சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அதன் உறுப்பினர்கள் மீது ஆளும் கட்சி குண்டர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலைக் கண்டிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின், பொதுஜன பிரகதிஷிலி சேவக சங்கம் (PPSS) அல்லது பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் தலைவர் இன்திக பெரேரா மற்றும் செயலாளார் சுரங்க பியவர்தன ஆகியோர் வியாழக்கிழமை மாலை, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள் இருவரை வன்முறையாகத் தாக்கினர்.

பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம், முன்ளாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவால் வழிநடத்தப்பட்டதும் ரணில் விக்கிரமசிங்கவை தற்போதைய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததுமான வலதுசாரி ஆளும் ஸ்ரீ-லங்கா பொதுஜன பெரமுனவின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கம் ஆகும்

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களில் ஒருவரான தேகின் வசந்த இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியாராக கடமையாற்றியுள்ளார். வசந்த, இலங்கை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் உறுப்பினரும் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சோசலிசக் கொள்கைகள் மற்றும் உரிமைகளுக்கான ஒரு போராளியாக நன்கு அறியப்பட்டவர் ஆவார். தாக்குலுக்கு இலக்கான மற்றொருவர் சோ.ச.க இன் முழுநேர அங்கத்தவரான லக்ஷமன் பெர்னாண்டோ ஆவார்.

சோ.ச.க இந்த விசமத்தனமான தாக்குதலை கண்டனம் செய்வதுடன், அதன் அரசியல் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுபவதற்கான எமது கட்சியின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. சோ.ச.க, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இலங்கைப் பகுதி ஆகும்.

இந்தக் குற்றவாளிகள் சட்டத்தின் முழுப்பலத்துடன் தண்டிக்கபட வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜோசப் கிஷோர் உறையாற்ற இருக்கும் பகிரங்க கூட்டங்களுக்காக மொரட்டுவ வளாகத்தின் பின்புற வாயிலில், சோ.ச.க இன் குழு பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. “சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்க) தேசிய செயலாளர் ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றுவதற்கு இலங்கைக்கு வருகை தருகிறார்” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு பிரசுரத்தை அவர்கள் அங்கு விநியோகித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார் [Photo: WSWS]

சோ.ச.க.யின் தோழர்கள், மாணவர்களின் நடமாட்டம் குறைவாக இருந்ததால் மாலை சுமார் ஆறு மணியளவில் பிரச்சாரத்தை முடிக்க இருந்தனர்.

பின்னர் பொலிசுக்கு வழங்கிய முறைப்பாட்டில் கூறியபடி, இரண்டு தொழிற்சங்க அதிகாரிகளான பெரேரா மற்றும் பியவர்த்தன ஆகியோர் நீண்ட மரத்தடிகளுடன் முச்சக்கர வண்டியில் வந்திறங்கினர்.

”இன்று உன்னை முடித்து விடுகிறோம். உன்னை மீண்டும் வளாகத்திற்கு வர விடமாட்டோம்” என கூச்சலிட்டபடி வசந்தவை நோக்கி தாக்குவதற்கு அவர்கள் விரைந்தனர். பெரேரா மரத்தடியால் வசந்தவின் தலையில் அடிக்க முயன்றார். இது மரணகரமான அடியாக இருந்திருக்கும்.

வசந்த தாக்குதலைத் தடுத்தார், ஆனால் மற்றொரு அடியால் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டதுடன், இரண்டு விரல்களில் (மருத்துவ ரீதியாக 4வது மற்றும் 5வது மெட்டகார்பல் எலும்பு முறிவுகள்) முறிவு ஏற்பட்டது. பியவர்தனவும் வசந்தவை தாக்கி அவரது மூக்குக் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.

தாக்குதலில் காயமடைந்நத சோ.ச.க இன் அங்கத்தவரான தேகின் வசந்த [Photo: WSWS]

லக்ஷ்மன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது, அவரது உடலின் பின்பகுதியில் காயங்கள் மற்றும் கீறல்கள் ஏற்பட்டன.

சோ.ச.க.யின் ஏனைய அங்கத்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தவுடன் இரண்டு குண்டர்களும் அங்கிருந்து வெளியேறினர்

இது முன்னரே திட்டமிடப்பட்ட தாக்குதல் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் அன்றைய தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை, எங்கள் தோழர்கள் மீதான வன்முறைத் தாக்குதலை பார்த்துகொண்டிருந்த, சில மாணவர்களின் உடந்தையுடன் இந்தக் குண்டர்கள் அறிந்திருந்தனர்.

வசந்தவை தாக்கியவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச சோசலிச கொள்கைகளுக்கான போராளியாக அவரை நன்கு அறிந்திருந்தனர். கல்வி சாரா ஊழியர்களின் உரிமைகளுக்கான முன்னணி ஆர்வலரான அவர், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அரசாங்க சார்பு மற்றும் முதலாளித்துவ சார்பு கொள்கைகளுக்கு எதிரான முன்னளி பிரச்சாரகாரர் ஆக இருந்து வருகிறார்.

தொழிற்சங்கக் கூட்டங்களில், இந்த அதிகாரத்துவத்தினர் அவரைப் பேசவிடாமல் தடுக்கவும், சில சமயங்களில் அவரை உடல் ரீதியாகத் தாக்கவும் முயன்றனர். குறிப்பாக, சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை நிறுவுவதற்கான வசந்தவின் பிரச்சாரத்திற்கு அவர்கள் தமது விரோதத்தை வெளிப்படுத்தினர்.

எமது தோழர்கள் கட்சியின் சட்டத்தரணியுடன் மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்தனர். அவர்களின் நிலைமைகள் கவலைக்கிடமாக இருந்ததால், அருகில் உள்ள லுனாவ பொது மருத்துவமனைக்கு அவர்களை பொலிசார் அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே வசதி இல்லாததால், வசந்தவின் இடது கையில் எலும்பு முறிவு காணப்பட்ட நிலையில், மறுநாள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை அன்று, இரு தோழர்களும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும், மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டனர். வசந்தவின் இடது கையில் கட்டுப்போடப்பட்டுள்ளதோடு, எலும்பு முறிவு குணமாகும் வரை அதனை பயன்படுத்த முடியாது. அவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். லக்ஷமனின் முகம், கழுத்து மற்றும் முதுகில் பிளாஸ்டர் போடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், முகத்திலும் முதுகிலும் காயம் அடைந்த சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் பெர்னாண்டோ [Photo: WSWS]

தொழிற்சங்க அதிகாரிகள் இருவரும் வெள்ளியன்று கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய வாடகை முச்சக்கர வண்டியை சட்டபுர்வமாக பிடித்துவ வைக்கப்பட வேண்டியிருந்தும் அதன் வாகன இலக்கம் சட்டத்தரணியால் கொடுக்கபட்டிருந்தும் பொலிசார் அதைச் செய்யவில்லை.

பெரேராவும், பியவர்தனவும் மொரட்டுவவில் உள்ள பதில் நீதிவான் முன்னிலையில் சனிக்கிழமை அன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிவானின் விசாரனையில், சோ.ச.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர்கள் இருவரும் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர் என விளக்கினார். சோ.ச.க.யின் அங்கத்தவர்களுக்கு எதிராக சதி செய்யவும், மரணத்தை விளைவிக்கும் உடல் ரீதியான தாக்குதலைச் செய்யவும், அவர்கள் ஆளும் கட்சியுடன் தமது நெருங்கிய தொடர்பை பயன்படுத்தியுள்ளனர் என வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

சோ.ச.க. உறுப்பினர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரத்தை வழக்கறிஞர் நீதி மன்றத்தில் சமர்ப்பித்தார். நாட்டின் தேர்தல் ஆணையகத்தால் அங்கீகரிக்க்கபட்ட ஒரு தேசிய அரசியல் கட்சி மட்டுமல்ல, இது அதன் கொள்கை ரீதியாக அரசிலுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவாகவும் உள்ளது என அவர் விளக்கினார்.

இந்தக் கட்சியின் அங்கத்தவர்கள் மீதான தாக்குதல் முற்றுமுழுதாக அரசியலில் ஈடுபடும் எவரதும் அல்லது சமூகத்தினதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான குற்றவியல் தாக்குதலாகக் கருதப்பட வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வாறு குண்டர்களாக செயற்படுகிறார்கள் என்பதை விளக்கிய அவர், இது தன்னிச்சையான தாக்குதல் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார். குண்டர்கள் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி ஆயுதங்களாக மரத் தடிகளை பாவித்து, சோ.ச.க. அங்கத்தவர்களைப் பின்தொடர்ந்து வந்து நடுவீதியில் அவர்களைத் தாக்கியதால் இது முன்னரே திட்டமிடப்பட்ட தாக்குதல் ஆகும்.

இருவரும் ஆளும் கட்சியுடன் தமது நெருக்கமாக அரசியல் தொடர்புகளை பயப்படுத்த கூடும் என்பதால் பெரேராவையும் பியவர்தனவையும் காவலில் இருந்து விடுவிப்பது சோ.ச.க. அங்கத்தவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என வழக்கறிஞர் வாதிட்டார்.

பெரேரா மற்றும் பியவர்தன ஆகியோர் பிணையில் வருவதற்கு வழி வகுத்து, பாதிக்கப்பட்டவர்ளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக நீதிவானிடம் கூறி பொலிசார் இந்தச் சம்பவத்தை குறைத்து மதிப்பிட்டனர். ஏன் அந்த முச்சக்கர வண்டியை கைப்பற்றவில்லை என பொலிசாரிடம் நீதிபதி வினவினார்.

பொலிஸார் இந்த இரண்டு குண்டர்களுக்கு ஆதரவாக பாராபட்சம் காட்டியதாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு வழக்கறிஞர் கூறினார்.

ரூபா 500,000ம் பெறுமதியான தனித் தனியான பிணைகள் மற்றும் ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டும் என்பது உட்பட கடுமையான நிபந்தனையின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பதில் நீதிவான் பிணை வழங்கினார்

சோ.ச.க.யின் அரசியல் நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), எமது தோழர்களையும், அதன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கட்சியின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கப் பிரச்சாரம் செய்யும்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்கள், ஸ்ரீ.ல.பொ.மு.யின் குண்டர் குழுவின் ஒரு பகுதியினர் ஆவர். இந்த குண்டர் குழு, தொழிலாளர்கள் மத்தியில் எழும் கோபங்களை மௌனமாக்க பல வேலைத்தளங்களில் செயற்பட்டு வருகின்றது.

வெகுஜனங்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்துள்ளதால் ஆளும் கட்சி விரக்தியில் உள்ளது. ஸ்ரீ.ல.பொ.மு. ஆட்சியின் முன்னாள் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் பாரிய எழுச்சியால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் பாரிய சுமைகளை தம்மீது சுமத்துவதற்கு எதிராக ஆட்சியயை கண்டித்து மக்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர்.

முன்னாள் பிரதமர் மகிந்த இராஜபக்ஷ கடந்த ஆண்டு மே 9 அன்று கொழும்பில் உள்ள காலி முகத்திடலை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுமாறு அதன் தொழிற்சங்கங்களில் உள்ளவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான குண்டர்களுக்கு உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், மக்களின் கோபத்திற்கு மத்தியில் அவரது அரசாங்கம் கவிழ்ந்தது. மதிப்பிழந்த கோடாபய இராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியை துறந்தார். தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி இடது குழுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் எழுச்சியை சுரண்டிக்கொண்ட ஸ்ரீ.ல.பொ.மு., நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, அமெரிக்க சார்பு கைக்கூலியான ரணில் விக்கிரமசிங்கவை பதவி உயர்துவதற்கு ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுடன் சதியில் ஈடுபட்டது.

விக்கிரமசிங்கவும் ஸ்ரீ.ல.பொ.மு.யும் வேலைகள், ஊதியங்கள், ஓய்வுதியங்களை வெட்டுதல் மற்றும் பொதுச் சுகாதாரம், கல்வி உட்பட சமூக வேலைத்திட்டங்களை வெட்டுதல் மற்றும் தாங்கமுடியாத அளவில் அத்தியவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துதல் போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி அமுல்படுத்தி வருகின்றன.

அதன் விளைவாக விக்கிரமசிங்க ஆட்சி தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளிடம் இருந்து பாரியளவான எதிர்ப்புகளை எதிர்நோக்குகின்றது. தொழிற்சங்க அதிகாரத்துவங்களை பயன்படுத்தி வெகுஜன எழுச்சியை தடுக்க முற்படும் அதேவேளை, அது வளர்ந்துவரும் எதிர்ப்புகளை நசுக்க அடக்குமுறை பொலிஸ்-இராணுவ இயந்திரங்கள் மற்றும் குண்டர் குழுக்களையும் கட்டவிழ்த்து விடுகின்றது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உட்பட அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் அடக்குமுறைகள் மீதான அதன் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சோ.ச.க. முன்வைத்துள்ள சோசலிச வேலைத்திட்டத்தின் வளர்ந்துவரும் செல்வாக்கு குறித்து குறிப்பாக பதட்டம் அடைந்துள்ளனர்.

எமது கட்சியின் பிரச்சாரகர்கள் விநியோகித்துள்ள சோ.ச.கயின் துண்டுப்பிரசுரம் விளக்கியதாவது:

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலின் சியோனிச அரசின் கொலைகார முற்றுகை உட்பட ஏகாதிபத்திய யுத்தத்தின் வெடிப்புடன், 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத அனைத்து பிரச்சனைகளையும் சர்வதேச தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் எதிர்கொள்கின்றனர். சமூக சமத்துவமின்மை, போர், கோவிட்-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம், அரசு அடக்குமுறை மற்றும் எதேச்சாதிகாரத்தினதும் பாசிசத்தினதும் எழுச்சி உட்பட தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து எரியும் பிரச்சனைகளும் சர்வதேச பிரச்சனைகளாகும். இவற்றுக்கு தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய மற்றும் புரட்சிகர தீர்வு அவசியமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிரான தனது போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை உட்பட முழு தெற்காசிய பிராந்தியமும் புவிசார் அரசியல் பதட்டங்களின் உலகளாவிய சுழலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த சோசலிச மற்றும் உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கம் அவசியமாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் மீதே சோ.ச.க. அடித்தளமிட்டுள்ளது. நாம், இந்த தாக்குதலை கண்டிக்கும் குறிப்புகளை சோ.ச.க.யின் மின்னஞ்சல் முகவரியான wswscmb@sltnet.lk. இற்கு அனுப்புமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை வலியுறுத்துகின்றோம்.

நாம், டிசம்பர் 07 அன்று பி.ப 3 மணிக்கு, பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் விஞ்ஞானத்துறையின் 86 இலக்க மண்டபத்திலும், மற்றும் டிசம்பர் 10 அன்று பி.ப 3 மணிக்கு கொழும்பில் உள்ள புதிய நகர மண்டபத்திலும் நடைபெற இருக்கும் அமெரிக்க சோ.ச.க.யின் தேசிய செயலாளர் தோழர் ஜோசப் கிஷோர் உரையாற்றும் பகிரங்க கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம்.

Loading