முன்னோக்கு

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு ஓர் அழைப்பு: காஸாவில் ஏகாதிபத்திய-சியோனிச இனப்படுகொலையை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து லண்டன் டவுனிங் தெருவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்துகின்றனர். [Photo: WSWS]

அமெரிக்க-நேட்டோ அச்சில் உள்ள அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலையை நடத்தி வருகிறது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் போர்க்குற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில், ஒரு உண்மையான வெகுஜன இயக்கம் உருவாகி வருகிறது. மேற்குக் கரை, துருக்கி, ஜோர்டான், துனிசியா மற்றும் பிற நாடுகளில் வெள்ளிக்கிழமை தன்னிச்சையான போராட்டங்கள் வெடித்தன. நியூயோர்க்கில், நூற்றுக்கணக்கான அமைதிக்கான யூத குரல் உறுப்பினர்கள் கிராண்ட் சென்ட்ரல் நிலையத்தை மூடினர். இது கடந்த வாரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, இந்த வார இறுதியில் உலகம் முழுவதிலும் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடந்து வருகின்றன.

இந்த இயக்கத்தை வளர்த்து விரிவாக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், அனைத்து நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. ஒவ்வொரு நகரத்திலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் அவசர ஒற்றுமைப் போராட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இஸ்ரேலுக்குள்ளேயே போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை வளர்க்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அதன் படையினர்கள் மற்றும் அவர்களில் பலர் ரிசேர்வ் படையினர்களாக உள்ளவர்கள், (சர்வதேச சட்டத்தின் கீழ் தேவை) நெதன்யாகு ஆட்சி மற்றும் இராணுவ பொது ஊழியர்களின் குற்றவியல் உத்தரவுகளை மீற வேண்டும்.

இழப்பதற்கு நேரமில்லை. போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் முதலாளித்துவ அரசாங்கங்களின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு அடிபணியக்கூடாது. இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு எதிரான அவர்களின் வாய்மொழி எதிர்ப்புகள், வளர்ந்து வரும் வெகுஜன இயக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை திசைதிருப்புவதையும் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. பாலஸ்தீனிய மக்களுடன், ஒற்றுமையுடன் ஒரு பொது அரசியல் வேலைநிறுத்தம் என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குற்றங்களை எதிர்ப்பதற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் வேரூன்ற வேண்டும்.

காஸாவில் அவசரகால நிலை நிலவுகிறது:

  • மூன்று வாரங்களுக்கு முன்பு தாக்குதல் தொடங்கியதில் இருந்து கடுமையான வான்வழி குண்டுவீச்சுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை அனைத்து தகவல் தொடர்புகளும் இஸ்ரேலால் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனியர்கள் மீதான பாரிய படுகொலைகள், டாங்கிகளின் ஊடுருவல் பற்றிய அறிக்கைகள் மற்றும் தரைவழிப் படையெடுப்பின் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் காட்டும் தகவல்கள் வெளியே கசிவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
  • 60,000ம் வரையிலான அகதிகள் அவநம்பிக்கையுடன் தங்கியுள்ள வடக்கு காஸாவின் கடைசி மருத்துவமனையான அல்-ஷிஃபாவை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கோரிக்கை விடுத்துள்ளன. வெள்ளிக்கிழமை அன்று, இந்த மருத்துவமனையை ஹமாஸ் பயன்படுத்துகிறது என்று IDF ஒரு பொய் அறிக்கையை வெளியிட்டது. இது, அக்டோபர் 17 அன்று அல்-அஹ்லி அரபு பாப்டிஸ்ட் மருத்துவமனையை குறிவைத்து 500 பேரைக் கொன்றதுபோல், அந்த வைத்தியசாலை வசதிகள் மீதான குண்டுவீச்சுக்களை நியாயப்படுத்த ஒரு வெளிப்படையான முயற்சியாக இருக்கிறது.
  • வடக்கு காஸாவில் வசிக்கின்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அல்லது கொல்லப்படுகிறார்கள், மேலும் அங்கிருந்து 1.4 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். அத்தோடு, ரஃபாவில் எகிப்துடனான எல்லைக் கடப்பு உட்பட, தெற்கு காஸாவில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
  • நூறாயிரக்கணக்கான மக்கள் கடும் பட்டினி, நீரிழப்பு மற்றும் இதர நோய்களை எதிர்கொள்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை விடுத்த ஒரு அறிக்கையில் இந்தப் பேரழிவின் அளவை ஒப்புக்கொண்டார். அத்துடன், காஸாவில் “மனிதாபிமான அமைப்பு, 2 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களுக்கு கற்பனை செய்ய முடியாத விளைவுகளுடன் முழுமையான வீழ்ச்சியை எதிர்கொள்கிறது” என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவும் அதன் அச்சு நேட்டோ சக்திகளும் (ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி மற்றும் கனடா உட்பட) இந்த இனப்படுகொலையில் முழுப் பங்காளிகளாகவும் உடந்தையாகவும் உள்ளன.

கடந்த புதன் கிழமையன்று, போரின் அட்டூழியத்தின் அளவைக் குறைத்துக்காட்ட முயன்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், “எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பற்றி பாலஸ்தீனியர்கள் உண்மையைச் சொல்கிறார்கள் என்று தனக்கு எந்த எண்ணமும் இல்லை” என்று கூறினார்.

பைடென் பொய் சொல்கிறார். அவரது கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில், இதுவரை கொல்லப்பட்ட 7,000 மக்களின் பெயர்களை பாலஸ்தீனிய அதிகாரிகள் வெளியிடுவதற்கு முன்பே, அதிர்ச்சியூட்டும் இறப்பு எண்ணிக்கை அவருக்குத் தெரியும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை, ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பாலஸ்தீனியர்களை படுகொலை செய்வது, பைடென் கூறியது போல், “போரை நடத்துவதற்கு கொடுக்க வேண்டிய விலையாகும்”.

கடந்த வியாழன், “ஹமாஸ் மற்றும் இதர பயங்கரவாதிகளால் தொடுக்கப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான போருக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பில் இஸ்ரேலுடன் நிற்பதாக” அறிவிக்கும் தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை 10க்கு எதிராக 412 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது.

வெள்ளியன்று, இஸ்ரேல் தனது இராணுவத்தின் முழுப் பலத்துடன் காஸா மீது குண்டுகளை வீசித் தாக்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, பைடென் நிர்வாகம் “இஸ்ரேலுக்கு சிவப்புக் கோடுகளை வரையவில்லை” என்று அறிவித்தார். இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நெதன்யாகு ஆட்சிக்கு பாரிய வெகுஜன படுகொலைக்கான வெற்றுக் காசோலை வழங்கப்பட்டு உள்ளது.

இடைவிடாத பிரச்சாரம் செய்தாலும், உலகெங்கிலும் உள்ள பரந்த அளவிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்வு பாலஸ்தீனியர்களின் பக்கமே இருக்கிறது. ஆளும் வர்க்கம், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான எதிர்ப்புக்களை அடக்குவதற்கு, அச்சுறுத்தல்கள் மற்றும் முயற்சிகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.

ஜேர்மனியில், இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான பெரும்பாலான போராட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பொலிசாரால் கொடூரமாக தாக்கப்படுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்கள் முற்றுகைக்கு உட்பட்டுள்ளன. பலத்த ஆயுதம் ஏந்திய போலீசார் தெருக்களில் ரோந்து சென்று பாலஸ்தீன உடைகள் அல்லது கொடிகளை அணிந்து செல்பவர்களை கைது செய்கின்றனர்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவளிப்பவர்கள் மட்டுமே ஜேர்மன் குடிமக்களாக இருக்க முடியும் என்று கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கோருகிறார்.

பிரான்சில், போராட்டங்களைத் தடை செய்வதற்கு மக்ரோன் அரசாங்கம், அதிகாரத்தையும் ஊக்கத்தையும் பொலிசாருக்கு வழங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட ஒரு போராட்டத்தை தடை செய்ய முயற்சிப்பதாக பாரிஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். பாலஸ்தீன கொடிகளை ஏந்திச்சென்ற எதிர்ப்பு போராட்டங்காரர்கள், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில், போராட்டங்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசுக்குள் அதிகரித்து வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்தில், அதிகாரிகள் கூட்டங்களுக்கு தடை விதித்தனர் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை இடைநீக்கம் செய்தனர்.

அமெரிக்காவில், “பயங்கரவாதிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், யூத-விரோதத்தை ஊக்குவிப்பதாகவும்” மாணவர்களை அவதூறாகப் பேசிவரும் ஒவ்வொரு செனட்டரும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஆதரவுடன், செனட் சபையில் வியாழன் அன்று ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். பாசிச குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லியால் முன்மொழியப்பட்ட தீர்மானம், குறிப்பாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் அமைப்புகள், நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் மாணவர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மற்றும் பாலஸ்தீனத்தின் நீதிக்கான மாணவர்களின் அத்தியாயங்கள் என்று பெயரிட்டுள்ளது.

புளோரிடாவின் பாசிச கவர்னர் ரோன் டிசாண்டிஸ், அரச பல்கலைக்கழக அமைப்பில் இருக்கும் பாலஸ்தீன கிளப்பில் உள்ள நீதிக்கான அனைத்து மாணவர்களையும் கலைக்க உத்தரவிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அங்கு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை, யூத எதிர்ப்பு என்று கூறுவது ஒரு மோசமான அவதூறாகும். பாசிஸ்டுகள் மற்றும் யூத-எதிர்ப்புகளை வளர்த்து, ஊக்குவித்துவரும் அரசாங்கங்களிலிருந்து இந்த அவதூறுகள் வருகிறது. ஜேர்மனியில், யூத-எதிர்ப்புக்களை மேற்கொண்டுவரும் பாசிசக் கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD), பாராளுமன்றத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த கட்சிகளில் ஒன்றாக இருக்கிறது.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, பாசிஸ்டுகளின் ஒரு குண்டர் கும்பலால் வழிநடத்தப்படுகிறது. இந்தக் கட்சியில், ஜனவரி 6-ம் தேதி டிரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முக்கிய இணை சதிகாரர்களில் ஒருவரான ஹவ்லியும் இருக்கிறார். இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்களைக் கண்டிக்க ஜனநாயகக் கட்சியினர் இந்த சக்திகளுடன் கைகோர்த்துள்ளனர்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில், அமெரிக்க-நேட்டோ அச்சு நாடுகள் உக்ரேனிய அரசில் பாசிஸ்டுகளை ஆயுதம் ஏந்துவதற்கு ஊக்குவித்துள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களைக் கொலை செய்வதற்கு நாஜிக்களுடன் ஒத்துழைத்த உக்ரேனிய தேசியவாதிகளின் பாசிச அமைப்பின் தலைவரான ஸ்டீபன் பண்டேராவை அவர்கள் ஒரு தேசிய ஹீரோவாக நிலைநிறுத்துகிறார்கள். கடந்த மாதம், யூதர்களின் படுகொலையில் பங்கேற்ற உக்ரேனிய Waffen-SS நாஜி அமைப்பின் மூத்த சிப்பாயான யாரோஸ்லாவ் ஹன்காவை முழுக் கனேடிய பாராளுமன்றமும் பாராட்டியது.

மேலும், வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் யூத தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களின் குறிப்பிடத்தக்க அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் யூத மக்களை முழுவதுமாக நெதன்யாகு அரசாங்கத்தின் குற்றங்களுடன் தொடர்புபடுத்தும் முயற்சிகளால் கடும் சீற்றமடைந்துள்ளனர்.

காஸாவில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் மிகக் கொடூரமான வடிவத்தையே காஸாவில் உலகம் காண்கிறது.

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான போர் என்பது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரின் தூண்டுதலுடன் தொடங்கிய அமெரிக்க-நேட்டோ அச்சு நாடுகளால் தொடுக்கப்பட்ட விரிவடையும் உலகளாவிய போரின் தொடர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகும்.

ஈரானுக்கு எதிரான போரைத் தயார்படுத்துவதற்கும் தூண்டுவதற்கும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் தலைமையில் ஒரு பாரிய இராணுவத் தாக்குதல் படை அணிகளை அமெரிக்கா மத்தியதரைக் கடலில் திரட்டியுள்ளது.

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலின் முழுப் பங்கேற்பையும் கோருவதன் மூலம், அடுத்த கட்டப் போருக்குத் தேவையான தயாரிப்பாக, பாலஸ்தீனியர்களிடமிருந்து வரும் அனைத்து எதிர்ப்பையும் அகற்றுவதற்கு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

ஏகாதிபத்திய வன்முறையின் வெடிப்பானது, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் இரக்கமற்ற கொள்ளைக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிராக, பெருகிய முறையில் உலக உழைக்கும் மக்களை நோக்கி செலுத்தப்படுகிறது.

ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும். எந்தவொரு இராணுவப் பயன்பாட்டுக்கும் கொண்டிருக்கக்கூடிய, எந்தவொரு பொருளையும் இஸ்ரேலுக்கு அனுப்புவதை நிறுத்தும் தொழிலாள வர்க்க நடவடிக்கையை உலக சோசலிச வலைத்தளம் ஆதரிக்கிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக சக்தி ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தில் அணிதிரட்டப்பட வேண்டும்.

காஸா மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சை உடனடியாக நிறுத்தவும், அனைத்து இஸ்ரேலிய துருப்புக்களையும் தளர்த்தவும், காசா எல்லையில் இருந்து அவர்களை திரும்பப் பெறவும் தொழிலாளர்கள் கோர வேண்டும். காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் பிற அவசியமான தேவைகள் அனைத்தும் உடனடியாக அங்கிருக்கும் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

நெதன்யாகு, ஷோல்ஸ், பைடென், சுனக், மெலோனி, மக்ரோன் மற்றும் US-NATO அச்சு நாடுகளிலுள்ள அனைத்து முன்னணி நபர்களும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக, அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும்.

அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தொழிலாளர்களின் வெகுஜன இயக்கம் இயக்கப்பட வேண்டும். மேலும், மத்திய கிழக்கின் தொழிலாளர்கள், பாலஸ்தீனியர்களின் பாதுகாப்பை தங்கள் சொந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இந்த அரசாங்கங்கள் இஸ்ரேலுடன் உறவுகளை வளர்த்து, பாலஸ்தீனியர்களை தனிமைப்படுத்திக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வலிமையும் வெற்றியும் தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிச இயக்கமாக உலகம் முழுவதும் அதன் வளர்ச்சியில் தங்கியுள்ளது. இந்த முன்னோக்கிற்காகத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் போராடி வருகின்றன.

Loading