முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்

இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவு விழா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், அக்டோபர் 15, 2023 அன்று போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பு நடத்திய இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவை கௌரவிக்கும் ஒரு கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார். YGBL என்பது ரஷ்யா, உக்ரேன் மற்றும் பல முன்னாள் சோவியத் குடியரசுகளிலுள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பாகும், இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அதன் அரசியல் ஒற்றுமையை பிரகடனம் செய்துள்ளது.

அக்டோபர் 15, 2023 அன்று இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கூட்டத்திற்காக YGBL ஆல் வடிவமைக்கப்பட்ட வரைகலைப் படம் இதுவாகும் [Photo: WSWS]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அமெரிக்காவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில், போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவிக்க என்னை அனுமதியுங்கள்.

இடது எதிர்ப்பு அணியானது ஸ்தாபிக்கப்பட்டு சரியாக 100 ஆண்டுகளுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கிசம் முன்னாள் சோவியத் யூனியனில் உயிர் வாழ்கிறது என்ற உண்மையிலிருந்து இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் எழுகிறது. போல்ஷிவிக் கட்சியின் மிகவும் முன்னேறிய மற்றும் அரசியல் நனவான பிரிவுகளான ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சக சிந்தனையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் அடித்தளத்திலுள்ள கோட்பாடுகள் மற்றும் மரபுகள், ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள புதிய தலைமுறை புரட்சிகர இளைஞர்களாலும் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் அனைத்து வெவ்வேறு கூறுகளாலும் புத்துயிர் பெறப்பட்டு போராடி வருகின்றன.

ட்ரொட்ஸ்கி ஒரு காலத்தில் ஒரு “வரலாற்று மனிதர்” என்று விவரிக்கப்பட்டார். இடது எதிர்ப்பு அணியிலிருந்து தோன்றிய நான்காம் அகிலம், ஒரு வரலாற்றுக் கட்சியாகும். நமது இயக்கம் அதற்குள் அடங்கியுள்ளதுடன், ஒரு முழு வரலாற்று சகாப்தத்திலும் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் மற்றும் பெரும்பாலும் துன்பகரமான புரட்சிகர அனுபவங்களின் செறிவூட்டப்பட்ட வெளிப்பாடாக இருக்கிறது. இன்று நாம் சந்திக்கும் இந்த மகத்தான மரபை நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த திகதியில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியின் சக சிந்தனையாளர்கள் மத்திய குழுவின் அரசியல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் - 46 பிரகடனத்தில் - அதிகாரத்துவத்தின் வளர்ச்சியையும், புதியதாக நிறுவப்பட்ட தொழிலாளர் அரசின் உயிர்வாழ்வை ஆபத்தில் ஆழ்த்திய தவறான கொள்கைகளையும் விமர்சித்தனர்.

1927 இல் இடது எதிர்ப்பு அணியின் உறுப்பினர்கள். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக): செரெப்ரியாகோவ், ராடெக், ட்ரொட்ஸ்கி, போகஸ்லாவ்ஸ்கி மற்றும் பிரீயோபிரசென்ஸ்கி. நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக): ரகோவ்ஸ்கி, டிராப்னிஸ், பெலோபோரோடோவ் மற்றும் சோஸ்னோவ்ஸ்கி [Photo]

அவர்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கைத் தொகுப்பை மட்டுமல்ல, தொழிலாள வர்க்கத்திற்கான சரியான கொள்கைகளை வகுக்கக்கூடிய மார்க்சிச வழிமுறை என்ற ஒரு முறையைக் கைவிடுவதையும் விமர்சிக்கிறார்கள் என்பதை அங்கீகரிப்பது முக்கியமாகும். அதிகாரத்துவம் என்பது அந்நிய வர்க்க சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழிமுறை என்று அவர்கள் விமர்சித்தனர், இது உட்கட்சி ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது மற்றும் உண்மையான கோட்பாட்டு பணி மற்றும் அரசியல் பகுப்பாய்வுக்கான சாத்தியத்தையும் துண்டித்தது. பகைமை வர்க்க சக்திகள் மற்றும் தொழிலாளர் அரசு மீதான ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களில் வேரூன்றிய இந்த தவறான வழிமுறை, தொழிலாள வர்க்கத்தை பெரும் ஆபத்துக்களுடன் எதிர்கொண்டது என்பதை அவர்கள் அங்கீகரித்தனர்.

1923 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த ஆவணமானது நவீன வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அரசியல் போராட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்பதை யாரும் முன்கணித்திருக்க முடியாது. ஆயினும்கூட, வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, சர்வதேச அளவில் அபிவிருத்தியடைந்த போல்ஷிவிக் கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் விளைவு, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பரந்த விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் இப்போது நன்கு புரிந்து கொண்டுள்ளோம்.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் இடது எதிர்ப்பு அணி தோற்கடிக்கப்பட்டதானது, 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் அனுபவித்த பயங்கரமான தோல்விகளுக்கு முக்கிய காரணமாகும். ஸ்ராலினிச பிரிவுக்கு எதிரான போராட்டத்தில் —அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கு எதிராக, தேசியவாதத்தின் மீளெழுச்சிக்கு எதிராக— இடது எதிர்ப்பு வெற்றி பெற்றிருந்தால், உலக சோசலிசப் புரட்சி கடந்த நூற்றாண்டில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில், அது நடைபெறவில்லை.

அது ஏன் வெற்றி பெறவில்லை? ட்ரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் சாதகமற்ற நிலைமைகளின் கீழ் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபகர்கள் முதன்முதலில் வளர்ந்து வரும் அதிகாரத்துவ எந்திரத்திற்கு எதிராக அரசியல் எதிர்ப்பின் பதாகையை முதன்முதலில் உயர்த்திய அதே மாதத்தில்தான், ஜேர்மன் புரட்சி பாரிய அரசியல் தோல்வியைச் சந்தித்தது. ஐரோப்பாவில் மிகவும் சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கத்தின் தோல்வியும், அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேர்மனியில் பாசிசத்தின் பேரழிவுகரமான வெற்றியும், சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே மார்க்சிசத்திற்கான போராட்டத்தில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தியது. ஸ்ராலினிசம் இறுதியில் ரஷ்யாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளின் விளைபொருளாக இருந்தது என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

ட்ரொட்ஸ்கி ஒருபோதும் அரசியல் அவநம்பிக்கைக்கு அடிபணியவில்லை. அந்தக் காலகட்டத்தின் அனைத்து நிகழ்வுகளும் மார்க்சிச பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன, இந்த அனுபவங்களிலிருந்து ட்ரொட்ஸ்கி மிகவும் தொலைநோக்கு அரசியல் படிப்பினைகளைப் பெற்றார். முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தமான இந்த வரலாற்று சகாப்தத்தின் பெரும் பிரச்சினை தொழிலாள வர்க்க தலைமையின் நெருக்கடி என்று ட்ரொட்ஸ்கி அறிவித்தார்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகர் லியோன் ட்ரொட்ஸ்கி [Photo]

1920 மற்றும் 1930 களின் நிகழ்வுகளால் மார்க்சிசம் மறுதலிக்கப்படவில்லை. மாறாக, ஒரு துன்பகரமான வடிவத்தில் இருந்தபோதிலும், தொழிலாள வர்க்கத்தின் விடுதலையில் அதன் இன்றியமையாத பாத்திரம் உறுதிப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், முதலாளித்துவம் ஒரு நெருக்கடியில் இருந்து இன்னொரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டபோது, அது ட்ரொட்ஸ்கியால் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு முற்றிலும் தகுதியானதாக இருந்தது. முதலாளித்துவம் மரண ஓலமெடுத்துக் கொண்டிருந்தது என்ற போதிலும், பாட்டாளி வர்க்கத் தலைமைதான் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதுவே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகவும் இருந்தது. ஆனால் அது முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

ட்ரொட்ஸ்கிசத்தின் மையவாத எதிர்ப்பாளர்கள் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பது முதிர்ச்சியற்றது என்று கூறினர். ஒரு வெற்றிகரமான சோசலிசப் புரட்சியின் அடிப்படையில் மட்டுமே ஒரு அகிலத்தை ஸ்தாபிக்க முடியும் என்று அவர்கள் அர்த்தப்படுத்திய “பெரும் நிகழ்வுகள்” இருந்ததே தவிர ஒரு அகிலத்தை யாராலும் ஸ்தாபிக்க முடியவில்லை. அந்தக் கருத்தாக்கம் முற்றிலும் தவறானது, ஏனென்றால் ஒரு வெற்றிகரமான சோசலிசப் புரட்சியானது ஒரு மார்க்சிச தலைமையைக் கட்டமைப்பதற்கு முன்னர் இருந்தது என்பதை அது குறிக்கிறது. அப்படியானால் ஒரு புரட்சிகரக் கட்சி என்ற தேவையின் அவசியமே இருந்திருக்காது. ஏற்கனவே பெற்ற வெற்றிகளைக் கொண்டாட மக்களைத் அணிதிரட்டுவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கும்.

அதற்கு பதிலளித்த ட்ரொட்ஸ்கி, முதலில் தனது விமர்சகர்களுக்கு, மூன்றாம் அகிலமே, 1919 ஆண்டில் அதன் முதல் மாநாட்டை நடத்திய போதிலும், முதல் உலகப் போர் வெடித்த உடனேயே, 1914 ஆகஸ்டில், மதிப்பிழந்த மற்றும் அரசியல் ரீதியாக திவாலாகிப்போன இரண்டாம் அகிலத்திலிருந்து லெனின் உடைக்கக் கோரியபோதே, உண்மையில் அது நிறுவப்பட்டது என்பதை நினைவூட்டினார்.

வி. ஐ. லெனின்

தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் மிகப்பெரும் தோல்விகளான “பெரும் நிகழ்வுகளின்” அடிப்படையில் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்படுவதாக ட்ரொட்ஸ்கி கூறினார். ஆனால் அந்தத் தோல்விகள், பாடம் கற்றுக் கொள்ளப்பட்ட அளவிற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சர்வதேச புரட்சிகர மறுசீரமைப்புக்கு அடித்தளத்தை அமைக்கும். அவர் மார்க்சிச சிந்தனையின் சக்தி, மார்க்சிச வேலைத்திட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர திறன்கள் ஆகியவற்றில் முழு நம்பிக்கையுடன் செயற்பட்டார். சோவியத் அதிகாரத்துவத்தின் இரக்கமற்ற தன்மையும் அதிகாரமும் இருந்தபோதிலும், அது அரசியல்ரீதியாக அழிந்துவிட்டது என்பதை அவர் புரிந்துகொண்டார். ஸ்ராலினிசம் புரட்சியின் ஒரு பிற்போக்குத்தனமான வெளிப்பாடாகும், அதன் வெற்றி குறுகிய காலத்திற்கு இருக்கும். “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற தவறான கருத்தாக்கத்தில் வேரூன்றிய அதன் தேசிய வேலைத்திட்டமானது, உலக வரலாற்று அபிவிருத்தியின் அடிப்படை போக்குகளுக்கு முரணாக இருந்ததுடன், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசப் பிரச்சினையை உலக அளவில் தீர்க்க முடியவில்லை.

அரசியல் புரட்சிக்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை ஆட்சியிலிருந்து தூக்கியெறியாது விட்டால், அதிகாரத்துவமானது சோவியத் ஒன்றியத்தை அழித்துவிடும் என்று அவர் பல முறை கூறினார். அதுதான் நடந்தது. ஆனால் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மார்க்சிசத்தின் முடிவல்ல. உண்மையில், இன்றைய அரசியல் அபிவிருத்திகள் ட்ரொட்ஸ்கியின் சிந்தனை மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தின் மாபெரும் ஊடுருவும் நுண்ணறிவை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த 100-வது ஆண்டு விழாவிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது? இது வெறும் வரலாற்று தொடர்பான ஆய்வு விடயமா? இந்த வரலாற்றுக்கும் இன்றைக்கும் என்ன தொடர்புள்ளது?

இக்கேள்விக்கு கோட்பாட்டு அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் இரண்டிற்கும் விடையளிக்க முடியும் என்று கருதுகிறேன்.

முதலாவதாக, இடது எதிர்ப்பு அணியின் போராட்டம், குறிப்பாக தோழர் வாடிம் ரகோவினின் புத்தகங்களில் ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்தது, சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி முன்கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை, ஸ்ராலினிசமானது அக்டோபர் புரட்சி மற்றும் போல்ஷிவிசத்தின் இயல்பான மற்றும் அவசியமான வளர்ச்சி அல்ல என்பதை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார். ஆனால் அதனுடைய மறுப்பு என்பது; சோவியத் ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு முற்றிலும் வேறுபட்ட நோக்குநிலையை சரியாக பகுப்பாய்வு செய்து வழங்கிய ஒரு விரிவான அபிவிருத்தி செய்த வேலைத்திட்டத்துடன் ஒரு சக்திவாய்ந்த எதிர்ப்பு இருந்தது என்பதை நிரூபிக்கிறது. அந்த வேலைத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால், அது மிகவும் வித்தியாசமான விளைவுக்கு இட்டுச் சென்றிருக்கும். இதுவே நாம் முன்வைத்து வலியுறுத்தும் முதல் அம்சமாகும்.

மார்ச் 6, 1995 இல் வாடிம் ரோகோவின் மற்றும் டேவிட் நோர்த் [Photo: WSWS]

இரண்டாவதாக, தற்போதைய உலக நிலைமையின் பின்னணியில், இடது எதிர்ப்பு அணியால் எழுப்பப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள்ளும் இன்று ஒரு உலக அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கரு வடிவத்தில் உள்ளடக்கியுள்ளன என்பதை நிரூபிக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, இடது எதிர்ப்பின் தோற்றத்தில் ஒரு மையப் பாத்திரம் வகித்ததும், லெனினை அவரது தீவிர அரசியல் வாழ்க்கையின் கடைசி மாதங்களில் கவலைக்குள்ளாக்கிய பிரச்சினை, தேசிய இனங்களின் பிரச்சினையாகும். போல்ஷிவிக் கட்சிக்குள் ஒரு ஆபத்தான மற்றும் பிற்போக்குத்தனமான தேசியவாதப் போக்கை ஸ்ராலின் மேலும் மேலும் வெளிப்படையாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை லெனின் உணர்ந்தார், இந்த போக்கின் அடிப்படையில் அவர் போரை பிரகடனப்படுத்துவதில் உறுதியாக இருந்தார், மேலும் அவர் ஒரு மூளைச்சிதைவு நிலைக்கு அவரின் உடல்நிலை உட்படாமல் இருந்திருந்தால், 1923 ஏப்ரலில் திட்டமிடப்பட்ட பன்னிரெண்டாவது கட்சி மாநாட்டில் பகிரங்கமாக போரை அறிவித்திருப்பார்.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் வெடித்துள்ள துன்பகரமான, சகோதரத்துவ போராட்டத்தின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கு அந்தக் காலகட்டத்தின் ஆவணங்கள் இன்றியமையாதவையாகும். இந்தப் போர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் போர் ஸ்ராலினிச ஆட்சியானது சோசலிச சர்வதேசியவாதத்தை கைவிட்டுவிட்டதன் வரலாற்று விளைவு ஆகும்.

மாஸ்கோவில் புட்டின் மற்றும் கியேவில் செலென்ஸ்கியின் கொள்கைகள் (சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் முதலாளித்துவத்தின் மீட்சி ஆகியவற்றிலிருந்து எழுந்த ஆட்சிகள்) ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பேரினவாதத்தில் வேரூன்றியுள்ளன, இது தேசிய பிளவுகளை தூண்டிவிட்டுள்ளது.

அல்லது இஸ்ரேலிலும் காஸாவிலும் அரங்கேறி வரும் தற்போதைய துயரச் சம்பவங்களை எடுத்துக் கொள்வோம். 1938 மற்றும் 1939ல் ட்ரொட்ஸ்கி விடுத்த எச்சரிக்கைகளை, சோசலிசப் புரட்சிக்கு அப்பால் “யூதப் பிரச்சினை” என்று அழைக்கப்படுவதைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சி சாத்தியமற்றது என்பதை இந்த நிகழ்வுகள் எந்த அளவுக்கு முழுமையாக நிரூபணம் செய்கின்றன என்பதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. சரி, பாலஸ்தீன மற்றும் யூத தொழிலாளர்கள் இப்போது ஸ்ராலினிசத்தின் துயரகரமான காட்டிக்கொடுப்பிற்கான விலையை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், தொழிலாள வர்க்கத்தில் சோசலிசம் மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்திற்கு அப்பால் அத்தகைய ஒரு வரலாற்றுப் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளின் நம்பிக்கையற்ற தன்மையை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களின் அடிப்படையில், எமது கட்சி அதன் வேலைத்திட்டத்தை கட்டியெழுப்புகிறது, உலக அளவில் தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் பணிகளை முன்னெடுக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குவதற்கு வேறு எந்தக் கட்சியிடமும் எதுவும் இல்லை. இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கு என்ன மாற்றீடு உருவாகியுள்ளது? நமது காலத்தின் மாபெரும் அரசியல் கேள்விகளுக்கு வேறு சிறந்த பதில்கள் எங்கேயும் கிடைக்குமா? கிராம்சியின் எழுத்துக்களில்? மா சே துங்கிடம்? பிடல் காஸ்ட்ரோவிடம்? பிராங்க்பேர்ட் பள்ளியில்? முதலாளித்துவ சித்தாந்தம், குட்டி முதலாளித்துவ அரசியல் மற்றும் தேசியவாத முன்னோக்குகளின் இந்த வகையறாக்கள் அனைத்தும் மோசடிகளாகும். இந்தத் தனிநபர்கள் மற்றும் போக்குகள் எதுவும் நம் காலத்தின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் ஒரு வேலைத்திட்டத்தையும் மரபையும் விட்டுச் செல்லவில்லை. ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டம் மட்டுமே, நான்காம் அகிலத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால், அது வரலாற்றுக் காலகட்டத்திற்கு சமமானதாக தன்னை நிரூபித்துள்ளது.

இந்த ஆண்டு நாம் இரண்டு நிறைவாண்டுகளைக் கொண்டாடுகிறோம் என்பதை வலியுறுத்தி முடிக்க விரும்புகிறேன். முதலாவது, ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டான இன்று நாம் கொண்டாடும் ஆண்டுவிழா ஆகும். அடுத்த மாதம், நவம்பர் 16 அன்று, அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவையும் நாம் கவனத்தில் கொள்ளவுள்ளோம். இந்த நிறைவாண்டு விழாக்கள் ஆழமாக ஒன்றோடொன்று தொடர்புடையவைகளாகும். நமது காலத்தின் இரண்டு பெரிய கேள்விகளுக்கு அவைகள் பதிலளிக்கின்றன.

ஜேம்ஸ் பி. கனன்

முதல் கேள்வி: “ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததா?” அதற்கு இடது எதிர்ப்பு அணியின் வரலாற்றை மீளாய்வு செய்வதன் மூலம் விடை கிடைக்கிறது.

ஆனால், இக்கேள்விக்கு ஆம் என்று பதில் கிடைத்தவுடன், ட்ரொட்ஸ்கிசம் ஸ்ராலினிசத்திற்கு மாற்றீடு என்பதை ஒருவர் நிறுவியதுடன், இரண்டாவது கேள்வி எழுகிறது: “ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்பவர்கள் யார்?” ட்ரொட்ஸ்கிசத்தின் மரபை அடிப்படையாகக் கொண்டது என்று நியாயபூர்வமாக உரிமை கோரக்கூடிய ஒரு இயக்கம் இன்று உள்ளதா? இக்கேள்விக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டதில் எந்தக் குறைவுமின்றி தீர்க்கமாக விடையளிக்கப்பட்டுள்ளது.

ட்ரொட்ஸ்கிசத்தின் 100 ஆண்டுகளில், அந்த 70 ஆண்டுகள் அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ் அபிவிருத்தியடைந்துள்ளன. ஜேம்ஸ் பி. கனனால் எழுதப்பட்டு, 1953 நவம்பரில் பப்லோவாதத்துடன் முறித்துக் கொண்டு வெளியிடப்பட்ட “பகிரங்கக் கடிதத்தில்” கனன் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்தாபிக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் வலியுறுத்தினார். அவைகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. பல மாதங்களுக்குப் பின்னர், 1954 மார்ச்சில், அனைத்துலகக் குழு மட்டுமே புரட்சிகரக் கட்சியின் லெனினிச-ட்ரொட்ஸ்கிச கோட்பாட்டை நிலைநிறுத்துகிறது என்று கனன் மீண்டும் வலியுறுத்தினார்.

கடந்த 70 ஆண்டுகளாக இடது எதிர்ப்பு அணியும் நான்காம் அகிலமும் ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளை திரிபுபடுத்தி கைவிடுபவர்களுக்கு எதிராக இடைவிடாத போராட்டம் நடைபெற்று வருகிறது. இடது எதிர்ப்பின் 100வது ஆண்டு நிறைவும் மற்றும் பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவு ஆகிய இந்த இரட்டை ஆண்டு விழாக்கள் தற்போதைய சூழ்நிலையில் மாபெரும் வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை பெறுகின்றன.

உலகளாவிய பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் அறிவுஜீவித நெருக்கடியை நாம் கடந்து வருகிறோம் என்பதை நாம் அனைவரும் உணர்கிறோம். ஆயினும்கூட, ஒரு புரட்சிகர சகாப்தத்தின் சிறப்பியல்பு கொண்ட இந்த நிலைமையானது, சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றுவதற்கான சாத்தியத்தை உருவாக்குகிறது. பழைய ஒழுங்குமுறை உடைந்து, ஒரு புதிய மற்றும் உயர்ந்த நாகரிக வடிவம் உருவாகி வருகிறது.

உலகெங்கிலும் புரட்சிகர எதிர்ப்பின் மீளெழுச்சியை நாம் காண்கிறோம். அது தனது பணிகள் குறித்து இன்னும் நனவடையவில்லை. ஆனால் எமது இயக்கமானது அந்த அபிவிருத்தியடைந்து வரும் போராட்ட நிகழ்முறைக்குள் அது எதிர்கொள்ளும் அரசியல் பணிகள் குறித்து விழிப்புணர்வையும் புரிதலையும் கொண்டு வரும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அந்த ஐக்கியத்தை அடைவதற்கு சாத்தியமான ஒரு சகாப்தம் இது, இது எப்போதும் எங்கள் இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இது ட்ரொட்ஸ்கிசத்தின் சகாப்தம். இன்று நாம் எதிர்கொள்ளும் நிலைமைக்கு வேறு எந்த இயக்கமும், வேறு எந்தக் கட்சியும், வேறு எந்தப் போக்கும் தயாராகவில்லை.

இறுதியாக நான் கூற வேண்டியது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் செயலூக்கத்துடன் இருக்கும் தோழர்களே, ரஷ்யா, உக்ரேன் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளிலுள்ள நமது தோழர்களுடன் ட்ரொட்ஸ்கிசத்தின் 100 ஆண்டுகளை நாம் கொண்டாடுகிறோம் என்ற உண்மையே ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தை நிரூபிப்பது மட்டுமல்ல, மாறாக மகத்தான நம்பிக்கையின் ஆதாரமாகும். ட்ரொட்ஸ்கிசம் உயிர்வாழ்கிறது. இதன் தாக்கமானது உலகம் முழுவதும் விரிவடைந்து வருகிறது. நான்காம் அகிலமானது நடைமுறையில் தன்னை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நிரூபிக்கும்.

நான்காம் அகிலம் நீடுழி வாழ்க!

அனைத்துலகக் குழு நீடுழி வாழ்க!

உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டம் நீடுழி வாழ்க!

Loading