ஐரோப்பிய தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு (Sozialistische Gleichheitspartei ஜேர்மனி) ஆதரவளியுங்கள்

முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான ஒரு ஐரோப்பிய இயக்கத்திற்காக

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா இனப்படுகொலை மற்றும் உலகப் போர் அச்சுறுத்தலுக்கு எதிராக உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்பிற்கு குரல் கொடுப்பதற்கும், போருக்கு மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக அதை ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக வளர்ப்பதற்கும், சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei ஜேர்மனி), பிரான்ஸ், இங்கிலாந்து, துருக்கி, உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் உள்ள அதன் தோழர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கேற்கிறது.

காஸாவில் இனப்படுகொலையை ஆதரிப்பதன் மூலமும், அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் தங்கள் உலகப் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கை அடிபணிய வைப்பதற்காகவும் சொல்லொணா குற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அத்தோடு, அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதன் மூலமும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரச்சாரத்தை செய்வதன் மூலமும் இரத்தக்களரிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பிற்கு அவர்கள் எதிர்வினையாற்றுகின்றனர். ஜேர்மனியில், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டு முழு மாவட்டங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளன.

[Photo: WSWS]

இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு விஷயத்தைக் காட்டுகிறது: அது, மூன்றாம் உலகப் போரைத் தடுக்கவும், ஜனநாயக உரிமைகள் மற்றும் கடந்தகால சமூக நலன்களைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திடம் முறையிடுவது சாத்தியமில்லை. பெரும்பான்மையான மக்களின் நலன்களை, ஆளும் வர்க்கத்தின் இலாபத்திற்கான பேராசை மற்றும் ஏகாதிபத்திய ஆசைகளுடன் இனி சமரசம் செய்ய முடியாது. போரையும் சமத்துவமின்மையையும் முடிவுக்குக் கொண்டுவர, தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அரசியல் செயல்முறையில் தலையிட வேண்டும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து, அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.

அதுவே எங்களின் இலக்காகும். முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேசக் கட்சியை நாங்கள் கட்டி வருகிறோம்: நான்காம் அகிலம். நீங்கள் ஜேர்மனியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தால், ஐரோப்பிய தேர்தல்களில் எங்கள் பங்கேற்பை ஆதரிக்க இப்போதே பதிவு செய்யுங்கள். எங்களின் தேர்தல் நிதிக்கு உங்களால் முடிந்தவரை தாராளமாக நன்கொடை அளித்து, எங்களது பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரிப்பதற்கும், தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை உருவாக்குவதற்கும் பதிவு செய்யுங்கள்.

காஸா இனப்படுகொலையை நிறுத்து!

அதிதீவிர வலதுசாரி நெதன்யாகு அரசாங்கம் காஸாவில் இனப்படுகொலையை மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த மக்களும் பணயக் கைதிகளாக, பட்டினியால் வாட்டப்பட்டு, பயமுறுத்தப்பட்டு, தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகின்றனர். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, போரின் முதல் 60 நாட்களில் மட்டும் 6,000ம் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது உக்ரேனில் 600 நாட்களுக்கும் அதிகமான போரில் கொல்லப்பட்டவர்களை விட 10 மடங்கு அதிகமாகும். மக்கள்தொகையில் முக்கால்வாசி மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைத்தல் மற்றும் சுகாதார அமைப்பு முறைகளை அழித்தல் ஆகியவற்றினால் 2.2 மில்லியன் பாலஸ்தீனியர்களிடையே கடுமையான தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 600,000ம் மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர்.

இந்த விவரிக்க முடியாத கொடுமைக்கு நெதன்யாகு ஆட்சி மட்டுமே பொறுப்பல்ல. இது குறிப்பாக, இஸ்ரேலை ஆதரித்து அதற்கு ஆயுதம் வழங்கும் ஏகாதிபத்திய சக்திகளான ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் தலையீட்டின் நேரடி விளைவு ஆகும். லெபனானில் ஹெஸ்புல்லாவிற்கு எதிராகவும் சிரியா மற்றும் ஈரானுக்கு எதிராகவும் இன்னும் விரிவான போரை நடத்துவதற்கு பாலஸ்தீனியர்களை அழித்து ஒழிப்பது ஒரு முன்நிபந்தனையாக அதிபர் ஷோல்ஸ் மற்றும் ஜனாதிபதி பைடென் கருதுகின்றனர். ஈராக், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போர்களைப் போலவே, ஏகாதிபத்திய சக்திகள் எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டுள்ளன.

இதற்கும் இப்பிராந்தியத்தில் உள்ள யூத மக்களின் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களே இந்த ஏகாதிபத்திய கொள்கையால் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஜேர்மன் அரசாங்கம் தனது பெரும் அதிகாரக் கொள்கைகளை நியாயப்படுத்த முயல்வது மற்றும் இனப்படுகொலைக்கான ஆதரவை யூத எதிர்ப்புக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொள்வது சிடுமூஞ்சித்தனத்தின் உச்சமாகும்.

நாஜிக்களின் பாசிச மரபுகளை கையில் எடுப்பது, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அல்ல. மாறாக, மீண்டும் ரஷ்யாவிற்கு எதிராக டாங்கிகளை உருளவிட்டு, இனப்படுகொலையை அரச கொள்கை என்று அறிவித்த ஜேர்மன் ஆளும் வர்க்கம்தான், ஹிட்லருக்குப் பிறகு கண்டிராத அளவிற்கு ஜேர்மன் இராணுவத்தை ஆயுதபாணியாக்கி உள்ளது.

இந்த வெறுக்கத்தக்க கொள்கைக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை அடக்குவதற்காக, கூட்டணி அரசு பாசிசத்தின் அந்துப்பூச்சியை உடுத்தி வருகிறது. இது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்புணர்வை தூண்டி அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழிக்கிறது. அதிதீவிர வலதுசாரியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சிக்கு ஆதரவளிக்கப்படுகிறது, மற்றும் பொலிஸ், இரகசிய சேவைகள் மற்றும் இராணுவத்திற்குள்ளும் அதிவலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலைப்பின்னல்கள் உயர் அதிகாரிகளால் பாதுகாக்கப்படுகின்றன.

ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களின் நச்சு தேசியவாதம் ஒரு சக்திவாய்ந்த சர்வதேச இயக்கத்தால் எதிர்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் சமீபத்திய வாரங்களில் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் பிரச்சாரம் இருந்தபோதிலும், இன்று தொழிலாள வர்க்கம் எவ்வளவு வலுவான மற்றும் பூகோளரீதியான வலையமைப்பில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இயக்கம் விரிவடைந்து, சோசலிச முன்னோக்கினால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்:

  • காஸா மீதான முற்றுகையை உடனடியாக நிறுத்து மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தை முழுமையாக கலைத்து விடு!
  • நெதன்யாகு, பைடென், ஷோல்ஸ் மற்றும் அனைத்து போர்க் குற்றவாளிகளும் அவர்களின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்!
  • பொது மதச்சார்பற்ற மற்றும் சோசலிச அரசுக்கான போராட்டத்தில் பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும்!

மூன்றாம் உலகப்போர் வேண்டாம்!

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையானது விரிவடைந்துவரும் பூகோளரீதியான போரின் மற்றொரு முனையாகும். நேட்டோ, ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பினாமி போரை உக்ரேனில், நடத்துகிறது. மத்திய கிழக்கில், அது ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா உட்பட அதன் நட்பு நாடுகளை குறிவைக்கிறது. மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவிற்கு எதிரான போருக்கு தயாராகி வருகின்றன. 1914 மற்றும் 1939 இல் இருந்ததைப் போலவே, உலகப் போர் என்பது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான போராகும்.

ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களில் இருந்து அதன் போர் நோக்கங்களை நேரடியாகப் பின்பற்றுகிறது. கிழக்கில் உள்ள மகத்தான இயற்கை வளங்களைப் பெறுவதற்காக உக்ரைனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ரஷ்யாவை அடிபணியச் செய்ய விரும்புகிறது. 80 ஆண்டுகளுக்கு முன்பு அது ஐரோப்பாவை இடிபாடுகளாக மாற்றியது. அது, இப்போது முழு பூகோளத்தையும் அணு ஆயுத அழிவினால் அச்சுறுத்துகிறது.

ஏகாதிபத்திய இராணுவவாதம் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக மட்டும் இயக்கப்படவில்லை. நேட்டோ சக்திகளுக்கு இடையேயான பழைய பகைமைகள்- ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலும் மற்றும் ஐரோப்பாவிற்குள்ளும் மீண்டும் தலைதூக்குகின்றன. பேர்லின் ஐரோப்பாவை அதன் தலைமையின் கீழ் ஒழுங்கமைக்க முயற்சிக்கையில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் போலந்துடனான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

ஜேர்மன் இராணுவவாதம் மீண்டும் வருவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் பிரச்சாரம் இன்னும் அபத்தமான வடிவங்களை எடுத்து வருகிறது. காஸாவில் இனப்படுகொலை அரசாங்கத்திற்கு ஆதரவு, உக்ரேனில் “சுதந்திரம்” மற்றும் “அமைதிக்காக” போராடுவது பற்றிய அதன் பேச்சு மிகவும் மோசமானது என்பதைக் காட்டுகிறது. இது நாஜிக்களின் குற்றங்களுக்கு “ஜேர்மன் பொறுப்பு” என்று குறிப்பிடுவதன் மூலம் மோசமான இஸ்ரேலிய போர்க்குற்றங்களை நியாயப்படுத்துகிறது. அதே நேரத்தில், உக்ரேனில் அது நாஜி ஒத்துழைப்பாளர்களின் அரசியல் வாரிசுகள் மற்றும் உறுதியான பாசிஸ்டுக்கள் மற்றும் யூத விரோதிகளுடன் இணைந்து மீண்டும் ரஷ்யாவிற்கு எதிரான போரை நடத்துகிறது. நாஜிக்களின் அழிப்புப் போருக்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகினர். கொல்லப்பட்ட 27 மில்லியன் சோவியத் குடிமக்களுக்கு “ஜேர்மன் பொறுப்பு” என்று குறிப்பிடப்படவில்லை.

மனித வரலாற்றில் மிக மோசமான குற்றங்களான நாஜி ஜேர்மனியின் அழிப்புப் போர் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிலிருந்து வரக்கூடிய ஒரே நியாயமான முடிவு இதுதான்: தொழிலாள வர்க்கம் மீண்டும் ஒருபோதும் போரையும் பாசிசத்தையும் அனுமதிக்கக்கூடாது, மேலும் இந்த கோரத்துக்கு காரணமாக இருக்கும் – முதலாளித்துவத்தை - அதன் வேருடன் என்றென்றைக்குமாக ஒழிக்க வேண்டும்.

போருக்கு எதிரான போராட்டம் புட்டின் ஆட்சிக்கு எதிராகவும் இருக்க வேண்டும். நேட்டோ உக்ரேனில் போரைத் தூண்டியது, ஆனால் அது ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. புட்டின் ஆட்சியானது ரஷ்ய நிதிய தன்னலக்குழுக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர்கள் சோவியத் யூனியனின் சமூகமயமாக்கப்பட்ட சொத்துக்களை கொள்ளையடித்தனர். இப்போது ஏகாதிபத்திய கொள்ளையர்கள் அதை தங்களுக்காக கைப்பற்ற விரும்புகிறார்கள் என்பதனால், அவர்கள் சீற்றம் அடைந்துள்ளனர்.

எமது கோரிக்கைகள்:

  • உக்ரேனில் நேட்டோ போரை நிறுத்து! தடைகள் அல்லது ஆயுத விநியோகங்கள் வேண்டாம்!
  • இரண்டு உலகப் போர்கள் போதும்! போர் வெறியர்களை நிறுத்து!
  • ஆயுதங்கள் மற்றும் போருக்கு பதிலாக, தினப்பராமரிப்பு மையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 100 பில்லியன் யூரோக்களை வழங்கு!

ஒரு ஐக்கிய, சோசலிச ஐரோப்பாவுக்காக!

சமூக வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் போருக்கு ஆதரவான கொள்கைகளுக்கும் பணக்காரர்களின் லாப பேராசைக்கும் கீழ்ப்படிய செய்யப்பட்டுள்ளது. ஆயுதச் செலவுகள் மேற்கூரை வழியாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த ஆண்டு COVID பெரும்தொற்றுநோய்க்கு மத்தியில், சுகாதாரப் பாதுகாப்பு பட்ஜெட் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்பட்டது. மேலும் வெட்டுக்கள் இப்போது தயாராகி வருகின்றன. பயங்கரமான பணவீக்கம் தொழிலாளர்களின் ஊதியத்தை சீரழிக்கிறது மற்றும் நூறாயிரக்கணக்கானோர் வேலைகளை இழக்கின்றனர்.

வறுமையில் வாடுகின்ற இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே வாழ்க்கையில் கடுமையான போராட வேண்டியுள்ளது. ஜேர்மனியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் அலுவலகத்தின் படி (யூரோஸ்டாட்), கடந்த மூன்று ஆண்டுகளில் வறுமை மற்றும் சமூக ஒதுக்கீட்டின் ஆபத்தில் உள்ளவர்களின் விகிதம் 3.6 சதவீத புள்ளிகளால் உயர்ந்துள்ளது, இப்போது 20.9 சதவீதம் அல்லது 17.3 மில்லியன் மக்கள் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இது சராசரி 21.7 சதவீதமாக இருக்கிறது. அதே சமயம், பெரும் பணக்காரர்களின் செல்வம் வெடித்து சிதறுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது லாபம் குறைவதைத் தவிர்ப்பதற்காக ஐரோப்பாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் பலியாகியுள்ளன.

சமூக அழிவுகளுக்கான எதிர்ப்புக்கள் ஐரோப்பா முழுவதும் வளர்ந்து வருகிறது. வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களின் அதிகரிப்பை கண்டம் முழுவதும் அனுபவித்து வருகிறது. அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள், இதே கோரிக்கைகளை முன்வைத்து, போருக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை இணைக்கின்றனர். இந்தப் போராட்டங்கள் தேசிய மற்றும் தொழிற்சங்க கட்டமைப்பிற்குள், இந்த அல்லது அந்த முதலாளித்துவ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட முடியாது. அவர்களுக்கு சர்வதேச முன்னோக்கு தேவை.

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை எழுச்சியடைய செய்துள்ளது.

சமீபத்திய வாரங்களில் லண்டனில் மட்டும் மில்லியன் கணக்கானவர்கள் இஸ்ரேலின் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜேர்மனியிலும் நூறாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர். ஆனால், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைகளுக்கு அனைத்து அரசாங்கங்களின் ஆதரவும், அதற்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்கும் அரசாங்கங்களைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்காமல், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.

அரசாங்கங்களைப் பாதுகாப்பதிலும் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதிலும் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை நாடு மற்றும் துறை வாரியாக தொழிலாளர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தி உண்மையான ஊதியங்களை வெட்டுகின்றன. மற்றும் பணிநீக்கங்களை அமல்படுத்துகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி சுயாதீனமான சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதை ஆதரிக்கிறது. அவை அதிகாரத்துவத்தினருக்காக அல்ல, மேலும் வெட்டுக்கள் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எல்லைகளையும் தாண்டி தொழிலாளர்களை ஒன்றிணைக்கிறது. இந்த நடவடிக்கை குழுக்கள் வேலைநிறுத்தங்களின் திசையை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதிகாரத்திற்கான அரசியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தக்கூடிய புதிய அமைப்புகளாக அவை உருவாக்கப்பட வேண்டும்.

அத்தகைய இயக்கம் முதலாளித்துவத்திற்கு எதிராகவே இயக்கப்பட வேண்டும். முதலாளித்துவ நிலைமைகளின் கீழ், ஐரோப்பாவை அமைதியான முறையில் ஒன்றிணைப்பது ஒரு பிற்போக்குத்தனமான மாயை என்பதை உக்ரேன் போர் காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியமானது (EU) ரஷ்யாவிற்கு எதிராக போர் தொடுத்து, காஸாவில் இனப்படுகொலைக்கு ஆதரவளித்து, கண்டம் முழுவதும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு கருவியாக செயல்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான தன்மை அதன் அகதிகள் கொள்கையில் குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. வெளிப்புற எல்லைகளில் சுவர்கள், கம்பி வேலிகள் மற்றும் மனிதாபிமானமற்ற தடுப்பு முகாம்கள் என தொடர்ந்து விரிவடைந்து வரும் “ஐரோப்பா கோட்டை”, ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு மரணத்தை கொண்டு வருகிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 28,000 க்கும் அதிகமானோர் மத்தியதரைக் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இது போர், அழிவு மற்றும் துயரங்களில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகளைத் தடுப்பதற்கான திட்டமிட்ட கொலைக் கொள்கையாகும். அதே நேரத்தில், அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஆழமான சமூக நெருக்கடிக்கு பலிகடாக்களாக ஆக்கவும், அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளை வலுப்படுத்தவும் முயற்சிக்கின்றன.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மற்றும் வெகுஜன மரணம் மற்றும் போர் ஆகியவற்றுக்கு மாற்றாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் முன்னோக்கை தொழிலாளர்கள் முன் வைக்க வேண்டும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது மற்றும் மனித உயிர்களைக் காப்பாற்ற முடியாது, ஊதியங்களைப் பாதுகாக்க முடியாது. ஒருவரையொருவர் சுடுவதற்குப் பதிலாக, ரஷ்யாவிலும் உக்ரேனிலும் உள்ள தொழிலாளர்களும் ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களும், இந்த முன்னோக்குடன் உள்நாட்டில் உள்ள போர்வெறியர்களுக்கு எதிராக போராட வேண்டும்.

எமது கோரிக்கைகள்:

  • இலாபத்திற்கு பதிலாக உயிர்கள் பாதுகாக்கப்பட் வேண்டும்!
  • அனைத்து வேலைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்! அனைவருக்கும் 30 சதவீதம் கூடுதல் ஊதியம் மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும்!
  • சூறையாடும் வாடகை வசூலிப்பாளர்கள், எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் போரினால் இலாபம் ஈட்டுபவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்!
  • வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெகுஜன மரணம் மற்றும் போருக்கு எதிராக! ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

தொழிலாளர்களுக்கு சொந்த கட்சி தேவை!

இந்த கோரிக்கைகளை ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சிகளிடம் முறையிடுவதன் மூலம் நிறைவேற்ற முடியாது, ஏனெனில் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் போர் மற்றும் சமூக அழிவுகளுக்குப் பின்னால் நிற்கின்றன. அக்டோபர் 12 அன்று, AfD முதல் இடது கட்சி வரையிலான கூட்டாட்சி பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை போரை ஆதரித்துள்ளனர்.

வேறு எந்தக் கட்சியும் செய்யாத வகையில் பணக்கார நடுத்தர வர்க்க அடுக்குகளுக்காகப் பேசும் பசுமைவாதிகள், இவர்கள் ஜேர்மனியின் பெரும் வல்லரசு நலன்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் வரையில் சமாதானவாதிகளாகவே இருந்தனர். 1998 இல் சேர்பியாவிற்கு எதிராக ஹிட்லருக்குப் பிறகு ஜேர்மனியின் முதல் ஆக்கிரமிப்புப் போரை ஒழுங்கமைக்க அவர்கள் உதவியதால், அவர்கள் மிகவும் ஆக்ரோஷமான இராணுவவாதிகளாக மாறிவிட்டனர்.

இடது கட்சி, ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசாங்கத்தின் போர் ஆதரவு கொள்கையை ஆதரிக்கிறது. முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஸ்ராலினிச அரச கட்சியில் இருந்து வெளிப்பட்ட இந்தக் கட்சி, அரசு எந்திரத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட அவமதிப்பு மற்றும் சாதாரண தொழிலாளர்கள் மீதான அதன் ஒடுக்குமுறையை உள்ளடக்கி இருக்கிறது. அது எங்கு ஆட்சி செய்தாலும் அல்லது மாநில அளவில் இணைந்து ஆட்சி செய்தாலும், மற்ற முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே பிற்போக்குத்தனமான கொள்கைகளையே செயல்படுத்துகிறது. அதன் சகோதரக் கட்சிகளான கிரேக்கத்தில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் ஆகியவை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர்க் கொள்கைகளுக்கு எதிரான அளப்பரிய எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளன.

இடது கட்சியில் இருந்து Sahra Wagenknecht பிரிந்ததற்கும் இராணுவ எதிர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது குழு ரஷ்யாவிற்கு எதிரான போரை ஒரு தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்கிறது மற்றும் ஜேர்மன்-ஐரோப்பிய மறுசீரமைப்பு அமெரிக்காவிலிருந்து மிகவும் சுதந்திரமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. காஸா இனப்படுகொலையை முழுமையாக ஆதரிக்கிறது.

Wagenknecht இன் நோக்கம் அழுகிய முதலாளித்துவ அமைப்பை ஸ்திரப்படுத்துவதும், அதற்கு எதிரான வளர்ந்து வரும் எதிர்ப்பை தேசியவாத வழிகளில் எடுத்துச் செல்வதுமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இராணுவவாதம், பாசிசம் மற்றும் போருக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறது. நாங்கள் இலாபகரமான பதவிகளை நாடவில்லை, மாறாக ஐரோப்பிய தேர்தல்களையும் பாராளுமன்றத்தில் உள்ள இடங்களையும் போர்க் கட்சிகளை எதிர்க்க பயன்படுத்துகிறோம். மிகப்பெரிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கிறோம், அவற்றிற்கு எதிராக எதிர்ப்பை அணிதிரட்டுகிறோம்.

அவ்வாறு செய்யும் போது, நாம் சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவாக, நாம் மார்க்சிசத்தின் மரபுகளில் நிற்கிறோம் - ஆகஸ்ட் பெபல், ரோசா லக்சம்பர்க் மற்றும் கார்ல் லிப்க்னெக்ட், ரஷ்ய அக்டோபர் புரட்சி மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஸ்ராலினிசத்திற்கு இடது எதிர்ப்பு ஆகிய மரபுகளில் நிற்கிறோம்.

முதலாளித்துவர்தின் தீமைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு புதிய வெகுஜன சோசலிசக் கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. இனப்படுகொலை போர்க் கொள்கை, மோசமான சமூக சமத்துவமின்மை, சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புகளின் அழிவு மற்றும் நமது பூகோளத்தின் அழிவு ஆகியவற்றைப் பொறுத்துக்கொள்ள விரும்பாத அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்: இந்த அறிக்கையை முடிந்தவரை பரவலாகப் பகிருங்கள். நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், இன்றே சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்புமனுவை ஆதரிக்க பதிவு செய்து, எங்கள் கட்சியில் உறுப்பினராகுங்கள்!

Loading