அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை மீறி ஆயிரக்கணக்கான இலங்கை மின்சார ஊழியர்கள் மூன்று நாள் தனியார்மய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் உள்ள சுமார் 26,000 மின்சார ஊழியர்கள், இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி 3 அன்று மூன்று நாள் சுகயீன விடுமுறை பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். அரசங்கத்தினதும் நிர்வாகத்தினதும் அச்சுறுத்தல்களை மீறி அவர்கள் போராட்டம் செய்தனர்.

4 ஜனவரி 2024 அன்று கொழும்பில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்கள். [Photo: WSWS]

புதன் மற்றும் வியாழன், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட பிரதேசங்களில் இருந்து வந்த சுமார் 10,000ம் தொழிலாளர்கள் கொழும்பில் உள்ள இ.மி.ச. தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். பொலிஸ் மற்றும் அதன் ஆயுதமேந்திய கலகம் அடக்கும் படையை அணிதிரட்டுவதன் மூலம் அரசாங்கம் இதற்கு பதிலடி கொடுத்தது. நூற்றுக்கணக்கான கடற்படையினர்கள் தண்ணீர் பீரங்கிகளுடன் நிறுத்தப்பட்டனர்.

மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் உற்பத்தியை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். இந்த உத்தரவுகளின் கீழ், வேலைக்குச் செல்லாத எந்த ஒரு ஊழியரும், “நீதவான் முன் ஒரு சுருக்கமான விசாரணைக்குப் பிறகு” இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தண்டப்பணம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அவர்களின் “அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்” அரசால் கைப்பற்றப்படலாம் மற்றும் அவர்களின் பெயர்கள் “தொழில் அல்லது தொழிலுக்காக பராமரிக்கப்படும் எந்தப் பதிவேட்டில் இருந்தும் நீக்கப்படும்.”

ஜனவரி 2 முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இ.மி.ச. பதில் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா வெளியிட்டார். இ.மி.ச. ஊழியர்கள் மீது, டிசம்பர் 19 முதல் நடைமுறையில் உள்ளவாறு சமூக ஊடக தணிக்கை விதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் “சபையின் இரகசிய தகவலை வெளிப்படுத்துதல்,” அவதூறான, பொய்யான அல்லது அரசியல் கருத்துக்கள் அல்லது “மக்களை தூண்டிவிட்டு நிறுவனத்தை அவதூறு செய்யக்கூடிய அறிவிப்புகளை” வெளியிடுவது இதன் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது.

மின்சார சபை நிர்வாகத்தின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றத் தவறும் எந்தவொரு தொழிலாளிக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இ.மி.ச. நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மூன்று நாள் சுகயீன விடுமுறை பிரச்சாரமானது இ.மி.ச.யின் இணைந்த தொழிற்சங்க கூட்டு (JTUC) எனப்படுவதால் அழைப்பு விடுக்கப்பட்டது. அகில இலங்கை மின்சார ஊழியர் சங்கம் (ACEEU), ஐக்கிய ஊழியர் சங்கம் (SEU), இலங்கை சுதந்திர மின்சார ஊழியர் சங்கம் (SLNEEU), பொறியாளர்கள் சங்கம், மின் அத்தியட்சகர்கள் சங்கம், எழுத்தர்கள் சங்கம் மற்றும் சாரதிகள் சங்கம் ஆகியவை இதில் அடங்கும். அகில இலங்கை மின்சார ஊழியர் சங்கம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்ததாகும். ஐக்கிய ஊழியர் சங்கமானது ஐக்கிய மக்கள் சக்தி உடையாதாகும். இலங்கை சுதந்திர மின்சார ஊழியர் சங்கமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்ததாகும். இவை அனைத்தும் பாராளுமன்ற எதிர்க் கட்சிகளாகும்.

இ.மி.ச. தொழிலாளர்களின் இந்த வார நடவடிக்கையானது, விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மீதான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஒரு பகுதியாகும். சுமார் ஒரு மில்லியன் அரசாங்க ஊழியர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஊதிய அதிகரிப்பு கோரியும் சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் பெருகிவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுடன் சமாந்தரமாக இடம்பெறுகின்றன.

இ.மி.ச. தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதோடு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அதே தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளுக்கும் போராட்டம் பரவ வழிவகுக்கும் என்று ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் அச்சமடைந்துள்ளன.

வியாழன் அன்று ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தில், கோட்டாபய இராஜபக்ஷவை இராஜினாமா செய்ய வைத்து, அவரது அரசாங்கத்தை வீழ்த்திய 2022 வெகுஜன எழுச்சியின் படிப்பினைகளை விக்ரமசிங்க அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியது.

“அரசாங்கத்தின் போர்க்குணமிக்க அணுகுமுறையைக் கைவிடுமாறு வலியுறுத்த வேண்டும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.மி.ச. தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை மேசைக்கு வரவழைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்” என்று செய்தித்தாள் அறிவுறுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாள வர்க்கத்தைத் தடுக்க தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, தனியார்மயமாக்கல் திட்டத்தை முன்நகர்த்த வேண்டும் என்பதாகும். உண்மையில், இ.மி.ச. தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அத்தகைய காட்டிக்கொடுப்பைச் செய்வதற்குத் தங்கள் விருப்பத்தை சமிக்ஞை செய்துள்ளன.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 4 ஜனவரி 2024 அன்று கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த போது. [Photo: WSWS]

தனியார்மயமாக்கலுக்கு இ.மி.ச. தொழிலாளர்களின் ஆழமான எதிர்ப்பே தொழிற்சங்கங்களை வேலைநிறுத்தங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுக்க நிர்ப்பந்தித்துள்ள அதேவேளை, தொழிற்சங்கங்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான உண்மையான போராட்டத்தில் தங்கள் உறுப்பினர்களை அணிதிரட்டுவதை எதிர்க்கின்றன. அவர்களின் நோக்கம், தொழிலாளர்களை மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புகளுக்குள் கட்டுப்படுத்தும் அதே நேரம், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்காலப் போராட்டங்கள் பற்றிய வாய்வீச்சுக் கண்டனங்கள் மற்றும் வாக்குறுதிகளின் மூலம் அவர்களை நசுக்கி வைப்பதாகும்.

இணைந்த தொழிற்சங்க கூட்டின் ஒருங்கிணைப்பாளரும் அகில இலங்கை மின்சார ஊழியர் சங்க செயலாளருமான ரஞ்சன் ஜெயலால், புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கம் உடனடியாக தனியார்மயமாக்கல் மசோதாவை இரத்துச் செய்யவில்லை என்றால், தொழிற்சங்கங்கள் “பெரிய” போராட்டத்தை நடத்தும் என்று கூறினார்.

“கஞ்சன விஜேசேகர உடனடியாக இதை (தனியார்மயமாக்கல் சட்டத்தை) கைவிட வேண்டும்” என்று ஜெயலால் கூறினார். “அவர் அவ்வாறு செய்யத் தவறினால், இந்த மூன்று நாள் நடவடிக்கைக்குப் பிறகு அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நாளில் நாங்கள் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு வருவோம். நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாள் நண்பகல் 12 மணி முதல் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்” எனவும் அவர் கூறினார்.

நேற்று ஜெயலால், அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் கொழும்பு தலைமையகத்திற்கு வெளியே இ.மி.ச. ஊழியர்கள் முன் பேசிய போது: “நாங்கள் [அரசாங்க] சுற்றறிக்கைகளைப் பற்றி கவலைப்படவில்லை. எங்கள் போராட்டத்தின் போது இறக்க நேரிட்டால், மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்க தயாராக இருக்கிறோம்.. இந்த போராட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொள்வோம்,” என்றார்.

தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் அவநம்பிக்கையில், ஜெயலாலும் மற்ற தொழிற்சங்கத் தலைவர்களும் மீண்டும் மீண்டும் இதேபோன்ற வெற்று அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். ஏனைய அரசாங்கத் துறை தொழிற்சங்கங்களைப் போலவே, இ.மி.ச. தொழிற்சங்க முன்னணியும் தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அதன் போக்கை மாற்ற அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், தொழிற்சங்கங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜெயலால் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். எதிர்கால சட்ட முடிவை தன்னால் கணிக்க முடியாது என்று அவர் ஒப்புக்கொண்டாலும், தனியார்மயமாக்கலைத் தடுக்க மாட்டோம் என்று நீதிமன்றங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தை சேர்ந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கு எதிராக தொழிற்சங்கங்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து, அது “அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடையாக இருக்காது” என்று வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அரசாங்கத் துறை தொழிற்சங்கங்கள் தனியார்மயத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை எதிர்க்கின்றன. டிசம்பர் 28 அன்று, மின்சாரம், தொலைத்தொடர்பு, தபால், வங்கி, காப்புறுதி மற்றும் பிற அரசுக்குச் சொந்தமான துறைகளைச் சேர்ந்த சுமார் 40 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கொழும்பில் உள்ள தபால் கேட்போர் கூடத்தில் சந்தித்தனர்.

ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யவே இந்த கூட்டம் என்று அவை மோசடியாக கூறின. அரசாங்கம் அதன் தனியார்மயமாக்கல் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், தாங்கள் ஒரு “பெரிய, ஒன்றுபட்ட போராட்டத்தை” ஏற்பாடு செய்வோம் என்று அந்த சந்திப்புக்குப் பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த கூற்றுகளுக்கு நேர்மாறாக, தொழிற்சங்கங்கள் போராடுவதற்கான அரசாங்க ஊழியர்களின் விருப்பத்தையும் உறுதியையும் குழப்புவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.

இ.மி.ச. தனியார்மயமாக்கல் என்பது, அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட கொள்கைகள், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுகங்கள், புகையிரதம் மற்றும் ஸ்ரீலங்கன் விமானசேவை உட்பட நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதுடன் ஒருங்கிணைந்ததாகும். இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக நிறைவேற்றப்பட வேண்டிய இந்த சர்வதேச நாணய நிதிய கோரிக்கைகள், சுமார் அரை மில்லியன் அரச ஊழியர்களின் தொழில்களை நேரடியாக அழிக்கும்.

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய திட்டத்தின் கீழ், மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல், கொள்முதல் ஆகிய வகையில் இ.மி.ச. 14 தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படும். ஜனவரி 3 அன்று, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் விஜேசேகர, இந்த திட்டம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக ட்விட்டரில் வெளிப்படுத்தினார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் கட்டுப்படுத்தப்படும் இலங்கையின் பெரும்பான்மையான அரசாங்க துறை தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை எதிர்க்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டால், பாராளுமன்ற எதிர்க்கட்சி என்று அழைக்கப்படுபவை இரக்கமின்றி இந்த சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும்.

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்ட நிரலையும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான கோரிக்கைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராட, தொழிலாளர்கள் தங்கள் கைகளில் விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும், தொழிலாளர்களால் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படுகின்ற, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவது இதன் அர்த்தமாகும்.

இலங்கை முதலாளித்துவ உயரடுக்கிற்கு எதிராக, கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த சுயாதீனமான அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும். முதலாளித்துவ ஆட்சியை ஒழித்து, சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

Loading