இந்தியாவில் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சி தேர்தல் கூட்டணி: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வலதுசாரி அரசியல் பொறி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்தியாவின் சமீபத்தில் உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சித் தேர்தல் கூட்டணியின் தலைவர்கள் மும்பையில் இரண்டு நாட்கள் கூட்டங்களை நடத்தியுள்ளனர். அது சம்பிரதாயபூர்வமான ஒன்று கூடலுடன் முடிவடைந்துள்ளது.

பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பிஜேபியின் ஒன்பது ஆண்டுகால தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு “முற்போக்கான,” “ஜனநாயக,” மற்றும் “மதச்சார்பற்ற” மாற்றீட்டை வழங்குவதாகக் கூறும் கூட்டணி — இரண்டு டசினுக்கு அதிகமான கட்சிகளை கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை: சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்கக் கட்சியாக இருந்துள்ள காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டை முறையே ஆளும் இன-பிராந்தியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), கங்கை சமவெளியின் இந்தி-பேசும் மாநிலங்களின் ஸ்தாபன அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் சாதி அடிப்படையிலான பிராந்திய கட்சிகளான சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), மற்றும் ஆம் ஆத்மி (பொது மனிதர்கள்) கட்சி, ஊழலுக்கு எதிரான கட்சி என்று கூறப்படும், இது பஞ்சாப் மற்றும் இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள அரசாங்கத்துக்கு தலைமை தாங்குகிறது.

இந்தக் கட்சிகள் அனைத்தும், காங்கிரஸ் கட்சியில் தொடங்கி, ஆட்சியில் இருந்தபோது, இந்திய முதலாளித்துவத்தின் இரக்கமற்ற முதலீட்டாளர்-சார்பு நிகழ்ச்சி நிரலான கட்டுப்பாடு நீக்கம், தனியார்மயமாக்கல், அபாயகரமான ஒப்பந்த-தொழிலாளர் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் மற்றும் பெருவணிகர்கள் மற்றும் பணக்காரர்களுக்கான மிகப்பெருமளவில் வரிக் குறைப்புகளுக்கு ஆதரவு வழங்கியதுடன் அவற்றை அமல்படுத்தியும் வந்தன. அவை அனைத்தும் இந்தியாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பையும், “இந்தோ-அமெரிக்க பூகோளரீதியான மூலோபாய கூட்டாண்மை”யையும் ஆதரிக்கின்றன. இந்தக் கட்சிகள் சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய முன்தாக்குதலில் புது டெல்லியை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துள்ளன.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டம், பிஜேபி க்கு எதிரான எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டமாகும். ஜூலை 17-18ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், 26 கட்சிகள் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி அல்லது இந்தியா பதாகையின் கீழ் வருகின்ற தேசிய தேர்தலில் கூட்டாக போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளன. [Photo by Tamil Nadu Chief Minister Stalin]

ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒரு சிறிய சலனத்தை கூட ஏற்படுத்தவில்லை. அவர்கள் இந்தக் கூட்டணியின் மிகவும் உற்சாகமான அங்கத்தவர்களில் ஒன்றாக இருப்பதுடன், அதன் நோக்கத்தை முழுமையாக ஆதரிக்கின்றன. இவை அனைத்தும், இந்திய முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று, வலதுசாரி அரசாங்கத்தை வழங்குகின்றன.

தன்னை இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி அல்லது இந்தியா என்று அழைக்கும் எதிர்க்கட்சி கூட்டணியின் பிற்போக்குத் தன்மை அடிக்கோடிட்டுக் காட்டப்படுவது எதிலென்றால் அதனுள் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமான பீகாரின் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது ஜனதா தளம் (ஐக்கிய) வகித்த முக்கியமான பாத்திரத்தில் தான். 1997 முதல் 2014 வரையிலும், மீண்டும் 2017 முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலும், நிதிஷ் குமாரும் அவரது ஜனதா தளமும் ((ஐக்கிய) அல்லது அதன் முன்னோடியான சமதா கட்சியும் முதலில் அடல் வாஜ்பாய் பின்னர் மோடி தலைமையிலான பிஜேபியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதன் அரசாங்கங்களில் பணியாற்றியுள்ளது. இதற்கிடையில், பீகாரில், ஜனதா தளம் (ஐக்கிய) தலைமையிலான கூட்டணி அரசாங்கங்களில் பிஜேபி பலமுறை இளைய பங்காளியாக பணியாற்றி இருக்கிறது.

கடந்த ஜூன் 23 அன்று பாட்னாவில் நடைபெற்ற புதிய கூட்டணியின் முதல் கூட்டத்தை நிதீஷ் குமார் கூட்டி தலைமை தாங்கினார் மற்றும் அதில் 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. சமீபத்திய வாரங்களில் நிதிஷ் குமார், பிஜேபி இன் முதல் பிரதமரும், மோடியைப் போலவே இந்து மேலாதிக்க ஆர்.எஸ்.எஸ்-ன் வாழ்நாள் உறுப்பினராக இருந்த வாஜ்பாயையும் பலமுறை பாராட்டி இருக்கிறார். இதில் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி கடந்த மாதம் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவருக்கு பொது அஞ்சலி செலுத்தியதும் அடங்கும். அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியா கூட்டணியில் (ஐக்கிய) ஜனதா தளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால், அது மற்ற விருப்பங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டிருக்கிறது என்று நிதிஷ் குமார் சமிக்ஞை செய்துள்ளார்.

மும்பையில் நடைபெறும் கூட்டங்களை உத்தியோகபூர்வமாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே நடத்துகிறார். அவர் சிவசேனாவின் இரண்டு போட்டி குழுக்களில் ஒன்றுக்கு தலைமை தாங்குகிறார். சிவசேனா அமைப்பானது இழிபுகழ் பெற்ற மராத்திய பேரினவாதியும் வகுப்புவாதியுமான உத்தவ் தாக்கரேயின் தந்தை பால் தக்கரேயினால் உருவாக்கப்பட்டது. நிதீஷ் குமார் எவ்வளவு அபத்தமாக, வகுப்புவாதத்தின் எதிர்ப்பாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டாலும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) இந்துத்துவாவை ஆதரிக்கிறது, இது பிஜேபி யும் மோடியும் கடைப்பிடிக்கும் தீங்கு விளைவிக்கும் இந்து மேலாதிக்கவாத சித்தாந்தமாகும்.

இந்த வாரக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் தலைவர்கள், “பொதுவான குறைந்தபட்சத் திட்டத்தை” கொண்டு வரப் போவதாகக் கூறியுள்ளனர், இது 2024 வசந்த காலத்தில் நடைபெறும் என்று கருதப்படும் பொதுத் தேர்தலில் பிஜேபி மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவதில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் பின்பற்றும் முக்கிய கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவதாகக் கூறப்படுகிறது..

இதுவரை, அவர்கள் இந்தியாவை சீரழிக்கும் சமூக நெருக்கடி, மிகப்பரந்தளவிலான வேலையின்மை, உள்ளூர் வறுமை மற்றும் அரசாங்க-பெருவணிக ஊழலுடன் பிணைப்பு ஆகியவற்றைப் பற்றி தெளிவற்ற மற்றும் மிகவும் ஊகிக்கக்கூடிய சொற்களில் மட்டுமே பேசியுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) போன்ற மிக முக்கியமான பங்கேற்பாளர்கள், ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவுடன், தலித்துகள் மற்றும் பிற வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களுக்கான இடஒதுக்கீடுகளை (அமெரிக்காவிலுள்ள உறுதியான நடவடிக்கை என்றழைக்கப்படும் ஒதுக்கீடுகளை) தனியார் துறைக்கு நீட்டிக்க இந்தியா கூட்டணியை வலியுறுத்துகின்றனர். இது “சமூக நீதிக்கான” ஒரு பலத்த அடியாக இருக்கும் என்றும், பிஜேபியின் இந்து வகுப்புவாத அழைப்புகளுக்கு ஒரு எதிர்முனை என்று கூறப்பட்டாலும், இடஒதுக்கீடு முறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான அழைப்புகள் ஆழ்ந்த பிற்போக்குத்தன்மை கொண்டவை. அவை தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட துயரத்தை இன்னும் “சமமான” முறையில் விநியோகித்து சகோதரப் போராட்டத்தில் சிக்கவைக்கவும் உதவுகின்றன.

எதிர்க்கட்சிகள் முன்மொழியும் எந்தவொரு பொதுவான குறைந்தபட்சத் திட்டமும் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி மிக குறைவாகவே பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சீனாவுடனான மூன்றாண்டு கால எல்லைப் போராட்டத்தில் இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி பிஜேபி அரசாங்கத்தை வலது நிலைப்பாட்டிலிருந்து பலமுறை தாக்கி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது பங்கிற்கு, அனைத்து சீனப் பொருட்களையும் “தேசியப் புறக்கணிப்பு” செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த எதிர்க்கட்சிகளின் மாநாடு, தொகுதி பங்கீடு தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பும் என்றும் ஒரு அதிகாரப்பூர்வமான அமைப்பாளர் பெயரிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் எதிர்கால பிரதமர் வேட்பாளரின் தேர்வில் அதன் சாத்தியமான தாக்கம் குறித்து சில கட்சிகள் இதை எதிர்க்கின்றன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மதிப்பிழந்த கட்சிகளின் பிற்போக்கு கூட்டணி

இந்தியா (I.N.D.I.A) கூட்டணி என்பது ஒரு அரசியல் மோசடியாகும். இது பெருமளவில் மதிப்பிழந்த முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு பிற்போக்குக் கூட்டணியாகும், பிஜேபியை விட எந்த வகையிலும் முதலாளித்துவ வர்க்கத்துடன் நெருக்கமாக இருப்பதில் குறைவாகவே இல்லை, அவற்றின் வகுப்புவாதத்திற்கு எதிரான மதச்சார்பற்ற பாசாங்குகள் இருந்தபோதிலும் அவை ஊழல், ஜாதிவெறி, மற்றும் பிராந்திய-பேரினவாத அரசியலில் மூழ்கியுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், ஜூலை 18 அன்று பெங்களூரில் நடைபெற்ற இந்தக் கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில், கலந்து கொண்ட 26 கட்சிகளும், “சிறுபான்மையினருக்கு எதிராக தயார் செய்யப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையை” கண்டித்து ஒரு சுருக்கமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. மேலும், அவற்றின் இலக்காக தலித்துகள், ஆதிவாசிகள் (பழங்குடியினர்) மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகள் இருப்பதாக குறிப்பிட்டன. பிஜேபி மற்றும் அதன் இந்து வலது கூட்டாளிகளால் இடைவிடாத அவதூறு மற்றும் மிரட்டல் பிரச்சாரத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்திய முஸ்லிம்கள் பற்றிய எந்த குறிப்பும் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. அது சமீபத்தில் பஜ்ரங் சேனா என்ற இந்துத்துவாவை (இந்து மேலாதிக்கவாதத்தை) ஆதரிக்கும் அமைப்பை அதன் அணிகளில் ஏற்றுக்கொண்டது. சிவசேனாவை (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) ஒரு “முற்போக்கு” கூட்டாளியாகவும் இந்தியா கூட்டணியில் மதிப்புமிக்க ஒரு பிரிவாகவும் முன்னிறுத்துவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறாக ஒருவர் மேலும் மேலும் இதைப்பற்றி பேச முடியும்.

கீழிருந்து வரும் சமூக எதிர்ப்பின் புயல் பற்றிய அச்சத்தில் இந்த எதிர்க்கட்சிக் கூட்டணி உருவாகியுள்ளது. தனியார்மயமாக்கல், ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஊதியம் வழங்கப்படாமை மற்றும் வேலை வெட்டுக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் வெடிப்புத்தன்மையுடன் அடிக்கடி நீடித்த போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தியாவின் “உலகை தோற்கடிக்கும்” வளர்ச்சி குறித்து பிஜேபி எக்காளமிடும் அதே வேளையில், யதார்த்தம் என்னவென்றால், இந்தியா பிரமாண்டமான சமூக சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது, 1 சதவீத இந்திய பணக்காரர்கள் 70 சதவீத ஏழை மக்களின் செல்வத்தை விட நான்கு மடங்கு சொத்துக்களை வைத்துள்ளனர்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா-நேட்டோ தூண்டிய போரில் இருந்து வெளிப்படும் பொருளாதார அதிர்ச்சிகள், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை அதிகப்படுத்தியுள்ளன. இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின்படி, மக்கள் தொகையில் 7.9 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். வேலையில்லாதவர்களுக்கு அரசு மானியம் வழங்கப்படாத நாட்டில் இந்த நிலைமை உள்ளது.

வகுப்புவாதத்தை இடைவிடாமல் ஊக்குவிப்பதன் மூலம், முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான எந்தவொரு சவாலிலிருந்தும் தோன்றக்கூடிய சமூக-பொருளாதார கவலை மற்றும் விரக்தியைத் திசைதிருப்பவும், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் பிஜேபி முயல்கிறது.

அவர்கள் இந்து வலதுசாரிகளுடன் ஒத்துப்போகும் அதே வேளையில், பிஜேபி இன் வெறித்தனமான வகுப்புவாதம் மற்றும் அதிகரித்து வரும் எதேச்சாதிகாரம் மற்றும் சட்ட ஒழுங்கின்மை ஆகியவை குறித்து கவலை கொண்டுள்ளன. அவை முதலாளித்துவ வர்க்கம் அதன் ஆட்சியை நிலைநிறுத்த தங்கியிருக்கும் இராணுவம், நீதிமன்றங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களை ஆபத்தான முறையில் மதிப்பிழக்கச் செய்வதுடன் நிலைகுலைய செய்கின்றன என்று ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் அச்சமடைந்துள்ளன.

பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பின் மீது முரட்டுத்தனமாக இயங்குவது உட்பட, அதிகாரத்தை அதன் சொந்த கைகளில் ஏகபோகமாக்குவதற்கான பிஜேபியின் உந்துதலால் எதிர்கட்சி கூட்டணியும் விழிப்படைந்துள்ளன. மோடி மற்றும் அவரது முக்கிய உதவியாளரான உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிஜேபி தனது முதலாளித்துவ அரசியல் எதிரிகளை அரை தேசத் துரோகிகளாகக் கருதுகிறது, அவர்கள் இந்தியாவின் பெயரைக் கெடுக்க வெளிநாட்டு சக்திகளுடன் சதி செய்கிறார்கள் அல்லது இஸ்லாமியர்களை சாந்தப்படுத்துகின்றனர் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

முந்தைய இந்திய அரசாங்கங்கள் அரசியல் எதிரிகளை குறிவைக்க ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றவியல் விசாரணைகளை கையாண்டிருந்தாலும், மோடி அரசாங்கம் இதை ஒரு புதிய நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மார்ச் மாதம், காங்கிரஸ் கட்சியின் நடைமுறை தலைவரும், இந்தியாவின் பழம் பெரும் கட்சியை கட்டுப்படுத்தும் நேரு-காந்தி குடும்ப வம்சத்தின் வாரிசுமான ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் வெளிப்படையான புனையப்பட்ட குற்றச்சாட்டுகளின் விளைவாக நாடாளுமன்றத்தில் அவரது இருக்கை பறிக்கப்பட்டது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள நீதிமன்றங்களின் காந்தி மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நோக்கத்துடன் கூடிய முடிவுகளை கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

ஸ்டாலினிஸ்டுகள் - இந்தியாவின் அரசியல் ஸ்தாபனத்தின் மிகவும் மதிப்புமிக்க பிரிவு

ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் அவர்களின் இடது முன்னணிக்கான தேர்தல் ஆதரவை கடந்த ஒன்றரை தசாப்தங்களாக பெருவணிக காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்ததோடு, அவர்கள் பதவியில் இருந்த மாநிலங்களில் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை திணிப்பதில் அவர்களின் பங்கின் விளைவாக மிக மோசமாக இழந்துள்ளது. இன்று ஸ்டாலினிஸ்டுகள் இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் அரசாங்கத்தை வழிநடத்துகிறார்கள், அவற்றுக்கிடையே 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் CPM மற்றும் CPI க்கு வெறும் ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ராலினிஸ்டுகள் இந்தியா தேர்தல் கூட்டணியை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர், அது குறிப்பாக -கடந்த 75 ஆண்டுகளில் மிக நீண்ட காலமாக இந்தியாவின் தேசிய அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிய மற்றும் முதலாளித்துவத்துடன் மிக நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி அதனை பிஜேபி-எதிர்ப்பு கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கிறது.

ஸ்ராலினிஸ்டுகள் எதிர்க் கூட்டணிக்கு மிகவும் தேவையான “முற்போக்கு” வண்ணங்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக, அவர்களது தொழிற்சங்க கூட்டமைப்புகள் மூலம் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளின் மீது அரசியல் செல்வாக்கை செலுத்தி வருகின்றனர் - வர்க்கப் போராட்டத்தை நசுக்க அவர்கள் அந்த செல்வாக்கை பயன்படுத்துகின்றனர் மற்றும் காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணிக்கு பின்னால் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் பெருகிவரும் கோபத்தை திசை திருப்புகின்றனர்.

கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த ஒரு பேரணியில் (சிபிஎம் கூட்டணியில் உள்ள இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) அரசியல்ரீதியாக வழிநடத்தியது, இதில் காங்கிரஸ் மற்றும் பிற பெருவணிகக் கட்சிகளுடன் இணைந்தவை உட்பட ஏராளமான தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புகள் பங்கேற்றன) தொழிற்சங்கங்கள் வரும் தேர்தலில் பாஜக அரசாங்கத்தை இந்திய கூட்டணியால் மாற்றுவதே தங்கள் மைய இலக்கு என்று அறிவித்தன. “மோடியை அகற்று, நாட்டைக் காப்பாற்று என்ற முழக்கத்தில் இது இணைக்கப்பட்டுள்ளது” 

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஸ்ராலினிஸ்டுகள் “பாசிச பிஜேபியை” எதிர்த்துப் போராடுகிறோம் என்ற பெயரில் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக வலதுசாரி அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர். தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக நசுக்கப்பட்டு, முதலாளித்துவ நெருக்கடிக்கு அதன் சொந்த சோசலிச தீர்வை முன்னெடுப்பதில் இருந்து தடுக்கப்பட்ட நிலையில், இந்து வலதுசாரிகளிடமிருந்து அச்சுறுத்தல் மட்டுமே வளர்ந்துள்ளது.

இன்று, உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, இந்திய முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகளும், தங்கள் காலடியில் அழுகிய நிலையில், ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை இந்திய அரசு மற்றும் காங்கிரஸுடன் மற்றும் பல வலதுசாரி சாதிகளுடன் மற்றும் இனப் பேரினவாதக் கட்சிகளுடன் பிணைக்கும் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்

தொழிலாளர்களும் சோசலிச எண்ணம் கொண்ட இளைஞர்களும் முற்றிலும் மாறுபட்ட மற்றும் எதிர்க்கும் போக்கை வகுக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தைத் தோற்கடிப்பதற்குமான போராட்டமான வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது சமூக சமத்துவத்திற்கான போராட்டத்திற்கும் ஏகாதிபத்திய போருக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்திய முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் கூட்டணிக்கும் எதிராக பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கம் அதன் பன்முகப் போராட்டங்களை ஒன்றிணைத்து, இந்திய முதலாளித்துவத்திற்கும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் தெற்கு ஆசியாவிலும் உலக முழுவதும் சோசலிச மாற்றத்திற்கு உறுதிபூண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் கிராமப்புற மக்களைத் தன் பின்னால் அணிதிரட்ட வேண்டும்.

Loading