வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிரான போராட்டம் வேலைநிறுத்தத்தை விட மேலானது, இது ஒரு வர்க்கப் போர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நியூஸ்வீக்கில் வில் லேமனின் கட்டுரை

வில் லேமனின் இந்த அறிக்கை முதலில் நியூஸ்வீக்கில் வெளியிடப்பட்டது.

பென்சில்வேனியாவின் மக்குங்கியில் உள்ள மேக் டிரக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வில் லேமன், 2022 இல் UAW தலைவர் பதவிக்கு போட்டியிட்டு கிட்டத்தட்ட 5,000 வாக்குகளைப் பெற்றார். வாக்காளர்களை ஒடுக்குவது தொடர்பாக, தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று அவர் தற்போது அமெரிக்க தொழிலாளர் துறைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று, வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய ஜனாதிபதி பைடென், வாகன பெருநிறுவனங்கள் மற்றும் ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் ஆகிய “இருதரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்” ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தும்படி அழைப்பு விடுத்தார்.

“எனது பார்வையில் சாதனை படைத்த இலாபங்கள் அந்த தொழிலாளர்களுடன் நியாயமாக பகிர்ந்து கொள்ளப்படவில்லை” என்று பைடென் கூறினார். “தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்க உதவிய நன்மைகளில் நியாயமான பங்கிற்கு தகுதியானவர்கள்.” என்றார்.

பைடெனின் கருத்துக்கள் அமெரிக்காவில் செல்வப் பகிர்வு குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு ஒப்பந்த சர்ச்சையை விட அதிகம் இதில் சம்பந்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய நிறுவனங்களில் தொழிலாளர்களின் ஊதியம் கடந்த 50 ஆண்டுகளில் வியத்தகு முறையில் சரிந்துள்ளது. 1973ல், வாகனத்துறை தொழிலாளர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 5.54 டாலர் ஊதியத்தைப் பெற்றனர்— அது இன்றைய டாலர்களின்படி ஒரு மணி நேரத்திற்கு 38 டாலருக்கும் அதிகமாகும். அந்த ஊதியம் வெறுமனே பணவீக்கத்துடன் (அந்த நேரத்தில் உற்பத்தித்திறனில் ஏற்பட்ட அபாரமான அதிகரிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு) பார்த்தால் வாகனத் தொழிலாளர்கள் இன்று ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 40 அமெரிக்க டாலர் சம்பாதித்திருப்பார்கள்.

ஆனால் இன்று GM இல் தற்காலிக தொழிலாளர்கள் 16.67 அமெரிக்க டாலரில் தொடங்கி மிக அதிகமாக 20 அமெரிக்க டாலரில் உள்ளனர், இது ஐந்து தசாப்தங்களுக்கு முன்பு தொழிலாளர்களுக்கு கிடைத்ததை விட பாதியாகும். தற்காலிக ஊழியர்களுக்கு முழு நேர அந்தஸ்து வழங்கப்படும் அதிர்ஷ்டம் கிடைத்தால், அவர்களின் அதிகபட்ச சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு வெறும் 32 அமெரிக்க டாலராக அதிகபட்சமாக வரையறுக்கப்படும், அதை அடைய எட்டு ஆண்டுகள் பிடிக்கும்.

மற்றொரு ஒப்பீடு: GM தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா 2022 ஆம் ஆண்டில் $ 28.9 மில்லியன் இழப்பீடு தொகுப்பைப் பெற்றார். அவர் மாதத்திற்கு சுமார் $2.4 மில்லியன், வாரத்திற்கு $550,000, ஒரு நாளைக்கு $110,000 அல்லது “மணிநேர” விகிதத்தில் கிட்டத்தட்ட $13,800 சம்பாதித்தார். பார்ரா ஒரு நாளில் வாங்கும் சம்பளத்தை சம்பாதிக்க, ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 20 டாலர் சம்பாதிக்கும் ஒரு தற்காலிக தொழிலாளிக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.

எவ்வாறெனினும், இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், நிர்வாக அதிகாரி மேரி பாராவின் சம்பள பொதியின் ஒவ்வொரு பைசாவும் இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பிலிருந்து பெறப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 13,894 டாலர் சம்பாதிக்கும் ஒரு கார்ப்பரேட் நிர்வாகிக்கும், ஒரு மணி நேரத்திற்கு 20 டாலர் சம்பாதிக்கும் தற்காலிக ஊழியருக்கும் இடையில் பைடனின் “நியாயமான பங்கு” எவ்வாறு விநியோகிக்கப்பட முடியும்?

“சுதந்திர சந்தை” அமைப்பின் வெற்றியாளர்களினால் முன்வைக்கப்படும் வழக்கமான வாதம் என்னவென்றால், நிர்வாகிகள் தங்கள் “செயல்திறனுக்காக” ஊதியம் பெறுகிறார்கள், இது வோல் ஸ்ட்ரீட்டிற்கு வழங்குவதற்கான அவர்களின் திறனைக் குறிக்கிறது. பங்குதாரர்கள் பில்லியன்களைப் பெற்றுக்கொள்வதால் அவர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

நிறுவனங்கள் எவ்வளவு லாபம் ஈட்டியுள்ளன? 2022 ஆம் ஆண்டில், ஜிஎம், ஃபோர்டு மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் ஆகியவை மொத்தமாக 77 பில்லியன் டாலர் மொத்த லாபத்தை ஈட்டியுள்ளன.

அந்த 77 பில்லியன் டாலர் அமெரிக்காவில் உள்ள அனைத்து 150,000 பெரிய மூன்று வாகனத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால், ஒவ்வொரு தொழிலாளிக்கும் தோராயமாக 513,333 டாலர் போனஸ் கிடைக்கும்.

நிச்சயமாக, GM, Stellantis, மற்றும் ஃபோர்ட் ஆகியவை உலகெங்கிலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன, மேலும் பங்குதாரர்களுக்கு சேரும் பில்லியன்களை உற்பத்தி செய்வதற்காக அவர்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. பரந்த விநியோகச் சங்கிலிகளும் உள்ளன, வாகன உதிரி பாகங்கள் ஆலைகள் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், உற்பத்தி நிகழ்முறையில் ஒருங்கிணைந்தவர்களாக இருக்கின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் பெருநிறுவன உரிமையாளர்களுக்குமான “இரு தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்” ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் அது சாத்தியமற்றது என்பது மூத்த முதலாளித்துவ அரசியல்வாதியான பைடனுக்குத் தெரியும். ஜனாதிபதி மூடி மறைக்க முயல்வது என்னவென்றால், தொழிலாளர்களும் பெருநிறுவன தன்னலக்குழுவும் அடிப்படையில் சமரசம் செய்ய முடியாத வர்க்க நலன்களைக் கொண்டுள்ளனர் என்பதையாகும். முதலீட்டாளர்கள் பில்லியன்களைப் பெறுகிறார்கள், நிர்வாகிகள் மில்லியன் கணக்கில் பெறுகிறார்கள், தொழிலாளர்கள் பைசாக்களை பெறுகிறார்கள் என்ற அமைப்பில் “நியாயமான பங்கு” இருக்க முடியாது.

நீண்ட காலமாக ஒளித்து வைக்கப்பட்ட மற்றும் மூடி மறைக்கப்பட்டு வந்த சமூக யதார்த்தங்களை கணக்கிடும் நாள் நெருங்கி வருகிறது. தொழிலாளர்கள் தாங்கள் வாழும் பரந்த சமத்துவமற்ற சமூகத்தைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கிறார்கள், அதை மாற்றுவதற்கான ஒரு வழியைத் தேடுகின்றனர். அதனால்தான் UAW இன் 2022 தேர்தல்களில் நான் ஒரு சோசலிசவாதியாக போட்டியிட்டபோது, தொழிற்சங்க எந்திரம் வாக்குகளை நசுக்க முயன்ற போதிலும், வாகனத் தொழிலாளர்களிடமிருந்து 5,000 வாக்குகளைப் நான் பெற்றேன், இது மொத்தமாக வெறும் 9 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவான நிலையிலாகும்.

UAW தலைவர் ஷான் பெயின் “பெருநிறுவன பேராசை” மற்றும் “பில்லியனர் வர்க்கம்” பற்றி கண்டனம் செய்தார். உண்மையில், பெயினும் அவர் மேற்பார்வையிடும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் பெருநிறுவனங்களின் சார்பாக ஒரு இன்றியமையாத பணியைச் செய்கின்றனர். அவர்கள் வேலைநிறுத்தங்களைத் தடுக்கிறார்கள் அல்லது கட்டுப்படுத்துகிறார்கள் (அவர்கள் தற்போது செய்வது போல, பெரிய மூன்று ஆலைகளில் வேலைநிறுத்தம் செய்வதை வெறும் மூன்று ஆலைகளுக்கு தனிமைப்படுத்துகிறார்கள்) மற்றும் நிர்வாகத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துகிறார்கள், கடந்த 45 ஆண்டுகளாக ஒன்றன்பின் ஒன்றாக காட்டிக்கொடுப்பு மற்றும் சலுகை ஒப்பந்தத்தை திணித்து வந்தனர். இந்த சேவைகளுக்காக, அதிகாரத்துவத்தினர் தங்கள் சொந்த ஊதியங்களைப் பெறுகிறார்கள், இதில் ஆறு இலக்க சம்பளங்களும் அடங்கும், இது வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 5 சதவீதத்தினரில், வசதியான உயர்-நடுத்தர வர்க்கத்தில் அவர்களை வைக்கிறது.

வெள்ளை மாளிகையும் UAW தலைமையும் பல மாதங்களாக தொடர்ச்சியான தகவல்தொடர்புகளில் இருந்து வந்துள்ளன, அவற்றின் மூலோபாயம் மற்றும் பேச்சு புள்ளிகளை நெருக்கமாக ஒருங்கிணைக்கின்றன, பைடென் மற்றும் பெயின் இருவரும் ஒரு “நியாயமான பங்கு” என்ற பங்குதார சொற்றொடரை மீண்டும் மீண்டும் குமட்டல் எடுக்கும் வரையில் கூறுகின்றனர்.

பாசிச வாய்வீச்சாளர் ட்ரம்ப், தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியை, குறிப்பாக மின்சார வாகனங்கள் தொடர்பான இரத்தக்களரியாகும் வேலைகள் குறித்த அதிருப்தியை கைப்பற்ற முயல்கிறார். தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை பெருநிறுவனங்கள் மீது திருப்புவதைத் தடுப்பதற்காக, அவர் மெக்சிகோ மற்றும் சீனாவில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கு பலிகடா ஆக்குகிறார்.

பைடென், ட்ரம்ப் மற்றும் பெயின் அனைவரும், சமத்துவமின்மை அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கத்தை சோசலிச அரசியலை நோக்கி உந்தித் தள்ளுவதையிட்டு அஞ்சுகின்றனர். அதாவது, தொழிலாளர்களின் சுயாதீனமான வர்க்க நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் முன்னோக்கை நோக்கி நகருவதையிட்டு அஞ்சுகின்றனர்.

முதலாளித்துவம் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுடன் போரில் ஈடுபட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. பணவீக்கம், பரவலான கோவிட்-19 பரவல், கொடிய வேலை நிலைமைகள், காலநிலை நெருக்கடி மற்றும் உலகளாவிய அணுவாயுத யுத்த அச்சுறுத்தல் ஆகியவை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை எதிர்கொள்கின்றன. இந்த முழு அமைப்பையும் தூக்கி வீச வேண்டிய அவசியத்தை மேலும் மேலும் அதிகமான தொழிலாளர்கள் உணர்கின்றனர். மற்றும் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவைக்காக எவ்வாறு சமூக வளங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் காண்கின்றனர்.

Loading