விக்கிரமசிங்க ஆட்சியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு: தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு! தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை நோக்கி முன்செல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளில் இருந்து இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது வேலைகள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 2024 இல் தீர்க்கமான வர்க்கப் போர்களில் இறங்குவார்கள். அரசாங்கம் அந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறினால், தனது 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனின் அடுத்த தவணையைப் பெறப்போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க [Photo by United National Party Facebook]

அடுத்த ஆண்டு பெறுமதி சேர் வரி (VAT) மேலும் 18 சதவிகிதம் வரை அதிகரிப்புடன் தொடங்குகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரும். ஸ்ரீலங்கன் விமானசேவை, டெலிகொம், மின்சாரம், பெற்றோலியம், தபால், அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி போன்ற பிரதான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது திட்ட நிரலில் உள்ளது. பொதுக் கல்வி மற்றும் சுகாதாரம் மேலும் சீரழிக்கப்பட உள்ளன.

அரசாங்கம் 'கடன் நிலைத்தன்மையை' உறுதி செய்ய -அதாவது, செலுத்தப்படாத வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும், இலாப வெறி கொண்ட சர்வதேச முதலீட்டாளர்களை 'ஈர்ப்பதற்கும்'- இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளைப் பொறுத்தளவில், இந்த நடவடிக்கைகள் இன்னும் இலட்சக் கணக்கான தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை வெட்டித்தள்ளுவதைக் குறிக்கிறது.

இந்தத் தாக்குதல்களுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில், விக்கிரமசிங்க ஆட்சி மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாக கடந்த காலப் போராட்டங்கள் ஒவ்வொன்றையும் நாசப்படுத்தி சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள தாக்குதல்களை அனுமதித்த தொழிற்சங்கங்கள் மீது தொழிலாள வர்க்கம் தங்கியிருக்க முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்களை ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்காக அவர்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு வலுவாக வலியுறுத்துகிறது. கிராமப்புற ஏழைகளையும் தங்கள் பகுதிகளில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை, அந்த நடவடிக்கைக் குழுக்களின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்ப பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது.

விக்கிரமசிங்க ஆட்சியை வீழ்த்துவதற்கு அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, இனப் பிளவுகளுக்கு அப்பால் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்டுவதற்கும் அத்தகைய அதிகார மையம் ஒரு அடிப்படையை வழங்கும். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிச கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு இது வழி வகுக்கும்.

கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியின் படிப்பினைகளை வெளிக்கொணர்ந்து, 20 ஜூலை 2022 அன்று சோசலிச சமத்துவக் கட்சி இந்த அழைப்பை விடுத்தது. நாங்கள் விளக்கியதாவது: “ஆளும் வர்க்கத்தின் புதிய அரசாங்கத்திற்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது: அது சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, ஐரோப்பிய ஏகாதிபத்தியம் மற்றும் இலங்கை ஆளும் வர்க்கமும் கோரும் கொடூரமான சிக்கன திட்டத்தை திணிக்கின்ற அதே நேரம், வெகுஜன எதிர்ப்பை கழுத்தை நெரிப்பதுமாகும்.” [இணைப்பு: https://www.wsws.org/en/articles/2022/07/21/pers-j21.html].

இந்த அறிக்கையில் நாம் விளக்கியவை மற்றும் அதில் முன்வைக்கப்பட்ட புரட்சிகர வேலைத்திட்டம் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு வேறு மாற்றீடு இல்லை.

இந்தப் போராட்டத்தில், பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய தன்னலக் குழுக்களால் தங்களின் சமூக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளே இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள் ஆவார்.

ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்தி வருவதுடன், காஸா மீதான இனப்படுகொலை ஆக்கிரமிப்பை ஆதரிப்பதோடு சீனாவுடன் இராணுவ மோதலுக்கு தயாராகி வருகின்றன. இந்த ஆட்சிகள் இந்த போர்களுக்கு பணம் செலுத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை வெட்டி பில்லியன் கணக்கான டாலர்களை சுருட்டி வருகின்றன.

கடந்த பன்னிரெண்டு மாதங்களும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் முதல் ‘பின்தங்கிய’ நாடுகள் வரை தொழிலாள வர்க்கம் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதைக் கண்டன. காஸாவில் சியோனிச ஆட்சியின் இனப்படுகொலையை எதிர்த்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து வீதிக்கு வருகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியின் தாங்க முடியாத சுமைக்கு எதிராக இலங்கையில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சி தொடங்கி பதினெட்டு மாதங்கள் கடந்துவிட்டன. முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது குழுக்களின் ஆதரவுடன், தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களின் பாரிய பொது வேலைநிறுத்தங்களை காட்டிக்கொடுத்து, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்ற இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) விடுத்த அழைப்புகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களை திசைதிருப்பி விட்டன.

வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி பதவி விலகினார். எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தைத் தடுப்பதன் மூலம், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுகள், இராஜபக்ஷ விசுவாசிகளுக்கு அமெரிக்க சார்பு கைக்கூலியான விக்கிரமசிங்கவை நிறைவேற்று ஜனாதிபதியாக உயர்த்துவதற்கு வழி வகுத்துக் கொடுத்தன.

அப்போதிருந்து, மக்களின் நிலைமை மோசமடைந்தது. சமூக சமத்துவமின்மை, வறுமை, பசி, வேலையின்மை மற்றும் தொற்றுநோய்கள் இலங்கை வெகுஜனங்களின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளன. இலங்கையின் உயர்மட்ட ஒரு சதவீதத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தில் 31 சதவீதத்தை வைத்துள்ளனர், அதேவேளை கீழ் உள்ள 50 சதவீதத்தினர் 4 சதவீதத்திற்கும் குறைவான சொத்துக்களை மட்டுமே பகிர்ந்துகொள்கின்றனர். 2020 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகையில் 28 சதவீதமாக வறுமை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்கள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு திணைக்களத்தின் இந்த வார அறிக்கை, 61 சதவீதமான குடும்பங்கள் தங்கள் செலவை சமாளிக்க முடியாமல் இருப்பதாகவும், 55 சதவீதமான குடும்பங்களின் பாடசாலை கல்வி பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முந்தைய இரண்டு ஆண்டுகளில் 350,000 வரையிலான மின் வெட்டுக்களுக்கு மேலாக வருடத்தின் முதல் பத்து மாதங்களில் கட்டண உயர்வைச் செலுத்த முடியாமல் கிட்டத்தட்ட 550,000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் மத்தியில் கொதித்தெழுந்த கோபத்தின் காரணமாக, தொழிற்சங்கங்கள் கடந்த இரண்டு மாதங்களில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. அரச நிர்வாகம், வங்கிகள், சுகாதாரம், மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் பாடசாலை ஆசிரியர்களுமாக இலட்சக்கணக்கான ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியும் தனியார்மயமாக்கல், ஓய்வூதிய வெட்டு மற்றும் ஊதிய வெட்டுக்கள், வரி அதிகரிப்பு மற்றும் கட்டண அதிகரிப்புகளையும் எதிர்த்தும் இந்தப் போராட்டங்களில் இணைந்தனர்.

எவ்வாறாயினும், தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் சிதறடிக்கப்படுவதையும், விக்கிரமசிங்க ஆட்சிக்கு பயனற்ற வேண்டுகோள் விடுக்குமளவுக்கு பலவீனமாக்கப்படுவதையும் உறுதி செய்தனர்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் (2024) நடத்தப்படும் என ஜனாதிபதி விக்கிரமசிங்க நவம்பர் மாதம் அறிவித்தார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற உள்ளது. ஐ.ம.ச. மற்றும் குறிப்பாக ஜே.வி.பி. மற்றும் அதன் முன்னணி அமைப்பான தேசிய மக்கள் சக்தியும் (தே.ம.ச.) மக்களை தமக்கு ஆதரவளிக்குமாறு தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.

இந்த பிரச்சாரத்திற்கு இணங்க, ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச. ஆகியவற்றுடன் இணைந்த தொழிற்சங்கத் தலைவர்கள், எதிர்கால ஆட்சிகள் தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று கூறி, தொழிலாளர்களை இந்தக் கட்சிகளுடன் கட்டிப்போடுவதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

எந்த தொழிலாளியும் ஏமாறமாட்டார். அனைத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளன. ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை பற்றி ‘மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும்’ என்று அறிவித்தார். ஜே.வி.பி. / தே.ம.ச. ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் திட்டத்துக்கு தனது ஆட்சியின் கீழ் மக்கள் அனுமதிப்பார்கள் என்று மீண்டும் கூறுகிறார்.

சமீபத்தில் சர்வதேச நாணய நிதிய பணியாளரின் அறிக்கை சிக்கன நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டி எச்சரித்ததாவது: 'வரி விகித உயர்வுகள் மற்றும் எரிசக்தி துறையில் செலவு-மீட்பு விலை அதிகரிப்புகள், பற்றாக்குறையான ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் உட்பட உண்மையான வருமானங்கள் வீழ்ச்சியடைவதாலும் மற்றும் உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தியதாலும் சமூக அமைதியின்மை மீண்டும் தலைதூக்கக் கூடும்.” இது ஆளும் உயரடுக்கிற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாகும்.

நவம்பர் 1 அன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதர ஊழியர்கள் [Photo: WSWS]

உண்மையில், விக்கிரமசிங்க அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போருக்குத் தயாராகி வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முப்படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் அதே வேளை, சுகாதாரம், மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் புகையிரத துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடை செய்யும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை ஜனாதிபதி நீட்டித்து வருகிறார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் போதைப்பொருளுக்கு எதிரான போரை முன்னெடுத்து பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்து வருகின்றார். 'அதிகபட்ச பலத்தை' பயன்படுத்துமாறு பொலிசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரச படைகள் 'அவர்களைக் கண்டுபிடிக்கும்' என்றும், 'ஒரு துப்பாக்கிச் சூடு நடக்கும், இறுதியில் அவர்கள் கொல்லப்படுவார்கள்' என்றும் அலஸ் மேலும் கூறினார். இவ்வாறு செயல்படும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக ஆஜராவதாக அவர் உறுதியளித்தார்.

அதே நேரத்தில், இணையவழி முறைகளின் பாதுகாப்பு தொடர்பான மசோதா ஜனவரியில் அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகளை குற்றமாக்கி, அனைத்து சமூக ஊடகங்களிலும் இது பாரதூரமான தாக்குதலை முன்னெடுக்கும்.

இலங்கையின் இந்த சர்வாதிகார நகர்வுகள் சர்வதேச அபிவிருத்திகளின் ஒரு பகுதியாகும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் பாசிச மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றன.

எதிர்க்கட்சிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் போலி இடது கட்சிகளும் பொருளாதார நெருக்கடியின் உண்மையான மூலத்தை மூடி மறைக்க முயல்கின்றன. நாட்டை ஆளும் ஒரு சில நபர்களின் மோசடிகள், ஊழல்கள் மற்றும் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததன் விளைவாகவே நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஜே.வி.பி. / தே.ம.ச., நல்லாட்சி மற்றும் தேசிய வளங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி நெருக்கடியைத் தீர்க்கும் என்று அவை மோசடியாக கூறிக்கொள்கின்றன.

இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை. ஆளும் கட்சியின் உயர் அதிகாரிகள் மற்றும் கூட்டாளிகளின் ஊழல் மற்றும் மோசடிகள் தலைவிரித்தாடும் அதே வேளை, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியை அகற்றுவதன் மூலம் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி, நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் அதே வேளை, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் போராட வேண்டிய தொடர் நடவடிக்கைகளை முன்மொழிகிறது. பின்வருவன இந்த நடவடிக்கைகளில் அடங்கும்:

  • அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை நிராகரி!
  • பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பெரும் செல்வத்தை கைப்பற்றுங்கள்!
  • உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் பிற வளங்களின் மீதான தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை உருவாக்கு! தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய முக்கிய பொருளாதார மையங்களை தேசியமயமாக்கு!
  • ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! விவசாயிகளுக்கு உர மானியம் உட்பட அனைத்து மானியங்களையும் மீண்டும் வழங்கு
  • கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலைச் சூழலுடன் அனைவருக்கும் தொழில்களை உத்தரவாதம் செய்! வாழ்க்கைச் செலவுக்கு ஏற்பட ஊதியத்தை நிர்ணயம் செய்!

தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அதிதீவிரவாத குழுக்களின் அனைத்து வகையான சிங்கள பேரினவாத மற்றும் இனவாத பிரச்சாரங்களையும் நிராகரிக்குமாறு உழைக்கும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இலங்கை ஆளும் உயரடுக்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இனவாத ஆயுதத்தைப் பயன்படுத்தி இரத்தக்களரி இனவாதப் போரை நடத்திய வரலாற்றைக் கொண்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்துடன் பிணைந்துள்ளது. தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டமைப்பானது தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கவும் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் உதவும்.

பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரின் ஆபத்தை முன்வைக்கும் ஏகாதிபத்திய உந்துதலுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

இந்த போராட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினை, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதாகும். அந்தப் பணிக்காகப் போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பிலும் சேருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading