போதைப்பொருளை கட்டுப்படுத்தும் சாக்குப்போக்கின் கீழ் பொலிசுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வாய்ப்பளிக்கின்றார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரை உக்கிரப்படுத்தும் நோக்கில் குற்றம் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான போர் என்ற போர்வையில் பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ், இராணுவ மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற புதிய தொழில்நுட்ப உபகரணங்கடனும் டிசம்பர் 17 முதல் இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் [Photo by Tiran Alles/Facebook]

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறையில் இடம்பெற்ற சமூக பொலிஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் கூட மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அவ்வாறு செயற்படும் அதிகாரிகளுக்கு “ஒரு பிரச்சனை என்றால், நான் அவர்களுக்காக முன நிற்பேன்” என்று கூறினார். “சும்மா சாகாதீர்கள், பின்னர் பொலிசார் சுட்டுக் கொன்றார்கள் என்று பெரிதுபடுத்தி சொல்லித் திரிவீர்கள்” என, சட்ட விரோத துப்பாக்கிச் சூடு குறித்து ஓலமிட வேண்டாம் என பாதாள உலகத் தலைவர்களை அவர் அச்சுறுத்தினார்.

அமைச்சரின் இந்த ஆணையானது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையாகும்.

“நீதி” என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை 45 பொலிஸ் பிரிவுகளில் வாரம் ஏழு நாட்களுக்கும் நடக்கும். ஆயுதப் படைகள், முதலாளித்துவ ஊடகங்களுடன் சேர்ந்து, வீடுகளுக்குள் பாய்வதோடு, அவர்களின் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பொதுமக்களை பயமுறுத்துகின்றன.

நாட்டின் பல பிரதேசங்களிலும் அதிகாலை வரை நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளில் அன்றாடம் சுமார் 1,500 பேர் வரை கைதுசெய்யப்படுகின்றனர். இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அலஸின் கருத்துக்கள் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் உண்மையான உந்துதலைப் பற்றி சிறிது வெளிச்சம் காட்டுகின்றன. எந்த நடவடிக்கையையும் எடுக்கவும், அதற்காக தான் முன்நிற்கவும் அமைச்சர் பொலிசுக்கு அளித்துள்ள வரப்பிரசாதம், தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களிலும் கூட அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவாக அவர் நிற்பார் என்பதற்கான உத்தரவாதம் ஆகும். இலங்கையின் ஆளும் வர்க்கமும் அதன் அடக்குமுறை எந்திரமும் முப்பது வருட யுத்தத்தின் போதும், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான காலத்திலும் இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளைப் பயன்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளன.

ட்ரோன்கள் மற்றும் இராணுவப் பிரிவுகள் போன்ற புதிய தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் மூலம், வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்குள் ஊடுருவுவதற்குத் தேவையான பலத்தைப் பெற அரசாங்கம் தயாராகி வருகிறது. கடந்த காலத்தில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த வகையான “போதைப்பொருள் மற்றும் குற்றங்களை” எதிர்த்துப் போராட முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், குற்றம் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் தொடர்ந்து உள்ளன.

போதைப்பொருள் கடத்தல் அரசியல் அதிகாரத்தில் உள்ள சில பிரவினரின் ஆதரவுடன் பெரிய அளவிலான வர்த்தகர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பது இரகசிமானதல்ல. இந்த சமூக அவலத்திற்கு அடுத்தடுத்து வரும் முதலாளித்துவ அரசுகளும் உலக முதலாளித்துவ அமைப்புமே பொறுப்பாகும். இந்த போதைப்பொருள் ஒழிப்பு என்று கூறப்படும் போலிக்காரணத்தின் கீழ், பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறை ஆயுதங்களைக் கூர்மைப்படுத்தி, பொலிசுக்கும் இராணுவத்திற்கும் பாரதூரமான அதிகாரங்களை வழங்கி சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

கடந்த ஆண்டில், போதைப்பொருளை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற போலிக்காரணத்தின் கீழ் அரசாங்கம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொலிசை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

காஸா மற்றும் உக்ரைனிலான போர்கள் மற்றும் கோவிட் தொற்றுநோயால் ஆழமடைந்து வரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியால் விக்கிரமசிங்க அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்பட்ட கடனுக்காக அந்த நிறுவனம் திணித்த சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறிவிடும் என்று ஆளும் வர்க்கம் உட்பட முழு அரசியல் ஸ்தாபனமும் அஞ்சுகிறது. மேலும் கடந்த ஆண்டைப் போல் ஒரு பொதுக் கிளர்ச்சி வெடிக்குமெனில், அப்படிப்பட்ட கிளர்ச்சியைத் தடுக்க பொலிசுக்கும் இராணுவத்துக்கும் இதுபோன்ற சட்டவிரோத அதிகாரங்களை வழங்கி வைப்பது அவசியமானதாக இருக்கின்றது.

இவ்வாறாக சர்வாதிகார ஆட்சியை நோக்கி நடவடிக்கை எடுத்துவரும் அரசாங்கம், இது தொடர்பில் எழும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. இந்த பெரிய அளவிலான கைதுகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் அவதூறு சுமத்தி ஒடுக்க முயல்கிறது.

மாத்தறையில் நடைபெற்ற அதே கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், விமர்சகர்களை பின்வருமாறு குற்றம் சாட்டினார். “என்னை தாக்குகிறார்கள், பொலிஸ் மா அதிபரை தாக்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் சமூகத்தில் எந்நாளும் எங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இது எல்லாம் போதைப்பொருள் பணம். பாதாள உலக மற்றும் போதைப்பொருள் பணத்தை கொண்டுதான் இவை நடக்கின்றன” என அவர் கூறினார். பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பிய சட்டத்தரணிகள் தான், குற்றவாளிகள் சார்பாக பல இலட்சம், பலகோடி ரூபாய்களை பெற்றுக்கொண்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “சட்டப்படி யாரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு” வழக்கறிஞர்களுக்கு உள்ள உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வெளியிடப்படும் அறிக்கைகள் ஒட்டுமொத்த தொழில் மீதான தாக்குதலாகும் என்றும் அவர்கள் அங்கு சுட்டிக்காட்டினர். ஒருபுறம் சட்ட விரோத செயல்களுக்கு முண்டுகொடுக்கும் அதே நேரம், மறுபுறம் தமக்கு எதிராக நிற்பவர்களை ஒடுக்குவதற்கே பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறான அறிக்கைகள் மூலம் முயற்சிக்கிறார்.

மேலும், “கண்ட உடன் சுட்டுக் கொல்லும்” அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குவதானது பொலிஸ் அரசின் குணாம்சமாகும் என சுட்டிக்காட்டிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்ததாவது: “நாட்டின் நிறைவேற்று, சட்ட மற்றும் நீதித்துறை ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும் ஆளும் முறைமை ஒன்று இருக்கும் போது, ஒரு சிரேஷ்ட அமைச்சர் பகிரங்கமாக அத்தகைய கருத்தை எப்படி தெரிவிக்க முடியும்? சட்ட அமைப்பு நடைமுறையில் இருக்கும் போது, ​​கண்டவுடன் சுட்டுத் தள்ளுவதற்கு இது பொலிஸ் அரசு அல்ல.”

பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன், அடக்குமுறை நடவடிக்கைகளில் ஒரு இழிவான பதிவைக் கொண்டவராவார். 2011 இல் மிரிஹான பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, தென்னகோன் உட்பட பல பொலிஸ் உத்தியோகத்தர்களால் தான் உடல்ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தென்னகோன் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றவாளிகள் என கடந்த டிசம்பர் 14 அன்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் மனுதாரருக்கு 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியின் போது அதன் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதில் அவர் முதன்மையான பங்கைக் கொண்டிருந்தார்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்துடன், இப்போது அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், அவரது சாதனைதான் அவரது புதிய பதவிக்கான தகுதியாக அதிகார வர்க்கத்தால் கருதப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சி வடிவங்களை நோக்கிய நகர்வின் ஒரு பகுதியாகும். அத்துடன் இது, ஏகாதிபத்திய ஒத்துழைப்புடன் இஸ்ரேலின் நெத்தன்யாகு அரசங்கம் கசாவில் முன்னெடுக்கும் இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் எழும் போராட்டங்களை தடை செய்வதற்கு மற்றும் அவற்றின் மீது அவதூறு பரப்பி கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் கூர்மையான வெளிப்பாடாகும்.

விக்கிரமசிங்க அரசாங்கத்தால் தீவிரப்படுத்தப்படும் வர்க்கப் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக, வர்க்கப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழிலாள வர்க்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும். அதற்கு, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அவர்களது வேலைத் தளங்கள், குடியிருப்புகள் மற்றும் பெருந்தோட்டங்களிலும் ஸ்தாபிப்பது இன்றியமையாததாகும்.

Loading