நிகர மதிப்பு 105 பில்லியன் டாலர்கள்), அவர் தனது குழுமமான க்ருபோ கார்சோ (Grupo Carso) மற்றும் பிற முதலீடுகள் மூலம் மெக்சிகன் பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறார்.

24. உலகம் முழுவதும் ஜனநாயகத்தில் இருந்து ஒக்சிஜனை உறிஞ்சும் சக்திகள் இவைகளாகும். அடிப்படைப் பொருளாதாரச் சக்திகளையும் நலன்களையும் கருத்தில் கொள்ளாமல் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்து வெறும் கற்பனையே ஆகும்.

அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியும் மற்றும் 2024 தேர்தல்களும்

உலக ஏகாதிபத்தியத்தின் மையப்பகுதி மற்றும் நிதி மூலதனத்தின் உலகளாவிய மையமுமான அமெரிக்காவைப் போல இந்த நிகழ்வுப்போக்குகள் வேறு எங்குமே தெளிவாக வெளிப்பட்டதில்லை. 2024 தேர்தல் பிரச்சாரம் ஜனவரி 6, 2021 பாசிச ஆட்சிக்கவிழ்ப்பின் நிழலின் கீழ் கட்டவிழ்ந்து வருகிறது. இதன் போது டொனால்ட் ட்ரம்ப் பைடெனுக்கு எதிரான தனது தேர்தல் தோல்விக்கான பாராளுமன்ற சான்றிதழை நிறுத்தவும், அரசியலமைப்பை ஒழிக்கவும் மற்றும் ஒரு தனிப்பட்ட சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் முயன்றார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அயோவாவின் வாட்டர்லூவில் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 19, 2023 அன்று நடைபெற்ற காகஸ் கூட்டப் பேரணியில் உரையாற்றுகிறார். [AP Photo/Charlie Neibergall]

26. உலக சோசலிச வலைத் தளமானது ஆட்சிக்கவிழ்ப்புக்கு மறுநாள் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், இது “அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை” என்று எழுதியது.

அமெரிக்க ஜனநாயகத்தின் இயலாமை மற்றும் காலத்தால் அழியாத தன்மையின் கொடூரமான பெருமைகள் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டு ஒரு வெற்று அரசியல் கட்டுக்கதையாக மதிப்பிழந்துள்ளன. அமெரிக்க பாசிசத்தின் எழுச்சியைப் பற்றிய சின்கிளேர் லூயிஸின் (Sinclair Lewis) நியாயமான புகழ்பெற்ற கற்பனைக் குறிப்பின் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்ட பிரபலமான சொற்றொடரான “இது இங்கு நடக்க முடியாது” என்பது நிகழ்வுகளால் தீர்க்கமாக முறியடிக்கப்பட்டுள்ளது. பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு இங்கு நடப்பது மட்டுமல்ல. இது நடந்தது, ஜனவரி 6, 2021 மதியம். 

மேலும், ஆரம்ப முயற்சி அதன் இலக்கில் தோல்வியடைந்தாலும், அது மீண்டும் நடக்கும்.

27. ஆட்சிக்கவிழ்ப்புக்கு முந்தைய மாதங்களிலும் அதற்குப் பிந்தைய மாதங்களிலும், உலக சோசலிச வலைத் தளமானது பாசிச கிளர்ச்சிக்குப் பின்னாலுள்ள பரந்த சதியை ஆவணப்படுத்தியது. இதில் ட்ரம்பின் தூண்டுதலின் பேரில் கேப்பிட்டல் மீது தாக்குதல் நடத்துவது இறுதிக் கட்டம் மட்டுமே ஆகும். இந்தச் சதித்திட்டம் அப்போதைய ஜனாதிபதியை மட்டுமல்ல, குடியரசுக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களையும், இராணுவ-பொலிஸ் இயந்திரம் மற்றும் நீதித்துறையின் கணிசமான பிரிவுகளையும் உள்ளடக்கியிருந்தது.

28. ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சியை அரசியல் ஸ்தாபகத்தின் எந்த நிறுவனமும் தீவிரமாக எதிர்க்கவில்லை. அது வெற்றிக்கு மிக அருகில் வந்திருந்தது. பணயக்கைதிகளைத் தேடிப்பிடிக்கும் நோக்கத்துடன், ட்ரம்பின் பாசிசக் கும்பல் கேப்பிட்டல் கட்டிடத்தைக் கைப்பற்றியபோது, இராணுவமும் தேசியப் பாதுகாப்புப் படையினரும் தலையிடவில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து கொண்டிருந்தபோது ஜனநாயகக் கட்சி எதுவும் கூறவில்லை. இறுதியாக தேசிய தொலைக்காட்சியில் சென்று அதை நிறுத்துமாறு ட்ரம்புக்கு பரிதாபகரமான வேண்டுகோளை விடுப்பதற்கு முன்பு பைடெனே பல மணி நேரம் காத்திருந்தார்.

29. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்துள்ள ஜனவரி 6 நிகழ்வுகள் பற்றிய கணிசமான தகவல்கள் என்ன நடந்தது என்பதற்கான இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளன. ஆட்சிக் கவிழ்ப்பைத் தோற்றுவித்த சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் இடைப்பட்ட காலத்தில்தான் தீவிரமடைந்துள்ளன.

ஜனவரி 6, 2021 அன்று வாஷிங்டனிலுள்ள அமெரிக்க கேப்பிட்டலின் கிழக்கு முனையில் Oath Keepers குழுவின் உறுப்பினர்கள். [AP Photo/Manuel Balce Ceneta]

30. இருத்தலியல் அரசியல் நெருக்கடி மற்றும் அரச இயந்திரத்தின் அனைத்து நிறுவனங்களின் உடைவின் நிலைமைகளின் கீழ், 2024 தேர்தல்கள் நடைபெறுகின்றன. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட்டாலும், தோல்வியடைந்த கட்சியால் சட்டபூர்வமானது என்ற ஒரு முடிவை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

31. 2023 முடிவடையும் தருவாயில், கொலராடோவிலுள்ள உச்ச நீதிமன்றம் மற்றும் மேய்னேயில் வெளியுறவு செயலாளர் இருவரும் ஜனவரி 6 ஆம் திகதி ட்ரம்ப்பின் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக, அவர் வாக்குச்சீட்டில் இடம்பெற முடியாது என்று தீர்ப்பளித்தனர். அதே நேரத்தில், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாநிலங்களிலுள்ள அதிகாரிகள் பதிலுக்கு பைடெனை நீக்குவதாக அச்சுறுத்தியுள்ளனர். குடியேற்றக் கொள்கையைத் தீர்மானிப்பதற்கான கூட்டாட்சி அரசாங்கத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை பகிரங்கமாக சவால் செய்யும் நடவடிக்கைகளை டெக்சாஸ் மாநிலம் எடுத்துள்ளது. நவம்பர் தேர்தல் முடிவுகளுக்கு இதேபோன்ற சவால், டெக்சாஸில் மட்டுமல்ல, பிற இடங்களிலும் முற்றிலும் சாத்தியமாகும்.

32. அதிகரித்து வரும் பிராந்திய ரீதியான போக்குகள் (sectional tendencies) உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய உடன்படிக்கை முழுவதையும் தகர்க்க அச்சுறுத்துகின்றன. இந்த உடன்படிக்கை தனி மாநிலங்கள் மீது ஒருங்கிணைந்த கூட்டாட்சி (unified federal) அதிகாரத்தை மீண்டும் நிறுவியது. 1860 ஆம் ஆண்டில், ஆப்ராகம் லிங்கன் எந்த தென் மாநிலங்களிலும் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. லிங்கன் பதவியேற்பதற்கு முன்னர், ஏழு தென் மாநிலங்கள் பிரிந்து அமெரிக்காவின் கூட்டமைப்பு மாநிலங்களை (Confederate States) உருவாக்க எடுத்த முடிவு, சில மாதங்களுக்குப் பிறகு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு வழிவகுத்த நிகழ்வுகளைத் தூண்டியது.

33. தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பை சிதைக்கும் மோதல் ஆளும் வர்க்கத்தின் முற்போக்கான மற்றும் பிற்போக்குத்தனமான பிரிவுகளுக்கு இடையிலானதல்ல. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பெருநிறுவன மற்றும் நிதியத் தன்னலக்குழுவின் இரண்டு பிற்போக்குத்தனமான பிரிவுகளாகும். அவர்களின் தந்திரோபாய வேறுபாடுகள் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், அவைகள் முற்றிலும் அவர்களின் பொதுவான பிற்போக்கு நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்தவைகளாக இருக்கின்றன.

34. ஜனநாயகத்திற்கு எதிரான டிரம்பின் அச்சுறுத்தலை தனது மறுதேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வைக்கப் போவதாக பைடென் கூறியதாக கூறப்படுகிறது. இது ஒரு விபச்சார விடுதி பராமரிப்பாளர் ஒழுக்கநெறிமுறை வணிக நடைமுறைகளை வாதாடுவதன் மூலம் தனது நிறுவனத்தின் நற்பெயரைக் கட்டியெழுப்புவேன் என்று பிரகடனம் செய்வதற்கு ஒப்பானதாகும். ஜனவரி 6 கிளர்ச்சி நடந்த சில நாட்களுக்குள், ஒரு “வலுவான” குடியரசுக் கட்சியைக் கொண்டிருப்பது தனது குறிக்கோள் என்று பைடென் அறிவித்தார். ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னணியிலுள்ள அரசியல் மற்றும் சமூக சக்திகள் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. பல்வேறு விசாரணைகளும் வழக்கு விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்றன, இறுதியில் எதுவும் நடைபெறவில்லை.

டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்கிறார். [AP Photo/Evan Vucci]

35. கடந்த மூன்று ஆண்டுகளாக, ரஷ்யாவுக்கு எதிரான போரை தீவிரப்படுத்துவதும், அதைத் தொடர்ந்து காஸாவில் இனப்படுகொலைக்கு பகிரங்க ஆதரவு அளிப்பதும் பைடென் நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு முடிவடையும் தருவாயில், பைடென் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உக்ரேனுக்கான இராணுவ நிதியை அதிகரிப்பதற்கு ஈடாக குடியரசுக் கட்சியினரின் பாசிச புலம்பெயர்ந்தோர்-விரோத நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதற்கான தங்கள் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினர்.

36. காஸாவில் நடந்துவருகிற இனப்படுகொலையை ஆதரிப்பதிலும், இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பை, யூத எதிர்ப்பு என்று முத்திரை குத்துவதற்கான முன்னெப்போதையும் விட மோசமான நடவடிக்கையிலும் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் கைகோர்த்துள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழக தலைவர் கிளாடின் கேயின் கட்டாய இராஜினாமா, இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர் குழுக்களை தடை செய்வது உட்பட கல்லூரி வளாகங்களில் அரசியல் அச்சுறுத்தல் மற்றும் ஒரு தணிக்கை நடவடிக்கையின் பகுதியாக இருக்கிறது.

சோசலிசம் எதிர் முதலாளித்துவம் மற்றும் தன்னலக்குழு

37. ஆளும் உயரடுக்கின் செல்வவளம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான அதன் மேலாதிக்கத்தின் மீது நேரடித் தாக்குதலுக்கு வெளியே, ஜனநாயக ஆட்சி வடிவங்களை பாதுகாக்க முடியும் என்று கூறுவது அரசியல் மற்றும் அறிவுஜீவித போலித்தனத்தின் உச்சமாகும்.

38. வலதுசாரிகளின் அதிகரித்து வரும் பலமானது, அதன் சொந்த உள்ளார்ந்த சக்தியை விட, இடது என்று கருதப்படுவதன் முற்றிலுமான திவால்நிலையை காட்டுகிறது. போலி-இடது அரசியலின் பல்வேறு வடிவங்களின் திறனற்ற தன்மையின் பின்னணியில் - பேர்னி சாண்டர்ஸ் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோஷலிஸ்டுகள் (DSA) அமைப்பு; ஜேர்மனியில் இடது கட்சி; ஸ்பெயினில் பொடெமோஸ்; கிரேக்கத்தில் சிரிசா; “இளஞ்சிவப்பு அலை” (“Pink Tide”) இயக்கமும் இலத்தீன் அமெரிக்காவில் லூலாவின் ஆதரவாளர்களும் - தனியார் சொத்துக்கள், பெருநிறுவன இலாபங்கள், தனிப்பட்ட செல்வம் மற்றும் புனித கருவறையின் முன் முழந்தாளிட்டு மண்டியிட்டு போலி-இடதுகள் வணங்குகின்றன. எப்போதாவது “சோசலிசம்” பற்றிய அவர்களின் அழைப்புகள் முற்றிலும் அர்த்தமற்றவைகளும் வெற்று வாய் வீச்சுக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் கனவு காணும் “சோசலிசம்” என்பது வோல் ஸ்ட்ரீட்டில் பங்கு மதிப்புகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தாமல், வர்க்கப் போராட்டம் இல்லாமல், ஆளும் வர்க்கத்திடமிருந்து பறிமுதல் செய்யாமல், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றாமல் ஒரு சோசலிசத்தை அடையக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஜெரமி கோர்பினின் “சோசலிசம்” பழைய ஃபேபியன்களை கிட்டத்தட்ட போல்ஷிவிக் போல தோற்றமளிக்கச் செய்கிறது. சாண்டர்ஸ், ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பு ஆகியவைகளின் கருத்து ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தம் (New Deal) முதல் ஜோன்சனின் பெரும் சமூகம் (Great Society) வரையிலான காலகட்டத்தின் முதலாளித்துவ சீர்திருத்தவாதத்தின் வலதுபுறத்தில் உள்ளவையாக இருக்கிறது.

39. போலி-இடதுகளுக்கான உண்மையான சமூகத் தொகுதியாக இருப்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகள் ஆகும். அவர்களின் நோக்கம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையின் தீவிர மறுசீரமைப்பு அல்ல. மாறாக, மேல்மட்டத்தில் இருக்கும் செல்வத்தை மறுபகிர்வு செய்வதாகும். பல்வேறு வகையான இன மற்றும் பாலின அரசியலின் முடிவற்ற ஊக்குவிப்பு என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளானது பெருநிறுவனங்களின் இயக்குநர் குழாம்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்க இயந்திரம் மற்றும் அரசாங்கத்திற்குள் அதிகாரம் மற்றும் சலுகை பதவிகளுக்கு போட்டியிடும் வடிவமாகும்.

40. அமெரிக்காவில், பைடென் நிர்வாகத்தின் மூன்று ஆண்டுகள் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பின் “இடது” பாசாங்குகளை விரிவாக அம்பலப்படுத்த உதவியுள்ளன. ஒகாசியோ-கோர்டெஸ் உட்பட காங்கிரசில் DSA இன் முன்னணி உறுப்பினர்கள் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையை சட்டவிரோதமாக்குவதற்கும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு நிதியளிப்பதற்கும் வாக்களித்துள்ளனர். காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மத்தியில், ஒகாசியோ-கோர்டெஸ் இஸ்ரேலின் அயர்ன் டோமிற்கு (Iron Dome - ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பம்) நிதியளிப்பதை ஆதரிப்பதாக அறிவித்தார்.

41. வர்க்க மற்றும் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படைப் பிரச்சினையைப் புறக்கணித்துவிட்டு ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மற்றும் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது பற்றி விவாதிப்பது — இதன் விளைவாக, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய அணிதிரட்டலுக்கான கட்டாயத்தை புறக்கணிப்பது — சிடுமூஞ்சித்தனமான மற்றும் அரசியல்ரீதியாக கையாலாகாத வாய்வீச்சுகளாகும். பில்லியனர்களின் செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும் மற்றும் பிரமாண்டமான பெருநிறுவனங்கள், பெரிய பங்குதாரர்களுக்கு இழப்பீடு வழங்காமல், தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல், சமூகத் தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் பொது கட்டுப்பாட்டிலுள்ள பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும். முதலாளித்துவ அரசின் ஜனநாயக-விரோத நிறுவனங்கள் மற்றும் ஒடுக்குமுறை அமைப்புகள் (தொழில்முறை இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள்) ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் உலக அளவில் ஒரு ஜனநாயக மற்றும் திட்டமிட்ட பொருளாதாரத்தை ஸ்தாபிக்க, தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தின் அமைப்புகளால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

42. உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்கள் சோசலிசத்திற்கான ஒரு வெகுஜன, சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான புறநிலை அடித்தளமாகும். இந்த புறநிலை இயக்கத்தை அதிகாரத்திற்கான ஒரு நனவான போராட்டமாக மாற்றுவதற்கு, மார்க்சிச தத்துவம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் போராடிப் பாதுகாக்கப்படும் வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய சர்வதேச சோசலிச இயக்கத்தை தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி செய்வது தேவைப்படுகிறது.

Loading