ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை

காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் குறித்து சர்வதேச தொடர் விரிவுரைகளின் ஒரு பகுதியாக, நவம்பர் 18 ம் திகதி, பிர்க்பெக்கிலுள்ள லண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் வழங்கிய கருத்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விரிவுரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடிப்படைக் கோட்பாடுகளை, காஸாவில் ஏகாதிபத்திய-சியோனிச இனப்படுகொலைக்கு எதிரான தற்போதைய போராட்டத்துடன் தொடர்புபடுத்துகிறது.

பகிரங்கக் கடிதமும் அனைத்துலகக் குழுவின் தோற்றமும்

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வாரம், நவம்பர் 16,1953 அன்று, “உலகெங்கிலுமுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எழுதிய கடிதம்”, அப்போது அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச அமைப்பாக இருந்த சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) செய்தித்தாளான தி மிலிட்டன்ட் (The Militant) இல் வெளியிடப்பட்டது. இது, கட்சியின் தேசிய குழுவின் பெயரில் வெளியிடப்பட்டதோடு, அதன் ஆசிரியராக SWP இன் 63 வயதான தேசியத் தலைவராக ஜேம்ஸ் பி. கனன் இருந்தார்.

அமெரிக்காவில் கம்யூனிச-எதிர்ப்புச் சட்டங்கள் இருந்ததால் சோசலிச தொழிலாளர் கட்சியானது (SWP) நான்காம் அகிலத்துடன் முறையாக இணைக்கப்படவில்லை. இந்த தொழில்நுட்ப வரம்புகள் இருந்தபோதிலும், 1928 இல் சர்வதேச இடது எதிர்ப்பு அணியை நிறுவுவதில் கனன் முக்கிய பாத்திரம் வகித்தார். நான்காம் அகிலத்திற்கான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியுடன் நெருக்கமான ஒத்துழைப்பையும் மற்றும் செப்டம்பர் 1938 இல் அதன் ஸ்தாபக மாநாட்டைத் தயாரிப்பதிலும் கனனுடைய பங்கு அடிப்படையாக இருந்தது. 1939-40 இல் மக்ஸ் ஷாட்மேன், ஜேம்ஸ் பர்ன்ஹாம் மற்றும் மார்ட்டின் அபெர்ன் ஆகியோரின் குட்டி-முதலாளித்துவ திருத்தல்வாத போக்கை எதிர்த்து ட்ரொட்ஸ்கி தலைமையிலான போராட்டத்தில் அவர் மையப் பாத்திரம் வகித்திருந்தார். ஆகஸ்ட் 1940 இல் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட பின்னர், இரண்டாம் உலகப் போரின் பிற்போக்குத்தனமான சூழலும் மற்றும் பனிப்போரின் ஆரம்ப ஆண்டுகளிலும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டப் பாரம்பரியத்தை உறுதியாக பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டுதான் கனனின் அரசியல் அதிகாரம் இருந்தது.

ஜேம்ஸ் பி. கனன் [Photo: WSWS]

ஆனால் 1953ல், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இன்றியமையாத வேலைத்திட்ட அடித்தளங்களை நிராகரிக்க முன்மொழிந்த மிஷல் பப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேல் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நான்காம் அகிலத்தின் சர்வதேச செயலகத்தில் ஒரு சக்திவாய்ந்த திருத்தல்வாதப் போக்கை கனன் எதிர்கொண்டார். ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மை மற்றும் நான்காம் அகிலத்தை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக கட்டியெழுப்பும் முன்னோக்கு மீதான ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை நிராகரிப்பதே பப்லோவின் திருத்தல்வாதத்தின் மையக் கூறுகளாகும். பப்லோவும் அவரது ஏவலரான மண்டேலும் நான்காம் அகிலத்தின் பிரிவுகளை வெகுஜன ஸ்ராலினிசக் கட்சிகளுக்குள் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ள சக்திகளின் சமநிலையைப் பொறுத்து, சமூக ஜனநாயக, முதலாளித்துவ தேசியவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிர இயக்கங்களுக்குள் கலைக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

அமெரிக்காவிற்குள், பப்லோவின் பின்பற்றாளர்கள் இந்தக் கலைப்புவாத வேலைத்திட்டத்தை “பழைய ட்ரொட்ஸ்கிச குப்பை” என்கின்ற பதாகையின் கீழ் முன்னெடுத்தனர். அவர்கள் கனனையும் சோசலிச தொழிலாளர் கட்சியின் மூத்த தலைமையையும் “மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தை” பாதுகாப்பது அரசியல் ரீதியாக பொருத்தமற்ற “அருங்காட்சியகப் கலைப்பொருட்கள்” என்று கேலி செய்தனர். பப்லோ வெறுமனே வார்த்தைப் போரில் மட்டும் ஈடுபடவில்லை. நான்காம் அகிலத்தில் ட்ரொட்ஸ்கிச-விரோத பிரிவுகளை ஒழுங்கமைக்கவும், நான்காம் அகிலத்தை ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கமாக இருப்பதைக் கலைப்பதற்கான அவரது உந்துதலை எதிர்த்த தனிநபர்கள் மற்றும் முழுப் பிரிவுகளையும் கூட வெளியேற்றவும் அவர் சர்வதேச செயலகத்தில் தனது பதவியைப் பயன்படுத்தினார்.

நான்காம் அகிலத்திற்கு எதிரான பப்லோவின் போருக்கு அடித்தளமாக இருந்த அரசியல் கருத்தாக்கம், ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுக்கு மாறாக, ஸ்ராலினிசம் ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர சக்தியாக இருந்தது என்ற அவரது கருத்தாக்கமாகும். வெகுஜனங்களின் அழுத்தத்திற்கு விடையிறுக்கும் வகையிலும், ஒரு உலகளாவிய அணு ஆயுதப் போரின் நிலைமைகளின் கீழும், ஸ்ராலினிஸ்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்ற நிர்பந்திக்கப்படுவார்கள். இந்த செயல்முறையின் விளைவாக “உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்” உருவாக்கப்படும், அவைகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எப்படியாவது சோசலிச சமூகங்களாக உருவெடுக்கும் என்பதே அவரது கருத்தாக்கமாகும்.

இந்த வினோதமான முன்னோக்கு கணிசமான பின்தொடர்பவர்களை ஈர்த்தது என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நான்காம் அகிலத்திற்குள் உருவான அரசியல் திசைதிருப்பலுக்கு மட்டுமல்லாமல், தீவிர இடது அரசியலில் ஈடுபட்டுள்ள பெருகிய முறையில் செல்வச் செழிப்புள்ள மற்றும் அரசியல் ரீதியாக சுய-நனவு கொண்ட குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கும் சான்றளிக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடித்தளக் கோட்பாடுகள்

“பகிரங்கக் கடிதம்” என்று அறியப்பட்ட கனன் வெளியிட்ட கடிதமானது நான்காம் அகிலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான அரசியல் முன்முயற்சியாகும். தனது மிகப் பெரும் அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடித்தளக் கோட்பாடுகளை கனன் சுருக்கமாகக் கூறினார். அவர் கீழ்வருமாறு எழுதினார்:

1. முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலமானது மோசமாகிவரும் பொருளாதார மந்தநிலைகள், உலகப் போர்கள் மற்றும் பாசிசம் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிப்பாடுகளின் மூலம் உலக நாகரீகத்தை ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகின்றது. அணு ஆயுதங்களின் வளர்ச்சி இன்று இந்த அபாயத்தை சாத்தியமானளவு அபாயகரமான வழியில் எடுத்துக்காட்டுகின்றது.

2. முதலாளித்துவத்திற்குப் பதிலாக உலக அளவில் சோசலிசத்தின் திட்டமிட்ட பொருளாதாரமாக மாற்றுவதனூடாக, முதலாளித்துவத்தின் ஆரம்ப காலகட்டங்களில் முதலாளித்துவத்தால் தொடங்கப்பட்ட முன்னேற்றச் சுருளை மீண்டும் தொடங்குதன் மூலம் மட்டுமே பாதாளத்திற்குள் வீழ்வதை தவிர்க்க முடியும்.

3. சமுதாயத்தில் உண்மையான புரட்சிகர வர்க்கமாக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் தொழிலாளர்கள் அதிகாரத்திற்கு செல்லும் பாதையை எடுப்பதற்கு சமூக சக்திகளின் உலக உறவு இன்று போல ஒருபோதும் சாதகமானதாக இருந்ததில்லை என்றபோதிலும், தொழிலாள வர்க்கமே தலைமைத்துவ நெருக்கடியை எதிர்கொள்கிறது.

4. இந்த உலக-வரலாற்று குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கு, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாள வர்க்கம், லெனின் உருவாக்கிய மாதிரியான ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியை கட்டியமைக்கவேண்டும். அதாவது, அக்கட்சி ஜனநாயகத்தையும் மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் திறன் கொண்ட ஒரு போராடும் குணம் மிக்க கட்சியாக இருக்கவேண்டும். அதாவது, முடிவுகளை எடுப்பதில் ஜனநாயகமும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும் இருக்க வேண்டும். உறுப்பினர்களால் கட்டுப்படுத்தக்கூடிய தலைமையையும், எதிரிகளின் தாக்குதலின் கீழும் அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் நடைமுறைப்படுத்தக் கூடிய திறம்படைத்த உறுப்பினர்களையும் கொண்ட கட்சியாக அது இருக்க வேண்டும்.

5. 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் கௌரவத்தைச் சுரண்டி, தொழிலாளர்களை தன் பக்கம் ஈர்த்து, பின்னர் அத்தொழிலாளர்களது நம்பிக்கையைக் காட்டிக்கொடுத்து, அவர்களை சமூக ஜனநாயகத்தின் பிடியின் அக்கறையின்மைக்குள், அல்லது மீண்டும் முதலாளித்துவத்திலான மாயைகளுக்குள்ளே தூக்கிவீசுகின்ற ஸ்ராலினிசம் தான் இதற்கான பிரதான தடைக்கல்லாக இருக்கிறது. இந்தக் காட்டிக் கொடுப்புகளுக்கான தண்டனைகளானது பாசிச அல்லது முடியாட்சி சக்திகளின் ஒருக்கிணைப்பிற்கும், முதலாளித்துவத்தால் ஊக்குவிக்கப்பட்டு தயாரிப்பு செய்யப்படுகின்ற போர்களின் புதிய வெடிப்புகளின் வடிவத்திலும் உழைக்கும் மக்களால் செலுத்தப்படுகின்றன. எனவேதான், நான்காம் அகிலம் சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய பணிகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.

6. நான்காம் அகிலத்தின் பல பிரிவுகள் மற்றும் அதன் வேலைத்திட்டத்திற்கு ஆதரவுள்ள கட்சிகள் அல்லது குழுக்கள் எதிர்கொள்ளும் நெகிழ்வான தந்திரோபாயங்களின் தேவையாக இருப்பது, ஸ்ராலினிசத்திற்கு அடிபணியாமல் ஏகாதிபத்தியத்தையும் அதன் அனைத்து குட்டி-முதலாளித்துவ முகமைகளையும் (தேசியவாத வடிவாக்கங்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போன்றவை) எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை அவர்கள் அறிவது மிகவும் இன்றியமையாததாக ஆக்குகிறது. மறுதிசையில், ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல் ஸ்ராலினிசத்தை (இறுதி பகுப்பாய்வில் இது ஏகாதிபத்தியத்தின் ஒரு குட்டி-முதலாளித்துவ முகமை) எதிர்த்துப் போராடுவது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அடித்தளக் கோட்பாடுகள் இன்று உலகில் அதிகரித்துவரும் சிக்கலான மற்றும் வளர்ச்சியடைந்து வரும் அரசியலில் முழு செல்லுபடியாகும் தன்மையைத் தக்கவைத்துக்கொள்கின்றன. உண்மையில் ட்ரொட்ஸ்கி முன்கணித்து அறிவித்தபடி, ஒவ்வொரு பக்கத்திலும் திறக்கப்பட்ட புரட்சிகரமான சூழ்நிலைமைகள், ஒரு காலத்தில் அக்காலத்தின் வாழும் யதார்த்தத்துடன் நெருக்கமாக இணைக்கப்படாத ஓரளவு தொலைதூர அருவங்களாகத் தோன்றியவற்றுக்கு இப்போதுதான் முழு உறுதித்தன்மையைக் கொண்டு வந்துள்ளன. இந்தக் கோட்பாடுகள் இப்போது அரசியல் பகுப்பாய்விலும் நடைமுறைச் செயல்பாட்டின் போக்கைத் தீர்மானிப்பதிலும் அதிக சக்தியுடன் உள்ளன என்பதே உண்மையாக இருக்கிறது.

பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டு எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரும், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் பணிகளின் சுருக்கமாக பகிரங்கக் கடிதம் குறைவில்லாப் பொருத்தத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அணு ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் பாசிச காட்டுமிராண்டித்தனத்தின் ஆபத்து குறித்து கனன் விடுத்த எச்சரிக்கையானது 1953 இல் இருந்ததை விட இன்று இன்னும் மிகவும் சரியானதாக இந்த நேரத்தில் இருக்கிறது.

தனித்து நிற்கும் ஒரு முக்கிய மாற்றம் என்னவென்றால், சோவியத் ஒன்றியம் இப்போது இல்லை, மற்றும் வெகுஜன ஸ்ராலினிச கட்சிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிச்சயமாக, ஸ்ராலினிசத்தின் பிற்போக்கு வர்க்க ஒத்துழைப்புவாதம், தேசியவாதம் மற்றும் சோசலிச-விரோத அரசியலானது புதிய அரசியல் போர்வைகளில் நீடிக்கும் அளவிற்கு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு அது பிரதிநிதித்துவம் செய்த இந்தத் தடை இன்னும் மறைந்துவிடவில்லை.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், தொழிற்கட்சி, சமூக ஜனநாயகம் மற்றும் “பசுமைக் கட்சி” என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பிற்போக்கு அமைப்புகள் மற்றும் எண்ணற்ற போலி-இடது மற்றும் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாத கட்சிகள் மற்றும் அமைப்புகளின் திட்டமிட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துரோகத்தை தொழிலாள வர்க்கம் இன்னும் எதிர்கொள்கிறது— இவைகளில் பல நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை பப்லோவாத நிராகரிப்பிலிருந்து தொடங்குகின்றன. புரட்சிகரத் தலைமையின் நெருக்கடி இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது.

இடது எதிர்ப்பு அணி உறுப்பினர்களுடன் லியோன் ட்ரொட்ஸ்கி

ஆனால் அக்டோபர் புரட்சியின் மரபுவழி மற்றும் வேலைத்திட்டத்துடன் ஸ்ராலினிசத்தை தவறான மற்றும் அரசியல் ரீதியாக திசைதிருப்பும் அடையாளம் காணப்படுவதிலிருந்து முற்றிலும் எதுவுமே மிஞ்சிருக்கவில்லை. வெகுஜன ஸ்ராலினிச இயக்கத்தின் முறிவானது, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியால் இடது எதிர்ப்பு அணி ஸ்தாபித்ததன் மூலம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை நிரூபணம் செய்வதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலக புரட்சிகர அரசியல் முன்னோக்கை உறுதிப்படுத்தியுமுள்ளது. இவைகள் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தற்போதைய சர்வதேச நெருக்கடியில் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் உண்மைகளாகும்.

பாதாளத்திற்குள் வீழ்தல்: காஸா இனப்படுகொலை

காஸாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலைக்கு மத்தியில் இன்று நாம் சந்திக்கிறோம். இதைத்தான் “பாதாளத்திற்குள் வீழ்தல்” என்பதை உணர்ந்து கொள்ளல் என்று பகிரங்கக் கடிதம் எச்சரித்தது. மார்க்ஸ் எழுதியது போல், “தலை முதல் கால் வரை, ஒவ்வொரு துளையிலிருந்தும், இரத்தமும் அழுக்கும் சொட்டும்” முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக வெளிப்பட்டது. அதனால் அது முடிவிற்கு வந்துவிடும்.

அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் இஸ்ரேலிய ஆட்சியானது செய்து வரும் அட்டூழியங்களின் தினசரிக் காட்சிகளால் உலகெங்கிலுமுள்ள பில்லியன் கணக்கான மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பொதுவாக “மனிதாபிமான தலையீடுகள்” என்று விவரிக்கப்படும் அதன் போர்களை நியாயப்படுத்த அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணிகளும் பயன்படுத்திய “மனித உரிமைகள்” பற்றிய பாசாங்குத்தனமான வேண்டுதல் அழைப்புகள் அனைத்தும் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டு மதிப்பிழந்துவிட்டன.

ஒவ்வொரு ஏகாதிபத்தியத் தலைவரும் அதாவது அமெரிக்காவில் பைடென், கனடாவில் ட்ரூடோ, பிரிட்டனில் சுனாக், பிரான்சில் மக்ரோன், ஜேர்மனியில் ஷால்ட்ஸ், இத்தாலியில் மெலோனி ஆகியோர்கள் பாரிய படுகொலைகளில் நெதன்யாகுடன் குற்றக் கூட்டாளிகளாக முழுமையாக சம்பந்தப்பட்டுள்ளனர். போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டால், சில நாஜி குற்றத் தலைவர்கள் நூர்ன்பெர்க்கில் கேலிக்கூத்தாக்க முயன்றதைப் போல, இஸ்ரேலிய சியோனிச ஆட்சியால் இழைக்கப்படும் அட்டூழியங்கள் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று இவர்களால் கூற முடியாது. இக்குற்றங்களை இவர்கள் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை நியாயப்படுத்தி வரவேற்றுமுள்ளனர்.

புதன்கிழமை, அக்டோபர் 18, 2023, டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆரத்தழுவி வரவேற்கிறார். [AP Photo/Evan Vucci]

நவம்பர் 16ந் திகதி நிலவரப்படி, காஸாவில் குறைந்தது 4,710 குழந்தைகள் உட்பட 11,500 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டில் நடந்த வேறு எந்த மோதலையும் விட பாலஸ்தீனக் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. மேலும், 29,800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். தகவல் தொடர்பு வசதிகள் இல்லாததால், காஸா சுகாதார அமைச்சகம் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதை நிறுத்தியுள்ளது. அக்டோபர் 7 முதல், இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 320 காஸா மக்களைக் கொன்றுள்ளன. இந்த விகிதம் இன்றும் தொடர்ந்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,000-ஐ தாண்டிச் செல்கிறது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருக்கின்றனர். காஸா மீதான கார்பெட் தரைமட்டமாக்கும் குண்டுவீச்சுகள் வடக்கு காஸாவின் 40 சதவீத வீடுகளை அழித்துள்ளன அல்லது சேதப்படுத்தியுள்ளன மற்றும் அதன் சுகாதாரம், உணவு விநியோகம் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை சிதைத்துள்ளன. இது சர்வதேச சட்டத்தின் கீழ் தெளிவான போர்க் குற்றங்கள் ஆகும். இஸ்ரேலிய இராணுவ இயந்திரத்தின் வன்முறை முக்கியமாக காஸா மக்களுக்கு எதிராக இயக்கப்பட்டிருந்தாலும், இராணுவமும் பாசிச குடியேற்றக்காரர்களும் மேற்குக் கரையில் சுமார் 175 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளனர்.

இஸ்ரேலியத் தாக்குதலின் இனப்படுகொலைத் தன்மை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. இஸ்ரேலிய தலைவர்களின் வெளிப்படையான அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்படுகிறது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர், ஹமாஸை ஆதரிப்பவர்கள் “அழித்தொழிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். நெதன்யாகுவின் கூட்டணி பங்காளியும், இஸ்ரேலின் பாரம்பரிய பாதுகாப்பு அமைச்சருமான அமிஹா எலியாஹு, காஸா மீது ஒரு அணுகுண்டு வீசுவது ஒரு விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும் என்று கூறினார். சமீப காலம் வரை இஸ்ரேலின் தகவல் அமைச்சராக இருந்த காலிட் டிஸ்டெல் அட்பரியன், “காஸா முழுவதையும் பூமியின் முகத்திலிருந்து” அழிக்க வேண்டும் என்றும் அதன் மக்களை எகிப்திற்கு நாடுகடத்த கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.

அக்டோபர் இறுதியில், கிரேக் மோகிபர் என்பவர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரின் நியூயோர்க் அலுவலகத்தின் இயக்குநர் பதவியை இராஜினாமா செய்தபோது பின்வருமாறு கூறினார்: “இது இனப்படுகொலையின் பாடப்படிப்பிற்கான நிகழ்வாக இருக்கிறது. பாலஸ்தீனத்தில் ஐரோப்பிய, இன-தேசியவாத, குடியேற்ற காலனித்துவ திட்டம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, பாலஸ்தீனத்தில் பூர்வீக பாலஸ்தீன வாழ்க்கையின் கடைசி எச்சங்களை விரைவாக அழிப்பதை நோக்கியதாக உள்ளது. மேலும் என்னவென்றால், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் இந்த கொடூரமான தாக்குதலுக்கு முற்றிலும் உடந்தையாக உள்ளன.” ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் ஜெனீவாவில் கூறுகையில், “மனிதாபிமான விழுமியங்களுக்கான மிக அடிப்படையான மரியாதை சீர்குலைந்துள்ளது. இவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதை உடனிணைவான துணைச் சேதம் (collateral damage) என்று ஒதுக்கிவிட முடியாது”.

நவம்பர் 1, 2023 புதன்கிழமையன்று, வடக்கு காஸா பகுதியிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு இடையில் ஒருவர் இடிபாடுகளின் மேல் அமர்ந்துள்ளார்.

ஒரு இராணுவ நடவடிக்கைகளின் மைய நிலையமாக அல்-ஷிஃபா மருத்துவமனை ஹமாஸ் பயன்படுத்துவதை அம்பலப்படுத்துகிறது என்று நெதன்யாகு ஆட்சி கூறிய அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதல், மனிதகுலத்திற்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களுக்கு கூடுதல் ஆதாரங்களை மட்டுமே வழங்கியுள்ளது.

ஏகாதிபத்தியத்தின் போர் முழக்கம்: “போர் நிறுத்தம் வேண்டாம்”

பொது மக்களுக்கு எதிரான கட்டுப்பாடற்ற வன்முறையின் மறுக்க முடியாத தினசரி காட்சி ஆதாரங்களை எதிர்கொண்டு, ஏகாதிபத்திய சக்திகள் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை மீண்டும் மீண்டும் ஆணித்தரமாக எதிர்த்துள்ளன. “போர் நிறுத்தம் வேண்டாம்” என்பது இஸ்ரேலிய ஆட்சியின் கூட்டாளிகளின் படுகொலை போர்க் கூக்குரலாக மாறியுள்ளது. அதற்குப் பதிலாக, அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நேட்டோ கூட்டணிகளின் சொற்றொடர்களில் வல்லுநர்கள் “மனிதாபிமான இடைநிறுத்தம்” என்னும் மாற்றுச் சொல்லைக் கண்டுபிடித்துள்ளனர்— இது இஸ்ரேலிய இராணுவப் படைகளால் ஆயுதங்களை மீள் ஒழுங்குபடுத்தல் மற்றும் இலக்குகளை மறு அளவிடுதலையும் செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வழிமுறையாகும்.

இஸ்ரேலிய அரசாங்கமும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு ஒரு நியாயமான விடையிறுப்பாக இனப்படுகொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்துகின்றனர். அன்றைய நிகழ்வுகள் குறித்து முறையான விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்பதை முதலில் சுட்டிக் காட்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உயிர் இழந்தனர் என்பது ஒருபுறம் இருக்க, இறப்புகளின் எண்ணிக்கை குறித்த சரியான எண்ணிக்கை இல்லை. ஹமாஸின் கைகளில் எத்தனை இஸ்ரேலியர்கள் இறந்தனர், இஸ்ரேலிய இராணுவத்தின் பாரிய பதிலடியின் விளைவாக எத்தனை பேர்கள் இறந்தனர் என்பது குறித்து நம்பகமான தகவல்கள் இல்லை. மேலும், காஸா மீது தாக்குதல் நடத்துவதற்கான சாக்குப்போக்கைத் தேடும் நெதன்யாகு அரசாங்கம், ஹமாஸால் ஒருவித நடவடிக்கை திட்டமிடப்பட்டிருப்பதைக் குறிக்கும் உளவுத்துறை தகவல்களை வேண்டுமென்றே புறக்கணித்தது தொடர்பான கேள்விகளும் பதிலளிக்கப்படாத கேள்விகளில் இதில் அடங்கும். இஸ்ரேலுக்குள் ஊடுருவலின் அளவை நெதன்யாகு ஆட்சி நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்றாலும், காஸா மற்றும் மேற்குக் கரை முழுவதும் செயல்படும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள், ஒரு பெரிய இராணுவ நடவடிக்கைக்கு ஹமாஸின் தயாரிப்பை முற்றிலும் அறிந்திருக்கவில்லை என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது.

மேலும் தகவல்கள் நிச்சயம் வெளிவரும். ஆனால், அக்டோபர் 7 அன்று நடந்த சம்பவங்களுக்கு பொருத்தமான விடையிறுப்பாக அதன் தற்போதைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த இஸ்ரேலிய ஆட்சி முயற்சிப்பது அடிப்படையில் ஏமாற்று வேலையாகவும், அப்பட்டமாக சொல்ல வேண்டுமென்றால், பெரும்பாலும் விஷயத்திற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு நியாயமான பதிலடியாக காஸா மீதான தனது தாக்குதலை நியாயப்படுத்தும் அதன் முயற்சி, ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பை நசுக்குவதை நியாயப்படுத்த ஒடுக்குமுறையாளர்களால் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்படும் வாதங்களைத் தவிர வேறொன்றுமில்லை.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நான் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள்:

பல அப்பாவி மக்களின் மரணங்களானது ஒரு துயரகரமான நிகழ்வாகும். ஆனால் இத்தகைய நிகழ்வை தவிர்க்க முடியாததாக ஆக்கிய புறநிலை வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிலைமைகளில் தான் இந்தத் துயர் நிகழ்வு வேரூன்றியுள்ளது. எப்போதும் போலவே, ஆளும் வர்க்கங்கள் எழுச்சிக்கான காரணங்கள் குறித்த அனைத்து ஒப்பீட்டு குறிப்புகளையும் எதிர்க்கின்றன. அவர்களின் சொந்த படுகொலைகள் மற்றும் அவர்கள் இரக்கமின்றி தலைமை தாங்கும் இரத்தக்களரி ஒடுக்குமுறையின் முழு அமைப்பும் குறிப்பிடப்படாமல் இருக்க வேண்டும்.

பல தசாப்தங்களாக சியோனிச ஆட்சியின் அடக்குமுறை, ஒரு வெடித்தெழும் கோப வெடிப்புக்கு வழிவகுத்தது என்று யாரும் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்? இது கடந்த காலத்தில் நடந்துள்ளது, மனிதர்கள் ஒடுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் வரை, அது எதிர்காலத்திலும் நடக்கும். அடக்குமுறையை அனுபவிப்பவர்கள், ஒரு விரக்தியான கிளர்ச்சியின் போது, தங்கள் சொந்த உயிர்கள் ஆபத்தாக ஊசலாடும் நிலையில் இருக்கும்போது, தங்களைத் துன்புறுத்துபவர்களை மென்மையான மரியாதையுடன் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இத்தகைய கிளர்ச்சிகள் பெரும்பாலும் கொடூரமான மற்றும் இரத்தம் தோய்ந்த பழிவாங்கும் செயல்களால் குறிக்கப்படுகின்றன.

பல உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன: அதாவது இந்தியாவில் சிப்பாய் கலகம், குடியேற்றக்காரர்களுக்கு எதிராக டகோட்டா செவ்விந்தியர்களின் கிளர்ச்சி, சீனாவில் பாக்ஸர்ஸ் கிளர்ச்சி, தென்மேற்கு ஆபிரிக்காவில் ஹெரெரோக்களின் கிளர்ச்சி மற்றும் சமீபத்திய காலங்களில், கென்யாவில் மாவ் மாவ் எழுச்சிகளாகும். இந்த நிகழ்வுகள் அனைத்திலும், கிளர்ச்சியாளர்கள் இதயமற்ற கொலைகாரர்கள் மற்றும் அரக்கர்கள் என்று கண்டனம் செய்யப்பட்டு, கொடூரமான பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டனர். சுதந்திரப் போராட்ட வீரர்களாக அவர்கள் கௌரவிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தசாப்தங்கள் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

போர் மற்றும் அடக்குமுறைக்கு ஒரு சாக்குப்போக்காக பயங்கரவாதச் சம்பவங்கள்

ஒரு அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களை அடைவதற்கான சாக்குப்போக்காக ஒரு பயங்கரவாத சம்பவத்தை திட்டமிட்டுப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, வரலாற்றில் பல உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன. 1914 ஆம் ஆண்டில், ஆஸ்திரியா-ஹங்கேரிய முடியாட்சி, அதன் பேரரசர் சரஜெவோவில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் செர்பியாவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத இறுதி எச்சரிக்கையை விடுத்து பின்னர் போரில் நுழைய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.

1938 நவம்பரில், பாரிசில் ஹெர்ஷல் கிரின்ஸ்பான் என்ற பெயரில் வசித்து வந்த 17 வயது போலந்தைச் சேர்ந்த அகதி ஒருவர் ஜெர்மன் இராஜதந்திரப் படையின் உறுப்பினரான எர்ன்ஸ்ட் ஃபன் ராத்தை படுகொலை செய்தார். நாஜி ஆட்சியின் மிருகத்தனமான யூத-விரோத கொள்கைகளை எதிர்த்து அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். “கிரிஸ்டால்நாக்ட்” (“Kristallnacht”) என்று அழைக்கப்படும் ஜேர்மனி முழுவதும் யூத-விரோத ஒரு வன்முறையான இனப்படுகொலையைத் தொடங்க இந்த இளைஞனின் விரக்தியான செயலை நாஜிக்கள் பயன்படுத்திக் கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர், 30,000 பேர் கைது செய்யப்பட்டு வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். ஏறக்குறைய 300 யூத ஆலயங்கள் (synagogues) அழிக்கப்பட்டன, யூதர்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வணிக நிலையங்கள் சூறையாடப்பட்டன.

பெர்லினிலுள்ள அழிக்கப்பட்ட ஃபாசன்ஸ்ட்ராச யூத ஆலயத்தின் (Synagogue) உட்புறத் தோற்றம், இது கிறிஸ்டால்நாக்ட் அழிப்பில் எரிக்கப்பட்டது 

ஜூன் 3, 1982 அன்று பிரிட்டனுக்கான இஸ்ரேலிய தூதரான ஷ்லோமோ ஆர்கோவ்வை லண்டனில் படுகொலை செய்ய முயன்றது போன்ற பல சம்பவங்களை இங்கு குறிப்பிடலாம். இஸ்ரேலிய அரசாங்கம் லெபனான் மீது ஒரு பெரிய அளவிலான படையெடுப்பைத் தொடங்க இந்த நிகழ்வை ஒரு சாக்குப் போக்காகப் பயன்படுத்தியது, இது “கலிலேக்கான அமைதி நடவடிக்கை” என்று அழைக்கப்பட்டது, அதன் குறிக்கோள் தெற்கு லெபனானில் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை ஸ்தாபிப்பதாகும்.

இந்தப் படையெடுப்பின் விளைவாக பெய்ரூட்டில் அமைந்துள்ள சப்ரா மற்றும் ஷட்டிலா எனப்படும் பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் படுகொலைகள் நடத்தப்பட்டன. இப்படுகொலைகள் செப்டம்பர் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்த லெபனான் கிறிஸ்தவ பாசிச குடிப்படைகளால் நடத்தப்பட்டன. பெய்ரூட்டை சுற்றி வளைத்த இஸ்ரேலியப் படைகள் பாசிஸ்டுகளை முகாம்களுக்குள் நுழைய அனுமதித்தன. உள்ளே நுழைந்ததும், பாசிஸ்டுகள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரும் பின்னர் பிரதம மந்திரியுமான ஏரியல் ஷரோனின் ஒப்புதலுடன் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளை படுகொலை செய்தனர்.

இறுதியாக, செப்டம்பர் 11,2001 அன்று உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் அழிக்கப்பட்டன, இது ஒரு இருண்ட நிகழ்வு, “புள்ளிகளை இணைக்கத் தவறியதால்” (அதாவது பொருத்தமான தகவல்கள் அல்லது சமிக்ஞைகள் கிடைத்தன, ஆனால் திறம்பட பகுப்பாய்வு செய்யப்படவில்லை என்பதாகும்) ஏற்பட்ட “பாதுகாப்பு குறைபாடு” என்று விளக்கப்பட்டது, இது புஷ் நிர்வாகத்தால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது படையெடுக்க பயன்படுத்தப்பட்டது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது, “இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள்” என்ற இஸ்ரேலிய நடைமுறையை ஏற்றுக்கொண்டது, அமெரிக்காவிற்குள், உள்நாட்டு பாதுகாப்புத் துறையை உருவாக்கியது, அரசின் அடக்குமுறை சக்தியை அதிகரித்தது மற்றும் அமெரிக்கர்களின் ஜனநாயக உரிமைகளை அழித்தது.

இஸ்ரேலின் படையெடுப்புக்கு ஒரு பாரிய ஊடக பிரச்சார நடவடிக்கையால் விரிவுபடுத்தப்பட்ட தடங்கலற்ற ஆதரவு இருந்தபோதிலும், இனப்படுகொலை முன்னெப்போதும் இல்லாத பரிமாணங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த சர்வதேச எதிர்ப்பு இயக்கத்தை எதிர்கொண்டுள்ளது. உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மற்றும் நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எதிர்ப்புப் போராட்டங்களை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சியில், இஸ்ரேல், அதனுடன் கூட்டணி வைத்துள்ள அரசாங்கங்கள் மற்றும் நிச்சயமாக, சியோனிச-சார்பு அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒரு “யூத எதிர்ப்பு” என்று கண்டனம் செய்துள்ளன. பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறையை எதிர்க்கும் அனைவர் மீதும் இந்த முத்திரையை குத்துவதற்கான கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் இதுவாகும்.

குறிப்பாக இஸ்ரேலுக்கு வெளியே மிகப் பெரிய யூத மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காவில், யூத சமூகத்தைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக யூத இளைஞர்கள், ஆர்ப்பாட்டங்களில் விதிவிலக்காக முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, யூத எதிர்ப்பு என்ற குற்றச்சாட்டு வெறுமனே அபத்தமானதாகத் தோன்றலாம்.

அதைவிட மோசமானது என்னவென்றால், இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பானது, யூத எதிர்ப்பின் வெளிப்பாடாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இடைவிடாது திரும்பத் திரும்பச் சொல்வதன் விளைவாக, இந்த பிற்போக்குத்தனமான துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம் யூத-எதிர்ப்பு உணர்வை சட்டபூர்வமாக்குவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை நியாயமாக வெளிப்படுத்த முடியும்.

சியோனிசத்தின் (யூத தாயக இயக்கம்) தோற்றம்

கறைப்படுத்தும் பிரச்சாரத்தின் பின்னணியிலுள்ள இன்றைய அரசியல் உள்நோக்கங்கள் வெளிப்படையானவையாக இருக்கின்றன. ஆனால், யூத எதிர்ப்புக் குற்றச்சாட்டின் முக்கியத்துவம் அதன் நேரடி நடைமுறைப் பயன்பாட்டிற்கு அப்பால் நீண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் இயக்கமாக உருவெடுத்ததில் இருந்து முழு சியோனிசத் திட்டமும் அடித்தளமாகக் கொண்ட, தத்துவரீதியாக பகுத்தறிவு மறுப்பு மற்றும் தேசிய பேரினவாத சித்தாந்தத்தில் தான், இஸ்ரேலிய அரசை எதிர்க்கும் அனைத்து எதிர்ப்பாளர்களுக்கும் யூத எதிர்ப்பு என்று கற்பித்துக் கூறும் பண்பு வேரூன்றியுள்ளது.

அறிவொளிச் சிந்தனையின் பரவலாலும் பிரெஞ்சுப் புரட்சியின் அரசியல் மற்றும் சமூகத் தாக்கத்தாலும் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியில் தனிமைப்படுத்தி ஒதுக்கிவைப்புகளிலிருந்து படிப்படியாக விடுதலை செய்யப்பட்ட அனேக யூத அறிவுஜீவிகளும் நடுத்தர வர்க்கமும் சமூக முன்னேற்றத்தையும் ஜனநாயக உரிமைகளை அடைவதையும் சமூகத்திலிருந்து பிரிப்பதற்குப் பதிலாக அவைகளை தங்களுடன் உள்வாங்குதலுடன் தொடர்புபடுத்தினர். அவர்கள் தங்கள் மதம் ஒரு தனிப்பட்ட விடயமாக பார்க்கப்பட வேண்டும் என்று விரும்பினர், இதனால் முழு ஜனநாயக உரிமைகளைக் கொண்ட குடிமக்கள் என்ற தங்கள் அந்தஸ்தில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படக்கூடாது என்று விரும்பினர். கணிசமான எண்ணிக்கையிலான யூதர்கள் ஜனநாயக உரிமைகளுக்கான தங்கள் சொந்த முயற்சியை நவீன உலகின் சமூக ஒடுக்குமுறையின் முக்கிய காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் பரந்த மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலக வரலாற்று போராட்டத்தின் ஒரு அங்கமாகவும், அதற்கு அடிபணிந்ததாகவும் அடையாளம் கண்டுகொண்டனர்.

அனைத்திற்கும் மேலாக, சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கப் போராட்டமானது உள்ளார்ந்த முறையில் இயல்பாகவே சர்வதேசரீதியானதாக இருந்தது. இதனால் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஒற்றுமையை விட, எந்த வகையான மத, இன அல்லது தேசிய அடையாளத்திற்கும் முன்னுரிமை அளிப்பதை மீறியதோடு, எதிர்த்தது. 1880 களின் பிற்பகுதியிலும் 1890 களின் பிற்பகுதியிலும் முதன்முதலில் தோன்றிய சியோனிச இயக்கத்தின் மீதான சோசலிச இயக்கத்தின் அணுகுமுறை சமரசமற்ற பகைமை கொண்டதாக இருந்தது.

1870 இல் – மோசஸ் ஹெஸ்

1862 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மோசஸ் ஹெஸ்ஸின் ரோம் முதல் ஜெருசலேம் வரை என்ற நூலில் வர்க்கத்தை விட இனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது வலுவாக அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் ஒரு யூத அரசின் முன்னோக்கை முன்னெடுத்த முதல் முக்கிய நபரான ஹெஸ் என்பவர் 1840 களின் முற்பகுதியில் ஆரம்பகால சோசலிச இயக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்திருந்தார். ஆனால், தசாப்தத்தின் இறுதியில் ஏற்பட்ட தோல்விகளால் விரக்தியடைந்தார். மார்க்ஸின் முன்னோக்கிற்கு நேர் எதிராக, “அனைத்து வரலாறும் இன மற்றும் வர்க்கப் போர் குறித்ததாக இருந்திருக்கிறது. இனப் போர்களே முதன்மையானவை, வர்க்கப் போர்கள் இரண்டாவது காரணியாகும்” என்று அவர் அறிவித்தார்.

ரோம் முதல் ஜெருசலேம் வரை என்ற நூலில், சியோனிச சித்தாந்தத்தின் பல முக்கிய கூறுகள் ஏற்கனவே உள்ளன. முதலாவது, நான் மேற்கோள் காட்டிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, வர்க்கத்தை விட இனத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகும்.

இரண்டாவதாக, தேசிய அரசு என்பது அனைத்து அரசியல் வாழ்க்கைக்கும் இன்றியமையாத அடித்தளமாகவும், யூதர்களின் உயிர்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாத கட்டமைப்பாகவும் உள்ளது என்று ஹெஸ் வலியுறுத்துவதாகும். “யூத மக்கள் கூட்டம், நவீன மனிதகுலத்தின் மாபெரும் வரலாற்று இயக்கத்தில் பங்கேற்பது, அதற்கு ஒரு யூதத் தாயகத்தைக் கொண்டிருக்கும் போது மட்டுமே” என்று அவர் எழுதினார்.

மூன்றாவது இன்றியமையாத அம்சமாக இருப்பது, யூதர்களை தற்போதுள்ள ஐரோப்பிய அரசுகளில் ஒருபோதும் உள்வாங்க முடியாது என்ற ஆழ்ந்த விரக்தி மற்றும் அவநம்பிக்கை கொண்ட நம்பிக்கையாகும். சோசலிசத்திற்கான ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் மூலம் யூதர்கள் துன்புறுத்தலில் இருந்து மீண்டு முழு விடுதலையை அடைய முடியும் என்று நம்புவது ஒரு மாயை என்று ஹெஸ் இவ்வாறு கூறினார்: “நம்மை ஏன் முட்டாளாக்க வேண்டும்? ஐரோப்பிய நாடுகள் எப்போதுமே தங்கள் மத்தியில் யூதர்கள் இருப்பதை ஒரு பொருத்தமின்மையாகவே கருதுகின்றன. நாம் எப்போதும் தேசங்களின் மத்தியில் அந்நியர்களாக இருப்போம் ... ஜேர்மானியர்கள் தங்கள் இனத்தை வெறுப்பதை விட யூத மதத்தை வெறுக்கிறார்கள்... மதச் சீர்திருத்தமோ ஞானஸ்நானமோ, அறிவொளியோ அல்லது விடுதலையோ எதுவுமே யூதர்களுக்கு முன் சமூக வாழ்க்கையின் கதவுகளைத் திறக்காது.”

பாலஸ்தீனத்தில் ஒரு யூத நாட்டை உருவாக்குவது ஒரு பெரிய ஐரோப்பிய சக்தியின் நலன்களுக்கு நன்மை பயக்கும் அளவுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நம்பிக்கை நான்காவது அம்சமாகும். 1860 களில் ஐரோப்பாவில் வாழ்ந்த ஹெஸைப் பொறுத்தவரை, அந்த சக்தி பிரான்ஸ் ஆகும், அது அப்போது பேரரசர் லூயி போனபார்ட்டின் பிற்போக்கு சர்வாதிகாரத்தால் ஆளப்பட்டது. “சூயஸ் முதல் எருசலேம் வரையிலும், ஜோர்டான் கரையிலிருந்து மத்திய தரைக்கடல் வரையிலும் பரந்து விரிந்திருக்கும் காலனிகளைக் கண்டுபிடிக்க யூதர்களுக்கு பிரான்ஸ் உதவும்” என்று அவர் எழுதினார். இருபதாம் நூற்றாண்டில், சியோனிச இயக்கமானது துருக்கிய சுல்தான், ரஷ்ய ஜார், மற்றும் சிறிது காலத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் மற்றும் இறுதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அதன் சேவைகளை வழங்குவதன் மூலம் அதன் நோக்கங்களைத் தொடர்வதாக இருந்தது.

அவரது வாழ்நாளில் இது ஒப்பீட்டளவில் அறியப்படவில்லை என்றாலும், ஹெஸ்ஸின் ரோம் முதல் ஜெரூசலேம் வரை பல தசாப்தங்களுக்குப் பிறகு சியோனிச இயக்கத்தின் அரசியலை வரையறுக்கும் பல கருத்தாக்கங்களை முன்னறிவித்தார். தியோடர் ஹெர்சல் பின்னர் ஹெஸ்ஸின் புத்தகத்தைப் பற்றி முன்னரே அறிந்திருந்தால், அவர் தனது சொந்த யூத அரசு (Der Judenstaat) என்ற புத்தகத்தை எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று கருத்து தெரிவித்தார். ஆனால் ஹெர்சல் எல்லா விதத்திலும் ஹெஸ்ஸை விட அறிவுஜீவிதரீதியாக தாழ்ந்திருந்தார் என்பதையும், முதலாம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சோசலிச இயக்கத்தில் ஈடுபடுவதை நோக்கித் திரும்பிய முந்தையவரான ஹெஸ்ஸை போலல்லாமல், சோசலிசத்திற்கும் ஒரு சுயாதீனமான வர்க்க அடிப்படையிலான தொழிலாளர் இயக்கத்திற்கும் விரோதமானவர் என்பதையும் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சியோனிசத்திற்கான சோசலிச எதிர்ப்பு

1881ல் ரஷ்யப் பேரரசில் வெடித்து 1882 வரை, ஜாரிச ஆட்சியின் ஆதரவுடன் தொடர்ந்த யூத-விரோத வன்முறைக் கலவரங்கள் அதாவது படுகொலைகள், யூத மக்களின் பரந்த பிரிவுகளின் அரசியல் கண்ணோட்டத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த இரத்தம் தோய்ந்த நிகழ்வுகள், யூதர்கள் மத்தியில் அரசியல் நடவடிக்கைகளின் மிகப் பெரும் அதிகரிப்புக்கு ஒரு உந்துதலை அளித்தன. இந்த காலகட்டத்தில்தான் சியோனிசம் (பாலஸ்தீனத்திற்கு யூத குடியேற்றத் திட்டத்தை முன்னெடுப்பது) குறிப்பிடத்தக்க பின்தொடர்பவர்களை ஈர்க்கத் தொடங்கியது. ஆனால், யூத இளைஞர்கள் சோசலிச அரசியலில் ஈடுபடுவது மிகவும் சக்திவாய்ந்த போக்காக இருந்தது. 1890 களின் பிற்பகுதியில், இந்த நடவடிக்கையின் முக்கிய வெளிப்பாடுகள், வளர்ச்சியடைந்துவந்த ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி (Russian Social Democratic Labor Party) மற்றும் சோசலிச கழகம் (Socialist Bund) ஆகியவற்றிற்குள் இருந்தன. அவைகள் சோசலிச அரசியலின் அடிப்படையில் யூத தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் ஒழுங்கமைப்பை நாடின.

இரண்டு சோசலிசப் போக்குகளும் சியோனிச இயக்கத்திற்கு சமரசமற்று விரோதமாக இருந்தன. யூத மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அதன் கூற்றை திட்டவட்டமாக இந்த இரண்டும் சியோனிசத்தை நிராகரித்தன. குறிப்பிடத்தக்க வகையில், சியோனிஸ்டுகளுக்கும் சோசலிஸ்டுகளுக்கும் இடையிலான அரசியல் போராட்டத்தில், ஜார் ஆட்சியின் அனுதாபங்கள் முழுவதுமாக சியோனிஸ்டுகளின் பக்கம் இருந்தது. யூத இளைஞர்களிடையே சோசலிச இயக்கத்தில் அதிகரித்துவரும் ஆபத்தான செல்வாக்கிற்கு எதிரான போராட்டத்தில், சியோனிஸ்டுகளை ஜார் ஆட்சி ஒரு கூட்டாளியாக கருதியது. ரஷ்யாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு யூதர்களின் குடியேற்றம் என்ற சியோனிச திட்டத்தின் நோக்கத்தில் ஜார் ஆட்சி, அதற்கு அக்கறை காட்டியது.

வரலாற்றாசிரியர் ஜோசி கோல்ட்ஸ்டைன் இவ்வாறு எழுதுகிறார்:

சியோனிச இயக்கத்தின் நடவடிக்கைகள், குறித்த அதிகாரத்துவங்களின் நம்பிக்கையான அணுகுமுறை நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருந்தது. சோசலிச கழகத்திலுள்ள அவர்களது எதிராளிகளைப் போலல்லாமல், சியோனிச செயற்பாட்டாளர்கள் தங்கள் இயக்கம் பரவுவதைத் தடுக்கும் இரகசியத்தை காப்பாற்ற வேண்டியதில்லை. 1898-1900 ஆண்டுகளின் ஆற்றல் பண்புகள் பெரும்பாலும் அதிகாரத்துவங்களால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வத்தன்மையின் செயல்பாடாக இருந்தன. இவ்விதமாக இயக்கத்தின் தலைவர்கள் (முர்ஷிம்- the Murshim) மற்றும் பிற அமைப்பாளர்கள் முன் மற்றய இயக்கங்களுக்கு மறுக்கப்பட்ட ஒரு பரந்த செயல்பாட்டு களம் இவைகளுக்கு திறந்துவிடப்பட்டன. இது யூத மக்களிடையே சியோனிச இயக்கத்தை பின்பற்றுபவர்களை ஈர்ப்பதற்கான போட்டியில் சியோனிசத்திற்கு அதன் போட்டியாளர்களை விட கணிசமான நன்மையை வழங்கியது. [1]

ஆயிரக்கணக்கான யூதத் தொழிலாளர்களும் மத்தியதர வர்க்க யூத புத்திஜீவிகளின் கணிசமான பிரிவினரும் கூட, தங்கள் அரசியல் ஆற்றலை சோசலிசத்திற்கான போராட்டத்தை நோக்கி செலுத்திய நேரத்தில், சியோனிசத்துக்கான எதிர்ப்பை, யூத எதிர்ப்பு என்ற தற்போதைய கூற்று அரசியல் முட்டாள்தனமாக இல்லாவிட்டாலும், மோசமான அவதூறு என்று நிராகரிக்கப்பட்டிருக்கும்.

1905 இல் ஒடெசா இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட தங்கள் தோழர்களின் சடலங்களுடன் சோசலிச கழக உறுப்பினர்கள்

கோல்ட்ஸ்டைன் குறிப்பிட்டது போல, “கழகத்தின் பிரச்சாரத்தில், முக்கிய அழுத்தமானது வர்க்க வேறுபாடுகள் மீது இருந்தது, சியோனிசம் யூத பாட்டாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கழகத்துக்கு எதிராக, குட்டி மற்றும் நடுத்தர முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.” [2] சியோனிசத்தின் மீதான சோசலிச கழகத்தின் விரோதம் மிகவும் ஆழமானதாகவும், அடிப்படைத் தன்மை கொண்டதாகவும் இருந்தது, மே 1901ல் நடந்த கழகத்தின் நான்காவது காங்கிரசில், “சியோனிசத்திற்கு எதிராக சாகும் வரை ஒரு போரைத் தொடங்குவது முதல் முறையாக முடிவு செய்யப்பட்டது” என்று கோல்ட்ஸ்டைன் எழுதினார். [3] “சியோனிசம் என்பது தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்கும் ஒரு முகமூடி மட்டுமே” என்று கழகத்தினரின் வெளியீடுகள் எச்சரிக்கை விடுத்தன. “சியோனிசத்தின் அழுகிய சடலத்திலிருந்து வெளிவரும் நூற்றுக்கணக்கான மோசமான சிறிய உயிரினங்கள், பாட்டாளி வர்க்கத்தை வர்க்கப் போராட்டப் பாதையிலிருந்து விலகிச் செல்லச் செய்வதற்காக அவற்றை நோக்கி ஊர்ந்து செல்கின்றன” என்பதால் அதிலிருந்து விலகி இருக்குமாறு கழகம் அதன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது. [4]

சியோனிசத்திற்கு சோசலிஸ்டுகளின் பகைமைப் போக்கை ரஷ்ய அறிவுஜீவிகளின் பரந்த பிரிவுகள் பெருமளவு பகிர்ந்து கொண்டன, கோல்ட்ஸ்டைன் எழுதியது போல் அவர்கள், “சியோனிச இயக்கத்தைத் தாக்கி அதன் கருத்துக்களை வெறுத்தனர். அவர்களில் பெரும்பாலோர் அது மறைந்து போக வேண்டும் என்று விரும்பினர். ரஷ்ய அறிவுஜீவிகளின் ஒருமித்த சியோனிச எதிர்ப்பு முன்னணியின் நோக்கங்களும் காரணங்களும் ... இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அறிவுஜீவிகளின் பொதுக் கோட்பாட்டைத் தீர்மானிக்கும் பகுத்தறிவுவாதத்தில் வேரூன்றியிருந்தன. பலருக்கு சியோனிசம் இன்னும் கற்பனாவாதமாக இருந்தது, பகுத்தறிவு, அறிவுஜீவித உலகத்திற்கு வெளியே சியோன் (Zion – யூதர்களின் மத நம்பிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்த புனித இடம்) மற்றும் யூத எசாட்டாலஜிக்கல் (eschatological - ஊழிக்காலம் அல்லது மனிதகுலத்தின் இறுதி விதி என்னும் நம்பிக்கை அல்லது கருத்துகள் தொடர்பானது, பெரும்பாலும் மத அல்லது தத்துவ சூழல்களுடன் தொடர்புடையது) சிந்தனைக்கான ஆர்வங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் ஹெர்சல் மற்றும் அவரைப் போன்றவர்கள் மேற்கத்திய அறிவொளிக் காலத்தின் சந்ததியினராக இல்லாமல் யூத பழமைவாதத்தின் கூட்டாளிகளாகக் கருதப்பட்டனர். [5]

சோசலிச இயக்கத்தின் அனைத்து பிரிவுகளின் சியோனிச எதிர்ப்பானது, தொழிலாள வர்க்கத்திற்குள் சியோனிஸ்டுகளின் தீவிர ஊடுருவலைத் தடுத்தது. “ஆரம்பத்தில் இருந்தே,” கோல்ட்ஸ்டைன் தனது வரலாற்றுக் கட்டுரையின் முடிவில் எழுதுகிறார், “சியோனிச இயக்கம் முக்கியமாக யூத நடுத்தர வர்க்கத்தின் உறுப்பினர்களை ஈர்த்தது.” [6]

சியோனிஸ்டுகள் தங்கள் பிற்போக்குத்தனமான குடியேற்றத் திட்டத்தின் வெற்றிக்கு தேவையான வெகுஜன அடித்தளத்தை, நாஜி இனப்படுகொலையில் (Holocaust) தப்பிப்பிழைத்த பல நூறாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்ட மற்றும் நாடற்ற மக்களின் பேரழிவு வரை, ஒருபோதும் அடையவில்லை.

நாஜிக்களுடன் சியோனிச ஒத்துழைப்பு

1948ல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர், சியோனிசத்தின் பிற்போக்குத்தனமான தன்மையையும், யூத மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அதன் மோசடியான உரிமை கோரலையும், 1930 களில் அதன் நடத்தையை விட முழுமையாக அம்பலப்படுத்திய வரலாற்றின் எந்தக் காலகட்டமும் இருக்கவில்லை. நாஜிக்கள் மற்றும் சியோனிஸ்டுகளின் அரசியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் அளவு வரலாற்றாசிரியர்களால் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மிக முக்கியமான பல படைப்புகள் யூத வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன, அவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் சவுல் ஃப்ரீட்லேண்டர் (Saul Friedlander) மற்றும் டாம் செகேவ் (Tom Segev) ஆகியோராவார்கள்.

ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர், சியோனிச அமைப்புகள் நாஜிக்களுடன் ஒத்துழைக்க விரும்பின, நாஜிசம் மற்றும் சியோனிசம் இரண்டும் “வோல்கிஷ்” கொள்கைகள் இணக்கமான தேசிய இயக்கங்கள் என்று வாதிட்டன. (“völkisch”- “மக்கள்”- என்பது வரலாற்று ரீதியாக ஒரு தேசியவாத மற்றும் இன மையவாத சித்தாந்தத்துடன் தொடர்புடையது.)

வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அல்லது ஒரு பொருளாதார புறக்கணிப்புக்கு எதிராக, ஜேர்மனி மற்றும் பாலஸ்தீனத்தின் சியோனிச பிரதிநிதிகள் மூன்றாம் பேரரசின் (Third Reich) பிரதிநிதிகளை சந்தித்து ஆகஸ்ட் 27, 1933 அன்று ஹவாரா (Haavarah) என்று அழைக்கப்படும் ஒரு நிதிய ஒப்பந்தத்தை செய்து முடித்தனர், இது பிரீட்லேண்டரால் (Friedlander) விளக்கப்பட்டபடி, “யூத புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொத்துக்களின் ஒரு பகுதியை மறைமுகமாக மாற்றி அனுப்ப அனுமதித்தது மற்றும் நாஜி ஜேர்மனியில் இருந்து பாலஸ்தீனத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவியது.” [7]

பிரீட்லேண்டர் இவ்வாறு தொடர்ந்து எழுதினார்:

புதிய ஆட்சியானது, ஹவாராவில் இருந்து அறுவடை செய்ய எதிர்பார்த்த முக்கிய நன்மைகளில் ஒன்று ஜேர்மனியின் வெளிநாட்டு யூத பொருளாதார புறக்கணிப்பில் ஏற்பட்ட ஒரு மீறலாக இருந்ததாகும். ... சியோனிச அமைப்புகளும் யிஷுவின் (Yishuv - பாலஸ்தீனத்திலுள்ள யூத சமூகம்) தலைமையும் புதிய ஏற்பாடுகளுக்கு தடைகளை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு வெகுஜன எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பிலிருந்தும் விலகி நின்றன. ஹவாரா ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே, அத்தகைய “ஒத்துழைப்பு” சில நேரங்களில் விசித்திரமான வடிவங்களை எடுத்தது. இவ்வாறாக, 1933 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கோமகன் லியோபோல்ட் இட்ஜ் எட்லர் வான் மில்டென்ஸ்டைன் (Leopold Itz Edler von Mildenstein) என்ற நபர், சில ஆண்டுகளுக்குப் பிறகு SD (Sicherheitsdienst அல்லது பாதுகாப்பு சேவை, ரெய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச் தலைமையிலான SS உளவுப் பிரிவு) என்னும் யூதப் பிரிவின் தலைவராக வரவிருந்தவர், தனது மனைவியுடன் பாலஸ்தீனத்திற்கு சுற்றுப்பயணம் செய்து கோயபல்ஸின் டெர் அங்கிரிஃப் (Der Angriff) பத்திரிகைக்கு தொடர்ச்சியான கட்டுரைகளை எழுத அழைக்கப்பட்டார். அதனால்தான் மில்டென்ஸ்டைன்கள், பேர்லின் சியோனிச அமைப்பின் முன்னணி உறுப்பினரான கர்ட் டுச்லர் மற்றும் அவரது மனைவி எரெட்ஸ் ஆகியோர் இஸ்ரேலில் உள்ள யூதக் குடியேற்றங்களுக்குச் சென்றனர். “பாலஸ்தீனத்திற்கு ஒரு நாஜி விஜயம்” என்ற தலைப்பிலான மிகவும் ஆதரிக்கும் சாதகமான கட்டுரைகள் முறையாக வெளியிடப்பட்டன, மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஒரு பக்கத்தில் ஸ்வஸ்திகா சின்னமும், மறுபுறம் டேவிட் நட்சத்திரமும் கொண்ட ஒரு சிறப்பு பதக்கம் வெளியிடப்பட்டது.

ஜூன் 22, 1933 அன்று, ஜேர்மனிக்கான சியோனிச அமைப்பின் தலைவர்கள் ஹிட்லருக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர் அது இவ்வாறு கோரியது:

ஜேர்மனியில் அதன் கிறிஸ்தவ மற்றும் தேசியத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து தேசிய அடையாளத்தின் மறுமலர்ச்சி நடைபெறுவதைப் போலவே, யூத மக்களுக்குள்ளும் இதேபோன்ற மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்று சியோனிசம் வலியுறுத்துகிறது. யூத மக்களுக்கும், தேசிய தோற்றம், மதம், பொதுவான விதி மற்றும் ஒரு தனித்துவ உணர்வு ஆகியவை அதன் இருப்புக்கு தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இது தாராளவாத சகாப்தத்தின் ஆணவமான தனிமனிதவாதத்தை அகற்றவும், அதற்கு பதிலாக சமூகம் மற்றும் கூட்டு பொறுப்புணர்வுடன் மாற்றவும் கோருகிறது.

பின்னர், சியோனிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இத்தகைய அறிக்கைகளையும், ஹவாராவையும் பாசிசத்தின் வெற்றி ஒத்துழைப்பை நியாயப்படுத்துவது போல, நெருக்கடியான நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உயிர்வாழும் நடவடிக்கைகள் என்று விளக்க முயற்சிப்பார்கள். உண்மையில், நாஜிக்களால் யூதர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதற்கும், ஏன் அவர்களின் கொலைக்கும் கூட சியோனிஸ்டுகளின் விடையிறுப்பு, பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் குடியேறுவதற்கான வாய்ப்புகளில் அதன் தாக்கத்தின் கணக்கீடுகளால் தீர்மானிக்கப்பட்டது. சியோனிச இயக்கத்தின் தலைவரான டேவிட் பென்-குரியன் இழிவாக பின்வருமாறு அறிவித்தார்:

ஜேர்மனியிலுள்ள அனைத்து [யூத] குழந்தைகளையும் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்வதன் மூலம் காப்பாற்ற முடியும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், அவர்களில் பாதி பேரை மட்டுமே பாலஸ்தீனத்திற்குக் கொண்டு செல்வதன் மூலம் காப்பாற்ற முடியும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுப்பேன்- ஏனென்றால் அந்தக் குழந்தைகளிற்கான கணக்கீடு மட்டுமல்ல, யூத மக்களின் வரலாற்றுக் கணக்கீட்டையும் நாங்கள் எதிர்கொள்கிறோம். [8]

டேவிட் பென்-குரியன், 1959 இல்

ஜேர்மனி கிரிஸ்டால்நாக்ட் இனப்படுகொலையைத் தொடர்ந்து, இந்த நிகழ்வானது யூதர்களின் அவலநிலை குறித்து சர்வதேச அனுதாபத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் பென்-குரியன் வெளிப்படுத்தினார், இதன் விளைவாக பல்வேறு நாடுகள் குடியேற்றத்திற்கான தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் பாலஸ்தீனத்திற்கு செல்ல யூதர்களுக்கு மாற்று வழிகளை வழங்குகின்றன என்பதாகும்.

அறிவொளி சிந்தனைக்கு எதிராக சியோனிசம்: தேசியவாத பகுத்தறிவு மறுப்புவாதத்தின் இயங்கியல் மறுப்பு

எவ்வாறெனினும், நாஜிசத்திற்கு சியோனிச அமைப்புக்கள் வெளிப்படுத்திய அனுதாபத்தை வெறுமனே கோழைத்தனம் மற்றும் கோரமான தந்திரோபாய சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடு என்று விளக்க முடியாது. ஏகாதிபத்திய காலனித்துவத்தின் வழித்தோன்றலாகவும், சோசலிசம், வரலாறு மற்றும் சமூகம் பற்றிய அறிவியல் கருத்துருவாக்கத்துக்கு எதிரியாகவும், தோன்றிய சியோனிசம், அரசியல் மற்றும் தேசியவாத சித்தாந்தத்தின் மிகவும் பிற்போக்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டது.

முதலாளித்துவத்திற்கும், முதலாளித்துவ தேசிய அரசிற்கும் எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டமே சமூக முன்னேற்றத்தின் உந்து சக்தியாக மாறியிருந்த ஒரு சகாப்தத்தில், சியோனிசம் யூத இருப்புக்கான அத்தியாவசிய அடித்தளமாக தேசிய கொள்கையை மகிமைப்படுத்துவதையே அதன் திட்டத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அறிவொளி மற்றும் பிற்கால சோசலிச இயக்கங்களில் இருந்து உருவான, தேசிய பிரத்தியேகக் கோட்பாட்டை கீழறுத்த வரலாற்றின் அனைத்துக் கருத்துக்களும் (குறிப்பாக அறிவியல் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில், தேசிய அடையாளத்தை வரலாற்று ரீதியாக வரையறுக்கப்பட்ட மற்றும் இடைநிலை நிகழ்வாகக் கருதுபவர்கள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மற்றும் உலகச் சந்தையுடனான அவர்களின் உறவுகளில் ஒரு குறிப்பிட்ட கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்) சியோனிசத்துடன் ஒத்துப்போகாதவை என்று கண்டனம் செய்யப்பட்டன, இது ஒரு அரசியல் வேலைத்திட்டமாக மட்டுமல்ல, யூத அடையாளத்தின் ஒரே வெளிப்பாடாகவும் இருந்தது. எனவே, சியோனிசத்தின் சட்டபூர்வமான தன்மையை மறுப்பது என்பது யூதர்களின் இருப்புக்கான உரிமையை மறுப்பதாகும்.

இதிலிருந்து சியோனிசத்தை எதிர்க்கும் எதிராளி யூதராக இருந்தாலும் கூட, அது யூத விரோதமானது என்ற நயவஞ்சக கூற்று உருவாகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகத்தால் 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட யூத-எதிர்ப்பு மற்றும் அதன் பெளதீக அதீதவியலின்[9] தோற்றம் (Anti-Semitism and its Metaphysical Origins) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தில், டல்லாஸிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இனப்படுகொலை (ஹோலோகாஸ்ட்) ஆய்வுகளுக்கான ஆக்கர்மேன் மையத்தின் வரலாற்று புலமையாளரான பேராசிரியர் டேவிட் பேட்டர்சன் மதக் கட்டுக்கதை மற்றும் பகுத்தறிவு மறுப்புத் தன்மையின் பாதுகாப்பின் அடிப்படையில் அவதூறுகளை நியாயப்படுத்துகிறார். நவீனகால யூத எதிர்ப்பின் மூலாதாரத்தை அறிவொளிச் சிந்தனைக் காலத்திலும், குறிப்பாக இம்மானுவேல் கான்டின் தத்துவத்திலும் பின்னோக்கிச் சென்று கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்:

அறிவொளிக் கோட்பாடுகள் இயல்பாகவே யூத எதிர்ப்பு சிந்தனை முறையால் தோற்றுவிக்கப்பட்டன: அதாவது அது தனக்கு உண்மையாக இருக்க வேண்டுமானால், அறிவொளியின் தத்துவம் யூத எதிர்ப்பாக இருக்க வேண்டும். கான்ட் கூறுவது போல், மனித சுதந்திரம் என்பது மனித சுயதிகாரத்தில் இருக்கிறது என்றால், மனித சுயதிகாரம் என்பது சுய-சட்டமயமாக்கலில் உள்ளது என்றால், சினாய் மலையின் கட்டளையிடும் குரலை விட, சுய-சட்டமயமாக்கல் மனித சுயதிகாரத்தை எதுவும் அச்சுறுத்துவதில்லை என்பதை ஒருவர் உணர்கிறார், கான்ட் ஏற்றுக்கொண்ட நவீன பார்வையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இந்தக் குரல், உலகம் இப்போது ஏற்றுக்கொள்கிறது.

பேட்டர்சன் இவ்வாறு தொடர்கிறார்:

உண்மையில், அறிவொளியின் முன்நிபந்தனையை ஒருவர் ஏற்றுக்கொண்டால், தனித்தனி மக்கள் இருக்க முடியாது, ஆனால் பகுத்தறிவில் அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகப் பொதுவான மனிதநேயம் மட்டுமே இருக்க முடியும், பின்னர் ஒருவர் ஒரு யூத எதிர்ப்பு நிலைப்பாட்டை அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ... கடவுளின் தந்தைத்துவத்தை (fatherhood) இழந்து, மனிதகுலத்தின் சகோதரத்துவத்தையும் இழக்கிறோம்: அதாவது கடவுள் தேவையற்றவர் என்பதால், மனிதனும் தேவையற்றவர். எனவே யூத அரசு தேவையற்றது மட்டுமல்ல, ஆபத்தானது. இடதுசாரி அறிவுஜீவித சியோனிச எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை, கடவுளைக் குறித்து சிந்திக்காத நவீன வரலாறானது சியோனிச அரசை வரைபடத்திலிருந்து அகற்றுவதில் முடிகிறது.

இந்த வார்த்தைகள் அமெரிக்க மருந்தகங்களில் பரவலாக விற்கப்படும், வகையான கிறிஸ்தவ சுவிசேஷ அடிப்படைவாத காகித புத்தகத்தில் காணப்பட்டவையல்ல. இது உலகின் மிகவும் மதிப்புமிக்க பதிப்பகங்களில் ஒன்றான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகங்களின் கீழ் வெளிவந்தவையாகும்.

ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மையப்பகுதியாக காஸா மீதான கடுந்தாக்குதல்

இது சியோனிசத்தின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மைக்கு மட்டுமல்லாமல், தேசிய அரசு அமைப்பில் வேரூன்றியுள்ள ஒரு முதலாளித்துவ அமைப்புமுறையின் மிக முன்னேறிய அரசியல், சமூக, அறிவுஜீவித மற்றும் தார்மீக சிதைவிற்கும் சான்றளிக்கிறது. இஸ்ரேலிய அரசுடன் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் விட்டுக்கொடுக்காத ஒற்றுமையின் பரந்த முக்கியத்துவம் இங்கே உள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டணிகளின் ஆதரவை நிர்ணயிக்கும் நடைமுறைபூர்வமான புவிசார் அரசியல் நலன்கள் நிச்சயமாகவே உள்ளன.

ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இந்த ஐக்கிய முன்னணியின் அடிப்படையானது, அவர்களின் ஜனநாயக அபிலாஷைகளை அங்கீகரித்து. தற்போதுள்ள இஸ்ரேலிய அரசை கலைத்து புதிய இரு தேசிய கூட்டமைப்பை உருவாக்குவது என்பது, மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் நலன்களை மட்டுமல்ல, ஏகாதிபத்திய புவிசார் அரசியல் மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று ரீதியாக காலாவதியான முழு அரச அமைப்பையும் அச்சுறுத்துகிறது.

பாலஸ்தீன மக்களின் ஒடுக்குமுறையையும், இதற்கு காரணமாகவுள்ள, வரலாற்று ரீதியான மற்றும் இன்றும் மிகவும் உண்மையான யூத எதிர்ப்பு பிரச்சினையையும் முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள்ளும் அதன் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள்ளும் தீர்க்க முடியாது. ஏகாதிபத்தியம், இஸ்ரேலிய அரசை உருவாக்கியதில், “யூதப் பிரச்சினையை” தீர்க்கவில்லை. மாறாக, ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றான இனப்படுகொலையின் (ஹோலோகாஸ்ட்) மிகப்பெரிய துயரத்தை அது சுரண்டியதுடன், அதன் சொந்த நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துகிறது.

காஸாவில் போர் மீதான கவனக் குவிப்பு அதன் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றத்தின் அளவைக் கொண்டு நிச்சயமாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மைய முன்னோக்குக்கும் அதன் இருத்தலுக்குமான காரணத்திற்கும் மிகப்பெரும் அவசரத்தை அளிக்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையின் இறுதி நெருக்கடிக்கு வேறு எந்த பதிலும் இல்லை. நான்காம் அகிலத்தில் 1953 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிளவின் முக்கியத்துவத்தை சுருக்கமாகக் கூறுகையில், கனன் பின்வருமாறு எழுதினார்: “இது சர்வதேசப் புரட்சியின் வளர்ச்சியும் சமுதாயத்தின் சோசலிச மாற்றம் குறித்த கேள்வியுமாகும்.”

காஸாவில் நடக்கும் இனப்படுகொலை, உக்ரேனில் நடக்கும் போர், உலகளாவிய அணு ஆயுதப் போரை நோக்கி அதிகரிக்கும் ஆபத்து, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், சமூக சமத்துவமின்மையின் அதிர்ச்சிகரமான அளவுகள், கட்டுப்பாடற்ற பெருந்தொற்று நோய் பரவல் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவின் அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள அனைத்துலகக் குழுவானது, உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கத்தை நோக்கி திரும்புகிறது மற்றும் ஆணித்தரமாக வலியுறுத்தி கூறுகிறது: “நீங்கள் எதிர்கொள்ளும் பணியானது சர்வதேச புரட்சியின் வளர்ச்சியும் சமுதாயத்தின் சோசலிச மாற்றமுமாகும்”.

ஆகவேதான் நீங்கள் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்து கொள்ள வேண்டும் மற்றும் அதன் பிரிவுகளை கட்டியெழுப்ப வேண்டும்.

[1] “The Attitude of the Jewish and the Russian Intelligentsia to Zionism in the Initial Period (1897-1904), in The Slavonic and East European Review, Vol. 64, No. 4 (October 1986), p. 547-48.

[2] Ibid., p. 550

[3] Ibid., p. 551

[4] Ibid., p. 550

[5] Ibid., p. 555

[6] Ibid., p. 555

[7] Friedlander, Nazi Germany and the Jews, p. 86 

[8] Segev, Tom. The Seventh Million (p. 26). Farrar, Straus and Giroux. Kindle Edition.

[9] பெளதீக அதீதவியல் என்றால் “இருப்பின்” தன்மையை மெய்யியல் அடிப்படையிலான புலன்சாரா முறையில் ஆய்தலைக் குறிக்கிறது.

Loading