நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணக் காப்பகங்களிலிருந்து

இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், உலக சோசலிச வலைத் தளம் டேவிட் நோர்த்தின் ஆசிரியர் தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது, அது 1993 இல் இன்டர்நஷனல் வேர்கர்ஸ் புல்லடினின் (International Workers Bulletin-சர்வதேச தொழிலாளர் பத்திரிகை) பக்கங்களில் எதிர்ப்பு இயக்கம் நிறுவப்பட்டது தொடர்பாக முதல் தடவையாக முக்கிய ஆவணங்களின் ஆங்கில மொழி வெளியீடுகளை அறிமுகப்படுத்தியது.

அந்த நேரத்தில், முதலாளித்துவ வெற்றி ஆரவார நிலைமைகளின் கீழும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முப்பதாண்டு இடைவிடாத போர்களின் ஆரம்ப கட்டங்களின் கீழும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கொண்டிருந்தது. 1991 டிசம்பரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்தது. 1930 களின் அரசியல் படுகொலை பல தலைமுறை சோசலிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 1940 ஆகஸ்டில் மெக்சிகோவில் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை உட்பட அக்டோபர் புரட்சியின் சர்வதேசிய வேலைத்திட்டத்தை தசாப்தகாலங்களாக காட்டிக்கொடுத்து வந்ததன் உச்சகட்டமாக அது இருந்தது. அக்டோபருக்கு எதிரான ஸ்ராலினிச பிற்போக்கின் ஒரு மையக் கூறுபாடு வரலாற்றை திட்டமிட்டு பொய்மைப்படுத்துவதாக இருந்தது. லியோன் ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பு அணி தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி வரலாற்றுப் புத்தகங்களிலிருந்தும் நீக்கப்பட்டனர். ஸ்ராலினிசத்திற்கு எதிரான மார்க்சிச எதிர்ப்பின் மிக முக்கியமான ஆவணங்கள் பல அழிக்கப்பட்டன அல்லது ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் மூடிய பிரிவுகளில் பூட்டி வைக்கப்பட்டன.

சோவியத் யூனியன் இறுதிக்கட்டத்தை அடையும் போது, அதிகாரத்துவம் இந்த ஆவணப் பதிவின் ஒரு பகுதியை வெளியிட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தது. லியோன் ட்ரொட்ஸ்கி 1923 அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 23 ஆகிய திகதிகளில் கட்சித் தலைமைக்கு அனுப்பிய கடிதங்களின் முழு எழுத்து வடிவம், அதே போல் எதிர்ப்பு அணி ஸ்தாபக ஆவணமான 46 பிரகடனமும் ரஷ்ய மொழியில் இஸ்வெஸ்டியா டிஎஸ்கே கேபிஎஸ்எஸ் (Izvestiia TsK KPSS) இதழில் (இது சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பத்திரிகை ஆகும்).

1990 ஆண்டு அதாவது 66 ஆண்டுகளுக்குப் பிறகு இவைகள் வெளியிடப்பட்டன. அனைத்துலகக் குழு மட்டுமே அவற்றை மொழிபெயர்த்து அதை சர்வதேச தொழிலாள வர்க்க பார்வையாளர்களுக்கு கிடைக்கச் செய்யும் முயற்சியை மேற்கொண்டது. ஸ்ராலினிசத்தின் வீழ்ச்சிக்கான அனைத்துலகக் குழுவின் பதிலிறுப்பில் இந்த ஆவணங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீடு ஒரு முக்கிய அங்கமாக மாறியது; இது ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டம் பற்றிய வரலாற்று உண்மையைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச நனவை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான முறைப்படியான போராட்டம் தொடங்கப்பட்டது.

18 அக்டோபர் 1993 அன்று இன்டர்நஷனல் வேர்கர்ஸ் புல்லடினில் டேவிட் நோர்த் எழுதிய இடது எதிர்ப்பு நிறுவப்பட்டதில் இருந்து 70 ஆண்டுகள் பற்றிய 1993 தலையங்கம் [Photo: WSWS]

சோசலிஸ்டு அல்லதுட்ரொட்ஸ்கிஸ்டு”” என்று கூறிக்கொள்ளும் ஏனைய அனைத்து அரசியல் போக்குகளுக்கும் மாறாக, அனைத்துலகக் குழு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை சோசலிசத்தின் முடிவாக மதிப்பிடவில்லை, மாறாக அக்டோபரை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததன் இறுதி முடிவாகவும் உலக ஏகாதிபத்திய நெருக்கடியின் ஒரு புதிய கட்டமாகவும் மதிப்பிட்டது.

மார்ச் 11, 1992 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 12வது பேரவைக்கான ஒரு அறிக்கையில், டேவிட் நோர்த், தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவுக்காக ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் மார்க்சிச இயக்கம் முன்னெடுத்த பல தசாப்த கால போராட்டத்திலிருந்தே அக்டோபர் புரட்சி எழுந்தது என்று விளக்கினார். இதற்கு நேர்மாறாக,

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் நனவை அபிவிருத்தி செய்தல், ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட வெகுஜனத்தை ஒரு நனவான வரலாற்று சக்தியாக மாற்றுதல் ஆகிய மார்க்சிசத்தின் மகத்தான வெற்றியை அழிக்க ஸ்ராலினிசம் புறப்பட்டது. … மார்க்சிசத்தின் மகத்தான அரசியல் கலாச்சாரத்தை தொழிலாள வர்க்கத்திற்குள் மீண்டும் ஸ்தாபிக்க வேண்டிய பொறுப்பு அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் மீது வீழ்கிறது. ஒரு உண்மையான புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே அடித்தளம் அதுவே ஆகும்.

இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இடது எதிர்ப்பு அணியின் வரலாறு குறித்து ஏழு தொகுதிகளை எழுதிய, இடது எதிர்ப்பின் 70 வது ஆண்டு நினைவேந்தலைத் தொடங்கிவைத்த, சோவியத்திற்குப் பிந்தைய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான பாத்திரம் வகித்த, சோவியத் வரலாற்றாசிரியரான வடிம் ரொகோவினுடன் நெருக்கமான அறிவார்ந்த ஒத்துழைப்பைத் தொடங்கியது.

டேவிட் நோர்த் 1989 நவம்பரில் மொஸ்கோ வரலாற்று ஆவணக் காப்பக நிறுவனத்தில் விரிவுரையாற்றிய போது [Photo: WSWS]

30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போராட்டம் முழுமையாக நிரூபணமாகியுள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருடன் தொடங்கியுள்ள, உலகின் ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபங்கீட்டுக்கான மோதலின் ஆரம்ப கட்டங்களின் பிடியில் உலகம் அகப்பட்டுள்ளது. மிக அடிப்படையான வரலாற்று மட்டத்தில், இந்த போரானது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மற்றும் அக்டோபர் புரட்சி ஸ்ராலினிசத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டதினதும் விளைவாகும். ஸ்ராலினிசத்திற்கு ஒரு சோசலிச மாற்றீடு இருந்ததா என்ற கேள்வி இன்று முதலாளித்துவத்திற்கு ஒரு சோசலிச மாற்றீடு உள்ளதா என்ற கேள்வியாக மாறியுள்ளது.

வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டதை இந்த ஆவணங்களையும் மற்றும் இதுவரை கிடைக்கப்பெறாத பல ஆவணங்களையும், வெளியிடுவதன் மூலம் கொண்டாடுவதோடு, அதேபோல் கூட்டங்கள் மற்றும் பிற கல்வியூட்டும் முன்முயற்சிகளையும் மேற்கொள்ளும். ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்துள் வளர்ந்து வரும் வெகுஜன இயக்கத்துக்கு ஒரு மார்க்சிச தலைமை மற்றும் நனவை வழங்குவதற்கான போராட்டத்தில் இந்த வரலாற்றை உள்வாங்குவது இன்றியமையாததாக உள்ளது.

இந்த மாதம் சகாப்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் போராட்டம் தொடங்கியதன் எழுபதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. 8 அக்டோபர் 1923 அன்று, லியோன் ட்ரொட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷிவிக்) மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தைப் பெற்றவர்களை திகைக்க வைக்கும் ஒரு வெளிப்படைத் தன்மையுடன் எழுதிய ட்ரொட்ஸ்கி, உள் ஜனநாயகத்தை திட்டமிட்டு நசுக்கும் ஒரு எந்திரத்தில் பெருமளவிலான அதிகாரம் குவித்துக்கொள்ளப்பட்ட அதிகாரத்துவமயமாக்கல் நிகழ்வுப்போக்கினால் கட்சி அழிக்கப்பட்டு வருவதாக அறிவித்தார். ஒரு மோசமான அரசியல் ஆட்சியால் பலவீனமடைந்துள்ள கட்சி, சோவியத் அரசின் உயிர்வாழ்வை அச்சுறுத்தும் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் திறனை இழந்து வருவதாக அவர் எச்சரித்தார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், இப்போது முழுமையாகப் பாராட்டப்படக் கூடிய முன்னறிவுள்ள சொற்களுடன், ட்ரொட்ஸ்கி அறிவித்தார்: “நமது முன்னணி அமைப்புகள் செய்த தவறுகளின் பெரும் சுமையை சுமந்து கொண்டு, கட்சி அதன் வரலாற்றில் மிக தீர்க்கமானதாக இருக்கக் கூடிய சகாப்தத்திற்குள் நுழைகிறது.”

உள்நாட்டுப் போரின் போது செம்படைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி

அந்தக் கடிதத்தின் தாக்கம் ஒரு அரசியல் வெடிகுண்டாக இருந்தது. தங்களின் தலைமையும் வழிமுறைகளும்தான் அதன் கடுமையான விமர்சனத்தின் இலக்காக இருந்தன என்பதை அறிந்தவர்களுக்கு -ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (RCP) அரசியல் குழுவில் ஆதிக்கம் செலுத்திய சினோவியேவ், காமனேவ் மற்றும் ஸ்ராலின் உட்பட உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத “மும்மூர்த்திகளின்“ கோட்பாடற்ற கன்னைக்கு —ட்ரொட்ஸ்கியின் கடிதம் ஒரு போர்ப் பிரகடனமாகத் தெரிந்தது. ஆனால், புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் காலகட்டத்தில் மிகச்சிறந்த மார்க்சியத் தலைவர்களாக இருந்தவர்கள் உள்ளடங்களாக ஏனையவர்களுக்கு, அக்டோபர் 8 கடிதம் ஒரு உத்வேகமாக இருந்தது. சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகவும் வர்க்க-நனவு கொண்ட பிரிவுகள் மத்தியில் அவரது அரசியல் மற்றும் தார்மீக அதிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால் ட்ரொட்ஸ்கியின் மதிப்பு லெனினால் மட்டுமே விஞ்சப்பட்டிருந்தது. இவ்வாறாக, கட்சி மற்றும் அரசின் அதிகாரத்துவமயமாக்கல் பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களும், பொருளாதாரக் கொள்கையில் உள்ள தவறுகள் குறித்த ஆழமான பகுப்பாய்வும், கட்சி அணிகளில் பரவிக் கொண்டிருந்த அதிருப்திக்கு ஒருமுகப்படுத்தலை வழங்கின. ஒரு வாரம் கழித்து, அக்டோபர் 15 அன்று, 46 பேரின் பிரகடனம் என்று அறியப்பட்ட ஒரு ஆவணம் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கியின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த பிரகடனம் கட்சி ஜனநாயகத்திற்கு புத்துயிரூட்டுவதற்கும், அதன் மூலம் சோவியத் ஒன்றியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திய கடுமையான பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கும் அவசியமான அரசியல் நிலைமைகளை ஸ்தாபிப்பதற்குமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தது. பிரீயோபிரஷென்ஸ்கி, பியாடகோவ், செரெப்ரியாகோவ், முரலோவ், ஸ்மிர்னோவ், போகஸ்லாவ்ஸ்கி, சோஸ்னோவ்ஸ்கி மற்றும் வோரோன்ஸ்கி போன்ற தலைசிறந்த நபர்களைக் கொண்ட பிரகடனத்தின் வெளியீடு, இடது எதிர்ப்பின் அரசியல் நடவடிக்கையின் தொடக்கத்தைக் குறித்தது.

இடது எதிர்ப்பின் எழுச்சி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவிய ஒரு வருட தீவிர பதட்டத்தின் உச்சக்கட்டமாகும். முன்னறிவிப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மையின் பொதுவான உணர்வு லெனின் நோய்வாய்ப்பட்டதால் தீவிரமடைந்தது. 9 மார்ச் 1923 அன்று அவருக்கு ஏற்பட்ட பக்கவாதத்தால் அவரது அரசியல் நடவடிக்கைகள் திடீரென முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. ஆனால் நோய் லெனினை சம்பவ இடத்திலிருந்து அகற்றுவதற்கு முன்பே ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடியில் இருந்தது. உண்மையில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர் பிழைப்பு என்பது அரசு மற்றும் கட்சி எந்திரத்தில் உள்ள அதிகாரத்துவத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தைச் சார்ந்துள்ளது என்ற முடிவுக்கு லெனின் வந்ததை அடுத்தே அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது

நெருக்கடியின் புறநிலை அடித்தளம் ரஷ்யப் புரட்சியின் அடிப்படைப் பிரச்சினையிலேயே இருந்தது. ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளில் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றிலேயே போல்ஷிவிக்குகளின் தலைமையின் கீழ் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வந்தது. சோசலிச வழியில் அதன் அபிவிருத்தி பற்றிய விடயம் ஒருபுறம் இருக்க, ஒரு நவீன சோவியத் தொழிற்துறையின் உருவாக்கமானது மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவிதியிலேயே தங்கியிருந்தது. போல்ஷிவிக்குகள் ரஷ்யாவில் தங்கள் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் மற்ற நாடுகளிலும் சோசலிசப் புரட்சிகள் நிகழும் என்று நம்பினர். எவ்வாறாயினும், போல்ஷிவிக்குகளுடன் ஒப்பிடக்கூடிய ஒரு கட்சி ஐரோப்பாவிற்குள் இல்லாதது, முதலாம் உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவ அமைப்புமுறையை ஸ்திரப்படுத்துவதற்கு முதலாளித்துவ வர்க்கத்திற்கு மூச்சுவிடுவதற்கு தேவையான இடைவெளியை வழங்கியது.

1917 அக்டோபரில் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் ஆர்ப்பாட்டம் 

புரட்சியைத் தொடர்ந்து, எதிர்ப்புரட்சி சக்திகளின் சார்பிலான ஏகாதிபத்தியவாதிகளின் நேரடித் தலையீட்டால் நீடித்த நடந்த உள்நாட்டுப் போரின் மூர்க்கத்தன்மை, இளம் சோவியத் குடியரசின் பொருளாதாரத்தை சீரழித்தது. விவசாயிகளிடமிருந்து விவசாய பொருட்களை கட்டாயப்படுத்தி பெற்றுக்கொள்வது, தொழிலாளர்களை இராணுவமயமாக்குவது (போர் கம்யூனிசம் என்று அழைக்கப்படுவது) ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்துறையை புதுப்பிக்கும் முயற்சி, தீவிர விரோதத்தைத் தூண்டியது. தொழிலாளர் அரசாங்கம் விவசாய வெகுஜனங்களின் ஆதரவை இழக்கும் பட்சத்தில் போல்ஷிவிக் ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்து அஞ்சிய லெனின், சர்வதேச புரட்சிகர இயக்கம் தணிந்து செல்வதை புரிந்து கொண்டு ஒரு தற்காலிக பின்வாங்கலை முன்மொழிந்தார். 1921 மார்ச்சில் முன்மொழியப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை (NEP)  விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்க அனுமதித்தது. முதலாளித்துவ நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, குறுகிய காலத்தில், பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டன. இருப்பினும், தவறற்ற முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், மார்க்சிய பகுப்பாய்வில் ஈடுபட்டவர்கள் புதிய அபாயங்களைக் கண்டறிந்தனர். முதலாவதாக, பொருளாதாரத் துறையிலான மறுமலர்ச்சி முக்கியமாக விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பயனளித்தது. சோவியத் யூனியனின் தலைவிதி இறுதியாகச் சார்ந்திருந்த தொழில்துறையின் வளர்ச்சி மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் (NEP)  கட்டமைப்பிற்குள் தொழில்துறையின் வளர்ச்சியைத் தூண்ட இயலாமை, ஒரு நிகழ்வுப் போக்கில் அதன் பிரதிபலிப்பைக் கண்டது. ட்ரொட்ஸ்கி, அவரின் குணாதிசயமான புத்திசாலித்தனத்துடன் அதன் மீது கவனத்தை குவித்தார்.

விவசாய பொருட்களின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தொழில் துறையின் விலை வேகமாக உயர்ந்து வந்தது. 1923 ஏப்ரலில் பன்னிரெண்டாவது கட்சி மாநாட்டில் ட்ரொட்ஸ்கி ஆற்றிய உரையில், விவசாய மற்றும் தொழில்துறை விலைகளின் மாறுபட்ட இயக்கத்தை ஒரு வரைபடத்தில் விளக்கினார். அவற்றின் கோடுகள் திறந்த கத்தரிக்கோல் போல் ஒன்றுக்கொன்று குறுக்காக இருந்தன. சோவியத் பொருளாதாரத்தின் இரண்டு அடிப்படைத் துறைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் எதிரெதிர் திசைகளில் நகர்ந்தபோது, “கத்தரிக்கோல்” விரிவடைந்தது; இந்த “விரிவாக்கம்” புதிய பொருளாதார கொள்கையில் அடங்கியுள்ள ஆபத்தை அம்பலப்படுத்தியது: விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் இடையிலான வர்த்தக விதிமுறைகள் தொடர்ந்து மோசமடைந்து வருமாயின், கிராமப்புறங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் ஒரு பொருளாதார பிளவு ஏற்படும் அபாயமும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு அரசியல் பிளவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

ட்ரொட்ஸ்கி, பிரீயோபிரஷென்ஸ்கியின் குறிப்பிடத்தக்க ஆதரவுடன், சோவியத் கொள்கை தொழில்துறை விலைகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு சோவியத் அரசு உற்பத்தியை ஒழுங்கமைக்கவும், வளங்களை மிகவும் திறமையான முறையில் ஒதுக்கீடு செய்யவும் பொருளாதார திட்டமிடல் என்ற கருத்தாக்கத்தை அபிவிருத்திசெய்ய வேண்டியிருந்தது. அதற்கு தொழில்துறை முதலீட்டிற்குத் தேவையான வளங்களை வழங்க விவசாயத்தின் மீது அதிக சுமையை சுமத்த வேண்டி இருந்தது.

எவ்ஜினி பிரேரியோபிரெஜென்ஸ்கி

ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு துல்லியம் மற்றும் தெளிவின் ஒரு மாதிரியாக இருந்தது. பன்னிரண்டாவது கட்சி மாநாட்டில் அவரது பகுப்பாய்வை எதிர்க்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எவ்வாறெனினும், பல ஆண்டுகால புரட்சிகரப் புயல் மற்றும் அழுத்தங்களுக்குப் பிறகு, புதிய பொருளாதார கொள்கையின் மிகவும் தளர்வான சூழலை மிகவும் இசைவானதாக கண்ட கட்சித் தலைமைக்குள்ளும் அணிகளுக்குள்ளும் இருந்த அடுக்குகளை இது குழப்பமடையச் செய்தது. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உளவியலில் ஏற்பட்ட இந்த மாற்றம் அதன் உள் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுடன் தொடர்புடையது. உள்நாட்டுப் போரின் காலம் கட்சியிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்திடமிருந்தும் பெருந்தொகையான மனித இழப்பை ஏற்படுத்தியிருந்தது. போர்க்கள காயங்கள், படுகொலைகள் மற்றும் நோய்கள் சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் மிகச் சிறந்த கட்சிக் காரியாளர்களையும் சிறந்த பிரதிநிதிகளையும் காவுகொண்டது. தொழில்துறை உற்பத்தியுடன் பிரிக்கவியலாத வகையில் இணைக்கப்பட்டிருந்த சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் மீதான இந்த பொருளாதார பேரழிவின் தாக்கத்துடன் இந்த மனித இழப்புகளின் தாக்கம், மேலும் சுமையை அதிகரித்தது. தொழிற்துறையின் பெரும் பிரிவுகளின் சரிவு, மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தொழிலாளர்மயமாவதில் இருந்து வெளியேறுவதற்கு பங்களிப்பு செய்தது. அது போல்ஷிவிசத்தின் சமூக அடித்தளத்தை புறநிலையாக பலவீனப்படுத்தியது.

மேலும் மற்றொரு காரணி போல்ஷிவிசத்தின் புரட்சிகர வளர்ச்சியை பலவீனப்படுத்தியது. ஒரு அரசை ஒழுங்கமைத்து மேற்பார்வையிடுவதற்கான தேவைகள், கட்சி காரியாளரின் கணிசமான பகுதியினரை ஆட்சியின் நிர்வாக இயந்திரத்திற்குள் ஈர்த்தன. இங்கே பலர் ஒரு புதிய மற்றும் விசித்திரமான சூழலில் தங்களைக் கண்டு கொண்டனர். அவர்கள் புதிய வேலைப் பழக்கங்களை மட்டுமன்றி புதிய சலுகைகளையும் கூட பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு கிடைத்தவை, குறிப்பாக முதலாளித்துவ உலகின் தரநிலைகளில் பார்க்கின்றபோது ஆடம்பரமானவையாக இல்லாமல் இருந்தாலும், ஒரு துண்டு கொழுப்பு இறைச்சி கூட ஆடம்பரமாக இருந்த ஒரு வறிய நாட்டில் அவை குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.

புதிய பொருளாதார கொள்கையின் மற்றொரு விளைவு, போல்ஷிவிக் கட்சியின் சீரழிவுக்கு கணிசமாக பங்களிப்பு செய்தது. முதலாளித்துவச் சந்தையின் மறுமலர்ச்சியுடன், புரட்சிக்கு முந்தைய பழைய உயர் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த கூறுகளை கட்சியில் சேர்ப்பதற்கான கடுமையான தடைகள் கணிசமாக தளர்த்தப்பட்டன. “சிவப்பு முகாமையாளர்கள்” மற்றும் “சிவப்பு தொழிலதிபர்கள்” என்று முரண்பாடாக குறிப்பிடப்பட்ட அவர்கள், பொருளாதார விவகாரங்களின் திசையில் அதிக சுறுசுறுப்புடன் செயல்பட்டது மட்டுமன்றி, அவர்களால் கட்சி அட்டையையும் பெற முடிந்தது. இக்காலகட்டத்தில், 1917 க்கு முன்பு எண்ணெய் அறக்கட்டளைகளில் வழக்கறிஞராக இருந்து, பின்னர் உள்நாட்டுப் போரின் போது, அட்மிரல் கோல்சக் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதியில் அமைத்த எதிர்-புரட்சிகர நிர்வாகத்தில் ஒரு செயல்பாட்டாளராக இருந்த ஆண்ட்ரே வைஷின்ஸ்கி கட்சிக்குள் நுழைந்தவர்களில் ஒருவர் ஆவார். இதே வைஷின்ஸ்கி, 1936-38 மொஸ்கோ விசாரணைகளில் ஸ்டாலினின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.

புதிய பொருளாதார கொள்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே, சாதகமற்ற புறநிலை சூழல்களினால் போல்ஷிவிக்குகள் மீது திணிக்கப்பட்ட பின்வாங்கலின் இந்த எதிர்மறையான விளைவுகள் குறித்து லெனின் கூர்மையான உணர்திறன் கொண்டிருந்தார். கட்சிக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த, போல்ஷிவிக் புரட்சியை எதிர்ப்பதில் இழிபுகழ் பெற்ற எதிர்ப்பாளர்கள் பலரை “அயோக்கியர்கள்” என்று அவர் அடிக்கடி கடுமையாகக் குறிப்பிட்டார். ஆனால் 1922 பிற்பகுதியில், தனது முதல் பெரிய பக்கவாத தாக்கத்திலிருந்து மீண்ட பின்னர், முன்னதாக தனிமைப்படுத்தப்பட்ட சீரழிவின் அறிகுறிகளாக காணப்பட்டவை, கட்சி மற்றும் அரசுக் கொள்கையின் முக்கியமான பகுதிகளில் ஒரு தனித்துவமான அரசியல் வடிவத்தை எடுத்துக் கொள்ளும் சமிக்ஞைகளினால் லெனின் எச்சரிக்கை அடைந்தார்.

விளாடிமிர் லெனின் சுமாராக 1919 இல் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த போது. [AP Photo]

முதலாவதாக, 1922 அக்டோபரில், தான் இல்லாத நேரத்தில், அரசியல் குழு, புகாரினின் முன்முயற்சியுடனும், ஸ்டாலினின் ஆதரவுடனும் வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகத்தை பலவீனப்படுத்த அனுமதிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக லெனின் அறிந்தார். இந்த முடிவு, மிகவும் பலவீனமான சோவியத் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் குறித்து உடனடியாக உணர்ந்து கொண்ட அவர், அதை தொடக்கி வைத்தவர்கள் விரிவடைந்து வரும் “புதிய பொருளாதார கொள்கை-ஆட்களின்”, அதாவது குட்டி-முதலாளித்துவ வர்த்தகர்களின் விரிவடைந்து வரும் செல்வாக்கிற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதாக லெனின் குற்றம் சாட்டினார். பங்குச் சந்தை கூட மீண்டும் இயங்கத் தொடங்கியது.

ட்ரொட்ஸ்கியின் ஆதரவுடன், ஏகபோக அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட நிர்ப்பந்திப்பதில் லெனின் வெற்றி பெற்றார், ஆனால் ஒரு சில வாரங்களுக்குள், புதிதாக உருவாக்கப்பட்ட சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தில் ஜோர்ஜியாவை ஒருங்கிணைப்பதற்கான தங்கள் திட்டத்தை ஏற்குமாறு ஜோர்ஜிய குடியரசின் தலைவர்களை அவர்கள் கட்டாயப்படுத்த ஸ்ராலினும் அவரது கையாள் ஆர்ட்ஜோனிகிட்ஸேவும் பயன்படுத்திய முரட்டுத்தனமான வழிமுறைகளை அம்பலப்படுத்தும் அறிக்கைகள் லெனினுக்கு கிடைத்ததை அடுத்து, இன்னும் கடுமையான ஒரு நெருக்கடி எழுந்தது. மிடிவானி மற்றும் பிற ஜோர்ஜிய தலைவர்களின் புகார்களை அவர் ஆராய்ந்தபோது, ரஷ்யர் அல்லாத தேசிய இனத்தின் பிரதிநிதிகளை அச்சுறுத்துவதற்கான ஸ்டாலினின் முயற்சியைக் கண்டு லெனின் திகைத்தார். ஸ்டாலினின் நடவடிக்கைகள், ரஷ்ய பேரினவாத கொடுமைக்காரனின் கொடூரமான மற்றும் வெறுக்கத்தக்க முகத்தோற்றத்தை லெனினின் நினைவுக்கு கொண்டு வந்தது.

ஸ்டாலின் மற்றும் அவரது நெருங்கிய சகாக்களான அனஸ்டாஸ் மிகோயன் மற்றும் செர்கோ ஆர்ட்சோனிகிட்ஸே ஆகியோர் திபிலிசியில், 1925

அவரது உடல்நிலை விரைவாக மோசமடைந்து வந்த போதிலும், ஜோர்ஜிய சம்பவம் லெனினை கட்சியின் நிலை குறித்து ஆழமாக மறுமதிப்பீடு செய்யும்படி நிர்ப்பந்தித்தது. லெனினின் அரசியல் வாழ்வின் இறுதி வாரங்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள் குறித்த வெளிப்படையான மதிப்பீடுகள் மற்றும் அதிகாரத்துவத்தின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான முன்மொழிவுகளைக் கொண்ட ஒரு அசாதாரணமான தொடர் குறிப்புகளை சொல்வதெழுதுதல் முறையில் எழுதுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டன. லெனினின் குறிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கட்சியை அச்சுறுத்தும் அதிகாரத்துவ சீரழிவின் நேரடி உருவமாக ஸ்டாலினை அவர் அடையாளம் காட்டினார். 4 ஜனவரி 1923 அன்று எழுதப்பட்ட தனது அரசியல் சாசனத்துக்கு மேலதிகமாக, லெனின் “ஸ்டாலின் மிகவும் மூர்க்கமானவர்” என்று குறிப்பிட்டு, அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்தார்.

திட்டமிடப்பட்ட கட்சி மாநாட்டில் ஸ்ராலினுடன் ஒரு தீர்க்கமான மோதலுக்கு லெனின் தயாரானபோது, வெளிநாட்டு வர்த்தக ஏகபோகத்திற்கு எதிரான போராட்டத்தில் நடந்துகொண்டதைப் போலவே, அவர் ட்ரொட்ஸ்கியிடம் அரசியல் ஆதரவை நாடினார். 5 மார்ச் 1923 அன்று, “கட்சி மத்திய குழுவில் ஜோர்ஜிய விவாகாரத்தை பாதுகாப்பதை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது அவசர வேண்டுகோள்” என அவர் ட்ரொட்ஸ்கிக்கு எழுதினார். அன்று பின்னேரம், தன் மனைவி குருப்ஸ்கயாவை ஸ்டாலின் தகாத வார்த்தைகளால் இழிவாக பேசியதை அறிந்த லெனின், அனைத்து தனிப்பட்ட உறவுகளையும் முறித்துக் கொள்வதாக பொதுச் செயலாளருக்கு கோபத்துடன் கடிதம் எழுதினார். எவ்வாறாயினும் இது லெனினின் கடைசி அரசியல் நடவடிக்கையாக இருந்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, மார்ச் 9 அன்று அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதனால் அவரால் பேசவோ எழுதவோ முடியவில்லை.

லெனின் அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், சினோவியேவ், காமனேவ் மற்றும் ஸ்ராலின் ஆகியோர் ட்ரொட்ஸ்கியின் மகத்தான கௌரவம் மற்றும் செல்வாக்கை எதிர்கொள்ள ஒரு உத்தியோகபூர்வமற்ற கூட்டணியை அமைத்தனர். இந்த நடவடிக்கையில், கட்சி அமைப்பின் மீதான தனது கட்டுப்பாட்டை ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டார். கட்சியிலும் அரசு இயந்திரத்திலும் பொறுப்பான பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ளும் இயலுமைதான் அவரது (ஸ்டாலின்) பிரதான ஆயுதமாக இருந்தது. கட்சிப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள், அணிகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமானவர்கள் என்பதால், இந்த நியமன அதிகாரம் உட்கட்சி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது. அவர்களின் அதிகாரம், இறுதி பகுப்பாய்வில், தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய அடுக்குகளுடனான அவர்களின் உறவைப் பொறுத்தது அல்ல, மாறாக ஸ்ராலினின் ஒப்புதலைப் பொறுத்தது.

லெவ் காமனேவ், கிரிகோரி ஸினோவியேவ் ஆகியோர் ஜோசப் ஸ்டாலினுடன் ஒரு ‘முக்கூட்டு அதிகாரத்தை’ உருவாக்கினர் [Photo]

லெனின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் திரும்புவார் என்று பல மாதங்களாக கொண்டிருந்த நம்பிக்கையில் ட்ரொட்ஸ்கி மூவர் மீதும் நேரடித் தாக்குதலைத் தவிர்த்தார். ஆனால் 1923 இலையுதிர்காலத்தில் இரண்டு காரணிகள் அவர் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற முடிவுக்கு அவரை இட்டுச் சென்றன. முதலாவதாக, பன்னிரண்டாவது காங்கிரசில் அவர் எச்சரித்தபடி, பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இரண்டாவதாக, ஜேர்மனியில் ஆழமடைந்து வந்த நெருக்கடியாகும். அங்கு நிகழ்ச்சி நிரலில் புரட்சி இருப்பதாகத் தோன்றியதுடன், அது சர்வதேச அரசியல் நிலைமையில் ஒரு கூர்மையான மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான் ட்ரொட்ஸ்கி தனது கடிதத்தை எழுதினார். அதன் முழு எழுத்துவடிவம் பின்வரும் பக்கங்களில் முதல் முறையாக ஆங்கிலத்தில் வெளியிடப்படுகின்றது.

Loading